Loading

காதல் – 6

“உன்னால இந்த கல்யாண செலவை ஏத்துக்க முடியாதுனு சொல்ற.. என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்தே தீரணும்.. இவளுக்குனு ஒரு வாழ்க்கையும் கிடைக்கணும்.. நான் கிடைக்க வெப்பேன்.. இப்ப என்ன பணத்துக்குத் தான் பிரச்சனை.. ஊர்ல என் பேர்ல இருக்கற சொந்த வீட்டை நான் விற்க போறேன்..

அக்காகளுக்குக் கல்யாணம் முடிஞ்சதும் அதைய வித்து உன்னையும் கரை சேர்த்திட்டு உன் அப்பா கூட போய்ரலாம்னு நினைச்சேன்.. ஆனா உன் அக்காவை மட்டும் தனியா விட்டுட்டு நான் எப்படி போக முடியும்.? அப்படி போனா தான் எனக்கு நிம்மதி கிடைக்குமா.?

அந்த வீட்டை வித்து அதுல வர்ற பணத்தை தமயந்திக்கு மட்டும் தான் நான் தர போறேன்.. அது என் பேர்ல இருக்கற வீடு.. யாருக்கு நான் தரணும்னு நான் தான் முடிவு பண்ணனும்” என்று கூறியதை விமலனே எதிர்பார்க்கவில்லை.

அவன் செய்ய முடியாது என்று கூறவில்லை. அந்தளவிற்கு தன்னால் முடியாது என்று மட்டும் தான் கூறினான்.. இவர் என்னவென்றால் தமக்கைகளைப் பாரமாக நினைப்பதை போல் பேசுகிறார். நொந்து விட்டான். பதில்மொழி எதுவும் கூறவில்லை. இப்போது மறுத்து பேசினால் தான் பணத்திற்காக அலைகிறேன் என்று பச்சை குத்தினாலும் குத்தி விடுவார்.

இவர் தான் தன்னைப் பெற்று எடுத்ததா.? என்ற சந்தேகம் அப்பொழுது எழுந்ததை இவனால் தடுக்க முடியவில்லை. அவரின் பேச்சும் அவ்வாறு இருக்கிறதே..

தமயந்தி தான் “என்னம்மா பேசற.? அந்த வீட்டுல எல்லாருக்கும் பங்கு இருக்குது.. உனக்கு பிறகு தம்பிக்கு தான் அந்த வீடும் போகணும்.. மொத்தமா எனக்கு குடுப்பேனு சொல்றது நல்லாவா இருக்கு.?” என்று மறுத்தாள்.

“யாருக்கு குடுக்கணும்.. குடுக்க கூடாதுனு நான் தான் முடிவு பண்ணனும்.. உன் வேலை என்னவோ அதைய பாருடி.. உன் வாழ்க்கை என்னாகுமோனு தினமும் பயந்து பயந்து செத்துட்டு கிடக்கறேன்.. எனக்கு அப்பறம் உனக்கு யாருடி இருக்கா.? இப்பவே நம்மளைய பார்க்கறதுல இவன் இப்படி சலிச்சுக்கறான்.. இதுல இவனுக்குனு ஒருத்தி வந்துட்டா உன்னைய பார்ப்பானா.? நான் இல்லனா நீ நடுரோட்டுல தான் நிற்கணும்” என்று மனசாட்சியே இல்லாமல் கூறினார்.

அவ்விடத்தில் விமலனால் நிற்கவே முடியவில்லை. வரமின்றி வார்த்தையை விட்டு காயப்பட்டு கிடக்கும் இதயத்தை இன்னும் காயமாக்கி விடுவார் என்று பயந்து “அக்கா அவங்க என்ன பண்றாங்களோ பண்ணட்டும்.. எனக்கு அந்த வீடா வேணும்னு நான் கேட்க போறது இல்ல.. என் இயலாமையைத் தான் சொன்னேன்.. அது தப்பா பட்டுச்சுனா நான் ஒன்னும் பண்ண முடியாது.. உனக்கொரு நல்லது நடந்தா அதுவே எனக்கு போதும்” என்றவன் நகர்ந்தும் விட்டான்.

