Loading

காதல் – 8

தமயந்தியின் வீட்டில்..

அசதியில் சற்று நேரம் தூங்கி விட்டாள் தமயந்தி. அருகில் படுத்திருந்த அவளின் கணவனும் அவளை எழுப்பவில்லை. அடித்து பிடித்து எழுந்தவள் வேகமாக வெளியிலும் வந்தாள்.

அவள் அப்படியே எழுந்து வந்ததைக் கண்டு அவளின் மாமியார் “உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. தலைக்கு குளிக்காம வெளில வர கூடாதுனு.. சொல்ற பேச்சை கேட்கவே கூடாதுனு தான் உன் ஆத்தாக்காரி சொல்லி வளர்த்திருக்காளா.?” என்று கடுகடுத்தார்.

மாமியாரின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் குளித்து விட்டு வந்தவளிடமும் முகத்தைக் காட்டினார் அவர்.

“எந்திரிக்கற மணி என்ன.? காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சு வரணும்னு உனக்குத் தெரியாதா.?”

“இன்னைக்கு கொஞ்சம் அசதில தூங்கிட்டேன்..”

“ஒரு நாளுனு விட்டா தினமும் இப்படித்தான் ஆகும்.. இனி நேரமே எந்திரிச்சு பழகு.. என்ன புரியுதா.?”

“சரிங்க அத்தை..”

“போய் வேலையைப் பாரு..”

“சரிங்க..”

“ஏய் நில்லு.. உன் அம்மா எப்போ மீதி நகையைக் குடுப்பா.?” என்று கேட்டிட, பாவம் தமயந்தியால் தான் பதில் சொல்ல முடியவில்லை.

இரவானால் இவளின் கணவனும் இதையைத் தான் கேட்கிறான். ‘தெரியலங்க’ என்று இவள் கூறி விட்டால் அவனின் கோவத்தை இவளின் உடலில் தான் காட்டுவான். முதலில் அவனின் கடுமையைத் தாங்க முடியாமல் தவித்தவள் அவனின் கடுமைக்கான காரணமும் விளங்கியதில் நொந்து தான் போனாள்.

ஒரு மாதத்திலே இந்த திருமணத்தை ஏன்டா செய்தோம்.? என்று யோசிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தாள் பெண்ணவள்.

இரவானால் அவளின் கணவன்.. பகலில் அவளின் மாமியார்.. மாமனார்.. யாரிடம் தான் இவளின் கவலைகளைக் கூற முடியும்.? அன்னையும் மீதி நகையைத் தருவதாக தெரியவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்பு போன் செய்தவர் தான் அதற்கு பிறகு அவரிடம் இருந்தும் போனும் வரவில்லை. அங்கு என்ன பிரச்சனையோ.? என்று தவிப்பாய் தவித்துக் கிடக்கிறாள். அன்னையைப் பார்த்து விட்டு வருவதாக கூறினால் ‘இங்கிருக்கற வேலையை யாரு செய்யறது.?’ என்று கேட்டு அவளை வீட்டை விட்டு நகர விடாமல் செய்து விடுவார் அவளின் மாமியார்.

தம்பிக்கு அழைத்தும் பேசினாள்.. அவனும் அவர் நன்றாக இருப்பதாக தான் கூறினான். பின்பு ஏன் தன்னிடம் பேசவில்லை என்ற கேள்வியே அவளை வட்டமடித்தது. எப்படியாவது அவரிடம் பேசிட வேண்டும் என்ற முடிவையும் எடுத்தாள்.

“அம்மா நான் கிளம்பறேன்” என்று விமலன் கூறிட, அவரிடம் எவ்வித அசைவும் இல்லை. இன்னும் அவர் காலை உணவும் செய்திருக்கவில்லை. எழுந்ததில் இருந்து டிவியின் முன்பு தான் அமர்ந்திருக்கிறார். இவனே வழிய சென்று பேசினாலும் அவர் கண்டுக் கொள்வதில்லை.

