
விடியும் முன்..!
அத்தியாயம் 26
இருளின் திரை முற்றும் முழுதாய் மூடியிருக்க பிறை நிலவின் ஒளி பூமியை வருடிக் கொண்டிருந்த நள்ளிரவு நேரம் அது.
மழை ஓய்ந்திருந்தாலும் வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று அவனின் மேனியை தடவிக் கொண்டிருக்க அதை பொருட்படுத்தாமல் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான்,அந்த திடகாத்திரமான வாலிபன்.
அவன் சதானந்தன்.
பக்கத்து ஊரில் விஷேசத்துக்காக கடாவெட்டிக் கொடுத்திருக்க சிதறிய இரத்தம் அவன் சட்டையில் சிதறி உறைந்து போயிருந்தது.சட்டையின் பெரும்பாலான இடங்களில் இரத்தக்கறை படிந்திருக்க ஓரிரண்டு இடம் மட்டும் தப்பிப் பிழைத்திருந்தது.பழைய சட்டை ஆங்காங்கே கிழிசல்கள் வேறு.
வேலையை முடித்து விட்டு குளித்துக் கொண்டு கிளம்பலாம் என்று எண்ணியிருக்க வீட்டில் இருந்து வந்த அவசர அழைப்பால் விரைவாக கிளம்பியிருந்தவனின் முகத்தில் பதட்டத்தின் ரேகைகள்.
சைக்களின் கைப்பிடியில் பொலித்தீன் பையில் கடாவெட்டிய கத்திகள் தொங்கிக் கொண்டு வர இரத்தம் உறைந்து போயிருந்தது,அவற்றிலும்.
பொதுவாகவே அவனுக்கு மூட நம்பிக்கை குறைவு என்பதால் அத்தனை எளிதில் பயந்து விடமாட்டான்.அதனால் தான் இரத்தத்தை கூட சுத்தம் செய்யாது அந்த நடுநிசியில் வீட்டுக்கு கிளம்பியிருப்பான் போலும்.
அந்த ஒற்றையடிப் பாதை வழியே சைக்கிள் நகர்ந்து கொண்டிருக்க திடுமென அவனைச் சூழ இரத்த வாடை.அவனை மொத்தமாய் சுழற்றி எடுக்கும் விதமாய் அந்த மணம் கமழ்வது போல் இருக்க சட்டென நிறுத்தினான்,சைக்கிளை.
சட்டையை முகர்ந்து பார்த்தவனுக்கு அதில் அத்தனை வாடை வரவில்லை என்றுணர மனதுக்குள் என்றுமில்லாமல் சிறு பயம்.இத்தனை நேரம் இல்லாது தற்சமயம் மெதுமெதுவாய் உருளத் துவங்கி இருந்தது,பயப்பந்து.
பயம் தந்த பலத்தில் விரைவாய் சைக்கிளை மிதிக்க சிறிது தூரம் நகர்ந்ததும் அந்த வாடை அற்றுப் போயிருப்பதை உணர்ந்தவனுக்குள் அத்தனை நிம்மதி.
வேகமாய மிதித்ததில் வியர்த்துப் போட்டிருக்க தோளில் இருந்த துண்டால் வியர்வையை ஒற்றி எடுத்த படி சைக்கிளை மிதித்தவனை சூழ இப்போது குப்பென்று மல்லிகை மணம்.
சுற்றும் விழிகளை சுழலவிட்டவனுக்கு மல்லிகைப் பூ இருப்பதற்கான அடையாளமே இல்லாது போக நாசிக்குள் புகுந்த நெடியில் மூச்சடைத்து தலைவலித்தது,அவனுக்கு.
சைக்கிளை மிதித்துக் கொண்டு நகர்ந்தாலும் மல்லிகை மணம் அகலாதிருக்க இப்போது அந்த மணத்துடன் சேர்ந்து இரத்த வாடையும் வீசத் துவங்கி இருந்தது.
முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகள் கோடு போட்டுக் கொண்டு கீழிறங்க இன்னும் வேகமாய் சைக்கிளை மிதித்தவனின் செவியில் நுழைந்திற்று,யாரோ மூச்சிறைக்கும் சத்தம்.
உயர் கதியில் ஓடி வந்து ஓய்ந்து நின்று வேகவேகமாய் மூச்சு வாங்கும் சத்தம்.இதயம் நின்று துடிக்க கலவையான மணங்கள் நாசியை நிறைக்க பின்னால் திரும்பி பாராது சைக்கிளை செலுத்தியவனுக்கு மரண பயம்.
மீண்டும் “ஹா..ஹா..ஹா..” என்று அதே மூச்சு வாங்கும் சத்தம்.உயிர் வரை நடுக்கம் பரவ அந்த மணமும் சத்தமும் அவனை விரட்டிக் கொண்டே வருவது போன்ற உணர்வு.
கலவை மணத்தில் மூச்சடைத்து தலை வலிப்பது போல் இருக்க விழிகள் சொருகத் துவங்க பொறுக்க முடியாமல் சைக்கிளை நிறுத்தியவனுக்கு நொடிக்கு நொடி அதிகரிக்கும் மூச்சிறைப்பு சத்தம் இன்னும் வெகு அருகில் கேட்டது.
ஏதோ உள்மனம் தந்த உந்துதலில் பின்னே திரும்ப பெரிய கறுப்பு நிற வேட்டை நாயொன்று இவனைப் பார்த்த படி நின்றிருக்க அதன் வாயில் இருந்து முழுதாய் குருதி வழிந்து கொண்டிருந்தது.
கண்டதும் திடுக்கிட்டவனுக்கு அந்த நாயைக் கண்டதும் அமானுஷ்யமான எண்ணங்கள் மனதில் முளைக்கத் துவங்கி இருந்தன.
பயத்தின் உச்சத்தில் அவனுக்கு அழுகையே வந்து விட சைக்கிளை அப்படியே விட்டு விட்டு அவன் ஓட அவன் நகர்வதை பார்த்த படி அந்த வேட்டை நாய் எந்த வித எதிர்வினையுமின்றி நின்றிருந்தது,சிறிது நேரம்.
பின்னால் திரும்பி பார்த்த படி ஓடியவனுக்கு அந்த நாய் தன்னை பின் தொடர்ந்து வரவில்லை என்பதே பெருத்த ஆசுவாசத்தை கொடுக்க அது கொஞ்ச நேரமும் நிலைக்கவில்லை.
நாலுகால் பாய்ச்சலில் விழிகளில் ஒரு வித வெறி தெரிய அது இவனைத் துரத்தத் துவங்க விதிவிதிர்த்து போனவனோ இன்னும் தன் வேகத்தை கூட்ட எவ்வளவு தூரம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடினான் என்பது அவனுக்கே தெரியாது.
ஓடியோடி வந்து ஒரு வீட்டுத் திண்ணையை நெருங்க விழி அலசித் தேடியவனுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலப்படவில்லை,அந்த வேட்டை நாய்.
அந்த பாதையில் அமைந்திருந்த ஒற்றைக் குடிசை அது.அதன் வெளிப்புறம் இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டவனுக்கு ஓடலில் கொஞ்சமும் தெம்பில்லை. வெளியில் தொங்க விட்டிருந்த இலாந்தர் விளக்கில் இருந்து வெளிச்சம் கசிய அது ஓரளவு இருளைப் போக்குவதாய்.
திடுமென அந்தக் குடிசையில் கதவு திறக்கும் சத்தம்.விழி நிமிர்த்தி பார்த்தவனோ அடுத்த நொடி மயங்கிச் சரிந்திருந்தான்,தன்னை மீறி.
“ஓகே..வீடியோவ ஆஃப் பண்ணுங்க..” சதானந்தன் தனது அவனுபவத்தை சொல்லி முடிக்க குரல் கொடுத்த நிவேதாவுக்கு வியர்த்து வழிந்து இருந்த அவனின் தோற்றம் அவனின் வார்த்தைகள் உண்மையென நம்ப வைத்திட்டது.
