
காதல் – 7
கனிமொழியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்க, தேனுவின் வீடே களைக்கட்டி இருந்தது. முதலிலே தேனுவின் அன்னையின் சொந்தமும் தந்தையின் சொந்தமும் வீட்டை நிறைந்திருக்க, இதில் மாப்பிள்ளை வீட்டாரும் அவர்களின் பங்கிற்கு பெரிய பட்டாளத்தையே அழைத்து வந்திருந்தனர்.
பரஸ்பரம் இரு வீட்டாரும் விசயங்களைப் பரிமாறிக் கொண்டு இறுதியாக நகை விசயத்தில் வந்து நின்றனர்.
“நீங்க சொன்ன மாதிரி என் பொண்ணுக்கு பத்து பவுன் போட தயாராக தான் இருக்கோம்.. கல்யாணத்துக்குப் பிறகு என் பொண்ணை நல்லா பார்த்துக்கிட்டா போதும்” என்று ராமநாதன் கூறிட, “அதெல்லாம் நாங்க பொண்ணை நல்லாவே பார்த்துப்போம்.. நீங்க கவலைப்பட வேணாம்” என்றார் மாப்பிள்ளையின் தந்தையும்.
“அப்பறம் என்னங்க தட்டை மாத்தி தேதியைக் குறிச்சரலாமே.?” என்று சொந்தக்காரர் ஒருவர் கூறியதும் இரு வீட்டாரும் தட்டை மாற்றி திருமணத்தை உறுதி செய்தனர்.
மாப்பிள்ளையான சரவணன் பெண்ணிடம் பேச வேண்டும் என்று கூறி கனிமொழியின் முன்பு நின்றிருந்தான்.
கனிக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சரவணனுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு அவசரத்தில் பேச வேண்டும் என்று வந்து விட்டான்.. ஆனால் என்ன பேசுவது என்று தான் தெரியவில்லை.
‘என்ன படித்திருக்கீங்கனு கேட்கிறதா.?’ என்று நினைத்து ‘இதைய கூட தெரியாமயா கல்யாணத்துக்கு சரினு சொன்னீங்க.?’ என்று அவள் எதிர் கேள்வி கேட்டு விடுவாளோ.? என்று பயந்து அவ்வெண்ணத்தைத் தூக்கி தூரயெறிந்தான்.
மௌனமாக இருவரும் நின்று கொண்டனர். அவள் ஆரம்பிக்கட்டும் என்று அவனும், அவர் ஆரம்பிக்கட்டும் என்று இவளும் நின்றிருந்தார்களே தவிர இருவருமே வாயைத் திறக்கவில்லை. அதற்குள் கல்யாணத் தேதியைக் குறித்து பெரியவர்கள் இவர்களை அழைத்திட, வேகமாக “உங்க நம்பர் சொல்லுங்க” என்று கேட்டு கனியின் அலைப்பேசி எண்ணைப் பெற்றுக் கொண்டான்.
பெரியவர்கள் குறித்த திருமணத்தேதியும் இருவரும் ஒத்து வருவதாக கூறிட, அடுத்தடுத்து வேலைகளுக்கான திட்டமிடல்களும் தொடங்கியது. மதிய உணவும் பெண் வீட்டில் அமர்களமாக நடந்தேறியது.
தேனு தான் சோர்ந்துக் காணப்பட்டாள். அவளுக்கும் தமக்கையின் திருமணத்தில் மகிழ்வு தான். ஆனால் தன் திருமணமும் இப்படி நடந்தேறிடுமா.? என்ற கேள்வியே அவளுள் சுழன்றடித்ததில் அவளின் முகம் களையிழந்துக் காணப்பட்டது.
அவ்வப்போது விமலனிடம் இருந்து குறுஞ்செய்திகளும் பெறப்பட்டன. இங்கு நடப்பதை அவனுக்குத் தெரிவிக்கவும் அவள் தவறவில்லை.
அனைத்தும் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிட, நல்முறையிலே அவர்களை வழி அனுப்பியும் வைத்தனர்.
