அத்தியாயம் 1
கருமேகங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதற்காக ஆர்வத்துடன் நெருங்குவதும், பின்பு விலகுவதுமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தன.
வானிலை மட்டுமல்ல, மக்களுமே அந்தக் காலை வேளையில் மந்தமாகத்தான் அவரவர்களின் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.
அவர்களுள் ஒரே ஒருவன் மட்டும் உற்சாகமாக அவன் கரத்திலிருந்த பானத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தான்.
காரணம் என்னவோ?
அவனின் மனம் கவர்ந்தவளைத் தரிசித்ததினாலோ?
அவனைப் போலவே, ஒரே ஒரு கருமேகம் மட்டும் உற்சாகமாக மற்றொன்றை இடிக்க, அதன் காரணமாக அன்றைய நாளின் முதல் துளி மழை இறங்கிப் பூமியை ஸ்பரிசிப்பதற்கு முன்னர், அதை தன்னுடலில் வாங்கிக் கொண்டாள் அவள், அவனின் மனம் கவர்ந்தவள்.
மழைத்துளி தன்மேல் பட்ட எரிச்சலில், அவளின் உதடுகள் லேசாக நெளிய, அதை ரசித்திருந்தன அவனின் விழிகள்.
அடுத்த மழைத்துளி படுவதற்குள் பணியிடத்தை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவளின் கால்கள் விரைய, அவளின் முயற்சியைக் கலைக்கவென்று கங்கணம் கட்டிக் கொண்டதைப் போல சடசடவென்று பெய்யத் தொடங்கியது மழை.
அதில், ஒரு பெருமூச்சுடன் ஒருநொடி நடையை நிறுத்தி வானத்தைக் கண்டாள் பெண்.
அவளின் துளைக்கும் பார்வை வானத்தைத் தாக்கியதோ என்னவோ. ஆனால், அவளை அங்குலம் அங்குலமாகக் கவனித்துக் கொண்டிருந்தவனை மிக மோசமாக தாக்க, சிரிப்புடனே அந்த பாதிப்பைத் தாங்கிக் கொண்டான்.
அவனின் இந்த பைத்தியக்காரத்தனத்தைப் பற்றி அறியாதப் பாவையோ, தன்னை முழுதாக நனைத்த மழையை வஞ்சித்தப்படி, அவள் வேலை செய்யும் ‘கொக்கோ விஸ்பெர்ஸ்’ என்ற இன்னட்டு (சாக்லேட்) விற்பனையகத்தை அடைந்திருந்தாள்.
நகரத்தின் பெருவளர்ச்சியை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் சிறு நகரம்தான் மறைப்புரம்.
குளிர்பிரதேசமான மறைப்புரத்தில் இனிப்பகங்களுக்குப் பஞ்சமில்லை. அந்த ஊரின் கால நிலையும் அதற்கேற்றவாறு அமைந்திருக்க, சில பன்னாட்டு நிறுவனங்கள் கூட இந்த இனிப்பகங்களில் முதலீடு செய்துள்ளன. அவற்றுள் ஒன்றான ‘கொக்கோ விஸ்பெர்ஸ்’ஸில் தான் அவள் வேலை செய்கிறாள்.
அவள் உள்ளே நுழைந்ததுமே, “ம்ச், இவ்ளோ நேரமா வரதுக்கு? நான் ஒருத்தியே எத்தனை வேலையை செய்யுறது?” என்று அங்கு அவளுடன் வேலை செய்யும் வானதி சலித்துக் கொண்டாள்.
இத்தனைக்கும், அந்நேரத்தில் அப்படியொன்றும் கூட்டம் கூடிவிடவில்லை.
ஆனாலும், வானதியின் பேச்சுக்கு எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை அவள்.
நிச்சயமாக, ‘உன்னையெல்லாம் மதிச்சு பதில் சொல்லணுமா?’ என்ற மனப்பான்மைதான் அது!
“திமிரு திமிரு!” என்று வானதி கோபத்துடன் முணுமுணுப்பதைக் கண்டு கொள்ளாமல், தன்மீது இருக்கும் ஈரத்தைத் துடைத்துக் கொண்டு, அவளின் வழக்கமான வேலையை ஆரம்பித்து விட்டாள்.
