Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 14

 

காக்கி சட்டையில் இரு நபர்களை கண்ட பரமுவுக்கும் சேதுவுக்கும் ஒரு கணம் மூளை மொத்தமாய் செயலிழந்த நிலை.

 

பரமுவுக்கு பயத்தில் வியர்த்து வழிந்து உதடி துடிக்கத் தொடங்கிட சேதுவின் விரல்கள் நெற்றியை தடவின.

 

நிச்சயம் அவர்கள் கண்டால் தமக்கு பிரச்சினை வரக்கூடும் என்று மனசாட்சி அடித்துச் சொல்ல நடந்தேறியிருக்கும் விடயத்தை கண்டு பிடித்து விட்டார்களெனின் அவர்களின் மீது தான் மொத்தப் பழியும் திரும்பக் கூடும் என்பதிலும் ஐயமில்லை.

 

“மாப்ள..என்னடா பண்றது..?போலீஸ் வேற வந்துருக்காங்க..மாட்டிக்குவோமாடா..?”

 

“ப்ச்ச்ச்ச்..பரமு அமைதியா இரு..பதட்டப்பட்டு நாமளா போய் மாட்டிக்க வேணா..பர்ஸ்ட்டு அந்த மூட்டய எடுத்து ஒழிச்சுர்லாம்..” என்றவர்களோ துரிதமாய் இரத்தம் தோய்ந்திருந்த சாக்குப்பையை நீர் சேர்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த உருளை வடிவ பெரிய ப்ளாஸ்டிக் கொள்கலனில் போட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கலுக்கு பின்னால் வைத்தனர்.

 

அடுக்கப்பட்டிருந்த செங்கலுக்கு குவிக்கப்பட்டிருந்த மணலுக்கும் இடையே கொள்கலன் இருக்க யாரும் அத்தனை எளிதாய் அதை கண்டு கொள்ள இயலாது.

 

ஆனால்,அந்த மணல் மேடோ அந்த தளத்தின் விளிம்பில் அமைந்திருப்பதை இருவருமே கவனிக்க மறந்து தான் போயினர்.மணல் மேட்டை தாண்டி இரண்டு அடிக்குத் தான் இருந்தது,காங்கிரீட் தளம்.

 

அதைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தாலும் அந்த தளத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டியது தான்.

 

கொள்கலனை தள்ளி வைத்து விட்டு வந்த இருவருக்கும் ஆழமாய் மூச்சு வாங்கியது.இன்று பொழுது புலரும் முன்னரான அதி காலையில் எப்படித் தான் அந்த மூட்டையை தூக்கிக் கொண்டு படியால் ஏறி வந்தோம் என்று இருவருக்கும் சத்தியமாய் புரியவில்லை.

 

மெதுமெதுவாய் அடியடுத்து வைத்து வெளியே எட்டிப் பார்த்தான்,சேது.இன்னுமே அந்த காவலர்கள் நின்று கொண்டிருக்க அவனுக்கும் சற்றுக் கலவரமானது.

 

தாம் செய்த விடயம் தவறென்றாலும் இப்போது செய்யாத தப்புக்கு மாட்டிக் கொள்ளப் போவது போல் தோன்றிடவே முகம் வெளிறிற்று.

 

“பரமு..நாம பேசாம இத இங்கயே வச்சிட்டு போயிரலாமா..? மாட்டிகிட்டா கண்டிப்பா நாம தான் ஜெயிலுக்குப் போனும்..”

 

“எனக்கும் அப்டிதான் தோணுது மாப்ள..பேசாம வச்சிட்டு போய்ரலாம்..ஆனா போலீஸ் கண்டுபுடிச்சிட்டா என்ன பண்றது..?”

 

“நாம வேற எங்கயாச்சும் போயிர்லாம்..”

 

“அம்மா ஆப்ரேஷன்கு என்னடா பண்றது..?”

