
விடியும் முன்..!
அத்தியாயம் 22
பதில் இயம்புகையிலேயே தொண்டை அடைத்திட இனம் புரியா கலவர மேகமொன்று அவள் மன வானத்தை முற்றுகையிட்டு மூழ்கடித்தது.
“ம்ம் குட்..ரகுகிட்ட நா வர ஈவ்னிங் ஆகும்னு சொல்லுங்க..அவன் போன எடுக்கல..”
“ஓகே லீடர்..”
“ம்ம்..ஓகே” என்றபடி அவன் அழைப்பை துண்டித்திடவே ஆசுமாசம் அடைந்தது,அவள் மனது.
அவனுடன் பேசிய நிமிடங்களில் உள்ளுக்குள் பிரளயமே வெடித்து விட்டது.தான் நினைத்ததை விட சத்யா மீது அவளுக்கு அதிக பயமிருப்பதை அழைப்பு வந்த கணம் தான் உணர்ந்து கொண்டது,அவள் மனது.
சட்டென்று ரகுவுக்கு அழைப்பெடுத்தெ விடயத்தை சொல்லி அவன் தோண்டித் துருவும் முன் அழைப்பை துண்டித்திருந்தாள்,சாமர்த்தியமாய்.
சில மீற்றர் தூரம் நடந்து அந்த தோப்பு வீட்டின் வாயிலை அடைந்து விட்டவளின் பார்வை அந்த வீட்டை அலசிற்று.
இரண்டு மாடிகளை கொண்ட பெரிய வீடு அது.சுற்றி அது போல இன்னும் மூன்று வீடுகளை கட்டி முடிக்கலாம் என்று எண்ணும் அளவு வீட்டைச் சூழந்த பெரும் நிலப்பரப்பு.ஆங்காங்கே,மூலைகளில் மட்டும் சற்று பெரிய மரங்கள்.
காணியை சுற்றி பெரிய மதில் எழுப்பி இருக்க முன் பக்க மதிலின் சரி நடுவே அமைந்திருந்த நுழைவாயிலோ துருபிடித்திருந்தது.
நுழைவாயிற்கு வலது புற மூலையில் பெரியதோர் மாமரம்,காய்களே இல்லாமல்.
நீண்ட காலம் பராமரிக்காமையினால் அழுக்கேறி கிடந்த சுவர்களின் வெள்ளை நிறம் கபிலமாக மாறியிருந்தது,தூசு படிந்தமையினால்.
ஏதோ ஒரு பயமும் படபடப்பும் மனதுக்குள்.அந்த இடத்தில் ஒரு வித ஒட்டாத்தன்மையுடன் கூடிய இயல்பின்மை.
சுற்றும் முற்றும் கண்களை சுழற்றியவளுக்கு அந்த வீட்டின் பின்புறம் சிறு வீடொன்றெ இருப்பது அத்தனை தெளிவாய்த் தெரியவில்லை.
அந்த இடம் வித்தியாசமாகவும் கொஞ்சம் அமானுஷ்யமாகவும் தோன்றினாலும் திரும்பிச் செல்லும் எண்ணமில்லை,அவளுக்கு.
வாயிலை அவள் திறக்க “க்றீச்” எனும் சத்தம் காதை நிறைக்க மிதமான வேகத்தில் வீசிய காற்று மேனியைத் தழுவிச் சென்றிட அவளின் கரங்கள் துப்பட்டாவை இறுகப்பற்றிக் கொண்டது,தன்னாலே.
அவள் சற்றே அசைத்து விட்டிருக்க முழுதாக திறந்து கொண்ட நுழைவாயிலே உள்ளிருந்த தைரியத்தை முற்றாக கரைக்க முயன்று கொண்டிருந்ததே.
“ச்சே..காத்துக்கா இருக்கும்..” தனக்குள் சொல்லி சமாதானப்படுத்திய படி முகத்தில் மோதிய முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டவாறு பாதத்தை எடுத்து முன்னே வைக்க “டம்”என்பதாய் பெரும் சத்தமொன்று.
அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் பாதங்கள் பாதியில் நின்று அந்தரத்தில் மிதக்க படர்ந்திருந்த பயம் இன்னும் கூடிப்போய் மனம் முழுவதும் வியாபித்து விரிந்தது.
மெல்ல அவள் பின்னே நகர வாயில்கள் தன்னாலே மூடிக்கொள்ள தன் விழிகளில் விழுந்ததை நம்ப முடியாமல் அதிர்வில் அகல விரிந்தன,அவள் விழிகள்.
