Loading

விசை-31

அரங்கம் அதிர பாட்டுச் சத்தம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“மதி அத்தே.. எனக்கு இது இல்ல. அந்த க்ரீன் செயின் போட்டு விடுங்க. அம்மாவும் நானும் அப்பத்தான் மேட்சிங் மேட்சிங் இருப்போம்” என்று சக்தீஸ்வரி கூற,

பச்சைப் பட்டுடுத்தி மதுரை மீனாட்சியைப் போல் தயாராக இருந்த இறைவி, மகளைக் கண்டு புன்னகைத்தாள்.

“சரிடி அழகுராணி” என்று அவள் குண்டு கன்னங்களில் முத்தம் வைத்துக் கொஞ்சிய மதி, அவள் கேட்ட சங்கிலியை அணிவித்து அலங்காரம் செய்து முடிக்க,

“பொண்ணு ரெடியாங்க?” என்று கேட்டபடி முகில்வண்ணன் உள்ளே வந்தான்.

வந்தவன், அழகிய சிவப்பு நிறப் புடவையில் அம்மன் சிலைபோல் நின்றுகொண்டிருந்த தன்னவளின் அழகில், அப்படியே உறைந்து போய் நின்றுவிட,

“எந்த பொண்ணு கேக்குறீங்க முகி மாமா? நாங்க எல்லாம் ரெதி” என்று கண்கள் சிரிக்கக் கூறி அவனை நிகழ்வுக்கு இழுத்து வந்தாள், சக்தி.

அவன் பார்வையில் தன் சேலைக்கு நிகராய் முகம் சிவந்து நின்ற மதியைப் பார்த்து, கலுக்கென்று சிரித்த இறைவி, “டேய்.. இன்னிக்கு பொண்ணு நான்தான்டா” என்க,

கனவில் மிதந்துகொண்டிருந்த இருவரும் நிகழ்வுக்கு வந்தனர்.

“ஹே.. இ..இறைவி. நான் உன்னைத்தான் கேட்டேன்” என்று முகில் கூற,

“ம்ம்.. சரிடா ராசா. நம்புறேன்” என்றபடி எழுந்தவள், “எப்படி இருக்கேன்?” என்று கேட்டாள்.

“உனக்கென்னடா? பொம்பள கெட்டப் சும்மா நச்சுனு இருக்கு” என்று முகில் கூற,

சரசரவென்று கோபம் கொண்டு முறைக்கும் பாவையைக் கண்டு, “ஏடாகுடமா சொல்லி உங்க அத்தான்கிட்ட வாங்கிக் கட்டிக்காதீங்க மாமா” என்று சிரித்தபடி மதி கூறினாள்.

“அடடா.. இதுவேற மறந்து போகுது” என்று முகில் கூற,

“இருடா.. அவர்கிட்ட சொல்லி உன்னை ஷூட் பண்ணச் சொல்றேன்” என்று கூறிய இறைவியைத் தொடர்ந்து, “டிஷ்கோல்” என்று கையில் அபிநயம் பிடித்து சக்தி கூறினாள்.

“அடிப்பாவி.. மாமன சுட்டுப்புட்டியே” என்றபடி அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு கன்னத்தை வலிக்காமல் கடித்து வைத்தான்.

“பிள்ள கன்னத்தைக் கடிக்காதீங்க” என்று மதி கூற,

‘அப்ப உன் கன்னத்தைத் தரியா?’ என்று இதழசைத்தான்.

“டேய்.. என் புள்ள இருக்காடா” என்று இறைவி கூற,

வெட்கம் கொண்டு சிவந்த மதி, “பிள்ளையத் தாங்க நான் போறேன்” என்று சக்தியைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டாள்.

இருவருமே சென்றவளைக் கண்டு சிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் நோக்க, முகில் கண்களில் கனிவு கூடியது.

தோழியை நெருங்கி, தலையில் கரம் வைத்தவன், “சந்தோஷமா இருக்கியா இரா?” என்று பரிவாய்க் கேட்க,

“இல்லாமலா?” என்று புன்னகையாய்க் கேட்டாள்.

“இருக்கனும்.. எப்பவுமே.. என் இரா முகத்துல சிரிப்பை மட்டுமே தான் நான் பாக்கனும்” என்று நெகிழ்வாய் அவன் கூற,

கலங்கத் துடித்தக் கண்களைக் கட்டுப்படுத்தியவளாய், அவனை அணைத்துக் கொண்டு, “தேங்ஸ்டா” என்றாள்.

