Loading

அத்தியாயம் – 14

மறுநாள் காலை 10 மணி.

பேருந்து சென்னைக்கு திரும்பும் பயணத்திற்காக தயாராக நின்றது. மாணவர்கள் தங்கள் பைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் உற்சாகமாக கடற்கரையை கடைசியாக ஒரு முறை பார்த்து, புகைப்படங்கள் எடுத்தார்கள்.

அமுதினி கடலைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். நேற்று இரவு ஆரவுடன் நடந்த உரையாடல் அவளை விட்டு விலகவில்லை. 

அவனது “எப்பவும்” என்ற வார்த்தை – அவன் தன் தனிமையை ஒப்புக்கொண்டது – அது அவளுக்கு ஒரு சிறிய நம்பிக்கையைக் கொடுத்தது.

சுருதி அவளிடம் வந்து, “அமுது, நீ சரியா இல்லன்னு தோணுது… நேத்து நைட், நீ எங்க போனே? நீ ரொம்ப நேரம் வெளியே இருந்தே… எங்க போன?” 

“நான் கடற்கரையில் கொஞ்சம் நேரம் நடந்துட்டு இருந்தேன் சுருதி… சும்மா கொஞ்சம் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்…”

“ஆரவ் சார் பத்தியே தானே?”

அமுதினி ஆமென்று ஆமோதித்து, “சுருதி, அது.. அது… நேற்று அவர் என்கிட்ட பேசினார்… கொஞ்சம் ஓபென் அப் பண்ணினார்… அவர் தன்னோட தனிமையை அக்செப்ட் பண்ணினார்…”

சுருதி பெருமூச்சு விட்டு, “அமுது, இதெல்லாம் கேட்டு நீ அவர் மேல ஏதாவது ஃபீல் பண்றியா?” கேட்கவும்,

“என்ன?” என்று அமுதினி திடுக்கிட்டாள்.

“நீ எனக்கு பொய் சொல்ல வேண்டாம்… நீ அவர் மேல… ஈர்ப்பு இருக்கு… இது எம்பதி மட்டுமல்ல… இதுல வேற ஏதோ இருக்கு அமுது…”

“சுருதி, எனக்குத் தெரியல. நான் அவரை புரிஞ்சிக்க விரும்புறேன். அவருக்கு உதவி பண்ண விரும்புறேன். ஆனா… அது அட்ராக்ஷனா? எனக்குத் தெரியல டி” அமுதினி குழப்பமாக சொன்னாள்.

“கேர்ஃபுல் அமுது, அவர் உன் ப்ரொஃபசர்… மேலும், அவர் உணர்வுகள் ரீதியா ஃபேஸ் பண்ண முடியாத நிலையில் இருக்கிறார்… அவர்கிட்ட அன்பை எதிர்பார்க்க முடியாது… அதனால, நீ ரொம்பவே ஹர்ட் ஆகிடுவ… நீ ஆரவ் சார் கிட்ட இருந்து விலகி இருப்பது தான் உனக்கு நல்லது…” தோழியின் மீதிருந்த அக்கறையில் சொன்னாள் சுருதி.

“எனக்குத் தெரியும் சுருதி…. நான் கவனமா இருக்கேன்…” என்று மட்டும் சொன்னாள் அமுதினி.

ஆனால், அவள் மனமோ, குட்டை போல குழம்பி இருந்தது. 

‘நான் அவர் மேல் அட்ராக்ட் ஆகிட்டேனா? அது பாஸிபள்-ஆ? அவர் என்னை கொடூரமா ட்ரீட் பண்ணி முட்டாள்-னு சொல்றார், என்னை அவர் விஷயத்துல தலையிட வேண்டாம்னு அவ்வளவு சொல்றார்… ஆனா, அவரை பார்க்கும்போது, என் மனசு ஏன் வித்தியாசமா ரியாக்ட் பண்ணுது… ஏன் இதெல்லாம் நடக்குது?’ என்று எண்ணி மனக்கலக்கத்தில் இருந்தாள் அமுதினி.

