
விசை-13
தன் மடியில் படுத்திருப்பவளின் அழுகை பெருமூச்சுக்களில் முகிலின் முகமெல்லாம் சிவந்து போனது.
துடிதுடித்து அமர்ந்திருந்தான்…
“எ..என்னவெல்லாம் பேசிட்டாங்க முகி.. ஜி..ஜீரணிக்கவே முடியல..” என்று திக்கித் திணறி அவள் கூற,
‘இன்னும் இவள் எதையெல்லாம் தாண்டி வர வேண்டுமோ இறைவா..’ என்று தன் தோழிக்காக வருந்தினான்.
“எ..என் பொண்ணு.. அ..அ..அவ அஞ்சு வயசு கொழந்தடா.. அவளைப்போய்” என்றவளுக்கு தன்னைப் பேசியதை விட மகளைப் பேசியது அதிகம் வலித்தது.
எழுந்து அவன் முகம் பார்த்தவள், “உன்னையும் கஷ்டப்படுத்துறேனா முகி?” என்றாள்…
அனைத்தையும் பக்குவமாய் அவள் சுமக்கின்றாள் என்பதற்காக அவளுக்கு வலியென்று இருந்துவிடாதா என்ன? எப்படிப் பார்த்தாலும் கல்லூரிச் சிட்டாய் சிறகடிக்கும் வயதில் இருக்க வேண்டிய பெண் தானே அவள்?
அவளை அத்தனை வேதனையோடு பார்த்தவன் அவள் கேட்ட கேள்வியில் துடிதுடித்துப் போனான்.
“ஏன்டாமா அப்படி சொல்ற?” என்று அவன் கேட்க,
“என்னால முடியல முகி.. எல்லாருக்கும் பதில் சொல்லி சொல்லி ஓஞ்சுபோன மாதிரி இருக்கு..” என்றாள்.
“கோலையாகிட்டேனா முகி?” என்று அவள் எங்கோ வெறித்தபடி கேட்க,
“இட்ஸ் ஃபைன் டு க்ரை இரா” என்று அவளைத் தோள் தாங்கினான்.
“வலிக்குது முகி..” என்று கமறும் குரலில் அவள் கூற, அவனுக்கு அது ஆயிரமாய் வலித்தது.
வெளியில் அமர்ந்திருத்த செந்திலுக்குத்தான் இருப்பு கொள்ளவில்லை. இறைவியுடன் தனியே அறைக்குச் சென்றிருக்கின்றான் என்பதே அவருக்கு அத்தனை கடுப்பாக இருந்தது. அதை சாதாரணமாகப் பார்த்த தன் மகளின் மேலும் அத்தனை கோபம் வந்தது அவருக்கு.
வீட்டைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அவர்கள் இருந்த அறையைத் திறந்துகொண்டு உள்ளே ஓடிப் பிடித்து விளையாடச் செல்ல,
அறை திறந்து மூடிய இடைவெளியில் அவர்கள் அணைத்திருப்பதைக் கண்டு செந்தில் பதறி எழுந்தார்.
தன் தந்தையைத் தடுத்துப் பிடித்த மதி, அருகிலிருக்கும் அய்யனாரை அணைத்துக் கொண்டாள்.
தங்கை திடீரென ஏன் அணைக்கின்றாள் என்று புரியாதபோதும், அவன் அவள் முதுகை புன்னகையுடன் தட்டிக் கொடுத்து, “மதிமா..” என்றான்.
தந்தையை நோக்கியவள், “இதுல என்னருக்கோ அதுதான் ப்பா அதுலயும் இருக்கு. நீங்க இறைவிய மட்டும் சந்தேகப்படலை. என் முகி மாமாவையும் சேர்த்து அசிங்கப்படுத்துறீங்க” என்று கண்ணீர் திரையிட்ட கண்களோடு கூறிச் சென்றாள்.