“ப்ச்.. என்னமாது சொல்லி என்னைத் தள்ளி வச்சுடாத இரா” என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தபடி அவன் கூற,

“தள்ளி நிறுத்துற அளவு தெம்பு எனக்கில்ல முகில்.. தள்ளிப்போகுமளவு நீ வேத்தாளும் இல்ல” என்று மனமாரக் கூறினாள்.

அப்போது உள்ளே வந்த வீராயி பாட்டியும், வள்ளியும், இருவரையும் பரிவான புன்னகையுடன் பார்த்தனர்.

“ராசா.. எம்மகளத் தரியா? மருமகன் அங்க காத்துட்டு இருக்கானாம்” என்று வள்ளி கூற,

தோழியை விடுத்த பெண்மணிகள் இருவரையும் கண்டவன், அவளைப் பார்த்து, “உன்னவர் வெயிட்டிங்காம்” என்றான்.

அதில் நாணம் கொண்டு புன்னகைத்தவள், தலையசைக்க,

அவளை அழைத்துக் கொண்டு, மணப்பெண் அறைவிட்டு வெளியே வந்தனர்.

மருமகளின் எழிலில் வியந்துபோய் வந்த காமாட்சி, “அம்மாடி.. அழகா இருக்கடா கண்ணா” என்று அவள் கன்னம் வழித்து திருஷ்டி எடுக்க, நாணம் கொண்டு புன்னகைத்தவளாய்ச் சிரம் தாழ்த்தினாள்.

இறைவி பக்கமென்று சொந்தங்கள் முகில் குடும்பத்தைத் தவிர யாருமே இல்லை. காமாட்சிப் பக்கமும் நெருங்கிய சொந்தங்கள் சிலர், மற்றும் அவர் கணவனது உற்ற நண்பர்களைத் தாண்டி யாரும் வந்திருக்கவில்லை. ஆனாலும் எளிமையாக, நிறைவாகவே அனைத்தும் நடத்தப்பட்டது.

மணமேடையில், பட்டுவேட்டி சட்டையில் நிமிர்ந்து, மிடுக்குடன் அமர்ந்திருந்த கற்குவேல் அய்யனாரின் அருகே, இறைவி அமர்த்தப்பட, தனது மாலையைச் சரிசெய்தபடி அவள் பக்கம் லேசாய்ச் சாய்ந்தவன், “மேடம் டெகரேஷன்ஸ்லாம் நல்லா பண்ணிருக்கீங்க” என்று கூறினான்.

ஆம்! தங்கள் திருமணத்திற்கு அனைத்தையும் இறைவிதான் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தாள். தன் உழைப்பைத் தன்னவன் பாராட்டிக் கேட்பதில், உள்ளம் உவகையில் துள்ளிக் குதிக்க, “தேங்க்ஸ்” என்று புன்னகையாய்க் கூறினாள்.

அவள் கண்களின் உற்சாகம் கண்டு, மனமாரப் புன்னகைத்தவன், “ஹாப்பியா இருக்கியா?” என்க,

“இதென்ன முட்டாள்தனமானக் கேள்வி” என்றாள்.

“ஹாப்பியா இருப்பியா என்னோட?” என்று அவன் கேட்க,

“இது அதைவிட மடத்தனமானக் கேள்வி” என்றாள்.

“தம்பி மந்திரத்தைச் சொல்றேளா?” என்று ஐயர் கேட்க,

சுற்றியிருந்த அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.

அதில் அய்யனாருக்கே வெட்கம் வந்துவிட, நிமிர்ந்து அமர்ந்துத் தன் பின்னந்தலையைக் கோதிக் கொண்டான்.

மகனின் முகம் காட்டும் பூரிப்பைக் கண்டு, ஒரு தாயாய்க் காமாட்சி மனம் குளிர்ந்து போனார். “என் மகனை இத்தனை சிரிச்சு நானே பார்த்தது இல்ல அண்ணி.. அவனோட சந்தோஷமெல்லாம் அந்தப் பொண்ணுகிட்டத்தான் இருக்கு. அவங்க சந்தோஷமா இருந்தா போதும் எனக்கு” என்று காமாட்சி வள்ளியிடம் கூற,

அவர் கரத்தில் அழுத்தம் கொடுத்த மதி, “இறைவி இருக்குற இடத்துல சந்தோஷம் தான் நிறையும் பெரியம்மா.. நீங்க கவலையேப்படவேணாம். அவங்க நல்ல மனசுக்கு ரெண்டுபேரும் சந்தோஷமா இருப்பாங்க” என்று கூறினாள்.

