
1 – காற்றிலாடும் காதல்கள்.
இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்…
ஆகாயத்தில் பறந்து விரிந்திருக்கும் சூனியத்திலிருந்து ஓர் வெளிச்சம் பூமியின் மேலே வந்து நின்றது. ஒளி வெள்ளமாக முதலில் தெரிந்தவை மெல்ல இரண்டு உருவங்களாகத் தெரிய, இரண்டு பெண்கள் சிரித்தபடிப் பூமியைப் பார்த்து நின்றனர்.
“ஏழிசை! நீ வணங்க வேண்டிய தெய்வம் அங்கே வீற்றிருக்கிறார். அவரது மனம் குளிர்ந்துவிட்டால் போதும். நான் கூறிய வார்த்தை ஞாபகம் இருக்கிறதா?” எழில் கொஞ்சும் அழகியவள் கேட்டாள்.
“நன்றாக நினைவிருக்கிறது காந்தா. நீ திரும்பி செல். நான் அத்தெய்வத்தின் அன்பை பெற்றபின் தான் நமது லோகத்திற்கு வருவேன்.” எனக் கூறிய ஏழிசை ஜோதிரூபமாக உருமாறி பூமியின் ஓர் பகுதியில் தரையிறங்கினாள்.
நிகழ்காலம்…
அர்த்த ஜாம வேளையில் கையில் டார்ச்சுடன் அழுத்தமான காலடிகளில் காய்ந்த இலைச்சறுகுகள் மிதிபட, கருப்பு உடையணிந்து முதுகில் சிறிய தோள்பையுடன் ஊரின் எல்லை நோக்கி அவன் சென்றுக்கொண்டிருந்தான்.
தன்னை யாரோ பின்தொடர்ந்து வருவதைப் போன்ற உணர்வினால் வேகமாக முன்னே நடந்தான்.
தலை முதல் கால் வரையிலும் கருப்பு உடையணிந்து தன்னை மறைத்துக் கொண்டு, கண் பகுதியிலிருந்த இடைவெளியில் பாதையைக் கண்டு அவனது கால்கள் சென்றன.
அவனின் வேகநடையில் இடையிலிருந்த இடைச்சுற்றிப் போடும் சிறிய பை ஆட்டம் கொண்டு, உள்ளிருக்கும் பொருட்களின் இருப்பைச் சத்தத்தின் வழி வெளிக்காட்டியது.
இன்று எப்படியேனும் அந்த எல்லையைக் கடந்து ஊரின் எல்லைக் கோவிலை கடந்து சென்றுவிடவேண்டுமென்ற முனைப்பு நிறைந்திருந்தது. ஆனாலும் கோவில் கோபுரத்தைக் கண்டதும் அவன் கால்கள் நடுக்கம் கொண்டு தள்ளாடி, அங்கிருந்தப் பெரிய பாறையின் பின்னே பதுங்கிநின்றன.
இன்று நிறைந்த பௌர்ணமி. வானில் சந்திரதேவன் தனது முழு தேஜஸையும் காட்டி இரவை பகலாக்கும் முயற்சியில் இருந்தான்.
கருப்பு உடையணிந்தவனோ கோவில் கோட்டையைக் கண்டதும் இருட்டில் கலந்து தப்ப நினைத்தும் முடியாமல், சந்திரனின் உபயத்தால் காரிருளில் மறையவும் முடியாது தேங்கி நின்றான். அந்த வருத்ததில் அவனது இதயம் தாறுமாறாகத் துடிக்க, வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றிக் கொண்டிருந்தான்.
“டேய் கீதா, இங்க வராதன்னு எத்தன தடவ சொல்றது? வா போலாம்.” என அவன் பின்னிருந்து ஒரு குரல் கேட்டதும் உடல் உதறி கீழே விழுந்தான் கீதா என்று அழைக்கப்பட்ட பகவத்கீதன்.
அவன் தாயிற்கு பகவத்கீதையின் மேல் அதீதப் பிரியம் ஏற்பட்டக்காரணத்தினால், அதையே மகனுக்கு பெயராகச் சூட்டிவிட்டார். சிறுவயதில் விபத்தில் தந்தையை இழந்தபின், தாய் மற்றும் தங்கையோடு வந்துச் சேர்ந்த இடம் தான் அம்மாவின் அப்பா ஊரான‘விண்ணூர்காரப்பட்டினம்.’