கேட்பதற்கு சாதாரணமாய் தோன்றினாலும் உணர்ந்தவர்களின் நிலை அப்படி இல்லையே.
“அதுக்கப்றம் உங்களுக்கு அப்டி பீல் ஆகி இருக்கா..?”
“இல்ல..அதுக்கு அப்றம் நா அந்த வழியா வந்தது கூட கெடயாது..”
“இது நடந்து எத்தன வருஷம் இருக்கும்..?”
“ஒரு ஒன்ற வருஷம் இருக்கும்..”
“அப்போ இருந்து அந்த தோப்பு வீட்டுப் பக்கம் யாரும் போறது கெடயாது..”
“ஆமா அதுக்கப்றம் ஆள் நடமாட்டம் ரொம்பவே கம்மியாயிருச்சு..அடிக்கடி இப்டி ஏதாச்சும் அமானுஷ்யமா நடக்கவும் ஆளுங்க ரொம்ப பயந்துட்டாங்க..ஏன் நானே கூட என்ன அவசரம்னாலும் அந்த வழியா போக மாட்டேன்..”
“சரி ரொம்ப நன்றீங்க..” புன்னகையுடன் உரைத்து விட்டு அவன் வீட்டில் இருந்து கிளம்பினர்,அவளது குழு.
இதுவரை கேள்வி கேட்டிட பதிலாய் இப்படி அமானுஷ்யமான சம்பவங்கள் தான் கிடைத்திருந்தன.நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அந்த தோப்பு வீட்டுக்கு சென்று பார்ப்பது தான் உசிதம் எனத் தோன்றிட்டாலும் மனதில் பயத்தின் தூறல்.
சத்யாவுக்கு அழைத்துப் பார்க்கலாம் என முனைந்த கணம் அங்கு வந்த தோழனொருவனோ,
“நிவேதா எனக்கென்னமோ அந்த வீட்டுக்கு போய் பாக்கறது தான் சரின்னு படுது..”
“ம்ம்..எனக்கும் அப்டி தான் தோணுது..” என்ற படி அழைப்பெடுக்க பெண்ணொருத்தி அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.
சற்று தூரமாய் இருந்த மரத்தின் அருகே நின்று கொண்டிருந்தவளின் பார்வை அவளில் தான் படிந்திருக்கிறது என்பதை உணராமல் இல்லை,நிவேதாவும்.
அந்தப் பெண்ணின் அருகே செல்லப் பார்த்தவளை மரித்துக் கொண்டு முன்னே வந்தனர்,இரு ஆடவர்கள்.
●●●●●●●●●
மித்ரஸ்ரீயை அழைத்துச் செல்ல வந்திருந்தான்,இளஞ்செழியன்.
வாய் வலிக்க ரிஷிவர்மனுக்குத் திட்டிக் கொண்டு வந்தவனோ செழியனைப் பார்த்து சிறு புன்னகையை உதிர்க்க அவனின் விழிகளில் ஆராய்ச்சி.
“என்ன ஸ்ரீ யாருக்கு திட்டிட்டு இருக்க..?”
“வேற யாருக்கு திட்டப் போறேன்..எல்லாம் அந்த ஆளுக்குத் தான்..” என்ற படி அவனுடன் நடக்க தலையில் அடித்துக் கொண்டான்,செழியன்.
“நானும் லவ் பண்றவங்கள பாத்துருக்கேன்…அவங்க லவ்ல சண்ட இருக்கும்..உங்க ரெண்டு பேர் லவ்வே சண்கயால இல்ல இருக்கு..ரிஷிண்ணா எவ்ளோ பொறுமயான ஆளு..அவரயே வெறுப்பேத்துற நீ..”
“யாரு அந்த மனுஷன்..பொறுமயான ஆளு..நீ பாத்த அத..நெனப்புத் தான் பொழப்பு கெடுக்கும்..ஒரு பத்து நிமிஷம் அவர் கூட இருந்து பாரு அப்போ புரியும்..” நொடித்துக் கொண்டவளுக்கு பையனின் வார்த்தைகள் மனதில் வட்டமடிக்க கோபத்துடன் சிறு வலியும்.