“எனக்கு இப்பதான்ங்க நிம்மதியா இருக்கு.. பெரியவளுக்கு கல்யாணம் தட்டி தட்டி போறதைப் பார்த்து பயமாவே இருந்துச்சு.. இப்படியொரு சம்பந்தம் வரணும்னு தான் இத்தனை வருசம் இவளுக்கு கல்யாணம் நடக்காம இருந்துச்சோ என்னவோ.? பெரியவள மாதிரி சின்னவளுக்கும் நல்ல சம்பந்தம் வந்துட்டா ரொம்ப சந்தோசம்ங்க” என்று மனதார கூறினார் அவர்களின் அன்னையான சிவகாமி.
அன்னையின் பேச்சில் தேனுவிற்கு சந்தோசமில்லை. அவளுக்கு விமலன் தான் வேண்டும்.. அதில் மட்டும் உறுதியாக இருக்கிறாள். அதற்கு என்ன செய்வது என்று மட்டும் அவளுக்கு விளங்கவில்லை.
தேனுவின் அமைதியில் “இங்க பாருடி அவனை மறந்துரு.. அங்க போனா நீ கஷ்டம் மட்டும் தான் படணும்.. அதுல உனக்கே அலுப்பு வந்துரும்.. பேசாம அப்பா பார்க்கற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ற வழியைப் பாரு.. உங்க இவ கல்யாணத்தப்பவே சொல்லி வெப்போம்.. வரன் அமைஞ்சா சட்டுனு கல்யாணத்தையும் முடிச்சுப்புடலாம்.. இவளுக்கும் வயசு ஏறிட்டே போகுதுல.?” என்று தேனுவிடம் ஆரம்பித்து இறுதியில் கணவரிடம் முடித்தார்.
மகளின் முகத்தைக் கண்டு தந்தையவரும் கவலையுற்று “முதல்ல பெரியவளுக்கு முடிப்போம்.. அப்பறம் என்ன ஏதுனு பார்ப்போம்.. சும்மா அவளை ஏதாவது சொல்லிட்டு இருக்காத.. என் பொண்ணு என்னைய மீறி அவன் கூட எல்லாம் போய்ர மாட்டா” என்ற தந்தையின் குரலில் தன் மீதான நம்பிக்கை தென்பட்டதில் பெண்ணவளின் விழிகள் கலங்கி விட்டது.
தாமரையை வீட்டிற்கு வர கூறி இருந்தார் தேவகி. அவளும் அன்னையின் பேச்சைத் தட்டாமல் மகளுடன் வந்திருக்க, மகன் இருப்பதையும் கண்டு கொள்ளாமல் “தாமரை மாப்பிள்ளை வர சொல்றீயா.? அவரு வந்தா தான் வீட்டை விற்கணும்.. பணம் வந்ததும் நகையும் எடுக்கணும்..” என்றார்.
“அவரு எதுக்கும்மா.? அதான் தம்பி இருக்கான்ல.?”
“அவன் வேணாம்.. நீ மாப்பிள்ளை வர சொல்லு”
“அவரு வந்தா தம்பி மாதிரி அமைதியா எல்லாம் இருக்க மாட்டாரு.. ஏதாவது எக்குத்தப்பா கேட்டு வெச்சா உன்னால பதில் சொல்ல முடியுமா.?”
“அப்படி என்ன கேட்டற போறாரு.? நீயே ஏதாவது சொல்லிட்டு இருக்காத..”
“ஹான் மூத்த மகளும் இளைய மகனும் இருக்கறப்ப வீட்டை வித்து வர்ற பணத்தை மொத்தமா நடு மகளுக்கு குடுக்கறீங்களே எங்களைய பார்த்தா எப்படி இருக்குனு கேட்டா உன்னால பதில் சொல்ல முடியுமா.?”
“…….”
எல்லாரும் தம்பி மாதிரி இருப்பாங்கனு நினைச்சீயா.? உனக்கு தான் அவன் அருமை தெரியலம்மா.. அவனால முடியலனு அவனோட இயலாமையைச் சொன்னான்.. அதுக்குனு மொத்தமா அவனை ஒதுக்கி வெக்க நினைக்கறீயல்ல.? சரிதான் போங்கனு அவன் எங்கையாவது போய்ட்டா நீ என்ன பண்ணுவ.?
