
அத்தியாயம் 10
ராகவர்ஷினி கத்தியபடி மயங்கி விழ, மகளை பார்க்க தோன்றாமல், அவள் பேசிய வார்த்தைகளின் தாக்கத்தில் செயலற்று நின்று விட்டார் கீதாஞ்சலி.
‘என்னை வேண்டாம்னு சொல்லிட்டாளா?’ என்று அவர் மனதிற்குள் உடைந்து போக, ‘அன்னைக்கு நீயும் இப்படி தான அவங்களை வேண்டாம்னு சொல்லிட்டு வந்த. வரலாறு திரும்புதோ என்னவோ?’ என்று அவரின் மனமே கேலி செய்தது.
அது இதயத்தை சரியாக துளைத்தாலும், வலியை பொறுத்துக் கொண்டு, ‘இல்ல, இது தப்பு. இப்படியே போச்சுன்னா, என் ரெண்டு பிள்ளைங்களோட வாழ்க்கையும் வீணா போகும்’ என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, ராகவர்ஷினிக்கு மருந்து வாங்க வெளியே சென்றிருந்த கிரிதரன் உள்ளே வந்தார்.
மகள் மயங்கி கிடப்பதையும், மனைவி உறைந்து நிற்பதையும் கண்டு சூழ்நிலை சரியில்லை என்பதை புரிந்து கொண்டு துரிதமாக செயல்பட்டு, மகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு, மனைவியை தன்னுடன் இருத்திக் கொண்டார்.
“கீது, என்னாச்சு? ஏன்மா இப்படி இருக்க? ஏதாவது பேசு. வர்ஷிக்கு என்னாச்சு?” என்று பல கேள்விகள் கேட்க, அதில் மகளின் பெயர் மட்டும் அவரின் கவனத்திற்கு சென்றது.
“வர்ஷிக்கு… ஹையோ, என் பொண்ணு…” என்று கீதாஞ்சலி அரற்ற ஆரம்பிக்க, அதற்கு மகளின் நிலைமை தான் காரணம் என்பதை உணர்ந்து அவரை ஆறுதலாக தோளோடு அணைத்துக் கொண்டார்.
சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த மருத்துவர் இருவரையும் அவரின் அறைக்கு அழைத்து சென்று பேசினார்.
“வர்ஷினிக்கு அப்படி என்ன பிராப்ளம்? ஏன் கேட்குறேன்னா, அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க. இப்படியே இருந்தா, அவங்க குணமாகுறது ரொம்ப கஷ்டம்.” என்று அந்த மருத்துவர் கூற, திருமணம் நின்றதால் உண்டான பிரச்சனை என்று மட்டும் சொல்லி வைத்தனர்.
அதற்கு மேல் துருவ விரும்பாத அந்த மருத்துவரும், “வர்ஷினிக்கு கவுன்சிலிங் கொடுக்குறது நல்லதுன்னு தோணுது.” என்று கூற, தயக்கத்துடன் மறுத்தார் கீதாஞ்சலி.
“மேடம், உங்க பொண்ணோட மனசு ரிலாக்ஸா இருந்தா தான், டிரீட்மெண்ட் எஃபெக்டிவ்வா இருக்கும். நார்மலா, சூசைட் அட்டெம்ப்ட் பண்ணவங்களுக்கு கவுன்சிலிங் மஸ்ட்.” என்று கீதாஞ்சலியை பார்த்து கூறிய அந்த மருத்துவர், கிரிதரனிடம், “அதுக்கான பிரசிஜருக்கு நர்ஸ் ஹெல்ப் பண்ணுவாங்க.” என்றார்.
மயக்கத்திலிருந்து விழித்த ராகவர்ஷினியோ, “உதய் வரலையா இன்னைக்கு?” என்று சாதாரணம் போல கேட்க, “இனி, உன் வாயிலயிருந்து உதய் பேரு வரக்கூடாது வர்ஷி.” என்றார் கீதாஞ்சலி கண்டிப்புடன்.
அதில், பார்வையை கிரிதரனிடம் மட்டும் வைத்த ராகவர்ஷினி, “நான் உங்க கிட்ட தான் கேட்டேன்பா.” என்று கூற, திகைப்புடன் மனைவி மற்றும் மகளை பார்த்தார் கிரிதரன்.
அவருக்கு தான் மகளின் மயக்கத்திற்கான காரணம் இன்னும் தெரியாதே!
