Loading

விசை-29

தனது அலைபேசியில் இறைவி இருக்கும் இடத்தைக் கண்காணித்தபடியே சென்றவன், ஒரு பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினான். கூரைக்கு அடியில், முற்றும் நனைந்த நிலையில், தனது ஈரத் துப்பட்டாவையே போர்த்திக் கொண்டு, கொஞ்சம் பயத்தோடும், பதட்டத்தோடும் நின்றுகொண்டிருந்த இறைவி, முகிலின் வண்டியைக் கண்டதும் ஆசுவாசம் ஆனாள்.

உள்ளிருந்து குடையோடு வெளியே வந்த அய்யனார், அவளை முறைத்தபடியே வந்து, “ஃபோன் பண்றேன்ல அத்தனை முறை? எடுத்து பேச என்னடி உனக்கு?” என்று கடிந்துகொள்ள, அந்த கோபத்தில் உணரப்பெற்ற அக்கறை அவள் உள்ளமெங்கும் தித்திப்பாய் தித்தித்தது.

“பதறிட்டு வரேன் என்னவோ ஏதோனு.. ஒரு கால் அட்டென்ட் பண்ணி பத்திரமா இருக்கேன்னு சொன்னா என்ன?” என்று அய்யனார் கேட்க,

“ஃபோன் கீழ விழுந்துடுச்சு.. டிஸ்ப்ளே வேலை செய்யலை. அதான் உங்க கால் அட்டென்ட் செய்ய முடியலைப்பா” என்றவள், “அதான் சாயங்காலம் லேட் ஆகவுமே உங்களுக்கு லொகேஷன் அனுப்பி வச்சிருந்தேன்ல?” என்று கேட்டாள்.

“இருக்கட்டும்.. வேற யார்கிட்டயாவது வாங்கிப் பேசிருக்கலாம்ல?” என்றபடி, அவள் தோள் பையை வாங்கிக் கொண்டவன், “பயந்துட்டேன் இறைவி” என்று கூற,

அவள் இதழில் மெல்லிய புன்னகை.

“அதான் பத்திரமா இருக்கேனே.. பயப்படாதீங்க” என்று அவள் கூற,

“வா” என்றான்.

“மொத்தம் நனைஞ்சுட்டேன்.. காரெல்லாம் ஈரமாயிடுமே” என்று அவள் கூற,

“உன் பிரெண்டு வண்டிதானே? துடைச்சுப்பான் வா” என்று கூறினான்.

உள்ளே சென்று அமர்ந்தவள், “ஸ்ஸ்.. இந்தக் குளிருல ஏசி போட்டுட்டுத்தான் வண்டி ஓட்டிட்டு வரனுமா?” என்று ஈர உடலில் குளிர் தாக்கியதைத் தாங்க இயலாமல் கோபத்துடன் கேட்க,

“சாரி சாரிடா” என்றபடி, குளிரூட்டியை அணைத்தான்.

ஏற்கனவே ஈரத்தோடு நின்றதே அவளுக்குக் குளிராக இருக்க, இந்தக் குளிரூட்டியின் குளிர்ச்சி அவளை இன்னும் நடுங்க வைத்தது.

“ரொம்பக் குளிருதா இறைவி?” என்று அவன் கேட்க,

“மொத்தமா நனைஞ்சுருக்கேன்.. குளிராதா பிறகு?” என்று கூறினாள்.

அவள் கோபம் காட்டிய உரிமை, அவனை மென்மையாய் புன்னகைக்க வைத்தது.

தன் இருக்கையின் ஓரத்திற்கு வந்தவன், அவளைத் தன்னை நோக்கி இழுத்துக் கொள்ள, அவன் செயல் எதிர்பாராதவள், திடுக்கிட்டுப் போனாள்.

இருவருக்கும் இடையே, கியர் பெட்டி தடையாய்…

விழிகள் விரிய அவன் புஜம் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தவள், “எ..என்ன..என்ன பண்றீங்க?” என்று தடுமாற்றமாய்க் கேட்க,

“குளிருதுனு சொன்னியே” என்றான்.

அவள் இதயத்துடிப்பு அவனே கேட்டிடும் விதமாய் ஓங்கி ஒலித்தது..

“அ..அதுக்கு?” என்று அவள் கேள்வியாய் நோக்க,

“அதுக்கு…” என்று இழுத்தான்.