நான் தான் வந்து உன்கூட இருக்க முடியுமா.? இல்ல தமயந்தி தான் வந்து இருப்பாளா.? உன் கூட கடைசி வரைக்கும் இருக்க போறது தம்பி தான்.. ஆனா அவனை மட்டும் நீ நினைச்சே பார்க்கறது இல்ல.. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா அவன் வெறுத்துப் போய் வீட்டை விட்டு போனா நீ சோத்துக்கு என்ன பண்ணுவ.? நான் பார்ப்பேனு நீ கனவுலயும் நினைக்காத.. என்னைய ஒருத்தரு பார்க்கணும்ங்கற நிலைமைல தான் நானே இருக்கேன்.. தமயந்திக்கு வர்றவனும் எப்படினு தெரியாது..
என்ன தான் எங்களுக்கு நீ மாஞ்சு மாஞ்சு சீர்சனத்தி எல்லாமும் பண்ணுனா உனக்கு ஒரு வாய் சோறு போட எங்களுக்கு வாய்ச்ச மகராசன் விடுவாங்கனு நினைக்கறீயா.? அவங்க அம்மாவை மட்டும் தான் நாங்க பார்க்கணும்.. எங்க அம்மாவை பார்த்ததுட்டா அவ்ளோதான்.. என் வீட்டுக்காரன் மட்டுமில்லம்மா உலகத்துல பாதி பேரு இப்படித்தான் இருக்காங்க.. உனக்கு இது தெரியாதா.? என்னமோ இவன் பார்க்காம என்னைய கட்டுன மகராசன் தான் எல்லாமும் பண்ற மாதிரி அவரை வர சொல்ற.?
நீ பண்றதே முதல்ல சரியில்ல.. இப்படியே பண்ணிட்டு இருந்தா நீ தனியா இருக்கற நிலைமை தான் வரும்.. அப்பத்தான் உனக்கு தம்பியோட அருமை என்னனு புரியும்.. அப்ப தம்பி உன் கூட இருக்க மாட்டான்” என்று கோவமாக கத்தினாள்.
பின்பு என்ன தந்தை இறந்ததில் இருந்து குடும்ப பாரத்தை தூக்கி சுமர்ப்பது இவன்.. இப்போது தன்னால் முடியவில்லை என்றதும் ஆகாதவன் ஆகி விட்டானா.? தாய் செய்வது இவளுக்கே பிடிக்கவில்லை தான்.. சொந்த வீடு மட்டும் உள்ள சம்பந்தம் இரண்டு மூன்று வந்தது. வேறு எதுவும் இல்லையென்று இவர் தான் மறுத்திருந்தார். வசதியான சம்பந்தம் வருவது பெரியதல்ல.. தங்கள் வசதிக்கேற்ப பார்ப்பது தான் நல்லது. அது இவருக்கு புரியவில்லை.
இவள் திருமணம் செய்து விட்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறாள். அது அவளின் அன்னைக்குத் தெரியாது. வசதியான வீட்டில் சொகுசாக மகள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார் இவர்.
அது உண்மையில்லையோ.. ஒவ்வொரு நாளும் அவள் படும் பாட்டைச் சொல்லி மாயாது. காதல் திருமணம் செய்து இருவரும் தான்.. ஆனால் இவளின் மாமியாரோ இன்று வரை தன் மகனை மயக்கி இவள் தான் திருமணம் செய்திருக்கிறாள் என்று வருவோர் போவோரிடம் எல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார். இதற்கு இவளின் காதல் கணவனும் எதிர்ப்பு தெரிவிக்காதது தான் வேதனையின் உச்சம்.
காலையில் எழுந்ததில் இருந்து அனைத்து வேலைகளையும் இவள் தான் செய்ய வேண்டும்.. இதில் பெற்ற மகள் வேறு.. அவளைத் தனியாக கவனிக்கவும் நேரமிருக்காது.. இவளின் பிரசவத்தில் சிக்கல் எழுந்ததில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். அப்போது கூட அவளின் மாமியார் இரக்கமே இல்லாமல் ‘சிசேரியன் செய்தால் எப்படி வீட்டு வேலை எல்லாம் செய்வ.?’ என்று தான் கேட்டார்.