******

அவர்களின் பயணம் ஆரம்பமானது. மாணவர்கள் எல்லாம் சோர்வாக இருந்தார்கள்.

நேற்றைய தீவிரமான அமர்வுகள் அவர்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்திருந்தன. பலர் உறங்கியிருக்க, சிலர் அமைதியாக பாடல்களை கேட்டார்கள்.

ஆரவ் முன்னால், தனியாக உட்கார்ந்திருக்க, காதில் ஹெட்ஃபோன்ஸ் போட்டிருந்தான். அவனது கண்கள் மூடியிருந்தாலும் அவன் தூங்கவில்லை. அவன் மனம் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தன.

நேற்று இரவு அமுதினியுடன் நடந்த உரையாடல் தான் அவனை தொந்தரவு செய்தது. 

அவன் அவளிடத்தில் தன்னையும் அறியாமல், “எப்பவும்” என்று சொல்லிவிட்டான். 

அவன் தன் வலியை அவளிடம் காண்பித்து விட்டான். அது அவனுக்கு சங்கடமான உணர்வை தந்தது.

‘நான் ஏன் அவளிடம் அப்படி சொன்னேன்? நான் ஏன் அவசரப்பட்டு வார்த்தையை விட்டேன்… அது டேன்ஜரஸ்… அவள் என்னை மேலும் ஆராய்ச்சி பண்ண முயற்சிப்பாள். நான் அவளை என் விஷயத்துல தலையிடாம விலக்கி வைக்கணும்…’ என்று பல நாறு முறையாக எண்ணிக் கொண்டான்.

ஆனால், அதே சமயம், அவனது மற்றொரு மனமே… அமுதினியின் அரவணைப்பிற்கு ஏங்கியது. அவளது பாசம், அவளது அக்கறை, அவளது நேர்மை – அவை அவனுக்கு… ஆறுதலாக இருந்தன. 

ஆரவ் அதனை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், உண்மை அதுதான்.

பேருந்து லேசாக குலுங்கவும், ஆரவ் லேசாக கண்களைத் திறந்தான். அவன் எதேச்சையாக பின்னால் திரும்பி பார்த்தான்.

அமுதினி ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய வதனத்தில் பலத்த சிந்தனை பரவியிருக்க, தன் குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

ஆரவ் அவளை ஒரு நிமிடம் பார்த்தான். 

மனமோ, ‘அவள் என்ன எழுதுறா? அவளோட நாட்ஸ்? அவளோட அப்சர்வேஷன்ஸ்? நான் அவளோட நோட்ஸ்-ல இருக்கேனா?’

அவன் உடனே தன்னைத்தானே திட்டி, அவளிடமிருந்த பார்வையைத் திருப்பிக்கொண்டான். 

‘எனக்கு என்ன ஆகுது? நான் ஏன் அவளைப் பற்றி யோசிக்கிறேன்? இது தேவையில்லாத விஷயம்… மொதல்ல நான் அவளை என் மனசிலிருந்து ரிமூவ் பண்ணனும்… அப்பதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்… கூல்… கூல்…’ என்று உறுதியாக சொல்லிக் கொண்டான்…

******

சரியாக 12 மணிக்கு, மதிய உணவு இடைவேளைக்காக பேருந்து ஒரு சாலையோர ஓட்டலில் நின்றது.

மாணவர்கள் கீழே இறங்கி, உள்ளே சென்றார்கள். அமுதினியும் சுருதியும் ஒரு மேசையில் அமர்ந்து உணவை ஆர்டர் செய்தார்கள்.

ஆரவ் ஒரு மூலையில் உள்ள மேஜையில் தனியாக அமர்ந்து, எதுவும் சாப்பிடாமல் காபி மட்டும் ஆர்டர் செய்துவிட்டு, அவனுடைய கைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான்.