அவள் படபடப்பு இன்னும் அதிகரிக்க, முகம் செஞ்சாந்தாய் சிவந்தது.

தன் கரங்களைச் சூடு பரக்க அவன் தேய்க்கவும், பாவை எச்சிலைக் கூட்டி விழுங்க, சிரித்தபடி உஷ்ணம் ஏறிய கரத்தை அவள் கன்னத்தில் வைத்தான்.

அவள் உடல் சிலிர்த்து அடங்க, “இதுக்குத்தான்..” என்று படு குறும்பாய் கூறினான்.

அவன் குறும்பில் வெட்கம் கொண்டு, “விடுங்க வேணாம்.. வீட்டுக்குப் போலாம்” என்க,

“குளிருதுனு சொன்னியே..” என்று அவள் கரம் பற்றி உள்ளங்கையைத் தேய்த்து விட்டான்.

வெகு சங்கோஜமாய், “இல்ல இல்ல..” என்று அவள் தடுமாற,

“ஷ்ஷ்..” என்றவன், அவள் பாதங்களைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு, அதையும் உரசிக் கொடுத்தான்.

“அய்யோ ப்ளீஸ்ங்க.. வேணாம்” என்று பாதத்தை பட்டென அவள் உருவிக் கொள்ள,

“என்னடி? கால் கையெல்லாம் விரைச்சுருக்கு.. அதான் தேச்சுவிடுறேன்” என்று கோபம் போல் கூறினான்.

அவன் கோபம் கொடுத்த அச்சத்தோடும், அவன் ஸ்பரிசம் கொடுக்கும் நாணத்தோடும் அவள் விழிக்க, புன்னகைக்கத் துடித்த இதழைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவள் பாதத்தைத் தன் மடிமீது வைத்துத் தேய்த்தபடி, “பாப்பா ஸ்கூல் மாத்துறதைப் பத்தி என்ன யோசித்திருக்க?” என்று கேட்டான்.

நெளிந்து கொண்டிருந்தவள், அவன் கேள்வியில் சட்டென அவனை நோக்க, “சாரிடா.. வேலை ஜாஸ்தி.. அதான் பேச முடியலை ஒழுங்கா.. முகில் சொன்னான் பார்த்துட்டு இருக்கனு” என்று கூறினான்.

“இருக்கட்டும்..” என்றவள், “இந்த வருஷம் முடியப்போகுதுதானே? அந்த டீச்சரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம்.. அதான் முடிஞ்சதும் அடுத்த வருஷம் மாத்திக்கலாம்னு யோசிச்சேன்.. உங்க கிட்ட சொல்லுவோம்னுதான் கூப்பிட்டேன்” என்று அவள் கூற,

“எங்க சேர்க்கலாம்?” என்றான்.

அந்தக் கேள்விக்கு அவள் வெகுவாய் தடுமாற, அவள் பாதம் தேய்த்தபடி விழி மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தான்.

“அ..அது.. வேற நல்ல ஸ்கூலா, எ..எனக்கு ஒத்துவர்ற போல..” என்று அவள் இழுக்க,

“ஒத்துவர்ற போலனா?” என்று கேட்டான்.

அவனிடம் சட்டென்று பணம் கேட்டுவிட அவளால் இயலவில்லை.. ஆம்! திருமணம் செய்து கொள்ளத் தான் போகின்றாள்.. ஆனால் கணவன் என்ற அங்கீகாரம் பெரும் முன்பே, குழந்தையின் கல்விச் செலவை அவனோடு பங்கிடுவதை எப்படி எடுத்துக்கொள்வதென்று அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை…

“தப்பா எடுத்துக்காதீங்க..” என்று அவள் பீடிகைப் போட முற்பட,

“கண்டிப்பா தப்பாத்தான் எடுத்துப்பேன்” என்றவன், மௌனியாய் விழித்தவளைப் பார்த்து, “சொல்லு” என்றான்.

“இல்ல.. எ..எனக்கு என்ன சொல்லனு தெரியலை.. கல்யாணம் அப்புறம் நீங்க செய்றது வேற.. ஆனா இப்ப..” என்று அவள் இழுக்க,

“ம்ம்.. சின்னப் புள்ளைனு அப்ப அப்ப காட்டித்தான் கொடுக்குற” என்றவன், மெல்லிய புன்னகையுடன், “அப்ப இப்ப நான் உன் புருஷன் இல்லையா?” என்று கேட்டான்.

