Loading

அத்தியாயம் 11

உணவு வாங்கச் சென்ற நிரஞ்சனா, தனக்கும் தன் தம்பிக்கும் வாங்கிக் கொண்டு வர, இருவருமாக சேர்ந்து சாப்பிட்டனர்.

 

அதே நேரத்தில், வைஷ்ணவி அவளது அன்னை மல்லிகாவையும், அத்தை மங்களத்தையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருந்தாள் .

 

இனியனுக்கு அழைத்து எங்கே என்று விசாரித்து, மூவரையும் அங்கே அழைத்துச் செல்ல, அங்கே சேரில் அமர்ந்து இருந்த இனியன் மற்றும் விநாயகத்தை கண்டதும் முதல் ஆளாக “இனியா..” என்று அழைத்தபடி முன்னால் சென்றார் மங்களம்.

 

தாயின் குரல் மற்றும் தன் அக்காவின் குரல் கேட்டதும் ஒரு சேர திரும்பிப் பார்த்தனர்.

 

“அம்மா.. வாங்க..” என்று அழைத்தவன் அவர்கள் அருகில் செல்ல,

 

“எங்க டா.. பரிதி..” என்று கேட்டுக் கொண்டே அங்கு இருந்த அறைகள் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தார்.

 

பின்னால் வந்த மல்லிகாவும் வைஷ்ணவியும் அவரின் நடவடிக்கையயை பார்த்தப்படி வந்தனர்.

 

“ம்மா.. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க ம்மா.. அண்ணா அந்த ரூம் ல இருக்கான்..” என்று அறுவை சிகிச்சை செய்யும் அறையைக் காட்ட, அவரோ ஒரு முறை பார்த்துவிட்டு, ” என்ன டா.  ஆபரேஷன் தியேட்டர்ரை காட்டுற.. சின்ன காயம்னு தான சொன்ன..” என்றார் படபடப்புடன்.

 

அவனோ நெற்றியை நீவியவாறு, “ம்மா.. அது அண்ணாவுக்கு சின்ன காயம் எல்லாம் இல்லை. பெரிய அடி.. அவனுக்கு ஆக்சிடண்ட் நடந்ததை பார்த்து இங்க கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க.. ” என்று அவன் கூற,

 

“அய்யயோ.. என்ன டா சொல்ற.. இதை ஏன் டா நீ அப்பவே சொல்லல.. இப்போ அவனுக்கு எப்படி டா இருக்கு.. ” என்று படபடப்புடன் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சு வாங்கியது.

 

“ஐயோ.. அம்மா.. ரொம்ப எமோஸனல் ஆகாதீங்க. இதுக்கு தான் நான் சொல்லல. வைஷு… கொஞ்சம் தண்ணிக் கொடு அம்மாக்கு..” என்று அருகில் இருந்த சேரில் அவரை அமர வைத்து, சற்று அவரை இளைப்பார விட்டனர்.

 

சற்று நிதானம் அடைந்தவரோ, “இப்போ எப்படி டா இருக்கு அவனுக்கு.” என்று கேட்க,

 

“அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை ம்மா.. எலும்பு உடைஞ்சி இருக்கு. அதுக்கு ஆபரேஷன் பண்றாங்க. மத்தபடி வேற ஒன்னும் இல்லை. அவன் நம்மள விட்டு அவ்ளோ சீக்கிரம் போக மாட்டான் ம்மா.. அதுவும் உங்கள விட்டு..” என்றான் கலங்கியவாரு.

 

“ம்ம்ம்ம். என் பிள்ளைக்கு எதுவும் ஆகாது. ” என்றார் அவரும் அழுது இருந்த கண்களை துடைத்தவாறு .

 

அவர்கள் அமர்ந்து இருக்க, நியாபகம் வந்தவனாய், ” ம்மா.. சாப்டீங்களா.. ” என்று கேட்டான் அவன்.

 

அவர் சொல்வதற்கு முன்பே மல்லிகா, “இல்லை இனியா.. சாப்பிட சொன்னதுக்குக் கூட பரிதி வந்த பிறகு சாப்புட்டுக்கிறேன்னு சொல்லிட்டாங்க. அடுத்த கொஞ்ச நேரத்துல நீ கால் பண்ணிட்ட. அதுனால அண்ணி சாப்பிடல.. ” என்றார்.