வந்ததும் அவளின் முதல் வேலை, அடுக்கப்பட்டிருக்கும் காவிக்கண்டுகளில் காலாவதியாகி விட்டவைகளை நீக்கிவிட்டு, தொழிற்சாலையிலிருந்து வரும் புதியவைகளை அடுக்குவதுதான்.
வானதியின் வேலையும் இதுதான். ஆனால், அவளோ வந்ததும் வராததுமாக அலைபேசியை எடுத்துப் பேசத் தொடங்கி விடுவாள்.
இன்றும் அப்படித்தான், சில நொடிகள் காலதாமதமாக வந்தவளைக் கேள்விக் கேட்ட வானதி, அவளின் பணி முடிந்து விட்டதைப் போல அலைபேசியுடன் ஐக்கியமாகி விட்டாள்.
அதைக் கண்டு கொள்ளாதவளோ, எப்போதும் போலத் தன் வேலைகளில் மூழ்கிப் போனாள்.
அவற்றை சரிபார்த்து அடுக்கி முடிக்க ஒரு மணி நேரம் பிடித்தது.
அதன்பிறகு, அவளின் வழக்கமான பில் கவுண்டரில் வந்தமர்ந்தாள்.
அதே போல் சில நாள்களின் வழக்கமாக, அங்கு வந்து சேர்ந்தான் அவன், “ஹாய் இரா!” என்ற அழைப்புடன்.
அழைத்தவனின் நாமம் அத்வைத்.
அத்வைத்தின் வருகை இராவிற்கு ஆயாசத்தை அளித்தாலும், அதை அவள் வெளிக்காட்டவில்லை.
காட்டிவிட்டால், அவள் இரா அல்லவே!
இராவின் ஆயாசத்திற்குக் காரணம், அத்வைத் அங்கு இன்னட்டுக்களை வாங்க வருவது ஆறாவது முறை. அதுவும், ஒருநாள் கூட இடைவெளி விடாமல் அல்லவா வந்து கொண்டிருக்கிறான்.
அவனின் தொல்லை புரிந்தாலும், இராவினால் எதுவும் செய்ய முடியவில்லை.
தினமும் வந்தாலும், எவ்வித தவறான பார்வையோ, அனாவசியப் பேச்சோ அவனிடம் இல்லை. ஒரு ரசிப்புப் பார்வையை மட்டுமே வெளிப்படுத்துபவனிடம், எதையாவது கேட்டு, அதையே அவன் சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே அமைதியைக் கடைப்பிடிக்கிறாள் இரா.
அவனைக் கண்டதும் சிரிப்புடன் வானதி அலைபேசியை அணைத்துவிட்டு அருகில் வர, அத்வைத் மற்றவளைக் கண்டுகொள்ளவே இல்லை.
அவன் பார்வை முழுவதும் அவனின் பாவையிடத்தில்தான்.
அதில், வானதி பொறாமையில் பொசுங்க, அதை நீட்டிக்க விரும்பாத இராவோ, ஒரு பெருமூச்சுடன், “என்ன வேணும் சார்?” என்று அன்றைய நாளில் முதல் முறையாக வாயைத் திறந்தாள்.
அவளின் பேச்சையும் ரசித்தவனாக, “என்ன கேட்டாலும் கிடைக்குமா?” என்று குறும்புப் புன்னகை உதட்டில் தவழ வினவ, இராவோ பல்லைக் கடித்துக் கொண்டு, “என்ன சாக்லேட் வேணும்?” என்று வினாவை மாற்றினாள்.
“ம்ம்ம்… நீங்க எனக்கு எதை சஜ்ஜஸ்ட் பண்ணுவீங்க இரா?” என்று அத்வைத் வினவ, அதற்கு இரா பதில் சொல்வதற்கு முன்னர், “சஜ்ஜஷன் எல்லாம் புதுசா வரவங்களுக்குத்தான். டெயிலி வரவங்களுக்கு இல்ல.” என்று கடுப்புடன் மொழிந்தாள் வானதி.
அவனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பவளை சிறிதும் கண்டு கொள்ளாமல், எப்போதும் உம்மென்று இருக்கும் இராவை நோக்கியே அத்வைத்தின் பார்வை இருப்பதால் உண்டான கடுப்பு அது.
“ஓஹ், ஆமால்ல ஏற்கனவே எனக்கு சஜ்ஜஸ்ட் பண்ணியிருக்கீங்களே இரா. சாரி, நான்தான் மறந்துட்டேன்.” என்று அதையும் சிரிப்புடன் கூறியவன், யோசிப்பது போலான பாவனையுடன், அப்போதும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘அடேய் அத்வைத், இதுக்கு பேரு ஸ்டாக்கிங்டா.’ என்று அவனின் நியாய மனம் கூக்குரலிட்டாலும், அதைப் பொருட்படுத்தும் நிலையில் அவனில்லை.
அத்வைத்தின் காந்தப் பார்வை மின்னலென பெண்ணின் மனதை தாக்கி, அதனுள் புக முற்பட, சலனத்தை அதிர்ச்சியுடன் உணர்ந்தவள், அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற முனைப்புடன், கைக்கு அகப்பட்ட ‘சாக்லேட் டிரஃபில்ஸ்’ வகைகளை அள்ளி, ‘கொக்கோ விஸ்பர்ஸ்’ என்று அச்சிடப்பட்டிருந்தப் பைக்குள் வைத்து, அவனிடம் கொடுத்தாள்.
இவையனைத்தும் நொடிக்குள் நடந்து முடிந்திருக்க, அவளின் வேகத்தை உணர்ந்தவனின் இதழ்கள் இப்போது தாராளமாக விரிந்தன.
அவளிடமிருந்து பையைப் பெற்றுக் கொண்டவனோ, “சோ ஸ்வீட், நம்மளோட ஃபர்ஸ்ட் மீட்ல, இதே சாக்லேட்டைதான குடுத்தீங்க?” என்று அத்வைத் சிலாகித்துக் கூற, “ஹ்ம்ம், எங்க சாக்லேட் எல்லாமே ஸ்வீட்டாதான் இருக்கும். அதான் வாங்கிட்டீங்களே, கிளம்ப வேண்டியதுதான?” என்று எரிச்சலுடன் கேட்டாள் வானதி.
அதுவரை சாந்தமாக இருந்தவனோ, வானதியை திரும்பி முறைத்து, “இப்படிதான் கஸ்டமரை ட்ரீட் பண்ணுவீங்களா? உங்களைப் பத்தி உங்க ஓனர்கிட்ட சொல்லவா? இதை மட்டுமில்ல… காலைல வந்ததுலயிருந்து, எந்த வேலையும் செய்யாம, உங்க மொபைலே கதின்னு இருந்தீங்களே… அதையும் சொல்லவா? சும்மா இருக்குறதுக்கா, உங்களுக்கு சம்பளம் தராங்க?” என்று பேசப் பேச, வானதியை முகம் பேயறைந்ததைப் போலானது.
உடனே பம்மிவிட்ட குரலில், “சாரி சார். கம்ப்ளைன் எதுவும் பண்ண வேண்டாம்.” என்று கெஞ்சியவள், அங்கு அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நின்று கொண்டிருந்த இராவை வஞ்சப் பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.
அவள் நகரும் வரை காத்திருந்த அத்வைத் இராவிடம், “இதை நீங்களே கேட்டிருக்கலாம். எப்பவும் அடுத்தவங்க சப்போர்டுக்காக வெயிட் பண்ணக் கூடாது. நமக்காக நாமளே நிக்கலைன்னா எப்படி?” என்று அக்கறையுடன் கூற, அவனின் அந்த அக்கறை கூட பெண்ணிற்கு கசந்தது.
“உங்களை எனக்கு சப்போர்ட் பண்ணச் சொல்லி சொன்னேனா? நீங்களா தேவையில்லாம பேசிட்டு, எனக்கு இப்போ அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்களா. முதல்ல நீங்க யாரு? இங்க உங்களைப் பேச விடுறதால, எப்பவும் அப்படியே இருப்பேன்னு இல்ல.” என்று கோபத்தில் படபடத்தாள் இரா.