திருதிருவென்று விழித்தவள், “இ..இப்ப எப்படி?” என்று புரியாது கேட்க,

“அப்ப நீ என்னை லவ் பண்ணலையா?” என்று கேட்டான்.

பட்டென அதிர்ந்து விழித்தவள், “ஏன் இப்படி கேட்குறீங்க?” என்று முற்றுமாய் நலிந்துபோன குரலில் கேட்க,

“அப்ப லவ் பண்றியா?” என்று கேட்டான்.

கண்கள் கலங்குவதைப் போலானது அவளுக்கு.

சிவந்த மூக்கை அவள் உறிஞ்சிக் கொள்ள,

அவளைப் பார்த்தவன், “இன்னும் குளிர் அடங்கலையா?” என்று கேட்டபடி, தன் மேல் சட்டையைக் கழட்டினான்.

“இல்ல இல்ல வேணாம்..” என்று அவள் பதட்டம் கொள்ள,

“ஏன்டி இவ்ளோ பதறுற?” என்று சிரித்தவன், “போர்த்திக்கோப்பா.. ரொம்பக் குளிருதுல?” என்றான்.

“சரி பாப்பா ஸ்கூல் மேட்டருக்கு வருவோம்” என்றபடி அவளுக்கு அதை போர்த்தியவன், கலங்கித் தழும்பி நின்ற அவள் விழியைப் பார்த்து, “எதுக்கு அழுற?” என்று கேட்டான்.

“இ.. இல்ல.. நான் அழல” என்று அவள் கூற,

கோடாய் அவள் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

“மழையில வேற நனைஞ்சுருக்க? உடம்புக்கு முடியாமல் போயிடப் போகுது இறைவி” என்றவன், வண்டியை இயக்க,

இவளுக்கு ஏனென்றே தெரியாது கலக்கமாக இருந்தது. உரிமைக்கும், தன் எண்ணத்திற்கும் இடையில் எழும் தடுமாற்றத்தை எதை கொண்டு சரி செய்வதென்று யோசித்தாள்.. பகுத்தறிவு தானாக முன்வந்துத் தன்னில் விடைதேடக் கூறி முறையிட்டது.

“பாப்பா ஸ்கூல் ஃபீஸ் நீ வேணாம்னு சண்டை போட்டாகூட நான் தரத்தான் செய்வேன்..” என்று வண்டியை ஓட்டியபடியே அவன் கூற,

அவள் எதுவும் பேசாமல் சாளரத்தோடு ஒன்றி அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களில் அவன் வீட்டை அடைய, மின்சாரம் மீண்டுவிட்டதால், அனைவரும் உள்ளே சென்றிருந்தனர்.

வண்டியிலிருந்து இறங்கியவன், அவளிடம் வந்து, தன் நெஞ்சை நீவிக் கொண்டு, “நீ உரிமைனு நினைக்கிற கல்யாணத்தைக்கூட நான் கணக்குல எடுக்கலைடி.. இங்கே இருக்க நீ.. நீ மட்டும்தான்.. கல்யாணம் பண்ணிக்காம வாழலாம்னுலாம் சாமி சத்தியமா சொல்ல மாட்டேன்.. ஆனா அதுதான் உனக்கும் எனக்குமான பந்தத்தை அங்கீகரிக்கும்னு நீ நினைச்சா, நிச்சயம் அதையும் ஏற்க மாட்டேன்.. அப்படியிருக்க..” என்றவன், ஒரு பெருமூச்சு விட்டு, “என் புள்ளைக்கு நான் காட்டுற உரிமைக்கெல்லாம் என்கிட்ட வந்து தள்ளி நிக்க சொல்லாதடி.. மனசு தாங்காது” என்றான்.

அவன் உதிர்த்த கடைசி இரண்டு வார்த்தையில் முற்றுமாய் உள்ளம் உருகியவள், அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளுக்குத் தன் பரந்த கரங்களுக்குள் அடைக்கலம் கொடுத்தவன், அவள் முதுகைத் தட்டிக்கொடுத்து, “என்னடா கண்ணம்மா?” என்று அத்தனை பரிவாய் கேட்டான்.