இந்த ஊரின் பெயர் மட்டுமல்ல இங்கிருப்பவர்களும் வித்தியாசமானவர்கள் தான். விண்ணுலகத்தவர்கள் இந்த ஊருக்கு அவ்வப்போது வந்துத் தங்கிச் செல்வதாக இன்று வரையிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஊரில் உள்ளவர்கள் மாலை சூரிய அஸ்தமனமானபின் வெளியே வருவதில்லை. அப்படி வெளியே வந்தால், தேவர்கள் அவர்களையும் விண்ணுலகம் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சம்.
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படியான ஒரு ஊரில் இருந்துக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கும் முயற்சியில் இருக்கிறான் நமது நாயகன் கீதன்.
ஆனாலும் அவனது முயற்சிகள் ஒவ்வொரு முறையும் எல்லைக்கோவிலைக் கண்டதும் தடைப்பட்டு விடுவது தான் பரிதாபம்.
இத்தனை வருடங்களாக அவனும் பலமுறை முயற்சித்துவிட்டான். ஆனாலும் இந்த இரண்டு தினங்களில் மட்டும் இரவு நேரம் ஊரைத் தாண்ட முடியவில்லை. இதில் ஏதோ மர்மம் இருப்பதாக அவன் மனது சொன்னாலும் மூளை அதை எதிர்த்து வாதம் செய்தது.
மற்ற நாட்களில் சாதாரணமாக இரவில் உலா வருபவனால் இந்த இரண்டு தினங்கள் மட்டும் அந்த எல்லையைத் தாண்டமுடிவதில்லை என்பது தான் உண்மையும் கூட…
“டேய் கீதா… என்னடா கண்ண தொறந்தே கனவு காணறியா? வாடா சீக்கிரம். மணி 10 ஆச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல தேவலோகத்துல இருந்து தேவருங்க வந்துடுவாங்க. நம்மள பாத்தா அவ்வளவு தான்.” என அவனின் ஆருயிர் நண்பன் இந்திரன் அவனை இழுத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான்.
பகவத்கீதன் மனதில் சோர்வு எழ, அப்படியே தரையில் படுத்து முற்றத்தின்வழியே சந்திரனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஏன்டா கீதா.. உன்கிட்ட எத்தன தடவை தான் சொல்றது? அமாவாசை பௌர்ணமில வெளிய வராதன்னு போன வாட்டியே அய்யா என்னை பிடிச்சி ஏசினாக தெரியுமா? ஊர்ல இருக்கறவனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான். பெரிய பிரச்சினை ஆகிபுடும் டா. கொஞ்ச நாளைக்கு உன் ஆராய்ச்சி எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு கம்முன்னு இரு. தங்கச்சி கல்யாணம் நல்லபடியா நடக்க வேணாமா?”என இந்திரன் தன்பாட்டில் பேசிக்கொண்டிருக்க, இவனோ இம்முறையும் கொண்ட தோல்வியில் மனம் நொந்தான்.
“ஏன்டா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நீ ம்ம் கூட சொல்லாம சந்திரன வெறிச்சிட்டு கிடக்க. இங்க இந்திரன் பேசிக்கிட்டு இருக்கேன்ல” என புலம்ப, கீதன் அவனை ஒரு பார்வைப் பார்க்க கப்பென வாய்மூடிக்கொண்டு அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தான். கீதன் பார்வையிலேயே வேண்டாமென மறுக்க, “நீ காலைல இருந்து ஒரு வா சோறு கூட திங்கலன்னு தங்கச்சி சொல்லிச்சி. நீ உண்ணாம உறங்காம இப்படி இருந்தா ஆத்தா மனசு என்ன பாடுபடும்? எனக்கு தான் ஆத்தாளும் இல்ல, தங்கச்சியும் இல்ல. எந்த ஒறவும் இல்லாத அநாத பயலா திரியறேன். உனக்கு அவங்கெல்லாம் இருக்கப்ப என்னடா வெசனம்? சாப்பிட்டு வந்து படு. வயித்த காயப்போடாத கீதா..” எனக் கரிசனமாகப் பேசிப்பேசிச் சாப்பிட வைத்து தன்னருகிலேயே படுக்கவைத்துக் கொண்டான்.