“சரி, அவன் வரலைன்னா என்ன? நான் தான் அவனை நாளைக்கு மீட் பண்ண போறேனே.” என்று பெற்றவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் ராகவர்ஷினி பேச, கணவரிடம் கண்காட்டி விட்டு அறையை விட்டு வெளியே வந்து விட்டார் கீதாஞ்சலி.
மனமெங்கும் வேதனை! தன்னால் தான் தன் மகளுக்கு இந்த தர்மசங்கடமான சூழல் உருவாகி இருக்கிறது, இதற்கு தான் மட்டுமே காரணம் என்று உறுதியாக நம்ப துவங்கி விட்டார் கீதாஞ்சலி.
சற்று நேரத்தில் வெளியே வந்த கிரிதரனோ, “கண்டிப்பா வர்ஷிக்கு கவுன்சிலிங் கொடுக்கணும் கீது. அவ மனசு ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கு.” என்று கூற, கண்களில் வழியும் கண்ணீருடன் கடவுளை பிரார்த்திக்க துவங்கினார் கீதாஞ்சலி.
*****
இரவு தாமதமான உறக்கத்தின் விளைவாக, மனைவி கால், கை என்று எதை போட்டாலும் கண்டு கொள்ளாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் உதயகீதன்.
அவனை எவ்விதத்திலாவது தொந்தரவு செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்திருப்பாள் போலும், அவளின் அலாரம் சத்தமாக ஒலியெழுப்பி அவன் உறக்கத்தை கலைக்க ஆரம்பித்தது.
முதலில், அலார சத்தத்தில், அவள் எழுந்து அணைத்து விடுவாள் என்று எண்ணியவன் புரண்டு படுக்க, அங்கு அவள் எழுவதற்கான எவ்வித அறிகுறியும் தெரியாததைக் கண்டு சலித்தபடி எழுந்தவன், அவள் வைத்த அலாரத்தை அணைத்து விட்டு அவளைக் கண்டான்.
இரவு முழுவதும் அவனை தூங்க விடாமல் கையையும் காலையும் அவன் மீது போட்டவள், இப்போது நல்ல பிள்ளையாக அவளிடத்தில் உறங்குவதை கண்டவனோ, ‘க்கும், சத்தியம் பண்ணி சொன்னா கூட, நைட்டு இவ தூக்கத்துலயே பரதநாட்டியம் ஆடுனதை யாரும் நம்ப மாட்டாங்க! இப்படியே போச்சுன்னா, என் தூக்கம் தான் தொலையும் போல!’ என்று எண்ணியவனாக காலை கடன்களை செய்ய ஆரம்பித்தான்.
உதயகீதன் குளித்து முடித்து வெளியே வந்த பின்னரும் கூட, ஜீவநந்தினி அவள் உறக்கத்திலிருந்து வெளிவரவில்லை.
“இவளுக்கு எல்லாம் எதுக்கு அலாரம்?” என்று முணுமுணுத்த உதயகீதனோ, அவள் காதருகே சத்தமான பாடல் ஒன்றை ஒலிக்கவிட, அடித்து பிடித்து எழுந்தாள் அவனின் மனைவி.
தூக்கத்தை விரட்டியவனை முறைத்தவளோ, “எதுக்கு இப்போ எழுப்புனீங்க?” என்று கோபமாக கேட்க, “ஆஃபிஸ் போகணும்னு மேடமுக்கு நினைப்பு இருக்கா?” என்று கேட்டு மணி எட்டாகி இருந்ததை சுட்டிக் காட்டினான்.
‘ஐயையோ, இன்னைக்கும் லேட்டா?’ என்று மனதிற்குள் பதறினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அதுக்கு என்ன இப்போ? நீங்க ஆஃபிஸ்ல தான் எனக்கு பாஸ். இங்க இல்ல. எதுனாலும் அங்க வச்சு கேள்வி கேளுங்க.” என்று கெத்தாக பேசியவாறே குளியலறைக்குள் செல்ல முற்பட்டாள்.
அவளின் செயலில் கோபம் எட்டிப் பார்த்தாலும், அது இங்கு செல்லுபடியாகாது என்பதால், ‘ஆஃபிஸுக்கு வா.’ என்று உள்ளுக்குள் கறுவியபடி, சொடக்கிட்டு அவளை நிறுத்தினான்.