 

” ஏன் ம்மா..? சரி இருங்க . நான் போய் ஏதாவது வாங்கிட்டு வரேன். நீங்க ரெண்டு பெரும் சாப்டீங்களா.. ” என்று மல்லிகா மற்றும் வைஷ்ணவியை பார்த்துக் கேட்டான்.

 

“நான் சாப்பிட்டேன் பா.. வைஷு தான் இன்னும் சாப்பிடல.” என்றார் மல்லிகா.

 

” சரி.. சேர்த்தே வாங்கிட்டு வரேன்.. ” என்று தன் மாமாவை கூட இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு அவன் உணவு வாங்கச் சென்று இருந்தான்.

 

*******

 

அதே நேரத்தில் அங்குவெறிப் பிடித்தவன் போல அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தான் சஞ்சய்.

 

“ச்ச.. இவனுங்ககிட்ட ஒரு வேலைய கொடுத்தால் அதை உருப்படியா கூட பண்ணத் தெரியல. மறுபடியும் அவன் இப்போ பொளச்சி கண்ணு முன்னாடி நடமாட ஆரம்பிச்சிருவான்..” என்று தனக்கு வந்த செய்தி மூலம் பரிதி இன்னும் சாகவில்லை.அவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர் என்று செய்தியை கேள்விப்பட்டதில் இருந்தே வெறிப் பிடித்தவன் போல அலைய ஆரம்பித்து விட்டான்.

 

“மறுபடியும் என்னோட குறியில இருந்து தப்பிச்சிட்ட.. உனக்கு இருக்குடா.. ” என்று கத்தியவன்,

 

“ஆனாலும் என்னால கொஞ்ச நாளைக்கு நீ நடக்க முடியாம இருக்கப் போற.. அதுவே என்னோட பசிக்கு இப்போதைக்கு தீனியா இருக்கட்டும்..” என்றான் சத்தம் போட்டு சிரித்த படி..

 

****************

 

சில மணி நேரத்திற்குப் பிறகு, ஆபரேஷம் அறையை திறந்து கொண்டு வெளி வந்தார் மருத்துவர்.

 

புதிதாக இருப்பவர்களை பார்த்ததும் புருவத்தை சுருக்கியவர், “நீங்க எல்லாம்…” என்றார் யோசனையுடன்.

 

“சார்.. உள்ள இருக்காரே.. அவரோட சொந்தம் நாங்க..” என்று கூறினான் இனியன்.

 

“ஓ.. ஓகே.. ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிருச்சி.. கொஞ்ச நேரத்துல ICU வார்டு க்கு மாத்திருவோம். பேசன்ட்டை டிஸ்டர்ப் பண்ணாம ஒவ்வொருத்தரா போய் பார்த்துட்டு வாங்க.. ” கூறிவிட்டுச் சென்ற மருத்துவர் ஒரு நிமிடம் நின்று, ” இவரை அட்மிட் பண்ண பொண்ணு எங்க.. ” என்று கேட்டார்.

 

“நாங்க வந்ததும் அவங்கள போக சொல்லிட்டோம் சார். ” என்றான் இனியன்.

 

“ஓ.. தட்ஸ் பைன்..” என்றவர் சென்று விட்டார்.

 

மருத்துவர் சென்றதும், “எதுக்குடா அந்த பொண்ண போகச் சொன்ன.. நானும் பார்த்து அந்த புள்ளைக்கு நன்றி சொல்லி இருப்பேன்ல..” என்றார் மங்களம்.

 

“ம்மா.. வேணும்கிற அளவுக்கு நானும் மாமாவும் சொல்லிட்டோம்.. அதுவும் இல்லாம அந்த பொண்ணோட தம்பிக்கு கண் ஆபரேஷன் பண்ண போய்ட்டு இருக்கும் போது தான் அண்ணாவை பார்த்ததும் கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க. அதான் நான் வந்ததும் அவங்கள கிளம்ப சொல்லிட்டேன் ம்மா..” என்றான் இனியன்.

