Loading

கண்ணாலம் 15 (இறுதி அத்தியாயம்)

 

“இவங்க எல்லாரும், எனக்காக நான் சொன்னதைப் பண்ணல. உனக்காக! உன் மேல வெச்சிருந்த பாசம்! என்னை மாதிரியே, நீ இல்லாம வாழ்ந்துட்டு இருக்கவங்களோட ஏக்கம்! உன்னோட இடம் உனக்கானது லாலா… உன்னோட உருவமும், வயசும் மாறி இருக்கே தவிர இங்க இருக்க எல்லாருக்கும் நீ குழந்தைதான். இப்பவும் பாட்டுப் பாடி டான்ஸ் ஆட எங்கப்பா ரெடி!” என்றவன் நின்று கொண்டிருக்கும் தந்தை பக்கம் தலையைத் திருப்பினான்.

 

“என்னாப்பா, என் பொண்டாட்டிக்காக ஆடுவீங்கல்ல.” சிரிப்புடன் கேட்க, அவர் தலை தன்னால் ஆடியது. 

 

“உங்க அப்பாவோட தைரியம், நீ வீட்டை விட்டுப் போன அப்பவே போயிடுச்சு. இப்ப அவரு நடைப்பிணம்! குடிச்சாலும், குடிக்காம போனாலும் பேச பயப்படுவாரு. நீ அவருக்குக் குடுத்த தண்டனை அப்புடி. பெத்தவங்களாலயும், கட்டிகிட்டு வந்த எங்க அத்தையாலயும் திருத்த முடியாத ஒருத்தரை நீ திருத்திட்ட. எங்க அப்பாவையும் சேர்த்து. ஆம்பளப் புள்ளைங்க எங்களாலயே திருத்த முடியல. ரெண்டு பேரும் உனக்குப் பயந்து ஒடுங்கி இருக்க அழகை நீ பார்க்க வேண்டாமா?” 

 

சேதுராமன், மருமகன் வார்த்தையில் மெல்லச் சிரிக்க, “இங்கப் பாரு லாலா, உங்கப்பன் பனங்கொட்டைத் தலையன் சிரிக்கிறாரு. இப்ப மட்டும் இல்ல, எப்பவுமே உங்க அப்பாவ இப்புடித்தான் பேசுவேன். வேணும்னா அவரையும் பேசிக்கச் சொல்லு. பேசுற வரைக்கும் பேசிக்கிட்டு, அடிக்கிற வரைக்கும் அடிச்சுக்கிட்டுக் காலத்தைத் தள்ளிடுவோம். எங்களைப் பத்தி இனி நீ கவலைப்படாத.” என்றான்.

 

“ஊரைக் கூட்டிக் கலாய்ப்பேன்னு சொல்லாம சொல்றான் பாரு.” 

 

“அவன் தைரியமானவன், சொல்றான். என்னால சொல்ல முடியல.”

 

“பின்னாடி தான் உன் மாமனார் நிக்கிறாரு, திரும்பிச் சொல்லு.”

 

“நீ என்னாண்ணா, அவன மாதிரியே பேசுற.” 

 

“முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கும்போது குசுகுசுன்னு பேசாதீங்கடா. நான் என்னா உங்களை மாதிரிக் கட்டிக்கிட்டு வந்தவளைக் கஷ்டப் படுத்துறவன்னு நெனைச்சீங்களா? என் லாலா, என் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உள்ளங்கையில வச்சுத் தாங்குவேன்.” 

 

“எல்லா சைடும் பால் அடிக்கிறான்டா.” என்ற வார்த்தை சிங்காரத்தின் காதில் விழ, சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டான். 

 

“ஒவ்வொரு தடவையும், நான் லவ் பண்றேன்னு சொன்னதால தானே… நீ என்னை விரும்புனன்னு கேட்கும் போதெல்லாம் எனக்குள்ள, ‘அடி பைத்தியக்காரி’ன்னு தான் தோணும். என்னை விட நீ தான் அதிகமா காதலிக்கிற லாலா… அதனாலதான், இவனைத் தான கட்டி வைக்கப் போறாங்கன்னு தெரிஞ்சும் லவ்வைச் சொன்ன. 