“அதுக்கு முன்னாடி, இங்க இருக்க சில கண்டிஷன்ஸ்…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, “அடடா, எத்தனை முறை சொல்றது, கண்டிஷன்ஸ் கேனாட் பி அப்ளைட். அப்படியே ஏதாவது இருந்தாலும், மீறப்படும்!” என்று மிதப்பாக கூறி முன்னேறியவளின் கரம் பற்றி பின்னே மடக்கினான்.
“ஹே, இதெல்லாம் வயலன்ஸ்!” என்று அவள் கத்த, “ஷு, நான் பேசுற வரைக்கும் ஏதாவது பேசுன, கையோட சேர்த்து வாயையும் உடைச்சுடுவேன்.” என்றவன், “நைட்டு ஃபுல்லா பெட்ல படுத்துட்டே டேன்ஸ் ஆடி என்னை தூங்க விடாம பண்ணிட்டு, இப்போ பேசி பேசி டையர்ட்டாக்குற.” என்று கூற, அவன் கூற வருவது புரியாமல் விழித்தாள் அவள்.
“டேன்ஸா? கனவு கண்டுட்டு அதுக்கும் என் மேல பழியை தூக்கி போடுவீங்களா? ச்சு, நான் போயும் போயும் உங்க கனவுலயா வரணும்?” என்று அதற்கும் அவள் வாயடிக்க, பிடித்த கரத்தை லேசாக முறுக்கியவன், “பேசக் கூடாதுன்னு சொன்னேன் தான? யாரு நீ, என் கனவுல வந்தியா? குட் ஜோக்! ஒரே பெட்ல படுத்த பாவத்துக்கு, கையையும் காலையும் மாறி மாறி போட்டு… ஷப்பா உடம்பு வலியே வந்துடுச்சு.” என்று விஷயத்தை போட்டுடைத்தான் அவன்.
‘அடச்சை, இன்னுமா அந்த பழக்கம் மாறல!’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவளோ வெளியே, “நீங்க சொல்றது தான் ‘குட் ஜோக்!’” என்று அவனை போலவே கூறியவள், “நான் பாட்டுக்கு என் இடத்துல அமைதியா படுத்து தூங்கி எழுந்துருக்கேன். உங்களுக்கு என்ன காலைலயே என்னை வம்பிழுக்கணுமா?” என்று முழு பூசணிக்காயையும் மறைக்க பார்த்தாள்.
அதில் இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிட, “ஹலோ மிஸ்டர். உதயகீதன், எவிடன்ஸ் இருக்கா உங்க கிட்ட? ஒரு அப்பாவியை தப்பு சொல்ல காலங்கார்த்தால வந்துடுறது! ம்ச், எனக்கு நேரம் வேற ஆச்சு. உங்க கூட பட்டிமன்றம் பேச எனக்கு நேரமில்ல.” என்று விரைந்து குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.
“பொய் புழுகி! வாயை திறந்தா எல்லாமே பொய் தான்!” என்று சத்தமாக கூறியவன் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.
ஜீவநந்தினியோ, காலை உணவை பொறுமையாக முடித்து, தந்தையிடமும் மாமனாரிடமும் நிதானமாக பேசி, பின் கிளம்ப ஒரு மணி நேரம் முடிந்திருந்தது.
அதன் பிறகு போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து அலுவலகம் வந்து சேர, ஒன்பதரை ஆகியிருந்தது.
அவள் வந்தவுடனே அறைக்கு அழைத்து விட்டான் உதயகீதன்.
‘முசோக்கு மூக்கு வேர்த்துடுமே! ஹ்ம்ம், வீட்டுல பேசுனதுக்கு இங்க வச்சு செய்வாரே!’ என்று புலம்பினாலும், நிர்மலமான முகத்துடன் உள்ளே சென்றாள் அவள்.
அவள் உள்ளே நுழைந்ததும், “ஜீவநந்தினி, இங்க வச்சு கேட்டா பதில் சொல்வீங்க தான? ஏன் லேட்டு?” என்று உதயகீதன் கேட்க, யோசிக்கவே செய்யாமல், “என் ஹஸ்பண்ட் தான் சார் காரணம். உப்புசப்பில்லாத காரணத்துக்காக காலைலேயே விவாதத்தை தொடங்கி… ப்ச், அதை முடிச்சு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு சார்.” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.
