Loading

காட்சிப்பிழை 16

ரிஷபின் இறப்பிலிருந்து மீள முடியாவிட்டாலும், அவளின் மனதில் ஒலித்த ரிஷபின் குரல் நவியை மேலும் முன்னேறச் சொல்ல, அவளும் ஒருவழியாக மேலே ஏறி வந்துவிட்டாள். ஆனால், அந்த இடமோ அவளிற்கான அடுத்த அதிர்ச்சியுடன் தயாராக இருந்தது.

ஏணியின் கடைசிப் படியிலிருந்து மேலே இருந்த கதவை திறந்து மேலே வந்தவள் கண்டது, எதுவுமே இல்லாமல் வெண்மையை மட்டுமே போர்த்திக் கொண்ட வெற்றிடத்தை தான்.

அங்கிருந்து வெளியே செல்வதற்கும் பாதை இல்லை, அவள் வந்த பாதையும் மறைந்து விட்டது. முதலில் தன் நண்பர்களின் இறப்பின் வேதனையில் மூழ்கியிருந்தவள், வந்த பாதை மறைந்ததும் தான் சற்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அப்போது பின்னிலிருந்து ஏதோ சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தவள் அங்கு ஜாஷா இவளை நோக்கி நடந்து வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள்.

“ஜாஷா…” என்று நவி அவளை அழைக்கும்போதே, ஜாஷாவின் பின்னே ஜான், டேவிட், வாங் வெய், ஷாங் மின், டோவினா, நந்து, நோலன், ரியான், ரிஷப் என்று வரிசையாக வர, நவிக்கு குழப்பம் அதிகமாகியது.

அவள் என்னவென்று யோசிக்கும்போதே, அருகில் வந்த ஜாஷா நவியின் கழுத்தைப் பிடித்து இறுக்கினாள்.

“நாங்க எல்லாரும் செத்துட்டோம், நீ மட்டும் ஏன் இன்னும் உயிரோட இருக்க?” என்று கூறியபடி நவியின் கழுத்தை அழுத்திய ஜாஷாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நவி.

கழுத்தில் அழுத்தம் கூடக் கூட, நவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவளால் பேசக்கூட முடியவில்லை. யாராவது உதவிக்கு வருவார்கள் என்று அவள் மற்றவர்களைப் பார்க்க, அவர்களோ இருவரின் மீதே பார்வையை பதித்தபடி இருந்தனர் தவிர, எவ்வித உணர்ச்சியையும் காட்டவில்லை.

நவியின் கண்கள் நந்துவை சந்திக்க, அவனோ அவளருகே வந்து, “நான் இல்லைன்னா நீ ரொம்ப கஷ்டப்படுவ நவி, சோ நீயும் எங்களோட வந்துடு!” என்று தன் காலசராய் பையிலிருந்து கத்தி ஒன்றை எடுத்து நவியைப் பார்த்து இதழ் வளைத்து சிரித்தான்.

நந்துவை இப்படி அவள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அவ்வளவு குரூரமாக இருந்தது அவனின் முகம். அது நந்து தானா என்று சந்தேகப்படும் நிலையில் எல்லாம் அவள் இருக்கவில்லை.

அப்படி சந்தேகிப்பதற்கும் அவகாசம் இல்லை என்பது போல கத்தியுடன் அவளருகே வந்தான், அவளின் நண்பன். அவனிடமிருந்து தப்பிக்க கடைசி வாய்ப்பாக ரிஷபைக் காண, அவனோ அனைத்தையும் ஒருவித இறுக்கத்துடன் கண்டுகொண்டிருந்தான்.

தன்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா என்று அவள் எண்ணும்போதே, அவளின் மனக்குரல், ‘இதெல்லாம் உண்மை இல்ல நவி!’ என்று அவளை எச்சரித்தது. ஆனால், அவளின் மூளையோ, ‘இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் முடிஞ்சுடும்!’ என்று முன்போலவே கூறியது.

‘நோ தயவுசெஞ்சு உன் மூளை சொல்றதை கேக்காத. யாரையும் உன் மூளையைக் கட்டுப்படுத்த விடாத.’ என்று அந்த குரல் ஒலித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் இரண்டு குரல்களையும் தாங்க முடியாமல் மயங்கி சரிந்தாள்.

மயக்கத்தின் பிடியில் செல்லும்போது அவள் இறுதியாக பார்த்த முகம் ரிஷபுடையது தான். அவன் ஏதோ சொல்ல வருவது போல இருக்க, அந்த குழப்பத்திலேயே மயங்கிப் போனாள்.

*****

“அவங்க வைட்டல்ஸ் செக் பண்ண சொன்னா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“மேம், நீங்க கேட்ட சிமுலேஷன் ரிசல்ட்ஸ்!”

“எப்படி இது நடந்துச்சுன்னு சீஃப் கேட்டா என்ன சொல்றது?”

“மேம், அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சுருச்சுன்னு நினைக்கிறேன்.”

