அத்தியாயம் 17
ரக்ஷன் மருத்துவமனையில் இல்லை என்னும் தகவல் தெரிய வந்ததும், அத்வைத்தும் இராவும் நேரத்தைக் கடத்தாமல் அந்த மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்க்கக் கோரினர்.
அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஐங்கரனின் நண்பர் என்பதால் சிசிடிவி காட்சிகளைக் காணும் வாய்ப்பை உடனே பெற்றனர் இருவரும்.
ஆனால், இராவின் பணியிடத்தில் நடந்ததைப் போலவே, குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கிருந்த சிசிடிவி அனைத்தும் மர்மமாக செயல்படாமல் போயிருந்தன.
அந்த மர்மத்திற்கு காரணம் சூனியனோ என்ற சிந்தனையில் இரா இருக்க, அத்வைத்தினால் அப்போதும் அவ்வழியில் சிந்திக்க இயலவில்லை. வேறெதாவது அல்லது வேறு யாராவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பினான் அவன்.
அடுத்து என்ன செய்வது, ரக்ஷனை எங்கு சென்று கண்டுபிடிப்பது என்று எதுவும் புரியாமல் இருவரும் அந்த மருத்துவமனை வாசலில் நின்றிருக்க, இராவின் அலைபேசி ஒலியெழுப்பி அதன் இருப்பை உணர்த்தியது.
அழைத்தது ஐங்கரனே!
‘இருக்கும் பிரச்சனையில் இது வேறா?’ என்று சலித்தபடி அலைபேசியையே இரா பார்த்துக் கொண்டு நிற்க, “ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போகுது. எடுத்துப் பேசு ஸ்டார்லைட்.” என்றான் அத்வைத்.
அவன் கூறியதை தட்ட முடியாமல், ஒரு பெருமூச்சுடன் அந்த அழைப்பை ஏற்றிருந்தாள் இரா.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “இராம்மா…” என்று பாசத்துடன் அழைத்து, “எப்படி இருக்க? பெருசா அடி பட்டுடுச்சா?” என்று ஐங்கரன் கரிசனத்ததுடன் கேட்க, அதை விரும்பாத இரா ஏதோ சொல்ல வருவதற்குள், மறுமுனையிலிருந்து அவளின் அத்தை தாரணியின் அழுகுரல் கேட்டது.
‘இந்த ஊருக்கு வரவே மாட்டேன்னு போனவங்க எதுக்கு இப்போ இங்க வந்துருக்காங்க?’ என்ற இராவின் யோசனைக்குப் பதிலாக தாரணி, “ஹையோ என் பையன்… அண்ணா, அவன் உயிருக்கே ஆபத்து அண்ணா…” என்று கதறுவது கேட்டது.
மற்ற நேரம் என்றால், ‘இது என்ன டிராமா?’ என்று கேட்டிருப்பாள் இரா. ஆனால், இப்போது ரக்ஷன் காணாமல் போயிருக்கும் சமயத்தில் தாரணி இப்படி சொல்வது அவளின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.
அதற்குள் அவளின் தந்தையோ, “இரா, ரக்ஷனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கிறதா அந்த தம்பி சொன்னாரே… அவன் அங்கதான இருக்கான்?” என்று பரபரப்புடன் கேட்க, அவரின் பதற்றத்தை உணர்ந்த இராவும், “இல்ல, அவன் இங்க இல்ல. எங்க போனான்னும் தெரியல.” என்று அமைதியாகவே கூறினாள்.
அதைக் கேட்ட தாரணியோ, “அவன்தான்… அவன் கிட்டதான் என் பையன் இருப்பான்…” என்று அழ, புருவச் சுழிப்புடன், “அவங்க என்ன சொல்றாங்க? யாரு கிட்ட இருப்பான்?” என்றாள் இரா.
அதற்கு பதில் சொல்லாத ஐங்கரனோ, “நீ கொஞ்சம் சீக்கிரம் இங்க வா இரா.” என்றபடி அழைப்பைத் துண்டித்தார்.
