
அத்தியாயம் 15
ஏஎஸ்ஐ ஆவணக்காப்பு மையம்…
யுகேந்திரன் பிரக்ஞையின்றி தரையில் விழுந்த நொடி, ஸ்தம்பித்து நின்ற சுடரொளி, மீண்டும் நிகழ்விற்கு வரவே இரு நொடிகளானது.
அதுவும் அவன் உடலிலிருந்து வழியும் குருதியைக் கண்டவளின் முன்பு அடுத்து என்ன என்ற கேள்வி பூதாகரமாகத் தோன்றியது.
அதே சமயம், மற்றவர்களின் காலடித்தடம் அவர்களை நெருங்குவது புரிய, தன் சக்தி வேலை செய்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க முயன்றாள்.
அவளின் அதிர்ஷ்டமோ என்னவோ அவளின் சக்தி அப்போது வேலை செய்ய, உடனே கீழே விழுந்து கிடந்த யுகேந்திரனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு மற்றவர்களின் கண்களிற்குப் புலப்படாமல் மறைந்து போனாள்.
என்னதான் மறைந்தாலும், அங்கிருந்து அவளால் செல்ல முடியவில்லை. அதுவும் மயங்கியிருந்த யுகேந்திரனைத் தூக்கிக் கொண்டு செல்வது எளிதான காரியம் அல்லவே!
எனவே, சிறிதும் சத்தம் கொடுக்காமல் அங்கேயே அமர்ந்து விட்டாள்.
அவர்களைத் தாக்கிய நபர்கள் வெளியே வந்து, சுடரொளியும் யுகேந்திரனும் விழுந்த இடத்தை ஆராய ஆரம்பித்தனர்.
அதே இடத்தில் இருந்த சுடரொளியோ கண்களில் மரண பயத்துடன், மூச்சைக் கூட வெளியே விடாமல், இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரம் தேடியவர்கள் அங்கிருந்து அகல, பிடித்து வைத்த மூச்சை வெளியிட்ட கையோடு இன்பசேகரனை அலைபேசியில் அழைத்தாள், மறைமுக நிலையில்தான்!
அப்போதுதான் யாழ்மொழியை அழைத்துக் கொண்டு அவளின் இல்லம் திரும்பியிருந்த இன்பசேகரன் சுடரொளியிடமிருந்து வந்த அழைப்பை ஏற்க, “இன்பா, சீக்கிரம் வா… போலீஸ்காருக்கு அடிப்பட்டிருக்கு. ரத்தம் வேற வருது.” என்று படபடத்தாள்.
“என்ன சொல்ற சுடர்? நீங்க எங்க இருக்கீங்க? உங்களைச் சுத்தி யாராவது இருக்காங்களா?” என்று இன்பசேகரனும் சற்றுப் பதற்றத்துடனே வினவினான்.
“ஏஎஸ்ஐ ஆர்க்கைவ்ஸுக்கு பின்னாடி இருக்கோம். கொஞ்சம் சீக்கிரம் வா இன்பா. எனக்குப் பயமா இருக்கு.” என்று அழவே ஆரம்பித்து விட்டாள் சுடரொளி.
“இதோ, இப்போ வந்துடுறேன். நீ கால்லயே இரு. நீங்க மறைஞ்சுதான இருக்கீங்க? நான் வர வரை அப்படியே இருங்க.” என்று கூறிக் கொண்டே யாழ்மொழிக்கு கண்களால் செய்தி சொன்ன இன்பசேகரன், அங்கிருந்து மறைந்தான்.
அங்கு மறைந்தவன், ஏஎஸ்ஐ ஆவணக்காப்பு மையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் தோன்றி இருந்தான்.
“சுடர், லைன்லதான இருக்க? நான் இங்க வந்துட்டேன். நீ எங்க இருக்க?” என்று கேட்க, “இன்பா, இந்த பில்டிங்கோட பின்பக்கம் இருக்கோம்.” என்று முணுமுணுத்தாள் அவள்.
“ஓகே, அங்க வேற யாராவது இருக்காங்களா?” என்று இன்பசேகரன் வினவ, சுற்றிலும் கவனமாகப் பார்த்தவள், “இங்க யாரும் இல்ல இன்பா. நீ வரலாம்.” என்றாள்.
“ஓகே, என்னைப் பார்க்கிற வரை நீங்க மறைஞ்சே இருங்க.” என்று எச்சரித்தவன் துரிதமாகப் பின்பக்கம் நோக்கி ஓடினான்.