இவையெல்லாம் நவி மயக்கத்தில் இருக்கும் போது கேட்ட குரல்கள். இவையெல்லாம் நவியின் செவிவழி சென்று மூளையை அடைந்தாலும், அவை என்னவென்று ஆராய அவளின் மூளை முற்படவில்லை, அந்த கடைசி குரல் கேட்கும் வரையிலும்.

‘மயக்கமா! என்னைப் பத்தி தான் பேசுறாங்களா?’ என்று நினைத்தவள், அதை உறுதிபடுத்திக்கொள்ள கண்களை சுருக்கி மயக்கத்திலிருந்து விழிக்க முற்பட்டாள்.

முதலில் கண்களைத் திறந்தவளிற்கு பிம்பங்கள் கலங்கலாக தெரிய, மீண்டும் ஒருமுறை கண்களை சுருக்கி விரித்தாள். இப்போது எதிரில் இருந்தவர்களை பார்க்க முடிந்தது. ஆனால், அடையாளம் காணத்தான் முடியவில்லை.

தன்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களைக் கண்ட நவிக்கு முதலில் தோன்றியது என்னவோ, ‘எதுக்கு இப்போ ஏதோ பொருட்காட்சி மாதிரி என்னையவே பார்த்துட்டு இருக்காங்க?’ என்பது தான்.

அவளின் சிந்தனையை தடை செய்தவாறு, “ஆர் யூ ஓகே?” என்று அவளின் இடப்புறம் நின்றிருந்த வெள்ளை சீருடை, முகத்தை மறைக்கும் முகக்கவசம் ஆகியவற்றை அணிந்திருந்த பெண் வினவ, நவியோ குத்துமதிப்பாக தலையசைத்து வைத்தாள்.

தொடர்ந்து பல கேள்விகளை அந்த பெண் வினவ, நவியின் மனமோ நடந்த நிகழ்வுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது. நிகழ்ந்தவைகள் அனைத்தும் கனவா நிஜமா என்றே அவளிற்கு புரியவில்லை.

அவ்விடத்திலிருந்து வெளியே வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாளா, இல்லை கனவு கண்டு அதனால் ஏற்பட்ட விளைவாக இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறாளா என்று இரு வகையில் அவளிற்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், அவள் இருந்த இடம் மருத்துவமனை என்றே எண்ணினாள். வெள்ளை சீருடையைக் கண்டதால் உண்டான எண்ணமோ!

அவளின் இரு வேறு யூகங்களுடன் அவள் போராடிக் கொண்டிருக்க, அந்த அறைக்குள் நுழைந்தார் அவர். புயல் போல உள்ளே நுழைந்தவர் முதலில் கண்டது, குழப்பத்தில் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்த நவியைத் தான்.

பார்வையால் எரித்துவிடும் சக்தி கொண்ட பத்தினனாக இருந்திருந்தால், இந்நேரம் நவி எரிந்து சாம்பலாகி இருப்பாளோ என்று எண்ணும் வகையில் கண்களாலேயே சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தார் அவர்.

ஆனால், அதைக் கண்டுகொள்ள வேண்டியவளோ தன் சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தாள்.

“சீஃப்!” என்று தயங்கியபடியே அவரருகே சென்ற பெண்ணைத் (அதே வெள்ளை சீருடை பெண்) திரும்பி முறைத்தவர், “ஹௌ இஸ் திஸ் பாசிபில்?” என்று கத்தினார்.

அவரின் கத்தலில் சுயத்தை அடைந்த நவியோ, ‘ப்ச், இப்போ எதுக்கு இப்படி கத்துறாரு?’ என்று தன் சிந்தனையைக் கலைத்தவரைக் கண்டு முறைத்தாள்.

“சீஃப், எங்க தப்பு நடந்துச்சுன்னு நாங்க செக் பண்ணிட்டு இருக்கோம். மத்த சிமுலேஷன் எல்லாம் நம்ம எதிர்பார்த்த ரிசல்ட் தான் வந்துருக்கு. இங்க மட்டும், அதுவும் ஒருத்தருக்கு மட்டும் தான் இப்படி…” என்று அப்பெண் கூறிக் கொண்டிருக்கும்போதே, “இப்படி தேவையில்லாத கதையெல்லாம் சொல்லாம, அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்லு.” என்றார்.

அந்த பெண்ணோ என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற, “ஷிட், உங்களையெல்லாம் வச்சுட்டு எதுவுமே பண்ண முடியாது.” என்று இத்தனை வருடங்களாக, அவருக்காக உழைப்பவர்கள் இவர்கள் தான் என்பதை மறந்தவராக, வார்த்தைகளைக் கொட்டினார்.

அதற்கும் அப்பெண் முகத்தில் மட்டும் தவிப்பைக் காட்டி வாயை இறுக்கி மூடிக்கொண்டிருக்க, அந்த மனிதரோ கோபத்தின் உச்சத்தை அடைந்தவராக, “என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, இன்னும் ஒரு வாரத்துல ஹெட் இங்க வராரு. அதுக்குள்ள எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கணும்.” என்று கட்டளையிட்டார்.