மகளின் அருகே நின்றுகொண்டிருந்த செந்தில் காதிலும் இவை விழுந்தது. ஒருவகையில் இனி இறைவி அவருக்கு மருமகள் முறை. அன்று மதி பேசிச் சென்றதிலேயே, அவர் இறைவியைக் குறை கூறுவதை நிறுத்தியிருந்தார். அவள் மீது நன்மதிப்பு வந்துவிட்டதா என்றால் அவருக்கே தெரியாது. ஆனால் இனி அவளைச் சார்ந்த எதிலும் தான் பேசினால், அது தன்னைச் சார்ந்த பலரையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தவராய் மௌனியானார்.

“எம்பேத்தி வாழ்க்கை இனியாது சந்தோஷமா இருந்தா போதும்..” என்று விழியில் நீர் கோர்க்க வீராயி கூற,

“அத்தான் இராவை நல்லா பார்த்துப்பாங்க ஆத்தா” என்று முகில் அவர் தோளில் கரமிட்டுத் தட்டிக் கொடுத்தவனாய்க் கூறினான்.

“தெரியுமே சாமி.‌ எம்பேரனும் பேத்தியும் சந்தோசமாருக்கனும்” என்று தன் கண்ணீரைத் துடைத்தவராய் அவர் கூற,

தர்ஷனும் சக்தியும் தம்பதியருக்கு அருகே விளையாட்டும் உற்சாகமுமாய் இருந்தனர்.

மந்திரங்கள் ஓதி பொன் தாலியை ஐயர் நீட்ட, பூபோல் அதைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டவன், அவளைப் பார்த்தான்.

அவள் விழிகளில் தாளமுடியாமல் தேங்கி நின்றது விழிநீர்…

அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதழ் விம்மித் துடிக்க, அதைத் தன் பற்களால் கடித்து அமர்ந்திருந்தாள்.

அவளை ஆழ்ந்து பார்த்த அய்யனார், “எனக்கு உன் செகேன்ட் ப்ரியாடியைத் தருவியா இறைவிமா?” என்க,

வார்த்தைகளே வரவில்லை அவளுக்கு. விம்மி முட்டும் கேவலுக்கு அஞ்சி, வாய் திறக்காதவள், தலையை மேலும் கீழுமாய் ஆட்ட, அம்மஞ்சள் கயிறு தாங்கிய தன் உரிமையை அவள் கழுத்தில் சேர்த்தான்.

அனைவரும் பூமழைப் பொழிந்து அவர்களை வாழ்த்த,

விழிகளை இறுக மூடிக் கொண்டு, அந்தத் தருணம் தரும் உணர்வுகளை உள்வாங்கி அமர்ந்திருந்தாள்.

அவள் கன்னத்து ஈரத்தைத் தன் முரட்டு விரல்களால் அழுத்தமாய்த் துடைத்தவன், “ஷ்ஷ்.. ஓய்..” என்க,

பட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்களை ரொம்ப காதலிக்குது மனசு..” என்று காற்றானக் குரலில் கூறினாள்.

அவன் உடலோடு ஒரு சிலிர்ப்பு ஓடி மறைய,

இறைவி கண்ணீரைத் தன் பிஞ்சு விரலால் துடைத்த சக்தி, “அம்மா.. அழாதீங்க.. ஸ்மைல் பண்ணுங்க” என்று கூறினாள்.

மகளை இருவருமே திரும்பிப் பார்க்க, புன்னகை முகமாய், இதழுக்குக் கீழ், கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் வைத்து, “ஸ்மைல்” என்று கூறினாள்.

மகளைப் பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோர், ஆத்மார்த்தமாய் புன்னகைக்க,

இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டு அவர்கள் கன்னங்களில் முத்தமிட்டாள் சக்தி.

அக்காட்சி புகைப்படக் கலைஞரால் அழகாய்ப் பதிவு செய்யப்பட்டது… அனைவர் கண்களும் நெகிழ்வில் பனிந்துபோக, நிறைவாய்ப் புன்னகைத்துக் கொண்டனர்.

வந்திருந்த ஒருசிலர் இறைவியைப் பற்றிய தங்கள் அதிருப்தியைத் தங்களுக்குள்ளோ, இல்லை காமாட்சியிடம் மறைமுகமாகவோ வெளிப்படுத்தியதெல்லாம் யாருக்கும் ஒரு பொருட்டாகக் கூடப் படவில்லை. காமாட்சி மனம் சுனங்கினார் தான் என்றாலும் கூட, தன் மகனுக்காகவும், அவன் முகத்திலிருக்கும் புன்னகைக்காவும் அதை புறம் தள்ள முயன்று, வெற்றியும் கண்டார்.

இதோ எத்தனை சந்தோஷம்? இதற்கு முன் அந்தப் பேச்செல்லாம் ஒரு பொருட்டா? என்று அவற்றைக் கடந்துத் தங்கள் இன்ப உலகத்தில் சஞ்சரித்தனர்.