மருத்துவமனையில் இருக்கும் வரை தான் அவளுக்கு ஓய்வு. குழந்தை பிறந்தும் இவள் பிறந்த வீட்டிற்கு செல்லவில்லை. வீட்டிற்குச் சென்றதில் இருந்து எப்போதும் போல் அவளின் அன்றாட வேலைகளைத் துவங்கிட, இரவில் தூக்கம் என்பது தான் இல்லாமல் போயிற்று.
அவளின் கணவனான சக்தி எதையும் கண்டுக் கொள்ள மாட்டான். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் மகளுடன் நேரம் செலவிடுவான். அவ்வளவு தான். குழந்தை வளர்ப்பு பெண்களைச் சார்ந்தது என்ற எண்ணமுடையவன். ஆண்கள் என்றால் வெளி வேலைகளை மட்டும் செய்பவர்கள். பெண்கள் தான் வீட்டு வேலைகளுடன் குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்று நினைப்பவன்.
காதலிக்கும் போது இது எதுவும் தெரியவில்லை. அவனின் இனிப்பான பேச்சில் மயங்கி இப்போது இப்படியொரு வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள். அவனின் அன்னை இவளை என்ன பேசினாலும் அவன் வாயைத் திறக்கவே மாட்டான்.. இரவில் அவனிடம் கூறி இவள் அழுதாலும் ‘வீடுனா அப்படி இப்படி தான் இருக்கும்.. சும்மா அம்மாவைப் பத்தி பேசிட்டு இருக்காத’ என்று தான் பதில் மொழி தந்து அவனின் தேவைகளைத் தான் அவளிடம் தீர்த்துக் கொள்வான்.
காதலையும் வெறுத்து காதல் கணவனையும் அடியோடு வெறுத்து விட்டிருந்தாள். இப்போது அவள் இருப்பது ஒன்று அவளின் மகளுக்காக.. மற்றொன்று அவளுடன் பிறந்தவனுக்காக.. இவ்வாழ்வு வேண்டாமென்று தானும் மகளைத் தூக்கி பிறந்தகம் சென்று விட்டால் விமலனின் வாழ்வு கேள்விக்குறியாகி விடும்.
இவ்வாழ்வைத் தேர்ந்தெடுத்தது நான் தான்.. ஆயுள் முடியும் வரை நானே போராடிக் கொள்கிறேன் என்று இவளின் பிரச்சனைகளைப் பிறந்த வீட்டில் கூறியதே இல்லை.
இப்பொழுது தம்பியை விட்டு விட்டு தன் கணவனைத் தூக்கி வைத்து பேசியதில் இவள் பொங்கி விட்டாள்.
“நீ என்ன வேணா பேசிக்கோடி.. வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளையா அவருகிட்ட தானே சொல்ல முடியும்.. உன்னால சொல்ல முடியலனா நானே சொல்லிக்கறேன்” என்ற வார்த்தையே ‘உன் பேச்சை நான் காதில் வாங்கவே இல்லை’ என்றதாக இருந்தது.
“அம்மா” என்று இவள் பல்லைக் கடித்து “சரி வீட்டை யாருக்கு விற்கற.?” என்று கேட்க, “நம்ம சொந்தத்துல தான்.. அவரு உங்களுக்கு தூரத்துச் சொந்த முறைல பெரியப்பாவா வருவாரு” என்று அவரின் அடையாளங்களையும் கூறினார்.
அவர் யாரென்று தெரிந்ததும் “அம்மா அவரு மொத்த பணத்தையும் தர மாட்டாரு.. வேற யாராவதுக்கு விற்கலாமே.?” என்றிட, “நீ குடும்பத்தைப் பார்த்து இருந்தா நான் ஏன் அவருகிட்ட போய் விற்க போறேன்.. என்னால முடிஞ்சதை என் பொண்ணுக்கு செஞ்சுட்டு போறேன் விடு” என்றார் முகத்தில் அடித்தாற்போல்.
