
விசை-12
அழகிய எலுமிச்சை மஞ்சள் நிறப் புடவையில், கீழே பட்டையான அடர் நீல நிறக் கரை வைத்து, அதில் தங்க நிறத்தில் யானை போன்ற ஜரிகைகள் வைக்கப்பட்ட புடவை உடுத்தி, கழுத்தில் எப்போதும் அணியும் சின்ன சங்கிலி, கையில் அடர் நீல நிறக் கண்ணாடி வளையல், காதில் அழகாய் எளிமையாய் ஒரு ஜிமிக்கி அணிந்து, அளவான கூந்தலை அழகுறப் பின்னலிட்டு, அதில் மல்லிகை மொட்டுகளைக் கொண்டு தொடுத்த பூச்சரம் சூடியிருந்தாள், இறைவி.
அதே போன்ற வடிவமைப்பில் இளநீலம் மற்றும் அடர் நீலச் சேர்க்கையில் புடவை உடுத்தி, கழுத்தை ஒட்டிய சின்னத் தங்க அட்டிகை, காதில் தங்கக் குடை ஜிமிக்கி, கைகளில் கண்ணாடி வளைகளென அத்தனை அழகாய் வந்தாள், மதிவதனி.
அதே போன்று வெந்தய மஞ்சள் மற்றும் அடர் பச்சைச் சேர்க்கையில் புடவை உடுத்தி தான்யா வர, மூன்று பெண்மணிகளையும் ஒன்றாய்ப் பார்க்க அத்தனை அழகாய் இருந்தது.
அந்தப் புடவை மதிவதனியின் தேர்வு.
தேனி மாவட்டத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலே செந்திலின் குல தெய்வக் கோவில்.
அம்மனுக்குப் புடவை எடுக்கச் சென்றபோது, அந்த இளநீலப் புடவையில் மதியின் கண்கள் விழுந்தது. அதன் நிறம் அவளுக்கு அத்தனைப் பிடித்துப் போக, கடை ஊழியர் அதே போன்று மற்ற நிறங்களில் இருப்பதையும் எடுத்துக் காட்டினார்.
உடனே அவற்றில் மூன்று புடவைகளை எடுத்திருந்த மகளைக் கண்டு செந்தில் சிரித்துக் கொள்ள, அடுத்த நொடியே அதில் ஒன்று இறைவிக்கு என்று தெரிந்து அச் சிரிப்பு இல்லாமல் போனது.
அவருக்கு இறைவியை சுத்தமாகப் பிடிக்கவே இல்லை என்பதுதான் உண்மை. மருமகனுக்காக வாய் மூடி இருக்கின்றாரே தவிர, மற்றபடி இறைவி மீது அவருக்குக் கொஞ்சமும் நல்லெண்ணம் கிடையாது. அதை மதியோ முகிலோ மாற்ற நினைக்கவில்லை. “உங்கள் கருத்து உங்களுடையது. நீங்கள் இறைவியைத் தாங்கவும் வேண்டாம், தாக்கவும் வேண்டாம்” என்றே இருந்தனர்.
மூன்று புடவைகளையும் முகிலிடம் காட்டி, “ஒன்று எனக்கு, மீதி என் நாத்துனார்களுக்கு” என்று கூற,
அவன் அவளை அத்தனை காதலோடு பார்த்தான்.
தற்போது கௌமாரியம்மன் கோவிலில் பெண்கள் மூவரும் சாமான்களை எடுத்து வைத்தபடி இருக்க, கற்பூரவள்ளியும், செந்திலும் கோவில் பூசாரியிடம் பூசையைப் பற்றிப் பேசச் சென்றனர்.
தர்வின் மற்றும் முகில் வண்ணன் விறகுகளை வெட்டி அடுப்பைத் தயார் செய்துகொண்டிருக்க, வீராயி பாட்டி பேரப் பிள்ளைகளைக் கவனித்தபடி அமர்ந்துகொண்டார். வரவில்லை என்று விடாப்பிடியாய் மறுத்தவரை முகில்தான் வந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.
