
அத்தியாயம் 14
ராகவர்ஷினியின் பெற்றோருக்கு அழைத்த கையோடு வெளியே சென்றிருந்த உதயகீதனுக்கும் அழைத்தார் கேசவமூர்த்தி. மகனின் மனநிலையையும் அறிந்து கொள்ள வேண்டுமே!
உதயகீதனோ, ஒரு புறம் அவனின் கனவு கண்முன்னே நிறைவேறிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சி என்றால், மறுபுறம் மனைவியின் கவலை சூழ்ந்த முகம் கொடுத்த குழப்பம் என்று திரிந்து கொண்டிருந்தான்.
இதோ, அவன் கனவு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட, அனைவரிடமும் இன்முகமாக பேசி வழியனுப்பி வைத்து வந்தவன், அவனறையில் தளர்வாக அமர, அப்போது தான் கேசவமூர்த்தி அழைத்தார்.
ஒருவித உற்சாகத்துடன் அவரின் அழைப்பை ஏற்றவன், அவன் மகிழ்ச்சியை தந்தைக்கும் பகிர, “ரொம்ப சந்தோஷம் உதய். உன் இத்தனை வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு இது.” என்றவர் சிறு இடைவெளி விட்டு, “அதோட என் மருமக வந்த ராசியும் கூட.” என்றும் சேர்த்து கூற, “அது சரி, நான் ஹார்ட் ஒர்க் போட்டு இந்த நிலைமைக்கு வந்தா, அந்த கிரெடிட்டை உங்க மருமகளுக்கு கொடுப்பீங்களா?” என்று கேட்டவனின் குரலில் சிறிதும் கோபம் இல்லை என்பதை உணர்ந்து கேசவமூர்த்தி மகிழ்ச்சியாகவே இருந்தார்.
உதயகீதனின் கேள்விக்கு பதில் சொல்லாதவர், “நீ எப்போ வருவ உதய்?” என்று வினவ, “வேலை எல்லாம் ஓரளவு முடிஞ்சுதுப்பா. ஏன் ஏதாவது அர்ஜெண்ட்டான விஷயமாப்பா?” என்றான் உதயகீதன்.
“அர்ஜெண்ட்டான்னு நீதான் வந்து சொல்லணும் உதய். ஏன்னா, இது உன் வாழ்க்கை விஷயம்.” என்று கேசவமூர்த்தி கூற, புரிந்து போனது உதயகீதனுக்கு.
“உடனே கிளம்பி வரேன்.” என்று அழைப்பை துண்டித்தவன், ஜீவநந்தினிக்கு அழைக்க முயல, அழைப்பு ஏற்கப்படவில்லை.
அவள் தான் அலைபேசியை சைலென்ட்டில் போட்டு விட்டு உறங்கி விட்டாளே! அவளின் குழப்ப மனநிலைக்கு தீர்வாக அவள் தேடியது உறக்கத்தை தான்.
“ம்ச், இவ வேற… காலைலயே கேட்டேன் தான? அப்போ சொல்லாம, இப்போ அப்பா கிட்ட என்ன சொல்லி வச்சுருக்காளோ?” என்று வாய்விட்டே புலம்பியபடி வாகனத்தை செலுத்தி அடுத்த பதினைந்து நிமிடங்களில் வீட்டை அடைந்திருந்தான் உதயகீதன்.
வாழ்க்கை பிரச்சனை அல்லவா?!
வந்ததும் நேராக கேசவமூர்த்தியிடம் சென்றவன், “என்னப்பா? உங்க மருமக என்ன சொன்னா?” என்று மூச்சு வாங்கியபடி வினவ, அவனின் வேகத்தில் சிரித்துக் கொண்ட அவனின் தந்தை, அவனுக்கு பருக நீரை கொடுத்தபடி, “அப்போ ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சு தான், அவளை தனியா விட்டுட்டு போயிருக்க.” என்று அவரின் அதிருப்தியை வார்த்தைகளில் வெளியிட்டார்.
