Loading

காதல் -11

 

‘உயிரை கூட எடுத்து கொள்ளுங்கள்.. ஆனால் உயிருக்கும் மேலான என்னுடைய புத்தகங்களை மட்டும் என்னிடம் இருந்து பிரித்து விடாதீர்கள் ‘ என்ற மனநிலையில் இருந்தாள் சாயாலி…

 

இரவெல்லாம் தூங்கா இரவாக சென்றது.. விடிந்தால் அவள் திருமணம் அல்லவா.. தேனு யாரையும் அவ்வளவாக அழைக்கவில்லை… சாயாலி யாரையும் அழைக்க வேண்டாம் என உறுதியாக மறுத்து விட்டாள்.

 

அதன் பேரில் முக்கியமாக அவர்கள் பக்கத்தில் இருந்து ஐந்து நபரை அழைத்து இருந்தனர். விடிந்தும் விடியாத காலை பொழுதில் சாயாலியை அழைத்து சுடு தண்ணீரில் தலைக்கு ஊற்ற கூறி இருந்தார்கள்… அவர்கள் கூறிய படியே அவளும் தலைக்கு ஊற்றி குளித்து தயாராகி வர, மறவன் எடுத்து கொடுத்த முகூர்த்த புடவையை எடுத்து கட்டி கொண்டவள்… வீட்டிலேயே மிதமான ஒப்பனையுடன் அவன் வாங்கி கொடுத்த நகைகளை அணிந்து கொண்டு அழகாக தயாராகி வெளியே வந்தாள் ..

 

தேனு தன் மகளை வாயை பிளந்து பார்க்க.. மகளோ சுற்றி இருக்கும் சூழலை கருத்தில் கொள்ளாமல் வெளியே வர.. சரியாக மறவன் அவளுக்காக அனுப்பி இருந்த கார் அவர்கள் வீட்டு வாயிலில் காத்திருக்க அமைதியாக அதில் ஏறி அமர்ந்து கொண்டவள்… இறுதி முறையாக தன் வீட்டையே வெறுமையாக பார்த்தாள்…தாயையும் அழைத்து கொண்டு கனத்த மனதுடன் கோயிலை நோக்கி அவளது பயணம் புறப்பட்டது.

 

தந்தை மூர்த்தியுடன் கோயிலுக்கு வந்து சேர்ந்தான் தமிழ் மறவன்.. அவனுக்கே சற்று பதட்டமாக தான் இருந்தது. எங்கே இறுதி நிமிடத்தில் திருமணம் வேண்டாம் என நிறுத்தி விடுவாளோ என்ற பயம் தான்…

 

” என்ன மை சன்… ரொம்ப பதட்டமா இருக்க போல… பரவாயில்லை உன்னையும் பதட்டபட வைக்க ஒரு ஆள் இருக்கு ” என நக்கலாக சிரித்த தன் தந்தையை முறைத்தான்.

 

” நீங்க நினைக்கிற மாதிரி அவ சாதாரண பொண்ணு இல்ல பா… நம்ம கிட்ட இருக்குற சொத்து எல்லாம் அவ கால் தூசிக்கு சமம் .. அவ்வளவு அழுத்தக் காரி” அவளை பற்றி பேசும் போது தன் மகனின் முகத்தில் பூக்கும் இளநகையை கண்டும் காணாமல் இருந்து கொண்டவர் மனதிற்குள் சிரித்து கொண்டார்.

 

தன் மகன் ஏதோ கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்கிறானோ என்ற அச்சம் இப்போது அவரிடம் இருந்து மொத்தமாக விலகியது.

 

” அப்போ உன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுவாளோ ” என மீண்டும் சிரிக்க…

 

” பேசுறது என்ன பா… அவளோட ஒரு பார்வையே போதும், அடுத்து அவ கிட்ட பேச நம்ம ரொம்ப யோசிக்க வேண்டியது இருக்கும்… பார்வையிலேயே ஆளை காலி பண்ணிடுவா ”

 

உண்மையில் மூர்த்திக்கு சாயாலி வாய் பேச முடியாத பெண் என்பது தெரியாது.. தன் தந்தையிடம் கூறினால் இதை காரணமாக வைத்து திருமணத்தை நிறுத்தி விடுவாரோ என்ற எண்ணத்தில் அவளது உண்மையான ரூபத்தை மறைத்து விட்டான்.

