16 – காற்றிலாடும் காதல்கள்
“நல்ல பேரு தான் அண்ணி. உடும்பி. அவ்ளோ அடம் பிடிப்பீங்களா?”கயல் இன்னமும் சிரித்தபடிக் கேட்டாள்.
“அது அடமான்னு தெரியாது, ஆனா செய்யணும்ன்னு நெனைச்சத செஞ்சி முடிக்கறவரைக்கும் எனக்கு தூக்கம் வராது. மனசுல ஓடிட்டே இருக்கும். சிந்தனை வேறபக்கம் போகாது.”
“இத தான் அடம்ன்னு சொல்லுவாங்க அண்ணி. ஆனாலும் ஒரு சில கஷ்டமான விஷயத்த சாதிக்க இந்த அடம் பிடிக்கற குணம் இருந்தா தானே எத்தன இடர் வந்தாலும் அத மீறி போய் செஞ்சி முடிக்க முடியும். எங்க ஊரு மலைக்குகை தொறக்க ரொம்பவே அடம்பிடிச்சி தான் ஆகணும். எங்கப்பா அடம் பிடிச்சும் அத திறக்க முடியலன்னா அந்த வைராக்கியம் பத்தலன்னு தானே அர்த்தம்?”கண்கள் கலங்க அவள் கூறியதைக் கேட்டு மிருணாளினி அவளை ஒரு நொடி திகைத்துப் பார்த்தாள்.
“கயல். உனக்குள்ள இருக்கறது வருத்தமா குற்றவுணர்ச்சியா?” எனக் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.
“வருத்தத்த விட குற்றவுணர்ச்சி அதிகமா இருக்கு அண்ணி. இந்திரன் மாமா குடும்பம் இல்லாம கஷ்டப்படறத பாக்க முடியாம தான் அண்ணன் அந்த குகை திறக்கரப்ப என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க அம்மாவ கேட்டுட்டே இருந்தான். எனக்கும் அந்த குற்றவுணர்ச்சி இருக்கு. நாங்க எவ்ளோதான் எங்களுக்குள்ள ஒருத்தன் தான் நீன்னு சொன்னாலும் அவரு சில சமயம் அநாத பய தானே நானு அதானே இப்படி படுத்தறீங்கன்னு சொல்வாரு. அது விளையாட்டா இருந்தாலும் அவருக்குள்ள அந்த வருத்தம் இருக்கறதால தானே அந்த வார்த்தை வருது? எனக்கும் எங்கப்பா இல்லாத வருத்தம் நெறைய இருக்கு. அவர ரொம்பவே மிஸ் பண்றேன்.”எனக் கூறி வெளிவந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
“ஹோஹோ… அண்ணனும் தங்கச்சியும் எனக்கு பரிகாரம் பண்றீங்களோ? அவனும் இதயே சொல்றான் நீயும் இதவே சொல்லி அந்த மிருதங்கத்த ஏத்தி விடறியோ? ஊர் கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கா இல்லயா? வீணா இன்னொரு உசுரு போயிரக்கூடாதுன்னு எல்லாரும் நெனைச்சா அண்ணனும், தங்கச்சியும் எனக்கு பரிதாபப்பட்டு இன்னமும் என்னை விளக்கி வைக்கறீங்க அப்டி தானே?” எனக் கேட்டபடி இந்திரன் அங்கே வந்தான்.
“மாமா.. அது..“ என கயல் இல்லையென மறுக்கும் விதமாக பேச முனைந்தாள்.
“இங்க பாரு மிருதங்கம், நீ ஒண்ணும் பண்ணவேணாம். கம்முன்னு இரு. இவங்க சொல்றத வச்சி நீ குகை பக்கம் போகவே போகாத. நீயாவது உன் வீட்டுக்கு மிஞ்சி நிக்கணும். இந்த விஷப்பரீட்ச யாருக்கும் வேணாம். என் குடும்ப ஆளுங்களுக்கு விதி முடிஞ்சி போச்சி போயிட்டாங்க அவ்ளோ தான். உங்கப்பாவுக்கும் அதே தான். இப்ப இருக்கறவங்கள பாப்போம். புரியுதா?” கோபமாகக் கூறிவிட்டுக் கீதனைத் தேடிச் சென்றான்.
