
அத்தியாயம் 11
ஒருவாரம் எப்படி சென்றது என்று கணவன் மனைவி இருவருக்குமே தெரியவில்லை. அத்தனை வேகமாகவும், அதே சமயம் உதயகீதனுக்கு சற்று எளிதாகவும் சென்றிருந்தது.
அன்று ராகவர்ஷினி சந்திக்க வேண்டும் என்று சொல்லியதன் பின்னர், அவளிடமிருந்து எவ்வித அழைப்பும் வராமல் இருக்க, தானே அவளை சந்தித்து மீண்டும் அவளின் வலியை அதிகரிக்க வேண்டாம் என்று எண்ணியவனாக அமைதியாக இருந்து விட்டான் உதயகீதன்.
கண்ணில் பார்க்காதது கருத்திலும் பதியாது என்று எண்ணினானோ என்னவோ!
அந்த வாரத்தில் ஒருநாள், சுதாகர் அவரின் இல்லம் திரும்புவதாக சொல்லியிருக்க, தந்தையிடம் சண்டையிட்டு அவரை அங்கேயே தங்க வைத்திருந்தாள் ஜீவநந்தினி.
நண்பன் பேச்சுக்கு கூட கட்டுப்படாதவர், மகள் பேச்சை மீற முடியாமல், அதே சமயம், ‘கட்டிக் கொடுத்த பெண்ணின் வீட்டில் தங்குவதா?’ என்ற தயக்கமும் அகலாமல் அவஸ்தையில் இருக்க, “அங்கிள், அங்க தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க? எப்படியும் ஒர்க்கிங் ஹவர்ஸ்ல, உங்க பிரெண்டு கூட தான் ஆஃபிஸ்ல இருக்கப் போறீங்க. அதே மாதிரி, வீட்டுலயும் உங்க ஃபிரெண்டுக்கு துணையா இருங்களேன்.” என்றான் உதயகீதன்.
“அது… சரிதான் தம்பி. ஆனா, நந்துக்கு நாளைக்கு பொறந்த வீடுன்னு ஒன்னு இருக்கணும்ல…” என்று தயக்கத்துடன் கூற, “ஏன் அங்கிள், என்னை பார்த்தா, உங்க பொண்ணோட சண்டை போட்டு வீட்டை விட்டு துரத்துற மாதிரி இருக்கா? இல்லன்னா, உங்க பொண்ணை பார்த்தா சண்டை போட்டு வீட்டை விட்டு போற மாதிரி இருக்கா?” என்று கிடைத்த வாய்ப்பில் மனைவியையும் கேலி செய்ய, அதற்கு மேல் மறுப்பு சொல்லி விட முடியுமா சுதாகரால். அவரைத் தான் முறைத்துக் கொண்டிருந்தாளே அவரின் அருமை மகள்!
இருப்பினும், அவரின் தயக்கம் புரிந்தவனாக, “உங்க பொண்ணுக்கு பொறந்த வீடு வேணும், நீங்களும் தனியா இருக்கக் கூடாது… அங்கிள், அந்த வீடு அப்படியே இருக்கட்டும். உங்களுக்கு எப்போலாம் தோணுதோ, உங்க பொண்ணை கூட்டிட்டு அங்க போய் சீராட்டிட்டு இங்க வந்துடுங்க. ஆளுங்களை வச்சு வீட்டை மெயின்டெயின் பண்ணிக்கலாம்.” என்று உதயகீதன் தீர்வு சொல்ல, ‘இந்த முசோக்கு கூட ஃபேமிலியை ஹேண்டில் பண்ண தெரியுதே. ஒரேடியா ரோபோவா மாறல போல.’ என்று வஞ்சப்புகழ்ச்சி அணியில் மனதிற்குள் வார்த்தையாடிக் கொண்டிருந்தாள் ஜீவநந்தினி.
அதில் சற்று மனம் தெளிந்த சுதாகரும், “தம்பி… இன்னும் மறுவீடு சடங்கு செய்யல. உங்க ஃப்ரீ டைம் பார்த்து சொன்னா, அதை செஞ்சுடலாம்.” என்று ‘என்ன சொல்வானோ?’ என்ற பதற்றத்துடன் கேட்க, கேசவமூர்த்தியும் மகனின் பதிலுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார்.