 

“அதான் ஒன்னும் புரியல..ஆனா ஏதாச்சும் பண்ணிக்கலாம் பரமு..இப்போ பின் வாசல் வழியா இங்கிருந்து போய்ரலாம்..” என்க ஆமோதிப்பாய் தலையசைத்தான்,சேது.

 

●●●●●●●●

காலடிச் சத்தம் கேட்டு விதிர்த்துப் போன மகிழினிக்கு கண்கள் சிவப்பேற தன் முன்னே நின்றிருந்த ஆகாஷைக் கண்டதும் விழி பிதுங்கியது.

 

அவனிருந்த தோரணையும் விழிகளில் தெரிந்த சீற்றமும் தாம் பேசியமு முற்றிலும் அவன் கேட்டிருப்பதை உணர்த்த எச்சில் விழுங்கிக் கொண்டவளின் கரமோ தென்றலின் கரத்தைப் பற்ற அவளின் கரமும் தோழியின் விரல்களை இறுகப்பற்றிக் கொண்டது.

 

ஆகாஷுக்கு இன்னும் முற்றாக உடல் தேறியிருக்கவில்லை.

நின்றிருந்தாலும் அவனில் மெல்லிய தள்ளாட்டம்.

 

தொழிலில் உச்சத்தில் இருக்கும் தொழிலதிபன் அவன்.

அவனின் நிதானமும் எதையும் கூர்ந்து ஆராயும் தன்மையுமே அவன் முதலிடத்தில் இருக்க காரணம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

 

இரு பெண்களினதும் வெளிறிய முகத்தைக் கண்டு அவர்களுக்கும் சகாவின் செயலுக்கும் சம்பந்தமில்லை என மனம் கணித்து விட்டாலும் தீர விசாரிக்காமல் இருக்க மனம் ஒப்பவில்லை.

 

“என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு..” மகிழினிக்கு முன்னே வந்து அமர்ந்தவனின் அதட்டலான தொனியில் அவளுக்கு விக்கித்துப் போனது.

 

“உன்னத் தான் கேக்கறேன்..என்ன நடந்ததுன்னு சொல்லு..” மீண்டும் அழுத்தமாய் கேட்க பயந்த படி தான் கண்ட அனைத்தையும் ஒப்புவித்தவளில் பொய் இல்லை என்பது அவனுக்கும் புரிந்தது தான்.

 

“சகா..எனக்கு போட்டது என்ன இன்ஜெக்ஷன்..?”

 

“…………….”

 

“உங்கள தான் கேக்கறேன்..அவன் எனக்கு போட்டது என்ன இன்ஜெக்ஷன்..?”

 

“சார் உங்களுக்கு பெயின் கில்லர் மாத்தர கொடுத்துட்டு தூக்க மாத்தர கொடுத்தா சாப்ட மாட்டீங்கன்னு மயக்க மருந்த தான் இன்ஜெக்ட் பண்ணாரு..” சகா செய்ததை கூர்ந்து கவனித்திருந்த தென்றல் அவனிடம் கூற அவனின் புருவங்கள் சுருங்கின.

 

சகா மீது நம்பிக்கை இருந்தாலும் இரு பெண்களின் கூற்றுக்களும் மனதை நெருட வைத்தது.மனதில் துளியாய் சந்தேகம் துளிர்க்க அலைபேசியைத் தேடியவனின் கரங்களுக்கு அகப்படவில்லை.

 

“பாக்கெட்ல தான வச்சிருந்தேன்..எங்க போச்சு..?” முணுமுணுத்துக் கொண்டு அறைக்கு எழுந்து செல்லப் பார்த்தவனை புரியாது பார்த்திருந்தனர்,மகளிர்.

“என் போன பாத்தீங்களா..? இல்லன்னா நீங்க யாராச்சும் எடுத்தீங்க..?”

 

“சகா சார் தான் உங்களுக்கு கால் வந்து டிஸ்டர்ப் ஆகும்னு எடுத்துட்டுப் போனாரு..”