ஏனோ பயத்தில் வியர்க்கத் துவங்க புறங்கையால் துடைத்த படி வந்த வழியிலேயே அவள் திரும்பி நடக்க நடையில் அத்தனை வேகம்.
இரு பாதைகளும் சந்திக்கும் இடத்துக்கு வந்து காவேரி வீட்டுக்கு செல்லும் பாதையின் ஊடாக நகர்ந்தாலும் இதயத்தின் வேகம் இன்னும் இயல்பு மீளவில்லை.
முத்துவை அனுப்பி விட்டு வந்து வாசலில் எட்டிப் பார்த்தவாறு நின்றிருந்தாள்,காவேரி.
இந்து தர்ஷினி வருவதாக அவளிடமும் அழைத்துக் கூறியிருந்தாளே.
யாரென்று தெரியாவிடினும் தன்னை தேடி வரும் நபரின் பாதுகாப்பு பற்றிய பொறுப்பு அவளிடம் இருப்பதாய் நினைத்திருப்பவளுக்கு தர்ஷினியை காணாதது ஒரு வித பதட்டத்தை தந்தது.வரும் போது வரட்டும் என்று தட்டிக் கழிக்க முடிந்ததில்லை,அவளால்.
எட்டிப் பார்த்தவளுக்கு வியர்க்க விறுவிறுக்க ஒரு பெண் கலக்கமாக முகத்தை சுமந்த வண்ணம் தன் வீட்டை நோக்கி நடந்து வருவது புரிய சட்டென புரிந்து விட்டது,அது தான் தர்ஷினி என்பது.
தர்ஷினியோ காவேரியை நோக்கி வேக எட்டுக்களை எடுத்து வைத்த வண்ணம் இருக்க அவளின் நடை தடைப்பட்டது என்னவோ,அங்கு வண்டியில் வந்து கொண்டிருந்த ஆடவனைக் கண்டதும் தான்.
●●●●●●●●●
தாங்கள் வழமையாக கதைத்திடும் கோயிலின் பிற்புறமாய் இருக்கும் கட்டுத் திண்டில் அமர்ந்திருந்தான் அபிஷேக்,தோழனுடன்.
ஊரைப் பார்க்கும் போது அத்தனை பிரமிப்பாய் இருந்தது.எத்தனை மாற்றங்கள் அவன் இங்கில்லா நாட்களில்..?
அனைத்தையும் பார்த்து வியந்தாலும் அது எதையும் இரசிக்கும் மனநிலை அவனுக்கு சிறிதேனும் இல்லை.வெகு விரைவாய் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்பது தான் அவன் மனதில் ஒரே எண்ணமாய் ஓடிக் கொண்டிருந்தது.
அனைத்தையும் உதறி விட்டு கிளம்பிச் செல்ல ஒரு நொடி போதும்.இரத்த பந்தம் என்கின்ற ஒரே காரணம் தான் எதையும் வெளிப்படுத்த முடியாமல் நடமாட வைக்கிறது.
மருதவேலுக்கு இந்த அபிஷேக் புதிது தான்.எப்போதும் கலகலவென இருக்கும் அவனின் சுபாவம் காணாமல் போயிருக்க முற்றாய் தளர்ந்தவனாய் இருந்த தோற்றம் அத்தனை உவப்பாய் இல்லை,மருதவேலுக்கு.
தோழனுக்கும் அவனின் பெற்றோருக்கும் ஒத்துப் போகாத விடயம் அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும் இன்று தர்மேந்திரனின் நடத்தையைக் கேள்வி பட்டவனுக்கு மனம் வெறுத்துப் போனது.
தந்தையும் மகனும் எதிர் எதிர் துருவங்கள் என்றாலும் இப்படி அண்ணனின் இறப்பிற்கு கூட வீட்டினுள் நுழைய விடாமல் இருந்தது,அவர்களிடையே தான் நினைப்பதை விட பெரிய பிரச்சினையொன்று நிகழ்வதற்கு சான்றாய்.
மருதவேலுக்கு அதை கேட்டு விட வேண்டும் என்கின்ற துடிப்பு நிறைந்திருந்தாலும் தோழன் இப்படி வாடிப் போய் இருக்கும் சமயத்தில் கேட்க மனம் உந்தவில்லை.