அவன் தூரத்தில் வருவதைக் கண்ட சுடரொளி, அவர்களின் இருப்பிடத்தைக் காட்ட வேண்டி மறைவிலிருந்து வெளியே வர, அதை இன்பசேகரன் மட்டுமல்ல, மறுபுறமிருந்த அடியாள் ஒருவனும் பார்த்து விட்டான்.
அதைக் கவனித்த இன்பசேகரன், “சுடர் பின்னாடி பாரு.” என்று கத்தியவன், சட்டென்று யோசித்து, அவன் இருக்கும் இடத்திலிருந்து மறைந்து, அடியாள் இருக்குமிடத்தை அவனது சக்தியினால் கண்ணிமைக்கும் நொடியில் அடைந்து, அந்த அடியாள் சுடரொளியை நோக்கி குறிவைத்தத் துப்பாக்கியை வளைத்து, அதை வைத்தே அவனைத் தூக்கி எறிந்தான்.
இவையனைத்தும் சுடரொளி பயத்தில் கண்களை மூடும் வேளைக்குள் நடந்து முடிந்திருந்தன.
மீண்டும் சக்தியின் மூலம் சுடரொளியை சமீபித்த இன்பசேகரன், கீழே விழுந்து கிடந்த யுகேந்திரனையும் அவன் உடலிலிருந்து பெருகி வழியும் குருதியையும் கண்டான்.
சற்றும் தாமதிக்காமல் யுகேந்திரனின் கரத்தைப் பற்றிக் கொண்டவன், “சுடர், சீக்கிரம் வா…” என்று அழைக்க, அவளோ பயத்துடன் எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
“சுடர்…” என்று இன்பசேகரன் கத்த, நிகழ்விற்கு வந்த சுடரொளியோ, “அவன் வந்துட்டான் இன்பா…” என்று எச்சிலை விழுங்கியபடி கூறினாள்.
யாரென்று இன்பசேகரன் திரும்பிப் பார்க்க, பளிச்சிடும் வெளிச்சத்தில் ஒற்றை கரும்புள்ளியாய் தூரத்தில் வந்து கொண்டிருந்தான் அவன்!
“யாரது?” என்று இன்பசேகரன் வினவ, “அவன் பக்கத்துல வந்துட்டா நம்மளால எதுவும் பண்ண முடியாது. சீக்கிரம் வா.” என்று சுடரொளி கூறும்போதே, சமயம் கடந்திருந்தது.
சுடரொளி, இன்பசேகரன், யுகேந்திரன் ஆகிய மூவரின் கற்களும் பகல் பொழுதின் வெளிச்சத்திற்குப் போட்டி போட்டுக் கொண்டு ஜொலித்தன.
அத்துடன் மூவரின் உடல்களும் வலியால் துவண்டு போயின.
அதை முதல் முறையாக அனுபவித்த இன்பசேகரன், இந்த மாற்றம் எதனால் என்று புரியாமல் சுடரொளியைக் காண, அவளோ வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு, “அவன் நம்ம பக்கத்துல வரப்போ, நம்ம சக்தி வேலைக்காக மாட்டிங்குது.” என்றவள், “சீக்கிரம் ஏதாவது பண்ணு இன்பா. அவன் பக்கத்துல வர வர, நம்மளால எதுவுமே செய்ய முடியாது.” என்று பயத்துடன் கூறினாள்.
அருகிலிருந்த பெரிய இரும்புத் தடிகளைக் கண்ட இன்பசேகரன், வலியுடனே அதில் ஒன்றை எடுத்து அவர்களை நெருங்குபவனை நோக்கி எறிந்தான்.
முதல் தடி அவனது இலக்கைத் தாக்காமல் தள்ளி விழ, இன்பசேகரனோ அவனது முயற்சியை கைவிடாமல் அடுத்தடுத்து எறிந்து கொண்டே இருக்க, நான்காவது முயற்சியில் சிறிது வெற்றி கண்டான்.
அந்தத் தடி வில்லனைத் தாக்கி சில அடிகள் பின்னே நகர்த்தியிருந்தது. உபயம், இன்பசேகரனின் அபரிமிதமான பலம் மற்றும் அவன் தடியை எறிந்த வேகம்!
இம்முறை சற்று நம்பிக்கையுடன், “சுடர் ரெடியா இரு.” என்றபடி, மீண்டும் ஒரு இரும்புத் தடியை எறிந்தான். இப்போதும் அவனது இலக்கை அது சரியாகத் தாக்கியது.
அந்தத் தடி வந்து விழுந்த வேகத்தில் தடுமாறிக் கீழே விழுந்தான் இருளிற்கச் சொந்தக்காரன்!