 

“ஓ.. அப்டியா.. ரொம்ப நல்ல பொண்ணு போல தெரியுது. இந்த காலத்துல யாரு இப்படி இருக்கா.. அந்த பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்..” என்று இங்கிருந்தே மனமார நிரஞ்சனவை வாழ்த்தினார் மங்களம்.

 

“ஆமாம் ம்மா..” என்றான் இனியனும்.

 

அதே சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிரஞ்சனாவுக்கு தீடீரென்று விக்கல் எடுக்க,  எழுந்து தன் தம்பியை ஒரு முறை பார்த்தவள் தண்ணீர் குடித்து விட்டு, அவள் மீண்டும் தூங்கச் செல்லும் முன் பரிதியின் நியாபகம் வந்தது.

 

“அவருக்கு இப்போ ஆபரேஷன் முடிஞ்சி இருக்குமா..” என்ற யோசனையில் தன் கையை கழுத்திற்கு கொண்டு செல்ல, கழுத்தில் அப்பொழுது சங்கிலி இல்லை என்பதை உணர்ந்தாள்.

 

“அச்சோ.. நம்ம செயினை அப்படியே அங்கேயே விட்டுட்டு வந்துட்டோமே.. இப்போ இங்க இருந்து உடனே போகவும் முடியாது. என்ன பண்றது…” என்ற சிந்தனையில் இருந்தவள், “எப்படியும் அங்க தான குறைஞ்சது ஒரு வாரத்துக்காவது இருப்பாங்க. விக்ரமுக்கு எல்லாம் நல்ல படியா முடிஞ்ச பிறகு, அந்த சாரையும் பார்த்துட்டு அப்படியே நம்ம செயினை வாங்கிட்டு வந்துரலாம்..” என்று எண்ணியவள், கண்ணை மூடி தூங்கிப் போனாள். 

 

இங்கோ, “அத்தை.. அப்போ என்னை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு… நானும் இந்த காலத்து பொண்ணு தான்..” என்றாள் உதட்டை சுழித்தவாறு.

 

“அடியேய்.. உடனே வந்துருவியே.. வரிஞ்சிக் கட்டிக்கிட்டு.. உன் முன்னாடி சொல்லிறக் கூடாது யாரையும். பொறாமை பிடிச்சவ..” என்று அவளை அங்கேயும் வம்பு இழுத்தான் இனியன்.

 

“அத்தை.. நான் உங்ககிட்ட தான் கேட்டேன். அவன் எதுக்கு வாயை தொறக்குறான். பேசாம போக சொல்லுங்க அவனை அந்தப் பக்கம்..” என்றாள் மங்களத்திடம்.

 

“எங்க அம்மா எப்படியும் உன்ன பத்தி உண்மையைச் சொல்ல மாட்டாங்க. அதான் நான் இருக்கேனே. உன்கூட அவங்க இருந்ததை விட நான் தான் அதிகம் இருந்து இருக்கேன்..எனக்கு தாண்டி தெரியும் உன்னப் பத்தி..” என்று பதிலுக்கு அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவளும் பதிலுக்கு பதில் பேச, அவர்கள் இருப்பது மருத்துவமனை என்பதை மறந்து அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.

 

மங்களம், விநாயகம் மற்றும் மூவரும் இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து நொந்தபடி, மூவரும் போய் அமர்ந்து கொண்டனர்.

 

அறுவை சிகிச்சை அறைக்கு அருகிலேயே ICU அறை இருப்பதால், அந்த அறையை திறந்து கொண்டு, வெளியே வந்த செவிலியர், இவர்களின் சண்டையைப் பார்த்துவிட்டு, ” ஹலோ…ஹலோ.. எக்ஸ்கியூஸ்மீ .. இது ஹாஸ்பிடல். உங்க வீடு இல்லை. அங்க போய் சண்டை போட்டுக்கோங்க. எனக்கு இப்போ ஆபரேஷன் பண்ண பேசன்ட் ஓட டீடெயில்ஸ் வேணும். அப்புறம் அவரை இங்க வார்டுக்கு மாத்தியாச்சு. ” என்றாள் இவர்களைப் பார்த்து. 