செந்திலுக்கு மகளின் வார்த்தையும் கண்ணீரும் அதிர்வைக் கொடுத்தது. இறைவி நல்லவள் என்ற எண்ணமெல்லாம் வராதபோதும் தன் மாப்பிள்ளை நல்லவர் அல்லவா என்ற எண்ணத்தில் அவர் அப்படியே அமர, மீண்டும் குழந்தைகள் வெளியே வரும்போது திறந்து மூடும் அறைப்பக்கம் பார்த்த அய்யனார், அவள் கண்ணீர் துடைத்து அவள் தோள் தட்டிக் கொடுக்கும் முகிலைப் பார்த்தான்.
அவன் இதழ் அவனையும் மீறி மலர்ந்தது.
அந்த இடம்.. அவளிடம் இருக்கும் அந்த உரிமை.. அதைவிட அதிகம் தனக்குக் கிடைத்தால்? என்று அவன் யோசிக்க, ஒருநொடி உள்ளம் அதிர்ந்தான்…
இறைவியைச் சமாதானம் செய்து கூட்டி வந்த முகில், அவளை உணவு மேஜையில் அமர்த்தி உணவிட, அவர்கள் அனைவரும் உண்ணும்போது இருந்த அமைதியெல்லாம் உடைந்து, அவள் உண்ணும்போது மதி, தர்வின், தான்யா, வள்ளி, வீராயி, காமாட்சி, குழந்தைகள் என அத்தனை பேரும் உணவு மேஜையில் கூடி கலகலத்தனர்.
அய்யனாருக்கு அவளிடம் அவர்கள் அத்தனைபேரின் சந்தோஷமும் இருப்பதாய்த் தோன்றியது.
அவன் பார்வை அவளில் நிலைக்க, யாரோ தன்னைப் பார்ப்பதாய் உணர்ந்து நிமிர்ந்தவள் முன் கூடத்து நீள்விருக்கையில் அமர்ந்திருந்தான்.
அவளைப் போல் அவன் பார்வையைத் திருப்பிக் கொள்ளவெல்லாம் இல்லை. அவளைத் தான் பார்த்திருந்தான்…
அவளுக்குள் மென்மையான அதிர்வு… அவள் சட்டென சிரம் தாழ்த்திக் கொள்ள, அவன் புன்னகைத்தபடி தலையை இடவலமாய் ஆட்டிக் கொண்டான்.
அவள் உண்டு முடிக்கவும், புறப்பட ஆயத்தமாக, “போலீஸ் சார்” என்று அவனிடம் ஓடிச் சென்ற மொட்டவளை அப்படியே அள்ளிக் கொண்டான்.
“பை.. நாங்க வீட்டுக்குப் போறோம்..” என்று சக்தி கூற,
அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “சரிடா குட்டிமா” என்றான்.
“நீங்க ஃப்ரீயா இருந்தா ஒருநாள் வாங்க.. என்கிட்டகூட பொம்ம டுப்பாக்கிலாம் இருக்கு. காட்டுறேன்” என்று சக்தி கூற,
காமாட்சி சிரித்துக் கொண்டார்.
“பாட்டி நீங்களும் வாங்க” என்று அவள் பெரிய மனுஷி போல் அழைக்க,
“கண்டிப்பாடா குட்டி” என்றார்.
இறைவி, சக்தி, வீராயியை விட்டுவர முகிலும் செல்ல,
“எங்க கல்யாணத்துக்கு முன்ன இறைவிக்கு லைஃப்ல ஏதாச்சும் நல்லது நடக்கனும்னு தான் வேண்டிக்கிட்டேன் அண்ணி..” என்று மதி மெல்லொலியில் தான்யாவிடம் கூறினாள்.