தான் சோர்ந்து இருக்கும் போது கேட்காமல் ஆறுதல் சொல்லி தேற்றி விடும் அபிஷேக்கை இப்படியே இருக்க விடவும் மனம் ஒப்பாதிருக்க “மச்சீஈஈஈஈ” என்றான்,ஈனஸ்வரத்தில்.
“சொல்லு மருது..”
“கேக்கவும் முடியல..கேக்காம இருக்கவும் முடியல..உனக்கும் உங்க அப்பாவுக்கும் என்னடா ப்ரச்சன..? விருப்பம்னா சொல்லு..இல்லன்னா வேணா..” தோழனின் கூற்றில் ஏறிட்டுப் பார்த்தவனின் இதழ்கள் கசப்பாய் புன்னகைத்தன.
எதை சொல்ல..?
எண்ணிடலங்கா மனஸ்தாபங்கள்..
எக்கச்சக்க முறுகல்கள்..
எதிர்த்து போட்டுக்கொண்ட சண்டைகள்..
என ஆயிரம் இருக்க அதில் எதைத் தான் சொல்லிட அவனும்..?
“அபீஈஈஈஈ..எதுக்குடா இப்டி வெறிச்சு பாத்துட்டு இருக்க..? என்ன தான் டா உன்னோட ப்ரச்சன..?” மருதவேல் உலுக்கிய உலுக்கலில் கலைந்தவனின் மனதில் பெரும் வலி.
இப்போதைக்கு சொல்ல முடியாத பல விடயங்கள் மனதில் பல இருந்தாலும் வெளிப்படுத்தக்கூடிய தன் மனக்காயங்களை தோழனிடம் பகிர்ந்து கொள்ளவே துடித்தது,அவன் மனது.
ஆழப்பெருமூச்சொன்றை இழுத்து விட்டு சமப்படுத்திக் கொள்ள அவனின் செய்கைகளை இடுங்கிய விழிகளுடன் நோக்கினான்,தோழன்.
“நா உங்கிட்ட சில விஷயங்கள மறச்சு இருக்கேன்..அதுக்கு காரணம் என்னோட சூழ்நில..நீயாவது என்ன புரிஞ்சிப்பன்னு நம்பறேன்..” இவனும் தன்னை காயப்படுத்திடக் கூடாது என்கின்ற ஏக்கம் அவனின் குரலில் தோய்ந்து கிடந்தது,அளவுக்கு அதிகமாய்.
இத்தனை நாள் அவனின் மனக்காயங்களுக்கு மருந்திட்ட உறவின் அருகாமை தற்போது இல்லையே.அதன் எதிர்வினை தான் இந்தப் பேச்சு.
மருதுவோ தோழனின் தோள்களை அழுத்த வார்த்தையில்லாமல் ஏதோ ஒரு ஆறுதலை அது அவனுக்குள் கடத்திச் சென்றிட கனிவாய் தோழனை பார்த்தன,அவனின் விழிகள்.
மெல்லியதாய் சிரித்துக் கொண்டவனோ “என்னோட பேர் என்னன்னு தெர்யுமா..?” குரலில் பேதத்துடன் கேட்டிட மருதுவுக்கு சிரிப்பு வந்தது.
“அபிஷேக்..இதுல என்னடா சந்தேகம்..?”
“ம்ம்..அபிஷேக் அது நா வச்சிகிட்ட பேரு..ஆனா அந்தாளு வச்ச பேரு மகேந்திரன்..அவர புடிக்காது..அது மாத்தி கிட்டேன்..அபிஷேக்னு..” என்றவனின் குரல் கொஞ்சம் திணறிற்று.
“டேய் என்னடா சொல்ற..?”
“ஆமாடா..மகேந்திரன் தான் என்னோட உண்மயான பேர்..அபிஷீயல் டாகுமண்ட்ஸ்ல எல்லாம் அந்த பேரு தான் இருக்கு..”
“மாப்ள..உனக்கு உங்கப்பா மேல கோபம் இருக்கலாம்..அதுக்காக இப்டிலாம் பண்ணுவியா..? அவரு வச்ச பேர கூட மாத்தி இருக்க..” மருது கடிந்து கொள்ள விரக்தியாய் புன்னகைத்தான்,அபிஷேக்.
அவனுக்கும் யார் அனுமதியும் இன்றி அந்த பள்ளிப் பருவத்தில் தன் பெயரை மாற்றிக் கொண்ட தருணங்கள்.
