13 – காற்றிலாடும் காதல்கள்
“என்ன மிரு இப்ப சரியாகிட்டியா?” எனக் கேட்டபடி சோபாவில் அமர்ந்தார் மாலா.
“சரியாகிடுவேன் அத்த. இப்ப தான் கயல் மசாலா டீ போட சொல்லி குடுத்தா நான் போட்டு கொண்டு வரவா?” எனக் கேட்டாள்.
“இல்ல மா. வீட்ல சாப்பாடு ரெடி ஆகிட்டிருக்கு நம்ம எல்லாரும் அங்க போலாம். இப்ப எதுவும் எனக்கு வேணாம். தண்ணி மட்டும் குடு டா.”
“இதோ வரேன் அத்த. தாத்தா உங்களுக்கு?”
“எனக்கும் தண்ணி போதும் டா.”
மிருணாளினி பானையில் இருந்த நீரை மொண்டுக் கொண்டு வந்துக் கொடுத்தாள்.
கயல்விழி தாயின் கையில் இருந்தப் பையைப் பார்த்துவிட்டு, “ம்மா.. என்ன அது?” எனக் கேட்டாள்.
“அப்பாவோட தமிழ் குறிப்பு அகராதி. மிருவுக்கு உபயோகமா இருக்கும்னு கொண்டு வந்தேன். இந்தா மிரு.” என அவளிடம் கொடுத்தார்.
“இப்ப தான் கயல் சொன்னா அத்த, மாமாவோட புக் நெறைய இருக்காம். உங்ககிட்ட நானே அதுலாம் பாக்கலாமான்னு கேக்கலாம்னு இருந்தேன்.” அந்தக் குறிப்புகள் அடங்கிய பெரிய பைண்டிங் கையேட்டைப் புரட்டினாள்.
“கண்டிப்பா டா.. வந்து பாரு. தேவைபடறத எடுத்துக்கோ..”
“ஆனா இவங்கள நீங்க தொடவே விடமாட்டீங்கன்னு கயல் சொன்னா. இப்ப என்கிட்ட” என வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள்.
”நியாயமான கேள்வி தான். இவங்க ரெண்டு பேரும் தமிழ் படிக்கல. தமிழ் மேல ஆசையும், காதலும் இருந்தா தான் அந்த புத்தகத்த எல்லாம் தொடவே முடியும்ன்னு அவர் சொல்லுவாரு. உனக்கு தமிழ் மேல தீராத காதல் இருக்குன்னு மாமா சொன்னாரு. அதான் இத கொண்டு வந்தேன். வீட்ல ஒரு அறை முழுக்க புத்தகம் இருக்கு. வந்து பாரு. எது வேணுமோ எடுத்துக்கோ.”
“ரொம்ப நன்றிங்க அத்த. பழைய பதிப்பு புத்தகம் எல்லாம் கெடைக்கறதே ரொம்ப கஷ்டம். நீங்க சொல்றத பாத்த நான் லைப்ரரி வச்சிக்கற அளவுக்கு புத்தகங்கள் இருக்குன்னு தோணுது.” மாலாவின் அருகில் அமர்ந்துச் சிரிப்புடன் கூறினாள்.
”ஆமா… கீதன் கூட நூலகத்துல வைக்க சிலத கேட்டான் ஆனா நான் இன்னும் பதில் சொல்லல. நீ மொத பாரு அப்பறம் மிச்சம் இருந்தா அவனுக்கு குடுக்கலாம்.” என மாலா கூறவும் கீதன் முறைத்தபடி உள்ளே வந்தான்.
“பாத்தியாடா அண்ணா. உனக்கு மிச்சம் மீதி தான் கெடைக்கும். தமிழ் மேல காதல் இல்லாததால நமக்கு அதுலாம் தொடக்கூட உரிமை இல்லையாம்.” என கயல்விழி சலிப்புடன் கூறினாள்.
“உண்மை அதானே. நிஜமான காதல் இருந்திருந்தா நானே குடுத்திருப்பேன். என்ன கீதன் அன்வர் கடை ரெடி ஆகிடிச்சா?” எனப் பேச்சை மாற்றினார்.