“பாவம் அண்ணி.. இன்னிக்கு யாரு என்ன சொன்னாங்க தெரியல.. அப்பா எதும் பேசிருப்பாரோனு வேற பயமாருக்கு.. ஏன் அப்பா இப்படி மத்தவங்க போல இறைவியைத் தப்பா நினைக்குறாங்களோனு கஷ்டமாருக்கு” என்று மதி கூற,
அவள் தோளில் கரம் போட்ட தான்யா, “காலப்போக்குல மாறும்னு நம்புவோம்டா” என்றாள்.
“ரெண்டு வருஷமா மாற மனசு இல்லையா அண்ணி? எ..என் வயசு அண்ணி.. ம்ஹும்.. என்னவிட ஒரு வயசு சின்னவ.. அவளுக்கு நடந்த கொடுமையெல்லாம் யாருக்கும் நடக்கக்கூடாது.. அவளுக்கு ஒரு நல்லது நடந்தா முகி மாமா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று மதி கூற,
“அந்தப் பொண்ணுக்கு என்னமா நடந்துச்சு?” என்று காமாட்சி கேட்டார்.
கேட்ட பின்புதான் மகன் என்ன சொல்வானோ? என அவர் அவனை நோக்க, அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவனுக்கும் அந்தக் கேள்விக்கான பதில் வேண்டுமே!
“வன்கொடுமை பெரிம்மா..” என்றவள் பெருமூச்சு விட்டாள்.
அன்று நடந்ததையெல்லாம் ஒப்பிக்க மனம் இல்லையோ, அதை கூறிடும் மன திடம் இல்லையோ.. ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.
“நான் சின்ன புள்ளைலயே கட்டி வச்சுட்டாங்க போலனுல நினைச்சேன்?” என்று காமாட்சி கூற,
“இல்ல அத்தை…” என்ற தான்யா, “அவ பட்ட கஷ்டம், படுற கஷ்டமெல்லாம் சொல்லி மாளாது அத்தை. ஆனா இத்தனைக்குப் பிறகும் அவகிட்ட ஒரு தைரியம் இருக்கு… சொந்தமா தொழில் பண்றா. மெஹந்தி ஆர்டிஸ்ட்டா இருக்கா. சூப்பரா வரைவா.. அதோ அந்த ஃப்ரேம்ல உள்ள எங்க படமெல்லாம் அவ வரைஞ்சதுதான்… இந்த விழா எல்லாம் ஏற்பாடு செய்வாங்களே.. அவங்களுக்கு ஈவென்ட் மேனேஜர்னு பேரு. அது ஆரமிக்கனும்னு அவளுக்கு ஆசை. அதுக்கு வேண்டிய தகவல், பணம்னு எல்லாம் சேகரிச்சு, பிள்ளையையும் வளர்த்து பாத்துக்குறா. ஒரு இடத்திலும் அவ முடங்கி உட்காரல. பதினஞ்சு வயசுல படிப்ப நிறுத்தினவ. ஆனா அவளுக்கு ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் மூனுமே தெரியும். அவளா ஃபோன் மூலமா கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டா. எதாவது ஒன்னு புதுசு புதுசா கத்துகிட்டே இருப்பா.. டுடோரியல்ல டுவல்தும் பாஸ் பண்ணினா. சிண்ட்ரெல்லா கதைல ராஜகுமாரன் வந்து அவ வாழ்க்கையை சரிசெய்த போல எந்த ராஜகுமாரனும் எனக்கு வரவேணாம். நானே சீர் செய்வேன்னு சொன்னவ. அவ மனசுக்கும் குணத்துக்கும் ரொம்ப நல்லா இருக்கனும்.. இருப்பா” என்று கூறினாள்.
