
விசை-32
நான்கு வருடங்களுககுப் பிறகு…
“இதுக்குத்தான் அத்தனை முறை சொன்னேன். இறைவிகிட்ட கான்டிராக்ட் தரவேணாம்னு. எங்க கேட்குறீங்க நீங்க?” என்று மதி சப்தம் போட,
அவள் திட்டுகளையெல்லாம் ஒரு பொருட்டாய் எடுக்காமல், அவள் காலடியில் அமர்ந்து அவள் புடவை மடிப்புகளை சீர் செய்துக் கொண்டிருந்தான், முகில்வண்ணன்.
“கொஞ்சமாது என் பேச்சைக் கேட்குறீங்களா மாமா? பாருங்க.. இன்னும் அவ வரலை. வேலை வேலைனு ஓடுறா” என்று மதி மேலும் சண்டை பிடிக்க, மெல்ல எழுந்து நின்றவன், அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“எ..எனக்கொன்னும் வேணாம்” என்று அவள் கன்னத்தைத் துடைத்துக் கொள்ள,
மீண்டும் ஒரு முத்தம் வைத்தான்.
மீண்டும் அவள் துடைத்துக் கொள்ள, “வேணாம்னா போ” என்றபடி முன்னே வந்து, மண்டியிட்டு அவள் மனிவயிற்றில் முத்தம் வைத்தான்.
அவள் மணிவயிற்றில் துயிலிருக்கும் குழந்தை எட்டி உதைக்கவும், அவனை முறைத்துப் பார்த்தவள், “என் புள்ளைக்கும் வேணாமாம்” என்க,
பக்கென்று சிரித்த முகில், “அவன் பதிலுக்கு அப்பாவ செல்லமா தட்டித்தரான்டி.. உனக்குத் தெரியாது அதெல்லாம்” என்றான்.
“ஆமா ஆமா.. எனக்குத் தெரியாது” என்று அவள் கோபம் போல் கூற,
“மதிமா.. உனக்கு கோவப்பட வரலைடா பட்டு.. சிரிச்சுடேன். ஏன் கஷ்டப்படுற?” என்று அவள் தாடை பற்றிக் கேட்டான்.
அவனை முறைக்க முயன்று தோற்றவளாய்ச் சிரித்தவள், அவன் நெஞ்சில் தட்டி, “ஆனாலும் இறைவி இன்னும் வராதது எனக்கு வருத்தம் தான்” என்க,
“நான் மட்டும் இவ்வளோ வேலையிருக்குமுனு நெனச்சாடி தந்தேன்.. நம்ம ஃபிரெண்ட சப்போர்ட் பண்ணுவமேனு அவ கைல ஒப்படைச்சேன்” என்று கூறினான்.
அங்கு வந்த வள்ளி, “கண்ணு.. மதி.. ரெடியாடா?” என்க,
“ரெடி அத்தை” என்று பூரித்த முகமாய்க் கூறினாள்.
அவள் தலையில் இரண்டு வேப்பிலையை சொருகியவர், “கண்ணு படக்கூடாதுல்ல?” என்க,
முகில் புன்னகையாய் அவர்களைப் பார்த்தான்.
“சரி சரி கீழ போகலாம் வாங்க” என்று வள்ளி அவர்களை அழைத்துச் செல்ல,
கீழே வீராயி, செந்தில் காமாட்சி, மற்றும் இதர சொந்தங்கள் கூடியிருந்தனர்.
தர்ஷனும் சக்தீஸ்வரியும், ஒன்பது வயது பிள்ளைகளாய் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தனர்.
“சக்தி” என்று முகில் அழைக்க,
“முகி மாமா” என்று அவனிடம் ஓடி வந்தாள்.
அவளோடு தானும் வந்து நின்ற தர்ஷன், “ஏ சக்கி.. இந்த பாவாடையைப் போட்டுட்டு ஓடாத சொல்றேன்ல? விழுந்துடப்போற” என்று அதட்ட,
“அச்சோ.. மறந்துடுது தர்ஷ்.. இனி ஓடலை” என்றாள்.