டி.மகேந்திரன் எனி எழுதப்பட்டிருந்த நோட்டுக்களின் முன் அட்டைகளை கிழித்து தீயிட்டுக் கொழுத்தியது நினைவில் வர இப்போது சாதாரணமாய் தோன்றினாலும் அந்த வயதில் அது மட்டுமே அவனுக்கு தன் ஆத்திரத்தை சற்று கொட்டித் தீர்த்திடும் ஒரே வழியாய்த் தெரிந்தது,கண்களுக்கு.
“சில விஷயங்கள தாங்கிக்கவும் முடியாது..அப்பாங்குறதால வெளில சொல்லிக்கவும் முடியாது..”
ஆத்திரமா..?
ஆவேசமா…?
அழுகையா..?
கோபமா…?
அவனின் குரலில் கலந்திருக்கும் உணர்வதை பிரித்தறிய இயலாமல் இருந்தது.
மருது அவனின் கரங்களை இறுகப்பற்றி அழுத்திய படி அமர்ந்து கொள்ள அபிஷேக்கின் விழிகள் எங்கோ வெறித்திருந்தாலும் தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.முற்றாய் உடைந்து அழும் சூழ்நிலையில் இல்லை,ஆணவன்.
“அப்போ எனக்கு பத்து வயசுடா..கொஞ்சம் கொஞ்சமா அவரோட சுயரூபம் தெரிஞ்சுது மச்சான்..தாங்கிக்க முடியல..அவ்ளோ நாள் ஹீரோவா மனசுல இருந்தவரு திடீர்னு கெட்டவரா மாறுனத அவ்ளோ ஈசியா ஏத்துக்க முடியல..” சொல்லும் போதஞ அவனின் குரல் நலிந்து ஒலித்தது.
தாயின் முன் உத்தம வேடமிடும் தந்தை மது,மாது,சூது என தீய பழக்கங்களின் மொத்த உருவம் என்பதொ உணர்ந்து கொண்ட பருவம் அது.
ஏன் இன்று வரை வடிவுக்கரசிக்குத் தெரியாது,தர்மேந்திரனின் மொத்த பாவக் கணக்குகள்.தெரிந்தால்..?
தந்தையின் சுயரூபம் தெரிந்தால் தாயின் நிலை என்னவாகும் என்கின்ற பயத்தில் தான் அவனும் எந்த உண்மையையும் அவரிடம் கூற விழையவில்லை.
மருதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.அவனும் பல நேரங்களில் தர்மேந்திரனை மதுபானக் கடைகளில் கண்டிருந்தாலும் இத்தனையெல்லாம் யோசித்தது கிடையாது.
“எல்லா கெட்ட பழக்கமும் இருந்துச்சு..அத என்னால தாங்கிக்கவே முடியல..அம்மாக்கு தெரியாம எத்தன பேரோட பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சப்றம்ம்ம்ம்ம்ம்..
சத்தியமா வெறுத்துட்டேன்டா அந்த மனுஷன..ச்சை..” என்றவனுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை,தோழனால்.
சரியாகும் என்றிடுவதா..?
விட்டு விடு என்றிடுவதா..?
மறந்து விடு என்றிடுவதா..?
மன்னித்து விடு என்றிடுவதா..?
சிறுவயதில் அடிதடி என இறங்காமல் முதிர்ச்சியுடன் அபிஷேக் இருந்ததன் காரணம் இப்போது புரிந்தது,மருதுவுக்கு.
“அப்போ நா செவன்த் படிச்சிட்டு இருந்தேன்..அப்போ ஒரு விஷயம் தெரிய வந்துச்சுடா..அதுவும் அவரு வாயால..சத்தியமா அதுக்கப்றம் அந்த ஆளு மொகத்த பாக்க கூட எனக்கு இஷ்டம் இல்லை..அதான் ஊர விட்டு போனேன்..” விடயத்தை மறைத்து அவன் சொல்ல மருதுவும் அவனை கட்டாயப்படுத்தவில்லை.
புன்னகையும் புத்துணர்வுமாய் இருப்பவனின் கலக்கம் அவனையும் உடைத்துப் போட்டிருந்தது,வெகுவாய்.
தனது தந்தை ஒரு கொலைகாரன் என்று தெரிந்ததும் அபிஷேக்கால் அதையும் துளியும் ஜரணித்துக் கொள்ள முடியாது போக விலகினான்.
எதிர்த்து நின்றிடும் தைரியம் இல்லை..