தம்பதியராய் இருவரும் பெரியோரிடம் ஆசிர்வாதம் வாங்கும்படி பணிக்கப்பட,

இருவரும் முதலில் வீராயியிடம் சென்றனர்.

தன் காலில் விழுந்த பேரப் பிள்ளைகளை அள்ளி அணைத்துக் கொண்ட வீராயி, “ஆத்தா.. சாமி.. ரெண்டேரும் சந்தோஷமா இருப்பீக.. இருக்கனும்த்தா.. அதுதான் இந்த அப்பத்தாவோட ஆசை” என்க,

“அப்பத்தா..” என்று கண்ணீரோடு அவரை அணைத்துக் கொண்டாள்.

அத்தனைக்குப் பிறகு அவளுக்கென்று தான் நிற்பேன் என்று குரல் கொடுத்த முதல் உயிர் அவராயிற்றே?

“அப்பத்தா.. நீங்க இல்லாட்டி.. நா.. நான் இல்ல அப்பத்தா.. நானும் எம்புள்ளயும் இருக்கோம்னா.. நி.. நீங்கதான் அப்பத்தா காரணம்” என்று அவள் அவரை அணைத்துக் கொள்ள,

“அய்யோ சாமி‌‌.. அப்படியெல்லாம் இல்ல தாயி. நீ ஒழைச்ச தாயி. அப்பத்தா கூட இருந்தேன். அம்புட்டுத்தான்.. நீயும் உன் புள்ளையும் இருக்க நீ தான் தாயி காரணம்.. நீ தான். அழுவாத ராசாத்தி. நீ சந்தோஷமா இருக்கனும்” என்று அவள் கண்ணீரைத் துடைத்தபடி வீராயி கூறினார்.

“எஞ்சாமி.. எம்பேத்திய பாத்துகிடுயா” என்று அவள் கரத்தை எடுத்து, அவன் கரத்தில் வைத்து அழுத்தம் கொடுத்தபடி வீராயி கூற,

தன்னவளைத் தன் தோள்வளைவில் இருத்திக் கொண்டவனாய், “உசுருக்குள்ள வச்சுப் பாத்துக்குறேன் ஆத்தா” என்று கூறினான்.

அடுத்து காமாட்சி, வள்ளி மற்றும் செந்திலிடமும் ஆசிர்வாதம் வாங்கி முடிக்க,

இறைவி முகில்வண்ணன் அருகே சென்றாள்.

கண்ணிலிருந்து கண்ணீர் வழிய, இதழில் மனம் நிறைந்த புன்னகையுடன் உணர்ச்சிக் குவியலைத் தாளமுடியாதவனாய் தன்னவள் கரம் பற்றி நின்று கொண்டிருந்தான், முகில்.

அவன் முன் வந்து நின்றவள், “முகி..” என்று குரல் கமர அழைக்க,

“டேய்..” என்று கலங்கியவனாய் அவளை அணைத்துக் கொண்டான்.

இருவரும் அத்தனை உருகி போயினர் அத்தருணத்தில். ஓசையில்லை.. ஆனால் உண்ணதமானக் கண்ணீர் அதன் சாட்சியாய்… பார்க்கும் அனைவரையும், காரணமே அறியாதவரையும் கூடக் கலங்கவைக்கும்படி இருந்தது அக்கண்ணீர்… செந்திலைக்கூடக் கலங்க வைத்ததே!

“முகி…” என்று அவள் அழ,

“ஷ்ஷ்.. இராமா.. அழாதடா” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நீ இல்லாம நான் இல்ல முகி… நான், அப்பத்தா, சக்தி.. யாருமே இல்ல.. நீ என்னோட மாரல் சப்போட்டர்டா.. திசை தெரியாம போயிருப்பேன்டா.. எ..என் கண்ணீரைத் தாங்கினவன்டா நீ.. எ..எனக்கு அம்மாவோட கண்டிப்பு, அப்பாவோட அரவணைப்பு, உடன் பிறப்புகளோட கேலி சண்டைகள், தோழனுக்கான ஆதரவு, ஆசானுக்கான அறிவுரைனு எல்லாமா நீ இருந்த முகி.. இருக்க.. இருப்ப.. உ..உன்னாலதான்டா.. எல்லாமே.. இ..இப்ப அ..அவர் எனக்கு..” என்று அழுகையோடு அவள் பேச,

“இரா..” என்று பரிவாய் அழைத்தான்.

