
விடியும் முன்….!
அத்தியாயம் 05
ரணதீரபுரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது,அந்த பேரூந்து.
தன் எண்ணத்தை செயலாற்றும் முனைப்புடன் சுற்றிக் கொண்டிருந்த தர்ஷினிக்கு சத்யா தடை விதித்திருக்க என்ன செய்வதென்று புரியவில்லை.
இரவு முழுக்க விழித்து கிடந்து ரணதீர வம்சத்தை பற்றி ஆராய வேண்டும் என்று அவள் எண்ணியிருக்க இப்போது அந்தக் கதை உண்மையா என்பதை கூட கண்டறிய தடை வந்திருக்க அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இந்து சொன்னது போல் அந்தக் கோயிலை அடைந்தால் அவளின் தேடலுக்கு கொஞ்சமேனும் விடை கிடைத்திடும் என்றிருக்க அதற்காக சத்யாவின் உதவியுடன் தோழியரில் யாராவது ஒருத்தரை அழைத்துக் கொண்டு செல்லலாம் என்று தான் அவளும் நினைத்திருந்தாள்.
இந்துவும் உடன் வந்திருக்காதிருக்க இப்போது தனியாய் செல்வதற்கும் பயமாய் இருந்தது.
வேறிடம் என்றால் தனியாகத் தேடிச் சென்றிருப்பாளோ என்னவோ..?
ரணதீரபுரத்தில் அமானுஷ்யம் உலாவுவதாக வந்த செய்தி அவளை தனியே செல்ல பயமுறுத்தியது.
தான் இருந்த இருக்கையில் ஒரு மூலையில் ஒடுங்கி அழைப்பெடுத்தாள் இந்துவிற்கு.அவளிடம் கேட்டால் ஏதேனும் வழி சொல்வாள் என்கின்ற எண்ணம்.
“ஹலோ இந்து..”
“என்ன தர்ஷ்..இவ்ளோ ஹஸ்கி வாய்ஸ்ல பேசற..”
“இப்போ அதான் முக்கியம்..சத்யா பயர் ஆகிட்டாரு..அதனால கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கனும்..அவருக்கு பயந்து தான் யாரும் பாட்டு கூட போடாம வர்ராங்க..அவரு இப்போ செம்ம பயர்ல இருக்காரு..”
“ம்ம்..சரி எதுக்கு போன் பண்ண..?”
“என்னாச்சுனா நா எப்பவும் போல இன்னிக்கும் லேட்டா வந்துட்டேன்..சத்யாக்கு கோவம் வந்துருச்சு..இப்போ அங்க கோயிலுக்கு எல்லாம் போக பர்மிஷன் தர்ல..வேணாம்னு சொல்லிட்டாரு..”
“எரும்ம மாடே..உனக்கு யார்டி அங்க வச்சே கேக்க சொன்னா..?ஊருக்கு வந்ததுக்கு அப்றமா கேட்ருக்கலாம்ல..”
“ப்ச்ச்..நீ வேற தனியா மாட்டுனா என் காது கிழிஞ்சிருக்கும்..அதான் அங்க வச்சே கேட்டுட்டேன்..இப்ப என்ன பண்றதுன்னே புரில..சப்போர்ட்டுக்கு கூட்டிட்டு போக யாரும் இல்ல..கூப்டேன்னாலும் யாரும் வர மாட்டாங்க..
ப்ச்ச்..ஏதாச்சும் ஐடியா கொடுடி..”
“ம்ம்..வெயிட்..வெயிட்..இது சரியா வரும்னு தோணுது..ஆமா நீ நைட் எங்க தங்கப் போறீங்கன்னு சொன்ன..?”
“அதான்டி அந்த கோயிலுக்கு பக்கத்துல இருக்குற வீட்ல தான்..ரொம்ப பெரிய வீடாம் அது..”
“ம்ம்..சரி நா சொல்றத கேளு..என்னோட தூரத்து சொந்தக்காரங்க ஒருத்தங்க அந்த ஊர்ல இருக்காங்க..அந்த வீட்ல ஒரு பொண்ணு இருக்கா..எங்க வீட்டுக்கு வந்து தங்கியும்இருக்கா..ரொம்ப நல்ல பொண்ணு அவ..அவ வீடு அங்க பக்கத்துல தான்..நா அவ போன் நம்பர அனுப்புறேன்..அவ கிட்டயும் உன்ன பத்தி சொல்றேன்..அவள கான்டெக்ட் பண்ணி பேசி அவ கூட போய் தேடு..”