வீராயிக்கு செந்திலின் மனவோட்டம் தெரியும். பேத்தியைத் தடுக்காதபோதும் அவருக்கு வர சங்கடமாய் இருக்க, முகில்தான், ‘எங்க கல்யாணம் நல்லாருக்கனுமுனு வேண்டிகிட வரமாட்டியா ஆத்தா?’ எனக் கேட்டு அவரை அழைத்து வந்திருந்தான்.
விறகினை வெட்டிக்கொண்டிருந்த முகில், கலகலவென்று கேட்ட அவனவளின் சிரிப்பொலியில் நிமிர்ந்து பார்த்தான்.
தான்யாவிடம் ஏதோ பேசியபடி மதி சிரிக்க, அவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“ம்க்கும்…” என்று தர்வின் குரலைச் செறும, அதன் பின்பே வெளிப்படையான தன் காதல் பார்வையை உணர்ந்தவன் வெட்கத்துடன் தலை கவிழ்ந்தான்.
அதில் வாய்விட்டுச் சிரித்த தர்வின், முகிலின் சிகையைச் சிலுப்பிவிட்டு வேலையைத் தொடர,
பெரியோர் இருவரும் வந்தனர்.
“நல்ல நேரம் வரப் போகுது. பானையை ஏத்திப்புடுவமா?” என்று வள்ளி கேட்க,
பெண்கள் மூவரும் தலையசைத்தனர்.
“ஏத்தா மதி கண்ணு.. நீயே பொங்கல் வையுத்தா. நீயு வைக்குறதாதான் வேண்டிக்கிட்டேன்” என்று செந்தில் கூற,
“சரிப்பா” என்று கூறினாள்.
அவர் கூறுவதன் காரணம் புரிந்தாலும் யாருமே அதை ஒரு பொருட்டாக மதித்துக்கொள்ளவில்லை.
“தர்ஷன் எங்கத்தா?” என்று செந்தில் தான்யாவிடம் கேட்க,
“அங்கதான் சக்திகூட வெளாடிட்டு இருக்கான் மாமா” என்றாள்.
சிறு தலையசைப்புடன் அவர் அமர்ந்துவிட, வள்ளியும் உடன் அமர்ந்துகொண்டார்.
“என்னம்மா அத்தானை இன்னும் காணல?” என்று முகில் கேட்க,
வெல்லத்தைச் சீவிக்கொண்டிருந்த இறைவியின் கரம் ஒரு நொடி… ஒரே ஒரு நொடி அதன் வேலையை நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தது.
“காமாட்சி அன்னிக்கு ஃபோன் போட்டேன்டா. வந்துட்டுத்தான் இருக்காங்க” என்று வள்ளி கூற,
“சரிம்மா” என்றான்.
சில நிமிடங்களில் அய்யனாரும், காமாட்சியும் கோவிலுக்கு வந்திருந்தனர்.
எப்போதும் காக்கி உடையிலேயே பார்த்திருந்த கற்குவேல் அய்யனார், இன்று வேட்டி சட்டையில் அத்தனை அழகாய் இருந்தான். அடர் நீல நிறச் சட்டையும், வெள்ளை வேட்டியில் நீல நிறக் கரை வைத்த வேட்டியும் அணிந்துகொண்டு வந்தவனைக் கண்டு, “சிச்சா…” என்று தர்வின் ஓடிச் சென்றான்.
அவன் ‘சிச்சா’ என்று கத்தியதிலேயே அனைவரும் நிமிர்ந்திருக்க,
சக்தி பளிச்சென்ற புன்னகையுடன் உற்சாகமாய் தர்வினைத் தொடர்ந்து ஓடினாள்.
மகளின் உற்சாக ஓட்டத்தில் இறைவிக்குத்தான் பயப்புகை சூழ்ந்தது.
“ஐ போலீஸ் யுனிஃபார்ம் விட வேட்டி சட்டைல சூப்பரா இருக்கீங்க சிச்சா” என்று கூறிய தர்வினைத் தூக்கிக்கொண்டு முத்தம் வைத்த அய்யனார், “தர்வி குட்டியும் சூப்பரா இருக்கீங்களே” என்று கூறினான்.
