
காதல் -12
கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது சாயாவுக்கு… அவன் தந்தையிடம் உண்மையை மறைத்து தான் திருமணம் செய்தானா? எந்த தைரியத்தில் அவன் இந்த காரியத்தை செய்தான் .. இப்போது என்னை வேண்டாம் என்று அவரே கூறிவிடுவாரோ.. அப்படி கூறி விட்டால் நிம்மதியாக இந்த வீட்டை விட்டு தன் தாயுடன் வெளியேறி விடலாம்… என்று நினைத்தாலும்… அவர் தன்னை வேண்டாம் என கூறி விடுவாரோ என்று மனம் பதறிக் கொண்டு தான் இருந்தது.
ஏன் இந்த பதட்டம் .. ‘ஆக நான் மறவனுடம் வாழ ஆசைப் படுகிறேன் ‘ இதை நினைக்கும் போதே மனதிற்குள் ஏதோ பிசைய… ‘ அதெல்லாம் இல்ல எனக்கு அந்த எண்ணம் எப்பவுமே வந்தது இல்ல… நான் எங்க , அவர் எங்க… எனக்கு அவருக்கும் ஏணி வச்சா கூட எட்டாத தூரத்தில அவர் இருக்கார்.. ‘ என மனதிற்குள் அவளே குழப்பி கொண்டு வெளியே என்ன நடக்கிறது என்று நிகழ் காலத்திற்கு வந்தாள்.
” இதை ஏன் என்கிட்ட மறைச்ச மறவா ” அத்தனை கடுமையாக இருந்தது அவரது முகம்..
அவரது முகத்தை பார்த்து இரு பெண்களும் பயந்து தான் போனார்கள்… இதில் தேனு அதிக பயத்துடன் இருந்தார். எங்கே தன் மகளை அவர் ஏற்றுக் கொள்ளாமல் வெளியே போக கூறிவிட்டால் என்ன ஆவது. பெரிய இடத்தில் அவசர பட்டு கால் வைத்து விட்டோமோ என பயந்து போனார்.
மறவன் அமைதியாக தன் தந்தையை பார்த்தவன்… ” முன்னாடியே சொல்லி இருப்பேன்… ஆனால் நீங்க இதை காரணமா வச்சு இந்த கல்யாணத்தை நிறுதிட்டா என்ன பண்ணுறது ” என வெளிப்படையாகவே உண்மையை கூறி இருந்தான்.
தன் மகனை அடிபட்ட பார்வை பார்த்தவர்…” இதெல்லாம் எனக்கு ஒரு பெரிய குறையா தெரிஞ்சு இருந்தா உன் அம்மாவை நான் கல்யாணம் பண்ணி இருக்கவே மாட்டேன் டா முட்டாள்” என அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்தியவர்… தன் மகன் தன்னை நம்ப வில்லையே என்று உள்ளம் வெம்பி போனார்.
சாயாலி கலங்கிய கண்களுடன் நடப்பவற்றை வேடிக்கை பார்க்க .. அவளை உணர்ந்து கொண்டவர்.. ” மா சாயா.. இந்த வீட்டுக்கு நீ மருமகள் மட்டும் இல்ல .. எனக்கு இன்னொரு மக மாதிரி தான்.. நீ என்ன நினைக்கிறன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது மா… இதுல உன் தப்பு எதுவும் இல்ல… இன்னொரு விஷயத்தை நீ நல்லா தெரிஞ்சுக்க… என் மகன் கூட வாழ நீ வாய் பேசனும்னு அவசியம் இல்ல.. என் பொண்டாட்டி மாதிரி நல்ல மனசு இருந்தாலே போதும்… நீ கலங்கி நிக்கும் போதே உன் மனசு எனக்கு புரிஞ்சு போச்சு, என் மகன் தான் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சுட்டான் பரவாயில்ல… ” என ஆற்றாமையாக வெளி வந்தது அவரது குரல்…
அடுத்த நொடி கண்ணீரோடு அவரை கை எடுத்து கும்பிட…. தன் மருமகள் தலையில் கை வைத்து ஆறுதல் வழங்கி விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டார்…
தவறியும் தன் மகன் முகத்தை பார்க்கவில்லை.. தேனு மெதுவாக மகள் அருகில் வந்து.. ” நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு மா… நான் வீட்டுக்கு போயிட்டு பொழுது சாயவும் வரேன் ” என இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு, தன் மருமகனிடமும் கூறி விட்டு தன் வீட்டை நோக்கி தெளிந்த மனதுடன் நடையை கட்டினார்.