“ஹேய்ய்ய்ய் வாவ்வ்வ்..
தேங்க்ஸ் டி..ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டி..ஆமா பொண்ணு பேரு என்ன..?”
“காவேரி..”
“சரி அப்போ நா அங்க போய் போன் பண்றேன்..” என்றவளை உடனிருந்த தோழியரின் பார்வை சந்தேகத்துடன் தான் தழுவி நின்றது.
ஒரு கையால் அலைபேசியை பிடித்து மறுகையை சற்றுக் குவித்து வாயின் மேல் வைத்து மறைத்துக் கொண்டு அவள் பேசியிருக்க அதைக் கண்டு சந்தேகம் வராவிடின் தான் அதிசயம்.
அதைப் புரிந்தவளாய்அசடு வழிய சிரித்து வைக்க அந்த நொடி ஒரு குலுக்கலுடன் நின்றது,
பேரூந்து.
●●●●●●●
“புள்ள காதலிச்சத ஏத்துக்காம போனா இப்டி தான் பண்ணிக்குவாங்க..காதல்னு வந்து நின்னப்பவே சம்மதம் சொல்லியிருந்தா இப்டி ஆயிருக்காதுல..”
“வரட்டு கௌரவம் பாக்கற மனுஷன்..பாவம் அவரால இங்க ரெட்ட உசுரு காவு போய் இருக்கு..”
“இந்தப்பொண்ணு கொஞ்சமாச்சும் அவ அப்பன் ஆத்தா பேச்ச கேட்ருக்க வேணாம்..இப்ப பாரு பெத்தவங்க கதி என்னாகப் போகுதுன்னு..ஒத்தப் புள்ளன்னு ரொம்ப பாசமா தான வளத்து விட்டாங்க..”
“காதலும் கத்திரிக்காவும் தராதரம் பாத்து தான வரனும்..ஜாதி விட்டு ஜாதி வந்தா இப்டி சங்கு ஊதிட்டு தான் நிக்க வேண்டி வரும்..”
“நா கூட இந்த போக்கத்தவள அந்த கஜேந்திரன் பய ஏமாத்துரான்னு தான் நெனச்சேன்..பாத்தா நெஜமாவே காதல் தான் போல..இலன்னா அவனும் சாவானா..?”
“தோப்பு வீட்டு பக்கம் போகாதன்னு சொன்னா கேட்டுக்க வேண்டியது தான..ரெண்டு பேரயும் அந்த பேய் தான் கொன்னுருக்கும்..”
அனைவரும் மாறி மாறிப் பேசிக் கொண்டது,ஒவ்வொன்றாய் அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஒற்றை மகள் செல்வியை பெற்று விட்டு அவளை பார்த்து பார்த்து வளர்த்தவருக்கு தன் மகளை உயிரற்ற சடலமாய் பார்த்ததே முழுதாய் கொன்று விட்டிருந்தது.
இதில் ஊராரின் பேச்சுக்கள் வேறு இன்னும் ரணத்தை கிளப்ப அமைதியாய் அழ மட்டுமே முடிந்தது,அவரால்.
சுவற்றோரம் அழுதழுது சுய நினைவின்றி ஒடுங்கிக் கிடந்த மனைவியைப் பார்க்கும் போது ஒரு பக்கம் பயம் வேறு.மகள் கஜேந்திரனைக் காதலிக்கும் விடயம் அவருக்குத் தெரிந்திருக்க தந்தையாய் அவளை கண்டித்து அவளை நல்வழிப்படுத்த அவர் மறக்கவில்லை.
நிச்சயம் அவருக்குத் தெரியும் தன் மகள் தற்கொலை தான் செய்து கொண்டாள்,என்பது.
அவள் அறையில் இருந்த கடிதம் சாட்சியம் கூறியதே.
பலமுறை எடுத்து சொல்லியும் அவள் கேட்டாளா என்பது சந்தேகம் தான்.
