அத்தியாயம் 14
“இப்படி சின்ன குழந்தைங்க மாதிரி சண்டை போடுறதை விட்டுட்டு, என்ன விஷயம்னு எனக்கு யாராவது சொல்றீங்களா? ரொம்ப நேரமா புரியாத பாஷையில படம் பார்க்கிற மாதிரியே இருக்கு, அதுவும் சப்டைட்டில் இல்லாம!” என்ற அத்வைத்தை, இருவரும் ஒரே சமயத்தில் முறைத்தனர்.
“உங்க கூட இத்தனை நாள் சுத்தினான்ல, நீங்களே கேளுங்க, அந்த மோதிரத்தை யாரு எடுத்தாங்கன்னு.” என்று இரா கூற, ‘நீயாவது சொல்லேன்!’ என்பது போல ரக்ஷனைக் கண்டான் அத்வைத்.
“இதெல்லாம் ஒத்துக்க முடியாது! உங்க ஆளை என் கண்டிஷனுக்கு சம்மதிக்க சொல்லுங்க.” என்றான் அவன்.
“அப்படி என்னதான் உன் கண்டிஷன்? அதையாவது சொல்லு.” என்று அத்வைத் வினவ, “என்ன சொல்லிடவா?” என்று இராவை நோக்கி வினவினான் ரக்ஷன்.
அவள் முறைக்க, அது அத்வைத்தின் ஆர்வத்தை பெருக்கியது.
“என்னன்னு சொல்லு.” என்று அத்வைத் ஊக்க, “மேடம் அந்த வில்லனை அழிக்க ரெஸ்ட்ரிக்ட்டட் பிளட் மேஜிக்கை முயற்சி செஞ்சு பார்த்தாங்க. இது நரபலிக்கு ஒத்தானது. அனுபசாலிகளே ரொம்ப கவனமா பண்ண வேண்டிய மேஜிக்கை, மேடம் முதல் முறையிலேயே தனியா முயற்சி செஞ்சாங்க. அவ்ளோ தைரியம்! கொஞ்சம் பிசகினா என்ன வேணும்னாலும் நடக்க வாய்ப்பிருக்கு.” என்று அதுவரை கிண்டலாக பேசிய ரக்ஷன் தீவிரமான குரலில், “நான் மட்டும் அன்னைக்கு வந்து உன்னை தடுக்கலைன்னா என்னவாகி இருக்கும்?” என்ற உஷ்ண பெருமூச்சுடன்.
ரக்ஷனின் கூற்றைக் கவனித்த அத்வைத்திற்கு ஏதோ புரிவது போலிருக்க, “அன்னைக்கு உன் கைல வெட்டுக்காயம் இருந்தது இதனாலதானா?” என்று சரியாக யூகித்தபடி இராவிடம் வினவினான்.
இருவரின் குற்றம்சாட்டும் பார்வையை எதிர்கொள்ள முடியாத பாவையவளோ, “என்னை வேற என்ன செய்ய சொல்றீங்க? எனக்கு வேற எந்த வழியும் தெரியல! என்கிட்ட மந்திர சக்திகள் இருக்கிறது உண்மை. ஆனா, அதை எப்படி யூஸ் பண்ணனும்னு எனக்கு தெரியல.” என்று சலிப்புடன் கூறினாள்.
“நீ தனியா இல்லன்னு முதல்ல மனசுல பதிய வை இரா. உன் பேரண்ட்ஸ் இல்லன்னா என்ன, நான் இல்லையா? என்கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணாம அந்த முடிவுக்கு வந்தது சரின்னு தோணுதா உனக்கு?” என்று ரக்ஷன் பொறுமையாக வினவ, இராவிற்கு அவளின் தவறு புரிந்தாலும், அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல், “உனக்குத்தான் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லன்னு பிரிஞ்சு போனேல… அப்புறம் எதுக்கு பிளட் மேஜிக்கை எல்லாம் நம்புற?” என்று பேச்சை மாற்றினாள்.
