காட்சிப்பிழை 1
‘டிக் டிக்’ என்று கடிகார முட்கள் நகரும் சத்தம் மட்டுமே அங்கு ஒலிக்க, பஞ்சணையில் படுத்திருந்தவளோ கனவின் தாக்கத்தால் திடுக்கிட்டு எழுந்தாள். இப்போது கடிகார சத்தத்திற்கு ஈடாக பெண்ணவளின் மூச்சு சத்தமும் அங்கு கேட்க, இன்னமும் கண்களை மூடியிருந்தவள் கட்டிலுக்கு அருகில், கைக்கெட்டும் தூரம் வைத்திருக்கும் தண்ணீர் குவளையைத் தேடினாள்.
ஆனால் தேடுதலின் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். ஒரு ‘ப்ச்’ கொட்டலுடன், கண்களைத் திறந்தவளிற்கு, அப்போது தான் அறையின் மாற்றம், மெல்லிய வெளிச்சத்தில் அவளின் கண்களுக்கு தென்பட்டது.
கண்ணில் பட்டது கருத்திலும் பட, அடுத்த நொடி துள்ளிக் குதித்து கட்டிலை விட்டு இறங்கியிருந்தாள். இந்த இடத்திற்கு எப்படி, எப்போது வந்தாள் என்ற கேள்விகளுக்கான விடையை அவளின் மூளை அடுக்குகளில் மீண்டும் மீண்டும் தேடிப் பார்த்து சலித்துப் போனாள்.
இன்னமும் கனவில் தான் இருக்கிறாளோ என்ற சந்தேகம் ஏற்பட, கண்களை மூடி ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டு என்று அவளிற்கு தெரிந்த வகையில் கனவிலிருந்து வெளிவர முயன்றாள்.
ஆனால் என்ன செய்தாலும், அவள் அதே இடத்தில் இருப்பதைக் கண்டவள், இது கனவில்லை நிஜமென்று புரிந்து கொண்டாள். இயல்பிலேயே சற்று தைரியசாலியான அவளிற்கும் மனதில் லேசாக பயம் எழத்தான் செய்தது. தெரியாத இடத்தில், புரியாத சூழலில் மாட்டிக்கொண்டதால் ஏற்பட்ட பயத்துடன், அவளிருந்த அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்தாள்.
அவள் கிருஷ்ணவி. பெயருக்கேற்றார் போல் சாக்லேட் நிற அழகி. பிறந்த சிறிது நேரத்திலேயே குப்பைத் தொட்டியை அலங்கரித்தவளை, யாரோ ஒரு புண்ணியவான், அனாதை ஆசிரமத்தில் சேர்த்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை அந்த ஆசிரமத்தையே நந்தவனமாக எண்ணி வாழ்ந்து வருகிறாள்.
சிறு வயதிலேயே அவளிருக்கும் அசாதாரண சூழலை நன்குணர்ந்தவள், படிப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மேலும் பல ‘சமூக’த் தொல்லைகளிலிருந்து தள்ளியிருக்க, தைரியத்தை ஆயுதமாக்கிக் கொண்டாள். தற்காப்பு கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றவள், இவ்வுலகத்தை தனியே சந்திக்க தயாரானாள்.
நன்றாக படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவளிற்கு சரியான வேலை மட்டும் அமையவில்லை. அவளிருக்கும் ஆசிரமத்தில், படிக்கும் வரை மட்டுமே அங்கு தங்கிக்கொள்ள அனுமதிப்பர். அதன்பின் அவரவரின் வாழ்க்கையை அவரவரே வாழ வேண்டும் என்பது அந்த ஆசிரமத்தின் விதி.
அந்த ஆசிரமத்தில் அவள் இன்னும் ஒரு வாரமே கழிக்க முடியும் என்னும் நிலையில், வேலைக்காக அவளும் அலைந்து கொண்டு தான் இருந்தாள். இவளின் நிலையைக் கண்ட அந்த ஆசிரம நிர்வாகி, அந்த ஆசிரமத்தின் அறங்காவலரிடம் அவளின் நிலையை விளக்க, அந்த அறங்காவலரும், அவளின் வேலை பற்றிய விபரங்களை விரைவில் தெரிவிப்பதாகக் கூறினார்.
