
அத்தியாயம் 17
ராகவர்ஷினி முதலில் கத்தும் போதே அலைபேசியை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டிருந்தான் உதயகீதன். அதனால், அங்கு பகிரப்பட்ட செய்தி அவனுக்கும் தெரிய வர, தன்னை பயத்துடன் பார்க்கும் பாவையை தீயாய் முறைத்தான்.
அவளை திட்டுவதற்கு வார்த்தைகள் காத்திருக்க, இப்போது அது முக்கியமல்ல என்பதால், மறுமுனையில் இருந்த ரஞ்சித்திடம், “இப்போ நீ எங்க இருக்க?” என்று வெகு அழுத்தமாக வினவ, புது குரல் என்பதால் பதில் சொல்ல தயங்கினான் அவன்.
அதனால் பல்லைக் கடித்துக் கொண்டே, “என்கிட்ட சொல்றியா, இல்ல போலீஸ் கிட்ட அடி வாங்கிட்டு சொல்றியா?” என்று மிரட்ட, அவனோ பம்மி போய், “சார் சொல்லிடுறேன்… போலீஸ் எல்லாம் வேண்டாம். நான் ஹோட்டலோட பேக் எக்சிட்ல தான் இருக்கேன்.” என்று சொல்ல, தன் அலைபேசியில் இன்னமும் அழைப்பில் இருந்த காவலன் பிரகாஷிடம் ஏதோ பேசியபடி வெளியே ஓடினான்.
அத்தனை நேரம் தான் தவறை எண்ணி மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தவளை சூழ்ந்து கொண்ட அவளின் ‘நலம் விரும்பிகள்’, “என்னவா இருந்தாலும் நீ இப்படி பண்ணியிருக்க கூடாது வர்ஷி. இப்போ இது கேஸா ஃபைலானா, நீ எப்படி நாளைக்கு ஜெர்மனி போவ? எதுக்கும் உன் பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிடு.”என்று பலவற்றை பேச, அதை தாங்க முடியாமல் காதுகளை பொத்தியபடி வெளியே வந்தவள், உதயகீதனை தொடர்ந்து சென்றாள், பயம் பாதி, குற்றவுணர்வு மீதி என கலந்த கலவையாக!
ரஞ்சித் கூறிய இடத்தை அடைந்த உதயகீதன் சுற்றிலும் பார்க்க, ஒரு ஓரத்தில் தூண் மறைவில் இரு கால்கள் மட்டும் தெரிய, அவற்றை நோக்கி ஓடினான்.
அங்கு ஒருவன் அரை மயக்க நிலையில் இருக்க, அவன் கன்னத்தை தட்டி, “ரஞ்சித்?” என்று வினவ, அவனோ மிகுந்த சோர்வுடனும் வலியுடனும், ‘ஆம்’ என்று தலையசைத்தான்.
அவனை அடித்து வெளுக்கும் அளவுக்கு கோபம் இருந்தாலும், இப்போது அதை வெளிக்காட்ட நேரமில்லை என்பதை புரிந்து கொண்டு, “எத்தனை பேரு?” என்று சுருக்கமாக கேட்க, “என்னோட ஒருத்தன் தான் சார். அவன் அவங்களை தூக்கிட்டு போயிட்டான் சார்…” என்று ஏதோ கூற வந்தவனை தடுத்த உதயகீதன், “கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்.” என்று உறுமிவிட்டு, “எந்த வெஹிக்கில்? நம்பர் என்ன?” என்று அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்தான்.
அனைத்திற்கும் ரஞ்சித் பதில் கூற, அவற்றை அழைப்பில் இருந்த பிரகாஷும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.
“பிரகாஷ் இந்த டீடெயில்ஸ் போதுமா?” என்று உதயகீதன் வினவ, “போதும் உதய். இன்னும் இருபது நிமிஷத்துல காரை டிராக் பண்ணி லொகேஷன் கண்டு பிடிச்சுடலாம். லொகேஷன் தெரிஞ்சதும் கால் பண்றேன்.” என்று அழைப்பை துண்டித்தான் பிரகாஷ்.