“ஆனா லவ்வர இப்டியும் திட்டக் கூடாது பா..உன் ஆளு பாவம்..”
“நா உங்க வீட்டுப் பொண்ணா..இல்லன்னா அந்த ஆளு உங்க வீட்டுப் பையனான்னு எனக்கே கன்ஃபியூஸ் ஆகற மாதிரி இருக்கு உங்க கவனிப்பு..ஷப்பா முடில..கடவுளே காப்பாத்து..” சத்தமாய் சொன்னவளின் செயலில் மெதுவாய் இதழ் பிரித்தான்,செழியன்.
செழியனுக்கு அவளின் முகத்தில் இருந்த கடுப்புத் தெரிந்தாலும் கலக்கம் தெரியவில்லை.அவன் கூர்ந்து நோக்கவில்லையோ..? இல்லை, அவள் வெளிப்படுத்தி நிற்கவில்லையோ..?
யாருக்குத் தெரியும்.
“ஆமா நீ யார் கூட வந்த..? தனியா தான வந்த..? தனியா வந்தும் எதுக்கு அவருக்கு திட்டற..போன்ல கூட சண்டயா..?” என்கவே பையன் வந்ததை அவனிடம் தெரிவிக்கவில்லை,என்பது நினைவில் வந்தது.
“என்ன பதில காணோம்..உன்ன தனியா அனுப்ப பயம்னு அண்ணன் வந்தாரா..?” சிரிப்புடன் கலாய்க்க மறுப்பாய் தலையசைத்தாள்,அவள்.
“அவரு ஒன்னும் கூட வர்ல..” கோபத்தில் அடித்து விட சிரித்துக் கொண்டே ஏறி வண்டியைக் கிளப்ப அவளும் ஏறிக் கொண்டாள்.
இருக்கையில் கண்மூடி சாய்ந்து இருந்தவளுக்கு ரிஷியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் செவியில் ரீங்காரமிட அத்தனை கோபம்.
அவன் விழிகளில் உண்மை இல்லை என்று உறுதியாக நம்புபவளுக்கு எதற்கு வீணாய் பையன் வார்த்தைகளை விட வேண்டும் என்கின்ற கேள்வி தான் தலையைப் பிளக்க வைத்தது.
அவன் வார்த்தகைளின் பின்னிருக்கும் காரணத்தை தேட முயல்பவளுக்கு எந்த வித உணர்வையும் அவன் வெளிப்படுத்தாதிருப்பது இன்னுமே தலைவலியாய்.
அவனுக்கு தன் மீதிருப்பது என்னவகையான உணர்வென்று அவளுக்கு சத்தியமாய் புரிந்து கொள்ள முடியவில்லை.
சில நேரம் காதல் போலிருக்கும்..
சில நேரம் வெறும் நட்பாய் நினைக்க வைக்கும்..
சில நேரம் வெறுப்போ என்று எண்ண வைக்கும்..
சில நேரம் உரிமையோ என திகைக்க வைக்கும்..
கலவையான உணர்வுகளை காட்டத் தெரிந்தவனுக்கே காதல் என்று புரியாது போக அவளுக்கு புரிந்திடுமா என்ன..?
அன்று விடுதியில் இருக்கும் சமயம் வினோத் தவறுதலாய் தன் கரத்தை பற்றினான் என்பதற்காக அவனைப் போட்டு புரட்டி எடுத்தது இன்னும் நினைவில் தான் இருக்கிறது.
தடுக்கப் போனவளை பிடித்திழுத்து கலன் பார்வை பார்த்ததை மறந்திடுவாளா அத்தனை எளிதாய்..?
உடனிருந்த தோழியருக்குமே அவன் விழிகளில் தெரிந்த ரௌத்திரத்தில் பயம் வந்ததே.
இப்பொழுது அந்த பார்வையை நினைக்கும் போதும் அவளுக்கு பயம் வரத்தான் செய்கிறது.