“தெரியல… எனக்கு.. எ..என்ன பண்ணுதுனு சொல்லத் தெரியல.. ஒரு மாதிரி..” என்று அவள் வார்த்தைகள் கரைய,

தன்னுடனான காதல் சேரவேண்டும் என்றுகூட எதிர்பாராது நேசம் கொடுத்தவளுக்கு, தன் நேசம் கொடுக்கும் அபரிதமான, அவள் எதிர்பார்த்திடாத காதல் செய்யும் உணர்வுப் பிரவாகம் இது என்று அவனுக்குப் புரிந்தது.

புரிந்த மாத்திரம், அவள் மனம் படும் பாடையும், அவள் மனம் தவிப்பதையும் உணர்ந்து, தானும் முகம் கசந்துபோனான், கற்குவேல் அய்யனார்.

“இறைவிமா.. என்னைப் பாரேன்” என்று அவன் கூற,

“நான் உங்களைக் கஷ்டப்படுத்தணும்னு நினைக்கலைங்க” என்றாள்.

“ச்ச நான் அப்படி நினைக்கலைமா” என்று அவன் அவள் முகம் தாங்க,

அவனுக்குத் தெளிவாக தன்னைப் புரியவைத்திடும் நோக்கத்தில் “சாரி.. எனக்கு இதை எப்படி எக்ஸ்பிளைன் பண்ணனும்னு கூட தெரியலை.. உங்களை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கலைங்க.. எனக்கு.. பணம் விஷயத்துல யாரையுமே கேட்க முடியலைங்க.. எ..என்னைப் பெத்தவரே ப..பணத்துக்காக ப..படுக்குற வேலை பார்த்துத்தானே சம்பாதிக்குறானு கேட்பாரு..” என்று கூறி பெருமூச்சுடன் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டாள்.

 

அழுகவில்லை.. கடந்துவிட்டால் அவற்றை.. இருந்தும் அந்த நினைவுகளைப் பிரட்டும் வார்த்தைகளைக்கூட மீண்டும் உதிர்க்கப் பிடிக்காத, உதிர்க்க வேண்டிய அவசியத்தால் ஒரு தடுமாற்றம்.

 

“அ..அது வலிக்கும்.. என்னால மனசார யாருட்டயுமே கேட்க முடியலை.. சும்மா வாங்குற பணம்.. எ..எனக்கு.. அது என்னவோபோல இருக்கும்.. நீங்க தான்.. புரியுது.. சட்டுனு வரலை” என்று அவள் கூற,

அவள் மொழிந்த சொற்களில் துடிதுடித்துப் போனான்.. 

 

‘ச்ச! என்ன மாதிரியான பெற்றோர்? இவள் வாழ்வில் இத்தனைத் தீங்கு நடந்திருக்கத்தான் வேண்டுமா?’ என்று இறைவனிடமே சண்டையிடத்தான் தோன்றியது அவனுக்கு.

“நான் உங்களை உரிமையில்லைனு விளக்கலைங்க.. அப்படி நினைக்கலை.. சத்தியமா நினைக்கவும் மாட்டேன்.. எனக்கு அதைக் கேட்கக் கஷ்டமாருந்துது..” என்று அவள் கூற,

“ஷ்ஷ் ஷ்ஷ்..” என்று அவளை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவன், “டேய்.. இறைவிமா.. ஈஸிடா.. காம் டௌன்” என்று குழந்தையை சமாதானம் செய்வதைப் போல் பேசினான்.

“சாரிப்பா.. நான் உங்களையும் ரொம்பக் கஷ்டப்படுத்துறேன்ல? என்னால நீங்களும் ஹர்ட் ஆகுறீங்கள்ல? ப்ச்‌‌.. நான் கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன் அந்த வர்ட்ஸ்ல.. அதான் உங்க பக்கம் யோசிக்கலை. உங்களையும் ஹர்ட் பண்ணிடுறேன்” என்று அவள் கூற,

“ப்ச்.. இறைவி.. எனக்கு சீரியஸாவே இப்பத்தான் கோவம் வருது.. என்கிட்ட அறை வாங்கிட்டுப் போயிடாத” என்று சப்தம் போட்டான்.