அவன் தர்வினைக் கொஞ்சுவதைப் போல் தன்னையும் கொஞ்சுவானா என்ற ஏக்கத்துடன் பார்த்தபடி சக்தி நின்றுகொண்டிருக்க, குனிந்து அவளைப் பார்த்ததும், அவளையும் தூக்கிக்கொண்ட அய்யனார், “குட்டியும் கியூட்டா இருக்கீங்க” என்றான்.
காமாட்சி இரு குழந்தைகளுடன் மகன் நிற்பதை மனநிறைவோடு பார்த்தார். தன் மகனும் மணம் முடித்து இப்படிக் குழந்தை குட்டியென எப்போது வாழத் துவங்குவான் என்ற ஏக்கமும் காமாட்சிக்கு எழுந்தது.
“அத்தான்…” என்று அங்கு வந்த முகில், “புள்ளைகல இறக்குங்க கட்டிக்குறேன்” என்க,
அட்டகாசமாய்ச் சிரித்த அய்யனார், “ஏன்டே பிள்ளைககூடலாம் போட்டியிடுற?” எனக் கேட்டபடி குழந்தைகளை இறக்கி அவனை கட்டிக்கொண்டான்.
“மதி… உன்கிட்டக்கூட போட்டிபோட மாட்டான் போல” என்று தான்யா கூற,
“அண்ணி…” என்று வெட்கம் கொண்டு மிரட்டல் போல் சிணுங்கினாள்.
“என்னடா… என்ன சொல்றா உன் மாமன் மக?” என்று அய்யனார் கேட்க,
தன்னவளை ரசனையோடு பார்த்தவன், “அவ என்னத்த அத்தான் சொல்றா…” என்று பெருமூச்சு விட்டான்.
“என்னடா பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு?” என்று அய்யனார் கேட்க,
“நீங்க லவ்ஸ் பண்ணிப் பாருங்க அத்தான்… புரியும். இவளைப் படிக்கட்டும்னு சொன்னவன் நான்தான். அதுக்குன்னு எந்த நேரமும் படிச்சுட்டுத்தான் இருக்கா அத்தான். எப்பவாவது நானே அரிதாத்தான் கூப்பிடுவேன். அப்பவும் அத்தான் படிச்சுட்டு இருக்கேங்குறா… அடி போடினு வச்சுப் புடுவேன்…” என்று ஆயாசமாய்க் கூறினான்.
அடக்கமாட்டாது கைகள் இரண்டையும் தட்டிக்கொண்டு அய்யனார் சிரிக்க, தன்னையும் மீறி இறைவி அவன் சிரிப்பை ரசனையோடு ஏறிட்டாள்.
யாரோ தன்னைப் பார்ப்பதை அவனும் உணர்ந்தானோ? சிரித்தபடி அவன் நிமிர்ந்து பார்க்க, பட்டென்று தன் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.
அப்போதுதான் அய்யனாரின் பார்வை அவள்மீது படிந்தது. எந்த உடல்வாகுடையவருக்கும் அழகாய்ப் பொருந்திப்போவது இந்தப் புடவைதான். அதில் அவள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவள் கோதுமை நிறத்திற்கு அந்த எலுமிச்சை மஞ்சள் அத்தனை அழகாய்ப் பொருந்தியது.
பெரிதாக ஆடம்பர ஆபரணங்கள் இல்லை, வித்தியாசமான சிகை அலங்காரம் கூட இல்லை. சாதாரணமாகத் தலைக்குக் குளித்திருப்பதால் கொஞ்சம் முடியை விட்டுப் பின்னல் போட்டிருந்தாள்.
விறகு அடுப்பின் அருகே அமர்ந்திருப்பதால் வியர்த்து முன்னெற்றி முடிகள் நொற்றியோடு ஒட்டிக்கொண்டு, கீற்றாய் இட்டிருந்த மஞ்சள் மற்றும் குங்குமம் வியர்வையோடு சங்கமித்து மூக்கின் வழி இறங்கிக் கொண்டிருந்தது.
சில விநாடிகள் அவளைப் பார்த்ததிலேயே அவன் பார்வையில் இவையாவும் பதிந்தது. அவளிலிருந்து தன் பார்வையைத் திருப்பிக்கொண்ட பின்னர்தான், தனது பார்வையையே அவன் உணர்ந்தான்.