சரண்யா மேடம் அவனிடம் வந்து, “ஆரவ், நீ சாப்பிடலையா?” என்று கேட்க,

“எனக்கு பசிக்கல மேம்…”

“நீ ரெண்டு நாளா சரியா சாப்பிடல… உன் ஹெல்த்தை நீ பாத்துக்கணும் ஆரவ்…”

“நான் பார்த்துக்குறேன் மேம்… நீங்க கவலைப்பட வேண்டாம்…” 

சரண்யா அவனை கூர்ந்து பார்த்துவிட்டு, “ஆரவ், இந்த ட்ரிப் உன்னை அஃபெக்ட் பண்ணுச்சா? நீ இப்ப கொஞ்சம் ஒதுங்கி இருக்குற மாதிரி தெரியுது…”

ஆரவ் தன் கைப்பேசியை தள்ளிவைத்து, “மேம், நான் ஓகேதான்… இந்த ட்ரிப் ரொம்ப நல்லாவே போச்சு… ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் நல்லா லேர்ன் பண்ணிக்கிட்டாங்க…” வரவழைத்த புன்னகையுடன் சொன்னான்.

“ஆனா, நீ… அஞ்சலி உன்கிட்ட ஆர்ட் தெரபி பத்தி கேட்டப்போ, நீ கொஞ்சம் டிஃபென்சிவ்-ஆ இருந்த…”

ஆரவின் முகம் கடினமானது. 

“மேம், எல்லாரும் தெரபிக்கு தயாரா இருக்குறது இல்ல… அதை நாம ரெஸ்பெக்ட் பண்ணணும்…”

சரண்யாவோ, “ஐ அண்டர்ஸ்டாண்ட் ஆரவ்… ஆனா, ஒன்று மட்டும் ஞாபகம் வச்சிக்க – ரெதபிஸ்ட்-க்கும் மனம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும், அதுக்கு சப்போட்டும் தேவைப்படும்… நீ எப்பவும் ஸ்ட்ராங்-ஆ இருக்க வேண்டியதில்ல… பீ ஃபீல் ப்ரீ…” என்று அறிவுறுத்திச் சென்றார்.

ஆரவ் எதுவும் பதில் சொல்லவில்லை, சரண்யாவும் சென்று விட்டார்.

ஆரவ் பேருந்திற்கு சென்று ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். போக்குவரத்து, மக்கள், வாழ்க்கை நகர்கிறது. ஆனால், அவன் மட்டும் சிக்கிக்கொண்டான். 

இன்றும் கடந்த காலத்திலிருந்து வெளியே வர முடியாதபடி சிக்கிக்கொண்டான்.

******

பேருந்து மதியம் 3 மணிக்கு சென்னையை அடைந்து, கல்லூரி வாசலில் நின்றது. மாணவர்கள் நிம்மதியாகக் கீழே இறங்கினர். அந்த பயணம் சிறப்பாக முடிந்தது.

ஆரவ் கடைசியாக இறங்கி, மாணவர்களைப் பார்த்தான். 

“நீங்க எல்லாரும் இரண்டு நாள்ல ரிப்போர்ட் சம்பிட் பண்ணணும்… ஃபீல்ட் ட்ரிப் அப்சர்வேஷன்ஸ், லேர்னிங்ஸ், பர்சனல் ரெஃப்லக்ஷன்ஸ் – எல்லாம் ஆட் பண்ணுங்க – மினிமம் அஞ்சு பக்கம் வரணும்… இது உங்க ஃபைனல் இயர் மார்க்கில் கவுண்ட் ஆகும்… கிளியரா?”

“யஸ் சார்” மாணவர்கள் கோரஸாக சொன்னார்கள்.

“சரி.‌. இப்ப நீங்க எல்லாரும் வீட்டுக்கு போகலாம்…” என்று சொல்லிச் சென்றான் ஆரவ்.

மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அமுதினியும் மெதுவாக நடந்து, அப்படியே திரும்பிப் பார்த்தாள். ஆரவ் தன் காரை நோக்கி தனியாக நடந்துகொண்டிருந்தான்.