“இப்பவும் நான் முழுசா நம்பலதான். அதுக்காக உன் உயிரை பணயம் வைக்க விரும்பல.” என்ற ரக்ஷன், “இப்பவும் ஆஃபர் வேலிட்டாதான் இருக்கு. யார் எடுத்தான்னு தெரியணும்னா இது மாதிரி கிறுக்குத்தனமான வேலைகளை எல்லாம் ஓரம் கட்டி வைக்கணும். அப்புறம் நம்ம அரைவேக்காடு ஃபேமிலி சரியா புரிஞ்சுக்காம சொன்ன விஷயத்தை வச்சு சாகப் போறேன்னு கிளம்பாம, நார்மலா வாழ ஆரம்பிக்கணும். இதுக்கு ஓகேன்னா சொல்லு, அந்த கல்ப்ரிட் யாருன்னு சொல்றேன்.” என்று தோளைக் குலுக்கினான்.
அத்தனை நேரம் அவர்களின் உரையாடலில் பங்கு கொள்ளாமல் இருந்த அத்வைத் முதல் ஆளாக, “எனக்கு ஓகே.” என்று கூற, இராவோ எதுவும் சொல்லாமல் அத்வைத்தைக் கண்டாள்.
அவனோ புருவத்தை ஏற்றி இறக்க, சலிப்புடன் ரக்ஷனின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டாள்.
“இதை மீற மாட்டன்னு நம்புறேன்.” என்ற ரக்ஷன், “நீங்க ரெண்டு பேரும் வெளிய போனதுக்கு அப்புறம், உன் தோஸ்த் அந்த குள்ளநரி வானதிதான் திருட்டு முழி முழிச்சுட்டு, கையில ஏதோ மறைச்சபடி போனா. அவதான் உன் மோதிரத்தை எடுத்திருக்கணும்.” என்றான்.
“வானதியா?” என்று அதிர்ந்த இராவோ ரக்ஷனிடம் திரும்பி, “அவகிட்ட தப்பா ஏதோ தெரியுதுன்னா, நிறுத்தி விசாரிச்சுருக்க வேண்டியதுதான?” என்று வினவ, “விசாரணையா? அவளை மட்டும் பக்கத்துல பார்த்திருந்தேன், அடி வெளுத்திருப்பேன்! ஓவரா போயிட்டு இருக்கா. ஒருநாள் இருக்கு அவளுக்கு.” என்று பல்லைக் கடித்தான் அவன்.
“இரா, டைம் வேஸ்ட் பண்ணாம, அவகிட்டயே கேட்போம்.” என்று அத்வைத் கூற, மூவரும் மீண்டும் ‘கொக்கோ விஸ்பர்ஸ்’ஸிற்குள் நுழைந்தனர்.
அங்கு வானதி இருந்தால்தானே!
அத்வைத்தும் இராவும் வெளியே சென்ற சில நொடிகளில், பின்பக்க கதவு வழியாக அரக்கப்பறக்க ஓடியிருந்தாள் அவள்.
வானதியை காணவில்லை என்றதும் இரா சிசிடிவி காட்சியைப் பார்க்க, அதில் அவள் பின்பக்க கதவு வழியாக சென்றிருப்பது தெரிந்ததும், “எனக்கு அவளோட வீடு தெரியும். வாங்க போலாம்.” என்றாள்.
*****
வானதியின் வீட்டிலோ, பயமும் பதற்றமுமாக அந்த வீட்டையே சல்லடை போட்டுத் தேடாத குறையாக அலசிக் கொண்டிருந்தாள் வானதி.
“அடியேய், இவ்ளோ சீக்கிரம் வந்ததும் இல்லாம, அப்படி என்னத்தை இப்படி தேடிட்டு இருக்க? நான் அப்போலயிருந்து பார்க்கிறேன், உன் முழியே சரியில்லையே!” என்று தமயந்தி வினவ, “ப்ச், கொஞ்ச நேரம் சும்மா இரு. ஆமா, நான் இல்லாதப்போ, நம்ம வீட்டுக்கு யாராவது வந்தாங்களா?” என்று கேட்டாள் வானதி.
“நானே நீ வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடிதான் வந்தேன். நம்மை பெத்து போட்டதுதான், இந்த நேரத்துக்கே குடிச்சுட்டு வந்து, நடுவீட்டுல படுத்திருந்தது.” என்றாள் தமயந்தி.
“எங்கதான் போச்சோ?” என்று வானதி தேடிக் கொண்டிருக்க, “எதை தேடுறன்னு சொன்னா, நானும் தேடுவேன்ல.” என்று தமயந்தி கூற, அதற்கு அவள் பதில் கூறுவதற்கு முன், “எங்க கிட்ட இருந்து திருடுன மோதிரம்னு சொல்லுங்க மிஸ். வாந்தி.” என்ற குரல் வாசலில் கேட்டது.