‘அட, ஸ்விட்ச் இங்க இருக்கா?’ என்பதாக மாமனாரை பார்த்தவள், தனக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல சாப்பிட அமர்ந்து விட்டாள்.
இல்லை என்றால், அவளின் முசோ அவளை விட்டுவிட்டு கிளம்பி விடுவானே!
அவளை பி.ஏவாக்கியதிலிருந்து, இருவரும் ஒன்றாக தான் அலுவலகத்திற்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று யோசித்த உதயகீதனோ, தன் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் சுதாகரை ஏமாற்ற விரும்பாமல், “வீகெண்ட் ஃப்ரீ தான் அங்கிள்.” என்று கூற, நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியை பார்வையால் பரிமாறிக் கொள்ள, அவனின் மனைவியோ அவனையே ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளருகே வந்தவன் என்னவென்று பார்வையால் வினவ, “முசோக்கு ஏதாவது ஆகிடுச்சோ?” என்று மனதிற்குள் நினைத்ததை அப்படியே கூறிவிட, அதற்கான முறைப்பை பெற்று கொண்டு, “ஹப்பாடா, பேக் டூ ஃபார்ம். இப்போ தான் நிம்மதியா இருக்கு.” என்று ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாததை போல’ என்பதற்கு சரியான சாட்சியாக தெரிந்தாள் அவள்.
இதோ, இன்று மறுவீட்டிற்காக தான் கிளம்பி கொண்டிருந்தனர் இருவரும்.
முன்தினமே சுதாகர் அவர் வீட்டிற்கு சென்றிருக்க, இதோ காலையில் எழுந்ததிலிருந்தே, ‘இது வேண்டும்’, ‘அது வேண்டும்’, ‘இந்த அளவில் இருக்க வேண்டும்’ என்று அந்த மனிதரை படுத்தியெடுத்துக் கொண்டிருந்தாள் ஜீவநந்தினி.
ஒரு கட்டத்திற்கு மேல், அதை பொறுக்க முடியாமல், “அவரே பாவம், தனியாளா அங்க கஷ்டப்படுறாரு. நீயும் ஏன் அவரை படுத்திட்டு இருக்க?” என்று உதயகீதன் கேட்க, “பின்ன, இப்போ கவனிக்கலன்னா திரும்ப எப்போ கவனிப்பாராம்? ஹ்ம்ம், கல்யாணம் தான் இன்ஸ்டன்ட்டா நடந்து முடிஞ்சுடுச்சு. எனக்கே எனக்குன்னு ஒரு ஃபங்ஷனும் நடக்கல.” என்றவளின் குரலில் எத்தனை முயன்றும் அந்த ஏக்கங்களை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
அவள் கூறியதில் உதயகீதனின் நினைவுகளும் அதை நோக்கி படையெடுக்க துவங்க, வெகுவாக முயன்று அதிலிருந்த வெளி வந்தவன், “ஸோ, அதுக்காக இப்போ உங்க அப்பாவை படுத்தலாமா?” என்று சாதாரணமாக கேட்டிருந்தான்.
ஆம், இப்போதெல்லாம் அவளிடம் இயல்பாக பேச முடிந்தது அவனால். அவ்வபோது கேலியும், கிண்டலும், நக்கலும், நய்யாண்டியும் அதில் அடக்கம் தான்!
“ஆமா, இப்போ போச்சுன்னா, அடுத்து எப்போவோ? ஹ்ம்ம், இதுக்கு தான்… என்னை ஹாஸ்டல்ல சேர்க்க சொன்னேன். ஒரு வாரம் விட்டு வந்தா, என்னை பிரிஞ்சு ஏக்கத்துல செமயான கவனிப்பு கிடைக்கும்னு நினைச்சேன். எங்க? உன்னை பிரியவே வேண்டாம்னு பொத்தி பொத்தி வச்சுக்கிட்டாரு எங்க அப்பா.” என்றவளின் குரலில் வார்த்தைகளுக்கு முரணாக கர்வமே வெளிப்பட்டது.
அந்த பேச்சினோடே இருவரும் கீழே இறங்கி வர, அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை கண்ணார கண்டவாறு அங்கு நின்றிருந்தார் கேசவமூர்த்தி.
முதலில், இளையவர்கள் இருவரை மட்டும் சென்று வருமாறு கூறியவரை, “அந்த முசோ கிட்ட தனியா சிக்க விடுறீங்க பார்த்தீங்களா?” என்று பேசி பேசியே கரைத்து அவரின் முடிவை மாற்ற செய்திருந்தாள் ஜீவநந்தினி.