காதல் என்பது சரியா தவறா என்பது அவரவர் கொள்கை.கொள்கைகள் என்றும் சரியாய் இருப்பதுமில்லை.ஆனால்,காதலின் விளைவுகள் தன்னையே மாய்த்துக் கொள்ளும் பட்சத்தில் காதல் என்பது தவறு தான்.
இருக்கலாம்..
நீயின்றி நானில்லை என்று ஆயிரம் காதல் இருக்கலாம்…
அவளையன்றி அவளைப் பெற்றவர்களுக்கு யாரும் இல்லை என்கின்ற பொழுது அந்த “நான்” ஆக அவள் மாறிடுவாள் எனின் அவள் காதல் நிச்சயம் பிழை தான்.
ஆழமான ஆத்மார்த்தமான நேசங்களுக்கே அப்படி பிழையாவது காதலின்றி தன்னைப் போகப் பொருளாக பார்த்த ஒருவனுக்காக தன் உயிரை விட்டது மகா பாவம்.அந்த இடத்தில் தான் அவள் காதல் பிழையாகி நின்றது.
சொந்த பந்தங்கள் அவர்கள் வீட்டில் கூடி அழுது கொண்டிருக்க செல்வியின் தந்தை முருகேசனுக்கு துணையாய் யாரும் இல்லை என்பதே உண்மை.
அதே நேரம்,
உடம்பு அனலாய் கொதிக்க போர்வைக்குள் நடுங்கிய படி படுத்திருந்தான்,மருதவேல்.சில வருடங்களாக கஜேந்திரனிடம் பணி புரிந்து கொண்டிருப்பவன்.
அவன் வாழ்க்கையில் பலமுறை பயந்து இருந்தாலும் நேற்றைய தினம் போல் ஒரு நாளும் பயந்ததில்லை.
நினைக்கும் போதே இன்னும் அதே தருணங்களை கடப்பது போல் மனதில் தோன்ற உடல் நடுக்கம் எடுத்தது.
இருபத்தைந்து வயது திடாகாத்திரமான ஆண்மகன் என்றாலும் நேற்றிரவு பயந்து கொண்டு வந்து தாயின் மடியில் தான் படுத்திருந்தான்,பொழுது புலரும் வரை.
தாய்க்கும் மகனிடம் ஏதோ வித்தியாசமாய்த் தோன்றவே ஏதும் கேளாமல் தட்டிக் கொடுத்து தூங்க வைத்திருந்தார்.
கட்டிலில் மல்லாக்கப் படுத்து போர்வையால் முழுதாக தலை வரை போர்த்தி தலையணையை இறுகக் கட்டிக் கொண்டு விழி மூடியிருந்தவனை நிஜத்திற்கு திருப்பியது,
தாயின் குரல்.
“தம்பி மருது..” கத்தியவாறு அறைக்கதவை திறந்து கொண்டு வந்திட மெல்ல போர்வையை கழுத்து வரை இறக்கி சற்றே திரும்பிப் பார்த்தான்,குரல் வந்த திசையில்.
கையில் பாத்திரமொன்றுடன் நின்றிருந்தவரைக் கண்டதும் அவனிதழ்களில் சிறு முறுவலொன்று தோன்றிற்று.
“தம்பி இந்த கஞ்சி காச்சுருக்கேன்..குடிப்பா..காஞ்சு போன வாய்க்கு நல்லா இருக்கும்..” என்றவரின் கரம் அவனின் தலையை வருடி விட்டது.
“தம்பீஈஈஈஈ”
“என்னம்மா..?”
“உன் மொதலாளி”
“ஆமாம்ம்மா..அவருக்கு என்னாச்சு..?”
“அவரும் நம்ம கணக்கு மாஸ்டர் பொண்ணு செல்வியும் தோப்பு வீட்டு பக்கத்துல செத்து கெடக்குறாங்களாம்..”
“என்னம்மா சொல்ற..வெளயாடதமா..நேத்து அவரும் வீட்டுப் பக்கம் போனாரே..”
“உண்ம தான் தம்பி..பக்கத்து வீட்டு ராக்காயி இப்ப தான் சொல்லிட்டு அவ வீட்டுக்குள்ள போனா..”
“உண்மயத்தான் சொல்றியாமா..?”
“ஆம தம்பி..”
சட்டென எழுந்து அமர்ந்து கொண்டான்,அவன்.