அதில் சகோதரிகள் இருவரும் அதிர்ந்து வாசலில் நின்றிருந்தவர்களை நோக்கினர்.
அங்கு நின்றிருந்த அத்வைத்தையும் இராவையும் பார்த்த வானதிக்கு பயத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்க, தமயந்தியோ தங்கையிடம், “இவங்க எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க?” என்று பயத்துடனே வினவினாள்.
நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, “நான் எதுவும் திருடல. என்மேல எதுக்கு அபாண்டமா பழி போடுறீங்க?” என்று வானதி கூற, “அபாண்டமா பழி போடல. ஆதாரத்தோடதான் வந்திருக்கோம். இங்கேயே மோதிரத்தை குடுத்துடுறீங்களா இல்ல ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய் விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சாதான் உண்மையை சொல்லுவீங்களா?” என்றான் அத்வைத்.
வானதியின் மனதிலோ பல்வேறு கேள்விகள் ஓடிக் கொண்டிருக்க, “இது சரிப்பட்டு வராது. நான் என் மாமாக்கு கால் பண்ணி சொல்றேன். அவங்களும் கம்பெனி சார்பா கம்ப்லைண்ட் குடுக்கட்டும். நாமளும் நம்ம சார்பா கம்ப்லைண்ட் குடுக்கலாம்.” என்ற இரா அவளின் அலைபேசியை எடுக்க, எங்கு குடும்ப வாழ்வாதாரமே ஆட்டம் கண்டு விடுமோ என்ற பயத்தில், “மோதிரத்தை எடுத்திருந்தா குடுத்து தொலையேன்டி.” என்று தங்கையை கடிந்து கொண்டாள் தமயந்தி.
வானதியோ உள்ளே சென்று விட்ட குரலில், “மோதிரத்தைக் காணோம்.” என்று கூற, “என்ன புதுசா கதை சொல்றீங்களா? நல்ல விதமா கேட்டா எல்லாம் பதில் வராது போல. வாங்க ஸ்டேஷனுக்குப் போகலாம்.” என்று அத்வைத் கட்டளையிடும் தொனியில் கூற, “ஹையோ, உண்மையாதான் சொல்றேன்.” என்று பொங்கி வரும் அழுகையுடன் கூறினாள் வானதி.
அங்கிருந்த அனைவரும் அவளை சந்தேகத்துடன் பார்த்தனர், தமயந்தி உட்பட!
அதைக் கண்டு தன்னைத்தானே நொந்தவளாக, “இராக்கு அடிபட்டு நீங்க ரெண்டு பேரும் கடையிலயிருந்து கிளம்புனதும், நான் மோதிரத்தை எடுத்தது உண்மைதான். மோதிரத்தை கையிலேயே வச்சுருக்க முடியாதுன்னு நினைச்சு, வீட்டுக்கு வந்து என்னோட பெட்டிக்குள்ள அதை வச்சுட்டு, திரும்பவும் கடைக்கு வந்தேன். அங்க நீங்க மோதிரத்தை தீவிரமா தேடுறதையும், சிசிடிவில செக் பண்றதையும் பார்த்ததும் உள்ளுக்குள்ள படபடப்பாகிடுச்சு. இதுக்கு மேல மோதிரம் என்கிட்ட இருக்கிறது பாதுக்கப்பானது இல்லன்னு தோணுனதால, இதோ இப்போ திரும்ப வீட்டுக்கு வந்து அதைத் தேடிட்டு இருக்கேன். ஆனா, அந்த மோதிரம் நான் வச்ச இடத்துல இல்ல.” என்று உண்மை பாதி பொய் மீதி என கலந்து கட்டிக் கூறினாள் வானதி.
அவளை அப்போதும் நம்பாத பார்வை பார்த்த அத்வைத், “மோதிரம் விஷயம் வேற யாருக்கும் தெரியுமா?” என்று வினவ, சட்டென்று திடுக்கிட்ட வானதி, பின்னர் அனைவரின் பார்வையும் அவளிடம் இருப்பதை உணர்ந்து அவளின் பதற்றத்தை மறைத்துக் கொண்டாள்.