இத்தனை நேரம் நடந்த சம்பாஷனைகளை எல்லாம், ‘சப்டைட்டில்’ இல்லாத வேற்று மொழி படம் பார்ப்பதைப் போலவே இருந்தது நவிக்கு. ஏதோ ஆராய்ச்சியைப் பற்றி பேசுகிறார்கள் என்று எண்ணியவளிற்கு, அந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டதே அவளிற்கு தான் என்று தெரியவில்லை

‘சீஃப்’ என்று அழைக்கப்பட்ட மனிதர் அப்போதும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.

“ஈஸ்வர் எங்க?” என்று அவர் திடீரென்று வினவியது, இவர்களை ஆராய்வதற்கு, நடந்த நிகழ்வுகளை ஆராய்ந்தாலாவது எங்கிருக்கிறோம் என்பதற்கான விடையாவது கிடைக்கும் என்று எண்ணி தன் சிந்தையில் மூழ்கச் சென்றவளை, ‘உன்னை அவ்ளோ சீக்கிரம் யோசிக்க விடுவேனா?’ என்பதைப் போல இருந்தது.

“சீஃப், அவரு ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்னு சொன்னாரு.” என்று அப்பெண் கூற, “ப்ச், இப்போ என்ன பண்ணிட்டான்னு ரெஸ்ட்?” என்று அவர் முடிப்பதற்குள்ளாகவே, “சீஃப்…” என்று அழுத்தமான குரல் அந்த அறையின் வாயிலருகே கேட்டது.

மீண்டும் தன் யோசனையைக் கலைத்த குரலை கேட்டு எரிச்சலடைந்தவளிற்கு அந்த குரலை இதற்கு முன்னரே கேட்டிருப்பதைப் போல தோன்றியது.

வாயிலை மறைத்தபடி அந்த பெண் நின்றிருந்ததால் யாரென்று பார்க்க முடியாமல் இருந்தவள், உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகர்ந்து சற்று எட்டிப் பார்த்தாள்.

அப்படி பார்த்தவளின் கண்கள், பார்வைக்கு உட்பட்டவனிலேயே நிலைத்திருக்க, அவளின் இதழோ மெல்ல மெல்ல அசைந்து, “ரிஷப்…” என்று அவனின் பெயரை உச்சரித்தது.

அதே சமயம், அந்த ‘சீஃப்’, “வா வா ஈஸ்வர், உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன்.” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்.

ரிஷபாகவும் ஈஸ்வராகவும் வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்ட ரிஷபேஸ்வரன் அந்த அறைக்குள் நுழைந்தான்.

நவி அவனின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவள் மனதில் எக்கச்சக்க எண்ணங்கள் படையெடுத்துக் கிளம்ப, அவற்றை சமாளிப்பதைக் காட்டிலும் அவனைப் பார்வையிடுவதற்கே முன்னுரிமை கொடுத்தாள்.

அவளின் கண்களுக்கு, அவனில் அழுத்தம் கூடியது போல இருந்தது. முன்னிருந்த சிநேக பாவம் அவன் முகத்தில் தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.மற்றபடி கூர்மையான கண்கள், சிரிப்பில்லாத இதழ்கள் என்று எதுவும் மாறவில்லை.

தன்னை ஒருத்தி அளவிடுவது தெரியாமலோ இல்லை தெரிந்தோ, அவள் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

உள்ளே நுழைந்ததும், “என்னைப் பத்தி என்ன பேசிட்டு இருந்தீங்க சீஃப் ?” என்று அமர்த்தலான குரலில் பேசினான்.

ரிஷப் அவ்வாறு கேட்டதும், நொடியில் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டவர், “உன்னை எங்க காணோமேன்னு தான் கேட்டேன் ஈஸ்வர். நீ ஏன் அதுக்குள்ள இங்க வந்த? இன்னும் ரெஸ்ட் எடுத்திருந்துருக்கலாமே.” என்று சிரிப்பு என்ற பெயரில் உதட்டை விரித்தவாறு கூறினார் சீஃப்.

“இப்போ இங்க வந்துருக்கலைன்னா, யார் யார் என்னென்ன பேசுவாங்கன்னு நல்லாவே தெரியும் சீஃப். யாரோ எதுவோ பேசுற அளவுக்கு எதுக்கு விடனும்னு வந்துட்டேன்.” என்று அவரைப் பார்த்தவாறே கூறினான் ரிஷப்.

அதில் அவரின் முகம் கறுத்தாலும் அதனை சமாளித்தபடி, “இது தான் உன்னை பிடிக்க காரணம் ஈஸ்வர். எனக்கு தெரியும், நீ உன் வேலைல எவ்ளோ டெடிகேட்டட்னு. இல்லைன்னா இவ்ளோ உயரத்துக்கு வர முடியுமா?” என்றவரின் குரலில் எவ்வளவு மறைத்தும் பொறாமை வழிவதை மறைக்க முடியவில்லை.