 

நீ சொன்ன அப்போ எப்புடி இருந்துச்சு தெரியுமா? நம்ம நேசிக்கிற பொண்ணு தானா வந்து லவ் பண்றேன்னு சொல்லும்போது, அதை விட வேற என்னா சந்தோஷம் வேணும். எனக்கு அந்தச் சந்தோஷத்தைக் குடுத்துட்ட. லவ் பண்ணதுக்கு அப்புறம் உன்ன ரசிச்சுப் பார்த்ததை விட, என்னை ரசிச்சுப் பார்த்தது தான் அதிகம். என் ஆளு என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டான்னு குதிக்காத நாள் இல்ல. 

 

கல்யாணத்துக்கு அப்புறம் இது எல்லாத்தையும் உன்கிட்டச் சொல்லனும்னு ஆசை. உன்ன முதல் முதல்ல விரும்புறேன்னு தெரிஞ்ச நாலுல இருந்து, தாலி கட்டும் போது கை நடுங்குச்சுடி பொண்டாட்டின்னு சொல்ற நொடி வரைக்கும், எல்லாத்தையும் பொக்கிஷமா சேமிச்சு வச்சேன். இவ்ளோத்தையும், எனக்குள்ள பதுக்கி வச்ச நான் உன்ன வைக்கத் தவறிட்டேன். இப்ப யோசிச்சால் கூட, நானா அப்புடிப் பண்ணேன்னு தோணுது. உன்ன வேணாம்னு ஒரு நொடி கூட யோசிக்க முடியாது. 

 

எனக்கு நீ இல்லாமல் பொழுதும் விடிஞ்சது இல்ல, ராத்திரியும் அடங்குனது இல்ல. நீ லவ் சொல்றதுக்கு முன்னாடி மனசோட! சொன்னதுக்கு அப்புறம் உன்னோட! இப்பத் தனிமையோட! எனக்கு நீ குடுத்த தண்டனை மரணத்துக்குச் சமம். ஒருவேளை, எனக்கு முன்னாடி நீ போயிட்டா இப்புடித்தான் அனாதையா இருந்திருப்பேன் போல. 

 

அம்மா, அப்பா குடும்பம்னு எல்லாம் இருந்தும் ஒரு தனிமை! நெஞ்சு பாரமா இருக்கும். ஏண்டா இப்படிப் பண்ணேன்னு எந்த முகத்தைக் கண்ணாடியில ரசிச்சனோ, அந்த முகத்தை அருவருப்பாய் பார்த்துக் கேட்டுப்பேன். நீ இல்லாத வாழ்க்கை இப்புடியே இருந்துடுமோன்னு பயம். சில நேரம் அழுகை வரும் லாலா. அதை உன்கிட்ட மட்டும்தான் காட்டணும்னு வைராக்கியமா எனக்குள்ள வச்சுப்பேன். அது இப்போ நெறஞ்சு மூச்சு முட்ட வைக்குது. எனக்கு உன் மடியில படுத்து அழனும், மன்னிப்புக் கேட்கணும், கொஞ்சனும்னு ஆசையா இருக்கு. அதுக்கெல்லாம் தகுதி இல்லாதவன் தான். இருந்தாலும் ஆசையா இருக்குடி!” என்றவனின் விழிகளில் தேங்கியிருந்த நீர், மீசையைத் தாண்டி ஆடையைத் தொட்டது வந்தவளின் வருகையால்.

 

கண்ணீர் கரைய ஓடி வந்தவள், இமை சிமிட்டாது அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, புன்னகை ததும்பக் கண் சிமிட்டினான். அனைவரும் பூங்கொடியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அத்தை மகளின் வரவால் மேடையை விட்டு இறங்கியவன், “எவ்ளோ பெரிய வீரமுள்ள ஆம்பளையா இருந்தாலும் பொண்டாட்டி கிட்ட இதைச் செய்யாம வாழ்ந்ததா சரித்திரமே இல்லை. இந்தச் சிங்காரவேலன் மட்டும் விதிவிலக்கா என்னா? பொண்டாட்டிதாசன் லிஸ்ட்ல முழு மனசோட சேரத் தயாராகிட்டேன். இனி எந்த வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் எதுவும் இல்ல. முதலும் கடைசியுமா நான் பண்ண தப்புக்கு…” அவளுக்கு முன் வந்து நின்றான். 