சுருதி அவளைப் பார்த்து, “அமுது, வா… நாம போகலாம்…” என்றாள்.

“ம்ம் போலாம்…” மனமின்றி சொன்னாள்.

அவர்கள் இருவரும் ஆட்டோவில் ஏறி, சுருதி அவள் வீட்டிற்கும், அமுதினி அவளது சிறு வீட்டிற்கும் போனார்கள்.

******

மறுநாள் காலை, அமுதினி தனது அறையில் அமர்ந்து, களப்பயண அறிக்கையை எழுதிக் கொண்டிருந்தாள். அவள் தனது குறிப்பேட்டைத் திறந்து, அவள் எழுதியிருந்த குறிப்புகளைப் பார்த்தாள்.

அவள் எழுத ஆரம்பித்தாள்:

**”களப்பயண அறிக்கை – சாந்தி மறுவாழ்வு மையம், மகாபலிபுரம்**

**அவதானிப்புகள் மற்றும் கற்றல்கள்**

இந்தக் ஃபீல்ட் ட்ரிப் எனக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமா இருந்துச்சு… அதிர்ச்சியில் இருந்து தப்பியவர்களின் மீள்தன்மையை நான் நேரில் பார்த்தேன்… குரூப் தெரபி செஷனில் கிளையண்ட்ஸ் தங்கள் வலியைப் பகிர்ந்து கொண்டாலும், அதில் அவர்களின் வலிமை அதிகமாகத் தெரிஞ்சது. பாதிப்பு என்பது பலவீனம் அல்ல, அது தைரியம் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

ஆர்ட் தெரபி செஷன் மிகவும் பவர்ஃபுல்… கிளையண்ட்ஸ் வார்த்தைகளால் எக்ஸ்பிரஸ் பண்ண முடியாத எமோஷன்ஸ்-ஐ வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் மூலமா வெளியே கொண்டு வந்தாங்க… சிவப்பு மற்றும் கருப்பு – ஆத்திரம் மற்றும் இருள். நீலம் – சோகம் மற்றும் அமைதிக்கான ஏக்கம். ஒவ்வொரு ஓவியமும் ஒரு கதையைச் சொன்னது…

அப்பறம் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் – குணமடைதல் என்பது ஒரு நேர்கோட்டு செயல்முறை இல்ல… அது ரொம்பவும் குழப்பமானது, வேதனையானது, நேர்கோடு இல்லாம, ஏற்ற இறக்கமா தான் இருக்கும், சில நாட்கள் முன்னேற்றமும், சில நாட்கள் பின்னடைவுகளும் மாறி மாறி தான் இருக்கும்… ஆனால், முக்கியமான விஷயம் என்னன்னா – அதை நாம தொடர்ந்து முயற்சி செய்யணும்… மனம் தளர்ந்து போய் பாதியில விட்டுவிட கூடாது…

**தனிப்பட்ட பிரதிபலிப்புகள்**

இந்த ட்ரிப் எனக்கு தனிப்பட்ட முறையில் சேலன்ஜிங் தான்… நான் என் சொந்த ட்ராமா-வை, என் பெற்றோர்களின் இழப்பை பத்தி சிந்திக்க வேண்டியிருந்தது. கிளையண்ட்ஸ்-ன் வலி என்னோட வலியை அப்படியே பிரதிபலிச்சது.. ஆனால், அதே சமயம், அவர்களது ஹீலிங் ஜர்னி என்னை இன்ஸ்பைர் பண்ணியது… அவர்கள் தங்களது வலியை எதிர்கொண்டு, கடந்து வந்துட்டாலும் மொத்தமா மறைக்கவில்லை.

நான் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டேன் – தெரபிஸ்ட்-ஆக, நான் எனக்கான பவுண்டரிஸை மெயின்டெய்ன் பண்ணணும். நான் எல்லாரையும் காப்பாற்ற முடியாது. சிலர் குணமடையத் தயாராக இல்லை எனும் பட்சத்துல, அதை நாம மதிக்க வேண்டும்.