ஜீவநந்தினியின் (பிறந்த) வீட்டில்… அவளின் ஆசைப்படியே, மணமக்கள் இருவரையும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் அவளின் தந்தை சுதாகர்.
தூரத்து சொந்தங்கள் சிலர் அங்கு வந்திருந்தனர், திருமணத்திற்கு அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன்!
எதையோ சொல்லி சமாளித்தவர், மறுவீட்டிற்கான உதவிகளை செய்யுமாறு அவர்களிடம் கூற, அவர்களும் அதை மகிழ்ச்சியுடனே செய்தனர்.
அனைத்து உறவுகளும் நம்மை துன்புறுத்தி மகிழ்பவர்கள் இல்லையே!
ஜீவநந்தினி இருக்கும் இடத்தில் கலகலப்புக்கா பஞ்சம் ஏற்படும்? இதில், தந்தையின் கவனிப்பில் பூரித்து போனவளுக்கு தலையில் கிரீடம் இல்லாதது ஒன்று தான் குறையாக சுற்றிக் கொண்டிருந்தாள். இதில் எங்கு கணவனை கண்டு கொள்ள நேரமிருக்கப் போகிறது?
ஆனால், அவன் கவனம் முழுவதும் அவளிடம் தான்!
பின்னே, புதிய சூழல், புது மனிதர்கள் மத்தியில் தனியாக மாட்டிக் கொண்டவனை போலிருந்தவனுக்கு அவள் மட்டும் தான் பொழுதுபோக்காகி போனாள்.
அவள் அவனிடம் வேலைக்கு சேர்ந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டன. தந்தையின் நண்பரின் மகள் என்பது வரை மட்டும் தான் தெரியும் அவளைப் பற்றி. அதுவும் அவள் வேலைக்கு சேர்ந்த பின்னர் தான். இல்லை என்றால், அப்போதே நிராகரித்திருப்பான்.
இத்தனைக்கும், அத்தனை சுற்றுகள் வைத்து தான் தேர்ந்தெடுத்திருந்தனர் அவளை!
அப்போது ஊன்றி கவனிக்க நேரமில்லை என்பதை விட அவனுக்கு மனதில்லை. வேலை, நிறுவனம் என்றே சுற்றி திரிந்த காலம் அது.
இப்போது அவளைக் கவனிக்கும் போது, புதிதாக தான் தெரிந்தாள். எதற்கும் பெரிதாக அலுத்துக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டே இருக்கும் அவளின் குணம் விசித்திரமாக இருந்தது அவனுக்கு. அதனால் தான் இந்த கண்காணிப்பு!
மதிய விருந்தும் அப்படியே முடிய, உதயகீதன் புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் தொழில் தொடர்பான அழைப்பு வந்தது. தன் சூழலை சுதாகருக்கு விளக்க, அவரும் புரிந்து கொண்டார்.
நியாயமாக, உதயகீதனின் பி.ஏ என்பதால் ஜீவநந்தினியும் செல்ல தான் வேண்டும். ஆனால், அவள் முகத்தில் தெரிந்த தயக்கத்தை சரியாக யூகித்த உதயகீதனோ, “இது இனிஷியல் மீட்டிங் தான். ஸோ, நீ வர வேண்டாம்.” என்று அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து சென்று விட, மாலையில் கேசவமூர்த்தியும் தந்தை மற்றும் மகளுக்கு தனிமை தர வேண்டி வீட்டிற்கு கிளம்பினார்.
ஒரு வாரத்திற்கு பின்னர், மீண்டும் தந்தையும் மகளும் தனித்து இருப்பதற்கான நேரம் கிடைக்க, பேசி பேசியே அதை போக்கினர் இருவரும்.
இடையில் ஒருமுறை அவள் உதயகீதனுக்கு அழைக்க, அதை ஏற்றவன் ‘பிசி’ என்று உடனே வைத்து விட்டான். அதற்கு மேல் அழைத்தால், கோபத்தில் கண்டபடி திட்டி விடுவானோ என்ற பயத்தில் மறுநாள் வரை அழைக்கவே இல்லை. வேலை என்று வந்து விட்டால், இப்படி தான் வெறித்தனமாகி விடுவான் என்பது அவள் அறிந்தது தானே!