அவள் நிமிர்ந்து பார்க்க, அவள் கண்ணீரைத் துடைத்தவன், “எப்பவுமே உனக்காக இருப்பேன். என் இராவுக்காக வந்து நிக்குற முதல் ஆளா நான் இருப்பேன்.. என் அத்தானுக்குக்கூட அந்த இடம் கிடையாது” என்றவனாய் அய்யநாரை நோக்க,

அய்யனார் மென்மையானப் புன்னகையை அவனுக்குக் கொடுத்தான்.

அய்யனார் கண்களின் சிவப்பு, அவள் கண்ணீரின் வெளிப்பாடு என்பதைக் காட்ட, “உன்னை அத்தான் நல்லா பாத்துப்பாருடா.. யூ டிசர்வ் டு பீ ஹாப்பி” என்று கூறினான்.

அவள் கண்ணீரைத் துடைத்தவன், “என் இரா சிரிச்சாதான் அழகு.. அப்றம் லேடி கெட்டப்கு என்ன மரியாதை?” என்க,

சிரித்தபடி கண்ணீரைத் துடைத்தவள், அவன் புஜத்தில் அடித்து அணைத்துக் கொண்டாள்.

பின் மதியிடம் வந்தவள், தங்கள் ஆத்மார்த்தமான பந்தத்தைப் புரிந்துகொண்டு அவள் நடந்து கொள்வதை எண்ணி, மனமார “தேங்ஸ் மதிமா..” என்க,

“ஃபிரெண்ட்ஸ்குள்ள நோ சாரி நோ தேங்ஸ்னு யாரோ சொன்னதா நினைவு” என்று கூறிய மதி, “எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும்.. நீ எனக்கு நல்ல இன்ஸ்பிரேஷன் இறைவி” என்றாள்.

புன்னகையாய் அவளை நோக்க, அவள் கண்ணீர் துடைத்து,

“நான் உனக்கு நாத்துனாராக்கும்..” என்றாள்.

சிரித்தபடி, “நானும்தான்” என்று இறைவி கூற,

உண்மையில் செந்திலுக்கு அது முகத்தில் அறைந்ததைப் போல் இருந்தது.

“நல்ல நேரம் முடியுறதுக்குள்ள அடுத்தடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்று காமாட்சி கூற,

அனைவருமாக மண்டபத்தில் முடிக்க வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்தனர்.

மதிய உணவையும் முடித்துக் கொண்டு, வந்த சொந்தங்களுக்குத் தாம்பூலம் கொடுத்து அனுப்பி வைக்கும் பொறுப்பை மதியும் முகிலும் கையிலெடுக்க, வீராயி, தான்யா, தர்வின், தர்ஷன், வள்ளி, குழந்தைகள், காமாட்சி, மற்றும் மணமக்கள் அய்யனாரின் இல்லம் சென்றனர்.

ஆலம் சுற்றி இருவரும் வரவேற்கப்பட,

உள்ளிருந்து ஓடிவந்த சக்தி, ஆலத்தினைத் தொட்டுத், தன் தாய் மற்றும் தந்தையர் நெற்றியில் வைத்துவிட்டாள்.

மகளை அள்ளிக் கொண்ட அய்யனர், ஒரு கையில் மகளையும் மறுகையால் மனையாளின் கரத்தையும் பற்றியவனாய், வீட்டினுள் நுழைந்தான்.

இறைவி பூஜையறையில் விளக்கேற்றி வைக்க, இறை தரிசனம் முடித்து தான்யா மற்றும் தர்ஷன் மண்டபத்திலிருந்து சாமான்களைக் கொண்டுவரச் சென்றனர்.

நேரம் கடந்து மாலைப் பொழுது புலர்ந்திட, அனைவரும் தம்பதியரை அமர்த்திப் பாலும் பழமும் கொடுத்து, ஒன்றாகக் கூடி இரவு உணவை முடித்தனர்.

எஞ்சிய சொந்தங்களும் புறப்பட ஆயத்தமாக, “அப்பத்தா.. என்கூடவே இருந்துடேன்.. ப்ளீஸ்” என்று இறைவி கெஞ்சுதலாய்க் கேட்டாள்.

“இல்ல சாமி..” என்று அவர் முடிக்கும் முன், “இரா.. அப்பத்தா எங்கயும் போறதாயில்ல.. நாங் கூட்டிட்டுப் போறேன்.. எங்கூட ஆத்தா கொஞ்ச நாளிருந்தா உங்கூட கொஞ்ச நாள்.. டீலா?” என்று முகில் கேட்டான்.

வீராயி அவனை அதிர்ந்துபோய்ப் பார்க்கவும்,

“இந்த வயசுல உங்களைத் தனியா விடுவோமுனு வேற நெனப்பா?” என்று வள்ளியும் உரிமையாய்ச் சண்டை பிடிக்க,

தன் பேத்தியைப் பார்த்துப் புன்னகைத்தவர், “அப்பத்தாக்கு போக்கிடத்துக்கா பஞ்சம்?” என்றார்.