 

இனியனும், செவிலியருக்கு பரிதியின் விவரங்களை கொடுக்க, மங்களம் முதலில் உள்ளே பரிதியை பார்க்கச் சென்றார்.

 

தலையில் கட்டு, முகத்தில் இடது பக்க கன்னத்திலும் காயம் , கையிலும் காலிலும் பெரிய கட்டு என்று உடம்பு பாதி தெரிந்து மீதி வெள்ளைத் துணிகளை கொண்டு சுத்தி வைக்கப் பட்டு இருந்தது.

 

அவனை இப்படி பார்த்ததும் அவருக்கு கண்ணில் இருந்த கண்ணீர் வெளிப்பட, அவனது அருகில் சென்று, அவனது கையை பிடித்துக் கொண்டார்.

 

சத்தம் வராமல் அழுது முடித்தவர், அவனது நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைக்க, தன் தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்தானோ என்னவோ அவனது கண்ணில் இருந்தும் ஒரு துளி கண்ணீர் வெளியேறியது.

 

அவரைத் தொடர்ந்து விநாயகம், மல்லிகா, வைஷ்ணவி மற்றும் இறுதியாக இனியன் சென்று பார்த்து விட்டு வந்தான்.

 

“அம்மா.. நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க..” என்றான்.

 

“ம்ம். ஆமா டா.. நான் கொஞ்சம் நேரம் படுக்கிறேன்.” என்றவர் அருகில் இருந்த காத்திருப்பு அறையில் சென்றுப் படுத்தார்.

 

ஏனோ இந்த மருத்துவமனையில் வசதி குறைவாக இருந்ததால், அவர்களுக்கு என்று தனியாக அறை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

 

இதனைப் பார்த்த இனியனோ, “அந்த பொண்ணு அவசரதுக்கு இங்க கொண்டு வந்து சேர்த்துருச்சு. நம்மளுக்கு தோதா நம்ம ஏரியா பக்கமா வேற ஹாஸ்பிடல்ல அட்மிஷன் போட்டுற வேண்டியது தான். “என்று நினைத்தவன், தன் விருப்பத்தை தன் மாமனிடமும் கூறினான். 

 

அவரும், ” நானும் அப்படித்தான் இனியா நெனச்சேன். இது ரொம்ப தூரமா இருக்கு நம்ம வீட்டுல இருந்து..” என்றார் விநாயகம்.

 

“ம்ம்ம். அதுக்கான புரோசிஜர் என்னனு பாக்குறேன் மாமா..” என்றவன் நேராக அதனைப் பற்றி விசாரிக்கச் சென்றான்.

 

மறுநாள் காலையில் விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்தது.

 

விக்ரமை பரிசோதித்த கண் மருத்துவர், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து விடலாம் என்று கூறி இருந்தார்.

 

அதுபோலவே, அவனை அதற்கு தயார் செய்து சிகிச்சையும் ஆரம்பம் ஆனது.

 

சில மணி நேரங்களில் முடிந்து விட, அவனுக்கு கண்ணில் கட்டுப் போட்டு அழைத்து வந்தனர்.

 

பின் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் அவனை தங்க வைத்து அவனுக்கு ஓய்வு எடுக்கும்படி கூறி விட்டு, வேளாவேளைக்கு என்ன என்ன மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதையும் கூறி விட்டுச் சென்றனர்.

 

அதே நேரத்தில் பரிதி மயக்கத்தில் இருந்து லேசாக கண்களை திறந்துப் பார்த்தான்.

 

தலை மிகவும் பாரமாக இருக்க, கை கால்களை எல்லாம் அசைக்க முடியாத நிலைமையை உணர்ந்தான்.

 

லேசாக அசைத்தால் வலி உயிர் போனது.

 

பற்களை கடித்துக் கொண்டு அடக்கிக் கொண்டான்.

 

அவன் அன்று இறுதியாக, லாரி ஒன்று தன் காரின் மேல் மோதியது நினைவில் வந்தது.

 

அந்த அளவுக்கு இடித்து தான் உயிர் பிழைத்தது அதிசயம் தான்..

 

எண்ண அலைகளை சிந்தனையில் ஓட விட்டவனின் நினைவில் வந்து நின்றாள் நிரஞ்சனா.