அந்த பொறாமையைக் கண்டு இயல்பாக ரிஷபிற்கு மகிழ்ச்சி தான் ஏற்பட வேண்டும். ஆனால், அவன் முகமோ மேலும் இறுகியது.

இதையெல்லாம் நவி பார்த்தாலும், அவள் ரிஷப் ஏமாற்றியதையே நினைத்து வருந்திக் கொண்டிருந்ததால், மனதில் பதியாமல் போனது.

இத்தனை நேரம் அவர்கள் பேசிய ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்ட சோதனை எலி தான் என்று அவளிற்கு புரிந்து விட்டது. ஆனால், என்ன ஆராய்ச்சி என்பது இன்னும் தெரியவில்லை, அதை தெரிந்து கொள்ளவும் அவள் விரும்பவில்லை.

அவனை வெறுப்பேற்றிய மகிழ்ச்சியில், “அப்பறம் ஈஸ்வர், இந்த சிமுலேஷன் ஃபெயில் ஆனதுக்கு காரணம் என்ன?” என்று வினவினார் அந்த சீஃப்.

ரிஷபோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “நான் தான் இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்குறப்போவே சொன்னேனே சீஃப், நீங்க ஆராய்ச்சி பண்ண நினைக்குறது மெஷினை இல்ல, மனிதனை! இன்னுமே மனித உடல் உறுப்புகளைப் பத்தி நமக்கு தெரியாத விஷயங்கள் பல இருக்கு. அப்படி இருக்குறப்போ, எல்லா விதமான மனிதர்களையும் அலசி ஆராய்ந்தா தான் நீங்க கேக்குற மாதிரி வெற்றிகரமா இந்த ப்ராஜெக்ட்டை முடிக்க முடியும். ஆனா, நீங்க எங்களுக்கு கொடுத்த ரிசோர்ஸும் கம்மி, சேம்பில்ஸும் கம்மி.” என்று கூறினான்.

ரிஷப் கூறியதைக் கேட்டு எரிச்சலாவது சீஃப்பின் முறை.

“இப்போ என்ன தான் சொல்ல வரீங்க ஈஸ்வர்?” என்று அந்த எரிச்சலை தன் கேள்வியில் காட்டினார்.

“எங்களுக்கு இன்னும் டைம் வேணும்னு சொல்றேன் சீஃப். இந்த சேம்பிலை ஆராய்ச்சி செஞ்சு அதுகேத்த மாதிரி சிமுலேஷனை மாத்தணும்.” என்றான் ரிஷப்.

“என்ன? இன்னும் டைம் வேணுமா? நோ வே! அடுத்த வாரம் நம்ம ஹெட் வருவாரு. அவருக்கிட்ட நான் என்ன சொல்வேன்?” என்று சீஃப் வினவ, “உண்மையை சொல்லுங்க சீஃப்!” என்று நக்கலாக கூறிவிட்டு, அங்கிருந்த இயந்திரங்களை பார்வையிட சென்று விட்டான்.

அந்த சீஃபோ, “ச்சே…” என்று கத்திவிட்டு வெளியே சென்று விட்டார்.

சீஃபிடம் முதலில் சிக்கிய பெண்ணோ, “எப்படி சார், அவருக்கிட்ட இப்படி பேசுறீங்க?” என்று கேட்க, “இப்போ வேலையை பார்க்கலாமா, இல்ல இப்படியே கதை பேசிட்டு இருக்க போறீங்களா?” என்றான் ரிஷப்.

அதன்பின்பு, அங்கு வெட்டிப்பேச்சு பேசுவதற்கு நேரமே இல்லாமல் போனது.

ஆனால், அங்கிருந்தவர்கள் யாரும் நவியைக் கண்டுகொள்ளவே இல்லை. அவள் தான் அவர்களின் ‘சேம்ப்பில்’ ஆகிற்றே! அவர்களின் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் சோதனை எலியாகிய தன்னைக் கண்டுகொள்ள வேண்டும் என்று நினைப்பதே முட்டாளத்தனமானது அல்லவா.

இப்படி தனக்குள்ளேயே மாற்றி மாற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவளை ஓரகண்ணில் பார்த்தான் ரிஷப். அவன் பார்வையில் என்ன இருந்தது என்று அவனைத் தவிர யாருக்கும் தெரியாது. எனினும், மற்றவர்கள் அவனைப் பார்க்கும் முன்னர் தன் பார்வையை மாற்றிக் கொண்டான். அவன் இருக்கும் இடமும், வகிக்கும் பதவியும் அத்தகையது. எந்நேரமும் கவனமாக இருக்க வேண்டும்.. இல்லையெனில், சந்தர்பத்திற்காகவே காத்திருக்கும் சில ஓநாய்களிடம் தோற்றுப் போக நேரிடும்.

