
விடியும் முன்..!
அத்தியாயம் 21
நேரம் மதியம் மூன்று மணி.
தாயின் பாராமுகம் அத்தனை வலித்தது.
கலங்கிய விழிகளில் இருந்த வலி கூட தாயானவரை கொஞ்சமும் அசைத்துப் பார்த்திடவில்லை.
ஏற்கனவே அவனை பல பிரச்சினைகள் சுழன்றடித்துக் கொண்டிருக்க இதில் இன்னொன்று.
வடிவுக்கரசிக்கு தன் கடைக்குட்டியின் மனமும் அந்த மனம் சுமந்து நிற்கும் ஏக்கமும் புரிந்திடவில்லை,போலும்.இறுகிய மனதுடன் நிற்பவரை இளக்கிடும் வழி அங்கிருந்த யாரினதும் கைவசம் இல்லை.
இத்தனை நாள் பூட்டி வைத்திருந்த தர்மேந்திரனின் மொத்தக் கோபமும் மகனைக் கண்டதும் பீறிட்டுக் கிளம்பிடவே இந்த ஐயனார் அவதாரம்.
அபிஷேக்கிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.அந்த இடத்தில் அவனின் இருப்பு எத்தனை முக்கியமோ அதே போன்று தான் இந்த இடத்திலும்.அதை உணர்ந்திருந்தாலும் வீட்டிற்குள் அனுமதிக்க கூட மறுக்கிறார்களே..?
இறந்து போயிருப்பது தன் அண்ணன்.ஆனால்,அவனின் இறப்புக்கு வீட்டினுள் நுழையவே பல தடைகளை தாண்டிட வேண்டி இருக்கிறதே.
தாயின் முகத்தை மீண்டும் ஏறிட்டுப் பார்க்க முகத்தை திருப்பிக் கொண்டு சென்ற வடிவுக்கரசியின் செயலில் தர்மேந்திரனுக்கு அப்படி ஒரு திருப்தி.தன் கையில் இருந்த அரிவாளை மகனின் முன்னே போட்டு விட்டு உள்ளே சென்று கதவை அடைக்க எப்போதும் நடப்பது என்றாலும் இம்முறை தாங்கிக் கொள்ள இயலவில்லை,அவனால்.
சுற்றி நின்ற அனைவரினதும் பரிதாபமான பார்வைகள் அவன் மீது விழ அதை சகித்துக் கொள்ள முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்,தோழனைத் தேடி.
தற்சமயம் இந்த இடத்தில் அவனைத் தவிர வேறு யாரும் அவனுக்கு தோள் கொடுத்திட முடியாது என்று தோன்றிட அழைப்பெடுக்கும் முன்னமே அவனின் செவியை உரசியது,வண்டி சத்தம்.
அதைக் கண்டதும் இருந்த குழப்பம் மறைந்து இதழ்கள் புன்னகைக்க அவன் முன்னே மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்றிருந்தான்,மருதவேல்.
●●●●●●●●
தடதடவென கதவு தட்டப்படும் சத்தத்தில் காவேரியின் முகத்தில் யோசனை படர்ந்தாலும் கதவைத் திறந்தவளுக்கு அங்கிருந்த முத்துவை கண்டதும் தூக்கி வாரிப் போட்டது.
அவன் முகத்தில் அப்படி எதுவும் இல்லை போலும்.ஒரு வித பரவச உணர்வே நிறைந்திருக்க அவனருகே நின்றிருந்த ப்ரித்விக்கும் தோழனின் முகத்தை காண்கையில் சிரிப்பு பீறிட்டது.
“அண்ண்ண்ண்ண்ணீஈஈஈஈ” சுற்றம் பாராது அவன் அழைக்க காவேரிக்கு திக்கென்றானது.