“இவன் ஏன் இப்படி பொங்கிட்டு போறான்?” என மிருணாளினி கேட்க கயல் இன்னும் நிதானத்திற்கு வராமல் தவித்தபடி நின்றிருந்தாள்.
“ஹேய் கயல். நீ கவலையே படாத. நான் கண்டிப்பா அந்த குகைய திறந்துடுவேன். எதனால அவங்க இறந்தாங்கன்னு கண்டுப்பிடிச்சிடலாம். இந்த லூசு ஒளறினா நான் இத விட்டுற மாட்டேன். சரி உங்கண்ணன் இத என்கிட்ட சொன்னது உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.
“அது…”
“ம்ம்… சொல்லு உனக்கு எப்படி தெரியும்? இன்னிக்கி காலைல தானே நீ என்னையே பாக்கற. உங்கண்ணன் சொல்ல வாய்ப்பில்ல. உன்கிட்ட ஜாக்கிரதையா என்னைய இருக்க சொன்னான் அவன்.”
“அவரு சொன்னாரு.”
“எவரு?” என அவள் கேட்டதும் கயல்விழி நாணம் கொண்டு சிரித்ததும் மிருணாளினிக்குப் புரிந்துப் போனது.
“ஹோ அவரா? அவரும் கீதனும் ஃபிரண்ட்ஸ் அஹ்?”
“ஆமா. உங்கள பத்தி அண்ணன் அவருகிட்ட சொன்னானாம். பேச்சுவாக்குல நேத்து ராத்திரி பேசறப்ப சொன்னாரு. அதுல இருந்து புரிஞ்சிக்கிட்டேன்.” என அவள் கூறியதும் மிருணாளினி புருவம் உயர்த்திப் பாராட்டும் விதமாகப் பார்த்துச் சிரித்தாள்.
“மேடம் சரியான ஆளு தான்….”
“ஆனா இந்த தடவ யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது. நல்லா படிச்சி தெளிவா புரிஞ்சிக்கிட்டு தான் இறங்கணும். உங்களுக்கு நான் உதவிக்கு வரேன். ஏதாவது புத்தகத்துல தேடணும், எடுத்து எழுதணும்ன்னா சொல்லுங்க நான் செய்றேன்.” எனக் கூறினாள்.
“கண்டிப்பா சொல்வேன். மொத உன் கல்யாணம் முடியட்டும்.”
“இல்ல அண்ணி. என் கல்யாணம் அமாவாசை முடிஞ்சி தான் வருது. அமாவாசைல ஒரு முயற்சி செஞ்சி பாத்துடலாம்.” கயல்விழி தாயின் அறையைப் பார்த்தபடி மெல்லக் கூறினாள்.
“ஏன் அவசரப்படணும் கயல்? இது பொறுமையா செய்ய வேண்டிய விஷயம். நல்லா ஆராயாம இறங்க கூடாது.”
“இல்ல அண்ணி. ஒரு நிமிஷம் என்கூட வாங்க.” என அவளைத் தன்னறைக்கு அழைத்துச் சென்று ஒரு டைரியை எடுத்துக் கொடுத்தாள்.
அதில் வடிவேலனின் கையெழுத்து இருந்தது. “இதுவும் உங்கப்பாவோடதா?” எனக் கேட்டாள்.
“ஆமா. ஆனா அம்மா இத ஒளிச்சி வச்சிருந்தாங்க.” எனக் கூறிவிட்டு மிருணாளினி கையில் கொடுத்து மறைத்துக் கொள்ளக் கூறினாள்.
“இத படிச்சியா கயல் நீ? உனக்கு என்ன புரிஞ்சது?” என மிருணாளினி அவளைக் கேட்டுவிட்டு கூர்மையாகப் பார்த்தாள்.
“இதுல ஒரு செய்யுள் இருக்கு… அத பாருங்க.” என ஒருப்பக்கத்தைக் காட்டினாள்.