அத்தனை நேரம் அவர்களுக்குள் நடந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த அத்வைத், “ரக்ஷன் காணாம போனதுக்கும் அவங்க அம்மாக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு தோணுது ஸ்டார்லைட்.” என்று கூற, “ம்ம்ம் எனக்கும் அப்படித்தான் தோணுது. அங்க விசாரிச்சா, ரக்ஷன் இருக்க இடம் தெரிய சான்ஸ் இருக்கு.” என்றாள் இரா.
இருவரும் இராவின் வீட்டிற்குள் நுழைய, கூடத்திலேயே பெரியவர்கள் நால்வரும் இருந்தனர்.
அவனி பள்ளிக்கு சென்றிருந்ததால், இந்த விஷயம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.
இராவைக் கண்ட தாரணியின் பார்வை அவள் கரத்திலிருந்த மோதிரத்தில் ஒரு முழு நொடி பதிந்து மீண்டதை அத்வைத் கவனித்திருந்தான்.
மறுநொடி இராவிடம் வந்த தாரணி, “என் பையனை காப்பாத்தி குடு இரா.” என்று அவரின் அழுகையை ஆரம்பித்து விட, இராவோ ஐங்கரனை கேள்வியாக நோக்கினாள்.
*****
சில நிமிடங்களுக்கு முன்பு…
கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அதிர்ந்த ஐங்கரன், தன்னை சிறிது நிதானப்படுத்தி விட்டு மகளைத் தேட, அவளை அங்கு காணவில்லை.
உடனே பதறியவரை தேற்றிய மாடசாமி, “உன் பொண்ணை, அவளோட காதலன் பத்திரமா கூட்டிட்டு போயிட்டான். ரூபிணி வாசல்ல நிக்குது பாரு. ரொம்ப பதட்டமா வேற தெரியுது. அது என்னன்னு பாரு…” என்று கூற, மகள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற நிம்மதியில் மனைவியைக் காணச் சென்றார்.
அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக இருந்தது, தங்கை ஊருக்கு வந்த தகவலும், அவர் வந்த காரணம் என்று மனைவி சொன்னதும்!
உடனே, வீட்டிற்கு சென்ற ஐங்கரனை வாசலிலேயே தடுத்து நிறுத்திய தாரணி, அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு, “அண்ணா, என் பையனை காப்பாத்திக் குடு.” என்று அழ ஆரம்பித்து விட்டார்.
“அழுகையை நிறுத்திட்டு தெளிவா சொல்லு தாரணி.” என்று ஐங்கரன் விட்டேற்றியாகக் கூற, தாரணிக்கோ உள்ளுக்குள் எரிந்தது.
ஐங்கரன் தங்கையின் மீது பாசம் கொண்டவர்தான். ஆனால், சமீப காலமாக தங்கை நடந்து கொள்ளும் விதத்தில் இருவரின் உறவிலும் சற்றே விரிசல் விழத் தொடங்கி இருந்தது.
இப்போது ஐங்கரனின் விலகல் பேச்சிற்கான காரணம் அது மட்டுமல்ல, தங்கை இங்கு வந்ததற்காக காரணமும் கூட!
தாரணியோ, “அண்ணா, உன்னால மட்டும்தான் அவனைக் காப்பாத்த முடியும். பிளீஸ், உன் தங்கச்சி பையனோட உசுருண்ணா.” என்று மீண்டும் அழுகையை தொடர்ந்தார்.
“தெளிவா சொல்லுன்னு சொன்னேன் தாரணி.” என்ற ஐங்கரன் அருகில் அமைதியாக நின்றிருந்த விநாயகத்தைக் கண்டார்.
அவரோ எதுவுமே பேசவில்லை. பேசும் நிலையிலும், அவரின் மனைவி அவரை விடவில்லையே!
கண்ணீரைத் துடைத்துக் கொண்ட தாரணியோ, “என் பையனோட உயிருக்கு ஆபத்து அண்ணா. அதுவும்… அந்த சூனியனால!” என்று கூறி இடைவெளி விட, சிறு புருவச் சுருக்கம் மட்டுமே ஐங்கரனிடமிருந்து அவருக்குப் பதிலாகக் கிடைத்தது.
