Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 15

 

“அங்கிள் பொய் சொல்லாதீங்க..” மனிதர் சொன்னது பொய்யாக இருக்கக் கூடாதோ என்கின்ற தவிப்பு அப்பட்டமாய் தெரிய தழைந்த குரலில் கூறியவனைக் கண்டதும் அவரிடம் இருந்து பெருமூச்சொன்று.

 

நடந்து விட்டதை யாரால் மாற்ற இயலும்..?

அதிலும் அவன் கேட்டதற்காக திரித்து சொல்லிட இயலாதல்லவா..?

 

“உண்மயா தான் தம்பீ..” அவரின் குரலில் உண்மை நிரம்பியிருக்க சத்யாவால் அதை நம்ப முடியவில்லை.ஏன் ஏற்றுக் கொள்ளவும் மனம் கொஞ்சமும் முன் வரவில்லை.

 

“இல்ல..இல்ல..அப்டி இருக்காது..” அரற்றிக் கொண்டு அலைந்த மனதை ஒரு நிலைப்படுத்துவது அத்தனை கடினமாய் இருந்து.

 

அவன் முன்னே நடந்த நிஜத்தை விட அவனுக்கு தெரியாத நடந்து நிஜத்தின் தாக்கம் மனதை அதிகமாகவே பலவீனப்படுத்த அவ்விடத்திலேயே சரிந்தமர்ந்தான்,சத்யரூபன்.

 

சத்யாவைப் பார்க்க பாவமாய் இருந்தாலும் இறந்திருந்த மனிதர் மீது அவருக்கு கொஞ்சமும் இரக்கம் வரவில்லை.ஏன் அவரின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளும் எண்ணமில்லை,மனிதருக்கு.

 

ஒற்றைக் கையால் வேட்டி நுனியை தூக்கி பிடித்த படி நடந்தரவரின் நடையில் அந்த வயதிலும் ஒரு வித கம்பீரம் மிளிரத் தான் செய்தது.முறுக்கு மீசை அவருக்கு இன்னுமே ஒரு வித மிடுக்கை தந்தது.

 

அங்கு ஓரமாய் நிறுத்தப்பட்டிருந்த வண்டியில் ஏறிக் கொள்ள அவரின் விழியசைவை புரிந்து கொண்டவாறு வண்டியை கிளப்பியிருந்தார்,சாரதியும்.

 

●●●●●●●●

 

மித்ரஸ்ரீ கேட்ட கேள்வியில் வசீகரமாய் சிரித்தவனோ பெருவிரலால் கீழுட்டின் கீழே மெதுவாய் தடவிய படி அமர்த்தலாய் பார்க்க அக்கரத்தின் மற்றைய நான்கு விரல்களும் மறுபக்க தாடையை இலேசான அழுத்தத்துடன் பற்றியிருந்தன.

 

“ஹலோ மிஸ்டர்.ரிஷி உங்களத் தான் கேக்கறேன்..” இத்தனை நேரம் அவன் பார்வையில் தடுமாறிப் போனதை மறந்து ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் கத்தியவளை கண்டு கொள்ளாமல் வெளிப்புறம் பார்வையை திருப்பியவனின் இதழ்களோ “பட்டாசு..” என உச்சரிக்க அவளுக்கு அவன் தன்னை ஏதோ சொல்வது புரிந்தாலும் என்னவென்று புரியவில்லை.

 

“என்ன வாய்க்குள்ளால முணுமுணுப்பு..? டைரக்டா பேச முடியாதா..?” தன் மீதுள்ள கோபத்தையும் அவன் மீது காட்ட முயல காட்டமாய் தான் இருந்தன,வார்த்தைகள்.

 

பையனின் அமைதி கடுப்பை மட்டுமில்லாது அசட்டு தைரியத்தையும் தந்திருந்ததே.அந்த தைரியத்தானால் தான் இந்த வாய்ப்பேச்சு.

 

கத்திக் கொண்டிருந்தவளை உதடு பிதுக்கி அலட்சியமாய் பார்த்தவனின் மீது கொலைவெறி எழுந்தது,உண்மை.

