
விசை-19
‘கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிகிச்சு..’ என்று பாடல் ஓடிக் கொண்டிருந்த மண்டபத்தில், தான் நியமித்த ஆட்களின் வேலையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள், இறைவி.
ஆம்! அவளது முயற்சியின் முதல் உயர்படியாய், அந்தத் திருமணத்தின், மண்டப அலங்காரம், ஆடை வடிவமைப்பு, உணவு பரிமாறுதல், மருதாணி போடுதல் ஆகியவை அவளின் கீழ் ஏற்பாடான ஆட்களால் நடந்துகொண்டிருந்தது.
தனியாக நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் என்று அவள் தொடங்கியிருக்கவில்லை என்றாலும் கூட, தனித்தனியாகத் தான் பிடித்த ஆட்களோடு, அலங்காரம் செய்வதற்குத் தனியாக வெளியே ஆள் எடுத்து, பொருட்களை மண்டபத்தாரிடம் பெற்றுக்கொண்டு, மணமக்கள் கேட்டதன்படி தானே மண்டப அலங்காரத்தை வடிவமைத்து ஏற்பாடு செய்திருந்தாள்.
பெரியளவு ஆடம்பரத் தேவைகள் இல்லாததால், உணவு, உடை, அலங்காரத்துடன் முடிந்தது அந்தத் திருமணம். அது அத்தனையும் இறைவியின் கீழ் ஏற்பாடான ஆட்களால் செய்யப்பட்டது தனி சிறப்பு.
அனைத்தையும் சரிபார்த்தவளிடம் வந்த மணப்பெண்ணின் தாய், “மேடைல அலங்காரம் அழகாருக்குனு வாரவக எல்லாம் சொல்லுறாக கண்ணு. ரொம்ப அழகா பண்ணிக் குடுத்துருக்க. அவ்ளோ சந்தோஷமா இருக்கு” என்று மனமாரக் கூற, அவளுக்கு அது அத்தனை ஆனந்தத்தைத் தந்தது.
அனைத்தையும் புகைப்படம் எடுத்து அத்தம்பதியரின் அனுமதியோடு தனது இணையப் பக்கங்களில் போட்டுக்கொண்டவள், அங்கிருந்து புறப்பட்டாள்.
அத்தனை சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் இருந்தது அவளுக்கு. உற்சாகத்துடன் முகிலின் வீட்டை நோக்கிப் பறந்தோடியவள், தோட்டத்துப் பக்கம் ஆள் நடமாடுவது தெரியவும், வேகமாய் சிறுபிள்ளையின் உற்சாகத்துடன் ஓடிச்சென்று, பின்னாலிருந்தே, “முகி ஐம் சோ ஹாப்பிடா” என்று அணைத்துக் கொண்டாள்.
கண்களை இறுக மூடியவள் விழியோரம் சந்தோஷத்தின் சாயலோடு நீர் மின்னியது.
“எவ்ளோ சந்தோஷமாருக்கேன் தெரியுமா? என் ஸ்டெப்பிங் ஸ்டோன்டா இது.. கேட்டரிங், டிரஸ் டிசைனிங், மேக்கப் ஆர்டிஸ்ட், டெகரேஷன், மெஹந்தி, அன்ட் ரேடியோ செட்டப்னு எல்லாம் அரேஞ்ச் பண்ணி மொத்த பேக்கேஜா போட்டு முதல் அடெம்ட்டா. அவ்ளோ ஹாப்பி. சீக்கிரமே ஆஃபீஸ் போல திறக்கனும்டா” என்று அவனை அணைத்தபடியே கூறியவள், அப்போதுதான் தான் அணைத்திருப்பவனிடமிருந்து வரும் பிரத்யேக மணத்தை உணர்ந்தாள்.
உச்சந்தலையில் ஆணி அடித்ததைப் போல் திடுக்கிட்டுப்போனவளாய் அவள் விலக, அவளை மெல்லத் திரும்பிப் பார்த்து, தன் மார்பிற்குக் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டான் அய்யனார்.