தன் இயலாமையைக் கூறினால் இப்படி மொத்தமாக வெறுத்து ஒதுக்குவார் என்பதை மட்டும் முதலிலே இவன் உணர்ந்திருந்தால் பிச்சையெடுத்தாவது தமக்கையின் கல்யாண செலவை ஏற்றிருப்பான்.. இப்போது கல்யாண செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினால் அந்த பணத்திற்காக தான் நான் அலைகிறேன் என்று கூறினாலும் கூறி விடுவார். அப்படி கூறினால் அதை தாங்கும் சக்தி நமக்கில்லை என்பதால் மௌனமாக நின்று விட்டான்.
தாமரைக்கும் தமயந்திக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அன்னையைச் சமாதானப்படுத்துவது மட்டும் அவ்வளவு எளிதல்ல என்பதை அவரின் பேச்சின் மூலமே உணர்ந்துக் கொண்டனர். விமலனைப் பார்க்க தான் பாவமாக இருந்தது.
அவனை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தும் கொண்டனர். தமக்கைகளைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்துக் கொண்டான். பெற்ற அன்னையே தன்னை ஒதுக்கி வைக்கும் இந்நிமிடம் அவனுக்கு நரகமாக தோன்றியது. வலித்தும் வலிக்காதது போன்று இவ்வீட்டில் தன்னால் இருக்க முடியுமா.? என்ற சந்தேகமும் தோன்றியது.
இவர்களை விட்டால் இவன் எங்கு செல்வான்.? செல்வதற்கு போக்கிடம் தான் இருக்கிறதா.? அன்னை அன்னை என்றே இருந்து விட்டான். அந்த அன்னையே இந்நிமிடம் தன்னை யாரோவென்று சொல்லாமல் சொல்லி விட்டார். இதை விட வேறென்ன வலி அவனுக்கு இருந்திடும்.?
இவருக்காகவா கண்டவனிடமும் பேச்சு வாங்கி கடன் வாங்கி குடுத்தான்.. இப்போது வரை சரியாக கடன் கட்ட முடியவில்லை என்றால் அத்தனை ஏச்சுப்பேச்சும் வாங்குகிறான். ‘உங்களை ஏன் நான் பார்க்க வேண்டும்.?’ என்று இவன் நினைத்திருந்தால் இந்நேரம் இத்தனை கடன்பட்டு இருப்பானா.? இது எதுவும் அவனின் அன்னைக்குப் புரியவில்லை.
அவர் கூறியதற்கு இவன் மறுத்து விட்டான் என்ற கோவமே அவரை சமநிலை இழக்க வைத்திருந்தது. என்ன பேசுகிறோம்.? என்ன செய்கிறோம்.? என்று தெரியாமலே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார். யாரின் பேச்சும் அவரின் செவிக்குள் சென்றதாக தெரியவில்லை. இச்சமயம் நான் செய்வது தான் சரி என்ற எண்ணத்தில் பல தவறுகளையும் செய்கிறார். இவர் செய்யும் தவறுகள் திருத்திக் கொள்ள முடியாத அமைய போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
தாமரை கிளம்பும்போது “நீ பயப்படாம இருடி.. உன் தங்கச்சி கல்யாணத்துக்கு பத்திரிகை வெக்க வர்றப்ப எல்லாருக்கும் துணிமணி எடுத்துட்டு வந்து முறையா தான் கூப்பிடுவேன்.. அதைய பத்தி நீ கவலைப்பட வேணாம்.. சரியா.?” என்றார் தேவகி.
“அம்மா தேவையில்லாத செலவு செஞ்சுட்டு இருக்காத.. சொல்லிட்டேன்.. அவங்க எல்லாம் உனக்கு ஏதாவது செஞ்சுருக்காங்களா.? இல்ல தானே.? பின்ன நீ மட்டும் ஏன் இத்தனையும் பண்ணனும்.? அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்க.. நீ பத்திரிகை மட்டும் கொண்டு வா போதும்” என்று விட்டு தான் சென்றாள்.
இவர்களின் சக்திக்கு மீறி இவர்கள் செய்தாலும் அவளின் மாமியார் அதிலும் குறை கண்டுபிடிக்கத் தான் செய்வார். அதற்கு ஒன்றும் செய்யாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறாள். அவர்கள் எதுவும் செய்யாமல் விட்டால் தன்னைத் தான் பேசுவார்.. பேசி கொள்ளட்டும்.. அவர் பேசுவது என்ன இவளுக்குப் புதியதா.? எப்போதும் போல் கண்டுக் கொள்ளாமல் இருந்து கொள்கிறேன்.