மதியத்தில் அசைவ உணவை உண்ட மயக்கத்திலிருந்த மகளிடம் சென்ற சுதாகரோ, “நந்தும்மா, இந்த கல்யாணம் உனக்கு ஓகே தான?” என்று தயக்கத்துடன் கேட்க, ‘இப்போ வந்து கேட்குற விஷயமா இது?’ என்று பார்வையிலேயே வினவினாள் ஜீவநந்தினி.
“எனக்கு புரியதுடா. ஆனா, அப்படி ஒரு நிலைமைல மூர்த்தியை திரும்பி பார்க்கும் போது… ப்ச், எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலடா.” என்ற சுதாகருக்கு கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.
அதைக் கண்டு பொறுப்பாளா மகள்?
“அப்பா, இப்போ எதுக்கு கண்ணுல தண்ணி வருது உங்களுக்கு?” என்று அவள் வினவ, “மூர்த்தி பத்தி, உதய் தம்பி பத்தி உனக்கு இன்னும் தெரியாதுல…” என்று சுதாகர் கூற, “இப்போ என்ன ஃபிளாஷ்பேக் தான? அழாம சொல்லுங்க.” என்று அதற்கும் அதட்டி விட்டே ஓய்ந்தாள் அவள்.
கேசவமூர்த்திக்கும் கீதாஞ்சலிக்கும் நடந்த திருமணம், நீலவேணி மற்றும் கீதாஞ்சலிக்கு இடையேயான சிக்கலான உறவு, கீதாஞ்சலி கர்ப்பமாக இருக்கும் போது கல்லூரிக்கு சென்றது, இறுதியாக நீலவேணியின் செயலால் கீதாஞ்சலி கேசவமூர்த்தியை பிரிந்து வேறு ஒருவருடன் சென்றது என்று அவருக்கு தெரிந்த வகையில் கூறி முடித்தார் சுதாகர்.
“அதுவரை நஷ்டமா போயிட்டு இருந்த தொழிலை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு வந்தவுடனே எவ்ளோ சந்தோஷமா, இனி அவன் மனைவியோட நேரம் செலவிடனும்னு போனான் தெரியுமா? ப்ச், விஷயம் கேள்விப்பட்டு அவன் முகத்தை பார்க்க கூட முடியல. அவன் அவ்ளோ துடிச்சு போயிட்டான். இதுக்கு காரணம் அவனோட அம்மான்னு தெரிஞ்சதுல இருந்து, அவங்க கூட பேசவே இல்ல. அவங்க இறக்கும் போது தான் ரெண்டு வார்த்தை பேசுனான். அவன் மனைவியோட விவாகரத்து நடந்த சமயம்… உதய் தம்பி ‘அம்மா வேணும்’னு கதறி அழுதது இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வந்துடக் கூடாது.” என்று உணர்த்து சுதாகர் சொல்ல, ஏனோ பெண்ணின் மனம் கனத்து போனது, அந்த இரு ஜீவன்களுக்கும் நடந்த அநியாயத்தில்.
“ஹ்ம்ம், மாமா ரொம்ப பாவம்ல… ஆனா, ஹீ இஸ் ஸோ ஸ்டிராங். அந்த சம்பவத்துக்கு பின்னாடியும் கூட, மகனை தனியாளா வளர்த்து இருக்காரே. தப்பே செய்யல்லன்னாலும் இந்த சமூகம் அவரை சும்மா விட்டுருக்காது. ஆனா, அதையும் தாண்டி அவரும் வாழ்ந்து மகனையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்துருக்காருன்னா… ஹீ இஸ் கிரேட்!” என்றவள், “இதுவரை என் பாஸுக்கு பின்னாடி இப்படி ஒரு டார்க் பாஸ்ட் இருக்கும்னு நான் நினைச்சது இல்ல. யாரையும் நம்பாம, எப்பவும் சிடுசிடுன்னு இருந்து… ம்ச், அதை அவரோட ஈகோ, ஆட்டிட்யூட்னு நினைச்சேன். ஆனா, சின்ன வயசுல அவருக்கு உண்டான ஏமாற்றத்தோட விளைவுன்னு நான் நினைக்கவே இல்ல.” என்றவளுக்கு தந்தை கூறிய காட்சியே கண்முன் வந்து போனது.