விழிகள் விரிய அதிர்ந்து போய், அச்சம் நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்தவளுக்கு, தற்போது அவனை அணைத்திருந்ததை நினைத்து உடல் நடுங்கியது.
தன்னைத் தவறாக நினைத்திடுவானோ என்ற அச்சம் அவளையும் மீறி அவள் அகத்தில் சூழ, “சா..சார்..நா.. நான்..அது.. நான் நிஜமா.. முகினுதான் நினைச்சேன். சத்தியமா நீங்கனு தெரில.. சாரி சார்.. ரியலி ரியலி சார்” என்று பதட்டமாய் மொழிந்தாள்.
இதழோரம் எட்டிப்பார்க்கும் புன்னகையை மறைத்தவனாய் அவன் அவளை நோக்க, இவளுக்கு உடல் வெளிப்படையாக நடுங்கத் துவங்கியது.
“சத்தியமா முகினு நினைச்சு தான் சார்..” என்று அவள் கூற,
அவனுக்குச் செல்ல உடைமை எட்டிப் பார்த்தது.
“ஏன் முகியாருந்தாதான் ஹக் பண்ணுவியா? எங்களுக்குலாம் இல்லையா?” என்று அவன் கேட்க, திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள்.
“என்னம்மா? ஹாப்பினெஸ் முகிட்டதான் சொல்லனுமா? ஜஸ்ட் ஃப்ரெண்டிலயா கேட்குறேன்” என்றதும் தான் அவளுக்குப் மூச்சே வந்தது.
அவன் மனம் உள்ளுக்குள் வெடிச் சிரிப்புச் சிரித்தது.
“சாரி சார்..” என்று அவள் கூற,
“ச்சில்.. நான் தப்பா நினைக்கலை” என்றான்.
ஏனோ அவளுக்கு உள்ளமெல்லாம் குறுகுறுத்தது. சிரம் தாழ்த்தியபடி மேலும் என்ன பேசுவதென்றே புரியாது அவள் விழிக்க, தனுக்கும் அய்யனாருக்குமான தேநீருடன் வந்த முகில், “ஹே இறைவி” என உற்சாகமாய் அழைத்தான்.
அதில் சற்றே பதறி நிமிர்ந்தவள், “முகில்..” என்றவளாய், “நா.. நான் அம்மாவைப் பாத்துட்டு வரேன்” என்று உள்ளே ஓடிவிட, அய்யனார் முறல்கள் மின்னப் புன்னகைத்துக் கொண்டான்.
“யோ அத்தான்.. என்னய்யா நடந்துச்சு?” என்று முகில் பீதியோடு கேட்க,
“ஒன் பிரெண்டு நீன்னு நினைச்சு என்னைக் கட்டிப்பிடிச்சுட்டா” என்று மந்தகாசப் புன்னகையுடன் கூறினான்.
“ஏதே!?” என்று முகில் அதிர,
“ச்சில்டா.. கட்டித்தான பிடிச்சா?” என்று அய்யனார் சிரிப்போடு கேட்க,
“போலீஸ்கார் வேற என்ன எதிர்பார்க்குறீங்களாம்?” என்று கேள்வியாய்க் கேட்டபடி தேநீரை நீட்டினான்.
“நத்திங் அதர் தேன் ஹர் பிரஸன்ஸ்” என்று அவள் சென்ற திசைகண்டு உணர்ந்து கூறியவனைப் பார்த்து முகில் புன்னகைக்க,
“அவ ஹாப்பி நியூஸோட வந்து என்னால ஷாக் ஆயிட்டா. நீ போய் என்னனு கேளு போ” என்று கூறினான்.
“செந்தில் மாமா புரிஞ்சுக்கலைனாகூட மதி எங்க உறவைப் புரிஞ்சுகிட்டா. அதேபோல இறைவிக்குனு வர்றவனும் எங்க உறவை புரிஞ்சுக்கனும்னு நிறைய நாள் மதிட்ட சொல்லிருக்கேன்.. இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு அத்தான்” என்று முகில் கூற,
“புரிஞ்சுக்காமலாடா?” என்றவன், “ஆனா எனக்கு உனக்கு இணையான இடம் அவகிட்ட வேணும். பொறாமைனு எடுத்துகிட்டாலும் எடுத்துக்கோ” என்று செல்ல உடைமையோடு கூறினான்.