ஏற்றுக் கடந்திடும் பக்குவம் இல்லை..
அதனால் தான், விலகிச் சென்றான் முடியுமான வரை.
விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்தாலும் தோழர்களுடன் சுற்றுபவன் வீட்டில் இருப்பதை அதிகமாக தவிர்த்து விடுவான்.சில நாட்களில் இரவுகளில் தங்குமிடம் ஆவதும் தோழனின் வீடு தான்.
வடிவுக்கரசியும் மகனிடம் நெருங்க முயலாது இருக்க அதுவே அவனுக்கு வலி என்றாலும் தாயிடம் எதையும் உளறிக் கொட்ட மாட்டோம் என்கின்ற நிம்மதியை ஒரு புறம் மனதில்.
“ரொம்ப வெலகுனேன்..ஆனாலும் நா ஊருக்கு வந்தா நெறய சண்ட வரும்..அதனால தான் அவ்ளவா ஊருக்கு வர்ரதில்ல..அங்க வேல கெடக்கவும் அங்கேயே இருந்துட்டேன்..”மென்று முழுங்கி பாதி உண்மையை மொழிந்தன,அவனிதழ்கள்.
“என்னிக்கு அவன் கூட சேந்தானோ..அன்னைல இருந்து நீ என்னோட புள்ள இல்லடா..” தனக்கு எதுவும் தெரியாது என நினைத்து எகிறி தந்தை வீட்டை விட்டு வெளியே துரத்தியது நினைவில் வர மனதில் சொல்ல முடியாத அளவு கனம்.
வேலையில் சேர்ந்த பொழுது அவகாசம் கிடைத்தாலும் வீட்டுப்பக்கம் எட்டிப் பார்க்கவும் அவன் விரும்பியது கிடையாது.
தாய் தந்தை மட்டுமல்ல..
தந்தையின் வழியை அச்சொட்டாய் பின்பற்றும் அண்ணன் கஜேந்திரனிடம் கூட நெருங்கிப் பழகியதில்லை.விலகி நின்றதால் அவர்கள் இடையிலான விரிசல் நீண்டு கொண்டு தான் சென்றது.
வெகு நாட்களுக்கு பின் இன்று ஊருக்கு வந்திருப்பதன் காரணமும் அண்ணனின் இறப்பு தான்.இல்லையென்றால் வந்திருக்க மாட்டான் என்பதும் உண்மை.
அண்ணனின் வண்டவாளம் அறிந்தவனுக்கு அண்ணனின் இறப்பில் வருத்தம் இல்லையென்றாலும் மனதின் ஓரத்தில் இலேசாய் ஒரு கீறலாய் ஆதங்கம்.உடன் பிறந்தவன் ஆயிற்றே.
கொஞ்சமான பேச்சுக்கள்..
நெடிய மௌனங்கள்..
ஆதரவளித்த ஆறுதல்கள்..
என அவன் மனம் சற்றே மட்டுப்பட ஏதோ பாரம் இறங்கினாற் போல்.
பெருமூச்சு விட்டு மருதவேலின் புறம் திரும்பியவனின் பார்வை மருதவேலை ஆராய அதில் இருந்த வித்தியாசத்தில் அவனின் தலை தானாய் தாழ்ந்திட பார்வை தழைந்து போயிற்று.
●●●●●●●
வினோத்துக்கு அர்ஜுனின் நடவடிக்கைகளில் இன்னுமே சந்தேகம் களைந்திடாதிருக்க நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவனை தன் பக்கம் திருப்பியது,அதிர்வுடன் சத்தமிட்ட அலைபேசி.
“சொல்லுடா..” என்ற படி இன்னொரு அறைக்குள் நுழைந்தவனின் முகத்தில் ஒரு வித தீவிரம்.
“வினோத் நீ டீடெயில்ஸ் கேட்டல..”
“ஆமா..ஆமா சொல்லு..”
“பேரு அர்ஜுன்..அப்பா பேரு நந்தகோபாலன்..” என்கவுமே அவனுக்கு எங்கேயோ கேட்டிருப்பது போன்ற எண்ணம்.
“ம்ம்ம்ம்..”
“ஊர் ரணதீரபுரம்..”
“வாட்ட்ட்ட்..?”மிரண்டு போனான்,வினோத்.
சொந்த ஊரைக் கேட்டதற்கு அர்ஜுன் பல காரணம் சொல்லி மழுப்பியது இப்போது தான் புரிந்தது.