எனினும், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “அந்த சூனியனுக்கு, நம்ம வசுந்தராம்மாவோட மோதிரம் வேணுமாம். அப்போதான் ரக்ஷனை விடுவானாம்.” என்று ஒருவழியாக விஷயத்தைக் கூற, தங்கையை முறைத்தார் ஐங்கரன்.
“அந்த சூனியன் உன்கிட்ட இதை சொன்னானா? தானா எதுவும் செய்யுற அளவுக்கு அவனுக்கு சக்தி இல்லையே. அப்புறம் எப்படி?” என்று சரியாக யூகித்த ஐங்கரன் தாரணியை கண்டிப்புடன் காண, தாரணியின் மனதிற்குள் எரிச்சல் மண்டினாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல், கண்களைக் கசக்கியபடி, “நான் தப்பு பண்ணிட்டேன் அண்ணா…” என்று தயக்கத்துடன் கூறினார்.
அதில் ஐங்கரனின் பார்வை கூர்மை பெற, வாழ்வில் முதல் முறையாக அண்ணனைப் பார்த்து பயந்தார் தாரணி.
சில நிமிட சங்கடமான மௌனத்திற்குப் பிறகு தானே பேசத் தொடங்கினார் தாரணி.
“அண்ணா… அது வந்து, போன வருஷம் இவருக்கு பிசினஸ்ல ரொம்ப லாஸாகிடுச்சு. அப்போவே சுதாரிக்கலைன்னா, மொத்தமா மூட வேண்டிய நிலை. அதான்… நம்ம குடும்பத்துல பூஜை செய்வாங்களே… அது மாதிரி… செஞ்சோம்.” என்று தயங்கிபடி தாரணி கூற, அதைக் கேட்ட ஐங்கரனும் ரூபிணியும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அந்த அதிர்ச்சிக்கான காரணம், தாரணியின் செயல் மட்டுமல்ல, அவர்களின் அறியாமையும் கூட!
அந்த அறியாமையினால், எத்தனை பெரிய துரோகத்தை மகளுக்கு இழைத்திருந்தனர்?
அதை எண்ணிப் பார்க்கவே அஞ்சியபடி உறைந்து போய் நின்றிருந்தனர்.
“என்னங்க…” என்று ரூபிணி கண்ணீர் வழிய ஐங்கரனை அழைக்க, “தப்பு பண்ணிட்டோம் ரூபி.” என்று குரல் உடைய பேசினார் அவர்.
அண்ணனும் அண்ணியும் என்ன பேசிக் கொள்கின்றனர் என்று புரியாமல் தன் திட்டம் வெற்றி பெறுமா என்ற குழப்பத்துடன் நின்றிருந்த தாரணி, விநாயகத்திற்கு கண்ஜாடை காட்டினார், பேச சொல்லி!
அவரோ முதல் முறையாக மனைவியின் சொல்லை மீறி அமைதியாக நின்றிருந்தார். வேறு என்ன செய்து விட முடியும் அவரால்? மனைவியின் பேராசை காரணமாக செய்த ஒற்றை பூஜை எத்தனை பெரிய அனர்த்தத்தை அவர்களின் மொத்த குடும்பத்திற்கும் உண்டாக்க இருக்கிறது என்ற உண்மை தெரிந்த மனிதராகிற்றே!
இனிமேலும், எந்த தவறும் நடக்க வேண்டாம் என்று வேண்டியபடி மௌனத்தை கையில் எடுத்துக் கொண்டார்.
கணவனை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்று எரிச்சலுடன் எண்ணிய தாரணி ஐங்கரனிடம் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதற்குள் ஐங்கரன் இராவிற்கு அழைத்திருந்தார்.
மகளிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று அழைத்தவருக்கு, அதற்கான வாய்ப்பை தரவில்லை இரா.
மேலும், தாரணி வேறு அழுது புலம்ப, அதை முதலில் தீர்க்க வேண்டி, இராவை இல்லம் வரக் கூறினார் ஐங்கரன்.
தந்தை மற்றும் மகளின் அலைபேசி உரையாடலை கேட்ட தாரணிக்கோ, ரக்ஷன் காணாமல் போனது உண்மையிலேயே அதிர்ச்சிதான்!