ஏனோ மூர்த்தி பேசிய பேச்சில் தன் மகள் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அவர் மனதிற்குள் குடியேறியது.
மறவன் தன் தந்தையிடம் தனக்கு திருமணம் தான் என்று கூறினானே ஒழிய அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை பற்றி மருந்துக்கும் வாயை திறக்கவில்லை … இத்தனை காலம் திருமணம் வேண்டாம் என வெறுமையாக பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஆசை படுகிறேன் என கூறும் பொழுது அவருக்கு அத்தனை மகிழ்ச்சி.
தன் மகனை பற்றி நன்றாக தெரியும்… எதையும் ஆழ்ந்து சிந்தித்து நிதானமாக தான் எப்போதும் ஒரு முடிவுக்கு வருவான்.. அதனால் அவனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது அவன் சரியான துணையை தான் நாடி இருப்பான் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதனால் அவர் வருங்கால மருமகளை பற்றி கேட்டும், அப்பொழுது பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறும் மகனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை … எப்படியோ அவனுக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்து விட்ட திருப்தி.
தேனுவும் வீட்டில் இருந்து கிளம்பி விட… புது மண தம்பதியினர் மட்டுமே அந்த நடு கூடத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அனைத்தையும் ஒதுக்கி விட்டு தன் மனைவியை பார்த்தான் மறவன்… புருவ முடிச்சுகளுடன் ஏதோ யோசனையில் நிற்கும் தன் மனைவியை கண்டு பெரும் மூச்சை விட்டவன்… ” எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு சாயா.. மேல முதல் ரூம் என்னோடது… ” என கூற வந்தவன்… ” நம்மளோடது ” என திருத்தினான்..
” மேல போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு.. நான் வேலையை முடிச்சுட்டு வரேன் ” என மேலே கை காட்ட… அவனை வெட்டும் பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் மாடிக்கு சென்று விட்டாள்..
அவள் மறையும் வரை பார்த்தவன்… ” அழுத்தக்காரி ” என உதட்டில் தவழும் புன்னகையுடன் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வண்டியை செலுத்தினான்.
” வாங்க சார் இன்னும் கேஸ் ஃபைல் பண்ணல ” என அந்த காவலர் கூற…
” இல்ல ஃபைல் பண்ண வேணாம் .. சும்மா மிரட்ட தான் இங்க அனுப்பி வச்சேன்.. அடுத்த முறை தகராறு பண்ணா பார்த்துக்கலாம் ” என வழக்குக்கு தேவையான அனைத்தையும் முடித்து கொண்டு அவனை அழைத்து கொண்டு வெளியே வந்தவனை பார்வையால் எரித்து மிரட்டி விட்டே அனுப்பி வைத்தான்…
அதன் பின் எஸ்டேட் சென்று அங்குள்ள சில சின்ன சின்ன வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக வெளியே வந்தவனை .. அங்குள்ள தொழிலாளர்கள் எல்லாம் அவனது திருமண செய்தியை அறிந்து வாழ்த்து கூறுவதற்காக காத்திருக்க… அதனை அறிந்தவன் அமைதியாக அவர்கள் முன்பு வந்து நின்றான்.