அதில் புன்னகைத்தவளாய், அனைவருக்கும் விடை கொடுத்தவள், உள்ளே வர, கூடத்தில் அய்யனாரின் மடியில் அமர்ந்து மழலை மொழி மாறாது கதைகள் பேசிக் கொண்டிருந்தாள், சக்தி.

மருமகளின் அருகே வந்து நின்ற காமாட்சி, “எம்புள்ளைய இப்புடி பாக்கவே சந்தோஷமா இருக்குது இறைவி.. அவனை இதே சந்தோஷத்தோட வச்சுகிடு” என்க,

அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவள், “உயிருக்குள்ள வச்சுப் பாத்துப்பேன் அத்தை.. கவலையே படாதீங்க” என்று கூறினாள்.

அதில் புன்னகையாய் அவள் கன்னம் தட்டியவர், அவளைச் சமையலறை அழைத்துச் சென்று, பால் செம்பைக் கொடுத்து அறிவுரைகள் சில வழங்கினார்.

“எதுக்கும் பயப்படாத கண்ணா.. பழசெல்லாம் நீ கடந்துட்டத்தான்.. இருந்தாலும் சொல்றேன். இதை ஒரு மாமியாராவோ, அம்மாவாவோ சொல்லலை.. ஒரு பொண்ணா சொல்றேன்.. உனக்குக் கிடைச்ச வாழ்க்கைக்கு முன்ன எந்த கசடும் பெருசில்ல.. சந்தோஷமா இரு” என்று காமாட்சி கூற,

புன்னகையாய் அவரை அணைத்துக் கொண்டு, “தேங்ஸ் அத்தை” என்றாள்.

இருவரும் கூடத்திற்கு வர,

குழந்தையைத் தூக்கிக் கொண்ட காமாட்சி, “நாம தூங்கப்போலாம்டா குட்டிமா.‌ அப்பா அம்மாக்கு குட் நைட் சொல்லிடு. பாத்தி ஒனக்குக் கதையெல்லாம் சொல்றேன்” என்க,

உற்சாகமாய் “ஓகே பாட்டி. அம்மா அப்பா.. குட் நைட்” என்றுவிட்டு பாட்டியுடன் சென்றாள்.

மகள் செல்லும் திசை பார்த்து நின்ற மாதுவுக்கு லேசாக ஒரு பதட்டம் உடலோடு ஒட்டிக் கொண்டது.

“இறைவி” என்று அய்யனார் அழைக்க,

மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

லேசான சிரிப்போடு “வா..” என்றவன், அவளை அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அவளுள் மின்னும் படபடப்பை உணர்ந்தவன், அவளை இயல்பாக்கும் பொருட்டு, “நம்ம ரூம்” என்று கூறி, அவளுக்கு அறையைச் சுற்றிக் காட்டினான்.

சுவரில் காக்கி உடையில் மிடுக்காக இருக்கும் தந்தையைக் காட்டியவன், “அப்பா..” என்க,

இறைவியும் அப்படத்தைக் கண்டுவிட்டு அவன் முகம் கண்டாள்.

அவன் கண்களில் பலவர்ண மின்னல்கள்.

“எல்லா பசங்களையும் போல எனக்கும் என் அப்பா சூப்பர் ஹீரோ தான்..” என்று அவன் கூற,

“மாமாவை மிஸ் பண்றீங்களா?” என்றாள்.

இடவலமாய் தலையாட்டியவன், “அவர் எப்பவும் என்கிட்ட சொல்லுவார்.. நீ என்னிக்காது அப்பா நமக்கில்லையேனு நினைக்கும்படியான தருணம் வந்தா, அழகா என் ஃபோட்டோவைப் பார்த்து சிரி. அந்த சிரிப்புல தான் என் உயிர் இருக்குனு சொல்வார்.. இப்பவும் எங்கப்பா என்கூடத்தான் இருக்கார் இறைவிமா” என்று புன்னகை மாறாது கூற,

அவளும் மென்மையாய்ப் புன்னகைத்தாள்.

அனைத்துப் படங்களையும் காட்டிப் பேசி அவளை ஓரளவு நிலைகொள்ளச் செய்து அமர,

“நம்ம ஃபோட்டோவும் இப்படி மாட்டலாம். நானே வரைஞ்சு தரேன்” என்று கூறினாள்.

அதில் கிளுக்கிச் சிரித்தவன், சென்று ஒரு பரிசை எடுத்து வந்தான்.

“என்னது?” என்று அவள் புரியாமல் பார்க்க,

“பிரிச்சுப் பாரு” என்றான்.