“க்கும், நான் கேட்டு அப்படியே சொல்லிட்டாலும்! அப்படி என்னவாம்? எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சுருக்காளாம்?” என்றவனுக்கு சிறிது எரிச்சல் எட்டிப் பார்க்க, மருமகளின் ‘முசுட்டு முசோ’ பதம் நினைவுக்கு வந்து கேசவமூர்த்தியை நகைக்கச் செய்தது.
அவன் அவரை முறைக்க, “என் மருமக சொன்னது சரியா தான் இருக்கு. ஏன் உதய், எப்போ பார்த்தாலும் எரிஞ்சு எரிஞ்சு பேசிட்டு இருக்க?” என்று கவனமாக ‘முசுட்டை’ விட்டுவிட்டே வினவினார் கேசவமூர்த்தி.
“உங்களுக்கு உங்க மருமக என்ன சொன்னாலும் சரிதான்!” என்று புலம்பியவன், “பின்ன, ஈன்னு இளிச்சுட்டேவா பிசினஸ் பண்ணுவாங்க?” என்று கேட்டவனின் மனமோ அவன் மனையாள் இதற்கு எவ்விதம் எதிர்வினையாற்றி இருப்பாள் என்று எண்ணத் துவங்கியது.
மகனின் மாற்றம் உணர்ந்த கேசவமூர்த்திக்கோ, மனம் நிறைந்து போனது.
அதே மகிழ்ச்சியுடன், “உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு உதய். நந்து தான் உனக்கு சரி. என் சாய்ஸ் தப்பாகல.” என்று உற்சாகமாக பேசிய தந்தையை ஆதுரத்துடன் பார்த்தான் உதயகீதன்.
அவரை இத்தனை மகிழ்ச்சியாக எப்போது பார்த்தான் என்பதே அவன் நினைவில் இல்லை. அதோடு அவர் கூறிய மாற்றம் நினைவில் வர, ‘அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது?’ என்று சிரித்துக் கொண்டான்.
எனினும், அதை ஒப்புக் கொள்ளாமல், “உங்க மருமக கூட குப்பை கொட்டனும்னா, இப்படி தான் இருக்கணும்.” என்று ஏதோ சிரமமான வேலையை பார்த்தது போல சலித்துக் கொண்டான்.
அவனின் மனநிலையை புரிந்து கொண்ட கேசவமூர்த்தியும் அதற்கு மேல் அதை பேசாமல், அவர் பேச எண்ணிய விஷயத்தை துவங்கினார்.
“உதய், அப்பா உன் பெர்சனலை கேட்குறேன்னு நினைக்காத. அந்த பொண்ணோட இன்னும் என்ன பேச்சு? அது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைக்கும் நல்லது இல்ல உதய்.” என்று கேசவமூர்த்தி தயக்கத்துடன் கூற, அத்தனை நேரமிருந்த இளக்கம் மறைந்து இறுகிப் போனான் உதயகீதன்.
“இதை தான் உங்க மருமக கம்ப்லைண்ட் பண்ணாளா?” என்று அவன் சிறிது கோபத்துடன் கேட்க, “அப்படி தான் நீ அவளை நினைச்சுருக்கியா உதய்?” என்று கண்டிப்புடன் கேட்டவர், நடந்ததைக் கூற, மனையாளின் பேச்சில் வந்த கோபம் கூட ஓடிப் போனது.
“இப்போ சொல்லு உதய், அவ உன்னை சந்தேகப்படல. ஆனா, நீ பாதிக்கப்படுவியோன்னு பயப்படுறா. அது அவளை குழப்பத்துலயே வச்சுருக்கு. உன்னோட மனநிலை என்னன்னு அவளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது உன்னோட கடமை உதய். கல்யாணமாகிட்டா, ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து தான் இருக்கணும். உன்னோட ஒவ்வொரு முடிவும் அவளை பாதிக்கும். அவளோட குழப்பம் உன்னை பாதிக்கும். சோ, எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து முடிவெடுங்க.” என்று கூறியவர், சற்று இடைவெளி விட்டு, “என்னை மாதிரி இருக்காத உதய்.” என்று கூறும்போது அவரின் குரல் உடைந்தது.