“த..தம்பீஈஈஈஈ” வார்த்தை கூட எழவில்லை.அத்தனை அதிர்வு.அதுவும் வீட்டில் தாய் இருக்க அவனுடன் பேசுவதைக் கண்டால் பேயாட்டாம் ஆடி விடுவார் எனத் தெரியாதா..?
“தம்பி வழம மாதிரி கெணத்தடிக்கு போயிருங்க..நா அம்மாவ சமாளிச்சிட்டு வந்துர்ரேன்..” இரகசியமான குரலில் அவசரமாய் அவள் சொல்ல எப்போதும் எதிராய் துடுக்குடன் பேசும் நா அவளின் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அடங்கி நிற்க ஆமோதிப்பாய் தலையசைத்து விட்டு கிணற்றடிக்குப் போக தாயிடம் பல காரணங்களை சொல்லி மழுப்பியவாறு கதவை பூட்டிக் கொண்டு கிளம்பியிருந்தாள்,அவளும்.
கிணற்றுக்கட்டில் அமர்ந்து இருந்தவனின் விரல்களோ அருகே இருந்த செடியில் துளிர்விட்டிருந்த இலைகளை பிய்த்துப் போட்டுக் கொண்டிருக்க அவர்களிடையே நுழையாது தூரமாய் சென்று அலைபேசியில் ஐக்கியம் ஆகி இருந்தான்,ப்ரித்வி.
சுற்றும் முற்றும் பார்த்த படி பயத்துடன் நடந்து வந்த காவேரிக்கு தான் இவனுடன் பேசுவதை கண்டால் உண்டாகிடும் களேபரங்களை எண்ணி மனதின் ஓரத்தில் பயம் இருக்கத்தான் செய்திற்று.
அவளுக்கும் அர்ஜுனுக்கும் இடையிலான திருமணமே ஒரு கலவரம்.அதன் பின் வந்த பிரச்சினைகளும் இருவரிக்கிடையிலான பிரிவும் சுனாமியுடன் கூட பூகம்பாகத் தான் தோன்றிற்று,இயல்பு வாழ்க்கை வாழ்ந்தவளுக்கு.
இப்போது மீண்டும் முத்துவை சந்தித்தால் இரு குடும்பமும் முட்டிக் கொள்ளும் என்பது நூற்றுக்கு நூற்றுக்கு வீதம் உண்மை தான்.விட்டுக் கொடுக்கும் குணம் இரு வீட்டினருக்கும் இருந்ததுமில்லை.இனி இருக்கப்போவதுமில்லை என்பதாய் தான் இருக்கும் அவர்களின் நடவடிக்கைகள்.
அவளைக் கண்டதும் முத்துவின் இதழ்கள் புன்னகை சிந்த பதிலாய் புன்னகையை இறைத்தாலும் அவளின் விழிகளில் கலவரமே மித மிஞ்சி நின்றிருந்தது.
“சொல்லுங்க தம்பி..எதுக்கு கூப்டீங்க..?” படபடப்புடன் கேட்டவளைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது,அவனுக்கு.
“தம்ம்ம்ம்ம்ம்ம்பீஈஈஈஈஈ” அவனின் சிரிப்பை கண்டு பல்லைக் கடித்தவளுக்கு இவனால் மட்டும் எப்படி பதட்டமில்லாமல் இருக்க முடிகிறதோ என்கின்ற எண்ணம் தோன்றாவிடின் தான் ஆச்சரியம்.
“அண்ணீ..எனக்கு உங்கண்ணன் மருத பாக்கனும்..ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க..”
“எதேஏஏஏஏ”
“ஆமாண்ணி..கண்டிப்பா பாக்கனும்..ஏதாச்சும் பண்ணி அவர மீட் பண்ண வர சொல்லுங்க..”
“உங்கள கண்டாலே அவனுக்கு ஆகாது..இதுல மீட் பண்றதா..? தம்பி உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற சண்ட தெரிஞ்சுமா இப்டி பேசறீங்க..?” முறைத்துக் கொண்டு கேட்டவளுக்கு எப்போதும் ஆடவர்களிடையே மாட்டி தவிக்கும் தன்னை மீட்டிக் கொள்ளத் தெரியா இயலாமை மீதும் கோபமே.