“சந்திரனில்லா நள்ளிரவு ஏற,
குகையின் வடக்கும், தெற்கும் வைரவன் வாள் வீச,
மத்தியில் நாச்சியின் அபயகரத்தினைப் பற்றிட,
உச்சியில் பாறை விலகிய நாள் கணக்கிட்டு வரும் ,
நித்ய பௌர்ணமியில்,
சந்திரன் முழு வீரியத்தில் சுற்றும் வேளை,
எல்லைக் கோவில் தூணில் மூவாறு வரிசையிலே,
அட்டக் காலை மீட்ட,
குகையின் முக்கிய தாழ் திறக்கக் கடவுமே…”
இந்த செய்யுளின் பின்பாதி முன்பும், முன்பாதி பின்பும் வேறு வேறு கையெழுத்தில் இருப்பது நன்றாகத் தெரிந்தது. மிருணாளினி அதைக் கண்டதும் கையேட்டை தன் கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
“கயல். இது உங்கம்மா எப்ப மறைச்சு வச்சாங்க?”
“அண்ணே குகைப்பத்தி கடந்த ஆறு மாசமா தீவிர ஆராய்ச்சில இருக்கறத பாத்துட்டு இங்க என் நகை பீரோவுல வச்சாங்க. நான் போன வாரம் தான் இத பாத்தேன். அதான் எடுத்து தனியா வச்சிருந்தேன்.”
“நீ ஏன் தனியா எடுத்து வச்ச?”
“மறுபடியும் அரைகுறையா புரிஞ்சிட்டு அங்க போய் யார் உயிரும் போயிடக்கூடாதுன்னு தான். இப்ப உங்களையும், உங்க ரூம்ல இருந்த சுவடி தமிழ் புத்தகம் எல்லாம் பாத்ததும் உங்களால முடியும்ன்னு தோணிச்சி. அதான் குடுக்கறேன். எங்கப்பால இருந்து பலரும் விட்ட ஏதோ ஒண்ணு இதுல இருக்கணும். முழுசா தெரிஞ்சிட்டு இதுல இறங்குங்க. சந்திரனில்லா இரவுன்னா அமாவாசைன்னு அர்த்தம். அதான் முன்னயே பாக்க சொன்னேன்.”
மிருணாளினி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு,“உனக்கு இருக்க முதிர்ச்சில பாதி உங்கண்ணனுக்கு இருந்து இருக்கலாம். இது உன்கிட்ட இருந்ததும் தெரியவேணாம். என்கிட்ட வந்ததும் யாருக்கும் தெரியவேணாம். புரியுதா?”
“ஆனா இதுல ஆபத்து அதிகமா இருக்குன்னு தெரிஞ்சா உங்கள மட்டுமில்ல யாரையும் அந்த பக்கம் கூட போகவிடமாட்டேன். நீங்க இதப்பத்தி கண்டுப்பிடிச்சி முழுசா என்கிட்ட சொல்லணும். சத்தியம் பண்ணுங்க.” எனக் கைநீட்டினாள்.
“இத நான் கைல எடுத்துட்டேன் கண்டிப்பா முடிப்பேன். உன்கிட்ட எல்லாமே சொல்லிட்டு தான் கெளம்புவேன். கவலப்படாத. வா கீழ போலாம்.”
“இப்ப வேணாம். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி போலாம்.”எனக் கூறி உப்பரிகை நோக்கி ஓடினாள்.
மிருணாளினி உப்பரிகையில் வைத்திருந்தச் செடிகளைப் பார்த்தபடியிருக்க, கயல்விழி தூரமாகப் பார்வையைச் செலுத்த, யுகேந்தரும், கீதனும் சிரித்தபடி வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தனர்.
“இவங்கள பாக்க தான் இங்க நின்னியா?” மிருணாளினி கீழே வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டுப் பார்த்துவிட்டுக் கயலைக் கேட்டாள்.
கயல்விழி அசடுவழியச் சிரித்தபடி அவளோடு கீழே இறங்கிச் சென்றாள்.
“வாங்க மாப்பிள்ளை.” என விசாலாட்சி மாப்பிள்ளை மரியாதை செய்ய, மற்றவர்களும் வீட்டு மாப்பிள்ளையைக் கண்டு உற்சாகமானார்கள்.
கயல்விழி மிருணாளினியின் பின்னால் ஒளிந்தபடி நடந்துவர, யுகேந்தர் அவளைப் பார்த்தும், பார்க்காதது போல மிருணாளினியிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க, பாவையவள் முகம் வாடிட அவனை முறைக்க, அவன் யாரும் அறியாமல் அவளைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தத்தில், பெண்ணவள் வதனம் தான் செஞ்சாந்துப் பூசிக்கொண்டது.