 

அன்று அவளின் முகத்தை தானே தான் இறுதியாகப் பார்த்தது..

 

அவளின் மடியில் தன் தலையை சாய்த்துக் கொண்டு எனக்காக அன்று கண்ணீர் விட்டப்படி இருந்தாள்.

 

யார் அவள்… என்ற அவளின் சிந்தனையில் உலன்றவனை செவிலியரின் “சார்..” என்ற அழைப்பு நிஜத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.

 

மீண்டும் மெதுவாக கண்களை திறந்து செவிலியரைப் பார்க்க, ” சார்.. உங்களுக்கு ஆபரேஷன் பண்ணி இருக்கு. அங்க அங்க ஸ்ட்ரிட்சஸ் போட்டு இருக்கு. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க… ” என்று கூற ,

 

அவனும் ” ம்ம்ம்ம். ” என்று மட்டும் கூறினான்.

 

“உங்கள பாக்க, உங்க ரிலேடிவ்ஸ் வெளிய வெயிட் பண்றாங்க. ஒவ்வொரு ஆளா அனுப்பி வைக்கிறேன் சார். ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி பேசாதீங்க. எமோஷன் ஆகாதீங்க..” என்று சில பல அறிவுரைகளை கூறிவிட்டுச் சென்றாள்.

 

வெளியே சென்று ஐவரிடமும் பரிதியின் மயக்கம் தெளிந்த விவரத்தைக் கூறிவிட்டு, ” ரொம்ப நேரம் பேசாம வேகமா சீக்கிரம் பார்த்துட்டு வந்துடுங்க. ” என்றார்.

 

அதுபோலவே, முதலில் இனியன் மற்றும் மங்களம் இருவரும் சென்றனர்.

 

” பரிதி.. ” என்று உணர்ச்சிப் பெருக்குடன் மங்களம் அழைக்க,

 

” ம்மா…” என்றான் அவனுக்கு கலங்கிய கண்களுடன்.

 

“என்னப்பா.. எங்க எல்லாரையும் இப்படி படுத்தி எடுத்துட்டியே.. கையும் ஓடல.. காலும் ஓடல.. நீதானேடா நம்ம குடும்பத்துக்கு எல்லாம். உனக்கு ஒன்னு ஆச்சுன்னா, நாங்க எல்லாம் எப்படி.. என்ன ஆச்சு டா.. எதுனால இப்படி..” என்று அவர் வருத்தத்துடன் கேட்க,

 

” லாரி ஒன்னு வந்து இடிச்சிருச்சும்மா..” என்றான்.

 

“என்னது லாரியா.. நீ கவனமாதானே போய் இருப்ப. ” கேட்டார் மங்களம்.

 

” அன்னைக்கு மழை வேற ரொம்ப அதிகம் மா. சைடுல வந்ததை நான் கவனிக்கல. கவனிக்காம நான் திருப்பிட்டேன். அதான் ” என்றான்.

 

” கவனமா ஓட்டுறது இல்லையா ப்பா.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன பண்ண முடியும் சொல்லு.. நானும் உன் தம்பியும் நீ இல்லாம எப்படிப்பா.. இனிமே தனியா எல்லாம் நீங்க ஓட்ட வேண்டாம். டிரைவர் வச்சிக்கலாம் ” என்றார் அவர் ஆதங்கத்துடன்.

 

” சரிம்மா. அதான் எனக்கு ஒன்னும் ஆகலையே. கவலைப் படாதீங்க. அவ்ளோ சீக்கிரம் உங்கள விட்டு போக மாட்டேன். இனியா அம்மாவை பார்த்துக்கோ .. ” என்றான் பரிதி..

 

“சரிண்ணா.. நாங்க வெளிய தான் இருப்போம். எதுனாலும் வேணும்னா கேளு..” என்றான் இனியன்.

 

  1. “சார்.. பேசினது போதும். கிளம்புங்க.” என்று செவிலியர் குரல் கொடுக்க,

இருவரும் கிளம்பி வெளியேச் சென்றனர்.

 

அடுத்து விநாயகம் வைஷ்ணவி மற்றும் மல்லிகா மூவரும் பரிதியை பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு வந்தனர்.

 

 

நித்தமும் வருவாள்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்