“ம்ம். ஆகிட்டே இருக்கு. நாளைக்கு காலைல 7 மணிக்கு கடை திறப்பு, அன்வர் எல்லாரையும் முன்னயே வர சொன்னான். அப்துல் தாத்தாவும் சொல்ல சொன்னாரு.” எனக் கூறி மிருணாளினியைப் பார்த்தான்.
அவள் அந்த கையேட்டைக் கவனமாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். முதல் நான்கு பக்கங்களைப் பார்த்தபோதே அது பெரும் பொக்கிஷம் என்று அவளுக்குப் புரிந்தது.
“அத்த.. மாமாவோட குறிப்பு நோட்டு எல்லாத்தயும் நான் பாக்கலாமா? இதுல நெறைய வார்த்தைகள் எழுதியிருக்கார். எந்தெந்த நூற்றாண்டு வார்த்தைன்னு எப்படி பிரிச்சி பாத்தாருன்னு தெரிஞ்சிக்கணும்.” எனக் கண்கள் மின்ன அவள் கேட்டவிதம் மாலாவிற்கு மனதில் ஓர் இனம்புரியா உணர்வைக் கொடுத்தது.
அவளை நோகச்செய்ய வேண்டாமென்ற எண்ணத்தில் அவரும் சரியென கூறினார். ஆனால் கீதனுக்கு அதில் விருப்பமில்லை ஆகையால் மறுத்தான்.
“அம்மா.. அப்பா கஷ்டபட்டு படிச்சி கண்டுபிடிச்சி வளத்துகிட்ட ஞானத்தை எல்லாம் அசால்ட்டா தூக்கி கொடுக்கறது சரியில்ல..“
“சும்மா பூட்டி இருக்கறதுக்கு அதபத்தி படிக்கறவங்களுக்கு குடுத்தா தான் உங்கப்பா தேடிக்கண்டுபிடிச்சதுக்கு அர்த்தம் வரும். இத்தன வருஷம் நான் இதப்பத்தி யோசிக்கல இப்ப மிருவ பாத்ததும் தோணிச்சி குடுக்கறேன். இனிமே இது எல்லாருக்கும் பயன்படும்.” சற்றே கண்டிப்பான குரலில் கூறினார்.
அவர் அந்த குரலில் பேசினாலே இனியாரும் அதைப் பற்றி பேசக்கூடாது என்ற அர்த்தம் அதில் பொதிந்துள்ளது. கீதனும் உள்ளுக்குள் முணுமுணுத்தபடிப் பக்கவாட்டு கதவின் வழியாக வெளியே சென்று அங்கிருக்கும் வெளித்திண்ணையில் அமர்ந்தான்.
“தம்பிக்கு விருப்பம் இல்லாம எதுக்கு மாலா இத பண்ணனும்?” வெள்ளைச்சாமி கீதன் முகத்தில் தெரிந்த அதிருப்தியைக் கவனித்துவிட்டுக் கேட்டார்.
“மாமா, இவ்ளோ வருஷம் தமிழ் படிச்சி நேசிக்கறவங்கள நான் பாக்கல. இப்ப மிருணாளினி அதுல முனைவர் பட்டம் வாங்கியிருக்கா. அவகிட்ட இத குடுத்தா இதையே தொகுப்பாவோ, பண்டைய தமிழ் அகராதியாவோ கூட போட்டு எல்லாருக்கும் பயன்படற மாதிரி பண்ணலாம். அவரு ஒவ்வொன்னும் தேடித் தேடி படிச்சி சேர்த்து வச்ச அறிவும், தகவலும், இந்த துறைல இருக்கறவங்களுக்கு இனி பயன்படட்டும். நீங்க உள்ள போய் பணம் எடுத்துட்டு வாங்க நாம போய் பாங்க்ல கட்டிட்டு வந்து இவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போலாம். ராத்திரி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அங்க தான் இருக்கணும்.” எனச் சிரித்த முகமாகக் கூறி முடித்தார்.
“நீ சொன்னா சரிம்மா. இதோ வரேன்.” எனக் கூறி உள்ளே சென்றார்.
கயல்விழி ஆர்வமுடன் தந்தையின் கையெழுத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் ஆர்வம் புரிந்த மிருணாளினி அந்த கையேட்டை அவளிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள்.