அடுத்து ஏதாவது கேட்டாலும், தன்னை வைத்தே கதை கூறுவாள் என்பதை அறிந்து ஒரு முறைப்புடன், “பி.ஏ செலக்ஷன் என்னாச்சு?” என்று வினவ, “சார், நீங்க சொன்ன கண்டிஷன்ஸ் எல்லாம் அளவெடுத்து தான் செய்யணும்.” என்று ஏதோ நினைவில் கூறி விட்டாள் அவள்.
அவளையே கூர்மையாக பார்த்தவன், “இனி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். போய், பி.ஏக்கான ஜாயிங் லெட்டர் டைப் பண்ணிட்டு வாங்க.” என்று கூற, “யாரு அந்த பி.ஏ?” என்று குழப்பமாக பார்த்தாள் அவள்.
“மிஸ்… சாரி சாரி… மிசஸ். ஜீவநந்தினி…” என்று அவன் கூற, “எது நானா?” என்று அதிர்ச்சியில் சிலையாகி விட்டாள் அவள்.
“இன்னும் போகல?” என்று நக்கலாக சிரித்தபடி அவன் கேட்க, “சார்… நான் எப்படி? நான் ஹச்.ஆர் சார்.” என்று அவள் பதற, “இருந்துட்டு போங்க. உங்களுக்கு தான் மத்த ஸ்டாஃபை கூட்டி வச்சு மாநாடு நடத்தவும், பட்டப்பெயர் வைக்கவும் நேரமிருக்கே. அந்த நேரத்துல, எனக்கு பி.ஏவாவும் இருங்க.” என்று கேலியாக கூறினான் அவன்.
‘க்கும், ரெண்டும் ஒன்னா?’ என்று சிந்தித்து பார்த்தவளுக்கு, என்றோ ஒரு நாள் அவள் கூறியது நினைவுக்கு வந்தது.
‘இந்த முசோக்கு பி.ஏவா வரவனும், பொண்டாட்டியா வரவளும் போன ஜென்மத்துல ஏதோ பெருசா பாவம் பண்ணியிருப்பாங்க!’
“ஹ்ம்ம், நான் தான் அந்த பாவியா?” என்று சத்தமாக சொல்லிவிட, சொடக்கிட்டு அவளை நிகழ்வுக்கு அழைத்து வந்தவன், “லெட்டர் டைப் பண்ணிட்டு வாங்க. சேலரி ஸ்கேல் கூட இன்க்ரீஸ் பண்ணிக்கலாம்.” என்றான் நக்கலாக.
‘க்கும், முசோக்கு ரொம்ப ஆனந்தம் போல! பின்ன, என்னை திட்ட லட்டா சான்ஸ் கிடைச்சுருக்கே. என் தலையெழுத்து! இப்படி வந்து சிக்கியிருக்கேன்.’ என்று எண்ணி தோழிகளிடம் புலம்பியபடி அவன் சொன்னதை செய்தாள் ஜீவநந்தினி.
அதன்பிறகு, அவளால் நிம்மதியாக ஒரு குளம்பி இடைவேளை கூட எடுக்க முடியவில்லை.
பழக்கமில்லாத வேலை செய்து தலைவலி வந்ததால், அதை தீர்க்க ஒரு வாய் குளம்பியை அருந்துவதற்குள் அவளை அழைத்து, அவள் செய்ததிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டி திட்ட, மனதிற்குள் அவனை வருத்தெடுத்தபடியே அதை செய்து முடித்தாள்.
உணவு இடைவேளையின் போது கூட இதே நிலை தான்!
ஒன்றரை மணியான போதும் விடாமல் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவன், அவளின் பசி மயக்கத்தினால் மங்கலாக தெரிய, “சார், உங்களை மாதிரி நான் ஸ்டிராங் பாடியெல்லாம் இல்ல. கொஞ்சம் கேப் விட்டா லஞ்ச் முடிச்சுட்டு வருவேன்.” என்று கூறினாள்.
அவளின் நிலையை உணர்ந்தவன், அப்போதும் சும்மா விடாமல், “கேப் தான, பத்து நிமிஷம் கேப் போதுமா?” என்று வினவ, “வேலையை மட்டும் தாராள பிரபு மாதிரி அள்ளி கொடுக்குறீங்க தான, நேரத்துல மட்டும் ஏன் சார் இப்படி கஞ்சத்தனமா நடந்துக்குறீங்க?” என்று அவள் சோர்வுடன் கூறினாள்.