அடுத்தநாள் பொழுது புலர்ந்ததும் கீதன் புன்னகைத் ததும்பும் முகத்துடன் எழுந்து குளித்துவிட்டு பளிச்சென வெள்ளை வேஷ்டி கட்டி வெளிர் நிற சட்டையணிந்து, கோவில்சென்று இறைவனை வணங்கி நெற்றி நிறைய விபூதி அள்ளிப் பூசிக்கொண்டு, எதிரில் வந்தவர்கள் அனைவரிடமும் சிரித்துப் பேசியபடி வீட்டிற்கு வந்துச் சேர்ந்தான்.
“என்னடா நேத்தும் வெளிய போனியா?” என அவனின் தாத்தா ஊஞ்சலில் அமர்ந்தபடிக் கேட்டார்.
“இல்ல. இந்திரன் வீட்ல இருந்தேன்.“ அவரின் முகம் பார்க்காமல் பதில் கூறிவிட்டு மாடிக்குச் சென்றான்.
“விசாலம்… விசாலம்… இங்க வா உன் பேரன என்னாண்டு விசாரிக்கமாட்டியா? நேரம் காலம் பாக்காம ராவுல ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? என் புள்ளைக்கு இவன் அப்பனாலையும் நிம்மதி இல்ல,. இவனாலையும் நிம்மதியில்ல.. சொல்லி வை.. வர்ற அமாவாசைல மட்டும் இவன் வெளிய போனான் அவ்ளோதான் சொல்லிட்டேன்..” மனைவியிடம் கத்திவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
அவர் விஸ்வநாதன். கணவன் மனைவி இருவருக்கும் பெயர் பொருத்தம் மட்டுமல்ல மனப்பொருத்தமும் அதீதம் தான். இருவரும் ஒருவரின் மனதில் உள்ளதை வாய்திறந்து கூறாமலே முகம் பார்த்துப் புரிந்து நடந்துக்கொள்வர்.
கீதனுக்கு தாய் மாலாவின் மேல் அன்பிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. தந்தை வடிவேலன் எப்படி இறந்தார் என்று இன்றுவரை அவனுக்குக் கூறப்படவில்லை. கீதனை விட 2 ஆண்டுகள் சிறியவள் கயல்விழி. கல்லூரி முடித்து வந்ததும் மாப்பிள்ளையைத் தயாராக வைத்திருந்தார் விஸ்வநாதன்.
அவரின் மேல் இருக்கும் நம்பிக்கையினால் மாலாவும் தந்தையின் பொறுப்பில் மகளின் வாழ்வை விட்டுவிட்டார். அதே ஊரின் தலைவர் ராமசாமி மகனுக்கு தான் மணம் பேசியிருக்கிறார்கள்.
அவர்கள் ஊரைப் பொறுத்தமட்டில் அவர்களின் நம்பிக்கைகளை மதித்து நடப்பவர்களுடன் தான் சம்பந்தம் வைத்துக் கொள்வார்கள். முடிந்தவரை அருகில் உள்ள 3 ஊர்களுக்குள் பேசிவிடுவார்கள்.
ஆனால் வடிவேலன்-மாலா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். தேவர்களின் மகளான தெய்வானையை மணந்த முருகன், வள்ளியை காதல் திருமணம் புரிந்துக் கொண்ட கதை அங்கே மிகவும் ஆழமாக மனதில் பதிந்துவிட்டபடியால், காதலுக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.
‘விண்ணூர்காரப்பட்டினம்’ ஊரைச் சுற்றி இருக்கும் 18 ஊர்களில் யாரும் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. ஒருவிதமான தேவர்களின் ஆளுமை இன்றும் இருப்பதாக அனைவரும் நம்பி வருவதால் ஜாதி மத பிரச்சினைகள் வருவதில்லை. இந்த ஊர்களைத் தாண்டி வசிக்கும் மக்களை இவர்கள் அணுகும்போது தான் பிரச்சினை வருகிறது. மற்றவர்களை விட இவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்கிற எண்ணமும் முக்கிய காரணம்.