குழந்தைகளின் பாசத்தில் புன்னகைத்தவன், “அத்தான் வரலையாடா?” என்று கேட்க,
“அப்பா குட்டீஸ ரெடி பண்ணிட்டு அம்மாவையும் கூட்டிட்டு வரேன் சொன்னாங்க. நானும் பாட்டியும் கிளம்பி வந்துட்டோம் முகி மாமா” என்று கூறினாள்.
அவள் கூறும்போதே, வாசலில் வாகனம் நிறுத்தும் சப்தம் கேட்க,
“ஐ அப்பா வந்துட்டாங்க” என்று வாசல் பக்கம் ஓடினாள்.
“இவ கேட்கவே மாட்டா மாமா. விழுந்துடப்போறாளோனு பயமாருக்கு” என்று பெரிய மனிதன் போல் தர்ஷன் கவலை கொள்ள,
“பாவாடையைத் தூக்கிப் பிடிச்சுட்டுத்தான் போறாடா. விழமாட்டா” என்று தான்யா கூறினாள்.
அனைவரும் வாயிலை நோக்க,
தனது மிடுக்கான உடல்மொழியுடனும், உயரத்திற்கு ஏற்ற நிமிர்வுடனும், கையில் மூன்று வயது பெண் குழந்தையை ஏந்திக் கொண்டு அய்யனாரும், அவனருகே, அழகிய பதுமையாய், அய்யனார் ஏந்திய குழந்தையின் இரட்டை சகோதரனை ஏந்தியவாறு இறைவியும், அவர்களை இணைத்தபடி சக்தியும் உள்ளே வந்தனர்.
அவர்கள் குடும்பமாய் வருவதைப் பார்க்க கண்ணிரண்டு போதவில்லை அனைவருக்கும்.
“அண்ணி.. பிள்ளைகளுக்கு வீட்டுக்குப் போனதும் சுத்திப்போட்டுடுங்க” என்று வள்ளி கூற,
“நானும் அதான் நினைச்சேன் அண்ணி’ என்று காமாட்சி கூறினார்.
“தர்ஷ்.. குட்டீஸ் வந்தாச்சு” என்று சக்தி உற்சாகமாய்க் கூற,
தர்ஷன் சென்று இறைவியின் கையிலிருந்த இரண்டு வயது ஆண் குழந்தையான இளம்பருதியையும், சக்தி, தன் தந்தையிடமிருந்து, இதழினியை வாங்கிக் கொண்டாள்.
“பாப்பா பத்தரம் குட்டிமா” என்று இறைவி கூற,
“அதெல்லாம் நானும் சக்கியும் பத்திரமா பார்த்துப்போம் சித்தி. யூ டோன்ட் வொர்ரி” என்று தர்ஷன் கூறினான்.
ஆம்! அது மதிவதனியின் வலைகாப்பு வைபோகம்..
இந்த நான்கு வருடங்கள் என்னற்ற அழகிய மாற்றங்களைக் கொடுத்திருந்தது.
அய்யனார் மற்றும் இறைவி, திருமணம் முடிந்த அடுத்த வருடம், முகில் மற்றும் மதிக்கு அத்தனை விமர்சியாய் திருமணம் நடந்து முடிந்தது.
அடுத்த வருடம், இறைவி கருதறித்துத் தன் இரட்டை செல்வங்களை இப்புவி சேர்த்து, அடுத்த இரண்டு வருடத்தில் தன் பட்டப் படிப்பையும் முடித்து, தனது தொழிலையும், அவ்வூரே புகழ் பேசும்படி நிறுத்தியிருந்தாள்.
அவளைத் தூற்றிய சிலரின் பிள்ளைகள் கூட, அவளது திறமையால் ஈர்க்கப்பட்டு தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு மருதாணி போடவும், இதர அலங்காரங்கள் செய்யவும் அவளையே அழைத்தனர். தங்கள் வீட்டு வாசற்படி மிதிக்க விடாது தடுத்தவளை, கூடத்தில் அமர்த்தி உபசரித்து, பனிவாய் பேசி அனுப்பி வைக்கும்படியான நிலைக்கு வந்தனர்.. வரவைத்தாள் என்றால் தகுமோ?