“ப்ளீஸ் அண்ணீஈஈஈஈ”
“தம்பி..நீங்க புரிஞ்சி தான் பேசறீங்களா..? அவன் உங்கள கண்டாலே அடிக்கிற வெறில இருக்கான்..இதுல எப்டி அவன் கூட பேசப் போறீங்க..?”
“நா முன்ன மாதிரி எல்லாம் இல்லண்ணீஈஈஈஈ..கையெல்லாம் நீட்ட மாட்டேன்..நிதானமா பேசுவேன்..கோபம் எல்லாம் பட மாட்டேன்..” அவன் இத்தனை கெஞ்சும் போது அவளாலும் மறுக்க முடியவில்லை.
“சரி தம்பி..நா அவன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு போன் பண்றேன்..” என்று விட்டு விடுவிடுவென கிளம்பி செல்ல அவள் நிலையை பார்த்த முத்துவுக்கும் மனதில் ஒரு வித வலி.
காதலுடன் பிரிந்து செல்வதை விட வலி என்னவோ,அந்த காதலை சொல்லாமல் விலகி நிற்பது அல்லவா..?
அந்த நிலை தானே,அவனின் அண்ணனுக்கும் அண்ணியிற்கும்.
யாரின் மீது குற்றத்தை சாட்ட..?
பெருமூச்சுடன் நிமிர்ந்தவனுக்கு அவனுக்கு அழைப்பெடுத்துப் பார்க்கும் எண்ணம் தான்.எண்களை அழுத்தினாலும் “சார்,பிஸியா இருப்பாரோ..?” என்கின்ற எண்ணத்தில் அழைப்பெடுக்காதிருக்க அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்,ப்ரித்வி.
●●●●●●●
மாடியை சுற்றிப் போடப்பட்டிருந்த கட்டில் கையூன்றி நின்றிருந்த கிருஷ்ணாவின் செவிகளை பாதச்சத்தங்கள் உரச அது யார் என்று தெரிந்தும் விழி திருப்பி நோக்கவில்லை,அவன்.
அவனருகே நின்றிருந்த செழியனின் நிலமையும் அதுவே தான்.
கொஞ்சம் தயக்கத்துடன் சத்யாவின் பாதங்கள் முன்னேறின.தான் காட்டிய கோபம் நிதானமாய் யோசிக்கையில் சற்று அதிகப்படியோ என்கின்ற எண்ணம்.
இருவரும் ஏன் தன்னிடம் உண்மையை மறைத்தார்கள் என்றவனுக்கு இறந்து போயிருந்த கணேசலிங்கம் அவனின் மாமன் என்கின்ற விடயம் இன்று தான் என்பது நினைவில் உதித்தது என்னவோ,சற்றுத் தாமதமாகத் தான்.
“சாரி..” சத்தமாக பொதுப்படையாக கூறியவனின் தொனியே புரிய வைத்தது,அவன் உள்ளுக்குள் வருந்திக் கொண்டிருப்பது.
“பவித்ரா,ஆருத்ரா இவங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப பாசம் எனக்கு..கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி தான் பழகுனோம்..அவங்க இல்லங்குற விஷயத்த கூட சட்டுன்னு ஏத்துக்க முடியல..இப்போ நீங்க ரெண்டு பேரும் உண்ம தெரிஞ்சும் மறச்சதுன்னு தான் கோவப்பட்டுட்டேன்..சாரி..”
“இங்க பாரு..பவித்ரா ஆருத்ரா ரெண்டு பேரும் செத்தது எங்களுக்கு தெரியும்..ஆனா அந்த கேடுகெட்ட கணேசலிங்கம் தான் உன்னோட மாமான்னு தெரியாது..இப்போ கூட செழியன் உண்மய சொல்லலாம்னு தான் சொன்னான்..நா தான் கொஞ்சம் ஆறப் போடலாம்னு சொன்னேன்..”