அலைபேசியை சட்டை பைக்குள் வைத்த உதயகீதன், அப்போது தான் சோர்வுடன் எழுந்து அமர்ந்திருந்த ரஞ்சித்தின் கன்னத்திலேயே ‘பளார்’ என்று அறைந்திருந்தான்.
அது அடி வாங்கிய ரஞ்சித்தை மட்டுமல்ல, சற்று தள்ளி நின்றிருந்த ராகவர்ஷினியையும் அதிர வைத்தது.
“என்ன வயசுடா உனக்கு? காலேஜ் படிக்கிற பையன் தான நீ? இப்போவே ஆளைக் கடத்துற அளவுக்கு வந்துட்டியா? இதுல, உன் ஃபிரெண்டு உனக்கும் மேல! கைல சிக்கட்டும், காலை உடைச்சு விடுறேன்.” என்று சொன்னபடியே இன்னும் நான்கு அடிகளை வைத்திருக்க, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அருகில் வந்திருந்தாள் ராகவர்ஷினி.
அவளை திரும்பி பார்த்தவனின் பார்வை, ‘இதெல்லாம் உனக்கும் விழ வேண்டியது!’ என்று சொல்லாமல் சொல்லியது.
அடுத்த பத்து நிமிடங்கள் பத்து யுகங்களாக கழிந்தன உதயகீதனுக்கு. அந்த இடைவேளையில் அங்கு வைத்தே ரஞ்சித்திற்கு முதலுதவி செய்யப்பட்டது. எதற்கும் ராகவர்ஷினி அவள் நின்றிருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.
அவள் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வுகள் அல்லவா நடந்து கொண்டிருக்கின்றன. முதலில், உதயகீதன் காவல்துறையின் உதவியை நாடப்போவதாக மிரட்டியது, பின்னர் அவளின் திட்டத்தை மீறி ஜீவநந்தினி காணாமல் போனது, இதோ இப்போது அவளின் பெரியப்பா மகன் அடிபட்டிருப்பது என்று எல்லா நிகழ்வுகளும் சேர்த்து அவளை கலங்கச் செய்திருந்தது.
ஒருபக்கம் இதெல்லாம் பெற்றோருக்கு தெரிந்தால், அவர்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று பயம் இருக்க, மறுபக்கம் தான் என்னவோ செய்ய நினைத்து, இப்படியாகி விட்டதே என்ற குற்றவுணர்வும் அவளை ஆட்டிப்படைத்தது.
ஏதாவது தகவல் கிடைத்து விடுமா என்று அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் உதயகீதன். அப்போது பிரகாஷிடமிருந்து அழைப்பு வர, உடனே அதை ஏற்றவன், “டிராக் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டான்.
பிரகாஷ் அந்த கயவனின் இடத்தை கூறவும், “அது இங்க இருந்து பக்கம் தான் பிரகாஷ். நான் முன்னாடி போறேன்.” என்று வாகனத்தை நோக்கி ஓடியபடி உதயகீதன் கூற, “உதய் ஸ்டாப். நான் வந்ததும் போலாம்.” என்று பிரகாஷ் எத்தனை கூறியும் கேட்காமல் அழைப்பை துண்டித்தான்.
“ப்ச், இவனுக்கு இருக்க கோபத்துக்கு, அந்த ராஸ்கலை கொன்னு போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.” என்று புலம்பிய பிரகாஷ், அவனுடன் சில காவலர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினான் பிரகாஷ்.
உதயகீதன் சென்று சேர்ந்த இடம் ஒரு பழைய குடியிருப்பையும் சில தனி வீடுகளையும் கொண்டிருந்தது. இதில் எங்கு சென்று தேட என்று உதயகீதன் தயங்க, அவன் தயங்கும் ஒவ்வொரு நிமிடமும் அங்கு அவனவளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தான் இருந்தான்.