வன்கொடுமை… இதை அய்யனார் எதிர்ப்பார்த்தே இருந்தான்…
மதி கூறியதும், அவனையும் மீறி உள்ளத்தில் அந்த கயவன் மீது தீரா ஆத்திரம், அவள் அனுபவித்த வலிகளால் உயிர் வதை… இரண்டும் அவனை ஒரு நிமிடமேனும் மூச்சடைக்க வைத்திருக்கும்…
தன்னையே அவதானித்தான்.. காதலா இனக்கவர்ச்சியா என்று குழம்ப அவன் விடலைப் பருவத்திலும் இல்லை… ஆனாலும் அவன் சட்டென அதைக் காதலிலும் சேர்த்துக் கொள்ளவில்லை… தன்னுணர்வுகள் தனக்குத் தெளிவாய் விளங்கும் வரை பொறுமை காக்க அவன் முடிவானான்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த இறைவி சென்று உடை மாற்றிக் கொண்டு படுத்து விட்டாள்…
சக்தியும் வந்து அவளோடு படுத்துக்கொள்ள, குழந்தைக்குத் தட்டிக் கொடுத்தபடியே அவள் கன்னத்தில் முத்தமிட்டவளுக்கு, அவள்மீது ஒரு மணம்…
அது அவளவனின் பிரத்யேக மணத்துடன் இணைந்த வாசனை திரவியத்தின் மணம்…
அதை ஆழ்ந்து சுவாசித்தபோது அவன் பார்வை மனதில் தோன்றியது…
நொடியில் அவளைப் பழைய நினைவுகள் இழுத்துக் கொண்டன…
கிட்டதட்ட நான்கு வருடங்கள் முன்பு…
அந்த இரைச்சலான பேருந்திற்குள், கையில் தன் கைக் குழந்தையுடன் மருட்சியாய் அமர்ந்திருந்தாள் இறைவி.
குழந்தையை வைத்துக் கொண்டு தனியே செல்லும் முதல் பயணம் கொஞ்சம் மிரட்சியாக இருந்ததென்றால், பெயருக்கு ஒன்றிரண்டு பெண்கள் மட்டுமே இருந்த பேருந்தில், தனது நிறுத்தம் வரும்வரை அந்தப் பெண்களும் தன்னோடு தொடர்வார்களா என்ற பயம் வேறு மேலும் கதிகலங்கச் செய்தது அவளை.
இதில் அவளைப் பார்க்கும் பார்வை யாவும் ஒருவித அசௌகரியத்தை வேறு கொடுத்தது.
‘ஏன் இப்படி பாக்குறாங்க என்னை’ என்று மனதிடம் அவள் கேட்ட கேள்விக்கு, ‘பதினாறு வயசுல கழுத்துல தாலியும் இல்லாம கையில ஒரு குழந்தையோட தன்னந்தனியா உக்காந்துருந்தா வேற எப்படி பாப்பாங்க?’ என்று மூளை பதில் கொடுத்தது.
பலவகையான அசௌகரியத்திற்கு நடுவிலும் தன் குழந்தையை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு அவள் திரும்பிக் கொண்டிருந்த நேரம், தூக்கம் கலைந்து பசியால் குழந்தை அழத் துவங்கியது.
பிறந்து சில மாதங்களே ஆன அந்தக் குழந்தையை, இந்த வளர்ந்த குழந்தைக்கு சமாளிக்கத் தெரியவுமில்லை. வீராயி வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கவும் தனியாகவே வந்துவிட்டாள். பாட்டி இல்லாமல் வந்திருக்க வேண்டாமோ என்று அவள் மனதோடு பயம் கொண்டு குழந்தையைத் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க, அவள் தனங்கள் தாய்ப்பால் சுரந்து நனையத் துவங்கியது.
முதலில் அதைக் கண்டு பதறியவள், பின் பாட்டி முன்பே சொல்லிக் கொடுத்த அனுபவத்தில் தன் நிலையைப் புரிந்துகொண்டாள்.
குழந்தையின் அழுகையும் நின்ற பாடில்லாத நிலையில் சுற்றியிருக்கும் ஆண்கள் அவளை வித்தியாசமாய்ப் பார்க்க, பெரும் சங்கடத்தில் அவளுக்குக் கண்கள் கலங்கியது.