அதையும் ரசித்துத் தொலைத்தது ஆணின் இதயம்.
“அட, நீங்க கோபப்பட்டா, உங்க மூக்கு நுனி சிவந்து போய், ரொம்ப அழகா இருக்கே. இதுக்கே, உங்களை அடிக்கடி கோபப்படுத்தலாம் போலயே!” என்று அத்வைத், அவள் திட்டியதைப் பொருட்படுத்தாமல் கூற, அவனையும் அவனின் இலகுத் தன்மையையும் அத்தனை எளிதில் சகித்துக் கொள்ள முடியாதவளோ, ‘பைத்தியம்’ என்று வாயசைத்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு, அவளின் வாயசைவை புரிந்து கொள்வதா கடினம்?
அதையும் புரிந்து கொண்டவன், பெருங்குரலில் சிரிக்க, அடுத்து என்ன சொல்லியிருப்பானோ, அவனது அலைபேசி ஒலித்து, இராவைக் காப்பாற்றியது.
“ஓஹ், வேலை என்னைக் கூப்பிடுது. நாளைக்கு வந்து கன்டின்யூ பண்றேன், பை.” என்றவன் கிளம்பிவிட, ஆசுவாச மூச்சை வெளியிட்டாள் இரா.
ஆனால், அதைப் பொறுக்காதவனோ, மீண்டும் அவளருகே வந்து, “இன்னைக்கு, என்னை மட்டுமில்ல வானத்தை நீ முறைச்சது கூட அவ்ளோ அழகா இருந்துச்சு. ஹ்ம்ம், அதை ஒரு ஸ்நாப் எடுத்துருப்பேன். ஆனா, பெர்மிஷன் இல்லாம ஃபோட்டோ எடுக்குறது குற்றமாச்சே. சோ, எனக்கு எப்போ பெர்மிஷன் குடுக்கப் போற?” என்று மெல்லியக் குரலில் கேட்டவன், அதற்கான பதிலை எதிர்பார்க்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டான்.
பின்னர், அவள் கோபத்தில் எதையாவது கொண்டு அடித்து விட்டால்?
ஆனால், அடிக்கும் அளவிற்கு இரா சென்றிருக்க மாட்டாளோ?
அவள்தான், அவனின் குரலில் உருகத் தொடங்கிவிட்ட மனதை இழுத்துக் கட்டிப் போடும் வேலையில் மூழ்கி இருந்தாளே.
அடங்க மறுத்த மனதை, ‘ஒரு நார்மல் லைஃப்பை உன்னால வாழவே முடியாது.’ என்ற குரலின் மூலம் இலகுவாகவே அடக்கியிருந்தாள் இரா.
*****
விற்பனையகத்தை விட்டு வெளியே வந்த அத்வைத், அவனுக்கு வந்த அழைப்பை ஏற்க, மறுமுனையில் இருந்த அவனின் தந்தை ஆதிகேசவனோ, “டேய் நல்லவனே, அப்பான்னு ஒருத்தன் இருக்கானே, அவனுக்குக் கால் பண்ணலாம்னு தோணுதாடா உனக்கு? நீ மட்டும் ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்க, ராஸ்கல்.” என்று பேச, கையிலிருந்த பொட்டலத்திலிருந்து ஒரு காவிக்கண்டை எடுத்துச் சுவைத்தபடி, “உங்களுக்கு ஊர் சுத்த முடியலையேன்னு பொறாமைப்பா.” என்றான் மகன்.
“அதுசரி, உன் டீம் ஹெட் சாரதி உனக்கு கால் பண்ணா பரவாலை. எனக்கு எதுக்குடா கால் பண்ணி உசுரை வாங்குறான்? அப்படி என்னத்ததான்டா பண்ணித் தொலைச்ச?” என்று ஆதிகேசவன் வினவ, “பண்ணித் தொலைக்கல. அதுதான் பிரச்சனை.” என்று சாவகாசமாக வாய்க்குள் இன்னட்டை அதக்கியபடி கூறினான் அத்வைத்.