 

மாமனையே பார்த்துக் கொண்டிருந்தவள், உதடு துடிக்கக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, நெருங்கி நின்றவன் கன்னம் பற்றினான். அழுகை அதிகரித்தது. நிதானமாகத் தன்னை வந்தடைந்தவளை விழிகளால் அள்ளிப் பருகியவன், வழிந்தோடிய கண்ணீரைக் கட்டை விரலால் துடைத்தெடுத்தான். அவன் கை மீது கை வைத்தவள், “மாமா…” என்றழைக்க அடிவயிறு குளிர்ந்தது சிங்காரத்திற்கு.

 

அவன் சிரிக்க அவளும் சிரித்தாள். தன்னவனின் வார்த்தை ஒவ்வொன்றும் ஒளித்து வைத்த காதலைத் தூண்டிவிட்டு ஓடி வர வைத்தது. கலங்கியிருந்த அவன் குரல் நெருங்க வைத்தது. கன்னம் தொட்டவனின் ஸ்பரிசத்தில் இணைப்பு மலர்ந்தது. காதலனின் புன்னகை, மனம் குளிரச் செய்தது. முழுதாகப் பாதிக்கப்பட்டவள், அவன் தான் ஆதரவு என்று திரும்பி வந்துவிட, தொலைத்த உயிரைக் கண்டுபிடித்த நிம்மதி அவனிடம். 

 

சுற்றம் மறந்து அவன் தேகம் உரச நெருங்கியவள், “அழாத!” என்றதும் தாவி அணைத்துக் கொண்டான். குழந்தையை நெஞ்சோடு சேர்த்துக் கொண்ட பரவசம் அவளுக்கு. தாயிடம் தஞ்சம் புகுந்த ஆனந்தம் அவனுக்கு. முழு மனத்தோடு அவன் முதுகுக்குப் பின்னால் கை நுழைத்தவள், தோள் மீது சாய்ந்திருந்த அவன் தலையை உயர்த்தி விட்டு, நெஞ்சில் சேர்ந்து கொண்டாள். ஆனந்தச் சிரிப்பிற்குச் சொந்தக்காரனாக நின்றான் சிங்காரவேலன்.

 

இதமாக அணைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள் ஊர் பார்க்க. அவர்களைக் கண்ட அனைவரின் மனமும் நெகிழ்ந்தது. வார்த்தையால் விவரிக்க முடியாத பேரானந்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள் குடும்பத்தார்கள். பொது மேடையில் மன்னிப்பைக் கேட்காமல், காதலியிடம் மன்னிப்பை வாங்கியவன் எல்லாம் சுபம் என்ற நிலையில் அணைத்துக் கொண்டிருக்க, கரடி இரண்டு நடுவில் வந்தது.

 

சுகமாக நின்றிருந்தவன் தோளின் இருபுறமும் சீண்டல்கள். நான்கைந்து முறை உதாசீனம் செய்தவன், வேகமாகச் சீண்டுவதால் விழி திறக்க, அசைவில் விழி உயர்த்தியவள் பதறி விலகி நின்றாள்.

 

“லாலா…” 

 

அணைக்க நகரும் தம்பியின் புஜத்தைப் பிடித்த அண்ணன்கள் இருவரும், “ஊரைக் கூட்டி வச்சி மன்னிப்புக் கேட்கிறேன்னு சொல்லிட்டுக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கிற. ஒழுங்கா மன்னிப்புக் கேளுடா…” என்றனர். 

 

“கரடிப் பசங்களா! அவளே மன்னிச்சுட்டா, உங்களுக்கு என்னாடா?”

 

“அதெல்லாம் தெரியாது, மன்னிப்புக் கேளு!”

 

“கேட்க முடியாது, போங்கடா…” என்று விட்டுப் பூங்கொடியைத் தன் பக்கம் இழுத்தவன், கட்டி அணைக்க முயலும் நேரம் இருவரையும் பிரித்தார்கள் சரவணனும் கண்ணனும். 

 

கடுப்பானவன் கண்டபடி வசைபாட, “அன்னைக்கு எல்லார் முன்னாடியும் உன்னை எப்படி விட்டுட்டுப் போனான்னு யோசிச்சுப் பாரு பூவு.” என்றான் கண்ணன். 

 

“அடப்பாவி!”

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் வாழ்க்கையைக் கெடுக்கப் பார்த்தல்ல. இப்ப என்னோட டர்ன்!” 

