
காதல் -17
காலம் எத்தனை எத்தனை மாற்றங்களை எல்லாம் மனிதர்களில் வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது.
இன்றோடு இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.. இந்த ஒரு வாரத்தில் அவள் வீட்டில் உள்ள சில வேலைகளை எல்லாம் கற்றுக் கொண்டாள்.
மனைவியாக அவளது கடமைகளை செய்யா விட்டாலும் ஒரு சக தோழியாக அவனுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தாள்.. ஆபிஸ் செல்வதற்கு முன்பு அவனுடைய சட்டையை அயர்ன் செய்து வைப்பது.. அவன் ஜிம்முக்கு சென்று வந்தவுடன் சுட சுட டீயை தாயாராக கொண்டு வருவது, பெட்டில் கிடக்கும் கோப்புகளை எல்லாம் அவனது அலுவலக பையில் சரியாக வைப்பது, முக்கியமாக மதிய உணவை தவிர்த்து வந்தவனுக்கு வழுகட்டாயமாக சமைத்து உணவை பையில் வைத்து கொடுத்து விட்டாள்..
ஏனோ அவனும் இந்த ஒரு வாரத்தில் சிறு பிள்ளை போல ஒவ்வொரு விஷயத்திற்கும் சாயா சாயா என அழைத்தே பழகி விட்டான். அனைத்தையும் மூர்த்தி பார்த்து கொண்டு இருந்தாலும் எதையும் கண்டு கொள்ளாதது போல இருந்து கொண்டார். அவருக்குமே தன் மகனின் இந்த புது விதமான மாற்றம் எல்லாம் பிடித்து இருந்தது.
அறையில் இருக்கும் தன் மனைவியின் படத்தை பார்த்தவர். நீயும் நானும் எப்படி இருந்தோமோ அப்படியே இவங்களும் இருக்கனும் டி.. நம்மளோட சந்தோசம் சீக்கிரமே முடிஞ்சு போச்சு… ஆனால் இவங்க ரொம்ப காலம் சந்தோஷமா வாழனும்.. என எஸ்டேட்டை பார்க்க கிளம்பி விட்டார் மூர்த்தி.
” சாயா இன்னைக்கு நீ உச்சிக்கு போகனும்னு சொன்ன ” என்றதும்.. கண்களை விரித்து ‘ நிஜமாகவா ‘ என்பதை போல பார்க்க..
” சீக்கிரம் கிளம்பு… இன்னைக்கு எனக்கு மீட்டிங் இல்ல, அப்பா எஸ்டேட் போயிருக்காரு, நம்ம உச்சிக்கு போகலாம் ” என்றதும் சிட்டாக பறந்து விட்டாள் அவர்களது அறைக்கு.
எத்தனை நாட்கள் கழித்து அவளது விநாயகரை பார்க்க போகிறாள், கூடவே அவளது அணில் நண்பர்களும் … மகிழ்ச்சியாக இளம் சிவப்பு வண்ண புடவையை சுற்றிக் கொண்டவள் .. தளர தரள கூந்தலை பின்னி.. தோட்டத்தில் பறித்த ஜாதி மல்லியை சூடி கொண்டு.. நெற்றியில் பொட்டிட்டு தயாராகி வெளியே வந்தாள்..
மாடியில் இருந்து இறங்கி வரும் சாயாவையே கண் இமைக்காமல் பார்த்து வைத்தான் மறவன். வேகமாக கிட்சன் சென்று சில பழங்களை எல்லாம் ஒரு சின்ன கூடையில் போட்டு எடுத்துக் கொண்டாள்..
‘போகலாம் ‘ என தலையை ஆட்டிய சாயாவை நடு கூடம் என்று கூட பார்க்காமல் கையை பிடித்து ஒரே இழுவில் அவனுடன் இடைவெளி இல்லாமல் நிறுத்தியவன்.. ” சாயா மேடம் எனக்கு மறைக்கிறது சுத்தமா பிடிக்காது ” என்றதும் அவளது முகம் நொடியில் மாறி விட..
அதற்குள் அவள் புடவையில் ஒளித்து வைத்திருந்த புத்தகத்தை கைப்பற்றினான்… நொடியில் நடந்து விட்ட நிகழ்வில் சாயா செய்வதறியாது திகைக்க.. கையில் இருந்து புத்தகத்தில் உள்ள முகப்பு அட்டையை பார்த்தான்.. ” வாழ்வே மாயம் ” வேறு ஒரு எழுத்தாளரின் புத்தகம்.. இரண்டு நிமிடம் அந்த புத்தகத்தையே பார்த்தவன் .. ” இத ஒளிச்சு வச்சு படிக்கனும்னு அவசியம் இல்ல… நான் சொன்ன புத்தகம் தான் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது ” என்றவனது குரலில் அதுவரையில் இருந்த இயல்பு தொலைந்து இறுக்கம் குடிகொண்டது.