“சாரி..” அவன் வருந்துவதை பார்க்க செழியனுக்கும் பாவமாக இருக்க அதற்கு மேலும் இந்த மனஸ்தாபத்தை இழுத்துப் பிடிப்பது சரியெனத் தோன்றவில்லை.
“சரி விட்றா..” அருகே வந்து சத்யாவின் தோளைத் தட்டிச் சொல்ல அவனுக்கோ குற்றவுணர்வு தான் இன்னுமே கூடிப் போயிற்று.
செழியனும் தனக்குத் தெரிந்த மொத்தத்தையும் மறையாது அவனிடம் சொல்ல உணர்வுகளின் கலவையை பிரதிபலித்து நின்றது,அவனின் முகம்.
செழியனுக்குமே பல விடயங்கள் தெரியாதிருக்க மிகுதியை யாரிடம் கேட்பது என்று புரியவில்லை,அவனுக்கு.
இறந்தது தன் மாமன் தான் என்றாலும் உறவு கொண்டாடிக் கொண்டு அங்கே செல்லும் உரிமை அவனுக்கு இல்லை.ஒரு வேளை பவித்ராவும் ஆருத்ராவும் உயிருடன் இருந்திருந்தால் அதை எடுத்துக் கொண்டு அவரின் வீட்டிற்கு சென்றிருப்பானோ..?
இப்போது அந்த உரிமையை எடுத்துக் கொள்வதற்கு மனம் துளியளவும் இடம் கொடுக்கவில்லை.
“நீ அவங்க வீட்டுக்கு போகப் போறியா சத்யா..?” தயக்கத்துடன் செழியன் கேட்க என்ன பதில் சொல்வான் அவனும்..?
“அம்மா அப்பா நாளக்கி மார்னிங் வர்ரதா சொன்னாங்க..அவங்க கூட பொய்ட்டு வர்லாம்னு தோணுது..ஆமா உங்க வீட்ல ஏதாச்சும் விசேஷமா..? உங்கம்மா அப்டி தான் சொன்னாங்க..” பேச்சை மாற்றும் பொருட்டு வேறு கதையை இழுத்து விட்டான்,சத்யா.
“ஆமாடா..எங்க பாமிலில கல்யாணம் ஒன்னு நடக்கப் போகுது..பொண்ணுக்கு தெரியாம நாளக்கி சப்ரைஸா நிச்சயதார்த்தம்..அதான் அம்மா எல்லாம் பாத்து பண்றாங்க..” சொல்லும் போதே அவனின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம்.
அண்ணன் அர்ஜுனின் வாழ்வில் புயலடித்தது மொத்த குடும்பத்தையும் எத்தனை தூரம் பாதித்தது என்பது அவனுக்கு தெரிந்திருக்க அதன் பின் நடக்கப்போகும் முதல் நல்ல விடயம் என்பதாலோ என்னவோ அத்தனை மகிழ்ச்சி செழியனின் மனதில்.
“யாருக்குடா உங்க அண்ணனுக்கா..? பொண்ணுக்கு தெரியாம நிச்சயம் பண்ணப் போறீங்களா..?”
“அண்ணனுக்கு மேரேஜ் ஆயிருச்சு..அவன் கிட்ட இந்த கேள்விய கேட்டா சாவடி அடிப்பான்..”
“டேய் நா கேட்டது உங்க ரெண்டாவது அண்ணனடா..”
“ஓஹ் இல்லடா..அவனுக்கு கல்யாணம் பண்ணி வக்கற ஐடியா இப்போதக்கி எங்கப்பாக்கு இல்ல..கிளார்க் வேல பாக்கறவன யாரு கட்டிக்க வருவான்னு ஒரே பொலம்பல்..அதுவும் வேல தான்னு சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டாரு..”