வேறு வழி இல்லாமல் கொண்டு வந்த துண்டைகொண்டு தன்னைப் போர்த்திக் கொண்டவள், குழந்தைக்குத் தட்டிக் கொடுத்து சமன் செய்தபடி அமுதூட்ட முயற்சித்தாள்.
அப்போது வந்த நிறுத்தத்தில் அப் பேருந்திற்குள் தனது பெரிய பையுடன் நுழைந்தான், காவலர்கள் உடையிலிருக்கும் அந்த வாலிபன்.
பசியில் வெகுவாகக் கோபம்கொண்ட பிஞ்சு, கைகால்களை எட்டி உதைத்து, இறைவி போர்த்தியிருந்த துண்டை இழுத்துவிட, துண்டு கீழே விழுந்து அவளை அதிரச் செய்தது.
பாசம் காட்டிய பச்சிளம் குழந்தையை தண்டிக்கவும் முடியாமல், தன் நிலையை ஜீரணிக்கவும் முடியாமல் குழந்தையைக் கட்டிக் கொண்டு அப்படியே குனிந்துவிட்டவள் ஓவென்று அழுதேவிட்டாள்.
அவளைச் சுற்றிலும் துளைக்கும் பார்வையில் வெகுசிலரிடம் மட்டுமே கரிசனம் தெரிந்தது. மற்றவர்களின் பார்வை அவளைக் கூசச் செய்தது.
அவளது அழுகையிலும், பசியிலும், இறுகிய பிடியிலும் குழந்தை இன்னும் பீறிட்டு அழ, அவளை முழுதாய் ஒரு போர்வை மூடியது.
அதில் அதிர்ந்து போனவள் முகத்தை மட்டும் அதனிலிருந்து விலக்கி நிமிர்ந்து பார்க்க, “உனக்கு ஒன்னுமில்ல. நீ பாதுகாப்பாத்தான் இருக்க” என்று சாந்தமே உருவாய் அவளைப் பார்த்துக் கூறினான், அவ்வாலிபக் காவலன்.
கண்ணீர் நிறைந்த விழிகளோடு அவனைப் பார்த்தவள் பார்வையில், அவனது காக்கிச் சட்டையும், அதிலிருந்த ‘கற்குவேல் அய்யனார்’ என்ற அவன் பெயர் பொறித்த சின்னத்தையும் உள்வாங்கியது.
‘நீ பாதுகாப்பா தான் இருக்க’ என்ற அவனது வார்த்தை அவள் ஆழ்மனம் வரை தீண்ட, அவளால் சொல்லில் வடிக்க இயலாத ஒரு பாதுகாப்பை உணர்ந்தாள்.
குழந்தை உள்ளே வீரிட்டு அழ, “குழந்தையைப் பாருமா” என்றவன் அவளுக்கு முதுகுக் காட்டித் திரும்பி அமர்ந்தான்.
அவன் பார்வை அங்கு நின்றிருந்த ஆடவர்களைத் தீயாய் முறைத்ததை, மருட்சியுடன் வெவ்வேறு திசைகளில் திரும்பிக் கொண்டவர்களின் செயலே உணர்த்தியது.
போர்வைக்குள் புகுந்தவள் தன் குந்தையின் தேவைகளை முடிக்க, பசியாற உண்ட பிள்ளையும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றது.
ஒரு பெருமூச்சுடன் சாய்ந்தவள் தன்னைத் திருத்திக் கொண்டு அவனிடம் போர்வையைக் கொடுத்து, “தேங்ஸ் சார்” என்க,
லேசான புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டு எழுந்து நின்றான்.
“பரவால சார் உக்காந்துக்கோங்க” என்று அவள் கூற,
“இருக்கட்டும்மா. என் ஸ்டாப் வரப்போகுது. வீட்டுக்குப் பார்த்துப் போயிடுவியா?” என்று கேட்டான்.
அவள் தலை தன்னைப் போல் சம்மதமாய் ஆட, சரியென்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான்.