 

கோவில் அருகில் கார் நிற்கும் சத்தத்தில் அவனது கண்கள் ஒரு வித எதிர்பார்ப்போடு வாசலில் படிய.. அவனது ஆசையை பொய் ஆக்காமல் காரில் இருந்து தங்க சிலையென இறங்கினாள் சாயாலி…

 

அவன் வாங்கி கொடுத்த முகூர்த்த புடவையில் … ஆசையாக பார்த்து பார்த்து அவளுக்கென வாங்கிய தங்க நகைகளை எல்லாம் அடுக்கடுக்காக அணிந்து இருந்தவள்… முகத்தில் எளிமையான ஒப்பணையில் தேவலோகத்தில் இருக்கும் ரதி போல அவனுக்கு காட்சி அளிக்க.. பாவாடை சட்டையில் பார்த்த சாயாலியை முற்றிலும் மறந்து.. தங்க சிலையாக முன் நிற்கும் சாயாவை கண்டு மயங்கி நின்றான்.

 

மூர்த்தி தூரத்தில் வரும் தேனு மற்றும் சாயாலியை பார்த்தவர் புருவம் சுருக்கி ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.

 

தேனு தயக்கமாக அவளை அழைத்து கொண்டு மறவன் இருக்கும் இடத்திற்கு வர.. அவர்களை முதலில் வரவேற்றார் மூர்த்தி.

 

” வாங்க மா… நான் தான் மறவன் அப்பா மூர்த்தி ” என தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள..

 

” ஐயோ ஐயா உங்களை தெரியாம இருக்குமா, இத்தனை நாளா என் மக உங்க தோட்டத்துல தானே வேலை பார்த்தா ” என கூற அவரும் சின்ன சிரிப்பை பதிலாக கொடுத்தவர். சாயாலியை பார்த்து ” உன் பேர் என்ன மா ” என கேட்டு வைக்க.. அடுத்த நொடி ” சாயாலி” என்று மறவனிடம் இருந்து பதில் வந்தது.

 

சரி நேரம் ஆச்சு உள்ள வாங்க என அனைவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார் மூர்த்தி. வந்ததில் இருந்து இன்னும் ஒரு முறை கூட மறவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.. அவள் கடைக்கண் பார்வைக்கு எங்கியவனோ அது கிடைக்காத பட்சத்தில் பெரும் மூச்சை வெளியிட்டு உள்ளே சென்று விட்டான்.

 

‘அது சரி அவ சம்மதத்தோடு கல்யாணம் பண்ணா நிமிர்ந்து பார்ப்பா, நம்ம தான் மிரட்டில கல்யாணம் பண்ணுறோம் அப்பறம் எப்படி பார்ப்பா ‘ என மனதை தேற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

ஆனால் அவன் ஒன்றை உணரவில்லை.. அத்தனை எளிதில் அவனால் சாயாவின் மனதை அடைந்து விட முடியாது என்று.

 

முதலில் இருவரும் சன்னிதானத்தில் அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்து இருவரையும் ஐயர் முன்பு அமர வைத்தனர்.

 

அருகில் அமர்ந்திருக்கும் சாயாலி ஏதோ கடமையென அனைத்தையும் செய்து கொண்டிருக்க … அவளையே கவனித்து கொண்டிருந்த மறவனுக்கு அவள் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வேற வந்தது.

 

‘ கட்டாய திருமணத்தில் அவள் வேறு எப்படி இருப்பாள் ‘ என மனசாட்சி அவனிடமே கேள்வி கேட்க.. அதற்கு பதில் கூற முடியாமல் தன் சினத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான்

 

எத்தனை நாளாக இவளை எனக்கு தெரியும், அப்படி என்ன செய்துவிட்டாள் …  அவளை பார்க்கும் போது உள்ளுக்குள் தோன்றும் உணர்வுக்கு என்ன காரணமாக இருக்கும்.. எத்தனை முறை யோசித்தும் பதில் பூஜ்ஜியம் தான்… இனி வரும் நாட்களில் அவளிடம் இருக்க போகும் தருணங்களில் பதில் கிடைத்தாலும் கிடைக்கும்…

 

அருகில் அமர்ந்திருக்கும் சாயாலியை மேலும் நெருங்கி அமர்ந்து அவளது கடைக்கண் பார்வைக்காக காத்திருக்க.. சரியாக வேலை செய்தது அவனது தந்திரம்…

 

நெருங்கி வந்த மறவனை சட்டென்று திரும்பி பார்த்தவள்.. அவனது நக்கல் பார்வையை கண்டு தீயென முறைக்க.. மேலும் அவளோடு நெருங்கி அமர்ந்தவன்… அவள் காதருகில் சென்று ” நேத்து என்ன சொன்ன… தொட்டு பேசாதீங்கன்னு சொன்ன தானே ” மேலும் நக்கலாக கேட்க… சாயாலிக்கு உள்ளுக்குள் அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்.. இதழை வளைத்து இகழ்சியாக புன்னகை செய்தவள் அவனை சட்டை செய்யாது திரும்பி அமர்ந்தாள்.