“ம்ம்ம், அப்போ விட்டுட்டு போனவங்க திரும்ப வந்து… ப்ச், இத்தனை வருஷத்துக்கு அப்பறம் மூர்த்தி ஒடுங்கி போய் நின்னதை பார்த்து… என்னால முடியலடா, அவனை அப்படி பார்க்க. அதான் அவன் கேட்டதுக்கு சம்மதம் சொல்லிட்டேன்.” என்றார் சுதாகர்.
உதயகீதனின் கருப்பு பக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்தவளுக்கு, தந்தை கூறிய ‘திரும்ப வந்து’ என்ற பதம் மூளைக்குள் மணியடிக்க, “என்ன சொல்றிங்கப்பா? அவங்க திரும்ப வந்தாங்களா?” என்று கேட்கும்போதே, மனம் எதையோ கூறியது. அதை கேட்க விரும்பாமல், தந்தையின் பதிலுக்காக காத்திருந்தாள்.
அப்போது தான் மகளுக்கு எதனால் திருமணம் நின்றது என்பது முழுதாக தெரியாது என்பதை உணர்ந்தவராக, “ஆமாடா, அந்த பொண்ணோட அம்மா தான் அவங்க.” என்று முழுதாக சொல்ல விருப்பம் இல்லாமல் பொதுவாக கூற, அதிர்ந்து தான் போனாள் ஜீவநந்தினி.
அதை எண்ணி பார்க்கவே முடியவில்லை அவளால். காதலிக்கும் பெண், தங்கை என்ற பந்தத்தில் அல்லவா வருகிறாள்!
‘அடக்கடவுளே!’ என்று திகைத்து நின்றவளால், உதயகீதனின் அப்போதைய மனநிலையை சிந்தித்து பார்க்கவே கடினமாக இருந்தது. ஆனால், அவனோ அதை எல்லாம் கடந்தல்லவா வந்திருக்கிறான்.
‘ப்ச், இவ்ளோ கஷ்டமா ஒரு மனுஷனுக்கு?’ என்ற எண்ணம் தான் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.
இருப்பினும், அவளின் பிறவிக்குணம் தலை தூக்க, தந்தையும் சோகத்தில் இருப்பது தெரிய வர, “இந்த கடவுளுக்கு வேற வேலையே இல்ல போல, தப்பு தப்பா ஸ்க்ரீன்-பிளே எழுதிட்டு இருக்காரு!” என்றவள், தந்தையை முறைத்து, “அதுக்காக நீங்க செஞ்சது சரின்னு எல்லாம் சொல்ல முடியாது. கல்யாணம் நின்னு போனா, ஆறுதல் சொல்லி துணையா இருக்குறதுக்கு பதிலா, இன்ஸ்டன்ட்டா என்னை கல்யாண பொண்ணாக்குவீங்களா? உங்க ஃபிரெண்டு முகத்தை பார்க்க முடியலன்னா, முகத்தை திருப்பி என்னை பார்த்துருக்கணும்.” என்றாள்.
அது சற்று வேலை செய்ய, சோகமாக இருந்த சுதாகரின் முகம் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது.
“பாப்பா…” – அரிதிலும் அரிதாக வெளிப்படும் வார்த்தை! அதைக் கேட்டால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவாள் ஜீவநந்தினி. அவளுக்கு எதிராக சுதாகரிடம் இருந்த ஒரே பிரம்மாஸ்திரம் அந்த வார்த்தை தான்!
இப்போது அதை பிரயோகித்திருக்க, “ஆனாவுனா இதை சொல்லிடுறது! என்னை விடுங்க, பேஸ்மெண்ட்ல இருந்து பாடி வரை எல்லாமே ஸ்டிராங். ஆனா, அந்த முசோ… ச்சு, பாவம்ல அவரு? எத்தனையோ கனவுகளோட அந்த நேரத்தை எதிர்பார்த்திருந்துருப்பாரு… அது இல்லன்னு சொல்லி, அதுக்காக வருந்தக் கூட நேரம் கொடுக்காம, அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சு… யாருக்கு என்ன சந்தோஷம்?” என்று நியாயமாக கேட்டாள் அவள்.
“அது வந்து… மூர்த்தி தான், தம்பிக்கு அப்போ கல்யாணம் நடக்கலைன்னா எப்பவுமே நடக்காதுன்னு வருத்தப்பட்டான்.” என்று தயக்கத்துடன் அவர் கூற, “கல்யாணம் நடக்கலைன்னா, சந்நியாசியா போகட்டும். திரும்ப திரும்ப, அதையே சொல்லிக்கிட்டு!” என்று ஒருவித எரிச்சலில் அவள் கூற, “யாரு சந்நியாசியா போகணும்?” என்ற குரல் வாசலில் கேட்டது.