மனதில் இனம் புரியா சலனம்…
“அத்தான்… என்ன யோசனையாம்?” என்று முகில் கேட்க,
“ஆங்… ஒண்ணுமில்லடா” என்றான்.
“எல்லாம் வாங்க… பொங்கல் பொங்கப் போவுது” என்று தான்யா அழைக்க,
அனைவரும் சென்று பானை அருகே நின்றனர்.
“பிள்ளைங்க எங்கம்மா?” என்று வள்ளி கேட்க,
“அந்தப் பக்கம் விளையாடப் போச்சுதுங்கம்மா. இருங்க நான் போய்க் கூட்டிட்டு வரேன்” என்று கூறி இறைவி நகர, “ஆத்தாவையும் கூட்டி வா இரா” என்று முகில் கூறினான்.
“சரிடா” என்றபடி சென்றவள், “அப்பத்தா… பாலு பொங்கப் போகுது. எழுந்து போங்க” என்று கூற,
“அந்தா விளையாடுதுக பிள்ளைக” என்று வீராயி எழுந்தார்.
“நீங்க போங்க நான் கூப்டுட்டு வரேன்” என்று கூறி,
“சரித்தா” என்றவருக்கு எழ உதவி செய்து அனுப்பியவள், விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளிடம் சென்றாள்.
“தர்வின்… சக்தி எங்க?” என்று அவள் கேட்க,
“ஷ்ஷ்… சக்கி அங்க ஒளிஞ்சுருக்கா… நான் போய்க் கண்டுபிடிக்கணும்” என்றான்.
“அம்மா கூப்பிட்டாங்க தர்வி. ஓடு ஓடு” என்றவள், “தங்கக் கண்ணு… வாங்க சாமி கும்பிடணும்” என்க,
சக்தி எட்டிப் பார்த்து மறைந்துகொண்டாள்.
“தர்வி நீ போடா. அப்பத்தான் வருவா. அம்மா தேடப்போறாங்க” என்று கூறி அவள் தர்வினை அனுப்பிவிட்டு, “சக்தி வாடா அவன் போயிட்டான்” என்றாள்.
அதில் சக்தி வேகமாக ஓடிவர, போட்டிருந்த பாவாடை தடுக்கி கீழே விழுந்திருந்தாள்.
“அய்யோ பாப்பா…” என்றபடி இவள் பதறிவரும் நேரம், அருகிருந்த பெண்மணி ஒருவர் குழந்தையைத் தூக்கிவிட,
அவர் பின்னே சென்ற இறைவி அதிர்ந்து நின்றாள்.
“அச்சோ பாத்து வரக்கூடாதா கண்ணு?” என்று வாஞ்சையாய்க் கேட்டவர், இறைவியின் தாய் முத்தம்மாவே!
“அம்மா…” என்று அழுத சக்தி, அந்தப் பெண்மணியிடமிருந்து நகர்ந்து இறைவியை நோக்கிச் செல்ல, அவள் தாடையிலுள்ள சிராய்ப்பிலிருந்து இரத்தம் எட்டிப் பார்த்தது.
மகளை இறைவி பதட்டமாய் வாரி அணைக்கும் நேரம், முத்துவும் திரும்பிப் பார்த்து அதிர்ந்து போனார்.
இறைவிக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை… பேச வேண்டுமா என்றே புரியவில்லை. குறைந்தது தன் மகளைத் தூக்கிவிட்டதற்கு நன்றியாவது சொல்ல வேண்டுமா? என்று சுய யோசனையில் இருக்க,
“ச்சி… இந்த அசிங்கத்தைத்தான் தூக்கிவிட்டேனா?” என்று முத்து வார்தையை விட்டிருந்தார்.
“பார்த்துப் பேசும்மா…” என்று இறைவி கோபத்துடன் கூற, அவள் கண்கள் இரத்தமாய்ச் சிவந்து போயின. வலியில் அழுதபடி சக்தி அவளைக் கழுத்தோடு கட்டிக்கொள்ள, மகளுக்குத் தட்டிக்கொடுத்தாள்.