“டேய், ஒண்ணு சாப்பிடு, இல்ல பேசு. ரெண்டையும் ஒரே நேரத்துல பண்ணாதன்னு எத்தனை முறை சொல்றது?” என்று ஆதிகேசவன் கூற, “ஓகே டாடி. நான் சாப்பிட்டு அப்புறமா கால் பண்றேன், பை.” என்று சிரிப்புடன் கூறிய அத்வைத், அதே வேகத்தில் அழைப்பைத் துண்டிக்க முயன்றான்.
“டேய் டேய், பொறுடா. உன்னை இப்போ விட்டா, பின்ன எப்போ பிடிக்க முடியும்னு தெரியல. தயவுசெஞ்சு, அந்த சாரதிக்கு கால் பண்ணி பேசிடு. அவனோட தினமும் மாரடிக்க முடியல. ஒரே ஒரு ஃபிரெண்டை வச்சுக்கிட்டு, நான் படுற அவஸ்தை இருக்கே…” என்று ஆதிகேசவன் புலம்ப, தந்தையின் புலம்பல், ஒருபக்கம் சிரிப்பாக இருந்தாலும், மறுபக்கம் பார்க்கப் பாவமாகவும் இருந்தது.
எனவே, “சரி சரி, ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. இப்பவே கால் பண்ணிப் பேசுறேன்.” என்றவன், தந்தையின் ஒருநொடி நிம்மதியைக் கூட நீடிக்க விடாமல், “ஆனா, அதுக்கப்புறம் அவரு உங்ககிட்ட பேசுனா, அதுக்கு நான் பொறுப்பில்ல.” என்றவன் உடனே அழைப்பைத் துண்டித்துவிட, ஆதிகேசவனுக்குத்தான் விஷயம் தெரியாமல் மண்டை காய்வது போலானது.
அவனின் வழக்கமான இடமான, அந்த உணவகத்தை அடைந்தவன், அவன் இந்த ஆறு நாள்கள் செலவளித்த மேசையை ஆக்கிரமித்துக் கொண்டு, தந்தையிடம் வாக்களித்ததுப் போல, சாரதிக்கு அழைத்தான்.
முதல் அழைப்பிலேயே ஏற்ற சாரதி, “எப்பா டேய், உயிரோடதான் இருக்கியா?” என்று ஆரம்பித்தவர், அத்வைத்தின் காதுகள் கதறும் அளவிற்கு அவரின் வேதனையைப் பதிவு செய்தார்.
அவரின் ஆயாசத்திற்குக் காரணம் இதுதான்.
அத்வைத், புகழ்பெற்ற பத்திரிக்கை ஒன்றில் பத்திரிக்கையாளனாக வேலை செய்கிறான். அமானுஷ்யங்கள் மற்றும் மர்மங்கள் சார்ந்த பிரிவுதான் அவனது.
அவனின் உயரதிகாரியான சாரதியின் செல்லப்பிள்ளை அவன். அதற்கு, அவரும் ஆதிகேசவனும் பால்ய நண்பர்கள் என்ற காரணத்தைத் தாண்டி, அத்வைத்தின் திறமைதான் முக்கிய காரணம்.
அவனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால், சரியான நேரத்திற்கு அதை முடித்து விடுவான். இதுவரை அப்படித்தான்!
ஆனால், இம்முறையோ ஒரு வாரமாகியும், அவனிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்பதுதான் சாரதியின் ஆற்றாமைக்கான காரணம்.
“பேசி முடிச்சுட்டீங்களா பாஸ்?” என்று நிதானமாகக் கேட்ட அத்வைத், “உங்களுக்கே உங்க புலம்பல் நியாயமா இருக்க மாதிரி தோணுதா? ஒரு வாரமாச்சுன்னு மட்டும் சொல்றீங்களே… எதைப் பத்தி நியூஸ் கவர் பண்ணனும், எங்க விசாரிக்கணும்னு எல்லாம் சொன்னீங்களா? மறைப்புரத்துல மர்மமான விஷயம் நடக்குதுன்னு தகவல் வந்ததா சொல்லி, விசாரிக்க சொன்னீங்க. அதை மட்டும்தான் சொன்னீங்க, ஞாபகம் இருக்கா?” என்று லேசாக எட்டிப் பார்த்த எரிச்சலுடன் வினவினான்.