அனைவரும் மனம் குளிர தங்களது வாழ்த்தை தெரிவிக்க… அவர்களுக்கு மதிய உணவை வழங்கும்மாறு தான் பிஏ விடம் கூறி விட்டு.. அருகில் உள்ள எஸ்டேட்டிற்கு சென்று அங்கு பார்வையிட்டு, அங்குள்ள அனைத்து வேலைகளையும் முடித்து கொண்டு வீட்டை நோக்கி சென்றவன் மணியை பார்க்க… சரியாக மாலை ஆறை நெருங்கி இருந்தது.
வேலையில் தன் மனைவியை மறந்தவன்… நெற்றியை நீவிக் கொண்டே அவசரமாக வீட்டிற்கு சென்றான்… ” சாப்பிட்டு இருப்பாளா… நான் வேற மறந்துட்டேன்… அழுத்தக்காரி ” … என புலம்பினான்.
ஏனோ அவளை ‘அழுத்தக்காரி ‘ என்று அழைக்கும் போது அவனுக்குள் ஒரு வித பரவசம் கொடுக்க.. அடிக்கடி தன் மனைவியை அந்த வார்த்தைகளால் அச்சரித்தான்.
காரை வேகமாக போர்டிகோவில் பார்க் செய்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தவன் அதிர்ந்து தான் போனான்.
அங்கு மூர்த்தியும் சாயாலியும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். தன் மருமகள் பேசும் சைகை பாஷை புரியாமல் இருந்தாலும் இரண்டு முறை அதை செய்து காட்டி தன் மாமனாருக்கு தான் கூற வருவதை புரிய வைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் கட்டி இருந்த சேலையும்… போட்டிருந்த நகைகளும் அப்படியே இருக்க .. அதிலே தெரிந்தது அவள் இன்னும் அவனது அறைக்குள் செல்லவில்லை என்று…
‘இவளை என்ன தான் செய்யுறது ‘ என மனதிற்குள் கடிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைய… அவனை பார்த்த மூர்த்தியோ ” அடடே… வாங்க வாங்க இதான் புது மாப்பிள்ளை வர நேரமா.. பேஷ்.. ” என அவன் தாமதமான வருகையை குத்தி காட்ட…
” அப்பா எஸ்டேட்ல ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு.. அதை முடிச்சு மணியை பார்க்கும் போது தான் ஈவ்னிங் ஆனது தெரியும்… பார்த்துட்டு தான் வேகமா வரேன் ” என நீண்ட விளக்கம் கொடுத்த மகனை ஆச்சரியமாக பார்த்து வைத்தார்..
பின்னே இவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் வெறும் தலை அசைப்பை மட்டுமே கொடுக்கும் மகன் .. தற்போது இவ்வளவு பெரிய விளக்கத்தை கொடுக்கிறான் என்றால் .. இந்த விளக்கம் தனக்கானது அல்ல… அவனுடைய மனைவிக்காக என்பது நன்றாக புரிந்தது… நமட்டு சிரிப்புடன் மகனை பார்த்தவர்.
“நீ தனியா விட்டுட்டு போயிட்ட.. அதுவரைக்கும் என் மருமகளுக்கு பேச்சு துணைக்கு நான் இருந்தேன்.. இப்போ நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன் , வரேன் மா சாயா” என மூர்த்தி அவனது பதிலை எதிர்பார்க்காமல் அவரது அறைக்கு சென்று விட்டார்.
மீண்டும் இருவர் மட்டும்… ” மதியம் சாப்பிட்டியா ” என அவளை நோக்கி கேட்க ..
‘ ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட ‘ என்பதை போல பார்த்து வைத்தவள்.. ” ஆம் ” என்பதை போல தலை அசைத்தாள்…
“ம்ம் ரூம் போய் ரெஸ்ட் எடுக்கலையா ”
‘ இல்லை ‘ என்பதாக ஆட்டினாள்.