அப்போது தான் உதயகீதனுக்கான மதிய உணவை எடுத்துக் கொண்டு பணியாளர் ஒருவர் உள்ளே வந்தார். அங்கு இருந்த ஜீவநந்தினிக்கும் உணவை எடுத்து வந்திருக்க, ‘கைக்கு கிடைச்சது வாய்க்கு கிடைக்காம போயிடும் போல!’ என்று எண்ணியபடி பாவமாக அவனை பார்த்து வைத்தாள்.
அவனும் பெரிய மனதுடன் அவளை அனுப்பி வைக்க, மனதிற்குள் அவனை திட்ட கூட சக்தியில்லாமல் உணவை எடுத்துக் கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
“என்ன மேடம், சும்மாவே அவரு ரூமுக்கு போயிட்டு போயிட்டு வருவ. இதுல, பி.ஏவாக்கி பெர்மனன்ட்டா கூடவே வச்சுக்க போறாரு போல.” என்று ஒருத்தி ஜீவநந்தினியை கேலி செய்ய, அது பொறாமையால் வந்த கருத்து என்பதை புரிந்து கொண்டவளோ, “இதை நீ அவருக்கிட்ட தான் கேட்கணும்.” என்று உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாள்.
இனிமேல், மற்றவர்களிடம் அவனைப் பற்றி பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். கணவனாகிற்றே!
அதன்பிறகும் வேலை அவளை இழுத்துக் கொண்டது. ஒரே நாளில் அனைத்தையும் கற்று கொடுத்து விடுபவன் போல உதயகீதன் அவளுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருக்க, ஜீவநந்தினியோ திக்கித்திணறி கற்று கொண்டிருந்தாள்.
ஆறு மணியானதும் அவள் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக, “எங்க போறீங்க ஜீவநந்தினி?” என்று கேட்டான் அவன்.
‘போச்சு! இதுக்கும் வச்சுட்டாரா ஆப்பு?’ என்றபடி பலியாட்டை போல திரும்பி பார்க்க, அவனுக்கு என்ன தோன்றியதோ, “நாளைல இருந்து நான் எப்போ கிளம்புறேனோ, அப்போ தான் நீங்களும் கிளம்பணும். அதுக்கு மனசை தயார்படுத்திட்டு வாங்க.” என்று கூற, ‘க்கும், மனசை புண்படுத்துறதுக்கு தயார்படுத்திட்டு வரணுமாமே!’ என்று எண்ணியபடி வீட்டிற்கு கிளம்பினாள்.
வீட்டிற்கு சென்றதிலிருந்து உதயகீதன் வரும் வரை புலம்பி தள்ளி விட்டாள் ஜீவநந்தினி.
அதில், அவள் தந்தை மற்றும் மாமனார் கூறிய சமாதானங்கள் எல்லாம் காற்றில் கரையும் கற்பூரமாக கரைந்து தான் போனது.
“உங்க மகனுக்கு அப்படி என்னதான் கடுப்பு என்மேல?” என்று மீண்டும் ஆரம்பிக்க, அதைக் கேட்டு சலித்துப் போன கேசவமூர்த்தியோ, “உன்னை கூடவே வச்சுக்கணும்னு ஆசையோ என்னவோ!” என்றார்.
“வச்சுக்கணும் இல்ல மாமா, வச்சு செய்யணும்னு தான் ஆசையா இருக்கும்.” என்று அவள் கூறும் சமயம், “என்ன ஆசை? யாருக்கு ஆசை?” என்று வந்தான் உதயகீதன்.
அவனைப் பார்த்த ஜீவநந்தினியோ கேசவமூர்த்திக்கு கண்ணை காட்டிவிட்டு அறைக்கு ஓடி விட்டாள்.
“ஏன் உதய் அவளை இவ்ளோ கஷ்டப்படுத்துற?” என்று கேசவமூர்த்தியும் மருமகளின் சார்பாக கேட்க, “கஷ்டம்னு நினைச்சா எல்லாமே கஷ்டம் தான்பா. அவளும் எவ்ளோ நாள் ஹச்.ஆராவே இருப்பா? என் வேலையை ஈஸி பண்ண இப்போ இருந்தே டிரெயின் பண்றேன்.” என்று எதை சொன்னால், தந்தை நம்புவாரோ அதை கூறினான் உதயகீதன்.