தம்பிக்கு ஆதரவாக தமயந்தியும் “நீ பண்றது ரொம்ப தப்பும்மா.. அவன் பாவம்.. அவனால சமாளிக்க முடியலனா முடியலனு தான் சொல்ல முடியும்.. அவனோட கஷ்டத்தை நம்மகிட்ட தான் அவன் சொல்ல முடியும்.. நம்மளே அவனைப் புரிஞ்சுக்கலனா எப்படி.?” என்று கேட்டாள்.

“உன் வாழ்க்கைக்காக தான்டி நான் இம்புட்டு பாடுபடறேன்.. இந்த சம்பந்தம் தான் அமைஞ்சுருக்கு.. மாப்பிள்ளை நல்லவனோ கெட்டவனோ பொண்ணுகளுக்கு தாலி கழுத்துல ஏறி அடுத்த வீட்டுக்குப் போனா தான் மரியாதையே.. இங்க படற கஷ்டத்தை அங்க போய் படு.. அவ்ளோதான்.. யாருக்கும் பிறந்த வீடு சொர்க்கமும் இல்லை.. அதே மாதிரி புகுந்த வீடு நரகமும் இல்லை.. எதையும் போட்டு குழப்பிக்காத.. நான் பார்த்துக்கறேன்” என்றார்.

அவளால் தான் பதில் மொழி உரைக்க முடியவில்லை. யாருக்கும் ஆதரவாக அவள் பேசுவாள்.? ஆனால் இருவரும் முட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இவளின்  திருமணத்தால் தான் இருவரும் பிரிந்ததாக இருக்க கூடாது. இப்போது யாரிடமும் இவளின் பேச்சு எடுபட போவதில்லை என்பதை மட்டும் நன்றாகவே உணர்ந்திருந்தாள்.

தேனுவின் வீட்டில்..

அவளின் தந்தையின் முன்பு இரண்டு லட்சம் பணத்தை வைத்து விட்டு நின்றிருந்தாள். எதுவும் பேசாமல் அவளையே ஆழ்ந்துப் பார்த்து அவளின் தந்தையும் அமர்ந்திருக்க, ‘பணம் ஏது.?’ என்றதாக தான் இருந்தது அவரின் பார்வை.

“என்கிட்ட வாங்குன பணத்தை விமலன் தந்துட்டான்ப்பா.. செலவுக்கு வெச்சுக்கங்கனு அம்பதாயிரம் சேர்த்தே குடுத்துருக்கான்” என்றவளின் வார்த்தைகள் முற்றிலும் பொய்யே.

தன்னவனை தன் பெற்றோரிடமே விட்டுக் கொடுக்க இவள் விரும்பவில்லை. அதனால் தான் எப்படியோ கடனில் பணத்தை வாங்கி தந்தையின் முன்பு வைத்து விட்டிருந்தாள். இன்னும் இது விமலனுக்கே தெரியாது. இவள் வாங்கியதாக கூறினால் விமலனின் மேல் நல்மதிப்பு ஏற்படுவது இயலாத காரியம். அதனால் தான் விமலன் குடுத்ததாகவே கூறினாள்.

அவரின் பார்வை இதை நம்பியதாகவே இல்லை.

“அன்னைக்கு அவங்க அக்கா புள்ளைக்கு தாய்மாமனா காது குத்து வெக்கணும்னு தான் பணத்துக்கு அலைஞ்சாங்க.. அவங்க என்கிட்ட கேட்கலப்பா.. நான் தான் குடுத்தேன்.. அதைய சீக்கிரம் திருப்பி தந்துருவேனு தான் சொன்னாங்க.. அதே மாதிரி இப்ப தந்துட்டாங்க.. அவங்க நல்லவங்கப்பா.. என்ன ரெண்டு அக்கா கூட பிறந்துட்டு படாதபாடு பட்டுட்டு இருக்காங்க.. அவங்க அப்பா இருந்துருந்தா இத்தனை பாரமும் அவங்க தலைல ஏறி இருக்காதோ என்னவோ.?” என்று தன்னவனைப் பற்றி நல்விதமாகவே எடுத்துரைத்தாள்.

தந்தையின் அழுத்தமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் நிற்க, “என்னைய பணத்துக்காக அலையறவனு நினைச்சு நீ இப்படி பண்ணிட்டு இருக்கீயா.? இப்படி ஏமாளியா இருந்துருக்கேனு தான் கோவம்” என்றார் ஆதங்கமாக.