அவளது தந்தை கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு, சிரமத்துடன் தன் உயிர்த் துறந்திருக்க, அவரது அன்னைக்குப் போக்கிடம் இல்லாமல் போனது. நான்கு பிள்ளைகளில் ஒற்றை மகனென்னு மார்தட்டிக் கொண்டவருக்கு மகனுடனான வெளியூர் வாழ்க்கைப் பிடிக்காமல் போனது பெரும் சிரமமானது.
வெளியூரில் அந்த இடத்திற்கு ஏற்ப வாழப் பழகிய இறைவியின் தம்பிக்கும் அன்னையின் முரண்பாடுகளால் சிக்கல்கள் தான். இருந்தும் பெற்ற கடமைக்காக பார்த்துக் கொண்டவனிடம் சண்டை பிடித்து, வீம்புடன் தனியாக வந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
எத்தனை நடந்தாலும் சிலரை மாற்ற முடிவதில்லையே இது விதியாலும்… இன்றும் இறைவியைப் பற்றிக் கேட்டாலோ, பார்த்தாலோ அவர் வாய் அமைதியாக இருப்பதில்லை. ஆனால் அவருடன் சேர்ந்து ‘உம்’ கொட்டிக் கதை கேட்டு, இறைவியைக் குறை பேசத்தான் அவருக்கு சரியாய் ஆள் இல்லை. அத்தகைய நிலையைத், தன் உழைப்பால் கொண்டு வந்திருந்தாள்.
அனைத்தும் அழகோவியமாய்ச் சென்றது. செந்திலுக்கு, திருமண முடிந்து மூன்று வருடமானபிறகும் மகள் கருதறிக்காததுதான் பெரும் அச்சமாக இருந்தது. ஆனால் அவளது புகுந்த வீட்டில் அதுகுறித்து ஒரு சொல் கூட அவளைப் பதம் பார்க்காதபடி முகில் அவளை அத்தனை பாதுகாப்பாய் பார்த்துக் கொண்டான்.
இருவரும் தங்கள் காதல் வாழ்வில் தினம் தினம் பல பரிணாமங்கள் கண்டு மகிழ்ந்து, தங்கள் மகிழ்வினை இரட்டிப்பாக்கும்படியாய், தற்போது மதியும் கருதறித்திருந்தாள்.
சந்தோஷமே பிரதானமாய் அவ்வில்லத்தில்….
அனைவரும் கூடிவிட, வளைகாப்பு வைபோகமும் இனிதே துவங்கியது.
அனைவரும் பெண்ணவளுக்கு வளைபூட்டி முடிக்க, முகில் தன்னவளுக்காக வாங்கி வந்த, தங்க வளைகளைப் பூட்டி அவள் நெற்றியில் முத்தமிட்டு, தன் இன்பம் வெளிப்படுத்தினான்.
பிறந்தவீட்டிற்கென்று அவளை அனுப்பவே முடியாதென்று திட்டவட்டமாய் முகில் கூறிட, அவளைப் பார்த்துக்கொள்ளும் ஆட்கள் தன் வீட்டில் குறைவென்பதால் செந்திலும் அதற்கு உடன்பட்டு அமைதியானார்.
அனைவரும் விழாவை இனிதே முடித்துக் கொள்ள,
“வரிசையா நல்ல நியூஸ். அத்தானுக்கு ப்ரமோஷன், மதி கன்சீவ் ஆனது, இரா தொழில்ல எக்ஸ்ட்ரா முன்னேறி பக்கத்து டிஸ்டிரிக்ட்ஸ் வரை போனது, தர்வின் மாமாக்கு ப்ரமோஷன் கிடைச்சதுனு வரிசையா நல்ல நியூஸ்.. அடுத்த யாரு நல்ல நியூஸ் தரப்போறீங்க?” என்று தேநீர் சுவைத்தபடி முகில் கேட்க,
“திரும்ப முதல்லருந்து ஆரமிப்போம்.. இறைவி அடுத்த குட் நியூஸ் சொல்றியா?” என்று தான்யா கேலியில் இறங்கினாள்.
இறைவி விழிகள் விரித்து அதிர்ந்து நோக்க, குடித்துக் கொண்டிருந்த தேநீர் அய்யனாருக்குப் புறை ஏறியது.