வேலை கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில், நிம்மதியுடன் உறங்கினாள். கனவின் தயவால் விழித்தவள் கண்டதோ, இதுவரையிலும் கண்டிராத புது இடத்தில் தன்னந்தனியாக மாட்டியிருப்பதை தான்.
அந்த அறையை சுற்றிப் பார்த்தவளின் கண்கள் அதன் செழுமையை உணர்ந்து கொள்ள, அவளின் மூளையோ வேக வேகமாக அறையின் மூலைமுடுக்குகளை அலசி ஆராய்ந்தது.
மூன்று பேர் படுக்கும் அளவிற்கு பெரிய கட்டில், அதனருகே ஆளுயர கண்ணாடியுடன் கூடிய அலங்கார மேஜை, சுவருடன் ஒட்டிய அலமாரிகள், இன்னும் சில அலங்காரப் பொருட்கள் அவ்வறையை அலங்கரித்திருந்தன. இரண்டு முறை அவ்வறையையே கவனமாக உற்று நோக்கியவளிற்கு வித்தியாசமாக எதுவும் புலப்படாததால், பெருமூச்சுடன் வெளியே செல்ல எத்தனித்தாள்.
சத்தம் எழுப்பாதவாறு மெல்ல அறையின் கதவைத் திறந்தவள், பூனை நடைபோட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். மெல்லிய நீல நிற வெளிச்சம் கசிய, அவளிற்கு தென்பட்ட காட்சியை ஏற்கனவே யூகித்திருந்தாலும், கண்களை விரித்து அக்காட்சியை உள்வாங்கிக் கொண்டாள்.
அவளிருந்த அறைக்கு இருபுறமும் நீளமான தாழ்வாரம் சென்று கொண்டிருக்க, போதிய வெளிச்சமின்மையால் அந்த தாழ்வாரம் எங்கு சென்று முடிகிறது என்பதை அவளால் காண முடியவில்லை.
இருபக்கமும் நீண்டிருந்த பாதையில், எப்பக்கம் முதலில் செல்வது என்று யோசித்தவள், அவளின் வலப்புறமிருந்த பாதையில் அடியெடுத்து வைத்தாள். நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே இருப்பதைப் போன்று தோன்றியது அவளிற்கு. சிறிது சலிப்புடனே நடந்து கொண்டிருந்தவள், சிறிது தூரத்தில் ஓரமாக இருந்த நீள்சாய்விருக்கையில் ஏதோ ஒரு உருவம் அசைவதைக் கண்டாள்.
மனதில் பயம் தோன்றினாலும், இத்தனை வருட பயிற்சியின் காரணத்தினால், மூளை தன்னிச்சையாக அடுத்து என்னவென்று யோசிக்க ஆரம்பித்தது. அருகிலிருந்த மலர் ஜாடியைக் கையில் எடுத்தவள், அவ்வுருவத்தை எதிர்கொள்ள தயாரானாள்.
தரைக்கு வலித்துவிடுமோ என்ற வண்ணம் நடையை எட்டிபோட்டு, அவ்வுருவத்தின் அருகே சென்று அதைத் தாக்க தயாராக இருக்கவும், அவ்வுருவம் தன்னைச் சுற்றியிருந்த கம்பளியை விலக்கி அவளின் முகம் காணவும் சரியாக இருந்தது.
அவ்வுருவத்தின் முகத்தைக் கண்டவள் அதிர்ந்திருக்க, அவ்வுருவமோ, “நவி…” என்றழைத்து அவளின் கைகளைப் பற்றிக் கொண்டது. அவ்வுருவம்… அவன் நந்த கிஷோர்.