அதில் சிரித்துக் கொண்ட முகில், “சீக்கிரத்துல அவளோட முதல் ப்ரியாரிடியா மாறிடுவீங்க” என்று கூற,
“இல்லடா.. அவளோட முதல் ப்ரியாரிட்டியா இருக்க நான் விரும்பலை..” என்றான்.
“ஏன் அத்தான்?” என்று முகில் கேட்க,
“அவளோட முதல் ப்ரியாரிடி எப்பவும் அவளாத்தான் இருக்கனும். எத்தனைப் பேர் அவ வாழ்க்கையில வந்தாலும், போனாலும், அவதான் அவளுக்கு முதல் ப்ரியாரிடியா இருக்கனும். நானா அவளானு வரும்போதுகூட அவ அவளைத் தேர்ந்தெடுக்கனும். அவளோட சந்தோஷத்தை இழந்து மத்தவங்களுக்கு அவ முக்கியத்துவம் கொடுக்கனும்னு அவசியமே இல்லை முகி.. அப்படி அவ வருந்திதான் நான் அவகிட்ட முன்னுரிமை பெறனுமா என்ன?” என்று கேட்டான்.
தன் அத்தானைப் பெருமை பொங்கப் பார்த்த முகில், “ஷி டிசர்வ் யூ அத்தான்” என்று மனமாரக் கூறினான்.
“ஐ டிசர்வ் ஹர் முகில்” என்றவன், “உள்ள போடா.. போய் அவகிட்ட பேசு” என்று கூற, முகில் புன்னகையாய் உள்ளே சென்றான்.
சில நிமிடங்களில் தானும் உள்ளே சென்ற அய்யனார் கண்டது, உற்சாகத்துடன் சிறு குழந்தை போல் அன்றைய நாளின் அழகிய நினைவுகளையெல்லாம் கண்கள் பிரகாசிக்க முகிலிடம் சொல்லிக் கொண்டிருந்த இறைவியைத் தான்.
“அவங்க என்கிட்ட வந்து டெரகேஷன்ஸ் ரொம்ப அழகாருக்குனு சொன்னாங்க முகி. எனக்கு எவ்ளோ சந்தோஷமாருந்துது தெரியுமா? சீக்கிரமே நாம இதை பிராண்ட் நேமோடத் தொடங்கனும் முகி” என்று உற்சாகமாய் நீள்விருக்கையில் மண்டியிட்டு அமர்ந்து அவன் கைகளைப் பற்றியபடி கூற,
பரிவாய் அவள் தலைகோதியவன், “பண்ணிடுவ இரா.. நீ இவ்ளோ தூரம் வந்துருக்க.. இதுக்கும் மேல போவ. உன்னால முடியும். நான் இருக்கேன்” என்று கூறினான்.
“உன்னால தான் முகி என் மன திடம் இன்னும் உடையாம இருக்கு. நீ இருக்கங்குற தைரியமே போதும் எனக்கு” என்று அவள் கூற,
“இல்லாம எங்கப்போவேன்?” என்று அவள் கன்னம் கில்லினான்.
அதில் புன்னகைத்தவள் துள்ளி எழுந்து, “ஓகேடா.. நான் வரேன்.. போய் மண்டபத்துல ஒரு பார்வைப் பார்த்துட்டுப் போய் சக்தியைக் கூட்டிட்டு வரனும். காலைலயே அவளைப் பொம்மைக்கடைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லித்தான் அனுப்பிச்சேன். அதை நினைச்சுட்டே தான் இருப்பா.. கிளம்புறேன்” என்க,
“ஓகேடா. பார்த்துப் போ” என்றான்.
தனது பையை எடுத்துக் கொண்டு இரண்டடி எடுத்து வைத்தவள், என்ன நினைத்தாளோ மீண்டும் வந்து அவனைக் கட்டிக் கொண்டு, “என்கூடவே இருப்பதான முகி?” என்றாள்.