அங்கு உதயகீதன் தான் கைகளை கட்டியபடி நின்றிருந்தான்.
அவன் வந்து ஐந்து நிமிடங்களாகி இருந்தது. தந்தையும் மகளும் பேச்சு சுவாரஸ்யத்தில், வாசலில் அவன் வந்து நிற்பதை கூட கவனிக்கவில்லை.
அவன் வந்த நேரம் தான், நின்று போன திருமணத்திற்கான காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தார் சுதாகர். எப்படியோ அவளுக்கு தெரிய வேண்டிய விஷயம் தானே. தானோ தந்தையோ சொல்வதற்கு பதில், அவளின் தந்தையே சொல்லட்டும் என்று தான் இடையிடாமல் காத்திருந்தான்.
ஆனால், அவனை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் தான் இருந்தது அவளின் எதிர்வினை.
கடந்த ஒரு வாரமாக அவளை பார்த்து வந்ததால், ஓரளவுக்கு அவளின் எதிர்வினை இப்படி தான் இருக்கும் என்று யூகித்திருந்தவன், சத்தியமாக அந்த ‘சந்நியாசி’யை எதிர்பார்க்கவில்லை!
‘அடிப்பாவி!’ என்று எண்ணியவனுக்கு சிரிப்பு கூட வந்தது. அதற்கு மேல் காத்திருந்தால், இன்னும் ஏடாகூடமாக சொல்லி விடுவாளோ என்ற நினைவில் தான், தன் வருகையை காட்டிக் கொண்டான் அவன்.
அவனை அங்கு அந்நேரம் எதிர்பார்க்காத ஜீவநந்தினியோ, ‘அச்சோ முசோ! எப்போ வந்தாருன்னு வேற தெரியலயே.’ என்று பதற, அந்த பதற்றம் சிறிது இருந்தாலும், மருமகனை வரவேற்கும் பணியை மேற்கொண்டார் சுதாகர்.
“என்ன அங்கிள், ஏதோ சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தீங்க போல, டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?” என்று உதயகீதன் ஜீவநந்தினியை பார்த்தபடியே வினவ, “அதெல்லாம் எதுவும் இல்ல தம்பி. சும்மா தான்…” என்று அவன் எதுவும் தவறாக நினைத்துக் கொள்வானோ என்று எண்ணி தயக்கத்துடன் கூறினார் சுதாகர்.
அவன் தன்னை கேலி செய்கிறான் என்று புரியாமல் தந்தை பேசுவதை பார்த்து மானசீகமாக தலையிலடித்தக் கொண்டவளோ, “‘அங்கிள்’னு கூப்பிடுறவங்க கிட்டயெல்லாம் சொல்ல முடியாது!” என்று அவனை பாராது கூறியவள், “அப்பா, கொஞ்சமாவது மாமனார் கெத்தை காட்டுங்க. சும்மா சும்மா தம்பின்னு பம்மிடுறது!” என்று இறுதி வரியை முணுமுணுத்தாலும், அது அவனுக்கு கேட்கத்தான் செய்தது.
“ஹ்ம்ம், ‘என் மருமகளை அலுங்காம குலுங்காம கூட்டிட்டு வா’ன்னு ஆர்டர் போட்ட உன் மாமனாரு கிட்ட இதை சொல்லியிருக்கணும்.” என்று அவனும் அவளுக்கு சரிக்கு சமமாக பேச, இருவரையும் சிரிப்புடன் பார்த்தார் சுதாகர்.
சிறிது நேரம் அங்கிருந்து விட்டு உதயகீதன் கிளம்ப எத்தனிக்க, “நீங்க நந்துவை கூட்டிட்டு போங்க தம்பி. நான் கொஞ்ச நாள் கழிச்சு வரேன்.” என்று சுதாகர் தயக்கத்துடன் கூற, ஏனென்று புரியாமல் பார்த்தான் உதயகீதன்.
“அவருக்கு கனவுல எங்கம்மாவோட டூயட் ஆடனுமாம். நீங்க வாங்க போலாம்.” என்று தந்தையை முறைத்தபடி உதயகீதனை அழைத்துக் கொண்டு சென்றாள் ஜீவநந்தினி.