நந்து, கிருஷ்ணவி வளர்ந்த ஆசிரமத்தில் தான் வளர்ந்தான். இருவரும் ஒரே நாளில் அந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை ஒட்டிப் பிறந்தவர்களைப் போல ஒன்றாகவே சுற்றுவர்.
இருவரும் ஒன்றாகவே வளர்ந்ததால், அவர்களின் குணமும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும், ஒன்றைத் தவிர. நவியிடம் இருக்கும் துணிச்சலின் பாதியளவு கூட நந்துவிடம் இருக்காது. அவனுள் துணிவை விதைக்க, அவள் பல வருடங்களாக போராடிப் பார்த்து, பின் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டாள்.
இப்போது கூட பயத்தில் அவளின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவன், “நவி, நாம எங்க இருக்கோம்? இங்க எப்படி வந்தோம்? இங்கயிருந்து எப்படி வெளிய போவோம்?” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்டு நவியை நச்சரித்தான்.
அவன் சத்தமாக பேசவில்லை என்றாலும், யாரும் இல்லாத அந்த இடத்தில் அவனின் குரல் எதிரொலிக்க, அதில் மீண்டும் பயந்தவன் அவளருகே ஒண்டினான்.
“ஷ், நந்து அமைதியா இரு. இது எந்த இடம்னு எனக்கும் சரியா தெரியல. இங்க யாரோ நம்மள கண்காணிச்சுட்டு இருக்க மாதிரி என் உள்ளுணர்வு சொல்லுது. அதனால இங்கயிருக்க ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆபத்து தான். எவ்வளவு சீக்கிரம் இங்கயிருந்து வெளியேறுறோமோ அவ்வளவு நல்லது. சோ நாம வெளிய போறதுக்கு வழியிருக்கான்னு ஆளுக்கு ஒரு பக்கம் போய் தேடுவோம்.” என்று நவி அடுத்தடுத்த திட்டங்களை வகுக்க, அதைக் கேட்டவனோ, “ஹுஹும் முடியாது. ரெண்டு பேரும் ஒன்னாவே தேடுவோம்.” என்று மறுத்தான்.
அவனின் பயம் கண்டு ஒரு பெருமூச்சுடன், “சரி வா.” என்று அவனை அழைத்துக் கொண்டு ஏற்கனவே நடந்து கொண்டிருந்த பாதையில் நடந்தாள். அடிக்கடி கண்களை சுழற்றி பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவளிற்கு கேட்ட மிக மெல்லிய சத்தம் அவளின் புலன்களை விழிப்படைய செய்தது.
கையில் வைத்திருந்த மலர் ஜாடியை கெட்டியாக பிடித்துக் கொண்டவள், நந்துவைப் பார்க்க, பயத்தை அவனின் முகம் அச்சரம் பிசகாமல் எடுத்துக்காட்டியது. இதைக் கூறி அவனை மேலும் பயமுறுத்த வேண்டாம் என்று எண்ணியவள், அமைதியாகவே நடந்தாள்.
ஏதோ ரீங்காரமிடும் சத்தம் இப்போது அவளிற்கு தெளிவாகக் கேட்டது. இம்முறை அந்த சத்தம் நந்துவையும் எட்டியிருக்க, அவன் ஏதோ பேச வருமுன் அவனின் வாயை அடைத்தவள், என்ன செய்வது என்று யோசிக்கும் முன்பே அது நடந்திருந்தது.
அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு பக்கவாட்டிலிருந்த அறையின் கதவு திறக்க, உள்ளிருந்து ஒரு ஜோடி கரங்கள் வெளிப்பட்டு அறைக்கு முன் நின்றிருந்த நந்துவை உள்ளே இழுத்தது.
இச்செயல் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்திருந்ததால், அதற்கு எதிர்வினையாற்ற கூட அவளிற்கு நேரமில்லை. திகைத்த முகத்துடன், இருளின் பிடியிலிருந்து அறையை வெறித்தவளையும், இம்முறை உள்ளே இழுத்துக் கொண்டன அந்த கரங்கள்.