“ஐயா பாத்து சாமி” என்று காமாட்சி அவன் தலையில் தட்டிக் கொடுக்க,
“போதும் சாமிகளா.. எனக்கு இருக்குற பிள்ளைகளே போதும்” என்று கும்பிடு போட்டுக் கூறினான்.
“என்ன அத்தான்.. ரொம்ப பதறுறீங்க? பிள்ளைகள் அம்புட்டு அட்டூழியம் பண்றாங்களா என்ன?” என்று தான்யா கேட்க,
“ச்ச.. என் பிள்ளைங்க எல்லாம் தங்கம்” என்று கூறினான்.
“அப்ப பொண்டாட்டி தான் படுத்துறா போல” என்று மதி கேட்க,
“நாத்துனாரே.. என்ன கொழுப்பா?” என்று இறைவி இழுவையாய்க் கேட்டாள்.
மீண்டும் சிரிப்பலை தொடர, “சரி சரி மேட்டருக்கு வாங்கய்யா.. எதுக்கு அவ்ளோ பதட்டமாம் தம்பிக்கு?” என்று தர்வின் கேட்க,
தன்னவளைப் பார்த்தவன், “அவ பாவம் அண்ணா.. போதும் போதும்.. இதுவே ரெட்ட பிள்ளை.. போதும் போதும்னு பட்டுட்டா.. என்னால திரும்பவெல்லாம் என் இறைவிய அவ்ளோ கஷ்டத்துல பார்க்க முடியாது” என்று கூறினான்.
அவன் வார்த்தைகளை எதிர்பாராத இறைவி, வியந்து போய் தன்னவனை நோக்க,
“ஓஹோ.. அப்புடி.. ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்” என்று முகில் கேலி செய்தான்.
“மேடம்.. ஃப்ரீஸ் மோட்லருந்து ரிட்டர்ன் வாங்க” என்று மதி கூற,
தன்னவனிலிருந்து பார்வையைப் பிரித்தவள், தன் சிகையை மெல்ல கோதிக் கொண்டு, திரும்பினாள்.
மீண்டும் பேச்சு கலகலப்பில் தொடர, இரவு உணவையும் முடித்துக் கொண்டு, அனைவரும் அவரவர் இல்லம் திரும்பினர்.
“அம்மா.. நானும் பாட்டியும் பாப்பா தம்பியை இன்னிக்கு வச்சுக்கட்டுமா? பாட்டி நிறைய கதை சொல்றேன் சொல்லிருக்காங்க” என்று சக்தி கூற,
“வேணாம் குட்டிமா.. பாப்பா தம்பி நைட்டு அழுதா பாட்டிக்கு சிரமம்” என்று இறைவி கூறினாள்.
“அதுசரி.. நான் பெத்தது தான் ஒன்னு. எங்க அண்ணம் பிள்ளைகளையெல்லாம் சின்ன வயசுலருந்தே வளத்து விட்டவமா. நீ குடுத்துட்டுப் போ. காலைலருந்து உஸ்ஸுனு உட்காரலை நீ தான்” என்று காமாட்சி கூற,
மென்மையாய் புன்னகைத்தவள், “சரி.. பிறகு நைட்டு அழுதான்னு என்னைச் சொல்லக்கூடாது அத்தை” என்று சிரித்தவளாய்க் குழந்தைகளைக் கொடுத்தாள்.
அனைவரும் அவரவர் அறை செல்ல, குளித்து இரவு உடை மாற்றிக் கொண்டு வந்த இறைவி, கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்த தன்னவனின் அருகே சென்று அமர்ந்தாள்.
கட்டிலில் அமர்ந்தபடி அறையில் இருக்கும் புகைப்படங்களில் அவள் பார்வை படிந்தது.