“இன்னும் எத்தனை நாளைக்கு நீங்க அவங்களுக்கே எல்லாமும் செஞ்சுட்டு இருப்பீங்க.? வீட்டுல ஒரு ஆம்பள கஷ்டபடறாங்க நம்மளும் ஒரு வேலைக்கு போய் அவங்களுக்குத் தோள் குடுப்போம்னு அங்க இருக்கற ஒருத்தருக்குமா தோணல.?

இதுல அத்தனை ஆடம்பரமா தான் கல்யாணம் பண்ணனும்னு அவங்க அம்மா நினைக்கறது சரியா.? அங்க உங்களுக்குனு என்ன இருக்கு தேனுமா.? கடைசி வரைக்கும் கடனைக் கட்டவே நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போகணும் போல.? நாளபின்ன உங்களுக்குனு ஒரு குழந்தை வந்தா அதைய பார்க்க தான் பணம் இருக்கா.? அந்த பையன் குணத்தைப் பத்தி நான் தப்பா சொல்ல வரல.. அவன் இப்படி கஷ்டப்படறதை கேட்கறப்பவே நல்ல பொறுப்பான பையனு நல்லாவே புரியுது.. ஆனா ரொம்ப ஏமாளியா இருக்கான்.. இப்படியே காலம் பூரா இருந்தா நீங்க எப்படி வாழ்வீங்க.?

அங்க அவங்க அம்மா அவங்க புள்ளைக்கு பார்க்கற மாப்பிள்ளை மாதிரி தானே நாங்களும் உனக்கு பார்ப்போம்.. அங்க என்ன இருக்கு.? இல்லைனு பார்த்து தானே சரினு சொல்ல முடியும்.. நல்ல குணத்தை வெச்சு மட்டும் எப்படி உன்னைய கட்டிக் குடுக்க முடியும்.? இந்த காலத்துல வாழ்றதுக்கு பணம்னு ஒன்னு இருந்தா முடியும்.. அதில்லாம எப்படி பொழைப்பீங்க.?

என்னோட வருத்தம் இப்ப உனக்கு புரியாதுமா.. உனக்குனு ஒரு குழந்தை வந்து அதுவும் இப்படி நிற்கறப்ப தான் இந்த அப்பாவை நீ நினைச்சு பார்ப்ப.. ஆனா அப்ப. நான் இருக்க மாட்டேன்” என்றவரின் குரலில் ஒரு தந்தையின் வலியே பிரதிபலித்தது.

“அப்பா” என்று தேனு பதறிட, “இது தான் நிதர்சனமும் கூட.. உன்னைய பெத்து.. உனக்காக ஒன்னு ஒன்னையும் பார்த்து செஞ்சு.. இப்ப உன் முடிவுக்கே சரினு எப்படி தலையாட்டி அங்க போய் கஷ்டப்படுனு விட முடியும்.? உன் அக்காக்கு எல்லாமும் செய்யற மாதிரி தான் உனக்கும் செய்ய ஆசைப்படுவோம்..

இப்ப உன் அக்காக்கு பத்து பவுன் போடணும்னு சொன்னாங்க அதுக்கு சரினு நாங்க சொன்ன காரணமே அவங்களும் உன் அக்காக்கு தாலிகொடி அஞ்சு பவுன்லயும் மோதிரம் ஒரு பவுன்லயும் போட போறோம்னு சொன்னதுல தான்.. அவங்களும் நமக்கு சளைச்சவங்க இல்ல.. இதே உனக்குனு வர்றப்ப அவன் என்ன பண்ணுவான்.? ஒரு பவுனாவது அவனால எடுக்க தான் முடியுமா.?” என்று ஒரு தந்தையாக அவர் எழுப்பிய கேள்விகளும் நிஜமே.

“உன் அக்கா கல்யாணம் வரைக்கும் உனக்கு டைம் தர்றேன்.. அதுக்குள்ள அவன்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்துரு.. கனி கல்யாணம் முடிஞ்சதும் உனக்கு பார்க்க ஆரம்பிச்சுருவோம்.. என்னாலயும் இப்ப வேலை செய்ய முடியறது இல்ல.. நானு கண்ண மூடறதுக்குள்ள உனக்கும் ஒரு நல்லது பண்ணி வெச்சரணும்னு நினைக்கறேன்..” என்றவர் மகளிடமே முடிவைத் தந்துவிட்டு சென்றார்.