புத்தகத்தை வாங்கி கூடையில் போட்டுக் கொண்டவள் மெதுவாக அவன் முகம் பார்க்காமல் வெளியேற , அவனும் காரை எடுத்து கொண்டு அவளுடன் மலை உச்சிக்கு சென்றான்.
இந்த ஒரு வாரத்தில் சாயா எதை பற்றியும் சிந்திக்கவில்லை.. தெளிவாக ஒரு முடிவை எடுத்திருந்தாள்.. தான் எதற்காக அவனை திருமணம் செய்தோமோ அந்த வேலையை முடித்து விட்டு தேனுவை கூட்டிக் கொண்டு இந்த ஊரில் இருந்து கண் காணாத இடத்திற்கு சென்று விட வேண்டும் என நினைத்து கொண்டாள்.. அவள் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன ?
அதனால் முயன்ற வரை தன்னை சகஜமாக்கி கொண்டு அந்த வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தாள். அவள் சாதாரணமாக வலம் வருவதை மறவனும் பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை… இதோ ஜோடியாக போகும் இவர்கள் திரும்பி வரும் பொழுது இதே மன நிலையில் வர இயலுமா ?
” எத்தனை வருஷமா இந்த உச்சிக்கு வர ” கேட்டுக் கொண்டே அவளுடன் மலை ஏறினான்.
” விவரம் தெரிஞ்சுதுல இருந்து ” சைகை பாஷையில்…
” ஒஹ்… அப்போ இருந்து இந்த அணில் எல்லாம் உனக்கு ப்ரெண்ட்டா ”
” இல்ல இப்போ கொஞ்ச வருஷமா தான் ” என கண்கள் ஜதியாட அவள் பேசுவதை எல்லாம் கவனித்து கொண்டே வந்தான்.
” அப்போ எப்போ இருந்து உனக்கு இப்படி ஆச்சு ” என அடுத்த கேள்வியை தொடுக்க..
” எப்படி ” என்றாள் கைகளை விரித்து..
” இல்ல உனக்கு பேச்சு எப்போ இருந்து வரல ” என்றதும் அதுவரை இருந்த அவளது நிர்மலான முகம் சட்டென்று பதட்டத்தை தத்தெடுத்தது..
அதை கவனித்த வண்ணமே அவளை நெருங்கியவன்.. ” நீ எங்கிட்ட எதையும் மறைக்கிறீயா யாழி ” என முகம் பார்த்து கேட்க…
எச்சில் விழுங்கியவள்.. அவனிடம் இருந்து பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தவள் அப்படியே கால் இடறி தண்ணீரில் விழ பார்க்க… அடுத்த நொடி அவளது இடை பற்றி தூக்கி இருந்தான் மறவன்.
” அறிவு இல்லையா டி… பின்னாடி அருவி தண்ணி ஓடிட்டு இருக்கு .. உன் கவனம் எல்லாம் எங்க இருக்கு.. ஏதாவது கேட்டா இப்படியே மூஞ்சிய மாத்துற.. ” என அவளை கடிந்து கொண்டே அவன் பக்கம் இழுத்து கொண்டான்.
பயத்தில் அவளும் அவனோடு ஒன்றி கொண்டவள்.. பின்னால் திரும்பி பார்த்தவள் பயத்தில் அரண்டு போனாள்.. மிக அகலமான பள்ளத்தாக்கில் அருவி தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது… ‘ இந்நேரம் இதுல விழுந்திருந்தா ‘ என என்னும் பொழுதே மனம் பதறியது.
அவள் பயத்தில் இருப்பதை உணர்ந்து .. அவளது முதுகை ஆதரவாக தடவி கொடுத்தவன்.. ” பயப்படாத யாழி ஒன்னும் ஆகல.. அங்க உட்காரலாம் வா ” என அவளை கை அணைப்பில் வைத்து கொண்டே அங்குள்ள கல்லில் அமர வைக்க.. சாயாலி தலையை குனிந்து கொண்டு அமர்ந்து விட்டாள்..
இருவரையும் அமைதி ஆக்கிரமிக்க… பத்து நிமிடம் கழித்து ஒரு முடிவோடு மறவன் தான் ஆரம்பித்தான்.. ” சரி நான் இனிமே உன்கிட்ட எதுவும் கேட்கலை, ஏதோ பெருசா உன் வாழ்க்கையில நடந்திருக்கு.. உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு.. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் யாழி ” என்றதும் அதுவரை தாழ்த்திருந்த அவளது இமைகள் மெதுவாக மறவனை நோக்க..