நொடிப்பொழுது என்றாலும், அந்த பதற்றத்தைக் கண்டு கொண்ட அத்வைத்தோ, “முழு உண்மையையும் சொல்லிட்டா வெறும் திருட்டுக்கான தண்டனையோட முடிஞ்சுடும். இல்லன்னா, நியூஸ், டிவின்னு எல்லா இடத்துலயும் உங்க குடும்பத்தை இழுத்து நாறடிச்சுடுவேன்.” என்று மிரட்ட,
“சார் சார், பிளீஸ்… நானே அவகிட்ட கேட்கிறேன். நீங்க அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க.” என்ற தமயந்தி, “வாயில என்னத்த வச்சிருக்க? சொல்லித் தொலையேன்டி.” என்று தங்கையிடம் சீறினாள்.
இப்போது தேவாவின் பெயரை இழுப்பதா என்று வானதிக்கோ பெரும் குழப்பம். தேவாவைக் கூறினால், அவர்கள் செய்யவிருந்த பூஜை பற்றிய விஷயமும் தெரிய வந்து விடும். அது தெரிய வந்தால், நிச்சயமாக தன்னையும் தேவாவையும் சும்மா விட மாட்டார்கள் என்று தெளிவாக புரிந்தது வானதிக்கு.
அந்த யோசனையில் அவள் இருக்க, குடி போதையில் திண்ணையில் படுத்திருந்த அவர்களின் தந்தையோ, மகளுக்கு வில்லனாக மாறி, அவளைத் தேடி தேவா வந்து போனதை உளறி இருந்தார்.
‘இந்த கெழம் இப்போ பேசலன்னு யாரு அழுதா? என் உசுரை வாங்கவே எனக்கு அப்பனா இடத்தை அடைச்சுருக்கு!’ என்று மனதிற்குள் தந்தையை வசைபாடிய வானதி அத்வைத்தின் கேள்வி சுமந்த பார்வையை சந்தித்தாள்.
அப்போதும் வானதி மௌனமாக இருக்க, அத்வைத் பார்வையை தமயந்தியின் புறம் திருப்பினான்.
அவனுக்குக் கேள்வி கேட்கக் கூட அவகாசம் தராமல், “தேவா, வானதியோட காதலன்.” என்று உண்மையைக் கூறியிருந்தாள் தமயந்தி.
“சோ மிஸ். வானதி, நீங்களும் உங்க காதலனும் சேர்ந்து போட்ட திட்டம் இது. மோதிரம் உங்க கிட்ட இல்லன்னா, உங்க காதலன் கிட்டதான இருக்கணும். இப்போ அந்த தேவா எங்க இருக்காரு?” என்றான் அத்வைத்.
அதே சமயம் இராவோ ஏதோ சிந்தனையில் இருந்தவள், “தேவான்னா… சின்னசாமி ஐயாவோட மகனா?” என்று தமயந்தியிடம் வினவ, “ஆமா, அவனேதான்.” என்று பதில் கொடுத்தாள் தமயந்தி.
பதில் கிடைத்த மறு நொடியே வானதியின் கழுத்தைப் பிடித்த இரா, “அந்த மோதிரத்தை வச்சு என்ன திட்டம் போட்டீங்கன்னு ஒழுங்கா சொல்லிடு.” என்று மிரட்டினாள்.
இராவின் இத்தகைய செயலை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த முகத்திலிருந்தே தெரிந்தது.
“இரா என்ன பண்ற?” என்று அத்வைத் மென்குரலில் வினவ, “அவளை விடுங்க.” என்று கத்தினாள் தமயந்தி.
ஒரு முழு நிமிடம் வானதியின் கழுத்தை இறுக்கிப் பற்றியிருந்த இரா, “சொல்றியா இல்லையா?” என்று மிரட்ட, வலியுடன் போராடிக் கொண்டிருந்த வானதியோ வாய் திறந்து பேசக் கூட முடியாத நிலையில், தலையை மட்டும் ஆட்டினாள்.
அதன்பிறகே கரத்தை விலக்கி இருந்தாள் இரா.
இராவின் நடவடிக்கையைக் கண்ட அத்வைத்திற்கு, வானதி பெரிதாக ஏதோ திட்டம் தீட்டி இருக்கிறாள் என்பது விளங்கியது. இப்போது அவனும் கூர்ப்பார்வையுடன் வானதியை அளவிட்டான்.