அவன் அதட்டல் வேலை செய்யும் விதமாய் அவள் மிரண்டு நிமிர, “ஈரமாருக்க.. வா உள்ள போவோம்” என்று இறுக்கமாய்க் கூறி அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அவன் கோபம் கொண்டுவிட்டானே என்று மிரண்டு அவள் பார்த்திருக்க, அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

மழையில் நனைந்து, அவன் சட்டையைப் போர்த்தியபடி, அவள் அவன் இழுப்பதற்கு இணங்க வர, குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு கூடத்தில் அமர்ந்திருந்த முகில், மதி மற்றும் வள்ளி அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

“இரா?!” என்று பதறி எழுந்த முகில், “என்னாச்சு அத்தான்?” என்க,

“ஏ இறைவி.. என்னாச்சு?” என்று மதி அவளை நெருங்கினாள்.

சட்டென்று இறைவிக்குப் பேச்சும் வரவில்லை…

“ஒன்னுமில்லடா.. நல்லா நனைஞ்சுட்டா.. குளிர்ல நடுங்குறாளேனு குடுத்தேன்..” என்றவன், “போய் டிரஸ் மாத்து” என்றுவிட்டு, முகில் அறைக்குச் செல்ல, செல்பவனையே கண்ணீரோடு பார்த்தாள்.

“இரா..” என்று முகில் அவள் தோள் தொட,

மூக்கை உரிஞ்சியபடி, “உன் அத்தானுக்கு ரொம்பத்தான் கோவம் வருதுடா.. அய்யனார்னு பெயர் வச்சா வெறப்பாத்தான் இருப்பாராமா? அருவாள் ஒன்னு தான் குறை” என்றபடி, தான்யா அறைக்குச் சென்றாள்.

முகில் இருவரும் சென்ற திசையைப் பார்த்தவாறு நிற்க,

“எதோ சண்டை போல மாமா” என்று மதி கூறினாள்.

“எதுவாருந்தாலும் அவங்களே பார்த்துப்பாங்க.. பிள்ளை பட்டினியா வந்திருக்கும்.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று வள்ளி கூற,

“நானும் வரேன் அத்தை” என்று மதியும் சென்றாள்.

இருவரும் உடைமாற்றிவிட்டு வர, அவன் கூடத்திற்குச் செல்லும் முன்பே அவனிடம் ஓடியவள், “சரி கோச்சுக்காதீங்க.. நீங்களும் நானும் சேர்ந்து பாப்பாக்கு ஃபீஸ் கட்டலாம்.. இதைத்தான் கார்விட்டு இறங்கினுதுமே சொல்ல வந்தா அதுக்குள்ள கோச்சுக்குறீங்க” என்று கூற,

“நான் அதுக்காகக் கோவமே படலை.. நீ பேசினதுக்குத்தான் கோபப்பட்டேன்” என்றான்.

“எதுக்காருந்தாலும் கோபப்படாதீங்க” என்று அவள் கூற,

“இதுபோல நீ இப்ப இல்ல இறைவி.. அடிக்கடி சொல்ற.. நிஜமா சொல்றேன்.. அந்த வார்த்தைதான் அவ்வளோ கஷ்டமாருக்குது எனக்கு” என்று சுள்ளென்று கூறிவிட்டுச் சென்றான்.

‘நின்னு பேசாம போயிட்டே இருந்தா நான் எங்கிருந்துதான் பேசுறது?’ என்று மனதோடு அவனைத் திட்டியவள் கூடத்திற்கு வந்து, “முகி.. பாப்பா சாப்பிட்டாளா?” என்க,

“சாப்பிட்டுட்டா இரா.. நீ வா” என்றான்.

“பசிக்க..” என்று கூற வந்தவள், ‘ம்ஹும்.. அப்புறம் கூட்டமா சேர்ந்து அதுக்கும் கத்துவானுங்க’ என்றபடி, சென்று உணவு மேஜையில் அமர்ந்து கொண்டாள்.

ஒரு இருக்கைத் தள்ளிப்போய் அய்யனார் அமர,

அவனை முறைத்தவள், வள்ளி சமையலறைக்குள் இருப்பதை உறுதி செய்துகொண்டு, அவன் அருகே உள்ள இருக்கைக்கு மாறி அமர்ந்தாள்.

அய்யனார் அவளைப் பார்த்து முறைக்க, “சும்மா முறைக்காதீங்க.. எனக்கும் கோபமெல்லாம் வரும்.. முகி கிட்டக் கேட்டுப் பாருங்க. அப்பத் தெரியும்” என்றுவிட்டு அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

‘குழந்தைதான் இரா நீ’ என்று நினைத்து சிரித்தபடியே வந்த முகில், அய்யனார் அருகே அமர்ந்தான்.