அக்கரங்கள் அவளை ஆக்டோபஸ் போல சுற்றி வளைத்துக் கொள்ள, அப்போது தான் பெண்ணவள் நிகழ்விற்கு வந்தாள். ‘யார் நீ?’ என்று கேட்பதற்காக வாயைத் திறந்தவளை பேசக் கூட விடாமல், ஒரு கரம் மேலெழும்பி அவளின் வாயை மூட, மறுகரம் அவளின் வயிற்றோடு அணைத்து பிடித்துக் கொண்டது.
அந்த கரங்கள் செய்த மாயமோ, காதருகே அவள் உணர்ந்த வெப்ப மூச்சுக்கற்றோ, அந்நிய ஆடவனின் உடலோடு ஒட்டி இருக்கும் அவளின் நிலையோ, ஏதோ ஒன்று அவளின் வாய்க்கு பசைப்போட்டது போலும். இப்போது அவன் அவள் வாயிருந்து கரத்தை எடுத்திருந்தாலும் கத்தியிருக்க மாட்டாளோ!
அவனின் உடல்மொழியை வைத்தே தன்னை இழுத்து அணைத்திருப்பது ஒரு ஆடவன் என்பதை உணர்ந்திருந்தாள் நவி. மேலும் அவனின் திண்ணிய உடலும், அனாயாசமான உயரமும் அவனின் பலத்தை சுட்டிக் காட்டியது. கிட்டத்தட்ட அவனின் உருவத்திற்குள் அவள் பொதிந்திருப்பது போன்ற நிலையை வெறுத்தவள், அவனிடமிருந்து விலக முயன்றாள்.
அவளின் விலகலை எவ்வித சிரமமுமின்றி தடுத்தவன், அவளின் காதில், “ஷ், கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என்றான். குரல் தணிந்திருந்தாலும் அதன் கம்பீரத்தில் குறைவில்லை.
ஆனால் நவியின் நிலை தான் மோசமாக இருந்தது. அவள் மீண்டும் விலகக்கூடாது என்பதற்காக மேலும் தன்னுடன் அணைத்திருந்தான் அவன். அறிந்தோ, அறியாமலோ!
சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தவளின் கவனத்தை ஈர்த்தது, சற்றுமுன் மெலிதாக கேட்ட அந்த ரீங்காரச் சத்தம்.
அவன் அண்மையில் சிறிது சிதறியிருந்த கவனத்தை அவ்வொலி ஈர்த்தது. அந்த அறையின் கதவு பாதி திறந்தும் திறவாமலுமிருக்க, அவ்வொலி இவர்களை நெருங்கும் சமயம், அவளையும் இழுத்துக் கொண்டு, அக்கதவின் பின் மறைந்தான் அந்த அந்நியன்.
முதலில் அவன் இழுத்த இழுப்பிற்கு செல்ல மறுத்தவள், கண்கள் கண்ட காட்சியில் சற்று உறைந்திருக்க, அதைப் பயன்படுத்திக் கொண்டவன், அவளுடன் ஜோடியாக கதவின் பின் மறைந்தான்.
நீல நிற ஒளிக்கற்றைகளை நாலாபக்கமும் வாரியிறைத்தவாறு அந்த தாழ்வாரத்தில் பறந்து கொண்டிருந்தது அந்த நவீன ரக ‘ட்ரோன்’ கருவி. அதைக் கண்டே உணர்வற்று நின்றிருந்தாள் நவி.
அந்த கருவி அதன் ரோந்து பணியை முடித்துவிட்டு அவர்களிருந்த அறையை தாண்டி சென்றுவிட்டாலும் கூட நவி அவளின் நிலையிலிருந்து வெளிவரவில்லை.