“சரிடா யாருக்கு கல்யாணம்..?”
“அத்த பொண்ணுக்குடா..மாப்ளய உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ தெரியல..ஆனா பொண்ண தெரிஞ்சு இருக்கும்..ஆனா பொண்ணு போட்டோ எல்ல..”
“அப்போ மாப்ள போட்டோவ காட்டு..” என்க அலைபேசியில் மின்னிய புகைப்படத்தை காட்டிட இருவரின் விழிகளும் பேரதிர்வில் விரிந்து கொண்டன.
சத்யாவும் கிருஷ்ணாவும் அதிர்வுடன் அடுத்தவரின் முகத்தை பார்த்துக் கொள்ள அவர்களில் அதிர்வு ஏனோ செழியனுக்கு சிறு யோசனையைத் தந்திற்று.
இதுவரை கண்டிருப்பார்களோ என்ற சந்தேகத்துடன் அவன் புகைப்படத்தை காண்பிக்க அதிரும் அளவு அவர்களின் எதிர்வினை இருக்குமென்று அவன் நினைத்திருக்கவில்லை.
“டேய் என்னடா ரொம்ப நாளா தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறீங்க..?”
“ரொம்ப நாளாவும் தெரியும்..ரொம்ப நல்லாவும் தெரியும்..” என்றவனின் வார்த்தைகளில் செழியன் அறியா உள்ளர்த்தம்.
●●●●●●●
ஒரு குளியலை போட்டு விட்டு தயாராகி வெளியில் வந்தாள்,தர்ஷினி.
எப்படியாவது இந்துவிடம் கேட்டுக் கொண்ட படி காவேரி வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்பதே தற்போது அவளின் ஒரே குறிக்கோள்.
சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு யாரும் இல்லாதிருப்பது ஒரு வித பயத்தை உண்டு பண்ணினாலும் இந்துவிடம் வாங்கிய எண்ணில் இருந்து காவேரிக்கு அழைத்து சற்று நேரத்தில் வருவதாக கூறி விட்டு அவசர கதியில் நடந்து கொண்டிருந்தாள்.
இந்து காவேரியிடம் தர்ஷினியைப் பற்றி எத்தி வைத்திருக்க பரஸ்பர அறிமுகம் இன்னும் இலகுவாய்ப் போனது.
ஒருவாறு காவேரி வீட்டிற்கான வழியில் நடக்க ஓரிடத்தில் பாதை இரண்டாக பிரிந்தது.
வலது புறம் திரும்பினால் காவேரி வீடு என்று சொல்லியிருக்க இடது புறமாய் சற்று தள்ளி அமைந்திருந்த தோப்பு வீடு அவளின் கவனத்தை கவர்ந்திற்று.
புத்தி தடுத்தாலும் ஏதோ ஒரு உந்துதலில் இடது புறமாக அவள் நடக்கத் துவங்க நான்கைந்து எட்டுக்கள் எடுத்து வைத்தது தான் தாமதம்,
சத்யாவிடம் இருந்து வந்த அழைப்பை பார்த்ததும் உடல் தூக்கிப் போட்டது.
“ஐயோ..இவரு வேற போன் பண்றாரே..”அலறிய மனதை அடக்கிக் கொண்டு அவனின் ஏன் அழைக்கிறான் என்ற யோசனையில் அலைக்கழித்த எண்ணங்களை கட்டுப்படுத்திய படி போராட்டத்தின் பின்னே அழைப்பை ஏற்றாள்,அவள்.
“ஹலோ தர்ஷினி..”
“ஹலோ சொல்லுங்க லீடர்..”
“எங்க இருக்கீங்க..?”
“அ..அந்த வீட்ல தான்..”சொல்லும் போதே தொண்டை அடைத்தது.
தொடரும்.
🖋️அதி..!
2024.04.08