“என்னை அம்மானு கூப்பிடாதடி… அந்த அருகதையெல்லாம் உனக்கு இல்ல” என்று அவர் கூற,
“என்னைப் பொண்ணுன்னு சொல்லிக்க உனக்கும்தான் அருகதையில்ல” என்றாள், அதே கர்ஜனையோடு.
“ச்சி… பொழைக்குற கேவலமான பொழப்புக்கு உனக்கு இந்தக் கோவம் ஒன்னுதான் கேடு” என்று மேலும் மேலும் வார்த்தையால் அவர் அவளை நோகடிக்க,
அவரை ஓர் அடி நெருங்கியவள், “அவ்வளவுதான் மரியாதை” என்று விரல் நீட்டிக் கூறினாள்.
“உனக்கு அது ஒன்னுதான் கேடு” என்றவர், “உன்னையெல்லாம் எப்படி அந்தக் சாமி கோவிலுக்குள்ள விடுதோ. நீ செஞ்ச பாவம் உன் அப்பாவையில்ல வந்து தாக்கிருக்கு. மனுஷன் படுத்த படுக்கையா கிடக்காருடி. அக்கம் பக்கமெல்லாம் எவ்வளவு பேச்சுத் தெரியுமா உன்னால அவருக்கு?” என்று சேலைத் தலைப்பால் தன் கண்ணீரைத் துடைத்தார்.
அவரை ஏளனமாய்ப் பார்த்தவள், “நான் செஞ்ச புண்ணியத்துக்கு என் பிள்ளையோடவும் அப்பத்தாவோடவும் ரொம்பவே நல்லா இருக்கேன். எனக்கு நீங்க செஞ்ச பாவத்துக்குத்தான் கடவுள் இப்படி ஆட்டிப்படைக்கிறார்” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூறினாள்.
அவள் கூறிய வார்த்தைகளில் முத்துக்கு அத்தனை ஆத்திரம் வந்தது.
அவரை முறைத்துவிட்டு அவள் திரும்ப எத்தனிக்க,
“கேவலமான பொழப்புப் பொழைக்கிறதுக்குத்தான் துணைக்கு பொம்பப் பிள்ளையா பெத்து வச்சுகிட்டியே… நல்லா சீவி சிங்காரிச்சுட்டு ஊரை மயக்க ஏண்டி கோவிலுக்கு வந்தீங்க ஆத்தாளும் மகளும்?” என்று ஆத்திரத்தோடு கூறியிருந்தார்.
அதில் அத்தனை அதிர்வும் வலியும் ஒருசேர அனுபவித்தபடி திரும்பியவள் விழி இன்னும் சிவந்து நீர்மணிகள் திரண்டு நின்றது.
கோபத்தில் கோவிலுக்கு உள்ளே வீற்றிருக்கும் அம்மனைப் போல் உக்கிரமாய் நின்றாள்.
குழந்தை இன்னும் அழுதுகொண்டே இருக்க,
ஏதோ உள்ளுக்குள் உடைவதைப்போல் வதைபட்டாள்.
பெற்றவளிடமிருந்து எப்படியான வார்த்தைகள்? இதனைக் கேட்க அப்படி என்ன தான் செய்துவிட்டேன்? அதிலும் தன் மகளையும்… ஐந்து வயது குழந்தை என்றும் பாராமல் எப்படியான பேச்சு…?
ஆத்திரத்தோடு வந்தவள், பல்லைக் கடித்துக்கொண்டு, “எனக்குப் பெத்தவங்கனு யாருமே இல்லைன்னு உங்களை என்னைக்கோ தலைமுழுகிட்டேன்… வயசுக்கும் கோவிலுங்குறதுக்கும் தான் மரியாதை வச்சிருந்தேன்… இல்லேன்னா உங்களைக் கைநீட்டி அடிக்க எனக்கு ரெண்டு நொடி போதாது. ஏற்கெனவே படுற கஷ்டம் போதாதுன்னு பெத்த பொண்ணு கையால அடிவாங்கினதையும் கட்டிக்காத” என்று கூறிவிட்டு விறுவிறுவெனச் சென்றிருந்தாள்.