அவளின் மனது தான் அக்கருவியைக் கண்டதும் வேறெங்கோ சென்றுவிட்டதே. ஆறு மாதங்களுக்கு முன்பு இதே கருவியை வைத்து தானே, உலகின் பல்வேறு இடங்களில் அத்தனை பேரை தயவுதாட்சண்யமின்றி சுட்டுப் பொசுக்கினர். அந்த வெறி செயலுக்கு பின், உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி, இந்த சிறிய வகை ஆளில்லா விமானம் போலுள்ள ‘ட்ரோன்’ கருவிகளை தக்க காரணங்கள் இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் பிறப்பித்தன.
இவையனைத்திற்கும் காரணமான கருவியை கண்முன் கண்டால் அவளும் உறையாமல் என்ன செய்வாள்.
அவளின் நிலையைக் கண்ட அந்த புதியவன் மெல்ல அவளை விடுவித்து, அவளின் கவனத்தை ஈர்க்க, அவளின் முன் சொடக்கிட்டான்.
அதில் சிந்தை கலைந்த நவி, அப்போது தான் ஐந்து நிமிடங்களாக அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தவனைக் கண்டாள்.
சுமாரான வெளிச்சத்திலும் கூட அவனின் கூர்மையான கண்கள் மின்னின. கண்களுக்கு சிறிதும் குறையாதவாறு கூர்மையாக இருந்தது அவனின் நாசி. சிரிக்க மறந்த இதழ்கள், மழிக்கப்படாத தாடி என்று அவனை அலசிக் கொண்டிருந்தாள் பாவையவள்.
இம்முறை தோளைத் தொட்டு உலுக்கியவன், “ஆர் யூ ஓகே?” என்றான்.
நவி, இன்னும் நடந்தவற்றிலிருந்து வெளிவராதவாளாக, தலையை மட்டும் அசைத்தாள்.
“சாரி, உங்களுக்கு விளக்கம் கொடுத்து இங்க கூட்டிட்டு வர அளவுக்கு நேரமில்ல. அதான் உள்ள இழுக்க வேண்டியதாகிடுச்சு.” என்று அவன் தன்னிலை விளக்கம் கொடுத்தபோதும் கூட அவளின் வாய் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டது.
அப்புதியவனோ மனதிற்குள், ‘இந்த பொண்ணு ஊமையோ?’ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம், “நவி…” என்று அவர்களுக்கு வெகு அருகில் ஈனஸ்வரத்தில் சத்தம் கேட்க, “நந்து…” என்று குரல் கொடுத்து, புதியவனின் சந்தேகத்தை தீர்த்தாள் நவி.
“நவி… நவி… பயமா இருக்கு. அது… அது ட்ரோன் தான? அது நம்மள கொன்னுடும் தான?” என்று பயத்தில் திக்கியபடி பேசினான் நந்து.
“ஷ், இப்போ கத்தி திரும்ப அதை இங்க வரவச்சுடாதீங்க.” என்று எச்சரித்தான் அந்த புதியவன்.
அவனின் எச்சரிக்கையில் அவனைப் பார்த்தனர் மற்ற இருவரும். நந்து, “நீங்க யாரு?” என்று கேட்க, ஒரு கையை இடுப்பிலும், மற்றொரு கையை முன் நெற்றியில் தேய்த்தும் ஒரு பெருமூச்சு விட்டவன், “ஐ’ம் ரிஷப்” என்றான்.
அந்த ரிஷப் எனப்பட்டவன், ‘இன்னும் எத்தனை பேருக்கு என் பேரை சொல்லணுமோ தெரியல!’ என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டு அந்த பெருமூச்சை விட, அதை சரியாக கவனித்து தவறாக கணித்த நவி, அவனை அலட்சியமாகப் பார்த்தாள்.
நந்துவிற்கு அவனின் பயமே பிரதானமாக இருக்க, அவன் இவர்களின் பாவனைகளை கவனிக்கவில்லை.
சில நிமிட அமைதிக்கு பிறகு, “நாம இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது. அந்த ட்ரோன் திரும்ப வந்தாலும் வரலாம்… சோ இங்கயிருந்து நாம பாதுகாப்பான இடத்துக்கு போகணும்.” என்று அவன் கூற, “இங்க பாருங்க, இது என்ன இடம்னு தெரியாது. நீங்க யாருன்னு தெரியாது. உங்களை நம்பி எப்படி வருவோம்னு நினைக்குறீங்க?” என்று எதிர்த்தாள் நவி.