கழுத்தை நெறித்ததில் உண்டான வலியில் வானதி திணறிய போதும் கூட அவர்கள் விடவில்லை.
வேறு வழியின்றி நடந்ததைக் கூற ஆரம்பித்தாள் வானதி. தேவா ஒருவனை சந்தித்து பேசியது தொடங்கி தேவாவும் வானதியும் போட்ட திட்டம் வரை அனைத்தையும் கூறினாள்.
அதைக் கேட்ட அத்வைத்திற்கே அதிர்ச்சிதான்!
அவனுக்கு இன்னும் மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை இல்லைதான். ஆனால், அதற்காக இத்தகைய திட்டத்தை தீட்டி அதை செயல்படுத்தி இருந்ததை எண்ணியே அவன் அதிர்ந்தான்.
“காசுக்காக மத்தவங்களை கஷ்டப்படுத்தனும்னு நினைக்கிறது என்ன மனநிலையோ! அவனாவது காசுக்காக செஞ்சான். உனக்கு என்ன அப்படி என்மேல கோபம்? இத்தனைக்கும், நான் உனக்கு எதிரா எதையும் செய்யலையே. ஒதுங்கிதான இருக்கேன். அப்படியும் கூட உனக்கு என்மேல பொறாமையா?” என்று இரா கட்டுப்படுத்த முடியாமல் கேட்டு விட்டாள்.
அத்தனை நேரம் அமைதியாக அழுது கொண்டிருந்த வானதி, இராவின் இந்த கேள்வியில், “ஆமா, பொறாமைதான்! என்ன பெரிய கஷ்டம் உனக்கு? உன் அப்பாவும் அம்மாவும் ஒதுக்கி வச்சாலும் கூட மூணு வேளையும் நல்லா சாப்பிட்டு சுகமாதான இருக்க. பத்தாததுக்கு பரம்பரை சொத்து, இந்த ஊர்ல உன் குடும்பத்துக்கு செல்வாக்குன்னு எல்லாமும் இருக்கு. நீ ஒரு மந்திரவாதின்னு தெரிஞ்சும் கூட, இந்த ஊர் உன்னை ஒதுக்கி வைக்கலையே. அதுக்குக் காரணம் உங்க கிட்ட இருக்க சொத்து. அது மட்டுமா, பார்க்கவும் அழகா இருக்க. இதோ, இந்த வெளியூர்க்காரன், நீ யாருன்னு தெரிஞ்சும் கூட உன் பின்னாடி சுத்திட்டு இருக்கான். அதுக்கு எப்படியும் உன் சக்தியை யூஸ் பண்ணியிருப்ப. இப்படி என்கிட்ட இல்லாதது மொத்தமா உன்கிட்ட இருக்கே! அந்த பொறாமைதான்!” என்று பொங்கினாள்.
“என்னடி பேசிட்டு இருக்க?” என்று தமயந்திதான் தங்கையை அடக்க வேண்டியதாகிற்று.
வானதியை அற்பப்பார்வை பார்த்த இராவோ, அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
பின்னர், அவளிடம் என்னவென்று கூறுவாள்? மந்திரசக்திக்காக அவளின் உயிரையே பணயம் வைக்கப் போகிறாள் என்றா?
இராவைக் கவனித்தாலும், வந்த காரியத்தைக் கருத்தில் கொண்ட அத்வைத்தோ, “இப்போ அந்த தேவா எங்க இருக்கான்?” என்று வானதியிடம் வினவ, “எனக்குத் தெரியாது.” என்றாள்.
தமயந்தியிடம் திரும்பிய அத்வைத்தோ, “கால் பண்ணி கேட்க சொல்லுங்க. இன்னும் பத்து நிமிஷத்துல, அவன் இருக்க இடம் எனக்கு தெரிஞ்சாகணும். இல்ல, குடும்பத்தோட ஸ்டேஷன்ல பேட்டி குடுக்க தயாரா இருங்க.” என்றவன், வெளியேறி இராவிடம் வந்தான்.