அடுத்த அரை மணி நேரம் அங்கு மற்றவர்கள் ஆராய்ச்சி முடிவுகளை பார்வையிட்டு, சாதக பாதகங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“ஓகே ஜென்சி. இந்த சிமுலேஷன்ல நான் சொன்ன சேஞ்சஸ் பண்ணிட்டு இன்னொரு குரூப் தயாரா இருக்காங்கள, அவங்களை வச்சு டெஸ்ட் பண்ணுங்க.” என்றான் ரிஷப்.

அவன் இதுவரை பேசியதில், ‘இன்னொரு குரூப்’ என்ற சொல் நவியின் காதுகளில் விழ, ‘அப்போ இதேயே தான் வேலையா பண்ணிட்டு இருக்காங்களா? ச்சே இப்படி எங்க சம்மதமே இல்லாம, எங்க மேல ஆராய்ச்சி நடத்துற அளவுக்கு, நாங்க கீழ இறங்கிட்டோமா!” என்று அவளின் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

“சார், அப்போ இவங்க?” என்று ஜென்சி நவியை நோக்கி வினவ, “இன்னும் ஸ்டடி பண்ணனும் ஜென்சி. நீங்க அடுத்த குரூப் பாருங்க. இவங்களை ஸ்டடி பண்ணிட்டு என்ன சேஞ்சஸ் செய்யணும்னு சொல்றேன்.” என்றான் ரிஷப்.

‘ஸ்டடி’ என்ற வார்த்தை நவியின் கோபத்திற்கு தூபம் போடுவது போல இருக்க, அவளின் முகத்திலேயே அப்பட்டமாக கோபத்தை தேக்கி வைத்து அவனை முறைத்தாள்.

அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இங்கு வந்ததிலிருந்து முதல் முறையாக இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. இருவருக்கிடையே வாய்வழி சொற்கள் பரிமாற்றம் இல்லையெனினும், கண்களாலேயே போர் புரிந்து கொண்டிருந்தனர். ஆரம்பித்தது என்னவோ, நவி தான்.

இருவரின் விழிமொழி பரிமாற்றங்களை, வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த ஜென்சி, “சார், அவங்களை டார்முக்கு கூட்டிட்டு போகணும்.’ என்றாள்.

“நீங்க இங்கயிருந்து வேலையைப் பாருங்க ஜென்சி. எனக்கு அங்க ஒரு வேலை இருக்கு. சோ, நானே கூட்டிட்டு போறேன். அண்ட், போற வழியில ஸ்டடி பண்ணவும் நேரமிருக்கும்.” என்று ஜென்சியிடம் கூறினாலும், பார்வை அனைத்தும் நவியிடத்தில் தான்.

நவியோ கோபத்தின் அடுத்த கட்டமாக பல்லைக் கடிக்க, ரிஷபோ அவளின் கோபத்தினால் சிறிதும் பாதிக்கப்படாதவனாக, “மிஸ். கிருஷ்ணவி, போலாமா?’ என்றான்.

நவி அவனின் மீது கோபத்தில் இருந்தாலும், அவன் கூப்பிட்டதும் சென்றாள். ஏனெனில், இப்போது அவர்களுடன் போராடும் அளவிற்கு அவளின் உடல்நிலையும் இல்லை, அவளின் மனநிலையும் இல்லை. மேலும், என்ன ஆராய்ச்சி, அவர்களின் பலம் என்னவென்று இன்னும் அவள் அறியாததால், அவளால் துணிந்து எதையும் செய்ய முடியவில்லை.

இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். அத்தனை நேரம் தன் நினைவு தந்த சோர்வும், ரிஷபின் மீது கோபமுமாக இருந்தவளின் கவனத்தை ஈர்த்தது அந்த ஆராய்ச்சிக் கூடம்.

அதிநவீன தொழில்நுட்பத்தின் பிரதிநிதியாக இருந்த அந்த கூடத்தை கண்கள் விரிய பார்த்தாள் நவி.

அந்த தாழ்வாரத்தில் பலதரப்பட்ட மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். முக்கியமாக, அங்கு நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பெரும்பாலானவர்கள் இயந்திரத்தின் மீது ஏறி, தங்களின் வேலைகளை அதிலேயே பார்த்துக் கொண்டே சென்றனர்.

அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை தன்புறம் திருப்பிய ரிஷப், “நடந்து போலாமா இல்ல வெஹிக்கில்ல போலாமா?” எண்டார் வினவினான்.

“பலியாடு மாதிரி கூட்டிட்டு போறதுக்கு இப்படி ஒரு கேள்வி வேறயா?” என்று நவி முணுமுணுத்தது அவனிற்கும் கேட்டது. அதன்பின்பு எதுவும் பேசாமல் இருவரும் நடந்தனர்.

தங்களைக் கடப்பவர்கள், அவனிற்கு மரியாதை செய்யும் விதமாக தலையசைத்து செல்வதிலேயே அவன் பெரிய பதவியில் இருப்பவன் என்பது புரியத்தான் செய்தது நவிக்கு.