 

“நீயா வந்துட்டேன்னு சாரி கேக்க மாட்டேன்னு சொல்றான். இவனப் போய் நம்பிக் கட்டிப் பிடிக்கிறியே.” 

 

“உனக்கு என்னாடா பண்ணேன் நானு…”

 

“மீரான்னு சொல்லி மிரட்டுனல்ல!”

 

“அண்ணனுங்களாடா, நீங்க ரெண்டு பேரும்?”

 

“கொஞ்ச நேரத்துக்கு நாங்க யாரோ, நீ யாரோ…”

 

“இவனுங்க பேச்சைக் கேட்காத லாலா.”

 

“இவனால நீ எவ்ளோ அழுதிருப்ப. ரெண்டு சொட்டுக் கண்ணீரை விட்டு ஏமாத்தப் பார்க்குறான். அதுக்கு மனசு இறங்கி மன்னிப்புக் கேட்காதன்னு சொல்லப் போறியா?” கண்ணன்.

 

“நாளைக்கே நீயாத்தான வந்தன்னு உன்னக் கழற்றி விட்டுட்டுப் போவான்.” சரவணன்.

 

“உங்க அப்பாவத் திட்டி வம்பு இழுப்பான்.”

 

“உன்ன மதிக்காம அவன் இஷ்டத்துக்கு இருப்பான்.”

 

“அழ வைப்பான்.”

 

“ஊர் முன்னாடி அசிங்கப்படுத்துவான்.” 

 

“இப்புடி ஒருத்தன் உனக்கு வேணுமா?”

 

“எடுத்த முடிவு எடுத்ததாவே இருக்கட்டும் பூவு!” 

 

பூங்கொடியிடமிருந்து அண்ணன்களைப் பிரித்தவன், கை உயர்த்திப் பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டு, “போதும்டா சாமிங்களா!” என்றான். 

 

அவர்களோ அவன் பேச்சை மதிக்காது, “எந்த ஊருக்கு மத்தியில உன்ன அம்போன்னு விட்டுட்டுப் போனானோ, அந்த ஊருக்கு முன்னாடி மன்னிப்புக் கேட்க வை பூவு. பொண்ணுங்க கிள்ளுக்கீரைன்னு நெனைச்சிடக் கூடாது. முக்கியமா உன்ன நெனைச்சிடக் கூடாது.” ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார்கள். 

 

அவர்கள் பேச்சு வேலை செய்தது. மெல்ல முகம் மாற ஆரம்பித்தது. காதலியின் மாற்றத்தைக் கண்டு மிளகாய்ப் பொடியை உண்டதாய் முகம் சுழித்தவன், நெருங்கி வந்து சமாதானம் செய்ய முயன்றான். அதற்கு இடம் தராதவள் நகர்ந்து நின்று கை கட்டிக் கொண்டு முறைக்க, “போச்சுடா” தலையில் கை வைத்தான். 

 

“பார்த்தியா… சாரி கேட்கச் சொன்னா…” என்ற அண்ணன்களின் வாயைப் பொத்தியவன், “செத்த மூடிக்கிட்டு நில்லுங்கடா.” சிடுசிடுத்தான்.

 

போதும் என்று அவர்கள் ஒதுங்கிக் கொள்ள, நெருங்கி வந்தவளோ இன்னும் விலகி நின்றாள். சுற்றி இருந்த அனைவரும் நடக்கும் கூத்தை மனமாரக் கண்டு களிக்க, “இதான் லாஸ்ட், இதுக்கு மேல சுபம்னு போட்டுடனும். சிங்காரவேலன் ரொம்பப் பாவம். கதை ஆரம்பிச்சப்போ கெஞ்ச ஆரம்பிச்சான். இப்ப வரைக்கும் கெஞ்சிக்கிட்டு இருக்கான். எல்லாரும் பார்த்துக்கோங்க, என்னை மடக்கிப் போட்ட மகராசி, நீயும் கண்ணைச் சிமிட்டாம நல்லாப் பார்த்துக்கோமா… அப்புறம் அவன் சொன்னான், இவன் சொன்னான்னு முதல்ல இருந்து ஆரம்பிக்கக் கூடாது.” என்பதற்குச் சிரிப்பு வந்தாலும் விரைப்பாக நின்று கொண்டிருந்தாள் பூங்கொடி.