 

அவளுடன் சரிக்கு சமமாய் வாயாடும் ரிஷி மீது கோபம் வரும்.ஏன் கன்னம் வீங்க அறையும் ரிஷியின் மீதும் கோபம் வரும்.ஆனால்,தன் செயலுக்கு எதிர்வினை இன்றி அலட்சியமாய் இருக்கும் ரிஷியின் மீது மட்டும் கோபத்திற்கு மாறாய் கொலைவெறியே கிளர்ந்தெழும்.

 

“கிறுக்குஉஉஉஉஉ..” கத்திய படி அவனுக்கு முன்னிருக்கையில் இருந்த அவளின் பையை எடுக்க முனைந்த நேரம் அவனுக்கும் எதுவும் செய்யாது இருக்க முடியவில்லை.

 

கொஞ்சம் முன்னே சரிந்து அவனுக்கு முதுகு காட்டிய படி இடை வரை குனிந்திருந்தவளின் பின்னலை பிடித்திழுத்த இழுப்பில் அவளுக்கு உயிர் போய் வந்தது.

 

“ஆஆஆஆஆஆ…அம்ம்ம்மாஆஆஆஆஆ..” கத்தியவளின் கத்தலில் அருகில் யாரேனும் இருந்திருந்தால் செவிப்பறை மென்சவ்வு கிழிந்திருப்பது உறுதி.

 

பையனுக்கு பழக்கப்பட்ட விடயம் என்பதால் அதிகமாய் சேதாரம் இல்லை.

 

“கிறுக்கு பயலே விடுடா..மென்டல்..கிறுக்கு பைத்தியமே விடுடா..” அவள் கத்த இன்னும் இழுத்தவனின் கரத்தில் இருந்து சடையை விடுவிடுக்க திமிறிக் கொண்டிருந்தாள்,அவள்.இருக்கும் கொஞ்சம் முடியும் இவனின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி விடுமோ என்கின்ற பயம் வேறு.

 

“யோவ் கிறுக்கு பைத்தியம் விடுடா..” அவள் கத்த அவனின் செயலிலும் அவன் அமர்ந்திருந்த தோரணையிலும் துளியும் மாற்றமில்லை.

 

மனைவியானவள் தான் சிகையை காப்பாற்ற பின்னே நகர்ந்து தன் உயரத்தை சற்று குறைத்தவாறு நின்றிருந்தாள்,அதே போல் முதுகு காட்டிய படி.

 

“விடப்போறீங்களா இல்லயா மிஸ்டர்.ரிஷி..?”பற்களை நறநறத்த படி கேட்டவளுக்கு அவன் பதிலேதும் மொழியாதிருக்க திரும்பி அவனின் கன்னத்தில் அறையொன்று வைக்கத் தோன்றினாலும் வாய்ப்பில்லையே.

 

“ரிஷீஈஈஈஈஈஈஈஈஈஈஈ”

 

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிஷி பைத்தியம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..”தரையில் காலை உதைத்த படி மீண்டும் ஒரு கத்தல்.

 

“யெஸ் சொல்லுங்க..”காதைக்குடைந்த படி அமர்த்தலாய் கேட்டவனின் வார்த்தைகளில் இருந்த நிதானம் அவளுக்கு கலவரத்தை தந்தது.

 

“ஏதோ ப்ளேன் பண்ணிட்டான் பைத்தியம்ம்ம்..” மனதுக்குள் முணுமுணுத்தவளோ அடுத்த யோசிக்கும் முன் அவன் முடியை இழுத்த இழுப்பில் சமனிலை தவறி கீழேயே அமர்ந்து விட அமர்ந்த வேகத்தில் இடுப்புப் பகுதியில் பலத்த அடி.

 

வலியில் கண்கள் கலங்க பற்களை கடித்துக் கொண்டவளுக்கு அவன் முன் அழவும் பிடிக்கவில்லை.தன்மானம் தடுத்ததா..? தன் மனம் தவிர்த்ததா..?

அவளுக்குத் தான் தெரியும்.