அவன் கரம் பற்றி, ‘சாரி சொல்றேன்ல?’ என்று இதழசைத்து அவள் கூற,

அவன் முறைத்தபடியே வெடுக்கென்று கரமெடுத்துக் கொண்டான்.

அவனை முறைத்துப் பார்த்தவள் ஏதோ பேச வரும் நேரம் சமையலறையிலிருந்து பாத்திரங்களோடு வள்ளி வந்துவிட, அவரைக் கண்டு பாவை அமைதியானாள்.

அவள் செயலில் வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு அய்யனார் உணவு உண்ண, வள்ளியையும் அமர்த்திவிட்டு, மதி அனைவருக்கும் பரிமாறினாள்.

அனைவரும் உண்டு முடிக்கவும், “என்னை வீட்ல கொண்டுபோய் விடுங்க” என்று இறைவி அய்யனாரிடம் கேட்க,

“அம்மா தனியாருக்காங்க.. கார்ல உன்னை விட்டுட்டு திரும்ப வண்டியெடுத்துட்டு நான் போக லேட் ஆகும்” என்று வேண்டுமென்றே கூறினான்.

“கார் வேணாம்.. பைக்லயே கூட கொண்டுபோய் விடுங்க.. முகி மதியை வேற கூட்டிட்டுப் போய் விடனுமாம்.. என்ன முகி?” என்று அவனையும் வேறு இறைவி துணைக்கு அழைத்துக் கொண்டாள்.

வள்ளிக்கு அவள் செயலில் சிரிப்பு வந்துவிட்டது.

“அய்யா வேலா.. புள்ளையை விட்டுட்டுப் போப்பா” என்று வள்ளி கூற,

அவரைப் பார்த்துத் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி தலையசைத்தவன், உறங்கிக் கொண்டிருக்கும் சக்தியைத் தூக்கிக் கொண்டு சென்றான்.

அவனை முறைத்துவிட்டு, “நான் கிளம்புறேன்மா.. வரேன் முகி.. பை மதி” என்றபடி வெளியே சென்றாள்.

அவனிடம் பேச வேண்டும் சமாதானம் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் கூப்பிட்டு விட்டாள்.. ஆனால் தற்போது அவனோடு தனியாக இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று எண்ணும் போதுதான், இது அவர்களுக்கான முதல் இருசக்கர வாகனப் பயணம் என்று புரிந்தது.

வண்டியில் அமர்ந்து குழந்தையை முன்னே படுக்கப்போட்டுக் கொண்டு, தனது சட்டையை அவளுக்கு நன்கு போர்த்திவிட்டு அவன் நிமிர,

திருதிருவென்று விழித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

‘சிரிப்பு காட்டுறடி இறை’ என்று எண்ணியவன், “லேட் ஆகுது இறைவி” என்க,

“அ..ஆங்..” என்றபடி அவன் பின்னே வந்து அமர்ந்தாள்.

தயக்கம் என்று கூறிட இயலாதென்றாலும்.. கொஞ்சம் நாணம் எட்டிப்பார்க்கத்தான் செய்தது. இருந்தும் கூட அது அவளுக்குப் பிடித்தும் இருந்தது.

“போலாம்” என்று அவள் கூற,

லேசாய் சிரித்துக் கொண்டு வண்டியைச் செலுத்தினான்.

பேச வேண்டும் என்று நினைத்தவளுக்கு, அந்த இதமான தருணம், அமைதியையும் நிறைவையும் உணர மட்டும் வைத்ததே அன்றி, எதையும் பேச வேண்டும் என்பதை நினைவு செய்வதாய் இல்லை…

மௌனமாய்ப் பயணம் முடிந்து அவள் வீட்டு வாசலில் அவன் நிற்க, வண்டி நின்றதை உணரவே அவளுக்கு நேரம் பிடித்தது.

“மேடம்.. வீடு வந்துடுச்சு” என்று அவன் கூற,

பட்டென்று திரும்பிப் பார்த்தவள், ‘அச்சோ இறைவி…’ என்று தன்னை நிந்தித்தவளாய் இறங்கினாள்.