அவளை அரவணைத்துக் கொண்டவன், “அதுல உனக்கெதும் சந்தேகமா என்ன?” என்று கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தவள், “இல்லவே இல்லை” என்றாள்.
“அப்ப அதே நம்பிக்கையோட போ. நீ எப்ப திரும்பிப் பார்த்தாலும் இந்த முகி உனக்காக இருப்பேன்” என்று முகில் கூற,
புன்னகையாய்ப் புறப்பட்டாள்.
வாசலில் சாய்ந்தபடி நிற்கும் அய்யனாரைப் பார்த்தவள் சம்பிரதாயமாய்ப் புன்னகைக்க,
தன் கரம் நீட்டி, “வாழ்த்துக்கள்” என்றான்.
அவளுக்குள் அப்படியொரு உற்சாகம்! அதை அவள் கண்களே காட்டிக் கொடுத்தன. “தேங்ஸ் சார்” என்றபடி அவன் கரம் பற்றிக் குலுக்க,
புன்சிரிப்புடன் தலையசைத்தான். அந்தச் சிரிப்பில் அவள் உள்மனம் பாகாய் உருகியது… அவன் பனியாய் கரைந்தான்…
அன்றைய மாலை தனது மகளை அவள் ஆசைப்பட்ட பொம்மைக்கடைக்குக் கூட்டிச் சென்று, அழகிய சின்ன கரடிப் பொம்மையை வாங்கிக் கொடுத்துக் கூட்டி வந்தாள்.
“அம்மா.. சக்கிக்கு ஏன் பொம்ம வாங்கித் தரேன் சொன்ன? பர்த்டேக்காகவா?” என்று சக்தி கேட்க,
“அதுக்கு இன்னும் டூ விக்ஸ் இருக்கு சக்திமா” என்று இறைவி கூறினாள்.
“அப்ப ஏன் பொம்மி?” என்று சக்தி கேட்க,
“அம்மாக்கு பெரிய வேலை கிடைச்சுருக்குல்ல? அதான் பாப்புக்கு அம்மா கிஃப்ட் தரேன்” என்று கூறினாள்.
“ஓ..” என்று கேட்டுக்கொண்டு அறைக்குள் சென்ற சக்தி, சில நிமிடங்களில் ஒரு தாளை அவள் முன் நீட்டினாள்.
மூன்று மனித பொம்மைகள் கைகோர்த்து இருக்க, பின்னே குட்டி வீடு, மரம், மலை சூரியன் என்ற அழகிய, குழந்தைகளுக்கே உரித்தான கிறுக்கல் ஓவியத்துடன், ‘strong mom’ என்று எழுதியிருந்தாள்.
“இது அம்மா, இது அம்மா பாட்டி, இது சக்தி. நீங்க ஸ்ட்ராங் மாம் இல்லையா? அதான் போட்ருக்கேன். அம்மாக்கு பெரிய வேலை கிடைச்சா சக்தி தானே கிஃப்ட் தரனும்? அதான்ம்மா என்னோட கிஃப்ட்” என்று சக்தி கூற,
“என் ராசாத்தி எம்புட்டு அழகா வரஞ்சிருக்க?” என்று வீராயி பேத்தியின் ஓவியம் பார்த்தபடி வாஞ்சையுடன் கூறினார்.
அவளைப் போலவே மழலை கொஞ்சும் அவள் ஓவியத்தைப் பார்த்துப் புன்னகைத்த இறைவி, மகளுக்கு முத்தம் வைத்து அணைத்துக் கொண்டாள்.
மனம் லேசாய், நிம்மதியாய் உணர, “அம்மா.. சக்தி ஹாப்பி.. மம்மி ஹாப்பிதான?” என்று மகள் கேட்டாள்.
சேய் தாயாய் மாறும் தருணங்களில் தாயும் சேயாகிவிடுவது வழமை தானே? இங்கு சேயாய் இருக்கும்போதே தாய் அவதாரம் எடுத்தவளின் மனநிலையையும் தான் சொல்ல வேண்டுமா?