 

இவ்வளவு பேசியும் மனம் இறங்காத காதலியை முறைத்துக் கொண்டே நகர்ந்து நின்றவன், “மன்னிச்சிடு லாலா…” என யாரும் எதிர்பார்க்காத நேரம் காலில் விழ, உடல் தூக்கிப் போட நகர்ந்து நின்றாள் பூங்கொடி.

 

படுத்தவாறு அவள் காலைத் தேடி ஊர்ந்தவன், “சீக்கிரம் மன்னிச்சிடுமா, மண்ணு எல்லாம் வாய்க்குள்ள போகுது.” என்றிடத் தன்நிலை தெளிந்து சிரித்து விட்டாள். 

 

காதலி சிரித்ததும் எழுந்து கட்டிக் கொள்ள, மாமனைக் கட்டிக் கொண்டாள் லாலா. இந்த முறை இருவரும் மகிழ்வாக அணைத்து நின்றனர். இருந்த சிறு சலனமும் அதில் விலகியது. மனமாரக் காதலித்துச் சுகமாக நின்று கொண்டிருந்தவர்களை ஊரே கண் வைத்தது. 

 

 

அவனிடமிருந்து விலகியவள், முகம் சிவக்கத் தலை குனிய, “அய்யய்யோ! வெட்கப்படுறாளே!” கன்னத்தைப் பிடித்துக் கொண்டு முத்தமிட நெருங்க, 

 

“நாங்க இங்கதான் இருக்கோம்.” என்றார் சேதுராமன். 

 

தந்தை நெருங்கியும் கூடத் தன்னிலை உணராதவள், அவனை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்க, “இன்னுமா இருக்கீங்க?” கேட்டான்.

 

“அநியாயம் பண்ணாதடா.”

 

“வெட்டியாப் பேசிக்கிட்டு இருக்காம, எல்லாரையும் துரத்தி விடுங்க.”

 

“பிரியாணி போடுறன்னு சொல்லித்தான எல்லாரையும் வர வெச்ச?”

 

“இப்புடி ஃப்ரீ ஷோ காட்டுனதே பெரிய விஷயம், இதுக்கு மேல பிரியாணி வேணுமா?” 

 

“காலைல இருந்து கொலைப் பசில இருக்கானுங்க.”

 

“நான் ஒரு மாசமாப் பசில இருக்கேன்.” என்றவன் பார்வை சேதுராமன் மகள் மீது ஏடாகூடமாகப் பாய்ந்தது. அதை அறிந்தவள் முகத்தில் வெட்கம் தூக்கலானது.

 

“என் பொண்ண என் முன்னாடியே இப்புடிப் பார்க்குறியே.”

 

“கூச்சமா இருந்தா திரும்பிக்க மாமா!”

 

தலையில் அடித்துக் கொண்ட சேதுராமன், அங்கிருந்த அனைவரையும் விரட்டியடிக்க, “அப்புடியே கொஞ்ச நேரத்துக்கு இங்க யாரையும் வர விடாமல் பார்த்துக்க மாமா…” என்றான். 

 

“என்னா வேலை பார்க்கச் சொல்றான் பாரு.” 

 

“பேரப் புள்ளைங்களைப் பாக்குற ஆசை இல்லையா?”

 

“இவன வெச்சிக்கிட்டு…”

 

“நான் உன் பொண்ண வெச்சுக்கிறேன் மாமா…” என்றவனைப் பூங்கொடி தன் பக்கம் இழுக்க, அதற்குமேல் அங்கு எவரும் இல்லை. 

 

இதழை ஈரமாக்கிக் கொண்டவன் நெருங்கி வரும் அவள் உதட்டை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, தொந்தரவு செய்யும் வெட்கத்தைத் தடுக்கும் வழி தெரியாது மீசை உரச நெருங்கி வந்தவள், 

 

“பூங்கொடி கண்ணாலத்த முடிச்சுட்டு, வாங்க வேண்டியது வாங்கிக்க…” என்று விட்டுச் சிட்டாகப் பறக்க, “வாங்காம கண்ணாலம் கெடையாது!” ஓட்டம் பிடித்தான் விரதத்தைக் கலைக்க.

 

 

….………………………சுபம்……………………………

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்