 

“வாட்..?” அவனின் விழிகளில் அதிர்வு இழையோட சகாவின் மீது துளிர்த்திருந்த சந்தகேம் முளைத்து கிளை பரப்பியது.

 

“உங்க யார் போனயாவது கொடுங்க..” என்க தயங்கித் தயங்கி தன் பட்டன் போனை நீட்டியிருந்தாள்,மகிழினி.தென்றலின் அலைபேசி சார்ஜ் தீர்ந்து போய் அணைந்து விட்டிருந்தது.

 

அவள் மெதுவாய் கொடுக்க வெடுக்கென பறித்தவனின் விரல்களோ தோழனுக்கு அழைப்பெடுக்க எண்களை அழுத்த அந்த காட்டுப் பகுதியின் எங்கனம் டவர் கிடைக்கும்..?

 

“ப்ச்ச்..சிக்னல் இல்ல..” என்ற படி அலைபேசியை தூக்கி சோபாவில் எறிய பதட்டத்துடன் எடுத்துக் கொண்டவளை உறுத்து விழித்தன,அவன் விழிகள்.

 

“சகா நம்மள லாக் பண்ணிட்டு தான் இங்கிருந்து போயிருக்கான்..”விழிகளை மூடி அவன் சொல்ல மற்றைய இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

 

“புரில சார்..”

 

“ஆமா சார்..மகி சொல்ற மாதிரி எனக்கும் எதுவும் புரியல..”

 

“சகா ஏதோ ஒரு காரணத்துக்காக என்ன இங்க ட்ராப் பண்ணி வச்சிருக்கான்..என் கூட நீங்களும் மாட்டிகிட்டு இருக்கீங்க..”

 

“சகா சார் எதுக்கு அப்டி பண்ணனும்..?” கலவரமான குரலில் கேட்ட தென்றலின் மனதில் சகா மீதிருந்த நம்பிக்கையும் ஈர்ப்பும் மொத்தமாய் காணாமல் போயிருந்தது.

 

“உனக்கு சகாவ பத்தி புல் டீடெயில்ஸ் தெரியுமா..?”தென்றலைப் பற்றி சரியாக கணித்து கேட்க அவளின் சிரசும் மேலும் கீழும் அசைந்தாடியது.

 

“கம் ஆன்..சொல்லு க்விக்கா..”

 

“பொறந்து வளந்தது எல்லாம் அவங்க ஊர்ல..அடிமட்ட க்ராமம்..அம்மா மேத்ஸ் டீச்சர்..அப்பா கெமிஸ்ட்ரி லெக்சரர்..ரெண்டு பேரும் அவங்க ஊர்ல தான் வர்க் பண்ணி இருக்காங்க..”

 

“ம்ம்..நெக்ஸ்ட்..”

 

“ஒரு தடவ கேம்ப் ஒன்னுக்காக அவரு ஊருக்கு போயிருந்தேன்..அவங்க மூணு பேரும் தான் அவங்க வீட்ல இருந்தாங்க..சொந்த பந்தம்னு சொல்லிக்கக் கூட யாரும் இல்ல..

 

“ம்ம்ம்ம்..நெக்ஸ்ட்..” என்றவனுக்கு இவை ஏற்கனவே தெரிந்திருந்த விடயங்கள் தான்.சகாவுடன் பழகும் போதே அவனைப் பற்றிய தகவலை திரட்டியிருந்தான்,தோழனொருவனின் உதவியுடன்.

 

“வேற..வேற நீ தான் க்ரஷ்ஷுன்னு அவன பத்தி டீடெயில் கலெக்ட் பண்ணினல்ல..சொல்லு..தெரிஞ்சத சொல்லு..”