அவன் சொல்வது நியாயம் என்பதால் சில நொடிகள் அமைதியாக இருந்த சாரதி, “அதுக்காக… சும்மா அந்த ஹோட்டல்ல உக்கார்ந்து எதிர்க்கடைல இருக்கப் பொண்ணை சைட்டடிச்சுட்டு இருப்பியா?” என்று மீண்டும் எகிற ஆரம்பிக்க, “ஆக, என்னை ஸ்பை பண்ண ஆள் செட் பண்ணியிருக்கீங்க, இல்ல?” என்று இம்முறை உண்மையான கோபத்துடன் கேட்டான் அத்வைத்.
“அதி, எல்லாம் உன்மேல இருக்க அக்கறைலதான். முன்னாடி கேஸஸ் மாதிரி இல்ல இது. அங்க, என்ன நடந்துச்சுன்னு எதுவும் நமக்கு தெரியாது. ஒரு அனானிமஸ் காலை நம்பி, உன்னைத் தனியா அனுப்பச் சொல்றியா? ப்ச், அந்த எடிட்டர்கிட்ட எவ்ளோவோ சொன்னேன், தெரியாத எதையும் எடுக்க வேண்டாம்னு. கேட்டாரா அந்த ஆளு!” என்றார் சாரதி.
அதில் சற்று மனமிரங்கிய அத்வைத்தோ, “எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்ல அங்கிள். ஆனா என்ன, இந்த ஊர் மக்கள் வாயைத் திறக்கக் கூட காசு கேட்பாங்க போல! உருப்படியா எதுவும் சிக்கல. ஏதாவது தகவல் கிடைச்சா நானே சொல்றேன்.” என்றான்.
“ஹுஹும், உருப்படியா தகவல் கிடைக்கலன்னு, நீ ரொம்ப உருப்படியான வேலை பார்க்குறீயோ? நீ விடுற ஜொள்ளுல, அந்த ஊரே மிதக்குதாமே.” என்று சற்று இலகுவான குரலில் கேட்டார் சாரதி.
“அதுக்குள்ள தகவல் வந்துடுச்சா?” என்று சுகமாக சலித்துக் கொண்ட அத்வைத், “நீங்களும் அப்பாவும்தான என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அடிக்கடி டார்ச்சர் பண்ணுவீங்க. அதான், உங்க விருப்பத்தை நிறைவேத்தலாம்னு பாடுபடுறேன்.” என்றான்.
“படவா, பார்த்துடா ‘ஹராஸ்மெண்ட்’னு அந்தப் பொண்ணு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடப்போகுது.” என்று சாரதி சிரித்துக்கொண்டே எச்சரிக்க, “அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே…” என்று தோளைக் குலுக்கினான் அத்வைத்.
“நெனப்புதான்! போலீஸ் ஸ்டேஷன்ல என் நம்பரை எல்லாம் குடுத்துடாத… கால் எதுவும் வந்தா, உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவேன்.” என்று சாரதி கூற, வெடித்துச் சிரித்தவனோ, “அந்த அளவுக்கு எல்லாம் நான் ஒர்த் இல்ல அங்கிள். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.” என்றவன் இரண்டொரு நொடிகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எதேச்சையாக ஜன்னல் புறம் பார்வையைத் திருப்ப, அத்தனை நேரம் அவனை அளவிட்டுக் கொண்டிருந்த இரா, சட்டென்று விழிகளைத் திருப்புவதைக் கண்டு கொண்டவன், “ஹ்ம்ம், சீக்கிரம் ஸ்வீட் நியூஸ் கிடைச்சுடும் போல.” என்று முணுமுணுத்தவாறே, அவனவள் கொடுத்த இனிப்புகளைச் சுவைக்க ஆரம்பித்தான்.
தொடரும்…
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
நன்றி சிஸ் ❤️