இந்த எதிர்ப்பு அவனின் பெருமூச்சினால் விளைந்தது என்பதை அறியாதவன், “ப்ச்… உங்களுக்காக ரிஸ்க் எடுத்து இங்க வந்துருக்கேன்ல, என்னை சொல்லணும்!” என்று ஏதோ முணுமுணுத்தான் ரிஷப்.
அவர்களின் விவாதம் ஒரு புறமிருக்க, தூரத்தில் மீண்டும் அந்த ரீங்கார சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில், மீண்டும் பயந்த நந்து, “நவி, நாம அவரு கூட போகலாம். அவரு தான் பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றாரே.” என்றான், கண்களில் அப்பட்டமான பயத்துடன்.
நவிக்கும் அவ்விடம் விட்டு விரைந்து செல்ல வேண்டும் என்று எண்ணமிருந்தாலும், ரிஷபுடன் செல்வதா என்று யோசித்துக் கொண்டிருக்க, ரிஷபின் பொறுமையோ காணாமல் போனது
“தேட்ஸ் இட்! நான் போறேன். நீங்க வரதுனா வாங்க. இல்ல அந்த ட்ரோன் கிட்ட மாட்டிக்கோங்க.” என்று கூறிவிட்டு முன்னே செல்ல, இன்னும் யோசனையிலிருந்த நவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ரிஷபின் பின்னே சென்றான் நந்து.
முதலில் சென்ற ரிஷப் அந்த அறையின் வெளியே தலையை மட்டும் நீட்டி, நாலாபக்கமும் கண்காணித்து விட்டு வெளியே செல்ல, அவனைத் தொடர்ந்தனர் மற்ற இருவரும்.
அந்த தாழ்வாரத்தின் இறுதியில் இரு பக்கமாக பாதை செல்ல, அதில் வலது பக்கம் செல்ல வேண்டும் என்று ரிஷப் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இடது பக்கத்தில் மெல்லிய வெளிச்சம் பரவ, கூடவே அந்த ரீங்கார சத்தமும் கேட்டது.
“ஷிட், அது ட்ரோன்! சீக்கிரம் வாங்க நாம அது கிட்டயிருந்து தப்பிக்கணும்.” என்று கூறிக்கொண்டே ரிஷப் ஓட, நந்துவும் நவியும் அவன் பின்னே ஓடினர்.
ஏற்கனவே நந்துவும் நவியும் சோர்ந்திருந்ததால், அவர்களால் ரிஷபின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட முடியவில்லை. ஆனாலும் அவர்களின் பின்னே நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்த அந்த ரீங்கார சத்தம் அவர்களை ஓடச் செய்தது.
சற்று தூரம் ஓடிய ரிஷப் திரும்பிப் பார்க்க, அவர்கள் சில அடிகள் அவனை விட்டு பின்தங்கி இருந்தனர். இதே நிலை நீடித்தால், கண்டிப்பாக அதனிடம் அகப்படுவார்கள் என்பதை உணர்ந்தவன் வேகமாக வேறு திட்டத்தை செயல்படுத்த துவங்கினான்.
அருகிலிருந்த அலங்கார ஜாடியை எடுத்துக்கொண்டு வந்த வழியே மீண்டும் நடக்க, எதிர்திசையில் வந்தவர்கள் அவனை குழப்பத்துடன் பார்த்தனர்.
அவர்கள் இருவரையும் அருகிலிருந்த தூணின் பின் மறைய சொன்னவன், “நான் வந்து கூப்பிடுற வரைக்கும் வெளிய வராதீங்க.” என்றும் கூறிவிட்டு சென்றான்.