இறைவியும் ஆர்வத்துடன் பிரித்துப் பார்க்க,

அவனைக் காதலித்து, அக்காதலின் இனிமையோடு, அதை உணர்ந்த தருணம், அவளும் அவனும் கல்யாணக் கோலத்தில் நிற்பதாய்‌ அவள் தீட்டிய அந்த ஓவியம், மென்தகடாய்…

அதை கண்கள் விரிய பார்த்தவள், “எப்ப எடுத்தீங்க?” என்க,

“நமக்கு கல்யாண டேட் பிக்ஸ் பண்ணப்ப.. என் பொண்ணுதான் எடுத்துக் குடுத்தா” என்று கூறினான்.

அதைத் தன் நுனிவிரல் கொண்டு ஸ்பரிசித்தவள் உடலில் அப்படியொரு மின்சாரச் சிலிர்ப்பு…

“ரசிச்சு வரைஞ்சேன்..” என்று அவள் கூற,

“அதுல நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகாருக்கும்போதே தெரியுது. எவ்வளவு ரசிச்சிருப்பனு” என்றான்.

“நிழலில் மட்டுமில்ல.. நிஜத்திலும் நீங்க அழகுதான்” என்று அவள் கூற,

“ஆஹாங்?” என்று சிரித்தான்.

எழுந்து நின்றவள், அங்கு வெறுமையாக இருந்த சுவருக்குத் துணையாய் அந்தப் படத்தினை மாட்டி, அழகு பார்க்க, அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், “பிடிச்சிருக்கா?” என்று அவள் காதோரம் தன் மூச்சுக்காற்று உரச, கிசுகிசுப்பாய்க் கேட்டான்.

அவன் தீண்டலில் நாணம் கொண்டு நெகிழ்ந்தவள், “பி.. பிடிக்காமலா?” என்க,

அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன், அவள் உச்சியில் அழுத்தமாய் இதழ் பதித்து, “உன்னை நிறைய நிறைய காதலிக்கனும் இறைமா” என்றான்.

அவன் வார்த்தை ஒவ்வொன்றும் அவளது பல வருடக் காதல் துளிகளுக்கு முக்தி கொடுக்கும் வரமாய்…

அவன் புஜங்களைப் பற்றிக்கொண்டு, “ம்ஹும்.. நான் தான் நிறைய காதலிப்பேன்” என்று கூற,

“ம்ஹும்.. நோ வே.. நான் தான்” என்றான்.

அவனைச் செல்லமாய் முறைத்தவள், “நான்தான்” என்க,

“சரி.. யாரோட லவ் பெருசுனு பார்த்துடுவோமா?” என்று அவளைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவனாய்க் கேட்டான்.

அவன் ஸ்பரிசத்தில் துள்ளியவள், சிரம் தாழ்த்தி, இமை படபடக்க, “பார்த்துடுவோம்” என்க,

அவளைத் தன் கரங்களில் அள்ளிக் கொண்டவனாய், அவளுக்குத் தன் தீராக் காதலின் தித்திப்பைக் காட்டிட சித்தமானான்…

அவள் இமைகளில் தன் காதல் முத்துக்களை முத்தமாய் அவன் இறக்க, அவள் மொத்தமாய் உருகிப்போனாள்.

பூவுக்கு நோகாமல் தேன் குடிக்கும் வண்டாகி, அவளைச் செவ்வரளியாய் சிவக்க வைத்தவன், “இறைமா..” என்று மென்மையாய் அழைக்க,

சுகந்தம் நீங்கிச் சித்தம் பெற்ற நொடி, அவள் தேகத்தில் மெல்லிய நடுக்கம்…

அவளைத் தன்னோடு பொத்திக் கொண்டவன், “உன்னைக் கஷ்டப்படுத்தாம பார்த்துப்பேன்டா..” என்க,

அவன் முரட்டுக் கரங்களுக்கு மென்மையும் தெரியுமா? என்று வியந்தாள்.

“அய்யனார்…” என்று அவளையும் மீறி, அவள் இதழ்கள் உச்சரித்தப் பெயரில், தன் பெயரே அழகு பெற்றதாய் மகிழ்ந்தவன், பூவையை புது உலகிற்கு அழைத்துச் சென்று, தானும் புதுமை பெற்றான்…

கூடலின் மகத்துவத்தில் நெகிழ்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டவள், அதன் இனிமை கொடுத்த ஆனந்தத்தில் அழுதுவிட, “ஓய்.. இறைவி..” என்று அவனும் பதறித்தான் போனான்.