அவள் எத்தனை சொன்னாலும், அந்த முயற்சி பலனளிக்க வில்லையே, அந்த கோபம் தான்!
இதோ, இப்போது அவர்கள் இருவரும் மட்டுமே அந்த வாகனத்தில் பயணித்தனர்.
சில நொடிகள் கடந்ததும், அவள் அவனையே அவ்வபோது பார்த்துக் கொண்டு வர, அதில் உண்டான சிரிப்பை அடக்கியபடி, “என்ன?” என்று அவன் வினவ, பிடிபட்ட பதற்றத்தை மறைத்தபடி, “அது… நீங்க எப்போ வந்தீங்க?” என்று வினவினாள்.
“அதுவா, என்னை சந்நியாசியா போக சொன்னேல, அப்போ வந்தேன். ஏன் அதுக்கு முன்னாடி அப்படி என்ன ரகசியம் பேசுனீங்க, நீயும் உங்க அப்பாவும்?” என்று அவன் நக்கலாக கேட்க, அதில் சிலிர்த்துக் கொண்டவளோ, “ஹ்ம்ம், அன்னம் ஆகாரம் இல்லாம, வெறும் காத்தை மட்டும் சுவாசிச்சு, ஜீவசமாதி…” என்று அவள் அடுக்க, சட்டென்று பிரேக் போட்டவன், “அந்த பிளான்ல வேற இருந்தியா?” என்று கேட்க, இருவருமே சிரித்து விட்டனர்.
“அது சரி, உனக்கு வாய் மட்டும் குறையவே குறையாதா?” என்று அவன் இயல்பாக வினவியிருக்க, “ஹ்ம்ம், அது இருக்கப் போய் தான், இன்னைக்கு நானும் அப்பாவும் உயிர்ப்போட இருக்கோம்.” என்று கூறினாள் அவள்.
அவன் புரியாமல் பார்க்க, அவளோ அவள் போக்கில் பேசினாள்.
“நான் பிறந்தப்பவே என் அம்மா இறந்துட்டாங்க. எனக்காக என் அப்பா வேற கல்யாணம் பத்தி யோசிக்கலன்னு தான் ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். நான் ஏஜ் அட்டெண்ட் பண்ணப்போ தான் என் பாட்டி மூலமா, என் அப்பாக்கு அம்மாவை எவ்ளோ பிடிக்கும்னு தெரிய வந்துச்சு. அதனால தான் அவரு இன்னொரு கல்யாணம் பண்ணலையாம். அதைக் கேட்டப்போ, வருத்தம், சோகம் எல்லாம் தாண்டி அப்பா – அம்மாவோட லவ் பிடிச்சுருந்துச்சு. அதை எனக்கு ஃபீல் பண்ண நினைவுகளா கொடுத்த அப்பாக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. அம்மாவும் என்னை மாதிரி தானாம்… அதாவது எப்பவும் வாயடிச்சுட்டே இருப்பாங்களாம். அது தான் அப்பாக்கும் பிடிக்குமாம். அதான், நானும் என் அம்மா மாதிரி மாற ஆரம்பிச்சேன். ஏஜ் அட்டெண்ட் பண்ணதும், சில அம்மா – பொண்ணு ஜோடி கிளோஸ் ஆவாங்களாம். அதே மாதிரி தான் நானும் என் அப்பாவும்.” என்று கனவை போல பேசியவளை அந்நொடி ரசிக்கவே செய்தான்.
“என் பேச்சு அப்பாக்காக! அதை நானே நினைச்சாலும் நிறுத்த முடியாது.” என்று அவள் கூற, “ஹ்ம்ம், நிறுத்திடாத.” என்று மனமார கூறினான். அவள் பேச்சு தானே, அவனுக்கும் மருந்தாக இருந்தது.
அவள் தான், அவன் கேலி செய்ய கூறினானா என்று தெரியாமல் குழப்பத்துடன் அவனை பார்த்தபடியே அந்த பயணத்தை தொடர்ந்தாள், அவனுடன்!
தொடரும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நந்தினி😍😍😍😍. உதய் செமடா.
😍😍😍
உதய் நந்தினி இயல்பா பழக ஆரம்பிச்சுட்டாங்க 🥰🥰🥰🥰
ஆமா 😍😍😍