அதுவே அவர்கள் தப்பிப்பதற்கானத் தருணம் என்பதை உணர்ந்த இன்பசேகரன், யுகேந்திரனையும் சுடரொளியையும் இரு கரங்களில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து மறைந்தான்.
நொடி நேர வித்தியாசயத்தில் அவர்கள் தப்பிச் சென்றதை வன்மத்துடன் பார்த்தான் அவன்.
*****
வீட்டிலிருந்த யாழ்மொழிக்கோ நிமிடங்கள் கரைய கரைய, பயம் அவளின் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.
ஒரு நிமிடம், மென்மொழிக்கு அழைப்பு விடுக்கலாமா என்று எண்ணியவள், பின்பு, அவள் முக்கியமான வேலையாக இருக்கும் போது தொந்தரவு செய்யக் கூடாதென்று அந்த முடிவைத் தள்ளிப் போட்டாள்.
அவளின் பொறுமையை பெரிதும் சோதித்த பின்பே, அங்கு வந்து சேர்ந்தனர் மூவரும்.
இன்பசேகரன் நடந்து முடிந்த சண்டையின் காரணமாகப் பெரிதும் சோர்ந்திருக்க, சுடரொளியோ மரணத்தை நேரில் பார்த்த பயத்தில் வெளிறி இருந்தாள்.
நடந்தது எதுவும் அறியாத யுகேந்திரன் இன்னும் மயக்கத்தில் இருக்க, அவர்களின் நிலை கண்ட யாழ்மொழியின் இதயம் அதி வேகமாகத் துடித்தது.
“என்னாச்சு?” என்று குழப்பத்துடன் அவர்களைப் பார்த்த யாழ்மொழி, அப்போதுதான் யுகேந்திரனின் காயத்தைக் கவனித்தாள்.
“அச்சோ ரத்தம்… இவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணனும்.” என்று அவள் படபடக்க, சற்றுத் தெளிந்த சுடரொளியோ, “முதல்ல மொழிக்குக் கால் பண்ணு. அவளாலதான் இவருக்கு ஹெல்ப் பண்ண முடியும்.” என்றவள், யுகேந்திரனின் காயத்திலிருந்து வழியும் குருதியை நிறுத்துவதற்கான வேலையில் இறங்கினாள்.
அதன்படி யாழ்மொழி மென்மொழிக்கு அழைப்பு விடுக்க, இன்பசேகரன் மதுசூதனனின் அலைபேசி எண்ணிற்கு, ‘அபார்ட் அண்ட் கம் அவுட்.’ என்று செய்தி அனுப்பி இருந்தான்.
முதலில், செய்தியைக் கண்ட மதுசூதனன், அங்கு ஏதோ பிரச்சனை என்பதைப் புரிந்து கொண்டு மென்மொழியையும் அழைத்துக் கொண்டு வெளியேற முயன்றான், அங்கு அவர்களிற்கான ஆபத்து காத்திருப்பதை அறியாமல்!
*****
சரஸ்வதி மஹால் நூலகம்…
முன்பக்கம் ஆட்களின்றி வெறிச்சோடி கிடந்ததை பார்வையிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் இன்பசேகரன்.
மனம் முழுவதும், ‘இங்கு ஏதோ சரியில்லை’ என்று அடித்துக் கொள்ள, அதை உறுதிப்படுத்தும் விதமாக கீழே இருந்த சில ரத்தத்துளிகளையும் சிதறிய பொருட்களையும் கண்டான்.
“ஷிட்… இங்க என்னாச்சு?” என்று முணுமுணுத்தவன், வேகமாக ஓடியபடி அந்த இடத்தை அலசினான்.
சில நிமிடங்கள் கடந்த பின்னர், பின்பக்க கதவு நோக்கி அவன் ஓடி வர, அங்கு மென்மொழி நிற்பதையும், அவளருகே மதுசூதனன் விழுந்து கிடப்பதையும் கண்டான்.
அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்த இன்பசேகரன், “மொழி…” என்று கத்தி அழைக்க, ஏதோவொரு மோன நிலையில் இருந்த மென்மொழி, நண்பனின் குரலில்தான் சுயநினைவை அடைந்தாள்.
மெல்ல அவனை நோக்கித் திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் குற்றவுணர்வினால் கண்ணீர் தழும்பி இருந்தது.
அவளது பார்வைக்கான காரணம் புரியாமல் அருகே வந்தவனை கட்டிக் கொண்டு அழுதாள் மென்மொழி.