“ஆர் யூ ஷ்யூர்..?”
“ஆமாடா..இங்க தான் படிச்சிருக்கான்..கேம்பற் கோல்ட் மெடலிஸ்ட்..
“என்ன பீல்ட்..”
“ஐடி பீல்ட் தான்..”
“வேற..”
“அது மச்சீ..”
“லேட் பண்ணாம சொல்லு..எனக்கு டென்ஷன் ஏறுது..”
“இதுக்கு முன்னாடி நம்ம சிஸ்டத்த ஹேக் பண்ணது இவன் தான்..அதுக்காக தான் வாசு சார் இவன ஜெயில்ல போட்டாரு..”
“என்னடா சொல்லு..”
“ஆமாட..பொய்க்கேஸ் போட்டு உள்ளத் தள்ளுனது இவன தான்..அவங்கப்பாவ கூட மெரட்டுனாரே சார்..”என்க தூக்கி வாரிப்போட்டது,வினோத்துக்கு.
“அப்போ அந்த ரிஷி போராடி வெளில எடுத்தது இவன தானா..?”
“ஆமாடா..” என்று சொல்லி முடியும் முன்னே அழைப்பை துண்டித்தவனுக்கு பதட்டம் மிகுதியாக நெற்றியில் அறைந்த படி வெளியே வந்தவனுக்கு நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
●●●●●●●
நேரம் மதியம் மூன்று மணி இருபது நிமிடம்.
பையனின் நிதானமான வார்த்தைகளில் கலவரம் உண்டாகினும் அடுத்த அவன் தத்தெடுத்துக்கொண்ட அமைதியில் அவளின் பதட்டமும் கொஞ்சம் மட்டுப்பட்டது.
அதற்கு பின் எதுவும் பேசாது அவனிருக்க அவளுக்கும் அது நிம்மதி.
சண்டை வரும் இல்லையென்றால் பார்வையாலே பதற வைப்பான்.இது இரண்டும் இல்லாமல் யன்னலுக்கு வெளியே பார்வையை திரிய விட்டு தன் யோசனையில் ஆழ்ந்திருந்தது,பெரும் நிம்மதியே.
தற் செயலாய் நிமிர்நதவளின் பார்வை அவன் முகத்தை உரச “எ ராஜாசெல்லம்..” மனதுக்குள் சொல்லிக் கொண்டவளின் இதழ்களும் புன்னகைக்கத் தான் செய்தது.
“பைத்தியமா நீ..? இவ்ளோ திட்டியும் அவன கொஞ்சற..மெண்டல்..” என தனக்கு திட்டிய படி அலைபேசியில் ஆழ்ந்தவளின் புறம் பார்வையைத் திருப்பியிருந்தான்,பையன்.
இந்த நொடியும் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம்.ஒவ்வொரு முறையும் அவளைப் புதிதாய்த் தான் பார்க்க வைக்கிறாள் என்பது புரிய பையனின் விரல்களை நெற்றியைத் தட்ட மனதுக்குள் சில யோசனைகள்.
“மித்ரா..”
“ம்ம்ம்ம்ம்ம்..”
“நீ ரெண்டாவது தடவ என்ன எங்க பாத்த..?” அவன் கேட்க அவளுக்கு திக்கென்றது.கலவரத்துடன் அவன் விழிகளை ஆராய அதில் சந்தேகம் இல்லாததை கண்ட பின்னே அவளிடம் இருந்து,ஆசுவாசப் பெருமூச்சொன்று.
“எதுக்கு அப்டி பாக்கற..? கேட்ட கேள்விக்கு பதில சொல்லு..”
“அ..அது..அது ரெண்டாவது தடவ அறஞ்சீங்கள்ல..அப்போ தான் பாத்தேன்..” கோர்த்த பொய்களை ஒப்புவிக்க பையனின் விழிகளில் அதை நம்பாத பாவம்.
“இட்ஸ் பைன்ன்ன்..உண்மய தான சொல்ற..?” தாடையை நீவிய படி கேட்டவனின் பார்வையில் உள்ளுக்குள் குளிரெடுத்தது,மனைவியானவளுக்கு.
“நா எதுக்கு பொய் சொல்லனும் கிறுக்கு..?” வேண்டுமென்று திட்டி சண்டையைத் துவங்கி அவனின் கவனத்தை திசை திருப்ப முயல அவளின் திட்டத்தை புரிந்தவனோ ஒற்றைக் கண் சுருக்கி சற்றே தலை சரித்து தெற்றுப் பல் தெரிய சிதறவிட்டான்,தனது அக்மார்க் புன்னகையை.
