Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 11

 

நேரம் பதினொரு மணியை எட்டிக் கொண்டிருந்த சமயம் அது.

 

இலக்கின்றி எங்கோ வெறித்துக் கொண்டிருந்த தோழனை காணும் போது மற்றையவனுக்கும் கொஞ்சமாய் புருவம் நெறிய தோழனின் கலவர முகத்துக்கான காரணத்தை அனுமானிப்பது அத்தனை எளிதாய் இருக்கவில்லை.

 

தோழனின் முன்னே அமர்ந்திருந்த அருளுக்கு சட்டென நேற்று நடந்த சம்பவத்தில் இருந்து வெளியே வந்திட முடியாதிருக்க அதுவே இந்த உறைநிலைக்கு முக்கிய காரணம்.

 

கண்களை மூடினாலே முகத்தில் குருதி அப்பிக் கிடக்க கீழே விழுந்திருந்தவனின் உயிர்ப்போராட்டம் தான் கண் முன்னே வந்தது.

 

“டேய் அருள்..என்னாச்சுடா..? எதுக்குடா இப்டி பேயறஞ்ச மாதிரி இருக்க..டேய் அருளு..” முன்னே அமர்ந்திருந்த விதார்த் உலுக்கவே தன்னிலை மீண்டான்,

அருள் வேலவன்.

 

“எ..என்னடா..?”

 

“என்னடா ஆச்சு..? எதுக்கு இப்டி பேயடிச்ச மாதிரி இருக்க..என்ன தான் டா ஆச்சு..? நேத்து போன எடத்துல காத்து கருப்பு ஏதாச்சும் அடிச்சிருச்சா..?”

 

“நேத்து நா ஒரு கொலய பாத்தேன் டா..” என்றவனின் விரல்கள் நடுங்க முகமும் வியர்க்கத் துவங்கியது.

 

“டேய் அருள்..எதுல பொய் சொல்றதுன்னு ஒரு வெவஸ்த இல்ல..”

 

“இல்ல மச்சீ..நெஜமாத்தான்..எனக்கு பாத்ததுல இருந்து தூக்கமே இல்ல..அதான் இப்டி இருக்கேன்..அண்ணனுக்கு கூட பதில் சொல்ல முடியல..”என்றவனின் குரல் நடுங்க விழிகளில் அப்பட்டமான பயம் படர்ந்திருந்தது.அந்த காட்சியின் கொடூரம் அப்படி.

 

“சரி..சரி கூல் என்னாச்சு..? எங்க பாத்த..?”

 

“நேத்து அந்த ரிப்போட்டர் கொலய பத்தி நியூஸ் கலெக்ட் பண்ண அந்த குப்பத்து பக்கம் போயிருந்தேன்ல..”

 

“ஆமா..”

 

“பைக் ரிப்பேர் ஆயிடுச்சு..அங்க பக்கத்துல இருந்த மெக்கானிக் ஷாப்ல விட்டுட்டு கொஞ்ச தூரம் காலாற நடந்துட்டு வர்லாம்னு வந்தா அந்த குப்பத்துக்கு லெப்ட் சைட்ல ஒரு மண் ரோடு..”

 

“…………”

 

“ஏதோ ஒரு க்யூரியாசிடில உள்ள போனா ஒரு அம்பது மீட்டர் டிஸ்டென்ஸ்ல பங்களா மாதிரி ஒன்னு இருந்துச்சு..பெரிய எடம் டா..சரி சும்மா சுத்தி பாக்கலாம்னு போனா ஏதோ சத்தம்..முன்னால கதவு லாக்ல இருந்துச்சு..பின் வாசல் வழியா போய் பாப்போம்னு போனா அங்க ஒரு ஜன்னல் மட்டுந்தான் தெறந்து இருக்க நானும் எட்டிப் பாத்தேன்..” என்றவனின் விரல்கள் கர்சீப்பை எடுத்து முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுத்தது.

 

“அ..அ..அங்க..”