அவரை வேண்டாமென்று விட்டு விட்டு செல்லுமளவிற்கு அவர்களின் உறவும் சாதாரணமானது இல்லை. அவனின் அன்னையின் குணத்தைப் பற்றி அறிந்தவன் தான் இவன். இத்தனை காலம் வரை சமாளித்து விட்டோம்.. இனியும் சமாளித்து வாழ்ந்து விடுவோம் என்ற நினைப்பு.

அவர் பேசாமல் இருந்தாலும் இவனே வழிய சென்று பேசி விடுவான். இவனின் தந்தை சாகும் முன்பு அன்னையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாராம். அதற்காகவே அவர் எத்தனை சண்டையிட்டாலும் மறுபடியும் மறுபடியும் அவரிடமே சென்று நிற்கிறான் இவன். இனியும் நிற்பான் அதில் மட்டும் எவ்வித ஐயமுமில்லை.

அன்னையிடம் இருந்து எதிர் வினை வராததில் அவனும் கிளம்பினான். பசியில் வயிறு வேறு ‘என்னையும் கொஞ்சம் கவனி’ என்று கூப்பாடு போட்டது.

வாரத்தில் நான்கு நாட்களும் கடை சாப்பாடு தான். ஒவ்வொரு நேரம் தேனு கொண்டு வந்து விடுவாள். அவளிடம் இருந்து எத்தனை முறை தான் சாப்பாடு வாங்கி உண்ண முடியும்.? தனக்காக அவள் ஏன் பசியில் இருக்க வேண்டும்.? அதனால் மில்லுக்கு வரும் முன்பே கடையில் உண்டு விட்டு வந்து விடுவான்.

இன்றும் அதே போல் சாப்பிட்டு விட்டு வர, அவனுக்காக காத்திருந்த அவளும் “விமலன் இந்தாங்க சாப்பாடு” என்று டிபன்பாக்ஸை நீட்டினாள்.

“நான் சாப்பிட்டேன் தேனு.. நீயே வெச்சுக்கோ..” என்று மறுத்திட, அவனின் முகம் தெளிவாக இருப்பதைப் பார்த்து அவனின் பேச்சையும் நம்பினாள்.

“அக்கா எப்படி இருக்காங்க.? வீட்டுக்கு வந்தாங்களா.?” என்று கனிமொழியைப் பற்றி விமலன் விசாரிக்க, “இந்த வாரம் வர்றேனு சொல்லிருக்காங்க விமலா.. அண்ணி நல்லா இருக்காங்களா.? அவங்க வந்தாங்களா.?” என்று தமயந்தியைப் பற்றி இவளும் விசாரித்தாள்.

“நல்லா இருக்காங்க தேனு.. நானும் கூட பேசுனேன்.. ஒன்னும் பிரச்சனையில்ல.. இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு”

“நம்ம கல்யாணத்தைப் பத்தி எப்ப விமலன் உங்க அம்மாகிட்ட பேசுவீங்க.?”

“பேசறேன் தேனு..”

“என் அப்பா முதல்லயே சொல்லிட்டாங்க அக்கா கல்யாணம் வரைக்கும் தான் உனக்கு டைம்னு.. ஒரு முடிவுக்கு வந்துட்டு சொல்லுங்க.. இல்லனா நான் பார்க்கற பையனை நீ கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்னு.. இப்ப வரைக்கும் எதுவும் கேட்கல.. இனி கேட்டா என்ன பதில் சொல்றது.?”

“நான் அம்மாகிட்ட கண்டிப்பா பேசறேன் தேனு.. அவ்வளவு சீக்கிரம் உன்னைய விட்டற மாட்டேன்.. கவலைப்படாம இரு..” என்றவன் அவளின் கையைப் பிடித்துக் கொண்டான்.

இவர்களின் காதலின் அதிகபட்ச தீண்டல் என்றால் அது இந்த தொடுதல் மட்டும் தான். வெளியில் ஊர் சுற்றும் வழக்கமும் கிடையாது. ஆனால் இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் அக்கறையாக இருப்பதில் மட்டும் மற்றவர்களை அடித்துக் கொள்ள முடியாது. இதுவே இவர்களின் காதலின் ஆழத்தை அதிகப்படுத்துகிறதோ என்னவோ.?