யாரிடம் தன் கவலைகளைக் கூறுவது என்று தெரியாமல் கபிலனை வர வைத்து “மச்சான் என்னால முடியலடா.. செத்தரலாம்னு இருக்கு.. அம்மாவே என்னைய புரிஞ்சுக்க மாட்டிங்கறாங்கடா.. நான் என்ன வெச்சுக்கிட்டா செய்ய மாட்டேனு சொல்றேன்.? நான் வாங்கற பணத்தை வெச்சு சாப்படறதே பெருசு.. இதுல அவ்வளவு பணத்துக்கு எப்படி நான் கடன் வாங்க முடியும்.?” என்று புலம்பினான்.
அவனைப் பார்க்கவே கபிலனுக்குப் பாவமாக இருந்தது. இந்த வயதில் இவனும் எத்தனை தான் சமாளிக்க முடியும்.?
விடு விமலா.. அவங்க பண்றேனு சொல்லிட்டாங்க.. பண்ணிட்டு போகட்டும்.. எப்பவும் போல நீ வேலைக்குப் போ வா.. அவங்க என்ன பண்றாங்க ன்னு பார்ப்போம்.. ஒதுக்கி வெச்சா சரினு விட்டுரு.. நீயே போய் உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காத.. உனக்காக அருமையான வாழ்க்கை காத்திருக்கு.. போக போக உன் அம்மாவும் புரிஞ்சுப்பாங்க..
இப்ப அவங்க பேசலனு நீயே போய் பிரச்சனையை விலைக்குடுத்து வாங்கிக்காத.. இப்படி பண்ணுனா கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா அவங்க பண்ற வேலை சரியில்லையே.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோடா” என்று கூறி நண்பனைத் தேற்றி விட்டான்.
தோழனின் வார்த்தைகளும் உண்ட உணவும் மனப்பாரத்தைக் குறைத்திடும் வேலைகளைச் செய்திட, ‘இனி தேனுவைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்’ என்ற முடிவை எடுத்தான். அவளில்லாத வாழ்வை இவனால் வாழ்ந்திட முடியுமா.?
திருமணத்திற்கு முன்பே கஷ்டத்தில் தோள் குடுத்தாள். இவனைச் சரியாக புரிந்தும் கொண்டாள். இப்போது கூட இவனை சரியாக வழிநடத்த தான் பார்க்கிறாள். இப்படியொரு வாழ்க்கைத் துணையை இழந்தால் அவனின் வாழ்வு தான் என்னவாகும்.?
உறவுக்கார மூத்தவர் ஒருவரை வைத்து வீட்டையும் விற்று அதன் மூலம் வந்த பணத்தில் இருபது பவுன் நகைகளை வாங்கி விட்டார். மீதி பணத்தை கல்யாண செலவிற்கு வைத்து விட்டார். முக்கியமான உறவுக்காரர்கள் அனைவருக்கும் பத்திரிகையுடன் ஐயாயிரம் பணத்தையும் வைத்து தந்து விடுவதாக முடிவு. அவர்களும் தங்களுக்கு இதெல்லாம் செய்வார் என்ற நம்பிக்கை.
இது எல்லாம் தேவையில்லை என்று தாமரையும் தமயந்தியும் எவ்வளவோ எடுத்துக் கூறி விட்டார்கள். “இதெல்லாம் உங்களுக்காக தான் செய்யறேன்டி.. நாளபின்ன நம்ம வீட்டுல ஏதாவதுனா நமக்கும் செய்வாங்க.. உங்களுக்கு இதெல்லாம் தெரியாது.. அமைதியா இருங்க” என்று அடக்கி விட்டார்.
அவரின் செயல்கள் அனைத்தும் மகன் ஒருவன் இருப்பதையே மறந்து விட்டது என்பதைப் போல் தான் இருந்தது. விமலனும் அன்னையின் செயல்களை மூளைக்குக் கொண்டு செல்லாமல் பார்த்துக் கொண்டான். அதனால் தான் என்னவோ அவன் அதிகம் வருந்தவில்லை.