 

வார்த்தை தந்தியடிக்க நா எழவில்லை.அந்த காட்சி மனக்கண்ணில் வந்திருக்க அவனுடலில் நடுக்கமொன்று இழையோடிற்று.

 

“அருள்..ரிலாக்ஸ்…ரிலாக்ஸ்..” கூறியவாறு அருகே இருந்த தண்ணீர்ப்போத்தை திறந்த படி அவனிடம் நீட்ட அதைப் பருகியவனின் சட்டையிலும் கோலமிட்டன,நீர்த்துளிகள்.

 

ஐந்து நிமிடங்கள் கரைந்த பின்னர் தான் தன்னை தேற்றிக் கொண்டு நிமிர்ந்தான்,அருள்.

அதுவும் முழுதாக அல்ல.

 

“அங்க ஒருத்தருக்கு அடிச்சிட்டு இருந்தான் டா இன்னொருத்தன்..ஒடம்பு முழுக்க ரத்தம்..பாக்கவே முடியல..சுத்தி பத்து பேர் அடியாளுங்க மாதிரி..அவனுங்களுக்கு நா அங்க வந்தது தெரிஞ்சிருச்சு போல..தேட்றதுக்கு வெளிய வந்தானுங்க..ஆனா பயந்து வந்துட்டேன்..”

 

“சரி..சரி மச்சீ ரிலாக்ஸ்..ஆமா அடிச்சது யாருன்னு பாத்தியா..?”

 

“ஆமா டா..அந்த மொகம் கண்ணுக்குள்ள இருக்கு..அழுதழுது தான் அடிச்சிட்டு இருந்தான் அவன்..”

 

“பர்ஸ்ட் கொலயா இருக்குமோ என்னவோ..”

 

“தெரியல..”

 

“சரி..வா நாம போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் பண்ணலாம்..”

 

“டேய் அண்ணனுக்கு தெரிஞ்சா கொன்னுருவான்டா..அவன வச்சிகிட்டு போலீஸ் ஸ்டேஷன் போனேன்னு..”

 

“அட ஆமால்ல..உங்கண்ணன் போலீஸ்னு சட்டுன்னு ஞாபகம் வர்ல..உங்கண்ணன்னுக்கு அழச்சி விஷயத்த சொல்லு..அது தான் கரெக்டா இருக்கும்..” என்க தோழனின் பேச்சுக்கு ஆமோதிப்பாய் தலையதைத்தான்,அருள்.

 

●●●●●●●●

 

தினக்குறிப்பில் மூழ்கி இருந்த சங்கீதாவுக்கு நேரம் போனது தெரியவில்லை.அத்தனை ஆழமாய் அவளை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது,அதில் இருந்த ஒவ்வொரு வார்த்தையும்.

 

*”யார் அந்த பொண்ணு..? அட பொண்ணே யாரு மா நீ..? அன்னிக்கி பாத்த அதே பொண்ணு தான்..அதுல டவுட் ஏதும் இல்ல..ஆனா ஏன் அவ தெரியாம என்னோட கைய புடிச்சா கூட எனக்கு ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கு..?”*

 

*”எனக்காக தான் அவ அங்க வந்தான்னு அஷோக் சொல்லும் போது என்னமோ ஆகிச்சு எனக்குள்ள..அவ தவிச்சதா சொன்னான்..அவ ரொம்ப பயந்துட்டதா சொன்னான்..நா கண்ணு முழிக்கற வர என் பக்கத்துல தான் நின்னுட்டு இருந்ததா சொன்னான்..அத கேக்கும் போதே ஏதோ ஒரு விதமான நா பீல் பண்ணியே இல்லாத டிபரன்ட் பீல் மனசு பூரா..”*

 

*”அன்னிக்கு ரோட்ல புடிச்சி இழுத்து காப்பத்துனதும் அவ தான்னு சொன்னான் அஷோக்..ஆனா அது இந்த தடவ அவ என் கைய புடிச்சப்பவே எனக்கு புரிஞ்சி போச்சு..அவ சாதாரணமா தான் கைய புடிச்சா..அதுவும் ஜஸ்ட்ஹெல்ப் பண்றதுக்காக..ஆனா அந்த விஷயத்த என்னால அவ்ளோ ஈசியா கடந்து போக முடியல..என்னென்னமோ ஆகுதே..நா என்னன்னு சொல்றது..?”*