அப்போது அவனை ஒருவர் கடந்து செல்ல, வேகமாக அவரை நிறுத்தியவன், ரஞ்சித்திடம் வாங்கிய அவனின் நண்பனின் புகைப்படத்தை காட்டி, “சார், இவனை நீங்க பார்த்துக்கீங்களா?” என்று கேட்க, ”இவன் கதிர் தான… நல்லா தெரியுமேபா.” என்றவர், அந்த குடியிருப்பை காட்டி, “அந்த ஃபிளாட்ல 1ஏ தான் அவன் வீடு.” என்றார்.
அவருக்கு அவசரமாக நன்றியை உரைத்து விட்டு அந்த வீட்டை நோக்கி ஓடினான்.
அவன் மனமோ, ‘தப்பு பண்றவன் அவன் வீட்டுலயே வச்சு தைரியமா பண்ணுவானா?’ என்று வினவ, அதை அலட்சியப்படுத்தி விட்டு சென்றான். செல்லும் வழியில் அதை பிரகாஷுக்கு தெரிவிக்கவும் மறக்கவில்லை.
1ஏ என்று கதவில் எழுதியிருந்த வீட்டின் முன் நின்றவன், படபடவென கதவை தட்ட, அதற்கு இணையாக அவன் இதயமும் துடிக்க துவங்கியது.
‘ஒருவேளை, நான் தப்பா தேடுறேனோ? இங்க இல்லன்னா என்ன பண்றது?’ என்று அதற்குள் பல கேள்விகள் அவன் மூளையை குடைய ஆரம்பிக்க, அந்த கதவு திறக்கப்படவே இல்லை.
அதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்று எண்ணியவன் கதவை உடைக்க முயன்றான். பழைய கதவு என்பதால், அவனின் சில அடிகளை தாங்க முடியாமல் திறந்து கொண்டது.
கதவு திறக்கப்பட்டதும் குப்பென்று மதுவின் வாடை வீச, “பொறுக்கி ராஸ்கல்…” என்று திட்டியவாறே, அங்கிருந்த ஒரே ஒரு அறைக்குள் சென்று பார்க்க, அங்கு கண்ட காட்சியில் உள்ளம் கொதித்தது உதயகீதனுக்கு.
அங்கு கட்டிலில் ஜீவநந்தினி பிரக்ஞையின்றி, சேலை ஒரு பக்கம் சரிந்து நெகிழ்ந்து போய் இருக்க, அவளின் மீது அந்த கயவனும் மயங்கி போய் இருந்தான்.
அதை பார்த்ததும் அவனை கொன்று போடும் அளவுக்கு வெறி இருந்தாலும், முதலில் மனையாளை காக்க வேண்டும் என்ற பதற்றத்தில், அவள் மீது இருந்தவனை ஒரு எத்தில் தூர விழுகச் செய்தான்.
அதே நேரம் வெளியே காவலர்களின் சத்தம் கேட்க, வேகமாக ஜீவநந்தினியின் நெகிழ்ந்திருந்த ஆடைகளை சரி செய்து, அவளை தூக்கிக் கொண்டான்.
அப்போது உள்ளே வந்த பிரகாஷ், “உதய், அவங்க எப்படி இருக்காங்க?” என்று ஜீவநந்தினியை சுட்டிக்காட்டி வினவ, “மயக்கத்துல இருக்கா பிரகாஷ். நான் பக்கத்துல இருக்க ஏதாவது கிளினிக்குக்கு கூட்டிட்டு போறேன். அந்த பாஸ்**ட் அங்க தான் இருக்கான். முதல்ல, என் பொண்டாட்டியை பார்த்துட்டு வந்து அவனை கவனிச்சுக்குறேன்.” என்று பல்லைக் கடித்து கூறிய உதயகீதன் அங்கிருந்து வெளியேறினான்.