தந்தையை ஆறுதலாக அணைத்துக் கொண்ட உதயகீதன், “என் பொண்டாட்டி அவங்களை மாதிரி இல்லப்பா.” என்றவன், “நீங்க அன்னைக்கு செஞ்சதுக்கு தேங்க்ஸ்பா.” என்றும் சேர்த்துக் கூறினான்.
அதைக் கேட்டுக் கொண்டே தன் கட(ச)ந்த காலத்திலிருந்து வெளிவந்த கேசவமூர்த்தி, “அது சரி, முதல்ல அவளை சமாதானப்படுத்துற வழியை பாரு.” என்று கூற, “ஹ்ம்ம், எங்க ஃபோனையே எடுக்கலயே.” என்று உதட்டைப் பிதுக்கியவாறு அறைக்கு செல்ல, அங்கு கண்ட காட்சியில், ‘அடிப்பாவி!’ என்று தான் எண்ண தோன்றியது.
அங்கு தான் அவனின் மனையாள் ஆழ்ந்த நித்திரையில் லயித்து இருந்தாளே!
‘எங்க ரெண்டு பேரையும் புலம்ப விட்டுட்டு இங்க நிம்மதியா தூங்குறியா?’ என்று எண்ணிய உதயகீதன், அவன் அலைபேசியில் அடுத்த நிமிடம் அலாரம் அடிப்பது போல செய்து விட்டு குளியலறைக்குள் சென்று விட்டான்.
ஐந்து நிமிடங்களாகியும் அவளின் அரவம் உணராததால், மெல்ல வெளியே எட்டிப் பார்த்தவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது, அவள் குண்பகர்ணனுடன் போட்டி போடும் விதமாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து.
அலாரம் ஸ்னூஸாகி இருப்பதை சற்றும் கண்டு கொள்ளாமல் அப்படி ஒரு உறக்கம்! பின்னே, முதல் நாள் குழப்பத்தினால் சரியாகவே உறங்கவில்லையே.
அதற்கு மேலும் அவள் உறக்கத்தை கலைக்க மனமில்லாமல், அவன் வேலைகளை அங்கிருந்தே செய்தவாறு அவள் எழுவதற்காக காத்திருந்தான்.
இரண்டு நாளுக்கும் சேர்த்து வைத்து தூங்கியதை போல, முன்னிரவு வேளையில் தான் கண் விழித்தாள் ஜீவநந்தினி.
முழித்ததும் அவள் கண்ணில் விழுந்தது, மடிக்கணினியில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்த உதயகீதன் தான்.
“இந்த முசோக்கு எப்போ பார்த்தாலும் வேலை தான். ஏர்லி மார்னிங் அப்படி எதை பிடிக்க இப்படி மாங்கு மாங்குன்னு வேலை செய்யுறாரோ?” என்று அவள் தூக்க கலக்கத்தில் முணுமுணுக்க, அது கேட்டாலும் முக்கியமான கலந்துரையாடலில் இருந்ததால் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அதில் மூழ்கினான்.
அப்போது தான் பெண்ணவளுக்கு அந்த சந்தேகம் வந்தது.
“இது மார்னிங்கா ஈவினிங்கா?” என்று சத்தமாக சிந்தித்தவளுக்கு அப்போது தான் மூளை வேலை செய்து, அவள் உறக்கத்திற்கு முன்னர் நடந்தவைகளை ஞாபகத்திற்கு கொண்டு வந்தது.
அதற்குள் வேலை முடித்து வந்த உதயகீதனோ, “என்ன மேடம், தெளிஞ்சுட்டீங்களா இல்லையா?” என்று கிண்டலாக வினவ, அதற்கு பதில் சொல்லாமல், “இன்னைக்கு எப்படி போச்சு? எல்லாம் ஓகே தான?” என்று கணவனின் கனவு பிராஜெக்ட் குறித்து கேட்டாள் அவள்.