பெரியவர் ஒருவரை வைத்து திருமணத்தின் போது இருபது பவுன் நகை மட்டும் போடுவதாகவும் பின்பு மீதியைத் திருமணத்திற்கு பிறகு தந்து விடுவதாக கூறிட, மாப்பிள்ளை வீட்டாரும் ஒரு மனதாக சரியென்று விட்டிருந்தனர்.
இப்படி ஆடம்பரமாக செலவு செய்துக் கொண்டிருக்கும் இவர் அந்த பத்து பவுன் நகைக்கு என்ன செய்வார் என்று தெரியவில்லை.
மண்டபமும் பெரிய மண்டபம்.. அந்த செலவு இருவருக்கும் பாதி என்றிட, அதற்கும் சரியென்று தலையாட்டினார். முன்பணமாக அம்பதாயிரம் தர வேண்டும் என்றதும் இவரே பணத்தைத் தந்திட, அவர்களுக்கு என்ன கசக்குமா.? வாங்கியும் கொண்டனர்.
இவர் இத்தனை ஆடம்பர செலவு செய்வது தன் உறவுக்காரர்களின் முன்பு தன் மகள் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே. நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் கடவுள் என்ற ஒருவர் இருப்பது எதற்கு.? பார்ப்போம் தமயந்தியின் வாழ்வில் என்ன நடக்க போகிறது என்று.!
மறுபக்கம் கனிமொழியின் வேலைகளும் துரிதமாக நடந்தேறியது. விமலனின் அன்னையைப் போல் எல்லாம் இவர்கள் ஆடம்பர செலவு செய்யவில்லை. எது தேவையோ அதற்கு மட்டுமே கணக்கின்றி செலவு செய்தனர்.
இவர்கள் கல்யாண செலவில் பாதியை ஏற்றுக் கொள்வதாக என்றிருந்தாலும் அந்த பணத்தைத் திருமணம் முடிந்து தான் தருவேன் என்று உறுதியாக கூறி இருக்க, மாப்பிள்ளை வீட்டாரும் அடக்கி வாசிக்க வேண்டியதாயிற்று.
அவர்கள் கூறும் அனைத்திற்கும் நாங்கள் ஏன் தலையாட்ட வேண்டும்.? என் மகளுக்கு என்ன குறை.? அதே போல் என் மகளுக்கு எதுவும் செய்யாமலே அனுப்ப போகிறோம்.? தன் மகள் முறைப்படி தான் அங்கு வாழ போகிறாள்.. பின்பு ஏன் அவர்களுக்குப் பயந்து அனைத்திற்கும் தலையாட்ட வேண்டும்.? இவர் தெளிவாக இருக்கிறார். ஆனால் விமலனின் அன்னை தான் ஏமாளியாக இருக்கிறார். அவரை என்ன சொல்வது.?
திருமணத்திற்கு பின்பு கனிமொழி வேலைக்குச் செல்ல கூடாது என்பது மட்டும் தான் மாப்பிள்ளை வீட்டார் விதித்த நிர்ப்பந்தம். ஆனால் அதில் ராமநாதனுக்கு விருப்பமில்லை. தன் மகள் யாரையும் நம்பி இருக்க கூடாது என்று தான் படித்து முடித்ததும் வேலைக்கு அனுப்பினார். தேனுவை விட கனிமொழி நன்றாக படிக்க கூடியவள். டிகிரி முடித்தும் இருக்கிறாள்.
படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் மருந்தகத்தில் வேலை கிடைத்திட, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அங்கு தான் பணிபுரிகிறாள். இப்போது தான் அவளுக்கு சம்பளமும் ஏறி இருந்தது. நல்ல சம்பளத்தில் இருக்கும் வேலையை விட்டு விட்டு வீட்டு வேலைகளை மட்டும் செய்தால் போதும் என்று கூறினால் எப்படி.?
சரவணன் தான் பெற்றோரை அடக்கி வைத்திருந்தான். அவர்களும் பேருக்கு சரியென்றிருந்தனர். போக போக சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் தான் ராமநாதனும் கல்யாண வேலைகளில் மூழ்கி இருந்தார்.