உதயகீதன் தள்ளியதில் மேஜையில் மோதி தலையிலிருந்து குருதி வழிவது கூட தெரியாமல், இன்னமும் போதையில் இருந்தவனை அள்ளிக் கொண்டு காவல் நிலையம் நோக்கி சென்றனர் மற்ற காவலர்கள்.
அருகிலிருந்த சிறிய மருத்துவமனைக்கு சென்றவன், அங்கிருந்த ஒரே ஒரு பெண் மருத்துவரிடம் நடந்ததை சொல்ல, அவரும் உடனே சிகிச்சையை ஆரம்பித்தார்.
அறைக்கு வெளியே காத்திருந்த உதயகீதனுக்கு இன்னமும் பதற்றம் அடங்கவில்லை. எதையும் நினைக்கவும் பிடிக்கவில்லை. பித்து பிடித்ததை போல தான் அங்கிருந்த நாற்காலியில் தலையை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
சில நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த அந்த மருத்துவர், “அவங்களுக்கு கொடுத்த மயக்க மருந்தோட வீரியத்துனால இன்னும் கொஞ்ச நேரத்துக்கு மயக்கத்துல தான் இருப்பாங்க. ரேப் பண்ற முயற்சி நடந்துருக்கு. கைலயும் கால்லயும் ஹராஸ் பண்ணதுக்கான மார்க்ஸ் இருக்கு. ஆனா, ரேப் நடக்கல.” என்றெல்லாம் கூற, “டாக்டர், இப்போ அவ சேஃபா இருக்காளா இல்லையா?” என்று அதுவே முக்கியம் என்பது போல வினவினான்.
“அவங்க சேஃப் தான் மிஸ்டர்.” என்று அந்த மருத்துவர் கூறியதும் ஒரு ஆசுவாச மூச்சை வெளியிட்டவன், “அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா?” என்று கேட்டான் அவன்.
சிறிது யோசித்துவிட்டு, “அவங்களுக்கு ஃபீவர் வர சான்ஸ் இருக்கு. சோ, சில டேப்ளட்ஸ் அண்ட் ஆயின்மெண்ட் பிரெஸ்க்ரைப் பண்றேன்.” என்று பேசியபடி முன்னே செல்ல, அதை எல்லாம் வாங்கி விட்டு வந்தவன், மனையாளை அணைத்து தூக்கியபடியே வாகனத்தில் அமர வைத்தவன், மிக மெதுவாக வாகனத்தை செலுத்தினான்.
அது பின்னிரவு நேரம் என்பதால் இரு தந்தையர்களும் உறங்கி இருக்க, அவர்களை அந்நேரம் பதற்றப்பட வைக்க வேண்டாம் என்று நிம்மதியுற்றவனாக அவர்களின் அறைக்கு சென்று அவளை படுக்கையில் படுக்க வைத்தவன், அத்தனை நேரமிருந்த மனபாரம் தாங்காமல் அவளை அணைத்துக் கொண்டு படுத்தான்.
கூடவே, “சாரிமா, என்னால தான் இன்னைக்கு இவ்ளோ கஷ்டத்தை நீ அனுபவிச்சுருக்க.” என்று குற்றவுணர்வுடன் பேச ஆரம்பித்தவன், “நான் தான் போக வேண்டாம்னு சொன்னேன்ல, அடம்பிடிச்சு போய்… ப்ச்… என்னவெல்லாம் நடந்துருக்கு? அந்த நாயை சும்மா விட மாட்டேன்.” என்று கோபத்துடன் புலம்பினான்.
அவன் புலம்பல்களை கேட்கவாவது கண் விழிப்பாள் என்று எண்ணினானோ என்னவோ!
அப்படியே தூங்கியும் போனவன், மனைவியின் அனத்தலில் மீண்டும் விழித்தான்.
மருத்துவர் சொன்னது போல காய்ச்சல் வந்திருந்தது அவளுக்கு. அவளுக்கான மாத்திரைகளை உறக்கத்திலேயே விழுங்கச் செய்தவன், களிம்பை எடுத்து கைகளிளும் கால்களிலும் உள்ள காயங்களில் தடவினான்.