“மாப்பிள்ளை அவர்களே… இங்க எல்லாரும் இருக்காங்க.. கொஞ்சம் அடக்கி வாசிங்க.. எதுக்கு வந்த அத சொல்லு..” என கீதன் காதில் முணுமுணுத்தான்.
“இந்த புடவைய அம்மா குடுத்துட்டு வரச்சொன்னாங்க. நழுங்கு முடிஞ்சி கட்டணுமாம்.”
“சரிப்பா.. கயலு… உள்ள போய் இனிப்பு கொண்டு வந்து குடு போ. அப்படியே வாளில தனியா உங்கத்தை மாமாவுக்கும் எடுத்துவச்சி குடுத்துவிடு.” என விசாலாட்சி கூறியனுப்பினார்.
“நம்ம வீட்டுக்கு தங்கச்சிய அனுப்பி வைங்க தாத்தா.. அங்கயும் வந்து உறவு தெரிஞ்சிக்கட்டும்.” என வெள்ளைச்சாமியிடம் கூறினான்.
“சரி கண்ணு ரெண்டு நாளு கழிச்சி கூட்டி வரேன்.”
“இப்ப அனுப்பிவிடுங்க தாத்தா. நம்ம வீடு தோட்டம் எல்லாம் சுத்தி காட்டிட்டு இந்திரனோட அனுப்பி விடறேன். அம்மா சொல்லி தான் விட்டாங்க.”
“இப்பயா? புள்ள என்ன சொல்லுதோ?” எனக் கூறியபடி அவளைப் பார்த்தார்.
“நான் இந்திரண்ணா கூட போயிட்டு வரேன் தாத்தா. சித்தப்பா சித்திய பாத்துட்டு வரேன்.” என அவள் கூறியதும் சரியென்று அனுப்பிவைத்தார்.
இந்திரன் முறைப்புடன் அவளை அழைத்துக் கொண்டு கீதனின் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவளிடம் திரும்பி,“எதுக்கு புள்ள உனக்கு இந்த தேவையில்லாத வேலை? சொன்னா கேளேன்.” எனக் கூறி அவளது முகத்தைப் பார்த்தான்.
“இது என்னோட வேலை இந்திரண்ணா.. இங்க இல்லைன்னாலும் இன்னொரு எடத்துல உசுரு போகணும்ன்னு இருந்தா போகும் தான். அதுக்காக நான் பயந்துகிட்டு வாழமுடியாது. இதுல இதுவரைக்கும் மத்தவங்க பண்ண தப்பை நான் பண்ணமாட்டேன். முழுசா ஓரளவு புரிஞ்சிட்டு தான் இறங்குவேன். நீ தேவயில்லாம கவலபடாம இரு. என் அக்காவ கொன்னவன கொல்ல இதவிட ஒரு சந்தர்ப்பம் எனக்கு அமையாது. இதுக்கு மேல இத தடுக்கறமாதிரி நீ எதுவும் பேசக்கூடாது. உமேஷ் பாக்க தானே போறோம்?”, எனக் கேட்டு முன்னே நடந்தாள்.
“பழிக்கு பழின்னு போனா வாழ்க்கை இல்ல புள்ள..”
“ஆனா துரோகம் பண்ணவனுக்கு தண்டனை குடுக்கலாம். அது தப்பில்ல..”
“அப்படி அந்த புள்ள எப்புடிதான் செத்துச்சி? எனக்கு முழுசா சொல்லு.”
“இங்கயே சொல்லவா இல்ல அவனுங்க ரெண்டு பேரயும் வச்சிட்டு சொல்லவா?”
“சரி ஒரே தடவையா சொல்லு வா.” என முன்னே நடந்தான்.
உமேஷ் கட்டுண்ட நிலையில் மயங்கிக் கிடக்க, “சரி நீ நடந்தத முழுசா சொல்லு.” என இந்திரன் கேட்டான்.
“அவள நம்பவச்சி கொன்னுட்டான் அந்த மணீஷ். அவன அப்படி செய்ய சொன்னவன் ஆதர்ஷ்.” என அந்த நாட்களுக்குள் நுழைந்தாள்.