கஜேந்திரனும் தன்னைப் போல எப்படியாவது தப்பித்து இருப்பான் என்றல்லவா நினைத்திருந்தான்.
ஆனால்,அவன் இறந்திருக்கானே.
கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது,
அவனுக்கு.கஜேந்திரனின் இறப்பின் மர்மம் தெரியவில்லை.
செல்வி..!
தற்கொலை செய்து கொள்வேன் என்று வழி மறித்து நின்றவளின் பேச்சை துளியளவாவது கணக்கில் கொண்டிருக்க வேண்டுமோ..?
காலம் கடந்து யோசித்தவனுக்கு குற்றவுணர்ச்சி குத்திக்கொல்ல அசதியை மீறி வெளியே செல்லத் தயாராகினான்,மருதவேல்.
●●●●●●●
ரயில் நகர்ந்து கொண்டிருந்தது.ரிஷியின் யோசனை முழுக்க மித்ரஸ்ரீயையே சுற்றி வர அவனின் அந்த உணர்வை ஆழம் பார்க்க விரும்பிடவில்லை,
பையன்.
ஒரு மனமோ அவளருகே செல் என வாதிட மறு மனமோ அதை மறுத்து நின்றது.இரு பக்கமுமாய் அவன் போராடிக் கொண்டிருக்க இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து கொண்டவனின் விழிகளுக்கும் மித்ரஸ்ரீயின் விம்பம் தான்.
தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்தவனுக்கு தன் இயலாமையை எண்ணி அவள் மீது தான் கோபமாய் வந்தது.
விடடுவிடுவென எழுந்து அவளருகே செல்ல அவளோ காதில் வயர்லஸ்ஸை செருகிக் கொண்டு ஏதோ ஒரு திரைப்படத்தில் ஆழ்ந்திருந்தாள்,சுற்றம் மறந்து.
அவன் வந்து நின்றது கூட அவள் கருத்தில் பதியவில்லை.அத்தனை இரசனையுடன் அவள் விழிகள் அலைபேசி திரையில் படிந்திருப்பது கண்டு அவனுக்கு இன்னுமே வெறியாகிற்று.
“என்ன பாக்கறாளோ தெரியல பைத்தியம்..” முணகியவாறு திரையை எட்டிப் பாரக்க அதில் இருந்த கதாநாயாகனைக் கண்ட அவனுள் சினமேறவும் தன்னை மூடிய நிழலைக் கண்டு அவள் திடுக்கிட்டு கலையவும் சரியாய் இருந்தது.
ஒரு நிமிடம் பயந்தாலும் மறு நொடி தன் அலைபேசியை எட்டிப் பார்த்தவனின் செயலில் கோபம் துளிர்க்க உறுத்து விழித்தாள்,பையனை.
“எதுக்கு என் போன எட்டிப் பாக்கறீங்க..? ஒரு மேனர்ஸ் இல்ல..காலேஜ் எல்லாம் முடிச்சுட்டு தான வந்திருக்கீங்க..இது கூட உங்களுக்கு சொல்லி தந்ததில்லயா..?”
அவனுக்கு திட்டுவதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டு இருப்பவளுக்கு வாய்ப்பு கிடைத்தால் அத்தனை எளிதில் விட்டு விடுவானா என்ன..?
“பைத்தியம்..வாய மூடு..ஓவரா பேசுன பல்ல ஒடச்சி கைல தந்துருவேன்..அப்றம் முப்பத்தி ரெண்டும் கைல தான் இருக்கும்..”
உச்ச கட்ட கடுப்பில் தான் சொன்னான்,அவனும்.
வேண்டுமென்றே தன்னை எரிச்சல் படுத்திக் கொண்டே இருப்பவள் மீது அவனுக்கும் கட்டுபாடின்றி கோபம் வரத்தான் செய்கிறது.
“ஏற்கனே ரெண்ட டாக்கர் புடுங்கிட்டாங்க..இருக்குறதே முப்பது தான்..இதுல எக்ஸ்ட்ரா ரெண்டு வேற எங்கிருந்து வரும்..?” தனக்குள் அவள் முணுமுணுக்க அது தெளிவாக அவன் செவிகளையும் உரசத் தான் செய்தது.
அவளை எந்த ரகத்தில் கொண்டு சேர்க்கவென்லு சத்தியமாய் அவனுக்கு தெரியவில்லை.