ஆனால் அதே சமயம், நான் என் நம்பிக்கையை விட்டுக்கூடாது… குணப்படுத்துவது எல்லாருக்கும் சாத்தியமான விஷயம் தான்… அதுக்கு மொதல்ல அவங்க மனசு அனுமதிக்கணும்…”

அமுதினி அவள் எழுதிய கடைசி வாக்கியத்தை மீண்டும் படித்தாள். 

‘குணப்படுத்துவது எல்லாருக்கும் சாத்தியமான விஷயம் தான்… அதுக்கு மொதல்ல அவங்க மனசு அனுமதிக்கணும்…’

அவள் ஆரவ்வைப் பற்றி யோசித்தாள். அவன் குணமடைய மறுக்கிறான். அவன் தன் வலியை தனக்குள் புதைக்கிறான். எவ்வளவு நேரம் அவனால் அதைச் செய்ய முடியும்?

அவள் தன் ஆய்வை முடித்து, அச்சிட கொடுத்து, வாங்கி வந்தாள். இதனை நாளைக்கு ஆரவிடம் சமர்பித்து வரவேண்டும்.

*******

மறுநாள் காலை, அமுதினி கல்லூரிக்கு சென்றாள். 

அவள் ஆரவின் கேபினுக்குப் போய், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் பதற்றமாக இருந்தாள்.

அவள் கேபினுக்கு முன் நிற்க, கதவுகள் மூடியிருக்கவும், அவள் மெதுவாக தட்டினாள்.

“கம் இன்…” உள்ளே ஆரவின் குரல்.

அமுதினி உள்ளே நுழைய, ஆரவ் தன் மேசையில் அமர்ந்து, மடிக்கணினியில் ஏதோ அச்சிட்டுக் கொண்டிருந்தான். அவன் அவளைப் கண்டதும், அவன் முகம் உணர்ச்சியற்றதாக மாறியது.

“என்ன?” அவன் சொன்னான். 

“சார், என் ஃபீல்ட் ட்ரிப் ரிப்போர்ட்” அமுதினி தன் அறிக்கையை அவனிடம் நீட்டினாள்.

ஆரவ் அதை வாங்கி, அவளைப் பார்க்காமலேயே மேசையில் வைத்தான்.

“சரி… நான் பார்த்து மார்க்ஸ் போட்டுப்பேன்… நீ இப்ப போகலாம்…”

அமுதினி நகரவில்லை. “சார், ஒரு நிமிஷம்…”

“என்ன?” ஆரவ் எரிச்சலுடன் பார்த்தான்.

“சார், இந்த ட்ரிப்… எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு… நான் நிறைய கத்துக்கிட்டேன்… நான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்ல விரும்பினேன்…”

ஆரவ் ஒரு நிமிடம் அவளைப் பார்த்துவிட்டு, “இட்ஸ் மை ஜாப்… தாங்க்ஸ் வேண்டாம்… நீ போகலாம்…” என்று அவளை அனுப்புவதில் தான் குறியாக இருந்தான்.

அமுதினி தயங்கி, “சார், நீங்க… நீங்க ஓகேவா இருக்கீங்களா?”

ஆரவின் கண்கள் கூர்மையானது.

“நான் நல்லா தான் இருக்கேன்… நீ ஏன் இந்த கேள்வி கேட்கிற?”

“நீங்க… கொஞ்சம் டையர்டா இருக்க மாதிரி தெரியுது சார்…”

“என்னோட ஹெல்த்தை பத்தி நீ கவலைப்பட வேண்டாம்… நான் ரொம்ப நல்லா இருக்கேன்… இப்போ நீ இங்கிருந்து போ… எனக்கு வொர்க் இருக்கு…”

அமுதினி தலையசைத்து விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள். 