 

அதில் மேலும் கடுப்பான மறவனை சோதிக்க விடாமல் ஐயர் மந்திரத்தை ஓதி பொன் தாலியை கொடுக்க, தன் தந்தை மூர்த்தியை ஒரு நொடி பார்த்தவன் அடுத்த நொடி தாலியை வாங்கி சாயாலியின் கழுத்தில் அணிவித்தான்.

 

அங்கிருந்த சிலரின் ஆசிர்வாதத்தால் அவர்களது திருமணம் இனிதே நடந்தது முடிந்தது.. இன்று முதல் அவள் சாயாலி தமிழ் மறவன் ஆக மாறி இருந்தாள்.

 

அங்குள்ள சில பல சம்பர்தாயங்களை முடித்து விட்டு… தேனுவையும் அழைத்து கொண்டு அனைவரும் மறவன் வீட்டிற்கு சென்றனர். இப்பொழுது வரை தனக்கு திருமணம் என்ற ஒன்று நிகழ்ந்து விட்டது என்பதை நம்ப முடியாமல் மறவன் இழுப்பிற்கு எல்லாம் சென்று கொண்டிருந்தாள் சாயாலி…

 

அத்தனை பெரிய மாளிகை போன்ற வீட்டு வாசலில் நின்ற காரில் இருந்து இறங்கிய தேனு வீட்டை தலை நிமிர்ந்து பார்த்து சற்று கலங்கி தான் போனாள்.

 

‘ இவ்வளவு பெரிய வீட்ல நம்ம பொண்ணு வாழ போறா , இருந்தாலும் மனசு ஒரு மாதிரி அடிச்சுகுது.. என் பொண்ணு நல்ல படியா வாழனும் ” என கடவுளை வணங்கி கொண்டு சாயாலி காரை விட்டு இறங்க உதவி புரிந்தார்.

 

முன்னால் மூர்த்தியும் மறவனும் செல்ல, பின்னே தேனுவும் சாயாவும் வந்தார்கள்..

 

” அதான் பொண்டாட்டி வந்தாச்சில டா.. இன்னும் ஏன் என் கூடவே வர… போதும் டா நீ நடிச்சது ” என மூர்த்தி கலாய்க்க…  அதுவரை தந்தையுடன் சென்றவன்… சட்டென நின்று பின்னால் அமைதியின் மறு உருவமாக வரும் தன் மனைவியை பார்க்க.. அவன் பார்வையை உணர்ந்த தேனு தன் மகளை விட்டு வேகமாக முன்னால் வந்து மூர்த்தி அருகே நின்று கொண்டார்.

 

புடவையில் நடக்க தெரியாமல் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த தன் மனைவியை பொறுமையாக அழைத்து கொண்டு வந்தான் மறவன். அவன் தனக்காக காத்திருந்து அழைத்து வருவது தெரிந்தாலும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை அவள்.

 

வாசலில் அவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட… இருவரும் வெவ்வேறு மன நிலையுடன் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தனர்.

 

” இன்னைக்கு தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, என் வீட்டுக்கு விளக்கு ஏத்த ஒரு மருமகள் வந்துட்டா, பூஜை அறை அங்க இருக்கு மா ” என மூர்த்தி கை காட்ட.. சாயாலி அலட்டிக் கொள்ளாமல் பூஜை அறைக்குள் சென்றாள்..

 

அவள் பின்னே குட்டி போட்ட பூனை போல செல்லும் தன் மகனை நினைத்து மனதிற்குள் சிரித்தார் மூர்த்தி. இதுவரை பூஜை அறை வீட்டில் எங்கிருக்கு என்று கேட்டால் கூட தெரியாது என தலையாட்டும் மகன் இன்று மருமகளோடு பின்னே செல்வதை பார்த்து மனம் நிறைந்து போனது.

 

தேனு சாயாலிக்கு உதவி செய்ய .. அங்கு வீட்டில் உள்ள விளக்குகளை அழகாக ஏற்றினாள் சாயாலி.. பின் கற்பூரம் காட்டி சாமி கும்பிட்டு வெளியே வர… இருவரையும் அமர வைத்து பால் பழம் கொடுத்தார் தேனு…

 

பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக வாங்கி கொண்டாள் அவள்… ஆனால் நமது மறவன் தான் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என தெரியாமல் இரு மனநிலையில் அந்த சடங்கை முடித்து வைத்தான்…

 