 

அவனின் காலுக்கு கீழே அவள் அமர்ந்திருக்க சிகையை பிடித்திருந்த அவனின் கரத்தை இப்போது அவளின் ஒரு கரம் பற்றி விடுவிடுக்க முயன்றது.

 

“நானா விட்ற வர உங்களால ஒன்னும் பண்ண முடியாது மிஸஸ்.மித்ரஸ்ரீ..” காதோரமாய் குனிந்து வில்லத்தனமான தொனியுடன் சொன்னவனின் வார்த்தைகளே கேட்கக் கேட்க அவனின் வாயை அடித்து உடைக்கும் வெறி.ஆனாலும்,மனதின் சிறு ஓரமாய் கொண்ட காதலினால் காதல் கொண்டவனின் அருகாமையில் கொஞ்சம் தடுமாற்றமும் படபடப்பும்.

 

தோற் பட்டையால் இடித்து அவனின் தாடைய தள்ளப் பார்க்க சுதாரித்தவனோ சட்டென நிமிர்ந்து விட்டிருந்தான்.

 

“இப்ப உனக்கு என்னய்யா வேணும்..?” அவனின் செயலின் காரணம் உணர்ந்தவளோ வீம்பை கை விட்டு அவன் வழிக்கு வர அவனிதழ்களில் மென்மையான முறுவல்.

 

“டெரர் சாமி யாரு..” அழுத்தமாய் அவன் கேட்ட கேள்வியில் அவளின் விழிகள் தெறித்து விடும் அளவு விரிந்தன.

 

பரபரவென விழிகளை சுழலவிட்டவளுக்கு ஓரமாய் திறந்திருந்த பையைக் கண்டதும் உடல் நடுக்கமெடுத்தது.

 

தினக்குறிப்பை புரட்டாமல் இந்த கேள்வியைக் கேட்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.ஒரு வேளை எல்லாம் அவனுக்குத் தெரிந்து விட்டிருந்தால்..?

 

அப்படியே பட்டென திரும்பி அவனின் முகம் பார்க்க அவனின் பார்வை வெட்டுவது போல் அவளில் படிந்திருந்தது.

 

முகம் வெளிறிப் போய் விழிகள் சிவப்பேறத் துவங்கி இருந்தவளின் தோற்றம் அவனுக்கு யோசனையைத் தர தினக்குறிப்பின் முதற் பக்கத்தில் இருந்த வாசகத்தை மட்டும் பார்த்து கோபத்தில் உள்ளே வைத்தவனுக்கு இன்னும் படித்திருக்க வேண்டும் என்கின்ற எண்ணம்.

 

முதற் பக்கத்துடன் அவன் நின்றிருக்க முழுதாய் படித்ததாய் அவள் நினைத்திருக்க உதடு துடிக்க விழிகள் ஏனோ கலங்கத் துவங்கியது.

 

அவனுக்கு தெரியக் கூடாது என்று அவள் நினைத்தது அவனுக்கு தெரிந்து விட்டது என அவள் எண்ணியதாலோ..?

 

அவளின் கசங்கிய முகம் அவன் மனதையும் கசக்கிப் பிழிய சடையை விடுவித்து நகர முயன்றவனின் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைக்க கோபமேறியது,பையனுக்கு.

 

●●●●●●●●●

 

தன் சித்தி வீட்டில் அமர்ந்திருந்த மருதவேலின் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள் மின்னி மறைந்து அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

 

தர்மேந்திரனை பற்றிய ஒரு புறம் சிந்தனை என்றால் மறுபுறம் கஜேந்திரன் எப்படி இறந்திருப்பான் என்கின்ற குழப்பம்.

 

கையில் காபியுடன் வந்த காவேரியைக் கண்டும் இதழ் பிரிக்கவில்லை,அவன்.

 

“என்னன்னா ஏதாச்சும் ப்ரச்சனயா..? டல்லா இருக்க..?” கனிவுடன் கேட்டவளை ஆதுரமாய் பார்த்தவனுக்கு தன் மன எண்ணத்தை அவளிடம் பகிர்ந்து கொள்வதில் கொஞ்சம் பயம்.