அவள் பட்டம் வாங்குவதைப் போல் அவள் வரைந்த வரைபடமும், அவள் உண்மையில் பட்டம் வாங்கும்போது எடுத்தப் புகைப்படமும் ஒன்றாய்த் தொகுக்கப்பட்டு மென்தகடாக அங்கே இருந்தது. அதே போல், அவள் இளவரசிகள் அணியும் உடையில் இருப்பதைப் போல் அவள் வரைந்திருந்தது, அவர்கள் ஊரில் கல்லூரி ஒன்றில் ஊக்கப் பேச்சுக் கொடுக்கும்போது எடுத்தது, என்று அவள் ஆசைகள் என்ற கோப்பில் வரைந்தவைகள் யாவும், நிகழ்வில் நடந்த புகைப்படங்களோடு தொகுக்கப்பட்டு, மென்தகடுகளாய்த் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆசைகள் எல்லாம், நிகழ்வுகளாகக் காரணமானவன், அவளருகில்…
அவனிடம் பேச வேண்டுமென பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என்க,
“அப்ப படுடா” என்று பார்வையை அதனிலிருந்து மாற்றாமல் கூறினான்.
“ப்ச்.. போலீஸ்காரனைக் கட்டினது தப்பா போச்சு.. எப்பப்பாரு ரெண்டாந்தாரம் பொழப்பாத்தான் இருக்கு” என்று முனகியவளாய்ப் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தாள்.
அவள் புலம்பலில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன், அடுத்த பத்தாவது நிமிடம், அவளைப் பின்னிருந்து அணைத்து காதுமடலில் முத்தமிட, “எனக்கொன்னும் வேணாம். போங்க. போய் உங்க வேலையைப் பாருங்க” என்று வீராப்பாய்க் கூறிக் கொண்டாள்.
“என் வேலையைத்தானடி பார்க்குறேன்?” என்றவன் அவளை இழுத்துத் தன்மீது போட்டுக் கொள்ள,
அதிர்ந்துபோய் அவன் நெஞ்சில் முட்டிக் கொண்டவள், “ஆ.. நீங்க கைது செய்ற அக்யூஸ்ட் இல்ல நானு.. இவ்ளோ ஹார்ஷா இழுக்குறீங்க?” என்று கோபம் போல் கூறினாள்.
“எதுக்குடி சிடுசிடுக்குற?” என்று பாவம் போல் சொன்னவன், மென்மையாய் அவளைப் பற்றிக் கொள்ள,
‘உடனே முகத்தை பாவமா வச்சுட்டு நம்மலை கரைக்க வேண்டியது’ என்று மனதோடு முனகினாள்.
“என்னமோ பேச வந்தியே?” என்று அவன் கேட்க,
“ஆசையா பேச வந்தேன்.. நீங்க உங்க முதல் தாரத்தையில்ல மடில வச்சு கொஞ்சிட்டு இருந்தீங்க?” என்று கேட்டாள்.
“என்ன பேச்சு பேசுறடி நீ? அமுக்குனி” என்று அவள் இதழோடு இதழ் மோதியவன், “என்னனு சொல்லேன்டி..” என்று கெஞ்ச,
“ச்ச.. ஊரையே ஆட்டிவைக்கும் போலீஸ்கார் என்கிட்டக் கெஞ்சுரார்.. கேட்க நல்லாத்தான் இருக்கு” என்று கூறினாள்.
“ஏன்னா ஊருக்கு நான் போலீஸ்காரர்.. உனக்கு வீட்டுக்காரர்” என்று அவன் கூற,
கிளுக்கிச் சிரித்தவள், “நிஜமாவே அவ்ளோ ஃபீல் பண்றீங்களா?” என்றாள்.
“எதுக்கு?” என்று அவன் கேட்க,
“என் டெலிவரி டேஸ் நினைச்சு” என்றாள்.
“ஆமா.. இல்லாமலா? அன்னிக்கு என் கையப் பிடிச்சுட்டு செத்துடலாம் போல இருக்குனு நீ சொன்ன வார்த்தை.. என்னால மறக்க முடியாதுடி.. ச்ச.. என்ன சொல்லிட்ட ஒரு நிமிஷத்துல? எனக்கு தான் இன்னவர அதை நினைச்சாலே உசுரு போகுது.. விளையாட்டுக்குக்கூட இனி அப்படி சொல்லிடாத இறைமா” என்று அவன் கூற,
வாஞ்சையோடு அவனைப் பார்த்தவள், “அந்த நேர வலி.. சொல்லிட்டேன்.. அதை ஏன் நினைச்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“நீ சொல்லிட்டு மறந்துட்ட. நான் கேட்டுட்டேனே.. மறக்க மாட்டுது” என்றவன், அவள் முகம் வருடி, “ஹாப்பியா இருக்கியா இறைமா?” என்க,
“இல்லாமலா?” என்றாள்.