அவரின் எண்ணமெல்லாம், அவரின் குடும்பம் தப்பிக்க வேண்டி, இளைய மகன் ஷ்ரவனை சுற்றுலா அனுப்பி விட்டு, அண்ணனிடம் அவனைக் காணவில்லை என்று அழுது நடித்து எப்படியாவது மோதிரத்தை பெற்று விடலாம் என்பதுதான்.
அவரின் மூத்த மகன் ரக்ஷன், அவரின் நினைவிலேயே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை!
இப்போது நடப்பதை எல்லாம் பார்த்த பிறகுதான், தான் எத்தனை பெரிய இக்கட்டில் சிக்கி இருக்கிறோம் என்பதே அவருக்கு புரிந்தது.
‘ஒருவேளை, ரக்ஷனை சூனியன் வசப்படுத்தி இருந்தால்?’ என்று அவரின் மூளை அவரை பயமுறுத்தியது.
எனினும், தன் நடிப்பு வெளியே தெரிந்தால், அண்ணனின் கோபத்திற்கு ஆளாகலாம் என்பதால், அது தெரியாமல் பார்த்துக் கொண்டார்.
வந்ததிலிருந்து ‘பையன்’ என்று மட்டும் கூறியதால், அவரின் குட்டு அப்போது வெளிப்படவில்லை.
*****
நடந்ததை எண்ணிப் பார்த்த ஐங்கரன் தன் நினைவிலிருந்து வெளியே வந்து, தன்னையே பார்க்கும் மகளிடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டி, தாரணி கூறியவற்றை சுருக்கமாக கூறினார்.
அதைக் கேட்ட இராவோ, அத்தனை நேரம் தன் கரத்தைப் பற்றிக் கொண்டிருந்த தாரணியின் கரத்தை தட்டி விட்டு, அவரை துச்சமாக பார்த்து வைத்தாள்.
‘இந்த மந்திரத்துக்காக, அதைப் பார்க்க பயமா இருக்குன்னுதான என்னை விலக்கி வச்ச? என் குடும்பத்தை என்னை விட்டு பிரிச்ச?’ என்று விழிகளாலேயே அழுத்தமாக வினவினாள் இரா.
அதற்கு தாரணியோ மௌனமாக தலை குனிய, “இப்போ என்ன, அந்த மோதிரத்தைக் குடுத்தா, அந்த சூனியன் உங்க பையனை விடுவேன்னு உங்ககிட்ட டீல் பேசினானா?” என்று நக்கலாக வினவிய இரா, தன் கரத்திலிருந்த மோதிரத்தை பார்த்தபடி, “குடுக்க முடியாது.” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தாள்.
இராவின் மறுப்பில் அதிர்ந்த தாரணியோ மீண்டும் ஐங்கரனிடம் சென்று முறையிட, “உங்க மூத்த பையன் மேல உங்களுக்கு ஏற்பட்ட திடீர் பாசத்தைக் காட்டிலும் எங்களுக்கு எக்கசக்கமா அக்கறை இருக்கு மிசஸ். தாரணி. அவனை எப்படி கண்டுபிடிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்.” என்று அத்தனை நேரம் பேசாமல் இருந்த அத்வைத் கூற, அவனை முறைத்தார் தாரணி.
அதைக் கண்டு கொள்ளாத இராவோ, அவர்கள் வீட்டிலிருந்த நூலகத்திற்குச் சென்று, அந்த பெரிய புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்தாள்.
அத்தனை நேரமும் மகளிடம் மன்னிப்பு கேட்க முடியாமல் தவிப்புடன் அவளைத் தொடர்ந்தது ஐங்கரனின் பார்வை.
அதைக் கவனித்த அத்வைத்தோ, “உங்க பொண்ணுகிட்ட ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறீங்களா?” என்று ஐங்கரனிடம் கேட்க, அவனை அதிசயமாகப் பார்த்தவரோ, ஒரு விரக்தி சிரிப்புடன், “இனிமே சொல்லி பிரயோஜனம் இல்ல தம்பி.” என்று ஒரு பெருமூச்சுடன் கூறியவர், “அன்னைக்கு என்கிட்ட சொன்னீங்களே, நாங்க செய்யாததை நீங்க செய்யப் போறீங்கன்னு… எப்படியாவது அதை நிறைவேத்தி, என் பொண்ணோட உயிரை காப்பாத்திடுங்க தம்பி.” என்று கை கூப்பினார்.