‘அவன் எல்லாத்தையும் முதல் நாள் சொன்னப்போவே யோசிச்சுருக்கணும்! அப்போலாம் நல்லவன், வல்லவன்னு பாராட்டிட்டு தான இருந்த.” என்று அவளின் மனசாட்சி இடித்துக் கூறியது.

‘ஹ்ம்ம், எப்படியெல்லாம் எமோஷனலா பேசி ஏமாத்திருக்கான்!’ என்று நவி மனதிடம் புலம்பிக் கொண்டே ஓரக்கண்ணில் அவனை முறைத்தாள். அவள் முறைப்பது தெரிந்தாலும், அதை கண்டுகொண்டதைப் போல காட்டிக் கொள்ளவில்லை.

‘ஆனா, அவன் தான உன்னை கடைசியா காப்பாத்துனான்.’ என்று அவளின் மனசாட்சி மீண்டும் கூற, ‘அவனுக்கு என்ன தேவையோ! இப்போ எதுக்கு அந்த சீட்டுக்கு ஆதரவா பேசிட்டு இருக்க?’ என்று அவளின் மனசாட்சியை திட்டவும் செய்தாள்.

அத்தனை நேரம் அமைதியாக இருந்த ரிஷப், “இவ்ளோ நடந்ததுக்கு அப்பறமும், நீ என்னை நம்பி என்கூட வரது ஆச்சரியமா தான் இருக்கு.” என்று வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றினான்.

அதைக் கேட்டதும் நவியோ, ‘நானே சும்மா இருந்தாலும், இவன் என்னை சும்மா இருக்க விடமாட்டான் போல!’ என்று மனதிற்குள் நினைத்து அவனை திட்டப் போகும் போது, “ஈஸ்வர், இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அங்கு வந்தார் சீஃப்.

பேச்சு ரிஷபிடம் பார்வை மொத்தமும் நவியின் மீது தான். அவர் வந்ததும், கோபத்தை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு, நிர்மலமான முகத்துடன் நின்றிருந்தாள் நவி. யாரிடமும் எதையும் வெளிப்படுத்தினால், அதை தனக்கு எதிராக உபயோகித்து விடக்கூடும் என்பதில் தெளிவாக இருந்தாள்.

“ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன் சீஃப்.” என்று இப்போதும் அதே நக்கல் தொனியில் கூறினான் ரிஷப்.

மீண்டும் எரிச்சலடைந்த சீஃப் ஏதோ சொல்ல வரும்போது, “இங்க என்ன பிரச்சனை பிரசாத்?’ என்றபடி வந்தார் டேனியல், சீஃப் என்று மற்றவர்களால் அழைக்கப்படும் பிரசாத்திற்கும் மேலதிகாரி.

அவரிடம் சற்று பம்மிய பிரசாத், “அது இன்னும் ப்ராஜெக்ட் மிஸ்டிரியோ முடியலைல, அதான் அதைப் பத்தி விசாரிச்சுட்டு இருந்தேன் டேனி.” என்றார் பிரசாத்.

‘மிஸ்டிரியோ’ என்ற பெயரைக் கேட்டதும் தன்னையறியாமலேயே திரும்பி ரிஷபைக் கண்டாள் நவி. ‘அடப்பாவி அதான் அப்போவே ‘வெல்கம் டு மிஸ்டிரியோ’ன்னு சொன்னியா?’ என்று மனதிற்குள் கூறினாள்.

“ஹ்ம்ம், நானே கேக்கணும்னு நினைச்சேன் ஈஸ்வர். இன்னும் எவ்ளோ நாள் ஆகும்?” என்று ரிஷபிடம் வினவினார் டேனியல்.

“எதனால ஃபெயில் ஆச்சுன்னு அனலைஸ் பண்ணனும் சார். அதுக்கு ஃபர்ஸ்ட் சேம்ப்பிலை டிடெயில் ஸ்டடி பண்ணனும்.” என்றான் ரிஷப்.

“ஓகே கேரி ஆன். எவ்ளோ சீக்கிரம் முடிக்கிறீங்களோ அவ்ளோ நல்லது. அண்ட் அடுத்த வாரம் நம்ம ஹெட் வரப்போ, அவருக்கு எக்ஸ்பிளேயின் பண்றதுக்கு ரெடியா இருங்க.” என்று கூறிவிட்டு டேனியல் செல்ல, அவரின் பின்னே பிரசாத்தும் சென்றார்.

நவியோ இன்னும் முறைப்பிலிருந்து வெளிவரவில்லை. அவளைக் கண்டவன், “போதும் என்னைப் பார்த்தது. போலாமா?” என்று நவியின் கோபத்தை இன்னும் அதிகரித்துவிட்டே அழைத்துச் சென்றான்.