அவனின் செயல்களை கவனித்த நவி, ‘இவன் என்ன லூசா! எதுக்கு மறுபடியும் அதே வழில போறான்?’ என்று சிந்தித்து கொண்டிருக்க, இரண்டடிகள் எடுத்து வைத்த ரிஷப், மீண்டும் திரும்பி, “ஆமா உங்க பேரு என்ன?” என்று வினவினான்.
‘இந்த சூழ்நிலைல இது ரொம்ப முக்கியம்!’ என்பது போல பார்த்தவள், எதுவும் சொல்லாமலிருக்க, நந்து தான் அவசரமாக, “என் பேரு நந்த கிஷோர். இவ பேரு கிருஷ்ணவி.” என்றான்.
“ம்ம்ம் நைஸ் நேம்!” என்று முணுமுணுத்தவன் மீண்டும் அந்த ட்ரோனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவனின் முணுமுணுப்பு நவிக்கு கேட்டாலும் அவள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவள் மனமோ எதையோ உணர்த்த முயன்று தோற்றுக் கொண்டிருக்க, அவளால் அது என்ன என்பதை தான் கண்டுபிடிக்க முடியவில்லை. பயத்துடன் தன்னை நெருங்கியிருந்த நந்துவின் கைகளை ஆறுதலாக பற்றிக் கொண்டாள்.
அந்த ட்ரோனின் கவனத்தை கவராத வண்ணம் கொஞ்சம் வேகமாக நடந்து கொண்டிருந்த ரிஷப், முதலில் அவர்கள் நின்ற இடத்திற்கே (பாதை இரண்டாக பிரிந்த இடம்) வந்தான். அந்த பிரிவின் வலப்பக்கத்தில் இவன் நிற்க, இடப்பக்க பாதையில் தான் அந்த ட்ரோன் வந்து கொண்டிருந்தது.
ஒரு பெருமூச்சு விட்டவன், தன் கையிலிருந்த அலங்கார ஜாடியை அந்த மூன்றாம் பாதையில் தன்னால் இயன்ற அளவிற்கு தூரமாக வீசினான். அந்த ஜாடி கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் அந்த இடம் முழுவதுமே எதிரொலித்தது.
அந்த சத்தத்தைக் கேட்ட நந்து இன்னும் நவியுடன் ஒன்றிக்கொள்ள, நவியோ அப்போது தான் அவளின் யோசனையிலிருந்து வெளிவந்தாள். ரிஷபின் கையில் ஜாடி இருந்ததை அவளின் மூளை எடுத்துக் கூற, அவனிற்கு ஏதாவது ஆபத்தோ என்று நவி சிறிது பதற்றத்துடன் நினைத்தாள்.
அவளின் மனம் தூணிற்கு வெளியே சென்று பார்க்கலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்த, மூளையோ ரிஷப் ‘வெளியே வர வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு சென்றதை ரீவைண்ட் செய்து காட்டியது.
எதற்கும் பத்து நிமிடங்கள் அவனிற்காக காத்திருந்துவிட்டு முடிவெடுக்கலாம் என்று கடந்து செல்லும் நொடிகளை எண்ணத் துவங்கினாள்.
இங்கு ரிஷபின் இதயமும் படுவேகமாகவே துடித்துக் கொண்டிருந்தது. ஏதோ வேகத்தில் அதை செய்து விட்டான் தான். ஆனால் அவனின் கணக்கு பிழையாகிப் போகவும் வாய்ப்பிருக்கிறதே. அவன் நினைத்ததைப் போல அந்த ட்ரோன் சத்தம் வந்த திசையை நோக்கி செல்லாமல், நேராக வந்தால், இவன் அல்லவா முதலில் அதனிடம் சிக்குவான்.
இவற்றையெல்லாம் அந்த ஜாடியை தூக்கிப் போட்ட நொடியில் யோசித்திருந்தது ரிஷபின் மூளை.
ஆனால் அவன் கவலைக்கு அவசியமே இல்லை என்பது போல, சத்தம் கேட்ட நொடியிலேயே அந்த ட்ரோனின் ரீங்காரம் உறுமலாக மாற, அதன் வேகமும் அதிகரித்தது. அதே வேகத்துடன் சத்தம் கேட்ட பாதையில் நுழைந்ததைக் கண்டதும் தான் சற்று ஆசுவாசமானான் ரிஷப்.