 

*”அடுத்த தடவ கண்டிப்பா அவள பாத்தே ஆகனும்..இந்த அஷோக் வேற இன்னிக்கி ஊருக்கு பொய்ட்டான்..இல்லன்னா அவன வச்சி எப்டியாவது அவ யாருன்னு கண்டுபுடிச்சி இருப்பேன்..ஆனா அவன் அடுத்த தடவ வரும் போது அவ யாருன்னு தெரிஞ்சிக்காம விட மாட்டேன்..ஒன்னுல்ல ஒன்னுல்லன்னு மயக்கத்துல இருந்த என் கிட்ட அவ சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு..”*

 

*”அந்த வாய்ஸ்ல என்ன இருந்துச்சுன்னு சத்தியமா தெரியல எனக்கு..ஈவின் அந்த வாய்ஸ கூட என்னால ரெகாக்னைஸ் பண்ணிக்க முடியாம தான் இருக்கு..* *அது அந்த எடத்துல யாரு இருந்தாலும் அவ கிட்ட இருந்து வந்துருக்குற நேச்சுரலான தவிப்பா இருக்கலாம்..* *ஆனா அது எனக்காக ஸ்பெஷலா வந்ததுன்னா நல்லா இருக்கும்னு தோணுது..*

*ஏன் அது..?*

 

” *லவ் வந்துருச்சோ..?* *ம்ஹும் லவ் எல்லாம் இல்ல..ஜஸ்ட் சின்னதா ஒரு சறுக்கல்..* *அடுத்த தடவ அந்த பொண்ண மீட் பண்ணி கட் அன்ட் ரைட்டா பேசுனா ஓகே ஆயிடும்..ஆனா அது வர நா அவ ஞாபகம் வராம இருக்கனும்டா சாமி..*

*அட பொண்ணே யார் நீ..?”*

 

படித்து முடித்தவளுக்கு இதழ்கள் மெல்லமாய் விரிந்து கொண்டன.

அவனின் காதலின் இரண்டாவது அதிகாரத்தை இரண்டாவது தடவை படித்திருந்தாள்,இப்போது.

 

கொஞ்சமும் சலிப்பு வரவில்லை.அவனின் உணர்வுகளைக் கண்டு கொஞ்சம் பிரமிப்பாகவும் இருந்தது.

 

அவனின் உணர்வுகளை படிக்கும் வரை இப்படி நுண்ணிய உணர்வுகள் பெண்களுக்கு மட்டுந்தான் இருக்கும் என்றிருந்த அவளின் எண்ணப்போக்கை முற்றாக மாற்றி விட்டிருந்தானே,அவன்.

 

ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வுகள் என்பது ஒன்று தான் என்று தெள்ளமாய் சொல்லிக் கொண்டிருந்தது,அவனின் உணர்வுகளில் உறைந்த வரிகள்.

 

எல்லா உணர்வுகளையும் விட இந்த காதல் உணர்வு கொஞ்சம் வித்தியாசம் தான் போலும்.

 

●●●●●●●

 

தொங்கிப் போன பையனின் முகத்தைக் கண்டு அப்படி ஒரு இன்பம் அவள் அகத்தினுள்.

 

பையனின் மீது அளவு கடந்த காதல் இருந்தாலும் அவனை கடுப்பேற்றிப் பார்ப்பதில் அப்படி ஒரு ப்ரியம்.

 

அவள் பதில் சொன்ன பிறகு அவளிடம் முகம் கொடுத்து பையன் பேசவில்லை என்றாலும் அவள் விழிகள் அவனைத் தான் ரசித்துக் கொண்டிருந்தது.

 

“இந்த கிறுக்கு மட்டும் ஏன் நம்ம கண்ணுக்கு இவ்ளோ அழகா தெரியுறான்..?” பலமுறை தனக்குத் தானே கேட்டுக் கொண்டாலும் அதற்கான காரணத்தை காதல் என்ற ஒற்றை வார்த்தைக்குள் கொண்டு சேர்க்க இயலாது.

 

அவன் மீது அவன் கொண்டிருக்கும் உணர்வனாது அடக்கும் அர்த்தங்களில் ஒன்றே ஒன்று தான் காதல்.

 

சண்டைக்கோழியாய் திட்டிக் கொண்டு முட்டி முட்டி நின்று சண்டை போட்டாலும் அவளுக்கு அத்தனை பிடிக்கும் பையனை.அவன் மீதான உணர்வுக்கு பெயரில்லை என்பது போல் அந்த பிடித்தத்திற்கு அளவு கோல் இல்லை.

 

காதலிக்க முன்னரே அவனைப் பற்றி மட்டுமே யோசித்தவளின் மனம் காதலிக்கத் துவங்கிய பின் மொத்தமாய் உருகிப் போயிருப்பதில் அதிசயம் ஏதும் இல்லையே.

 

ஏன் இந்த நிமிடம் கூட அவனைப் பார்க்கும் அந்த விழிகளில் அத்தனை காதல் கொட்டிக் கிடக்க பையன் பார்த்திருந்தால் மீண்டு வர முடியாமல் அந்த விழிகளுக்குள் தொலைந்தே போயிருப்பான்.

 

தன் வாழ்வின் ஒட்டு மொத்த நேசத்தையும் பாசத்தையும் அவனுக்கெனவே சேர்த்து வைத்திருப்பள்,போலும்.

அவளுக்கு தெரிந்த வரை அவள் மீதே அவளுக்கு இத்தனை நேசம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

 

“என்ன அப்டி பாக்கற..என் மூஞ்சில என்ன ட்ரெய்னா ஓடுது..?

 

“ஹான்..ஒன்னுல்ல நர முடி ஒன்னு இருக்கு..அதான் உத்து உத்து பாத்துட்டிருந்தேன்..” என்ற படி பையனை சமாளித்தாலும் அவளுக்குள் அடித்த பேரலையை மறைக்க வெகுவாய் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது நிஜம்.

 

“ஆமா உன் லவ்வர் எப்டி இருப்பான்..?” அவள் விழிகளைப் பாராது சிகைக்குள் விரல் நுழைத்து பின்னே தள்ளிய படி அவன் தொடுத்த வினாவில் அவள் விழிகள் மீண்டும் வந்து இரசனை சேர்ந்து கொண்டது.

 

“இந்த ராஜாசெல்லம் என்ன பண்ணாலும் அழகா இருக்கே..திருஷ்டி சுத்திப் போடனும்..” யோசித்தவாய் பெருமூச்சு விட பரந்த நெற்றியில் யோசனை ரேகைகள் படர கூர் விழிகளால் அவளைத் துளைத்துக் கொண்டிருந்தான்,பையன்.

 

“என்னாச்சு உனக்கு..? தனியா சிரிக்கிற..பெருமூச்சு விட்ற..என்ன தான் ஆச்சு..? நட்டு கழண்டு போச்சா..?”

 

“ச்சே..சும்மா தான்..” பட்டென பார்வையைத் திருப்பி சாந்தமாய் சொன்னவளை கண்டு பையனுக்கு தான் தலை வலித்தது.அவள் கோபம் கொண்டு கத்துவாள் என்று எதிர்பார்த்து இருந்தானே.

 

ஆனானப்பட்ட ரிஷியையும் அடிக்கடி ஆட்டுவிக்கிறது,அவளின் முரணான நடத்தைகள்.

 

“ஆமா நா கேட்ட கேள்விக்கு பதில காணோம்..?”

 

“என்ன கேட்டீங்க..? ஹான் என் லவ்வர் எப்டி இருப்பான்னு ல..” என்று சொல்லும் போதே அவளிதழ்களின் ஓரம் கொஞ்சமான் புன்னகை சேர்ந்து கொள்ள விழிகளில் ஒரு வித மினுமினுப்பு.

 

உள்ளத்தில் ஊற்றாய் உருவெடுக்கும் காதலை அவளின் விழிகள் உருப்போட்டு காட்ட அவளின் இந்த பரிமாணத்தை கண்ட பையனின் விழிகள் அவளின் விழிகளிலிருந்து நகரவேயில்லை.

அநியாயத்துக்கு என்றுமில்லாமல் அவள் அழகாய்த் தெரிய தன் எண்ணப்போக்கை உணர்ந்தவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கிட இதயம் படபடத்தது.

 

அடித்து பிடித்து சண்டை போட்ட தருணங்களில் கொஞ்சமும் எட்டிப் பார்க்காத தயக்கம் இந்த நொடி அவனுள்ளுக்குள் புகுந்து கொண்ட உணர்வு.

 

கடினப்பட்டு அவன் விழியகற்றி இயற்கை ஆராய எம்பிக்குதிக்கும் தன் இதயத் துடிப்பின் ஓசையை செவிமடுத்தவாறு தலை தாழ்த்தி அமர்ந்திருந்தவளுக்கு வார்த்தைகள் மொத்தமும் தொண்டைக்குழிக்குள் அடைந்து கொண்டு சதி செய்யும் உணர்வு.

 

ஓர விழிகள் அவளின் விம்பத்தை தொட்டு மீள ஏதோ ஒரு வித இம்சையாய் இருந்தது,பையனுக்கு.

 

புரிந்து கொள்ள முடியாத நிலையில் அவன்..

புரிந்தும் சொல்ல முடியாத நிலையில அவள்.

 

●●●●●●●●●

 

நேரம் பதினொரு மணி முப்பது நிமிடம்.

 

பேரூந்து ஒருவாறு ரணதீர புரத்திற்கு சமீபமாக ஒரு குலக்கலுடன் நின்றது,வண்டி.

 

பிடிமானம் எதுவுமின்றி விழப்போன கிருஷ்ணாவை தாங்கிப் பிடித்துக் கொண்ட சத்யாவின் பார்வை அவனை எரிக்க ” இதுக்கு என்னோட மண்ட ஒடஞ்சிருந்தா கூட பரவாலயே..” முணுமுணுத்த படி அசடு வழிய சிரித்து வைக்க சத்யாவின் எரிக்கும் பார்வையில் மாற்றம் இல்லை.

 

“கொஞ்சமாவது பொறுப்பிருக்கா..எப்ப பாரு திங்க வேண்டியது..அந்த பாப்கார்ன் விட்டுட்டு இந்த கம்பிய புடிக்க வேண்டியது தான இடியட்ட்ட்ட்..” வார்த்தைகளால் அர்ச்சிக்க அலுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்,கிருஷ்ணா.

 

“இந்த கொசுத்தொல்ல எப்ப தான் தீருமோ..”எனும் படியாய் இருந்தது,அவனின் முக பாவனை.

 

முகத்தை திருப்பி முன்னே நகர்ந்த சத்யாவைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டான்,கிருஷ்ணா.

 

“கொஞ்ச நேரம் இருக்குற நமக்கே அள்ளு விடுது..இவன் வீட்டாளுங்களுக்கு கோயில் கட்டலாம் போல இருக்கே..” புலம்பிய படி யன்னலுக்கு வெளியே பார்க்க ஏதோ வித்தியாசமாய் தெரிந்தது.

 

“ட்ரைவர்ணா எதுக்குன்னா வண்டிய நிறுத்துனீங்க..?” சத்யாவின் கேள்விக்கு திரும்பி பார்த்தவரின் முகத்தில் குழப்பம்.

 

“தம்பி..நீங்க சொன்ன ரூட் சரியா..? எதுக்கும் ஒரு தடவ போன் பண்ணி கேட்டுக்கோங்க..” என்றவருக்கு தலையசைத்தவாறு வெளியே பார்த்தவனின் விழிகளில் மெல்லிய அதிர்வு.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.03.16

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இல்ல ராங் ரூட் ல தான் போயிடுவாங்க போல … அய்யோ என்ன ஆகுமோ