இப்போது அவர்கள் நால்வரை தவிர அனைவரும் கிளம்பி விட.. அங்குள்ள பெரிய கூடத்தில் நால்வரும் அமர்ந்தனர். “ரொம்ப சந்தோஷமா இருக்கு தேனு மா… என் மகன் இந்த மாதிரி கல்யாணம் குடும்பம் மனைவி அப்படினு ஒரு வாழக்கை வாழாம போயிடுவானோன்னு நான் ரொம்ப பயந்துட்டு இருந்தேன்… இப்போ எனக்கு கவலையே இல்ல… இனிமே என் மருமகள் இந்த வீட்டையும் என் மகனையும் பார்த்துப்பா… அப்படி தானே மா சாயாலி… ?” என மூர்த்தி கேட்க…

 

அதுவரை அமைதியாக தரையை வெறித்து கொண்டு அமர்ந்திருந்த சாயாலி… மூர்த்தியின் அழைப்பில் சட்டென்று நிமிர்ந்து முழித்து வைத்தாள்…

 

” என்ன பார்க்குற, நீ இந்த வீட்டையும் என் மகனையும் பார்த்துகுவ தானே ” என மீண்டும் கேட்க …  அவரிடம் பொய் கூற மனம் இல்லை தான், ஆனால் அந்த சூழ்நிலையில் நிறுத்திய மறவன் மீது கொலை வெறியே வந்தது… அவள் பாதியில் போக வேண்டியவள் எப்படி இந்த வீட்டையும் அவனையும் பார்த்துக் கொள்ள முடியும்.. இருந்தும் இப்போது பொய் கூற வேண்டிய நிலைமையில் இருப்பதால் ” ஆம் ” என்பதை போல தலையை ஆட்டி வைத்தாள் சாயாலி..

 

அதில் உள்ளம் பூரித்த மூர்த்தி.. ” ரொம்ப சந்தோஷம் மா… நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு களைப்பா இருக்கும் ” என அவள் முகத்தில் உள்ள களைப்பை உணர்ந்து கூற…

 

” நீங்க கொஞ்சம் இருங்க … உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் பா ” என்றதும் மூர்த்தி புருவத்தை சுருக்கி தன் மகனை பார்த்தார்.

 

“என்ன விஷயம் டா ”

 

“உங்க மருமகளை பத்தி தான் ”

 

” அவளை பத்தி சொல்ல என்ன இருக்கு ”

 

” சாயா அம்மா இனிமே அங்க தனியா தான் இருக்கனும்… அவங்களும் நம்ம கூட இங்கேயே இருக்கட்டும் ”

 

” அதுல என்ன இருக்கு … நானே சொல்லனும்னு நினைச்சேன்… ஒரே மகளை விட்டு அவங்களும் ஏன் தனியா இருக்கனும்… ” என்றவர் பேச்சோடு ” நீங்க இங்கேயே சாயாலி கூட இருங்க தேனு மா ” என கூற… அவசரமாக மறுத்தார் தேனு…

 

” இல்ல ஐயா அது சரியா வராது… பொண்ணை கட்டி கொடுத்த இடத்தில நான் எப்படி இருக்க முடியும்… அப்பறம் என் மகளுக்கு அம்மா வீடுன்னு ஒன்னும் இல்லாமலே போயிடும், இந்த விஷயத்துல என்ன கட்டாய படுத்த வேணாமே ” என தேனு தயக்கமாக கேட்க… மூர்த்தி தன் மகனை பார்த்தார்.

 

” இத்தனை நாளும் சாயா சம்பாதிச்சு அவங்க அம்மாவை பார்த்துகிட்டா … இனிமே அவ வேலைக்கு போக மாட்டா, அவங்க இங்க இருந்தாலும் சரி, அங்க இருந்தாலும் சரி , அவ அம்மாவை நம்ம தான் பார்த்துக்கனும் பா ” என பொறுப்பாக கூறும் மகனை பெருமையுடன் பார்த்தார் மூர்த்தி.

 

“சரி பா உன் இஷ்டம்… என்ன மா சாயாலி உனக்கு ஓகே தானே ” என மருமகளை கேட்க… அவள் அமைதியாக தலை ஆட்டினாள்..

 

” ஏன் அமைதியாவே இருக்க, பயப்புடாதா இங்க எல்லாரும் உன்ன நல்லா பார்த்துப்போம்… அதை விட என் மகன் உன்ன நல்லா பார்த்துப்பான்” என்க அவள் அதற்கும் அமைதியாக இருப்பதை பார்த்து  அவர் யோசனையாக தன் மகனை பார்க்க…

 

” சாயாலிக்கு பேச்சு வராது பா ” சட்டென்று உடைத்தான் மறவன்.

 

அதில் அதிர்ந்த மூர்த்தி… ” வாட்……. ” என அதிர்ச்சியில் இருக்கையில் இருந்தே எழுந்து விட்டார். அங்குள்ள ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான அதிர்ச்சி…

 

சனா❤️

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்