அவர் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்காத அத்வைத்தோ, “என்ன பண்றீங்க அங்கிள்?” என்று பதறியவாறே, அவரின் கரங்களை கீழே இறக்கியவன், “நீங்க இப்படி கேட்கலைன்னாலும், அதை செய்வேன் அங்கிள். இரா என்னோட பொறுப்பு! அவளை எப்பவும் விட மாட்டேன்.” என்று அழுத்தத்துடன் கூறி, அங்கு நின்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த தாரணியை வெறுப்புடன் நோக்கி விட்டு வெளியேறினான் அவன்.
இராவோ, அவளின் வீட்டிற்குத்தான் சென்றிருந்தாள்.
அத்வைத்தும் உள்ளே நுழைய, “இவ்ளோ நேரம் அங்க என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” என்று அவள் வினவ, நடந்ததை சொல்லாமல், “ஏன், அதுக்குள்ள என்னை மிஸ் பண்ணியா?” என்று கண்ணடித்தான்.
அந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்பியபடி “ப்ச், நான் லவ் மூட்ல இல்ல அத்து.” என்று அவள் கூற, “அதான, நீ எப்போ லவ் மூட்ல இருந்துருக்க?” என்று கூறியபடி அவனும் அந்த புத்தகத்தை பார்த்தான்.
இராவோ ஏதோ சிந்தித்தபடி, பக்கங்களை வெறுமனே திருப்பிக் கொண்டிருக்க, “அட, இந்த மேஜிக்கும் உன்கிட்ட இருக்குன்னு தெரியாம போச்சே!” என்று போலியாக ஆச்சரியப்பட்டான் அத்வைத்.
அதற்கு அவள், ‘என்ன’வென்று பார்வையால் வினவ, “அதான், ரோபோ மாதிரி ஒரு செகண்ட்ல ஒரு முழு பக்கத்தை ஸ்கேன் பண்ற பவர்!” என்று அவன் விளக்கம் கொடுக்க, புத்தகம் கையில் இருப்பதால், முறைக்க மட்டும் செய்தாள் இரா.
“இப்படி ஜெட் வேகத்துல பக்கத்தை திருப்பினா என்ன அர்த்தம்? எதைத் தேடுற? என்ன பிளான்?” என்று நிதானமாகக் கேட்டான் அத்வைத்.
அதற்கு அவளோ உதட்டைப் பிதுக்கியபடி, “எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அத்து. ரக்ஷனைக் கண்டுபிடிக்கணும். ஆனா, எப்படின்னு தெரியல!” என்று சோர்வாக தகையசைத்தாள் இரா.
அவளின் நாடியைப் பற்றி தன்னைக் காணச் செய்தவன், “ரிலாக்ஸா இருந்தாதான், நம்மளால பிளான் பண்ண முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னால… ஹுஹும், நம்மளால ராக்ஷனை கண்டுபிடிக்க முடியும். அப்புறம் அந்த சோ-கால்டு வில்லனையும் ஃபேஸ் பண்ண முடியும். சோ, சியர் அப் மை கேர்ள்.” என்று ஊக்கம் கொடுத்தான்.
“ஹ்ம்ம், ஆனா எப்படி?” என்று இரா யோசிக்க, “அவன் மொபைல் எடுத்துட்டுப் போகல. ஹாஸ்பிட்டல்லயே வச்சுட்டுப் போயிட்டான். அது அவன் கையில இருந்திருந்தா, ஜிபிஎஸ் வழியா ஏதாவது செய்ய முடியும்.” என்று அத்வைத் கூற, “ஜிபிஎஸ்…” என்ற இராவின் விழிகள் பளபளப்பானது.
அதைக் கண்டு கொண்ட அத்வைத்தோ, “என்ன ஏதாவது மேஜிக் பண்ணப் போறீயா?” என்று வினவ, “ஆமா, அதுக்கு ரக்ஷனோட திங்ஸ் ஏதாவது வேணும்.” என்று பரபரப்புடன் கூற, ரக்ஷனின் அலைபேசியை எடுத்து நீட்டினான் அத்வைத்.