“ஸ்டார்லைட்…” என்று அவன் விளிக்க, “அத்து, அவ மோதிரத்தை மட்டும் எடுக்கல. உங்களோட கர்சீஃபையும் எடுத்திருக்கா. அதாவது, உங்களையும் தாந்த்ரீக ரீதியா தொல்லை செய்ய நினைச்சுருக்கா. இது சரியில்ல. இப்படியே விட்டா, இந்த ஊரையே பாழாக்கிடுவாங்க. இதை ஊர் பெரியவங்க கிட்ட சொல்லணும்.” என்று பேசிக் கொண்டே சென்றவளை இடைவெட்டியவன், “என்னை இப்போ என்ன சொல்லி கூப்பிட்ட?” என்றான் அவன்.
“ப்ச், நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்…” என்று இரா முகம் சுழிக்க, “எனக்கு இதுவும் முக்கியம்.” என்றவன், அவளின் கோபம் அதிகரிப்பதை உணர்ந்து, “கூல் ஸ்டார்லைட். அதான், திட்டம் போட்டுக் குடுத்த கேங் லீடரை பிடிச்சாச்சே. அடுத்து அந்த இன்னொரு பிளாக்ஷீப்பையும் பிடிச்சுடுவோம். நீ முதல்ல ரிலாக்ஸா இரு. பாரு, முகமெல்லாம் எப்படி வியர்த்து போய், சிவந்திருக்குன்னு.” என்றவன், அவளிடமிருந்து கைக்குட்டையை வாங்கி துடைத்தபடி,
“இப்படி டென்ஷனாகுறதால மட்டும், தானா அவன் நம்ம முன்னாடி வந்து நிக்கப் போறானா?” என்றவன், திடீரென்று துடைப்பதை நிறுத்தி விட்டு, அவளின் முகம் பார்த்து தீவிரமான குரலில், “உனக்குத்தான் மேஜிக் பவர் இருக்கே. அது மூலமா கூட்டிட்டு வந்துடுவியோ? ஓஹ், அந்த பவர் ஒர்க்காகணும்னா அன்னைக்கு மாதிரி எதுவும் செய்யணுமோ?” என்று கேட்டான் குறும்பாக.
கைக்குட்டையை அவன் முகத்திலேயே தூக்கி எறிந்த இராவோ, “எல்லாமே விளையாட்டுதான்!” என்றாள்.
அப்போதுதான் இருவருமே, சற்று தள்ளி தயக்கத்துடன் நின்றிருந்த சகோதரிகளைக் கண்டனர்.
“நேத்து தூரமா நின்னு பார்க்க முடியலன்னு, இப்போ பக்கத்துல நின்னு பார்க்கிறீங்களா?” என்று அத்வைத் நக்கலாக வினவ, அவர்கள் இருந்த பதற்றத்தில் அந்த இருவருக்கும் அவன் கேட்டது புரியவே இல்லை.
“ப்ச், கொஞ்ச நேரம் சும்மா இருங்க.” என்று இராதான் அவனை அடக்கினாள்.
“சார், தேவா நம்பர் நாட் ரீச்சபிள்னு வருது.” என்று தமயந்தி தயக்கத்துடன் பார்க்க, இப்போது அத்வைத் மற்றும் இராவின் பார்வை வானதியை துளைத்தது.
“உண்மைதான்! நீங்களே கூட செக் பண்ணிக்கோங்க.” என்று இறங்கிய குரலில் வானதி கூற, “அவன் எங்க இருப்பான்னு உனக்கு தெரியுமா?” என்று இரா கேட்டாள்.
அதற்கும் மறுத்து தலையசைத்த வானதியிடம், “நீங்க மீட் பண்ண நினைச்ச இடம் எது?” என்று அத்வைத் வினவ, “நைட்டு நேரம் காட்டுக்குள்ள வர சொன்னான்.” என்றாள் அவள்.
“சரி, நாங்க வர வரை வேற எங்கயும் போகக் கூடாது. உங்களை எங்க ஆளுங்க கண்காணிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்சம் நகர்ந்தா கூட, விளைவு விபரீதமா இருக்கும். ஜாக்கிரதை!” என்ற அத்வைத் இராவுடன் அங்கிருந்து காட்டை நோக்கி கிளம்பினான்.
செல்லும் வழியில், “நாம சீக்கிரமா போகணும். அந்த மோதிரமும், கர்சீஃப்பும் தேவா கிட்ட இருந்தா… அது ரொம்ப ஆபத்து.” என்ற இராவை சமாதானப் படுத்தினான் அத்வைத்.