ஆனால் அவனின் மூளையோ அவன் செய்ய வேண்டிய வேலையை நினைவூட்ட, வேகமாக நந்து மற்றும் நவி இருந்த இடத்திற்கு ஓடினான்.
‘இன்னும் ரெண்டு நிமிஷம். அதுக்குள்ள அவன் வரலைனா…’ என்று நவி யோசிக்கும்போதே ‘தட தட’வென பூட்ஸ் சத்தம் வெகு அருகில் கேட்டது. அந்த பூட்ஸ் சத்தத்திற்கு இணையாக இருவரின் இதய துடிப்பும் ஒலித்தது.
‘அவன் தானா? இல்ல வேற யாருமா? ஏதாவது ஆபத்தா? ஏன் இப்படி ஓடி வர்றான்?’’ என்று பல கேள்விகள் நவியின் மூளை அடுக்குகளில் தோன்ற, அந்த சூழலை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தாள் பெண்ணவள்.
அவளின் தவிப்பை உணர்ந்தவன் போல, “நவி… நந்து…” என்ற அழைப்புடன் வந்தான் ரிஷப்.
அதுவரை இருந்த பயம் சற்று விலக, அவனைக் கண்டதும் சிறிது ஆசுவாசமானாள் நவி. ஆனால் அப்படி இருப்பதற்கு கூட வந்தவன் அவகாசம் அளிக்கவில்லையே.
அவர்களை இழுத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஓட்டம். ஆம் ஓட்டமே தான். இம்முறை அவர்களை தனியாக வரவிடாமல், இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டு ஓடினான்.
அப்படி ஓடி அவர்கள் சென்ற இடம், பழைய பொருட்களை போட்டு அடைத்து வைத்திருக்கும் ‘ஸ்டோர் ரூம்’ போல இருந்தது. ‘பழைய’ என்ற வார்த்தைக்கு வெகு பொருத்தமாக, ‘அறையில் தூசி இருக்கிறதா, இல்லை தூசியில் அறை இருக்கிறதா!’ என்று கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இருந்தது அந்த அறை.
அந்த இடத்திற்கு புதிதாக வந்திருந்த நவியும் நந்துவும் இறும ஆரம்பிக்க, அந்த தூசியெல்லாம் பழகிப்போன ஒன்று என்பதைப் போல, ரிஷப் அந்த அறையிலிருந்து அலமாரியில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.
அவன் என்ன செய்கிறான் என்று இறுமலுக்கு இடையே பார்த்திருந்தனர் மற்ற இருவரும்.
‘கிளிக்’ என்ற சத்தத்துடன் அந்த அலமாரி திறந்து இவர்களுக்கு வழி கொடுக்க, நவியும் நந்துவும் தங்களின் இறுமலை மறந்து அதை திறந்த வாய் மூடாமல் பார்த்தனர்.
அவர்களின் அதிர்ச்சியைக் கண்டவன், அவர்களை உலுக்கி, “சீக்கிரம் உள்ள வாங்க. அந்த ட்ரோன் வரதுக்குள்ள இந்த ரகசிய அறைகுள்ள போயிடணும்.’ என்றான்.
‘என்னது ரகசிய அறையா?’’ என்று நவி வியக்க, “நவி, எனக்கு இப்போ ரொம்ப பயமா இருக்கு.” என்று கூறினான் நந்து.
“ஷ், நந்து அமைதியா வா.” என்று கூறியவாறே அந்த ரகசிய அறையினுள் காலடி எடுத்து வைத்தாள். அவளைப் பின்தொடர்ந்தான் நந்து.
அங்கு அவர்கள் கண்ட காட்சியில் அந்த நாளின் அடுத்த அதிர்ச்சியில் உறைந்தனர் இருவரும்.
தொடரும்…