“ஹ்ம்ம், எப்போவோ முடிஞ்சதை இப்போ தான் கேட்குற!” என்றவனின் குரலில் அப்பட்டமான ஏமாற்றம் தெரிய, அவனுக்கு அது மிக முக்கியமான நாள் என்று தெரிந்தும், அவளின் மனநிலையை காரணம் காட்டி செல்லாமல் இருந்தது தவறு என்று புரிய, “சாரி மு… க்கும், உதய், அது நான் ஒரு கன்ஃபியூஷன்ல இருந்தேன். அதான்…” என்று அவள் திக்கித் திணறினாள்.
“ஓஹ், இப்போ கிளியராகிடுச்சா?” என்று அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
“முழுசா கிளியர்னு சொல்ல முடியாது…” என்று அவள் இழுக்க, “அப்போ இப்போ கிளியர் பண்ணிடலாம். சொல்லு, என்ன குழப்பம்னு?” என்றான் அவன்.
அவன் திடீரென்று அப்படி கேட்பான் என்று எதிர்பார்க்காதவள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, “ஆக இப்பவும் நீயா என்கிட்ட சொல்ல மாட்டல. உன் மனசுல என்ன நினைக்குறன்னு எனக்கு எப்படி தெரியும் ஜீவி?” என்று அவன் கேட்க, அதற்கும் பதில் சொல்லவில்லை அவள்.
“ஓகே ஃபைன். ராகவர்ஷினி விஷயத்துல, என்னை நீ சந்தேகப்படுற, அதான?” என்று அவளை பேச வைக்க வேண்டி அவன் தூண்டிவிட, அதில் சிக்கியவளாக, “ச்சே, சந்தேகம் எல்லாம் இல்ல மு… உதய். அது… ஒரு மாதிரி நெருடலா இருந்துச்சு எனக்கு. அதை எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியல.” என்றாள் அவள்.
“ஹ்ம்ம், காதல்னு ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தவன், இப்போ சர்வசாதாரணமா, அதை மறந்துட்டு அவன் வேலையை பார்க்குறாங்கிற நெருடலா?” என்று அவன் கரகரப்பான குரலுடன் வினவ, வேகமாக அவன் கூற்றை மறுத்தவள், “ச்சேச்சே அப்படி இல்ல உதய். சாதாரணமா மறந்துட்டா? எனக்கு இதுவரை இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படலன்னாலும், என்னால உங்க வலிகளை புரிஞ்சுக்க முடியுது உதய். ஒரு வருஷமா பழகிட்டு, வாழ்க்கை முழுக்க அவங்களோடன்னு கனவு கண்டுட்டு, திடீர்னு ஒரு காரணத்தால, அவங்க வாழ்க்கைலேயே இல்லன்னு வரும்போது, எவ்ளோ வலி இருக்கும்னு எனக்கு புரியுது. அதுவும், அந்த காரணம் என்ன சாதாரணமானதா? அது ஒரு ஆக்வார்ட் சிசுவேஷன்.” என்று பேசிக் கொண்டே போனவள், இறுதி வரியில் அவன் முகம் கறுகுவதை உணர்ந்து அவன் கரத்தை அழுத்தி, அவளிருப்பை உணர்த்தினாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, மீண்டும் அவளே பேச துவங்கினாள்.
“இதுல, உங்க ரெண்டு பேரு மேலையும் தப்பு இல்ல உதய். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் உங்களை இப்படி ஒரு நிலைல நிக்க வச்சுருக்கு.” என்று ஒரு பெருமூச்சு விட்டவள், “நம்ம கல்யாணம் கூட, உங்க மனசை காயப்படுத்தும்னு தெரிஞ்சு தான், நான் வேண்டாம்னு எவ்ளோவோ சொன்னேன். ஆனா, எங்க கேட்டாங்க. அதுக்கு மேல, உங்களுக்கு ஆக்வார்ட்டா தோணக் கூடாதுன்னு தான், நான் எப்பவும் ஆஃபிஸ்ல எப்படி இருப்பேனோ, அப்படியே இங்கேயும் இருந்தேன்.” என்று தன் செயல்களுக்கான விளக்கத்தை தந்தவள், அவன் ஏதாவது கூறுவான் என்ற எதிர்பார்ப்புடன் அவனை பார்த்தாள்.