“சண்ட தொடங்கலாம்னு பாக்கறியா..?”
“நா எதுக்கு தொ..தொடங்கனும் கிறுக்கு..நீ தான்..என்ன வம்புக்கு இழுக்குற..உன்னால தான்..” பதட்டத்தில் தலைகால் புரியாமல் உளறிக் கொண்ட பையனின் பார்வையில் மாற்றமேதும் இல்லை.
“இப்ப எதுக்கு நர்வஸ் ஆகற செல்லம்..?” நிதானமாய் கேட்டவனின் தேன் ஒழுகும் வார்த்தைகள் தான் ஆபத்து என இத்தனை நாள் புரிந்திருப்பவளுக்கு தெரியாது போய் விடுமா என்ன..?
“நா..நா எங்க நர்வஸ் ஆகறேன்..நீ..ங்க தான்..” நடுங்கிய குரலில் சொன்னவளுக்கே தனது பைத்தியக்காரத்தனம் புரிந்தாலும் அதை தவிர்த்து வேறு வழியும் இல்லை,அவனிடம் இருந்து தப்பிக்க.
“இட்ஸ் பைன்..நீ நர்வஸா இல்ல..ஒத்துக்குறேன்..” என்றவனோ அவளைப் பாராது வேறேங்கெங்கோ பார்வையை அலைய விட்ட படி கரங்களை கோர்த்து பின்னந்தலையில் வைத்து சோம்பல் முறிக்க மித்ரஸ்ரீக்கு தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“அலார்டா இரு மித்ரா..இவன் ஏதோ ப்ளேன் பண்ணிட்டான்..” தனக்குத் தானே சொல்லிக் கொண்டவளோ விழிகளில் தோன்றிய கலவரத்தை மறைக்க முயன்று தோற்றவளாய் முறைத்து வைக்க நிதானமாய் ஏறிட்டான்,பையனவன்.
“சரி அப்போ நீ உண்மய சொல்ல மாட்ட..”
“நா எங்க பொய் சொன்னேன்..” இன்னும் அவள் விட்டுக் கொடுக்காது பேச பையனுக்கு சிரிப்பாய் வந்தது.
“இட்ஸ் பைன்ன்ன்ன்..நீ ஏதோ மறச்சிட்டு சொல்லாம இருக்குற..ஐ க்னோ..ஐ க்னோ..மறைக்கிறன்னு ஒத்துக்கோ..உன் பர்மிஷன் இல்லாம நா தெரிஞ்சிக்க மாட்டேன்..”
அப்போதாவது அவள் ஒத்துக் கொண்டிருந்தால் பரவாயில்லை.தெட்டத் தெளிவாய் அவன் தான் பொய் சொல்வதை கண்டுபிடித்து விட்டான் என்று தெரிந்தாலும் தன் நடிப்பு எடுபடும் என்கின்ற நப்பாசை அவள் மனதில்.
“நா எங்க பொய் சொன்னேன்..நா எதுவும் மறைக்கல..” வீம்பாய் பிடிவாதத்துடன் சொல்ல அவளின் எதிர்வினை இவ்வாறு இருந்திருக்காவிடின் தான் பையன் அதிர வேண்டும்.அவள் ரகம் அப்படியே.
“அப்போ நீ ஏதோ சொல்லாம மறச்சி வச்சிட்டு இருக்கன்னு ஒத்துக்க வக்கவா..?”
“முடிஞ்சா பண்ணி காட்டுங்க..” விடாப்படியாய் நின்றாள்,அவளும்.
“என்ன டிசைன் டி நீ..? உனக்கே புரிது நீ கேவலமா தான் நடிக்கிறன்னு..ஏன் எனக்கு அது புரிஞ்சுடுச்சுன்னும் உனக்குத் தெர்யும்..அப்பவும் நடிப்ப விடாம இருக்க..சில்லி கேர்ள்..” என்ற படி எழுந்து நிற்க மனைவியானவளுக்கு தேகம் உதறியது.
சம்மணமிட்டு யன்னல் புறம் அமர்ந்து இருந்தவளோ முழங்காலை மடித்து அதைச் சுற்றி கைகளை கட்டிய படி இன்னும் குறுகி இன்னுமே ஒடுங்கிக் கொள்ள முயல அமர்த்தலாய் அசையாது நின்றிருந்தான்,பையன்.