அவள் பயந்து விட்டதாக எண்ணிய இன்பசேகரனோ, “மொழி, ஒன்னுமில்ல… நான் வந்துட்டேன். இதோ, நாம இங்கயிருந்து போயிடலாம்.” என்று கூற, அவனின் சமாதானங்கள் அவளின் அழுகையில் பயனற்றுப் போயின.
“மொழி, பிளீஸ் அழுகுறதை நிறுத்து. அங்க… உன் ஹெல்ப் இப்போ ரொம்ப முக்கியம்.” என்று அவன் சூழ்நிலையை எடுத்துக் கூற முயற்சிக்க, “இன்பா, நான்… ஒருத்தனைக் கொன்னுட்டேன்… அதுவும்…” என்றவள் வார்த்தைகள் வராமல் தடுமாற, அவள் கூறியதிலேயே அதிர்ந்தவன், அடுத்து அவள் பார்வை சென்ற திசையில் பார்த்தவனின் விழிகள் திகைப்பில் விரிந்து போயின.
அங்கு சற்று முன், மென்மொழியைத் தாக்க வந்தவன் உயிரின்றி கிடந்தான். அதுவும் உடல் சுருங்கி, கன்னம் ஒட்டிப் போய் கிடந்த உடலை முதல் முறை பார்க்கும் யாரும் அதிர்ச்சியடையாமல் இருப்பது சாத்தியமன்று!
சில நொடிகள் திகைப்பில் ஆழ்ந்து விட்டவனை அலைபேசி சத்தம் உசுப்பி விட, வந்த வேலையை மனதில் நிறுத்தி, “மொழி, நாம இங்கயிருந்து கிளம்பனும்.” என்று கூறிக் கொண்டே மதுசூதனனைக் கண்டான்.
அவன் மயங்கி இருப்பது தெரிய, ஒரு பெருமூச்சுடன் அவனது கரத்தைப் பற்றிக் கொண்ட இன்பசேகரன், “மொழி வா…” என்று அழைக்க, அவளோ குற்றவுணர்வின் பிடியிலிருந்து வெளிவராமல் இருந்தாள்.
“ப்ச் மொழி, நீ கொலை செஞ்சது ஒன்னும் நல்லவன் இல்ல. இப்போ அது முக்கியமும் இல்ல. உனக்காக அங்கு ஒரு உயிர் காத்துட்டு இருக்கு. சீக்கிரம் வா பிளீஸ்.” என்று கத்த, “என்ன சொல்ற? யாருக்கு என்னாச்சு?” என்று பதறினாள் மென்மொழி.
ஏற்கனவே குற்றவுணர்வில் தத்தளிப்பவளிடம் என்னவென்று விளக்குவது, எப்படித் தனியாகச் சமாளிப்பது என்று எண்ணிய இன்பசேகரன், “இப்போ அதுக்கு டைம் இல்ல. சீக்கிரம் வந்து என் கையைப் பிடி.” என்று கண்டிப்புடன் கூற, இம்முறை அதைத் தட்டாமல் செய்தாள் அவள்.
அடுத்த நொடி அங்கிருந்து மறைந்தவர்கள், மென்மொழியின் வீட்டிலிருந்த மற்றவர்களுடன் இணைந்து கொண்டனர்.
அவர்கள் வந்ததுமே, “மொழி இங்க வா.” என்று கத்திய சுடரொளி, “யாழ், ரத்தம் வெளிய போகுது பாரு… சரியா பிடி.” என்று பேச, ‘யாருக்கு என்னவோ’ என்று பதறிய மென்மொழி, அங்கு யுகேந்திரனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“யுகேன்…” என்றழைத்தவள் உடனே அவனது கரம் பற்ற, அந்த நொடிக்காகவே காத்திருந்ததைப் போல அவனது காயங்கள் குணமாக ஆரம்பித்தன.
அவனது உடலிலிருந்து வழிந்த குருதி காய்ந்து போக, அதை அவள் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் ஈரப்படுத்தத் துவங்கியது.
சில நிமிடங்களில், யுகேந்திரன் குணமாகி விட்டான் என்பதை உறுதி செய்ததும், மதுசூதனனின் நிலையை நினைவுபடுத்தினான் இன்பசேகரன்.
சில நிமிடங்களில் அவனையும் குணப்படுத்திய மென்மொழியின் மனம் குற்றவுணர்விலும் கவலையிலும் ரணமாகிக் போனது.
அதைக் குணப்படுத்த அவளவன் மீண்டு வந்தால்தான் முடியுமோ!
தொடரும்…