 

“வேற..இன்னொரு விஷயம் சார்..அவங்ம்மாக்கு கிருஷ்ணாவ ரொம்ப புடிக்கும்னு சொன்னாங்க..அவங்கப்பாவுக்கு பஞ்ச பாண்டவர ரொம்ப புடிக்கும்னு சொல்லிருக்காரு..” தெரிந்ததை சொல்ல விட்டால் பார்வையாலே எரித்திருப்பான்,அவளை.

 

“வேறேதாச்சும் தெரிஞ்சத சொல்லு..ஒளறிகிட்டு இருக்காம..” தீர்க்கமாய் சொன்னவனின் குரலில் அப்படி ஒரு கோபம்.

 

“ஆஆஆ..இது அவங்கப்பாக்கு தெரியாம அவரு யாரயோ பாக்க போவாரு..ஒரு தடவ நா கேட்டதுக்கு அண்ணன்னு சொன்னாரு”

 

“என்ன சொல்ற நீ..?”

 

“ஆமா சார்..அவருக்கு ஒரு அண்ணன் இருந்தாராம்..சின்ன வயசுல ஏதோ தப்பு செஞ்சுட்டு மைனர் ஜெயிலுக்கு போனவரு ஊருக்கு திரும்ப வரவே இல்ல..சகா சாருக்கு இங்க வேல கெடச்சு வந்ததும் சிட்டில தான் அவரு அண்ணன பாத்ததா சொன்னாரு..”

 

“உண்மய சொல்றியா..?இல்லன்னா வாய்க்கு வந்தத அடிச்சி விட்றியா..?”

 

“நெஜமா தான் சார்..நா அவரு அண்ணன பாத்துருக்கேன்..ஆனா அவரு யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொன்னாரு..நானும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல..ஆனா அவரு அண்ணன உங்களுக்கும் தெரியும்..நீங்க கூட அவர் கூட பேசிட்டு இருந்துருக்கீங்க..”

 

“………….”

 

“சகா சாரோட அம்மாவுக்கு அவரு அண்ணம் மேல ரொம்ப பாசம்..அண்ணன் இங்க இருக்குறதுன்னு தெரிஞ்சதும் அவங்க மூத்த பையனோட இருக்காங்க..சகா சாரும் அவங்க அப்பாவும் தனியா ப்ளாட்ல இருக்காங்க..”

 

அவள் சொல்லிக் கொண்டு போக அவனின் முகத்தில் சிந்தனையின் துளிகள் வந்து ஒட்டிக் கொண்டன.அவனின் அண்ணன் என்று யாரை குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்று கணிக்க இயலவில்லை.

 

“அவன் அண்ணன் பேரு தெரியுமா..?”

 

“தெர்யும் சார்..அவருக்கு பஞ்ச பாண்டவர் பேரு..அவங்கண்ணனுக்கு கிருஷ்ணன் பேரு..”

 

“ப்ச்ச்..விளக்கம் கேக்கல நான்..அவன் அண்ணன் பேரத் தான் கேட்டேன்..”

 

“இவரு பேரு சகாதேவன்..”

 

“ப்ச்ச்ச்ச்..அண்ணனோட பேரு..ஒரு தடவ சொன்னா புரியாதா..?”

 

“வா..வாசுதேவன்..” என்க பட்டென எழுந்து நின்று விட்டிருந்தான்,ஆகாஷ்.

 

●●●●●●●

 

சத்யாவின் மனதில் பவித்ராவை பற்றிய எண்ணமே நிறைந்திருந்தது.அவளின் பயந்த சுபாவம் பற்றி நன்கு அறிந்தவனுக்கு அவள் நிலமையை எப்படி சமாளிக்கப் போகிறாள் என்கின்ற குழப்பம்.

 

மனதில் அவளைப் பற்றி பலவித எண்ணங்கள் நிறைந்திருக்க சற்று வயதான பெண்மணி ஒருவர் மாரில் அடித்துக் கொண்டு வாகனத்தில் இருந்து கீழிறங்குவது அவன் விழிகளில் தெளிவாய் விழுந்தது.