 

அவளிடம் சொன்னால் அவள் தன்னை விட பயப்படுவாள் என்று அவனுக்குத் தெரியுமே.

 

அவள் கையில் இருந்த காபிக் கோப்பையை வாங்கிக்கொண்டு தன் முன்னே போடப்பட்டிருந்த இருக்கையில் அவளை அமரச்சொல்ல மறுக்காமல் அமர்ந்து கொள்ள நேற்றிரவு நடந்த மொத்தக் கதையையும் அவளிடம் சொல்ல மிரண்டு தான் போனாள்,காவேரி.

 

“என்னண்ணா நெஜமாவா சொல்ற..?” அவள் குரலில் நம்பிட முடியாத தவிப்பு அப்பட்டமாய் விரவி இருந்ததே.

 

பலர் தம் அனுபவங்களை பகிர்ந்த பொழுது நம்பாதவளுக்கு அண்ணன் சொல்வதை அத்தனை எளிதாய் புறந்தள்ள முடியாதே.

 

“அண்ணா அப்டி உருவம் உன் முன்னாடி வந்தப்போ நீ என்ன பண்ணுன..?” தன்னை சமப்படுத்திக் கொண்டு அவள் கேட்க அவள் முகத்தில் இருந்த பயத்தை புரிந்து கொள் முடிந்தது,அண்ணன்காரனால்.

 

“நா கதவ தெறந்து வெளில ஓட ஆரம்பிச்சேன்..அவ்ளோ தான் ஞாபகம் இருக்கு..”

 

“அப்போ எப்டி வீட்டுக்கு வந்த..?”

 

“கண்ணு முழிச்சு பாக்கறப்போ கடத்தெரு வழில இருந்தேன்..அப்றம் எழுந்து சீக்கிரமா வீட்டுக்கு வந்தேன்..”

 

“அண்ணா அந்த செல்வி பொன்ன உங்க மொதலாளி நெஜமா காதலிச்சாரா..?”

 

“ப்ச்ச்ச்..நீ வேற இவ்ளோ சீரியஸா கேக்கற..அவன் யார நெஜமா விரும்புனான்..எல்லாம் டைம் பாஸ்ஸ்ஸ்ஸ்..நேத்து கூட யாரோ பொண்ணு கூட கொழஞ்சிகிட்டு கொஞ்சிகிட்டு பேசிகிட்டு தான் வந்தான்..ச்ச்ச்சைஐஐ”

 

“அப்போ அந்த செல்வி பொண்ணு நெஜமா தான் விரும்பியிருக்கா..?”

 

“ம்ம் அப்டி தான் தெரியுது..ஆனா சாதாராண லவ் பெயிலர்காக அந்த பொண்ணு சூசைட் பண்ணியிருக்கான்னு நம்ப முடியல..”

 

“என்னாலயும் தாண்ணா..என்னமோ பெரிய ப்ரச்சன இருக்கும்னு தோணுது..என்னன்னு தான் புரியல..”

 

“ஆனா அரவிந்த் இப்ப தான் போன் பண்ணான்..அவனும் சூசைடா தான் இருக்கும்னு சொல்றான்..”

 

அரவிந்த்.

மருதவேலின் தோழன்.

அந்த ஊரின் சப் இன்ஸ்பெக்டர்.

 

இருவருக்குமே தற்கொலை என்று கூறியதை அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்க பதில் யாரிடம் இருக்கும் என்கின்ற தீவிரமான யோசனையே ஓடிக் கொண்டிருந்தது.

 

ஆனால்,பதில் தெரிந்த இருவரும் அந்த நொடி உயிரோடு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாதே.

 

சில நிமிடங்கள் கடந்திருக்கும்.

 

மருதவேலின் அலைபேசி ஒலிக்க சட்டென கலைந்து ஏற்றவனிடம் சொல்லப்பட்ட செய்தியில் அவனிதழ்கள் மென்மையாய் முறுவலித்தன.

 

“என்னண்ணா சிரிக்க வேற செய்ற..?”