தேனுவால் எதையும் யோசிக்க முடியவில்லை.. அந்நிமிடம் மூளையே வேலை செய்வதை நிறுத்தி விட்டதைப் போல் இருந்தது. இன்னும் சிறிது நேரம் அப்படி நின்றால் சிலையாக மாறி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அசையாமல் நின்றிருந்த அவளின் தோற்றமும் அவ்வாறு தான் காட்சியளித்தது.

யாரிடம் இதைப்பற்றி பேசுவாள்.? அவளும் இதையைத் தான் விமலனிடம் கூறினாளே.? அவனோ இதை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

“தேனு” என்று கனி தான் அவளை அழைத்து நிகழ்காலத்திற்கு மாற்றிட, தன் இயலாமையை பார்வையாலேயே தமக்கையிடம் காட்டினாள்.

“அப்பா பேசறது தப்புனு சொல்ல மாட்டேன்டி.. இதே வேறவங்களா இருந்தா இவ்ளோ பொறுமையா பேசி இருக்க மாட்டாங்க.. நீ காதலிக்கறது தெரிஞ்சதுமே உன்னைய அடிச்சு வீட்டுக்குள்ள அடைச்சு வெச்சுருப்பாங்க..

ஆனா நம்ம அப்பா நீ பணம் குடுத்துருக்கேனு தெரிஞ்சதும் இவ்ளோ பொறுமையா இருக்காரு.. அவரோட ஆதங்கமும் நியாயம் தான்.. நான் இதைய முதல்லயே உன்கிட்ட சொல்லிட்டேன்.. இனி அவங்க தான் முடிவு எடுக்கணும்” என்றாள்.

தேனு எதுவும் பேசவில்லை. அமைதியையே கடைப்பிடித்தாள்.

அந்த இரவு தேனுவுக்கும் விமலனுக்கு ஒரு வித மனநிலையையே குடுத்திருந்தது.

அடுத்த நாள் இருவரும் சந்தித்துக் கொண்டாலும் பிரச்சினையைப் பற்றி எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தமக்கைகளின் திருமண விசயங்களை மட்டுமே பகிர்ந்துக் கொண்டனர்.

தமயந்தியின் திருமணம் முடிவாகி இருக்க, நல்ல நாள் ஒன்றில் கனியைப் பெண் பார்க்க வருவதாக இருந்தது. தேனு குடுத்த பணத்தை அவளின் தந்தை தொடவில்லை. அவள் எங்கு வைத்தாளோ அங்கேயே தான் இருந்தது. அவளின் அன்னையும் அதைப்பற்றி எதுவும் கூறிக் கொள்ளவில்லை. இறுதியில் தேனு தான் அந்த பணத்தை எடுத்து உள்ளே வைத்தாள்.

“உங்க அக்காக்கு எப்ப கல்யாணம் வெக்கறீங்க.?”

“அவங்க வந்து பார்த்துட்டு போனதும் அவங்க எந்த தேதில வெக்கலாம்னு சொல்றாங்களோ அப்பவே வெச்சரலாம்னு தான் அப்பா பேசிட்டு இருந்தாங்க விமலன்..”

“ஓஓஓஓ சரி சரி.. தமயந்திக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு.. அம்மாவும் கொஞ்ச நாள் தள்ளி வெக்கலாம்னு சொன்னாங்களாமா.. மாப்பிள்ளை வீடும் சரினு சொல்லிட்டாங்க..”

“எப்படியும் உங்க அக்கா கல்யாணம் முடிஞ்சதும் தான் கனி கல்யாணம் வெப்பாங்கனு நினைக்கறேன்..” என்று நிறுத்தி “அவ கல்யாணம் முடிஞ்சதும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க போறேனு அப்பா சொல்றாங்க” என்றாள் குரல் கம்ம.