அடுத்து அவன் அழைத்துச் சென்ற வழிகள் அனைத்தையும் மூளையில் பதிந்து கொள்ள முயன்றவளிற்கு, அனைத்தும் ஒரே மாதிரியான வழிகளாகவே தெரிந்தன.

ஒரே இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் கூட எழுந்தது நவிக்கு. சுற்றிலும் பார்த்து குழம்பியபடி வந்தவளை நெருங்கியவன், “நீ என்ன தான் மனப்பாடம் செஞ்சாலும், இந்த ரூட் உனக்கு தெரிய போறதும் இல்ல. நீயா இங்கயிருந்து வெளிய போகப் போறதும் இல்ல. எதுக்கு வீணா மூளைக்கு வேலை கொடுக்குற?” என்று முணுமுணுத்தான்.

இத்தனை நேரம் போட்டிருந்த ‘பொறுமையின் சிகரம்’ வேஷம் கலைத்தவளாக, “ஹலோ, உங்ககிட்ட கேட்டேனா? என் கண்ணு நான் பார்க்குறேன். ஒருமுறை என் மூளை மழுங்கி உங்களை நம்புனது பத்தாதா! அண்ட் இங்கயிருந்து தப்பிக்கிறேனாங்கிறது என்னோட கவலை.” என்று அவனைப் பார்த்து கூறியவள், “பலியாட்டை பார்த்து கசாப்பு கடைக்காரன் எதுக்கு பரிதாபப்படனும்!” என்று முணுமுணுத்தாள்.

ரிஷப் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி நடந்தான். நவியும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அவனைத் தொடர்ந்தாள்.

அப்படியே தொடர்ந்த அவர்களின் பயணத்தில், அடுத்து அவள் எதிர்கொண்டது, இறுதியாக யாரைப் பார்த்து பயந்து ஓடி வந்தாளோ, அதே ரியானைத் தான்.

அவனைக் கண்டதும் மனதின் ஓரத்திற்கு சென்றிருந்த பயம், மேலெழும்ப, அனிச்சை செயலாக ரிஷபின் அருகே சென்று நின்றாள். ஆனால், எதிர்பட்டவனோ இவளை ஆளாகக் கூட மதிக்காதவனாக, ரிஷபிற்கு ஒரு தலையசைப்பை பரிசாக அளித்துவிட்டு நவியைக் கடந்து சென்றான்.

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்போது தான் ரிஷபை ஒட்டி நிற்பதை உணர்ந்தாள்.

உடனே அவனை விட்டு விலகியவள், ‘ச்சே, இவன் மட்டுமில்ல, எல்லாரும் ஏமாத்துக்காரங்க தான் போல!’ என்று மனதிற்குள் திட்டினாள்.

ரிஷபோ இவளின் செயலைப் பார்த்துவிட்டு, எதுவும் கூறாமல் தலையை மட்டும் இருபக்கமும் ஆட்டிவிட்டு முன்னே நடந்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில், வேறொரு இடத்திற்குள் நுழைந்தனர். முன்னிருந்த இடம் போல பிரம்மாண்டமாகவும், பிரகாசமாகவும் இருக்கவில்லை. மாறாக, மங்கிய ஒலியுடன், ஒருவித கலவையான வாசனையுடன் இருந்தது அந்த இடம்.

உள்ளே நுழையும்போதே எதிர்மறை எண்ணங்கள் அவளைத் தாக்க, ஏதோ விரும்பத்தகாதது நிகழப்போகிறது என்று அவளின் உள்ளுணர்வு அடித்துக் கூறியது.

அத்தனை நேரம் இல்லாத பயஉணர்வு மனதில் தோன்றி அவளைப் பதட்டமடையச் செய்ய, நடக்க முடியாமல் தயங்கி நின்ற கால்களைக் கண்டு பெருமூச்சு விட்டவளாக, சிரமப்பட்டு அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்தாள்.

மேலும், அவளைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் அவளையே பரிதாபமாக பார்ப்பதைப் போல தோன்ற, அதுவும் அவளின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அவளின் இந்த குழப்பம் வெகு நேரம் நீடிக்கவில்லை. அடுத்த வளைவிலேயே குழப்பத்திற்கான விடையை அறிந்து கொண்டாள். ஆனால், அவள் அறிந்து கொண்டது அவளின் குழப்பத்தை போக்கினாலும், பயத்தை அதிகரிக்க தான் செய்தது.

பயத்துடன் சுற்றிப் பார்த்துக் கொண்டே சென்றவளின் கண்களில் விழுந்தது அந்த சாப்பிடும் அறை. அதைக் கடக்கும்போது எதேச்சையாக அவர்கள் இருவரையும் கண்டாள்.

இருவரும் அமைதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் அமைதியைக் கண்டவள், இவர்களா அங்கு அத்தனை பிரச்சனைகளை செய்தவர்கள் என்று தோன்றக் கூட செய்தது. அவர்கள் வேறு யாரும் அல்ல, ஜான் மற்றும் டேவிட் தான்!