நிதானமான ரிஷியின் ருத்ரவதாரத்தை அன்று தான் முதன் முதலில் கண்டிருந்தாள்.
கண்டு பயந்து ஒரு வாரம் அவனுடம் வம்பிழுக்காமல் அமைதியின் சிகரமாய் இருந்ததெல்லாம் வேறு கதை.
நினைத்த படி பெரு மூச்சு விட்டவளாய் நிமிர திடுமென நின்றது,வண்டி.
●●●●●●●
“சிவதர்ஷன்..” தனக்குள் சொல்லிப் பார்த்தவளுக்கு இதற்கு முன்பு அந்தப் பெயரை கேட்டிருப்பது போன்ற எண்ணம்.
“காவேரி அந்தம்மா என்ன பண்றாங்க..?”
“அவங்க ரீமேரேஜ் பண்ணிகிட்டாங்க அவங்க அத்தப் பையன..” என்க காவேரியின் தாய் கதவைத் திறந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் சத்தம் கேட்டது.
“காவேரி,அந்த வரம் அவங்க பரம்பரைல மொத கொழந்தகி தான கெடக்கும்னு சொன்னீங்க..இப்போ அந்தம்மாவோட கொழந்த எறந்து இருந்ததுன்னா அந்த பையனுக்கு தான வரம் கெடச்சி இருக்கும்..அவன் தான் எறந்துட்டானே..” சிறிது நேர யோசனைக்குப் பின் சொல்ல காவேரியின் இதழ்களில் புன்னகை.
“நானும் இதத் தான் அப்பா கிட்ட கேட்டேன்..அப்பா அந்த வம்சத்தோட வரம் கெடச்ச வாரிசோட ஜனனத்துக்கும் மரணத்துக்கும் தா இந்த கோயில் மணி அடிக்கும்..கோயில் மணி ரெண்டு தடவ அடிச்சத நா கேட்டேன்..ஆனாலும் அந்த வாரிசு உசுரோட தான் இருக்குன்னு சொன்னாரு..”
“வெயிட்..வெயிட்..ரெண்டு தடவன்னா ஒன்னு ஜனனம்..அடுத்தது மரணம்..அப்டி இருக்குறப்போ எப்டி உயிரோட இருப்பாங்க..”
“அதான் எனக்கும் புரியல..அப்பா கேட்டா உயிரோட இருக்குன்னு மட்டுந்தான் சொன்னாரு..ஆனா இன்னிக்கி காலைல கஜேந்திரன் எறந்தப்போ மணி அடிச்சுச்சு..அத வச்சு தான் நானும் அவன் தான் வாரிசா இருக்கும்னு கன்பார்ம் பண்ணிகிட்டேன்..”
“ஒருவேள இப்டி இருக்குமோ..நெஜமான மூத்த வாரிசு பொறந்து அப்போவே எறந்து இருக்கும்..பொறந்ததுமே எறந்ததுனால அந்த வரம் கஜேந்தரினுக்கு கெடச்சி இருக்கலாமோ..” என்க காவேரிக்கும் சரியாய் இருக்குமோ என்கின்ற எண்ணம்.
“இருங்க..இருங்க..” என்ற படி அலுமாரியைத் துழாவி புத்தகக் கட்டொன்றை எடுத்தாள்.
“இது அப்பா எழுதுன புக்..யாரும் பப்ளிஷ் பண்ண விடல..இதுல ஏதாச்சும் இருக்கான்னு தேடலாம்..” என்ற படி ஆராய தேடிய தகவல் கிடைத்த பாடில்லை.
பாதிப்பக்கத்தை புரட்டும் போது தடித்த எழுத்துக்களில் ஒரு வாக்கியம்,
“தலைமுறையின் தலைமகனாய் தலையெடுக்கும் ஆண்மகன்,ஆள் மட்டுமல்ல ஆன்மாவும் அழகு தான்..”
அந்த வசனத்தை திருப்பிப் படித்த தர்ஷினிக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.
தொடரும்.
🖋️அதி..!
2024.04.24