மெல்ல அவளருகில் நடந்து வந்த சரியாய் நேரே அவள் முகம் பார்த்த படி மார்புக்கு குறுக்கே கரத்தை படரவிட்டு அவன் நிற்க மிரண்டு விட்டிருந்தாள்,அவனின் மனையாள்.
“அப்போ நீ பொய் சொல்லல..”
எப்போதும் வேலை செய்யும் கி(கு)றுக்கு புத்தி எட்டிப் பார்க்க ஆமோதிப்பாய் தலையசைத்திட அதற்கு மேல் விட்டுவிடுவானா பையன்..?
இடுப்பில் ஒரு கரத்தை மடக்கி குற்றி திறந்திருந்த யன்னல் வெற்றிடத்தின் கீழ் விளிம்பில் மறு கரத்தின் உள்ளங்கையை ஊன்றி அவளருகே குனிய விழிகளை அழுந்த பொத்தியளின் கரங்கள் அவனின் செய்கை உணர்ந்து காதுகளை இறுகப் மூடிக் கொண்டது.
அவள் செயலில் பையனுக்குள் நிகழ்ந்த மாற்றம் தான் என்ன..?
ஆணாய் வந்த ஆணவமா..?
காதலால் வந்த சிலிர்ப்பா..?
கணவன் என்பதால் எட்டிப் பார்த்த திமிரா..?
காதலன் என்பதால் தோன்றிட்ட இரசனையா..?
மொத்த உணர்வுகளும் கலவையாய் பையனின் விழிகளில்.
இடுப்பில் குற்றயிருந்த கரத்தை எடுத்து சிறு புன்னகையுடன் ஒரு காதைப் பொத்தியிருந்த அவளின் கரத்தை விலக்க முற்பட திமிறினாலும் பையனவனின் வலுவான பிடியில் அவள் முயற்சிக்கு முறிவு தான்.
மறுக்க மறுக்க ஒரு கரத்தை இழுத்தெடுத்து தன் கரத்துக்குள் பொத்தி வைக்க அவனின் தேக மயிர்கள் சிலிர்ப்புடன் எழுந்து நின்றன.ஏனோ..?
மெல்ல அவளின் காதருகே குனிய பாய்ந்து வந்த அவளின் மறுகரம் அவனின் வாயில் பட்டென்று ஒன்று வைக்க கோபம் எழுந்தாலும் அடுத்த நொடியே மறைந்து போனதன் மாயம் அவனறியான்.
இருகரத்தையும் தன் ஒருகரத்துக்குள் அடக்கியவனாய் அவளின் காதருகே குனிந்தவனுக்கும் என்றுமில்லாமல் தொண்டை அடைக்க எச்சில் விழுங்கி சமப்டுத்திக் கொண்டவனைக் காண அவள் விழிகளை திறக்க வேண்டுமே..
எதில் இருந்தோ தப்பிக்க முயல்வது போல இன்னுமே விழிகளை பொத்தி அமர்ந்திருந்தவளுக்கு பயத்தில் படபடப்பிலும் வியர்த்து இருந்து.
மெதுவாய் மெல்லமாய் மொத்த காதலிலும் தோய்ந்து வந்த மென்மையான குரலில் “மித்துமா..” என்றது தான் தாமதம்,திமிறிய அவளின் கரங்கள் அடங்கிட விரல்கள் அவனின் கரத்தை கெட்டியாய் பற்றிக் கொள்ள பையனுக்குமே அவள் தடுமாற்றம் புரியத் தான் செய்தது.
ஒட்டு மொத்த காதலையும் தேக்கி ஆழ் மனதின் உணர்வுகளை எல்லாம் தனக்குள் வாரி சுருட்டிக் கொண்டு ஜீவனின் அடியில் இருந்து ஊற்றெடுத்திடும் அவன் குரலில் காதல் கொண்டவளால் கரையாமல் தான் இருந்திட முடியுமா..?
பதிலேதும் பேசாமல் முகம் துடிக்க மூச்சு வாங்கிய படி அமர்ந்திருந்தவளின் காதருகில் மீண்டும் அதே அழைப்பு,பையனவனின் காந்தக்குரலில்.
மொத்தமாய் அவளை வீழ்த்தி விட்டிருந்தது,பையனவனின் குரல் வழியே கசிந்திருந்த காதல் பாஷை.
தொடரும்.
🖋️அதி..!
2024.04.13