 

“பெரிய வீட்டு ஐயா இங்க ஊருக்கே வந்துட்டாங்களாம்..” என்க ஒரு நொடி அதிர்ந்த காவேரியின் இதழ்களும் மறுநொடி புன்னகையை பூசிக் கொண்டன.

 

●●●●●●●●

 

அந்த கல்லறையின் முன் கண்ணீருடன் அமர்ந்திருந்தான்,அவன்.

 

கண்களில் நீர் கட்டியிருக்க விழிகள் சிவப்பேறி இருந்தது.

அவள் இல்லை.

அதற்கென்று அவளின் நினைவுகள் இல்லாமல் இல்லையே.

 

“ஐ திங்க் ஐ இன் லவ் வித் ஹிம்..எனக்கு அவர ரொம்ப புடிச்சிருக்கு..” அவள் கூறிய வார்த்தைகள் இன்னும் அவனின் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது,அவள் மறைந்த பின்னும்.

 

அன்று ஆடவனொருவனை கை காட்டி காதலன் என்று கூறிய பொழுது அவன் உணர்ந்த வலியை சொல்ல வார்த்தைகள் போதாது.

அதன் பின் அவளுடன் அவன் பேசவேயில்லை.

ஏன் பார்க்கக் கூட வரவில்லை.

 

அவளின் இறுதிச் சடங்கில் கூட கலந்து அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அது தான் இன்னும் அவனின் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது.

 

பால்ய வயது துவக்கம் தோழமை இருந்தாலும் அவனுக்கு எப்போது அவள் காதலியானாள் என்று அவனுக்குத் தெரியாது.அதே உணர்வு அவளுக்கும் இருக்க வேண்டும் என அவனின் மனம் எதிர்ப்பார்த்தது.

 

அவன் இடத்தில் இருந்து பார்க்கையில் பிழையென்று சொல்ல முடியாது.அவளிடத்தில் இருந்து பாரக்கையில் சரியென்றும் சொல்ல முடியாது.

 

ஆனால்,அவளுக்கு அவனிடம் தோழமையைத் தாண்டின வேறெந்த உணர்வும் அவனிடம் தோன்றவில்லை.

 

அவளுக்கும் ஒருவன் மீது பிடித்தவ் வந்தது.அவனும் அவளை பிடித்திருக்கிறதென்று சொல்ல திருமணமும் நிச்சயிக்கப்பட்டது.

 

அதை இவனிடம் சொல்ல அன்று கோபபட்டு அவளிடம் இருந்து விலகிச் சென்றவனுக்கு கடைசி வரை அவளுடன் பேசவே கிடைக்கவில்லை.

 

அவள் பலமுறை அவனை சந்திக்க முயன்றாள்.தினமும் எண்ணிலடங்கா அழைப்புகள் அவளின் எண்ணில் இருந்து வந்திருக்கும்.

 

அவன் சந்திக்கவோ அவளின் அழைப்பை ஏற்கவோ அவளுக்கு பதில் அழைப்பெடுக்கவோ ஒரு போதும் முயன்றதில்லை.

 

அவள் எப்படி வேறொருவனை காதலிக்கலாம் என்கின்ற ஆத்திரம் மட்டுமே அவனின் மனதில் முன்னிலை வகித்தது.

 

இறுதியாய் அவள் பேச முற்பட்டது அவனிடம் அல்லவா..?

அப்போதாவது பேசியிருக்க வேண்டுமோ..?

 

பழையது நினைவுகளாய் மனதில் ஓட கைகளில் முகம் புதைத்து அழுதான்,ஆத்ரேயன்.

 

கடைசி வரை அவளிடம் தன் காதலை சொல்லவுமில்லை.அவளின் நட்புக்கு நியாயம் செய்யவுமில்லை.

உண்மை குத்தும் போது மனமும் வலித்தது.

 

அவன் கொண்டு வந்து வைத்த பூங்கொத்து ஓரமாய் கிடக்க “சாந்தவி..” என்று ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருந்தன,ஆத்ரேயனின் இதழ்கள்.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.03.24

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. புதுசு புதுசா கேரக்டர் வராங்க … ரிஷிக்கும் மித்ராவுக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை