
விடியும் முன்…!
அத்தியாயம் 06
நேரம் மணி எட்டு நாற்பத்தைந்து.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த வினோத்தை பார்க்கவே ராமிற்கு பாவமாய் இருந்தாலும் அவனால் என்ன செய்திட இயலும்..?
“சார் பேசாம வாசு சார்கு போன் பண்ணி சொல்லிரலாமா..?” என்ற கார்த்திக்கை உறுத்து விழித்தான்,வினோத்.
“சொல்லலாம்..சொல்லிட்டு உசுரோட இருக்க மாட்ட..சொல்றியா..?” என்று கேட்க அவசரமாய் தலையசைத்தவனின் முகத்தில் அத்தனை பீதி.
“இப்போ என்ன பண்றது சார்..?போன முற இப்டி நடந்ததுக்கு அவரோட பிஏ ன்னு கூட பாக்காம அன்னிக்கி அடிச்சாரே..இப்ப இப்டி நடந்தா என்ன பண்ணுவாரு..?சொன்னாலும் திட்டுவாரு..சொல்லலனாலும் திட்டுவாரு..சார் நா வேணா ஏதாவது ஐடியா சொல்லட்டா..?”
“என்ன..?”
“நம்ம ஆபிஸ்ல ஒரு பழம் இருந்தானே..அவன கூப்டு இத பாக்க சொல்லலாமா..? அவனுக்கு இது பத்தி நல்லா தெரிஞ்சிருக்கும்..பழம் மாதிரி இருந்தாலும் இந்த மாதிரி ஹேகிங் எல்லாத்துலயும் பயர் மாதிரி இருப்பான்..”
“ம்ம்..நானும் அவன பாத்து இருக்கேன்..அவன் கொஞ்சம் ஸைலன்டா இருந்தாலும் ரொம்ப நல்லா பர்பாம் பண்ணுவான்..அவன கூட்டுங்க..” என்று முடிக்கும் முன்னமே கார்த்திக்கின் விரல்கள் அழைப்பை தட்டி விட்டிருந்தது.
பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.அவர்கள் இருக்கும் பிரத்தியேக அறையின் கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வந்தான்,
அவன்.
அவனின் தோற்றம் ஒன்றும் அவர்களின் “பழம்” என்ற வார்த்தைக்கு மாறாக இல்லை.
வெண்ணிற புல் ஸ்லீவ் ஷர்ட்டை முழுக்கரத்தையும் மூடி மறைத்திருந்தது.ஷர்ட்டின் முதல் பட்டனை கூட திறந்து விட்டிருக்கவில்லை.
கேசத்தை எண்ணெய் வைத்து வழித்து வாரியிருப்பான் போலும்.ஆடாமல் அசையாமல் ஒட்டிக் கிடந்தது.
வந்தவனை பார்த்தவர்களின் முகத்தில் இருந்த பதட்டம் அவனுக்குப் புரிந்தாலும் வாயைத் திறந்து எதுவும் கேட்கவில்லை,அவன்.
“உன்ன நாங்க எதுக்கு வர சொன்னோம்னு தெர்யுமா..?” வினோத் கேட்க மறுப்பாய் அசைந்திருந்தது,அவன் சிரசு.
“உன் கிட்ட ஒரு ஹெல்ப் வேணும்..நீ சரியா செஞ்சு தந்தன்னா உனக்கு ப்ரோமஷன் போட்டுத் தர்ரேன்..அது மட்டுல்ல..கொஞ்சம் பணமும் தர்ரேன்..ஐ மீன் ஒரு டென் லேக்ஸ்..நீ பண்ண வேண்டியது யாருக்கும் தெரியாம இந்த ப்ராபளம க்ளியர் பண்ணி தர்ரது தான்..
புரியுதா..?”
“…………….”
“என்ன நீ பேன்னு முழிக்கிற..? ஆபிஸ்ல அத்தன பேர் இருந்தும் உன்ன கூப்டு இருக்கோம்னா இந்த விஷயம் எவளோ முக்கியம்னு புரிஞ்சிக்கோ..” என்கவே ஒப்புக் கொண்டு தலையசைத்தான்,அவன்.
●●●●●●●●●
ஆர்.கே தனியார் கல்லூரி வளாகம்.
கல்லூரியில் கட்டட வேலை பாதியில் நிறுத்தப்பட்டிருந்த கட்டடம் அது.கட்டட வேலை புரியும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட சம்பளக்குறைவால் அவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட இரண்டு வாரங்களாய் அந்த கட்டடத்தில் வேலை எதுவும் நடைபெறுவதில்லை.
நான்கு மாடிக் கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் இருக்கும் ஒரு ஒதுக்கமான பிரதேசம்.
பெரும்பாலும் அந்த இடம் கழிவறைகள் நிர்மாணிக்க ஒதுக்கப்ட்டு இருந்திருக்கலாம்.
அந்த சுவற்றின் ஒரு மூலையில் சாய்ந்து அமர்ந்து இருந்தவனின் விழிகளில் அப்பட்டமான பயம் குடியிருக்க தொய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு என்ன செய்வதென்று கொஞ்சமும் புரியவில்லை.
“மாப்ள..என்னடா பண்றது..? இப்டி ஆயிருச்சே..போலீஸ் வந்துருவாங்களோனு பக்கு பக்குன்னு இருக்குடா..” உடனிருந்தவன் சொல்ல அவனை ஜீவனின்றிய விழிகளுடன் ஏறிட்டான்,சேது.
“பேசாம இங்கிருந்து தப்பிச்சு ஓடிரலாமா மாப்ள..?”
“அப்டிலாம் பண்ண முடியாது பரமு..கடத்திட்டுப் போனது நாம தான்னு போலீஸ் கண்டுபுடிச்சா நாம தான் ஜெயில்ல களி திண்ணனும்..” என்றவனின் விழிகள் சுவற்றில் பட்டுத் தெறித்து காய்ந்து போயிருந்த இரத்தக் கறையில் ஒரு கணம் படிந்து மீண்டது.
“ஆனா நாம தான் கடத்துனோம்னு யாருக்கும் தெரியாதே..நாம ஆள தூக்கற டைம் யாரும் இருக்கலியே மாப்ள..”
“நமக்குத் தெரியாது பரமு..எழிலண்ணன் கடையில சீசிடீவி கேமரா வேற இருக்கு..அதுல ஒருவேள நாம தூக்கனது ரெக்கார்ட் ஆகி இருக்குமோ என்னவோ..? சார் போன் பண்ற வர நாம பதுங்கி இருக்குறது தான் நமக்கும் சேப்..கொஞ்சம் ஜாக்கரதயா தான் இருக்கனும்..”
“ம்ம்..” என்ற பரமேஷ்வரனின் மனதிலும் அத்தனை பயம்.அவர்களின் ஏரியாவில் இருக்கும் பெரிய ரௌடி ஒருவனின் கீழ் இருவரும் அடியாட்களாட பல வருடங்களாக பணி புரிந்தாலும் ஆட்களை கடத்தியது,இதுவே முதல் தடவை.
அதுவும் பரமு பலமுறை மறுத்தும் சேது உறுதியாய் நின்று ஒப்புக் கொண்டதற்கு ஒரே காரணம், அவன் தாயின் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பணத்தை புரட்டுவதற்கே.
அப்படி கடத்தியது தான் இருவரையும் பெரும் சிக்கலில் மாட்ட வைக்கப்போகினது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருப்பார்களோ என்னவோ..?
●●●●●●●●
சிக்னலில் வண்டி ஒரு குலுக்கலுடன் நிற்க யன்னல் ஊடு சுற்றும் முற்றும் வெளியே பார்த்த தர்ஷினியின் விழிகள் பேரதிர்வில் விரிந்து கொண்டன.
பின்னே, ஹெல்மெட் போடாது காதில் வயர்லெஸ்ஸை செருகி வாய்க்குள் ஏதோ பாடல் முணுமுணுத்தபடி தன் இருசக்கர வாகனத்தை முறுக்கிய படி வாசு அமர்ந்திருப்பதை கண்டால் அதிராமல் அவள் இருந்தால் தான் அதிசயம்.
சத்தியமாய் அவள் வாசுவை இவ்விடத்தில் எதிர்பார்க்காது இருக்க அதை அப்படியே படம் போட்டுக் காட்டின,அவள் விழிகள்.
“இந்த பைத்தியம் எதுக்கு இந்த ரூட்ல வருது..?அதுவும் நாம போறன்னு தெரிஞ்சு தான் வருதோ..? ஆனா ஸ்ரீ நம்ம கூட வர்லியே..அவ காலேஜ்ல தான இருப்பா..இவன் அவள விட்டுட்டு வர மாட்டானே..” யோசித்தவாறே திரும்பியவளின் விரல்கள் தன்னாலே மித்ரஸ்ரீயிற்கு அழைப்பெடுக்க அவளோ ஏற்கவில்லை.
பலமுறை எடுத்தும் அவள் ஏற்காதிருக்க பெருமூச்சுடன் அவள் எட்டிப் பார்க்கும் சமயம் வண்டி கிளம்பி இருந்தது.
அதே நேரம்,
அவர்களின் பேரூந்தை பின் தொடர்ந்து தான் தன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்,ராகவ்.
மனதில் பல வித எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க ரிஷிக்கு அழைப்பெடுக்கச் சொல்லி மனம் கூப்பாடு போட்டாலும் மித்ரஸ்ரீயை சந்தித்த பின்னரே தன் மனதில் ஓடும் எண்ணத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியிருந்தவனுக்கு ள் அதற்கான பொறுமை இல்லை என்பதே நிஜம்.
நேற்று தான் அவள் தோழியரிடமிருந்து தற் செயலாய் மித்ரஸ்ரீ ரணதீர புரம் செல்வதை கேள்விப்பட்டிருக்க தெரிய வந்த விடயங்களின் உண்மைத் தன்மையை ஆராய அவள் இன்றியமையாது போகவே பொறுக்காது கிளம்பி இருந்தான்,
அவளைத் தேடி.
சுற்றிச் சுற்றி பார்த்தாலும் அனைவரின் பயணமும் ரணதீரபுரத்தை நோக்கியதாய் இருக்க அவ்விடம் அவர்களுக்கு எதை தரக் காத்து நிற்கிறதோ..?
விதி வலியது.
●●●●●●●
உணர்ச்சி வசப்பட்டி அவள் விழிகள் சொட்டிய கண்ணீர்த்துளி ரிஷிக்கு புலப்படவில்லை.
கண்டிருந்தால் அவனின் வார்த்தைகளுக்கு முரணாய் அவன் செயலிருக்கும் என்பது சத்தியமான உண்மை என்றாலும் அதற்கான காரணம் என்னவென்று தான் இன்னும் பையனுக்குப் புரியவில்லை.
புரியவில்லை என்பதை விட அவனே தன்னை ஆராய மறந்திருக்கிறான் என்பது தான் பொருத்தமாக இருந்திருக்கும்.அவள் விடயத்தில் அவன் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கலாமோ..?
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமர்ந்தவளின் இதழ்கள் இறுக மூடிக் கொண்டன.அதன் பின் அவள் பார்வை ரிஷியின் புறம் திரும்பாவிடினும் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
வருடம் 2021 ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி.
(2021.04.08)
மெல்லிய வெளிச்சம் பரவியிருந்த அந்த இடத்தில் உள்ளுக்குள் பயந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்த படி நின்றிருந்தவளின் இதழ்களோ தோழிக்கு தன் பாட்டில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தன.
“பத்து நிமிடங்களில் வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு அரைமணி நேரம் ஆகியும் வரும் சுவடு கூட இல்லாமல் இருக்க திட்டாது போய்விடுமா அவளிதழ்கள்.
அந்த இடத்தில் பெரிதாய் ஆட்கள் இல்லாதிருக்க சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தை முகக்கவசம் மறைத்திருந்தது.
இரு கால்களும் ஒரே தடவையில் நிலத்தில் படாதிருக்க தவித்துக் கொண்டிருந்தவளின் பின்னே வந்து நின்றது,
வண்டியொன்று.
தன் கறுப்பு நிறக் காரில் இருந்து கெத்தாய் இறங்கி அவள் முன்னே வந்து நின்றது,ரிஷி தான்.
அவளுக்கு சத்தியமாய் அவன் யாரென்று தெரியாது.அதிலும் அந்த தனிமையில் அந்நிய ஆடவன் ஒருவனைக் கண்டதும் உள்ளூர சிறு பயமும் பரவியது.
அவனுக்கு அப்படி எந்த வித பயமும் இல்லை போலும்.எள்ளலான நகைப்புடன் அமர்த்தலாய் பார்த்து நின்றவனின் விழிகளில் ஒரு வித அலட்சிய பாவம்.
“இட்ஸ் பைன்ன்ன்ன்..லவ் பண்ணலாம்..லவ் பண்றது என்ன பொறுத்த வரயில தப்புன்னாலும் மத்தவங்க பண்றதுக்கு நா ஒரு நாளும் தட சொல்ல மாட்டேன்..”
“ஆனா லவ் பண்ணுனா அதுல வர்ர ப்ராப்ளத்த சால்வ் பண்ற அளவு தைரியம் இருக்கனும்..அந்த தைரியம் இல்லன்னா எதுக்கு லவ் பண்ணனும்..ஆப்சலூட்லி என்னோட தாட் படி லவ் பண்றது தப்பு..அப்டி வல் பண்ணுனவங்க அதுல வர்ர சேலன்ஜ பேஸ் பண்ற தைரியம் இருக்கனும்..நான் சொல்றது சரி தான..”
நீளமாய் சொல்லி முடித்தவனின் வதனத்தை “பைத்தியமா இவன்..?” எனும் ரீதியில் மொய்த்திருந்தது,அவள் பார்வை.முகக்கவசத்தை கீழிறக்கி தாடையில் தடுத்து வைத்திருந்தாள்.
திடுமென அவன் சாதாரண தொனியில் பேசியது அவளுக்கு பெரும் அதிர்வை கொடுக்க அதிரடியாய் பதில் கொடுக்க அவளுக்கு நா எழவில்லை,என்பதே உண்மை.
அவனின் நிதானமான வார்த்தைகளுக்கு மாறாய் பாவனைகளை வெளிப்படுத்தி நின்றது,
அவனின் முகம்.
“நா சொல்றது கரெக்ட் தான..நீங்களும் லவ் பண்ண முன்ன இதப் பத்தி யோசிச்சு இருக்கனும்..”
“எதேஏஏஏஏ..?”
“ஆமா சந்த்ருவ நீங்க தான லவ் பண்ணுனீங்க..அவன் இப்ப கைய அறுத்து கிட்டு ஹாஸ்பிடல்ல படுத்துருக்கான்..எனக்கு அப்டியேஏஏஏஏ..” என்றவனின் வார்த்தைகளில் அவளுடலில் சடுதியாய் ஓர் அதிர்வு.பையன் கூறியதி்ல் சந்த்ரு வைத்தியாசலையில் அனுமதிக்கப்ப்டுள்ளது என்பது மட்டுமே அவளின் சிந்தையை நிறைக்க முன்னே அவன் கூறியது எல்லாம் தற்காலிகமாய் மனதில் ஓடவில்லை.
“சந்த்ருக்கு என்ன ஆச்சு..? அவன் இப்போ எங்க இருக்கான்..?” கலவரம் மிகுதியில் கேட்டவளுக்கு கார்க் கதவை திறந்து விட யோசியாமல் ஏறிக் கொள்ள எள்ளலுடன் அவளைப் பார்த்தவாறு வண்டியைக் கிளப்பியிருந்தான்,ரிஷி.
வண்டி செல்லும் போது தான் அவளுக்கு யாரென்று தெரியாத நபரின் வண்டியில் தான் ஏறி இருக்கிறோம் என்பது அவள் மனதில் தோன்ற இனம் புரியா ஒரு வித பயம்.
சிலருக்கு அவசர கதியில் செய்து விடுவது தாமதமாக புரிந்து வேறு வேறு யோசனைகள் எழுந்து மண்டையை குடையும் அல்லவா..?
அந்த ரகத்தில் ஒருத்தி தான் அவளும்.
சந்த்ருவை பற்றி யோசித்துக் கொண்டிருந்த மனம் தற்போது தன் பாதுகாப்பை பற்றி சிந்திக்க விழிகளோ பக்கவாட்டாய் திரும்பி ரிஷியை ஏறிட்டன.
வீதியில் விழிகள் இருக்க அவன் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாலும் அவளுக்கு அத்தனை எளிதாய் நம்பிக்கை வரவில்லை.
“நீங்க சந்த்ரு ப்ரெண்ட் தானா..?” சந்தேகமாய் இழுவையுடன் அவள் கேட்க அவள் கேட்டதன் நோக்கம் அவனுக்கு புரியாமல் போய்விடுமா என்ன..?
“இல்ல..” என்றான், வேண்டும் என்று.
அவன் சொல்லி முடித்தது தான் தாமதம்,
சட்டென பாய்ந்து அவனின் தோற்பட்டையை கடிக்க அதை துளியும் எதிர்பார்க்கவில்லை
பையன்.
சரேலென வண்டியை நிறுத்தி விட்டு அவளை உறுத்து விழித்தவனின் முகத்தில் அப்படியொரு கோபம்.யாரும் தொடுவதே பொதுவாக அவனுக்கு பிடிக்காது,இதில் கடித்து வேறு வைத்தால்..?
“ஆர் யூ மேட்..?” கத்த அவளோ கதவைத் திறப்பதில் மும்முரமாய் இருக்க அவனின் கத்தல் எல்லாம் அவளின் செவிக்குள் நுழைந்தால் தானே..?
அவளின் செய்கையை கண்டு பற்களை நறநறத்தவாறு உயர் வேகத்தில் வண்டியைக் கிளப்ப ஆடிப்போனது,மித்ரஸ்ரீ தான்.
“நிறுத்து நிறுத்து நா எறங்கனும்..நிறுத்துடா..எதுக்குடா இப்ப என்ன கடத்திட்டுப் போற..?நிறுத்துடா..” கத்திக் கொண்டே மீண்டும் அவனின் கையை கடிக்க பார்க்க சுதாரித்து முழங்கையால் இலேசாக தடுக்கத் தான் செய்தான்.
அவள் வாயில் அடிபட்டு உதடு கன்றி விட சுள்ளென்று விழுந்த அடியில் அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன.
தொடரும்.
🖋️அதி..!
2024.03.03
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எல்லாரும் ஏன் அங்க போறாங்க … பயங்கர ட்விஸ்ட்டா போகுதே கதை …
💜