சிவகாமி கூட திருமணத்திற்கு பிறகு இவள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்.? என்று தான் கேட்டார். ராமநாதன் தான் அவரை அடக்கியும் வைத்திருந்தார். மாப்பிள்ளை தன் மகளுக்குத் தான் சப்போர்ட் செய்வார் என்ற அதீத நம்பிக்கை அவருக்கு.
“ஏங்க எப்ப பத்திரிகை வைக்க ஆரம்பிக்கறது.?”
“இன்னும் நாள் இருக்கும்மா.. பார்த்துக்கலாம்..”
“என்னங்க இவ்ளோ பொறுமையா சொல்றீங்க.? அடுத்தடுத்து நிறையா வேலை இருக்கு.. இப்படி அசால்ட்டா இருந்தா எப்படி.?”
“நீ எப்ப சொல்றீயோ அப்பவே ஆரம்பிச்சரலாம்” என்று அவரின் வார்த்தைக்கே தலையாட்டி விட்டார்.
திருமண வேலைகளைப் பார்க்க பார்க்க தேனுவின் மனதும் அவளின் திருமணத்தை எதிர்பார்த்தது. ஒரு பக்கம் மகிழ்வு என்றாலும் மறுபக்கம் தன் திருமணத்திற்கும் தன் பெற்றோரிடம் இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்திடுமா.? என்ற சந்தேகமும் எழுந்தது.
அந்த யோசனையுடனே வேலைக்கும் கிளம்பினாள். இவளை எதிர்ப்பார்த்து விமலன் நின்றிருக்க, அவனைப் பார்த்ததும் பெண்ணவளின் முகமும் பிரகாசமாக மாறியது.
“தேனு அக்காவோட திருமண பத்திரிக்கை வந்துருச்சு.. உனக்கு தான் முதல்ல காட்டணும்னு யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வந்துருக்கேன்” என்று அவளின் கையில் பத்திரிகையைத் திணித்தான்.
ஆசையாக அதை வாங்கி பார்த்தவளின் விழிகளும் சிரிப்பில் விரிந்தது.
“கல்யாண வேலை வேகமா போய்ட்டு இருக்கு போல.?”
“ஆமா தேனு.. எப்படியாவது சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு அக்காவை புகுந்த வீட்டுக்கு அனுப்பி விடணும்னு அம்மா ஆசையா இருக்காங்க..”
“அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல.? அவங்களையும் தப்பு சொல்ல முடியாது..”
“உண்மைதான்.. நிறையா பேரு அக்காக்கு கல்யாணமே ஆகாதுனு எங்க காதுபடவே பேசிருக்காங்க.. அப்ப எல்லாம் அவங்களுக்கு எப்படி இருந்துருக்கும்.?”
“எப்படியோ இப்போ நல்ல வாழ்க்கை கிடைச்சா ரொம்ப சந்தோஷம் தான் விமலன்..” என்றவளிடமும் மனநிறைவே.!
முதலில் தமயந்தியின் திருமணம் முடிந்து அன்னையைப் பிரிந்து புகுந்தகத்திற்குள் அடி எடுத்து வைத்தாள். திருமண சோர்வும் புதுமண தம்பதிகளும் அன்னியோன்யமும் வேறு எதையும் யோசிக்க விடவில்லை.
அடுத்து நான் கனிமொழியின் திருமணம் நடைப்பெற்றது. கண்ணீருடன் தான் விடைப்பெற்றாள். எப்போதும் அன்னை தந்தை என்று இருந்து விட்டவளுக்கு இப்போது இவர்களைப் பிரிந்து செல்வது தான் மிகவும் வலித்தது.
என் பொண்ணை நல்லா பார்த்துக்கங்க மாப்ள என்று ராமநாதனும் மருமகனின் கையைப் பிடித்து கண்ணீருடன் உரைத்திட, அவனும் புன்னகையுடன் தலையசைத்தான்.
இரு பெற்றோர்
களும் மகள்களின் திருமணம் நன்றாக முடித்து விட்டதை எண்ணி பெருமகிழ்வு கொண்டிருக்க, இனி தான் அவர்களின் வாழ்வில் புயல் வீச போவதை அப்போது இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
+1