அவன் முன் வந்தவள் ஏதோ பேச வர, “இறை.. எனக்கு உன்னைப் புரியும்மா.. நீ பணம் கேட்காமல் வைக்கும்போது கூட எனக்கு உன்மேல கோபமில்லை.. எதாவது ஒரு சம்பவம் உன்னை நிச்சயம் பாதிச்சிருக்கும்னுதான் தோணுச்சு” என்று கூறினான்.

தான் கூறாமலே தன்னை புரிந்துகொள்கின்றான்…

முன்பு முகிலிடம் இதை உணர்ந்திருக்கின்றாள்.. நண்பனவனிடம் அன்பாய், அரவணைப்பாய் உணரப்பெற்றது, அவளவனிடம் காதலாய் உணரப்பெற, அவள் அறியாத சிலிர்ப்பு அவள் உடலில் ஓடி மறைந்தது.

“இறைவி.. உண்மையிலேயே நீ சின்னப் பொண்ணுதான்.. உன் வயசுக்கு உனக்கு இருக்கும் பக்குவம் நிச்சயம் அதிகம் தான்.. எல்டர் சோல் இன் யங் பாடி. நம்ம பாப்பாவை நீ வளர்க்குறியே.. பேரண்டிங் ஹேண்டில் பண்றதுக்கே தனி மெச்சூரிட்டி வேணும்.. அது உனக்குத் தாராளமா இருக்கு.. முன்ன எல்லாம் பதினாறு பதினேழு வயசுலயே கல்யாணம் பண்ணிப் பிள்ளை பெத்து நல்லா வளர்த்தாங்கதான்.. ஆனா நாம அதையெல்லாம் தாண்டி வந்துட்டோம்.. இந்த காலகட்டத்து சூழல் என்பதையும் தாண்டி, ஒவ்வொருத்தருக்கு ஒரு சூழல்னு யோசிக்கும்போது நிச்சயம் நீ வயசுக்கு மீறின மெச்சூரிட்டியோடவேதான் இருக்க. இந்த விஷயமெல்லாம் இன்னும் நினைச்சுட்டா இருப்பனு உன்னைக் கேட்க மாட்டேன்.. நீ இத்தனையைக் கடந்து வந்ததே பெருசு.. அதனால உன்னால கடக்க முடியாத, கடக்கக் கஷ்டமாருக்கும் விஷயங்களைக் கடக்க நான் துணையா இருப்பேன்” என்றவன், அவள் தலையில் கரம் வைத்து, சிகை கோதி, “உனக்குக் கஷ்டமாருக்கும் தான்.. ஆனா நீ ஏத்துக்கத்தான் வேணும்.. பாப்பாக்கு நானும் ஃபீஸ் கட்டுவேன்.. இது என் பிள்ளைனு என் உரிமையைக் காட்ட மட்டுமே இல்லை.. உன்னைப் பேசின வார்த்தையெல்லாம் உன் கால் தூசுக்கும் பெறாதுனு நீயே உணர என் காதலால் ஆன ஒரு உதவியா செய்றேன்” என்று கூறினான்.

கண்கள் கலங்கி, இதழ் புன்னகைக்க அவனைப் பார்த்தவள், “தேங்க்ஸ்” என்று அத்தனை ஆத்மார்த்தமான குரலில் கூறினாள்.

சிறு பிள்ளையின் சிகை கலைப்பதைப் போல், அவள் உச்சியில் கரம் வைத்து அசைத்து, அவள் சிகை கலைத்தவன், குழந்தையைப் பதமாய் தூக்கி அவளிடம் கொடுக்க, வாங்கித் தன் தோளில் போட்டவள், “நீங்களே நல்ல ஸ்கூலா பார்த்துச் சொல்லுங்க” என்றாள்.

மென்மையான புன்னகையுடன் சரியென்று தலையசைத்தவன், “குட் நைட்.. போய்ப் படு” என்க,

“ம்ம்..” என்று திரும்பியவள், மனதின் தூண்டுதலோடு திரும்பி, அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

அவள் இட்ட முத்தத்தில் திகைத்துப்போய் பார்த்தவன், கதவுக்குப் பின்னிருந்து எட்டிப் பார்த்து சிரித்துவிட்டுச் சென்றவளைப் பார்த்து, மந்தகாசப் புன்னகை சிந்திவிட்டுச் சென்றான்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
21
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்