ஆனால், கதவருகே நின்று, திரும்பாமலேயே, “சார், நீங்க எப்போதாவது எதையாவது ஷேர் பண்ண விரும்பினா… நான் கேட்க எப்பவும் ரெடி தான்…” என்று சட்டென கூறி, அவனது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள். 

அந்த அறையின் கதவுகள் மூடியது.

ஆரவ் அப்படியே அமர்ந்திருக்க, பெருமூச்சுடன் அமுதினியின் அறிக்கையை எடுத்து, படிக்க ஆரம்பித்தான்.

அவரது வார்த்தைகள் சிந்தனைமிக்கவை, நுண்ணறிவு மிக்கவையாக அழகாய் இருந்தன. அதிர்ச்சியில் இருந்து தப்பியவர்களின் மீள்தன்மையை அவர் அழகாக சொல்லி இருந்தாள். அவர்களின் பாதிப்பு மற்றும் தைரியம் பற்றி நிறைய எழுதியிருந்தாள்.

பின்னர், அவள் எழுதியிருந்த தனிப்பட்ட சிந்தனைகள் பகுதியைப் படித்தான். அமுதினி தன் பெற்றோரின் இழப்பைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாள். அவள் தன் சொந்த ட்ராமாவை எவ்வாறு சமாளித்தாள் என்பது பற்றி கொஞ்சம் எழுதியிருந்தாள்.

ஆரவுக்கு அதை படித்ததும் அதிர்ச்சியாய் இருந்தது. 

‘அவளும் இழப்பை அனுபவித்திருக்கா… அவளும் வலியை ஃபேஸ் பண்ணியிருக்கா… ஆனால், அவள் என்னை போல நம்பிக்கையை இழக்காமல், ஹீல் ஆகி வெளியே வந்திருக்கா…’

அவன் அந்த அறிக்கையை மூடி வைக்க, மனம் கனத்துப் போயிருந்தது.

அமுதினி… அவள் அவனை விட திடமானவள். அவள் தன் வலியை எதிர்கொண்டு போராடி வெளியே வந்திருந்தாள். ஆனால், அவனால் எதையுமே செய்ய முடியவில்லை.

அவன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். கல்லூரியின் வளாகத்தில் மாணவர்கள் எல்லாம் சிரித்து பேசி, விளையாடி, கேலி கிண்டல் செய்து என்றெல்லாம் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை அழகாக நகர்ந்தது. 

ஆனால், ஆரவ் கிருஷ்ணா… கடந்த காலத்திலிருந்து வெளியே வர முடியாமல், அங்கேயே தேங்கி விட்டான்.

ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது – அமுதினி அவன் மனதை விட்டு, இனி நீங்கப் போவதில்லை. அவள் ஏற்கனவே அவனை மொத்தமாக ஊடுருவிவிட்டாள். அவள் அவனுடைய பாதுகாப்பு வழிமுறைகளை எல்லாம் உடைத்துவிட்டாள்.

இதனை அவன் உணர்ந்த நொடியில், திடுக்கிட்டு போனான். அவனுக்கு தன்னை நினைத்தே பயமாக இருந்தது. அதேசமயம், ஏதோ ஒரு விதத்தில் ஆறுதலளிப்பதாகவும் இருந்தது.

அவன் தன் தலையை குலுக்கி, ‘இல்ல… நான் இதை அனுமதிக்க மாட்டேன்… இது எனக்கும் நல்லதில்ல… அவளுக்குமே நல்லது இல்ல… அவளிடம் பேசக்கூடாது… நான் அவகிட்ட இருந்து விலகியே இருக்கணும்… நான் என் வாழ்க்கையை எப்பவும் போல தனியாவே வாழணும்…’ என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால், ஆரவின் மனமோ, இவையெல்லாம் சாத்தியமில்லாமல் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தது. 

அமுதினி ஏற்கனவே அவனது வாழ்க்கையில் ஒரு முத்திரையைப் பதித்துவிட்டாள். அது சிறியதாக இருந்தாலும் அழியாததாக இருந்தது.

*********

Click on a star to rate it!

Rating 3.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்