“என்னை எப்படி நீங்க லவ் பண்ணீங்க?” என்று இறைவி அவன் நெஞ்சில் கன்னம் பதித்து படுத்தபடி கேட்க,
“உன் காதலோட விசை என்னை இழுத்துடுச்சுடி பொண்டாட்டி.. அதான் லவ் பண்ணிட்டேன்” என்றான்.
மெல்ல சிரித்தவள், “ரொம்ப ரொம்ப பிடிக்குது போலிஸ்கார்” என்க,
“எனக்குக்கூடத்தான்..” என்றவனாய் அவள் முகம் பற்றினான்.
அவள் கண்கள் நோக்கி அவன் இறங்கும் நேரம், அறை கதவு தட்டப்பட,
பட்டெனக் கண் திறந்தவள், “இதோ வந்தாச்சுல?” என்று சிரித்தபடி எழுந்தாள்.
கொண்டையை அள்ளி முடிந்துக் கொண்டு அவள் கதவைத் திறக்க,
நால்வரும் அறை வாசலில் நின்றிருந்தனர்.
“அம்மாடி.. தெரியாம சொல்லிட்டேன்.. புடி.. உன் புள்ளைக உன்னைக்கூட தேடலை.. அப்பா அப்பானு தான் கேட்குதுங்க” என்று காமாட்சி கூற,
அய்யனாரும் எழுந்து அறை வாசல் வந்தான்.
இருவரும் ஆளுக்கொரு பிள்ளைகளை வாங்கிக் கொள்ள,
சக்தியும் என்ன நினைத்தாளோ? “நானும் அப்பா அம்மாகூடவே படுத்துக்குறேன் பாட்டி” என்றாள்.
“கட்டில்ல இடம் போதாதுடி கண்ணு” என்று காமாட்சி கூற,
மகளின் முகம் சுனங்குவது பிடிக்காதவனாய், “பட்டு நீ வா. கட்டிலை ஓரம் போட்டுட்டு எல்லாரும் கீழ படுக்கலாம்” என்று அய்யனார் கூறினான்.
“ஓகே ப்பா” என்று உற்சாகமாய் சக்தி கூற,
சென்று கட்டிலை ஓரம் போட்டு கீழே பாய் விரித்து தலையணைகளை அடுக்கினான்.
இறைவி, இளம்பருதி, இதழினி, அய்யனார், சக்தி என்று வரிசையாய் அவர்கள் படுத்துக் கொள்ள,
“ரெண்டு பொண்ணுங்களையும் பக்கத்துல போட்டு சீராட்டுங்க” என்று மகள்கள் இருவரும் தந்தையை அணைத்துப் படுத்திருப்பது கண்டு முனகினாள்.
“எம்புள்ள மட்டும்? ரெண்டுக்கும் சேர்த்து வச்சு உன்னை இறுக்கிட்டுத்தான படுத்திருக்கான்?” என்று அன்னையை மாரோடு முட்டிக் கொண்டு படுத்துறங்கும் பரிதியைப் பார்த்து அய்யனார் கூற,
மகனின் தலைகோதியவள், “நிறைவா இருக்கு” என்றாள்.
மனையாளைப் பார்த்தவன், அவள் அச்சுப் பிரதிகளாய் தன்னோடு உறங்கும் மகள்களுக்கும் தட்டிக் கொடுத்து, அவளைப் பார்த்து புன்னகைக்க,
தன்னவனுக்கு பறக்கும் முத்தம் வழங்கியவள், மனநிறைவோடு துயில் கொண்டாள்.
துயிலிருப்போர் வாழ்வில் சந்தோஷம் தூங்காது விழித்திருக்க வேண்டி வாழ்த்தி, நாமும் விடைபெறுவோம்…
-சுபம்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Story very nice sis… Girl and boy Friendship rompa azhaka sollirukinga sis… Story narration super sis.. 🙂