அடித்தாலும் அதட்டினாலும் அசராமல் இருந்தால் அவனும் என்ன தான் செய்ய..?
“பைத்தியமாடி நீ..? கொஞ்சமாச்சும் அறிவில்ல..மெண்டல் மாதிரி நடந்துக்குற..எப்ப பாரு என்ன டென்ஷன் படுத்திகிட்டு..”
“நா பைத்தியம் இல்ல நீங்க தான் பைத்தியம்..நா பாட்டுக்கு இருந்தேன்..நீங்க தான் வம்..” என்று கூறி முடிக்கும் முன்னே அவளை நெருங்கி பின்னூடு கரத்தை கொண்டு சென்று அவளின் சடையை பிடித்து இழுத்தவனை “ஆஆஆஆ..” என்று கத்திய வண்ணம் அண்ணாந்து பார்த்தவளுக்கும் அவனுக்கும் இடையில் ஈரடி இடைவெளி.
அவள் விழிகளுக்குள் தன் கத்தி முனைப் பார்வையை பாய்ச்சிட ஒரு கணம் அவளுக்கு சர்வமும் ஆட்டம் கண்டது.
“அமைதியா இரு..இல்லன்னா கொன்றுவேன்..” ஆழ்ந்த குரலில் அதட்டலுடன் சொல்ல தன் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அவன் விழிகளையே பார்த்திருந்தவளுக்கு திணறல் எடுத்தாலும் பதில் பேசத் தான் தோன்றிற்று.கரங்களோ தன் சடையை விடுவிடுக்க அவன் கரங்களுடன் போராடிக் கொண்டிருந்தாலும் விழிகள் மட்டும் அசையவேயில்லை.
“நா..நீ எ..என்..என்ன சொ..சொன்..சொன்னாலும் கே..கேப்பே..னா..?” வார்த்தைகள் தந்தியடிக்க திக்கிய படி பேசி முடித்தவளின் செயலில் அவனிதழ்களில் ஒரு வித மிடுக்கான இளநகை.
“என்ன வாயாட்ற..பல்ல ஒடச்சி கைல தந்துருவேன்..வாய மூடிட்டு இரு..”
“ம..நீ..நீங்..நீங்க கை..கைல த..தரும் வர நா..நா எ..என்ன பா..பாத்துட்டு இரு..இருப்பேனா..?” திக்கித் திக்கிக் கேட்டு முடிக்க ஏன் இந்த திணறல் என்று தெரியவில்லை,அவளுக்கு.
சரிக்கு சமமாய் வாயாடும் அவளின் வாய்த்துடுக்கு அவனின் ஆழ்ந்த விழியை ஊடுருவிய பார்வையின் முன் அடங்கி நின்றதோ என்னவோ..?
திக்கித் திக்கி தான் பேச்சு வந்தது.
“இட்ஸ் பைன்ன்ன்ன்..திரும்ப சொல்றேன் அமைதியா இரு இல்லன்னா இருக்கு உனக்கு..” அவன் சொல்லி விட்டு அவள் சடையை விடுவிடுத்து விட்டு சாவகாசமாய் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள அவனுக்கு முதுகு காட்டி நின்றவளின் விழியோரமாய் ஒரு துளிக் கண்ணீர் வழிந்தது, அதீத உணர்ச்சி வசத்தினால்.
●●●●●●●●
கண்ணாடிக்கதவை திறந்து கொண்டு பதற்றத்துடன் உளி நுழைந்தான்,வினோத்.
“சாரி கைஸ்..ஹெவி ட்ராபிக்..” என்றவனை கணினி மேசைக்கு முன்னே அமர்ந்தவாறு பார்த்த மற்றைய இருவரின் முகத்திலும் அத்தனை கலவரம்.
“வாட் ஹேப்பன்..? என்னாச்சு..? எதுக்கு ரெண்டு பேரும் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க..?”
“சார் நம்ம சிஸ்டம் க்ரேஷ் ஆகி இருக்கு..யாரோ ஹேக் பண்ணி இருக்காங்க..?”
தொடரும்.
🖋️அதி..!
2024.02.28
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அந்த பொண்ணு தற்கொலை … அப்போ கஜேந்திரன் …
ரிஷி மித்ரா எங்க போறாங்க தெரியலையே