அவர்கள் தானா இல்லை வேறு யாருமா என்று உறுதிபடுத்திக் கொள்ள, இருவரையும் தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்தாள்.

அப்போது தான் அந்த சாம்பல் வண்ண சட்டையில் 323, 324 என்ற எண்கள் அச்சிடப்பட்டிருப்பதை உணர்ந்தாள். சட்டென்று தன்னையும் குனிந்து பார்த்தாள். அவளின் உடையிலும் 333 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தது. அதைக் கண்டவள் ஒரு பெருமூச்சுடன் அந்த அறையைக் கடந்தாள்.

அடுத்து இரு அடிகள் வைத்ததும், அங்கிருந்த இருவர் பேசியது இவளின் காதில் விழுந்தது.

“நேத்து பார்த்த அந்த சீன ஜோடி இறந்துட்டாங்களாமே, உண்மையா?”

“யாரை சொல்ற, அந்த மெண்டலி பாதிக்கப்பட்ட கப்பில்ஸா! அந்த பொண்ணு பேரு கூட ஷாங்… மென்னோ மின்னோ… அதான் நேத்தே சொன்னேன்ல அவங்க கண்டிஷன் சரியில்லன்னு.’

இதைக் கேட்டதும் நவியின் பயம் மேலும் அதிகரிக்கத் துவங்கியது. அவர்கள் கூறியதிலிருந்தே, வாங் வெய் மற்றும் ஷாங் மின்னைப் பற்றித்தான் பேசுகின்றனர் என்பதை நன்கு உணர்ந்தாள் நவி.

அப்போது, “இதெல்லாம் ஹைலி கான்ஃபிடென்ஷியல்னு தெரியாதா? இப்படி தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பீங்களா?” என்று ரிஷப் சம்பந்தப்பட்டவர்கள் இருவரையும் திட்ட, அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களை எச்சரித்து அனுப்பிய ரிஷப், நவியைக் காண, அவளோ “ச்சே…” என்று திரும்பிக் கொண்டாள். அவளின் மனம் சமாதானம் அடையவே இல்லை. இப்படி ஆராய்ச்சிக்காக மனித உயிர்களை பலியிடுவதை அவள் இதுவரை கேள்விப்பட்டு தான் இருக்கிறாள். இப்போது தான் அதை நேரடியாகப் பார்க்கிறாள்.

“எவ்ளோ நேரம் இங்கயே நிக்கிறதா உத்தேசம்?” என்று ரிஷப் வினவ, அவனை வேண்டாவெறுப்பாக பின்தொடர்ந்தாள்.

அவளின் மனதில் திடீரென்று நந்துவின் நினைவும் வந்தது. ஜான், டேவிட், வாங் வெய், ஷாங் மின், ஏன் ரியானைக் கூட அவள் பார்த்தாளே. அப்போது நந்துவும் இங்கு இருப்பதாக தானே அர்த்தம்.

ஒருபுறம் அவன் இறக்கவில்லை என்று நிம்மதியடைந்தாலும், மறுபுறம் இங்கு என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறானோ என்று வேதனையும் ஏற்பட்டது.

நந்துவைப் பற்றி ரிஷபிடம் வினவலாமா என்று அவள் யோசிகும்போதே, யாரோ அவளைப் பக்கவாட்டிலிருந்து பிடித்து இழுத்து, “பிளீஸ், என்னை விடச்சொல்லுங்க. வலிக்குது!” என்று அலற, திரும்பிப் பார்த்தவள் திகைத்து நின்றாள்.

அங்கு ஆளே மாறிப் போய் நின்றிருந்தாள் டோவினா. அவள் பெரிதாக நினைக்கும் அழகோ, அதற்காக அவளிடம் கொட்டிக்கிடக்கும் கர்வமோ இல்லாமல், பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் கிட்டத்தட்ட பைத்தியம் போல இருந்தவளைக் கண்டவளிற்கு இன்னும் மனம் பாரமாகிப் போனது.

அதற்குள் டோவினாவை பார்த்துக் கொள்பவர் அவளை அறைக்குள் இழுத்திருக்க, இங்கு நவியை ரிஷப் அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.

இப்போது மீண்டும் நந்துவின் நினைவு வர, ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டே வந்தாள். எங்காவது அவனைப் பார்த்துவிட மாட்டோமா என்றிருந்தவளை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற ரிஷப், “இது தான் உன்னோட ரூம்.” என்றான்.

அத்தனை நேரம் அவன் மேலிருந்த கோபத்தைக் கூட கைவிட்டவளாக, “நந்து… நந்து எங்க இருக்கான்? அவனை நான் பார்க்கணும்.” என்றாள்.

ரிஷபோ அவளருகே வந்து, “இருக்கான்…” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட, அந்த அறையின் கதவும் வெளியிலிருந்து அடைக்கப்பட்டது.

செல்லும் அவனின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தவளிற்கு கையில் ஏதோ அகப்பட, கையைத் திறந்து பார்த்தவள் திகைத்தாள்.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்