அதில் இருந்து வந்த வாசனை அவளுக்கு தந்தையின் கையைப் பிடித்திருக்கும் உணர்வினைக் கொடுத்தது. லேசாக கண்களும் கசியத் தொடங்க அதை மிருணாளினியிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள்.
அவளின் முக மாறுதல்களைக் கவனித்துக் கொண்டிருந்த மிருணாளினி அவளின் பின்னே சென்று விசாரிக்க, “ஒண்ணுமில்ல அண்ணி. எனக்கு இங்க இருந்து இந்த மரங்களை பாக்கப்பிடிக்கும். காலையும் மாலையும் மயிலாடுறத பாக்கறதும் ரொம்ப பிடிக்கும்.” எனப் பேச்சை மாற்றினாள்.
அவளின் முயற்சிப் புரிந்த மிருணாளினியும்,“ஆமா கயல். மேல என் ரூம்ல இருந்து பாத்தா இன்னும் நல்லா இருக்கு. நாலு பக்கமும் தெரியும். போலாமா?” எனக் கேட்டாள்.
“ம்ம்… போலாம்..” எனக் கயலோடு தன் அறைக்குச் சென்றாள்.
“நாங்க வர்ற வரைக்கும் கீதன் இங்க இருக்கட்டும் மிரு. ஊர்ல புதுசு புதுசா நெறைய பேர் சுத்திட்டு இருக்காங்க. காவல் ஆள் எல்லாம் இருக்காங்க தான் ஆனாலும் ஜாக்கிரதையா இருங்க. வரோம்.” என இவர்களிடம் அழைத்து கூறிவிட்டு பெரியவர்கள் வெளியே சென்றனர்.
கீதன் மிருணாளினியை ஆழ்ந்துப் பார்த்தான், அவளும் அவனை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு, “கயல், நான் சும்மா தோப்ப சுத்திட்டு இருக்கேன். அம்மா வந்தா சொல்லு.” எனக் கூறிவிட்டு மரங்களின் இடையே சென்றான்.
“இவன் ஒரு டைப், எப்ப நல்லா பேசுவான் எப்ப மூஞ்ச திருப்புவான்னு அவனுக்கும் தெரியாது எங்களுக்கும் தெரியாது. கொஞ்ச நாளா அப்பாவோட டைரியோட சுத்திட்டு இருந்தான். ஊர்கட்டுப்பாட்ட மீறி அமாவாசை பௌர்ணமி வெளிய போக ட்ரை பண்றான். வெளிய போவான் ஆனா எல்லையை தாண்ட முடியாம, இந்திரன் மாமா வீட்ல சாப்ட்டு தூங்கி எந்திரிச்சி குளிச்சிட்டு கோவில் போய் நல்லவனாட்டம் பட்டை அடிச்சிட்டு வீட்டுக்கு வருவான். சரியான கேடி..”
“என்ன கயல் உன் அண்ணன நீயே இப்படி சொல்ற?” மிருணாளினி சிரிப்புடன் கேட்டாள்.
“வேற என்ன சொல்றது அண்ணி? அவன் அப்படி தானே இருக்கான்.”
“உங்கம்மா எதுவும் சொல்லமாட்டாங்களா?”
“அவன்மேல எங்கம்மாவுக்கு அதீத நம்பிக்கை. கருவுலையே கீதை உபதேசம் கேட்டு வளந்தான்னு சொல்வாங்க. ஆனா அதே கீதை சொன்ன கிருஷ்ணன் ஒரு சூத்திரதாரி. அத எங்கம்மா மறந்துட்டாங்க போல. இவனும் சில நேரம் அப்படி தான் பண்றான்.”
“அமைதியா இருந்தே இவ்ளோ கவனிக்கறியா கயல் நீ?” மிருணாளினி கயல்விழியின் தெளிவைக் கண்டு புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“அமைதியா இருந்தா தானே அண்ணி கவனிக்க முடியும். அழகா இருக்கு உங்க ரூம். புதுசா எடுத்து கட்டினத நான் பாக்க வரவே இல்ல. மொத்த தோப்பும் தெரியுது.” எனச் சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டாள்.
“ஆமா. காலைல மயில் இறங்கி ஆடுறது எல்லாம் இங்க படுத்திருந்தாலே நல்லா தெரியும். இயற்கை மட்டும் தான் பெரிய மருந்தும், போதையும் நம்ம வலிகள்ல இருந்து விடுபடறதுக்கு.” மிருணாளினி ஆழ்ந்தக் குரலில் கூறினாள்.