 

மாமனின் இரண்டாவது மனைவி என சரியாக ஊகித்துக் கொண்டவனின் விழிகளில் ஏனோ ஒரு கசந்த முறுவல்.சொந்த அத்தையை நினைத்து வந்ததோ..? என்னவோ..?

 

மக்கள் கூட்டம் சிறுக சிறுக சேரத் துவங்கியிருக்க ஊருக்கு வெளிப்புறம் என்பதால் முன்பு போல் ஆட்கள் குழுமவில்லை.

 

அந்தப் பெண்மணி வந்த பிறகும் மாமன் மகள்கள் இன்னும் வராதது கண்டு அவனின் புருவங்கள் முடிச்சிட்டுக்கொள்ள யாரிடம் கேட்பது என்று தெரியாது விழி பிதுங்கி நின்றவனின் தவிப்பு கிருஷ்ணாவுக்கும் புரியத்தான் செய்தது.

 

செழியனுக்கு அழைப்பெடுத்து விட்டு வந்து தோழனினா அருகில் தான் நின்றிருந்தான்,சத்யாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ எனப் பயந்து.

 

அங்கு ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்த்த படி நின்றிருந்த பெரிய மனிதரிடம் கேட்டால் தகும் என்பதாய் எண்ணம் எழுந்து நிற்க அவனின் பாதச்சுவடுகள் நீண்டது,அவரை நோக்கி.

 

“அங்கிள்..”தன் அருகில் நின்றிருந்தவனின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவருக்கு அவனின் உடையும் தோற்றமுமே இவ்வூர்க்காரன் இல்லை என்பதற்கு சான்று பகர மென்மையான புன்னகையொன்றை உதடுகளில் படரவிட்டார்,மனிதர்.

 

திடாகாத்திரமான உடலுடன் இன்னும் நிலைத்திருக்கும் உரத்துடன் கம்பீரமாய்த் தான் நின்றிருந்தார்,அவர்.

 

“சொல்லுங்க தம்பி..”என்றவனின் குரலில் இருந்த கனிவு அவனுக்கு பெரும் நிம்மதியைத் தந்தது.

 

“இப்போ எறந்து போயிருக்காரே..அவரோட பொண்ணுங்க..” முடிக்காமல் இழுத்தவனுக்கு அடுத்த என்ன கேட்பதென்று தெரியவில்லை.

 

தவறாக எண்ணி விடுவாரோ என்கின்ற பயம் ஒரு புறமிருக்க இத்தனை நாள் இல்லாது உறவு முறை கொண்டாடவும் மனம் வரவில்லை.

 

அவனின் கேள்வியில் அவரின் விழிகள் பெரிதாக விரிய கண்களில் சிறு ஆராய்ச்சியும் சேர்ந்து கொண்டது.

 

அவனின் தடுமாற்றமும் முகத்தில் இருந்த கலவரமும் நடந்தது எதுவுமே அவனுக்கு தெரியாதிருப்பதை காட்டிக் கொடுக்க அவருக்குள்ளும் கொஞ்சம் யோசனை.

 

சத்யாவுக்கு அவரின் மௌனம் ஒரு வித திகிலை உண்டு பண்ணிட “அங்கிள்..” என்றான்,மீண்டும்.

 

“தம்பி உங்களுக்கு எதுவுமே தெரியாதா..?”

 

“என்ன அங்கிள்..?” பதட்டத்தை உள்வாங்கி தழைந்து ஒலித்தது,அவன் குரல்.

 

“அவங்க ரெண்டு பேரும் எறந்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு..”என்க ஆடிப் போய் விழுக்கென நிமிர்ந்தான்,சத்யரூபன்.

 

●●●●●●●●●

 

ஒரு கையால் இரு விழிகளையும் மூடி அதே கரத்தின் முழங்கையை தொடையில் பதித்து எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ..?