” நாளைக்கு நம்ம முக்கியமான ஒரு ஆளை பார்க்க போகனும் , எஸ்டேட் போறதுக்கு முன்னாடி கிளம்பி இரு.. ” என்றதும் சரி என தலை அசைத்தாள்.
” சரி எவ்வளவு நேரம் இங்கேயே உட்கார போற.. நீ கொண்டு வந்த பழத்தை எல்லாம் எடுத்துட்டு வா ” என அவன் மேல் நோக்கி நடக்க.. அவனை யோசனையாக பார்த்து கொண்டே அவள் நடக்க.. இருவரும் மலை உச்சியை அடைந்தனர்.
எப்போதும் போல அங்குள்ள பூக்களை பறித்து .. அதை அழகாக கோர்த்து அங்குள்ள விநாயகருக்கு அணிவித்து விட்டு அவர் முன்பு கைகூப்பி நின்றவள்.. கண்களை மூடி வெகு நாட்களுக்கு பின் மனம் விட்டு தரிசனம் செய்தாள்…
” நான் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில மாட்டிட்டு இருக்கேனு உனக்கே தெரியும்.. இதுல இருந்து என்னால வெளிய வர முடியுமான்னு தெரியலை.. ஆனால் எங்க அம்மாக்காக இதுல இருந்து நான் போராடி வெளிய வந்து தான் ஆகனும்.. நான் இந்த மறவன் கிட்ட மாட்டி என் வாழ்க்கையை முடிச்சுக்க விரும்பல.. நீ இருக்குற தைரியத்தில தான் துணிஞ்சு இறங்கிருக்கேன்.. ” என கண்களை மூடி பிராத்தனை செய்ய.. அவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டே இருந்தவன்…
” கவலை படாத.. எனக்கு தெரியாத வரைக்கும் உனக்கு நல்ல நேரம் தான் ” என்ற மறவனது குரலில் திடுகிட்டு கண் விழித்தாள் சாயாலி..
அவனை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டவள்.. கொண்டு வந்த பழங்களை எல்லாம் எடுத்து கொண்டு அங்குள்ள கல்லில் அமர்ந்து புத்தகத்தை வாசிக்க தொடங்க.. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளை சுற்றி வட்டமடித்தது அணில் கூட்டம்..
அதை வியப்பாக பார்த்து கொண்டே ரசிக்க ஆரம்பித்தான் மறவன். பின் நேரம் ஆவதை தொடர்ந்து அவளை கிளம்ப கூற இருவரும் அமைதியாக வீடு வந்து சேர்த்தனர்.
வீட்டில் மூர்த்தி இல்லாததால் நடு கூடத்தில் டீவி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. மறவன் அமைதியாக மாடி படியை நோக்கி சென்றான்.
” எழுத்தாளர் தமிழ் காதலன் இந்த வருடத்தின் சிறந்த எழுத்தாளராக தேர்ந்தெடுக்க பட்டு தேசிய விருதுக்கு தேர்வாகி இருப்பது, அவரது வாசகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விருதை பெற்று கொள்வதற்கு தமிழ் காதலன் வருவார் என வாசகர்கள் மத்தியில் எதிர்பார்க்க படுகிறது. ” என செய்தி வசித்து முடிக்க.. மாடியை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் கால்கள் அப்படியே வேரூன்றி நின்று விட்டது.
கண்கள் அகல அந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தாள் சாயாலி.. ஒரு நொடி தான் .. அடுத்த நொடியே செய்தி வாசித்து கொண்டிருந்த டீவி தரையில் சுக்கு நூறாக நொறுங்க.. அதிர்ந்து போனாள் சாயாலி..
” என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கா” என கண்கள் சிவக்க மறவன் கேட்டதில் உடல் மொத்தமும் நடுங்கி போக..
அவசரமாக இல்லை என தலை அசைத்தாள்.. தலை அசைத்த அடுத்த நொடி அவளும் தரையில் வீழ்ந்து கிடக்க.. கன்னம் வெகுவாக எரிந்தது அவளுக்கு..
கண்கள் சுழட்டி கொண்டு வர.. அவள் முன்பு ஐயனாராக காட்சி அளித்தான் மறவன்.. அவனது மற்றொரு முகத்தை பார்த்தவளுக்கு நெஞ்சே அடைத்தது.. இப்படி வந்து இவனிடம் மாட்டிக் கொண்டோமே என நொடியில் கலங்கி போனது அவள் மனம் ..
சனா💖