அன்றைய நாள் முழுவதும் அன்னையிடம் இவ்விசயத்தை எப்படி கூறுவது என்று தெரியாமல் யோசித்து யோசித்து சோர்ந்தே போயிருந்தான்.

இவனுக்கு வேலை வைக்காமல் இரண்டு நாட்களில் வேறு ஒருவரின் மேல் விமலனின் காதல் விவகாரம் தேவகிக்கு தெரிய வர, சாமியாடி விட்டார்.

“இன்னும் நான் உயிரோட தான் இருக்கேன்.. என்கிட்ட ஒன்னும் சொல்லாம உன் வாழ்க்கையை நீயே தேர்ந்தெடுத்துக்கிட்டல.? வீட்டுல உன் அக்கா கல்யாணமாக இருந்தது கூட உனக்கு கவலையில்லாம போய்ருச்சுல.? இதனால தான் நீ உன் அக்காக்கு எதுவும் செய்ய முடியாதுனு சொன்னீயா.?

நல்லவேளை என் பொண்ணை நான் கட்டிக் குடுத்துட்டேன்.. இதெல்லாம் அவ சொல்லிக் குடுத்தாளா.? அவ மட்டும் இங்க வந்தா என்னைய வீட்டை விட்டு துரத்தி விட்டாலும் துரத்தி விட்டுருவ போல.?” என்று தேனுவின் மேல் வன்மத்தைக் கொண்டார்.

“ம்மா புரியாம பேசாதமா.. தேனு அப்படி எல்லாம் எதுவும் சொல்லல.. என்னால முடியலனு நான் தான் சொன்னேன்.. அவ மேல பழியைப் போடாதம்மா.. அவ ரொம்ப நல்ல பொண்ணு” என்று தன்னவளை விட்டுக் குடுக்காமல் கூறினான் விமலன்.

அதற்கும் “ஓஓஓஓ இப்ப வந்தவ உனக்கு நல்லவ.? நான் கெட்டவளா போய்ட்டனோ.?” என்று அதிலும் குறைக் கண்டுபிடித்து சண்டையிட, அப்போதைக்கு இப்பேச்சை தவிக்க அமைதியையே கடைபிடிக்க வேண்டியதாயிற்று.

அவரின் பேச்சும் குறைந்தபாடில்லை.. சண்டையும் முடித்தபாடில்லை. வீட்டிற்கு வருவதே அவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. மறந்தும் வீட்டில் நடப்பதை தேனுவிடம் பகிர்ந்துக் கொள்ளவில்லை. ‘சீக்கிரம் உன் வீட்டிற்கு வந்து பேசுவேன்’ என்று மட்டும் கூறி இருந்தான். அவன் வார்த்தையில் பெண்ணவளின் நம்பிக்கையும் வேரூன்றியது.

“அம்மா ப்ளீஸ்ம்மா புரிஞ்சுக்கோ.. தேனு ரொம்ப நல்ல பொண்ணும்மா.. நீயே அவகிட்ட பேசி பாரு.. உனக்கும் அவளைப் பிடிக்கும்மா.. அவளை ஏன் வேணாம்னு சொல்ற.?” என்ற சமயம் அவனின் உறவு முறையான பெரியப்பா ஒருவர் வீட்டிற்கு வந்தார்.

வந்ததும் “என்ன விசயம்.? உங்க சண்டை வெளில வரைக்கும் கேட்குது.?” என்று விசயத்தை விசாரிக்க, “துரை லவ்வு பண்ணுதாமா.. வீட்டுல ஒரு பொட்டப்புள்ள இருந்துச்சுனு ஒரு நினைப்பே இல்லாம ஊரு சுத்திட்டு இருந்துருக்கு..” என்றார் மனசாட்சியே இல்லாமல்.