“உங்க கூட பொறந்தவங்க எப்படி இறந்தாங்க அண்ணி?”
“ஒரு மலை ஏற போய் இருந்தோம். அங்க எதிர்பாராத விதமா வேற ஒருத்தர் கால்தவறி விழுகறப்ப இவ அவங்கள பிடிக்கப்போய்.. நாங்க கீழ வந்து அவள தேடி கண்டுப்பிடிச்சி பாத்தப்பவே உயிர் போயிரிச்சி.” என அன்றைய நாளின் நினைவில் கண்கள் கலங்கி நின்றாள்.
“சாரி அண்ணி அவங்க காப்பாத்த நெனைச்சவங்க?” என பாதியில் நிறுத்தினாள்.
“அவனும் தான். ரெண்டு பேரும் உருண்டு வரப்பவே பாறைல மோதினதுல உயிர் போயிரிச்சி…”
“சில விஷயங்கள் ஏன் நடக்குதுன்னு நமக்கு புரியாது. அதுமாதிரி தான் இதுவும் போல. இன்னொருத்தர காப்பாத்த போய் இவங்க உயிரும் போயிரிச்சி. நாங்க எல்லாம் இருக்கோம் அண்ணி. அத மறந்து வெளிய வாங்க.” என அவளை சமாதானம் செய்தாள்.
மிருணாளினி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,“சரி உன்ன கட்டிக்க போறவரு பத்தி சொல்லு. உனக்கு அவர பிடிச்சிருக்கா?”
கயல்விழி வதனத்தில் வெட்கம் படர்ந்தது, “அடடா! கல்யாணப் பொண்ணுக்கு வெக்கம் வந்துருச்சி. சும்மா சொல்லு.. காலைல நீ ஆல்பம்ல போட போட்டோ காட்டின ஆனா பேரும் சொல்லல, ஊரும் சொல்லவே இல்ல. மாப்ள எந்த ஊரு? என்ன பண்றாரு?” எனக் கேட்டாள்.
“அவர் பேரு யுகேந்தர். இதே ஊரு தான். உங்களுக்கு கூட அவரு அண்ணே முறை வேணும். நீங்களும் அவரும் பங்காளிங்க தான்.” என முகம் கொள்ளாப் புன்னகையோடுக் கூறினாள்.
“அப்படியா? நான் இங்க வந்தே ரொம்ப வருஷம் ஆகுது. இனிமே தெரிஞ்சிக்கறேன். அப்போ நீ எனக்கு அண்ணியா? உன்ன அப்படி தான் கூப்பிடணுமா?” எனச் சந்தேகம் கேட்டாள்.
“ஆமா கண்ணு. உனக்கு அண்ணன தானே கட்டபோவுது. அண்ணின்னு கூப்பிடு. அப்பதான் உறவுமுறை தெரியும். இந்தாங்க நொங்கு. கீதன் தம்பி குடுத்துவுட்டுச்சி.” என இருளாயி வந்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
“இந்த நொங்கு நல்லா ருசியா இருக்கும் அண்ணி சாப்பிடுங்க.” எனக் கூறியபடி அவளுக்கு தோலை நீக்கிக் கொடுத்தாள்.
“இத இப்படி தான் சாப்பிடணுமா? நான் நேத்து இந்த தோலோட தான் சாப்பிட்டேன்.”
“அப்படியும் சாப்பிடலாம் தான். ஆனா அதுல கொஞ்சம் கசப்பு வரும். இப்படி சாப்பிட்டா ஒரு ருசி.” எனக் கூறியபடி மிருணாளினிக்கு உரித்துக் கொடுத்தாள்.
“எனக்கு போதும் கயல். நீ சாப்பிடு.“
“இது அவருக்கும் ரொம்ப பிடிக்கும். அவருக்கும் கொஞ்சம் குடுத்துவிட சொல்லிட்டு வரேன்.” எனக் கூறியபடிக் கீழே சென்றாள்.
“வருங்கால கணவர் மேல எவ்ளோ அன்பு?” மிருணாளினி அவளைக் கேலி செய்தபடி அறையைப் பூட்டிவிட்டு கீழே வந்தாள்.