அவற்றை எல்லாம் ஒளிந்து கொண்டு கேட்ட ஜீவநந்தினியோ, “மொத்தமா சிக்கியாச்சு.” என்று வாய்விட்டே கூறியவள், அதன்பின்பு யாரையும் கண்டு கொள்ளாமல் மினி கண்ணாமூச்சியை விளையாடிக் கொண்டிருந்தாள்.
மருமகளின் பாராமுகத்தில் கவலையுடன் இருந்த கேசவமூர்த்தியை சமாதானம் செய்த சுதாகர் தான், “நீ இவ்ளோ தாங்கிட்டு இருந்தா, உன் தலையில மிளகாய் அரைச்சுடுவா மூர்த்தி. விடு, அவளே நாளைக்கு பேசுவா. அவளால பேசாம எல்லாம் இருக்க முடியாது.” என்றார்.
அது அந்த பக்கம் கடந்து சென்றவளையும் எட்ட, ‘இந்த அப்பாக்கு என்னை டேமேஜ் பண்ணலன்னா தூக்கமே வராது போல!’ என்று அவரை முறைத்து விட்டு அறைக்குள் செல்ல, உதயகீதனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
சட்டென்று அவன் மனச்சாட்சி அவனிருக்கும் சூழலை சுட்டிக் காட்ட, அவனுக்கே அவன் சிரிப்பு ஆச்சரியமாக தான் இருந்தது.
திருமண பிரச்சனை முடிந்து இரண்டே நாட்கள் தான் கடந்திருந்தது என்று சொன்னால் அவனால் நம்ப முடியவில்லை.
அவ்வபோது நண்பர்கள் என்னும் போர்வையில், நடந்து முடிந்ததை விசாரித்து காயத்தை கீறி ரணப்படுத்தி, அதில் மகிழ்ச்சியை அடையும் சிலரின் அழைப்புகளால், நடந்து முடிந்தவை உதயகீதனின் நினைவில் இருந்தன தான்.
அதற்காக தானே அவன் தன்னை வேலைகளில் மூழ்கடித்து கொள்கிறான். எனினும், அவன் நினைத்ததை போல, நடந்தவைகளில் மூழ்கி விடவில்லை. அதற்கு காரணம் ஜீவநந்தினி என்றால் அது மிகையல்ல!
அதை உணர்ந்தது தான் உதயகீதனின் இந்த ஆச்சரியத்திற்கு காரணம்.
மேலும், ஏமாற்றங்கள் ஒன்றும் அவனுக்கு புதிதில்லையே!
சிறு வயதிலிருந்தே, சிறியது முதல் பெரியது வரை பல ஏமாற்றங்களை சந்தித்து வந்ததால், எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றியே வாழ கற்றுக் கொண்டான் உதயகீதன். அதையும் தாண்டி அவன் மனதில் உதித்தது தான் அந்த காதல்(!!!)
அதிலும் ஏமாற்றம் என்ற போது மனதெங்கும் வலித்தது தான். அதுவும் சாதாரண ஏமாற்றமா அது? பலரின் வாழ்வை அசைத்து பார்க்கும் அளவுக்கான ஆற்றல் கொண்டதல்லவா.
எனினும், அவனின் அனுபவம் அவனை வீழாமல் தூக்கி நிறுத்தியிருந்தது. அதனுடன், கொஞ்சமே கொஞ்சம் அவன் மனையாளின் பங்கும் இருந்தது.
ஆனால், அவனுக்கு நிகரான வலியை தாங்கிக் கொண்டிருப்பவளின் நிலை தான் மோசமாக இருந்தது.
ராகவர்ஷினிக்கு ஏமாற்றங்களை தாங்கிய அனுபவமும் இல்லை, வீழ்ந்து விடாமல் தாங்கிக் கொள்ள எவரையும் அருகே வர அனுமதிக்கவும் இல்லை.
விளைவு, அவளை மட்டுமல்ல அவள் இப்படி இருக்க காரணமான பெற்றோரையும் தண்டிக்க காத்திருந்தது விதி!
தொடரும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நந்தினி உதய் 😍😍
😍😍😍
நல்லாருக்கு வீட்ல இவ வச்சு செய்றதும் ஆபீஸ்ல அவன் இவளை ஓட விடுறதும் 😆😆😆
கீதாஞ்சலி செஞ்ச தப்புக்கு அனுபவிக்கணும் தானே 😏
😍😍😍 கண்டிப்பா அனுபவிப்பாங்க 😑😑😑