ஆண்பிள்ளையாய் சுற்றித் திரிந்தவளுக்குள் சுழன்றடித்த தடுமாற்றத்தின் புயல் தகர்ந்து போக வெகு நேரம் தேவைப்பட்டது.

 

நெற்றியில் அறைந்து கொண்டவளுக்கு தன் மீதே கோபமாய் வந்து தொலைத்தது.பையனின் ஆழப்பார்வைக்கு இந்தளவு ஆட்டம் காணுவாள் என்று ஒரு பொழுதும் அவள் நினைத்தது இல்லையே.

 

ஆழ மூச்செடுத்து விழிகளை இறுகப் பொத்தி ஓரிரு நிமிடம் கடந்த பின் விழி திறந்தவளின் விழிகளில் இருந்து தடுமாற்றம் துடைத்தெறியப்பட்டு இருந்தாலும் மனதுக்குள் அதன் சுவடுகள் மீதமிருக்கத் தான் செய்தன.

 

நேரத்தைப் பார்க்க ஒரு மணி எனக் காட்ட இத்தனை நேரம் தனை மறந்து அமர்ந்து இருந்ததற்கு நொந்தவளாய் பையை எடுத்து வர பையனின் இருக்கையின் அருகே சென்றவளுக்குள் பதட்டமிருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.

 

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய படி நேராக அமர்ந்திருந்தவனோ தலையை மட்டும் திருப்பி வெளியில் பார்வை பதித்த படி வர அடிக்கடி எழுந்த வலது கரத்தின் பெருவிரலும் ஆட்காட்டி விரலும் தாடியை நீவி விட்டுக் கொண்டன.

 

பாதச்சத்தம் கேட்டவனின் விழிகள் அவளில் தான் பதிந்தது.

அதே உயிரை உருவும் பார்வையில் கொஞ்சம் வித்தியாசம்.

 

ஆழியென இழுத்துக் கொள்ளும் விழிகளில் சிறு நகைப்போடு எள்ளலும் கர்வமும் படர்ந்திருக்க அவனுக்கு புரிந்திடா அவள் அறிந்திடா அவனின் காதலை கொஞ்சம் சேர்த்து திமிராய்ப் பார்த்தவனின் பார்வையை ஒரே ஒரு நொடி தான் உள்வாங்கியது,அவள் விழிகள்.

 

இமை வெட்டாது கொஞ்சமும் தடுமாறாது இலேசாய் பரவியிருந்த இரசனையுடன் விழிகளூடு பாய்ச்சி உள்ளுக்குள் ஊடுருவி அவள் ஜீவனை இழுத்துக் கொள்ள முயலும் ஆளை அசரடித்து திணறடிக்கும் அவன் பார்வையிலோ

அவள் உடல் சில்லிட விழிகள் தாழ்ந்து நிலத்தை தொட அடங்கியிருந்த தடுமாற்றம் ஆழிப்பேரலையாய் எழுந்து ஆர்ப்பரித்தது.

 

“என்ன கண்ணுடா சாமி..?” தனக்குள் திட்டியவளோ தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள பெரும்பாடு படவேண்டி இருந்தது.

 

இன்னுமே அவனுக்கு விட்டு விடும் எண்ணம் வரவில்லை போலும்.

இதழ்களினோரம் புன்னகை கசிய அது ஏனோ அத்தனை அழகாய் இருந்தது,பையனுக்கு.

 

அதற்கு மேலும் அவளால் தாக்குப் பிடிக்க இயலவில்லை.

 

“ஹலோ என்ன லுக்கு வேண்டி கெடக்கு..?” அதட்டலாய் கேட்ட மனைவியை அமர்த்தலாய் பார்த்து வைத்தான்,ரிஷி.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.03.22

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. புருஷன் பொண்டாட்டியும் எதுக்கு சண்டை போட்டுட்டே போறாங்க … வாசு யாருன்னு தெரிஞ்சு போச்சு … அவன் ஏன் மித்ரா பின்னால அலையுறான் …