அவற்றை பார்க்கும் போதெல்லாம் உள்ளம் கொதித்தது அவனுக்கு.
‘நாளைக்கு இருக்கு அந்த ராஸ்கலுக்கு!’ என்று நினைத்தபடியே அவளுக்கான பணிவிடைகளை செய்து முடித்தான். பின்னர், மன சோர்வினாலும் உடல் சோர்வினாலும் அவளை அணைத்தபடி மீண்டும் துயில் கொண்டான்.
*****
ஆழ்ந்த உறக்கம் இல்லாத காரணத்தினால் விரைவிலேயே விழித்து விட்டான் உதயகீதன். கண்கள் நெருப்பாக எரிந்தாலும், மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விழிகளை திறந்தான்.
அருகே படுத்திருந்த ஜீவநந்தினியின் கழுத்திலும் நெற்றியிலும் கரம் வைத்து பார்த்தவன் காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்து சிறிது ஆசுவாசப்பட்டான்.
அதை பொறுக்க முடியாத அவனின் மனைவியோ, “முசோ தூங்க விடுங்களேன்… இன்னைக்கு சண்டே தான?” என்று முனக, அப்போது தான் அவனின் இதழ்கள் விரிந்தன.
“என்ன நடந்துருக்குன்னே தெரியாம தூங்குற பார்த்தியா, நீ யூனிக் பீஸ் தான் ஜீவி.” என்று கொஞ்சினானா திட்டினானா என்று அவனுக்கே தெரியாத தொனியில் கூறினான் அவன்.
“ம்ச், தூக்கம் வருது தயா. முழிச்சதுக்கு அப்பறம் என்ன வேணும்னாலும் பேசுங்க, கேட்குறேன். இப்போ தூங்க விடுங்களேன்.” என்று போர்வையை தலை வரை போர்த்திக் கொண்டு அவளின் உறக்கத்தை தொடர்ந்தாள் அவன் மனைவி.
“சரி சரி தூங்கு. நான் வெளிய போறேன்.” என்று அவளின் முகத்தை மொத்தமாக மறைந்திருந்த போர்வையை விலக்கியவன் கூற, “எங்க வேணும்னாலும் போங்க…” என்று முனகியபடி தூங்கிப் போனாள் பெண்ணவள்.
அவள் இப்போதைக்கு எழ மாட்டாள் என்பதை அறிந்து கொண்ட உதயகீதனின் முகம் அத்தனை நேரமிருந்த இளக்கத்தை தொலைத்தது.
பால்கனியில் வந்து நின்றவன் பிரகாஷை அழைத்து, அந்த கயவன் எங்கிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டு, அவனை நோக்கி பயணப்பட்டான் ருத்ரமூர்த்தியாக!
அது அதிகாலை என்பதால், தந்தையர்கள் இருவரும் விழித்திருக்கவில்லை. அதனால், இப்போதும் அவன் யாருக்கும் காரணம் தெரிவிக்க வேண்டியதில்லாமல் போனது.
அந்த காவல் நிலையமும் அதிகாலை பொழுதென்பதால் சோம்பியே கிடந்தது. வேகநடையில் அதற்குள் நுழைந்த உதயகீதன் பிரகாஷிடம் சென்று, “எங்க அவன்?” என்று உறும, “கொஞ்சம் நிதானமா இரு உதய். அவன் கிட்ட நேத்தே விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சாச்சு. அந்த ரஞ்சித் சொன்ன மாதிரி, முதல்ல கொஞ்ச நேரத்துக்கு கடத்தி, உன்னை பயமுறுத்துறது தான் பிளான். ஆனா, இந்த ராஸ்கல் தான் அதை மாத்தி, உன் ஒய்ஃபை ரே… க்கும்… தனியா கடத்திட்டு போயிருக்கான். வயிறு முட்ட சரக்கு குடிச்சதால, மயங்கியும் விழுந்துட்டான்.” என்று பிரகாஷ் சொல்ல சொல்ல, உதயகீதனின் கோபம் பெருகியது.