அப்போது, “ஆமா, எந்த கேப்புல உங்க ஆளுங்களுக்கு தகவல் சொன்னீங்க?” என்று இரா வினவ, “நானே இங்க ஒண்டிக்கட்டையா வந்து மாட்டிக்கிட்டேன். இதுல எங்கயிருந்து ஆளுங்களுக்கு தகவல் சொல்ல? அதெல்லாம் சும்மா ஒரு ஃபிளோல சொன்னது, கண்டுக்காத!” என்ற அத்வைத்தைக் கண்டவள், “வாயைத் திறந்தாலே பொய்தான்!” என்றாள்.
*****
இருவரும் காட்டுப்பகுதியை அடைவதற்குள் மணி நான்கை தொட்டிருந்தது.
எப்போதும் ஆறு மணிக்கு மறையத் தொடங்கும் சூரியனின் கதிர்கள், வினோதமாக அப்போதே மறையத் தொடங்கியிருந்தது.
“ஏதோ சரியில்ல.” என்று இரா முணுமுணுக்க, அப்போது அங்கு வந்த மாடசாமியோ, “இந்த காட்டுக்குள்ள, எங்க தேடியும் அந்த தேவா தென்படல.” என்றபடி அங்கு வந்தார்.
அவருடன் ரக்ஷனும் இருப்பதைக் கண்ட அத்வைத்தோ, “நீ எங்க அடிக்கடி மாயமா மறைஞ்சு போற?” என்று வினவ, “அந்த தேவாவை பிடிக்க வேண்டாமா?” என்றான் அவன்.
“அப்போ, உனக்கு அந்த தேவாதான் வானதியோட கூட்டாளின்னு தெரியுமா?” என்று இரா வினவ, “அஃப்கோர்ஸ், அந்த ரெண்டு பேரையும் நேத்துல இருந்து ஃபாலோ பண்ணிட்டு இருக்க எனக்கு தெரியாதா என்ன?” என்று தோளைக் குலுக்கினான்.
“அடப்பாவி, அவங்க பிளான் என்னன்னு முன்னாடியே தெரிஞ்சா, அதைத் தடுக்குறதை விட்டுட்டு, இப்போ தேடிட்டு இருக்கியா?” என்று இரா வினவ, “ப்ச், திட்டம் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? அதுக்கு ஆதாரம் வேண்டாமா? அந்த தேவா இந்தக் காட்டுக்குள்ள என்னவோ செய்யுறான்னு எல்லோருக்குமே தெரியும். ஆனா, ஏன் எல்லாரும் அமைதியா இருக்காங்க? ஏன்னா, அவன் என்ன செய்யுறாங்கிறதுக்கு ஆதாரம் இல்ல. அதுக்குத்தான் விட்டுப் பிடிக்க நினைச்சேன்.” என்றான் ரக்ஷன்.
“கிழிச்ச! இப்போ அவன் கிட்ட இருக்க பொருள்களால எங்களுக்குத்தான் பாதிப்பு.” என்று இரா கூற, “ஹ்ம்ம், நீ இதையெல்லாம் நம்புறது எனக்கு சுத்தமா பிடிக்கல இரா. இருந்தாலும், உன் மன திருப்திக்கு…” என்றவன், கால்சராய் பையிலிருந்த மோதிரத்தையும், அத்வைத்தின் கைகுட்டையையும் எடுத்துக் கொடுத்தான்.
“இதை நீ வச்சுக்கிட்டுதான், இத்தனை நேரம் எங்களை அந்த ரெண்டு பேரு கிட்ட கோர்த்து விட்டியா?” என்றான் அத்வைத்.
இராவோ, அந்த பொருள்களை சரிபார்த்தவள், “அப்போ தேவா கிட்ட எதுவும் இல்லையா?” என்று வினவ, “அவன் பூஜை செய்யணும். அப்போ அவனைப் பிடிக்கணும். அதுக்காகவே என்னோட மோதிரத்தையும் கர்சீஃபையும் மாத்தி வச்சுட்டேன்.” என்று ரக்ஷன் தோளைக் குலுக்க, “லூஸாடா நீ!” என்று கத்தினாள் இரா.
அவளின் சத்தம் அந்த காடு முழுவதுமே எதிரொலித்தது.
தொடரும்…
ரஷன் எதுவும் ஆகாது தானே.