அவனோ குனிந்த தலையுடன் இருக்க, “அட முசோ, நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல, உங்களுக்கு சிடுசிடுப்பு தான் சூட் ஆகும். அதை தவிர வேற எந்த எமோசன்ஸும் சூட்டாகல.” என்று அவள் அவனை நிதானப்படுத்த முயன்றாள்.
சிவந்த கலங்கிய கண்களுடன் அவளை பார்த்தவனோ, “தேங்க்ஸ் ஜீவி. என்னை யாருமே புரிஞ்சுக்கலன்னு நினைச்சேன். அப்பா கூட… கல்யாணம் நிக்காம நடக்கணும்னு தான் நினைச்சாரே தவிர என் மனசை புரிஞ்சுக்க முயற்சிக்கல. அவரை சொல்லியும் தப்பில்ல. எங்க, நான் இதுக்கு அப்பறம் கல்யாணமே பண்ணிக்க மாட்டேனோன்னு பயந்துருப்பாரு. எஸ், அது ஒரு ஆக்வார்ட் சிசுவேஷன் தான். லவ் பண்ண பொண்ணு, என்னை பெத்தவங்களுக்கும் பொண்ணு, எனக்கு தங்கச்சி முறைன்னு தெரிய வரும்போது… ஒரு கில்டி ஃபீலிங்! இதனால, நான் மட்டும் இல்ல, அப்பாவும் தான் பாதிக்கப்படுவாங்க. அந்த மண்டபத்துலேயே எத்தனை பேர், எப்படியெல்லாம் பேசியிருப்பாங்க? இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்னு நினைக்கும் போது… ப்ச், எனக்கு சொல்ல தெரியல. சின்ன வயசுல ஏற்பட்ட காயங்களால, யாரும் என்னை தப்பா ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதுன்னே வளர்ந்து, அதுபடியே நடந்த எனக்கு, முதல் தோல்வி! மோசமான அனுபவமும் கூட… அது என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாம என்னை துரத்தும் போல!” என்று கண்களை தேய்த்துக் கொண்டவனை பார்க்க பாவமாக இருந்தது அவனின் மனையாளுக்கு.
கண்களை மறைத்த அவன் இரு கரங்களை தன் கரங்களுக்குள் கொண்டு வந்தவள், “மறப்போம் உதய்! வாழ்நாள் ரொம்ப நீண்டு இருக்கு… இதோ என்னை பாருங்க, நேத்து மடிச்சு வச்ச டிரெஸ் எங்க இருக்குன்னே மறந்து போற ஆளு நான். என்னோட பழகுனீங்கன்னா, மறக்குறது ரொம்ப ஈஸி.” என்று கண்களை சிமிட்ட, அதில் உதட்டோரம் லேசான சிரிப்பு எட்டிப் பார்க்க, “பழகலாமே…” என்றான் அவனும்.
“இப்படி சிரிச்சுட்டே இருந்தா எல்லாம், பசி போயிடாது சாரே. சாப்பிட போலாமா?” என்று அவள் நக்கலாக வினவ, “உனக்கு சாப்பாடு மட்டும் மறக்கவே மறக்காதுல. ஒரு எக்ஸாம்பிலுக்கு கூட அதை சொல்லல பார்த்தியா?” என்று அவளை வாரியபடி சாப்பிடும் அறைக்கு செல்ல, “க்கும், அட்வைஸ் சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது முசோ!” என்று அவனை முறைத்தபடி அவளும் பின்தொடர்ந்தாள்.
இருவரும் சிரித்தபடி வருவதை பார்த்த அவர்களின் தந்தைகளுக்கு அப்போது தான் மகிழ்ச்சியாக இருந்தது.
தொடரும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Lovely episode ❤️❤️❤️❤️❤️