“இவன் இதுக்கு முன்னாடியே திருட்டு, பிக்பாக்கெட்னு சின்ன சின்ன கேஸ்ல மாட்டியிருக்கான். ஆனா, கடத்தல் எல்லாம் இது தான் முதல் முறையாம். அதனால தான், தப்பா பிளான் பண்ணி தப்பா எக்சிக்யூட் பண்ணி, சீக்கிரமாவும் மாட்டியிருக்கான்.” என்று பிரகாஷ் கூற, “அவன் லைஃப் ஹிஸ்டரி எல்லாம் எனக்கு எதுக்கு? அவன் எங்க இருக்கான்னு சொல்லு.” என்று உதயகீதன் அவசரம் காட்டினான்.
“உதய், அவன் மைனர்…” என்று தயங்கியபடி பிரகாஷ் கூற, “அதனால? கொஞ்சணும்னு சொல்றியா? இந்த வயசுலயே பார்க்கக் கூடாததை பார்த்து, செய்யக் கூடாததை செய்வானுங்க. இவனுங்களை மைனர்னு பாவம் பார்க்கணுமா? இந்த வயசுலயே இப்படி… இப்போ விட்டுட்டா, போகப் போக எப்படி இருப்பானுங்களோ!” என்று படபடத்த உதயகீதன், “ப்ச், அதெல்லாம் எதுக்கு? இப்போ எங்க இருக்கான்னு சொல்ல முடியுமா முடியாதா?” என்றான்.
“ஹே, என்னை பேச விடு மேன். நான் ஒன்னும் அவனுக்கு பாவம் பார்க்க சொல்லல. உனக்கு தெரியுமோ தெரியாதோன்னு தான் சொன்னேன். அடிக்குறது அடிக்குற, கொஞ்சம் உள்காயமா மட்டும் இருக்க மாதிரி பார்த்துக்கோ. நாளைக்கு ஏதாவதுன்னா, என்னை தான் கேள்வி கேட்டு குடைவானுங்க.” என்ற பிரகாஷ், அந்த கயவன் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றான்.
அங்கு ஏற்கனவே வாங்கிய அடியினால் உண்டான வலியின் காரணமாக முனகியபடி படுத்திருந்தவனை உஷ்ணப்பார்வை பார்த்தபடி அருகே சென்றான் உதயகீதன்.
அதன்பின்னர், அந்த செல்லுக்குள் இருந்து கதறல் சத்தம் மட்டும் தான் வெளியே கேட்டது. உதயகீதன் எதுவும் பேசவில்லை. அவன் கரங்கள் அடிப்பதை நிறுத்தவில்லை.
அவன் கரங்கள் ஓயும் வரை விடாமல் அடித்தவன், “இனி, யாரையும் தப்பா பார்த்தா கூட, இது தான் உனக்கு ஞாபகம் வரணும்.” என்று கூறி மீண்டும் அடித்தான்.
பின்னர், பிரமாஷ் தான், “போதும்டா, மொத்தமா போயிட போறான்.” என்று அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“உதய், கம்ப்லைண்ட் எதுவும் கொடுக்கப் போறியா?” என்று பிரகாஷ் வினவ, “அதை என் ஒய்ஃப் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன் பிரகாஷ் “ என்றான் உதயகீதன் யோசனையாக.
“கொஞ்சம் சீக்கிரம் சொல்லு. ஏன்னா, நம்ம அரெஸ்ட் பண்றதை, அந்த ஏரியா மக்கள் பார்த்துருக்காங்க. கம்ப்லைண்ட் இல்லாம, ரொம்ப நேரம் இங்க வச்சுருக்கவும் முடியாது.” என்று பிரகாஷ் கூற, அவனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்து விட்டு கிளம்பி விட்டான், அவன் ஜீவியை தேடி.
தொடரும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


உதய் சூப்பர் ❤️❤️❤️❤️