சில நிமிடங்களில் அவளுடைய நிறுத்தமும் வந்துவிட, கூடையையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள். அவள் மனம் அவனை நோக்கிப் பறந்தது… அந்தச் சொற்களும், குரலும், செயலும், விழிகளும் அவள் பிறந்தவீட்டில் கூட உணர்ந்திடாத பாதுகாப்பை உணர்த்தி அவள் உடலை சிலிர்த்தடங்கச் செய்தது…
அந்த அறியாத வயதில் ஒருவித ஈர்ப்பாக மட்டுமேதான் அவளுள் நுழைந்தான்… ஆனால் காலப்போக்கில் அவன் உணர்த்தியப் பாதுகாப்பு, அவளைக் காதலில் விழச் செய்திடும் என்பது அவளே எதிர்பாராத ஒன்று தான்…
ஆனால் ஒருநாளும் அவனைப் பற்றி அறிய வேண்டும், தன் காதலைச் சொல்ல வேண்டும், அவனோடு சேரவேண்டும் என்று அவள் ஆசை கொண்டதில்லை.
தான் உடலால் அசுத்தமானவள் என்ற எண்ணம் எப்போதுமே இறைவிக்குக் கிடையாது. யாரோ ஒருவன் செய்த பிழைக்கு நான் ஏன் புனிதமற்றவள் என்ற பட்டம் சுமக்க வேண்டும் என்று, பிறர் ஆறுதல் கூறும் முன்பே தன்னைத் தானே தேற்றியிருந்தவள் அவள்…
‘சிண்டரெல்லா கதைல வந்தபோல ராஜகுமாரன் வந்து என் வாழ்க்கை சிறப்பாக வேண்டாம். அதை சிறப்பாக்க என்னாலயே முடியும்’ என்றுதான் தனக்கென்று பாதைகள் உருவாக்கி அதனில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். இடையில் மிதிபடும் கண்ணாடித் துண்டுகள் வலித்து அவள் கதறித் துடித்தாலும், அவற்றை சுமந்து செல்லாமல் பிடுங்கி எறிந்துவிட்டுத்தான் செல்வாள்.
அவளுக்கு அவன் மீது காதலா என்றால் நிச்சயம்… மலையளவு காதல் உண்டு… ஆனால் அந்தக் காதலுக்கு அவனிடமிருந்து பதில் காதல் என்று ஏதும் தேவையாக இருக்கவில்லை. எனக்கும் என் காதலுக்கும் உன்னைக் காதலிப்பதிலேயே அலாதிச் சுகம் கிடைக்கிறது.. அதில் நீயும் பதிலுக்குக் காதலிக்கத்தான் வேண்டும் என்ற எண்ணமே இல்லை எனச் சொல்லி அவனை மனமார காதலித்தாள்.
மனதிற்குள் வாழ்ந்தாள்… அந்தக் காதல் அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அவள் மனதோடு அவனுடன் மாலை மாற்றி நின்றுகொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்து, அதை வரைபடமாய் வரைந்த நொடிதான் தன் ஆசையை உணர்ந்தாள்… ஆனால் அதற்கு பிறகும்கூட அதை வெளிப்படுத்த அவள் யோசிக்கவில்லை.. அவனுக்கு நாளையே திருமணம் என்றால்கூட மனமார வாழ்த்துவாள்… தனக்குள் பொத்திக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமா காதல்? தன் காதலுக்கு உடையவர் எங்கு யாருடன் இருந்தாலும், சந்தோஷமாக இருந்தால் போதும் என்பது காதலில்லையா? அப்படியான தன்னலமற்றக் காதல்தான், இறைவிக்கு அய்யனாரின் மேல்… அந்தக் காதலின் காந்தம் தான் அவளையும் அறியாமல், அவனை ஈர்த்துவிட்டதோ? அவள் நேசத்தின் புவியீர்ப்பு விசை தான், அவனையும் இழுக்கின்றதோ?