அப்படியொன்றும் இவர்கள் மட்டும் சிறப்பில்லை அனைவரும் மனிதர்கள் தான் என்று நிரூபிக்கத்தான், கீதன் அந்த இரண்டு நாட்களில் ஊரை விட்டுச் செல்ல முயன்று கொண்டிருக்கிறான்.
இவர்களின் மூட நம்பிக்கையினால் பல நலத்திட்டங்களை இந்த 18 ஊர்காரர்களும் தவிர்த்து வருவதால் அதைப் பொய்யாக்க கீதனுடன் இன்னும் சிலரும் முயன்று வருகின்றனர்.
“டேய் அண்ணா எந்திரிச்சி வா கொஞ்சம் கடைதெருவுக்கு போகணும்.”கயல்விழி அழைத்தாள்.
“நான் வரல. இந்திரன கூட்டிட்டு போ!”
“அந்த மொட்டை பாறைல மல்லாக்க படுத்து வானத்த வெறிச்சி பாக்கற வேல தானே? கொஞ்ச நேரம் மனுஷங்கள வந்து பாரு. அப்பறம் பாறைய பாரு.”
“ஓவரா வாய் பேசாம போ.. வந்துட்டா கட்டபைய தூக்கிட்டு.. அடுத்த தெருவுக்கு தானே போகப்போற.. அடுத்த கண்டத்துக்கா போற.. எத்தன வாங்குவ.. எப்ப பாரு கடைக்கு போய்கிட்டு..” அவளிடம் சிடுசிடுத்துவிட்டு உடைமாற்றிக் கொண்டு உச்சிபாறைக்குக் கிளம்பினான்.
“இவனுக்கு பைத்தியம் முத்திரிச்சி.. உச்சி பாறைல உக்காந்து உக்காந்து மூளை உருகி காதுவழியா வந்துட்டு இருக்கு போல.. அந்த இந்திரன் லூசு எங்க இருக்கோ? ம்மா.. எம்மா.. உன் புள்ள உச்சிப்பாறைக்கு கிளம்பிட்டான்.. என்ன பண்றது?” எனக் கத்தியபடித் தாயிடம் சென்றாள்.
“அவன் ஒரு மணிநேரத்துல வருவான்.. நீ முன்ன கிளம்பி இந்திரனோட போ.. அங்க போய் மருமவன்கிட்ட மரியாதையா பேசு.. உன் மாமனார் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க.. நான் ஆச்சிய கூட்டிட்டு உங்கண்ணன் கூட கடைக்கு போயிட்டு வரேன்.. கோவிலுக்கே நாங்களும் வந்துடுவோம்.” மாலா குரலை உயர்த்தாமல் பதில் கூறி அனுப்பிவைத்தார்.
“பகவத் கீதன் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வா.. ஆச்சிய கூட்டிட்டு கடைக்கு போகணும்..“ என மகன் மறுப்பதைக் கருத்தில் கொள்ளாமல் அவனுக்குத் தொலைபேசியில் அழைத்துக் கட்டளையிட்டார்.
“ஏண்டி… அவன் வரலைன்னா விடுவேன்.. ஏன் இப்படி பண்ற?” விசாலாட்சி பேரனுக்காகப் பேசினார்.
“உன் பாசம் எல்லாம் உன்கிட்ட அவன் பேசறப்ப காட்டு.. எனக்கும் என் மகனுக்கும் நடுவுல காட்டாத.. சீக்கிரம் சாப்டு கிளம்பி வா.. நான் வயல் கணக்கு முடிச்சிட்டு வரேன்..” முகத்தில் எந்தவுணர்வும் காட்டாமல் அதிராமல் தாயையும் எட்டி நிறுத்திப் பேசிவிட்டுச் சென்றார்.
அந்தக் கொடூர மரணத்தைக் கண்டும் மகள் தைரியமாக நிற்கிறாள் என்கிற நினைவில் சந்தோசம் கொள்வதா? துக்கம் கொள்வதா? என்று அவருக்கு இன்றும் புரியவில்லை.