அலைபேசியை இரு கைகளுக்கு இடையே வைத்துக் கொண்டவள், கண்களை மூடி மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் அவளிலிருந்து விலகாமல் சதிராட, அவனின் மனமோ, ‘இந்த நேரத்துல ரொமான்ஸ் தேவையா?’ என்று காறித் துப்பியது.
அப்போது அவளுக்குள் ஊடுருவும் மந்திர சக்தி, அவளின் மேனியிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தில் கண்கூடாக தெரிய, ‘ஹ்ம்ம், இதை நம்பித்தான் ஆகணும்.’ என்று எண்ணிக் கொண்டான்.
அப்போது அந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வந்த ஐங்கரன், இராவை தொந்தரவு செய்யாத வண்ணம் அத்வைத்தை மட்டும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
வெளியே வந்ததும், “உங்க தங்கச்சி எங்க?” என்று அத்வைத் வினவ, “மோதிரத்தை தரலன்னு சண்டை போட்டு கிளம்பிட்டா.” என்று இறுக்கத்துடன் கூறினார் அவர்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, ஐங்கரன் எதற்கோ தயங்கியபடி நிற்பதைக் கண்ட அத்வைத், “என்னன்னு சொல்லுங்க அங்கிள்.” என்றான்.
“அது வந்து… நாங்க தப்பு பண்ணிட்டோம் தம்பி. ரொம்ப பெரிய தப்பு… என் பொண்ணு இத்தனை நாள் அனுபவிச்ச கஷ்டம், வேதனை எல்லாத்துக்கும் நாங்கதான் காரணம்.” என்று கண்ணீர் வடித்தார் ஐங்கரன்.
என்னதான், அவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும், இராவின் பொருட்டு கோபம் இருந்தாலும், கண்முன்னே அழும் நபரை அப்படியே பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு மனமில்லை.
அதற்காக அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றும் தெரியவில்லை.
அங்கே சங்கடமான அமைதி நிலவ, அதைக் களைத்தவர் ஐங்கரனே.
“எங்க குடும்பத்தைப் பத்தி அவங்களுக்கு இருந்த சக்தியைப் பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.” என்று அவர் கூற, தலையை மட்டும் அசைத்தான் அத்வைத்.
“ஒவ்வொரு தலைமுறைக்கும் எங்க குடும்ப வரலாற்றை கடத்தும் போது, அதோட ஒரு ஆருடமும் சொல்லப்படும் தம்பி. வசுந்தராம்மா அந்த சூனியனை அடைச்சு வச்சது தற்காலிகமானதுதான். அந்த மந்திர சக்தி செயலிழக்கும் போது அந்த சூனியன் திரும்ப வருவான்னும், அதுக்கு காரணம் எங்க குடும்பத்து பொண்ணாதான் இருப்பான்னும் அந்த ஆருடத்துல சொல்லப்பட்டது.” என்று நிறுத்தினார் அவர்.
அவர் சொல்லியவற்றை புருவம் சுருக்கி சிந்தித்த அத்வைத்தோ, ஏதோ புரிந்தவனாக, “சோ, அந்த ஆருடத்துல சொன்ன பொண்ணு இரான்னு நீங்க நினைச்சுருக்கீங்க. ஆனா, அவளுக்குத் தானா மந்திர சக்தி கிடைச்சதுக்கும், அந்த ஆருடத்தோட ஒத்துப் போறதுக்கும் என்ன சம்பந்தம்னுதான் எனக்குப் புரியல.” என்று கூற, “வசுந்தராம்மா சூனியனை அடக்குனப்போ, எங்க குடும்பத்தோட சொத்தான மந்திர சக்திகளை பணயம் வச்சாங்க. அதுக்கப்புறம், எங்க குடும்பத்துல யாருக்கும் மந்திர சக்திகள் இல்ல. ஆனா, திடீர்னு இராக்கு மந்திர சக்தி கிடைச்சதும், அந்த சூனியன் வசுந்தராம்மாவோட மந்திரக்கட்டுல இருந்து வெளிய வந்துட்டான்னு நினைச்சோம். ஆனா, அது தப்புன்னு இப்போதான் புரியுது. அப்போ அவன் வெளிய வரல. ஒரு வருஷத்துக்கு முன்னாடி, அவனுக்கான மந்திர பூஜை நடத்தப்பட்டபோதான் அவன் வெளிய வந்துருக்கான். அதை செஞ்சது, என் தங்கச்சி!” என்றார் வெறுப்புடன்.