‘புரியல’ என்றதாக ஆடவனின் விழிகள் கேட்டிட, “நம்ம காதல் அவங்களுக்குத் தெரிஞ்சாலும் எப்படி என்னைய கல்யாணம் பண்ணி குடுக்க முடியும் விமலன்.? அப்பாவே கேட்கறாங்க உங்ககிட்ட என்ன இருக்குனு.? அட்லீஸ்ட் எனக்கு கட்டற தாலியைத் தான் உங்களால எடுக்க முடியுமானு கேட்கறாங்க.?” என்றவள் அழுதே விட்டாள்.

அவனிடம் எதுவுமில்லை என்று தெரிந்துத் தான் அவன் மேல் காதல் கொண்டாள். அந்த காதலுக்காக பெற்றோரைத் தூக்கி எறிந்து விட்டு செல்லும் ரகமும் இவளில்லை. காதலுக்கு வசதி பணம் தேவையில்லை.. ஆனால் கல்யாணம் என்று வரும்போது அனைத்தையும் பார்த்து தான் ஆக வேண்டுமே..

ஒன்றுமில்லை என்று தெரிந்தும் பாதாளத்தில் குதிக்க இவள் ஒன்றும் புத்தியில்லாத பெண் இல்லை. சினிமாவைப் போல் ஒன்றுமில்லாதவனைத் திருமணம் செய்து கொண்டு ஒரே பாட்டில் கோடீஸ்வரராகிட முடியாது என்ற நிஜத்தை உணர்ந்தவள். இவளுக்கு விமலனும் வேணும்.. அதே சமயம் பிரச்சினையில்லாத வாழ்வும் வேணும். அதற்காக இவள் தான் பேச வேண்டுமே..

இன்றிலிருந்தே அவள் பேச வேண்டும்.. தினமும் இவர்களின் வாழ்க்கைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.. முன்பு போல் விமலனின் அக்கா, அம்மா புராணங்களைத் தவிர்த்து இவர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பதை மட்டுமே தெளிவாக பேச வேண்டும்.. நாள் முழுவதும் பேசிட இவர்கள் என்ன முதலாளியா.? கிடைக்கும் சொற்ப நேரங்களில் கண்டிப்பாக பேச வேண்டும் என்ற முடிவில் தான் சமயம் கிடைத்ததும் கேட்டு விட்டாள் பெண்ணவள்.

பெண்ணவளின் அழுகையில் “நீ ஏன் தேனு அழுகற.? உன் அப்பா கேட்கற கேள்வியும் நியாயம் தான்.. எனக்கு அது நல்லாவே புரியுது.. தமயந்தி அக்காவோட கல்யாண செலவை அம்மாவே ஏத்துக்கிட்டாங்க.. நான் எதுவும் செய்ய போறதில்லை” என்றவனைப் புரியாமல் பார்த்தாள் இவள்.

வீட்டில் நடந்ததை இவன் உரைத்திட, இதைக் கேட்டதும் சிரிப்பதா.? அழுவதா.? என்பதே அவளுக்கு விளங்காமல் போயிற்று.

“எனக்கு என்ன சொல்றதுனு தெரியல விமலன்.. உங்க அம்மாவோட முடிவு உங்க சரினு சொல்றதா.? தவறுனு சொல்றதானு ஒன்னும் புரியல.. பட்டுபட்டுனு தான் உங்க அம்மா பேசுவாங்கனு கேள்விப்பட்டுருக்கேன்.. இப்படி பட்டுபட்டுனு யோசிக்காம முடிவெடுப்பாங்கனு தெரியாது..

எது எப்படியோ உங்க அம்மாவோட முடிவு தப்பாகிட கூடாதுனு கடவுள் கிட்ட வேண்டிக்கறேன்.. உங்ககிட்ட எதுவும் இல்லனாலும் பரவால்ல.. ஆனா சுத்தி கடனை வாங்கி வெச்சு அதைய அடைக்க வழி தெரியாம மட்டும் முழிக்க கூடாது.. கண்டிப்பா என் அப்பா சம்மதம் சொல்லுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றதும் இடைவேளையின் நேரமும் முடிந்திட, “வேலையைப் பார்க்கறேன்” என்று அவள் நகர்ந்தாள்.

இன்னும் நகராமல் நின்றிருந்த விமல

ன் தான் ‘என் அம்மா சம்மதிப்பாங்கனு எனக்கு நம்பிக்கையே இல்லை தேனு’ என்று நினைத்தான்.

தொடரும்..

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்