“அம்மா சொல்ற மாதிரி எல்லாம் இல்லங்க.. தேனுவைப் பிடிச்சுச்சு.. அக்கா கல்யாணம் முடிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தேன்.. அவ்ளோதான்.. நான் சொல்றதுக்கு முன்னாடியே எப்படியோ அம்மாக்கு தெரிஞ்சுருச்சு.. தேனு ரொம்ப நல்ல பொண்ணு பெரிப்பா.. அவங்க வீட்டுலயும் எங்க காதல் தெரியும்.. அவங்க எதுவும் சொல்லல.. அவங்க அப்பாகிட்ட வந்து பேச தான் சொல்லி இருக்காங்க” என்றான்.

அவரும் “சரி நான் பேசறேன்.. கடைல போய் டீ வாங்கிட்டு வர்றீயா.?” என்று கேட்க, அவனும் சரியென்று தலையசைத்துக் கிளம்பினான்.

“இது தப்புனு அவன்கிட்ட சொல்றதை விட்டுட்டு அவனை ஏன் வெளில அனுப்பி விடறீங்க.?” என்று தேவகி கோவம் கொள்ள, விமலன் சென்று விட்டானா.? என்று எட்டிப் பார்த்து விட்டு அவரோ “இவன் பிரச்சனை இருக்கட்டும்.. உன் பொண்ணுக்கு மீதமிருக்கற பத்து பவுனை எப்ப போடறதா உத்தேசம்.? உன்னைய நம்பி நானும் மாப்பிள்ளை வீட்டுக்காரன்கிட்ட பேசி சம்மதம் வாங்கி தந்துருக்கேன்.. இப்ப அவங்க என்கிட்ட தான் வந்து என்னனு கேட்க சொல்றாங்க.. அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்.?” என்று அவர் வந்ததற்கான காரணத்தைக் கூறினார்.

தேவகி நினைத்தது ஒன்று.. ஆனால் நடந்தது வேறொன்றாக இருந்தது. இவர் திருமணத்திற்கு பணம் குடுத்தால் அவர்கள் மொய் பணமாக அதை விட அதிகமாக வைப்பார்கள் என்று எண்ணினார்.. ஆனால் அவர்களோ அதற்கும் கம்மியாக வைத்து விட்டு சாப்பிட்டு விட்டு சென்றவர்கள் தான் அதன் பின்பு வீட்டுப்பக்கமே எட்டியும் பார்க்கவில்லை.

மாப்பிள்ளை வீடும் அந்த பத்து பவுனைப் பற்றி இவரிடம் கேட்காததால் அதை மறந்து விட்டனர் என்று நினைத்தார். ஆனால் இவரின் மூலம் அவ்விடயம் வரும் என்று மட்டும் இவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

என்ன சொல்வது என்று தெரியாமல் இவர் நின்றிருக்க, அந்த பெரியவரே அதற்கும் ஒரு யோசனையைக் கூறினார்.

“நான் வர்றப்ப விமலன் கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு இருந்தீயே.. லட்டு மட்டும் ஒரு வாய்ப்பு உனக்கு கிடைச்சுருக்கு தேவகி.. உன் வீட்டுக்கு வர போற மருமகளும் எப்படியும் வெறும் கழுத்தோட வரமாட்டா.. அவளுக்கு போடற நகையை வாங்கி உன் பொண்ணுக்கு குடுத்துரு.. முடிஞ்சுச்சு.. அதுக்குப் பதிலா உன்கிட்ட இப்ப இருக்கற பணத்தை அந்த பொண்ணு கைல குடுத்துரு..

நகையும் கிடைச்சுச்சு அதே சமயம் உன் பையனுக்குக் கல்யாணமும் நடந்துச்சு.. இனி நம்ம பார்த்து எப்ப அவனுக்குக் கல்யாணம் நடக்கறது.? அவனே ஒரு நல்ல வாய்ப்பை உனக்கு ஏற்படுத்தி தந்துருக்கான்.. அதைய போய் வே

ணாம்னு சொல்லிட்டு இருக்க.?” என்று அவ்வோசனையைக் கூறிட, தேவகியின் முகமும் மலர்ந்தது.

தொடரும்..

Click on a star to rate it!

Rating 3.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்