இப்போது அனைத்தும் தெளிவாக, சற்று கோபத்துடன், “அப்போ அந்த ஆருடத்தை தப்பா புரிஞ்சுகிட்டு, இவ்ளோ நாள் என் ஸ்டார்லைட்டை கஷ்டப்படுத்தி இருக்கீங்க? சரி, இனி என்ன செய்யப் போறீங்க?” என்று நக்கலாகக் கேட்டான் அத்வைத்.
அதற்கு விரக்தியாக சிரித்த ஐங்கரனோ, “மன்னிப்பு கேட்குற அளவுக்கு சின்ன தப்பை நாங்க செய்யல. இதுக்கு அவ எங்களை மன்னிக்கணும்னும் நாங்க நினைக்கல.” என்றவர், அத்வைத்தின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “இந்த ஆருடத்தை மாதிரி, சூனியனை அழிக்கிற வழியையும் நாங்க தப்பா புரிஞ்சுருக்கலாம். ஏன், வசுந்தராம்மாவே தப்பா புரிஞ்சுருக்கலாம். நீங்கதான் எப்படியாவது அதுல இருக்க உண்மையை கண்டுபிடிச்சு, இராவுக்கு உதவியா இருக்கணும்.” என்று கூற, எதையோ யோசித்தபடி, அதற்கு சம்மதித்தான் அத்வைத்.
அப்போது கதவைத் திறந்து கொண்டு வந்த இரா இருவரையும் புருவம் சுருக்கிப் பார்க்க, ஐங்கரனுக்கு ஏதோ ஜாடை காட்டிய அத்வைத், “அது சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்று சமாளித்தான்.
அப்போதும் நம்பாமல் இருவரையும் சந்தேகத்துடன் அவள் பார்க்க, பேச்சை மாற்ற வேண்டி, “ரக்ஷன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா?” என்று வினவினான் அவன்.
அதற்கு அவளோ உதட்டைப் பிதுக்கி, “சரியா எங்கன்னு தெரியல. நானும் பல முறை டிரை பண்ணி பார்த்துட்டேன். ஒவ்வொரு முறையும் காட்டைதான் காட்டுது. அதான், அங்க போய் முயற்சி செஞ்சு பார்க்கலாம்னு இருக்கேன்.” என்றாள்.
ஐங்கரனோ, “மாடசாமியை துணைக்கு கூப்பிட்டுக்கோங்க. அவருக்கு அனுபவம் அதிகம்.” என்று கூற, அவருக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு அத்வைத்தை நோக்க, “உன்னோடவே வருவேன்.” என்று இடை வரை குனிந்து சொன்னவனைக் கண்டு முறுவல் பூத்தாலும், அதை மறைத்துக் கொண்டு, “நான் வர சொல்லவே இல்லையே!” என்று தோளைக் குலுக்கியபடி அவள் முன்னேறினாள்.
“சொல்லாட்டியும் வருவேன்.” என்றவன், ஐங்கரனிடம் பார்வையால் நம்பிக்கை கொடுத்துவிட்டு சென்றான்.
இருவரையும் கண்ட ஐங்கரனோ, “அம்மா, இவங்க ரெண்டு பேரும் இந்த இக்கட்டான சூழலை கடந்து, மகிழ்ச்சியா வாழ நீதான் அருள் புரியணும்.” என்று அவரின் ஆஸ்தான தெய்வமான காட்டுக்கோவில் அம்மனிடம் வேண்டினார்.
காட்டுக்கோவில் அம்மன் ஐங்கரனின் வேண்டுதலுக்கு செவி மடுப்பாரா?
தொடரும்…