” ஏன் ” என்ற கேள்விக்கு என்ன பதில் கூறுவாள்… அவன் இல்லாமல் அவனது அறைக்குள் சென்று உரிமையாக உறவாட அவளுக்கு துளியும் விருப்பமில்லை …
“அவளது முக பாவனையே அவளது மனதை திறந்து காட்டிவிட …. “இப்போ வந்து ஃப்ரெஷ் ஆகிக்கோ… உன் பேக் எல்லாம் ஆல்ரெடி என் ரூம்ல தான் இருக்கு ” என அவன் மாடி ஏறி செல்ல அவன் பின்னே மவுனமாக தொடர்ந்தாள் சாயாலி…
உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தாலும் வெளியில் சாதரணமாக முகத்தை வைத்து கொண்டு பின்னே சென்றாள்… எல்லாம் சிறிது காலம் தான் .. எவ்வளவு சீக்கிரம் இந்த வீட்டை விட்டு போக முடியுமோ அத்தனை சீக்கிரத்தில் கிளம்பி விட வேண்டும் … என மனதிற்குள் உருபோட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தவளின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தது…
ஒரு கணம் தான்… அவள் கண்களில் காட்டிய வியப்பை மறைத்து கொண்டு தரையை பார்க்க… அந்த ஒரு நொடி வியப்பையும் துல்லியமாக கண்டு கொண்டான் மறவன்..
அங்குள்ள டிரெஸ்ஸிங் டேபிள் முன்னே அமர்ந்து முதலில் அவளை அழுத்தி கொண்டிருக்கும் அத்தனை நகைகளையும் கழட்ட துவங்கினாள். அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்த சென்றான் மறவன்..
சாயாலியின் மனதில் ஆயிரம் எண்ணவோட்டங்கள்… தான் இப்படி மறவன் அறையில் அவனது மனைவியாக இன்று அமர்ந்திருப்போம் என்று அவள் ஒரு நாளும் சிந்தத்து இல்லை… வாழ்க்கை எப்படி எல்லாம் அவளை அழைத்து செல்கிறது.
இதே சிந்தனையில் இருந்தவள் … மறவன் குளித்து வந்ததையோ… தன் பின்னே நின்று அந்த ஆள் உயர கண்ணாடியில் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதையோ அவள் அறியவில்லை..
” என் ஹெல்ப் எதுவும் வேணுமா சாயா ” என குறும்பாக கேட்டாலும்… தான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன சிந்தனையில் இருக்கிறாள் என்பதை அவன் யோசிக்காமல் இல்லை…
அவன் குரலில் திடிக்கிட்ட சாயாலி… தன் பின்னே நின்றவனை கண்கள் அகல பார்த்தவள்… சட்டென்று இருக்கையில் இருந்து எழ…
” இல்ல கழட்ட ரொம்ப கஷ்ட படுற… அதான் என் ஹெல்ப் வேணுமான்னு கேட்டேன் ”
தற்போது அவள் எழுந்ததில் அவள் கைகள் அவளது புடவையில் இருக்க… அதை பார்த்து அவன் கேட்டத்தையும் வைத்து அவனை தீயென முறைக்க…
” ஓ நோ… நான் உன் செய்யின் கழட்ட கஷ்ட பட்டதை பார்த்து சொன்னேன் … வேணாம்னா உன் இஷ்டம்… ” என தோளை குலுக்கி கொண்டு அங்குள்ள இருக்கையில் அமர்ந்தவன் போனை நோண்ட ஆரம்பித்து விட்டான்.
கடுப்பாக அவளது பேக்கை திறந்து ஒரு செட் சுடிதாரை எடுத்து கொண்டு அவனை திரும்பியும் பாராமல் குளியல் அறைக்குள் நுழைய போனவளை தடுத்தது மறவனது குரல்.
” ஏன் நான் கழட்ட கூடாதா … இல்ல அதுக்கான உரிமை எனக்கு இல்லையா ?”
அவ்வளவு தான் அத்தனை வெறி எங்கிருந்து தான் வந்ததோ அவளுக்கு….. பாவம் மறவனுக்கு நேரம் சரியில்லை போல…
சனா💖