“ஓய்.. இங்கப்பாருடா.. இ..இறைமா.. என்னையப் பாரு.. என்னாச்சு?” என்று அவன் பதட்டமும் தடுமாற்றமுமாய்க் கேட்க,

“தேங்ஸ்..” என்று கூறினாள்.

“என்னடி? என்னையப் பாரேன். என்னாச்சு?” என்று அய்யனார் அவள் முகம் நிமிர்த்த முயல, அவன் மார்பில் முகம் புதைத்தவளாய் அழுது கரைந்தாள்.

“இறைவி..” என்று அழுத்தமாய் அழைத்தவன், அவள் முகம் பற்ற,

கண்ணீர் மின்னும் விழிகளோடு அவனைப் பார்த்தவள், “இ..இது.. நான்.. அது.. பயம்.. இல்ல..” என்று தட்டுத்தடுமாறி, விசும்பிக் கொண்டே கூறினாள்.

அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து, “ஈஸி ஈஸி..” என்றவன், “இரு.. தண்ணிக்குடி.. ஒன்னுமில்ல” என்று விளக்கை உயிர்ப்பித்து, மேஜையிலிருந்த தண்ணீர் போத்தலை எட்டி எடுத்தான்.

அவன் திடீர் செயலில் அதிர்ந்தவளாய், பதறிப் போர்வையை நாடியவள், “எ..என்னங்க..” என்க, “ஸ்ஸ்.. சாரி” என்று கண்கள் சுருக்கி நெற்றியில் தட்டிக் கொண்டவனாய்க் கூறினான்.

அவளைத் தன் தோள் வளைவில் பிடித்துக் கொண்டு தண்ணீர் கொடுத்தவன், “ஆர் யூ ஓகே?” என்க,

“இ..இது.. நான்.. எனக்கு.. என்ன சொல்ல வரேன்னா..” என்று தடுமாறினாள்.

“ஷ்ஷ்.. பயமாருக்கும்னு நினைச்சேன்.. ஆனா அப்படியில்லை. ஐம் ஃபீலிங் சாடிஸ்பைட்.. அதுதானே சொல்ல வர்ற? புரிஞ்சுடுச்சு.. விடு” என்று அசராமல் கூறி அவளை அவன் அதிர வைக்க,

தன்னால் கூறிவிட இயலாத, தான் தடுமாறிய வாக்கியங்களைத் தன் வாய்மொழியின்றி அவன் கூறியதில் அவன் காதலால் உருகித்தான் போனாள்.

“அ..அத்தை என்னடா லைட் எறியுதேனு நினைச்சுடப்போறாங்க.. அமத்துங்க” என்று நாணம் மேலிட அவள் கூற,

“அதுக்கு மட்டும் சொல்றாப்ல இல்லயே?” என்றான்.

அவன் தீண்டலில் மென்மை கண்ட தேகம், அவன் வாக்கியங்களின் வன்மையில் வெட்கத்தால் கன்றிச் சிவந்தது.

“ப்ச்..” என்று அவன் புஜத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டவள், “ப்ளீஸ்..” என்று மெல்லொலியில் கெஞ்ச,

அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்து, அவள் உச்சியில் காலையிலிருந்து சூ‌டப் பெற்ற மலர்களின் வாசம் உணர்ந்தவனாய், “யூ ஆர் டிவைன் இறைமா..” என்றான்.

உடல் சிலிர்த்துப் போனவள், “ஏங்க..” என்று உருக,

“தெய்வீகமா இருக்கனுதான் உனக்கு இறைவினு பெயர் வச்சாங்களோ?” என்றான்.

“என்னைப் பெத்துகிட்டதே சாபம்னு நினைச்சாங்க.. இதுல அந்த நினைப்பு ஒன்னுதான் கேடு” என்று சிரித்தபடி அவள் கூற,

“சிலருக்கு பொக்கீஷத்தோட மதிப்புத் தெரியாது இறைமா.. குப்பைனு எறியப்படும் வைரம் கோபுரத்துக்குத் தகுதியானதுனு புரியவைக்கவும் சில மனங்கள் தேவையாகப்படுதே” என்றபடி அவள் முன்னுச்சி முடியைக் கோதிவிட்டான்.

அவனையே கருவிழி பளபளக்கப் பார்த்தவள், “நிறைய பிடிக்குது..” என்க,

“என்ன பிடிக்குது?” என்று சிரித்தபடி கேட்டான்.

“வேற என்ன? பித்து தான்..” என்றவள், “உங்க மேல” என்று அவனை அணைத்துக் கொள்ள,

அதில் கிளுக்கிச் சிரித்தவன், ஒளியையும் ஓவியப்பாவையையும் அணைத்தவனாய், காதல் கானத்தின் இரண்டாம் சரணத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்