புன்னகையாய் மகள் முகம் வருடியவள், “அம்மா சக்திக்கு நல்ல அம்மாவா இருக்கேனாடா குட்டி?” என்று கேட்க,
“நீங்கதான் பெஸ்ட் மாம் அம்மா” என்று கூறி சக்தி அவளைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
அதில் மெல்லிய புன்னகையுடன் வீராயி தன் பேர்த்திகளின் தலைகோத, அப்பாத்தாவைப் பார்த்துப் புன்னகைத்தவள், மகளைப் பார்த்தாள்.
“அம்மா.. சக்திக்கு பர்த்டே வருதுல்ல?” என்று சக்தி கேட்க,
“ஆமாடா கண்ணு.. அம்மா சொன்னபோலவே உனக்காக ஹனிகேக் செய்யுறேன் ஓகே?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“அம்மா நாம போலீஸ் சாரையும் கூப்பிடலாம்மா” என்று சக்தி அவள் கன்னம் கொஞ்சியபடி கூற,
இறைவிக்கு மனதிற்குள் திக்கென்றது.
“தர்ஷோட சிச்சா சொல்றேம்மா.. நியாபகம் இல்லையா?” என்றவள், அன்னையைக் கழுத்தோடு கட்டிக்கொண்டு அவள் காதில் மெல்லிய ஒலியில், “உங்க கார்டியன் ஏஞ்சல்” என்று கிசுகிசுக்க,
இவளுக்கு உள்ளம் அதிர்ந்து அடங்கியது.
“சக்திமா.. அவங்களுக்கு வேலையிருக்கும்டா.. நாம டிஸ்டர்ப் பண்ண முடியாது” என்று இறைவி கூற,
“ம்மா கூப்டுப் பாருங்கம்மா.. வேலையிருந்தா சக்தி கம்பல் பண்ண மாத்தேன். ப்ராமிஸ்” என்று சக்தி கெஞ்சுதலாய்க் கூறினாள்.
“சரிடி ராஜாத்தி.. நாம கூப்புடுவம்” என்று வீராயி கூறிட, இறைவியால் அவர் முன்பு எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியவில்லை.
சக்தி தன் அன்னையையே பார்த்திருக்க, வலுக்கட்டாயமாகப் புன்னகையை வரவழைத்துக் கொண்ட இறைவி, “கூப்டலாம் பாப்பா” என்றதும், “ஐ.. ஜாலி” என்று எழுந்து நின்று குதித்தாள்.
முதன்முறை மகளின் சந்தோஷத்தில் இறைவி அச்சம் கொண்டாள். இது எங்கு முடியுமோ? என்ற அச்சம் அது…
தன் கடந்தகாலத்தில் தனக்கு நடந்தவையால் தான் அசுத்தமான பெண், அவனுக்குத் தான் பொருத்தமற்றவள் என்றெல்லாம் என்றுமே இறைவி கருதியதில்லை. ஆனால் அவளைப் போலத்தான் அவனும், அவன் குடும்பத்தாரும் நினைப்பர், நினைக்க வேண்டும் என்றெல்லாம் எப்படி எதிர்பார்க்க இயலும்? மேலும் அவன் தன்னை விரும்ப வேண்டும் என்றெல்லாம் அவள் கருதியதேயில்லையே! நியூட்டனின் மூன்றாம் விதியே பொய்த்துப்போகும் அழகெல்லாம் இந்த ஆத்மார்த்தமான ஒருதலைக் காதலில் தானே நிகழும்? அப்படித்தான், அவனைத் தான் காதலித்தால் மட்டுமே போதும் என்றும், தான் வாழ்வு முழுமைக்கும் அது ஒன்றே போதுமென்றும் நினைத்தாள்.
மகள் அய்யனாரிடம் கொள்ளும் அன்பில், அவளிடம் தனது மனதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாமோ என்று பெரும் அச்சத்தை உருவாக்கியிருந்தது, இறைவிக்கு!