பொங்கல் வைத்திருக்கும் இடத்திற்குச் செல்லாது, கோவில் வெளியே உள்ள கடைக்குச் சென்றவள், தன் கண்ணில் வழியும் கண்ணீரை விடுத்து, “அம்மா…” என்று மார்பை முட்டும் பிள்ளையின் நிலையைக் கவனிக்கலானாள்.
தண்ணீர் புட்டி ஒன்றை வாங்கி, அவளுக்கு இரத்தம் எட்டிப் பார்த்த இடங்களையெல்லாம் அவள் துடைத்துவிட, குழந்தை வீரிட்டு அழுதாள்.
“அம்முபட்டு… டேய்… ஒன்னுமில்லடா” என்றவள் தன் கைகுட்டை கொண்டு துடைத்துவிட்டு மகளின் கண்ணீரைத் துடைத்து, “பார்த்து வரமாட்டியாடி? திடுதிடுன்னுதான் ஓடி வரனுமா?” என்று கடிந்தும் கொண்டாள்.
மேலும் அழுதபடி அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு சக்தி விசும்ப, ‘அய்யோ… அழுகாதடி… எனக்குத்தான் கஷ்டமா இருக்கு’ என்று மனதோடு மகளிடம் கெஞ்சியவள், அவளை அள்ளிக்கொண்டு தண்ணீர் புட்டிக்கான விலையைக் கேட்கும்போதுதான், கையில் பணம் கொண்டு வராதது நினைவு வந்தது.
அலைபேசியுமில்லாமல் யாரைக் கூப்பிட்டு எடுத்துவரச் சொல்ல என்று அவள் கையைப் பிசையும் நேரம், கடைக்காரரிடம் பணத்தை நீட்டியிருந்தான் கற்குவேல் அய்யனார்.
“என்ன வேணுங்க சார்?” என்று கடைக்காரர் கேட்க,
“அந்தத் தண்ணி பாட்டிலுக்கு” என்றான்.
இறைவி சட்டெனத் திரும்ப, அழுத்தமான பார்வையோடு அவளைப் பார்த்தான்.
விசும்பிய சக்தி, “அ…அம்மா…” என்று அவள் சேலையை இழுத்துக் கசக்கிப் பிடிக்க,
“தங்கம் அம்மா புடவை” என்று மெல்லிய ஒலியில் பதட்டமாய்க் கூறினாள்.
“பாப்பா…” என்று அய்யனார் அழைக்க, சட்டென நிமிர்ந்தாள்.
அவள் கையிலும், தாடையிலும் சிராய்ப்பு நன்கு தெரிந்தது.
“என்னடாமா?” என்று அவன் பரிவாய்க் கேட்க,
இதழ் பிதுக்கி, “கீழ விழுந்துட்டேன் போலீஸ் சார்” என்றாள்.
“அச்சுச்சோ…” என்றவன் கரம் நீட்ட, நொடியும் யோசிக்காத சக்தி அவனிடம் தாவியிருந்தாள்.
இறைவியே மகளைச் சற்று ஆச்சரியமாய் விழி விரித்து நோக்க, அவள் விரிந்த விழியில் தேங்கியிருந்த கண்ணீர் டொப்பெனக் கன்னத்தில் குதித்தது.
“அவங்க யாரு?” என்று அய்யனார் இறைவியிடம் கேட்க,
அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.
எனில்… கேட்டுவிட்டாரா? அவள் மனம் தடதடக்க, அவனிடம் அதே அழுத்தமான பார்வை.
இறைவியும் குழந்தையும் வரவில்லையென அவர்களை அழைக்க முகில் நகர எத்தனிக்க,
செந்திலுக்குக் கோபமாக வந்தது.
“மாப்பிள்ளை பொங்கலே உங்களுக்காவதான் வைக்குறது” என்று செந்தில் கூற,
“நீயிருடா நான் பாத்துட்டு வரேன்” என்று அய்யனார் வந்திருந்தான்.
அங்குதான் இறைவி அழும் குழந்தையை வைத்துக்கொண்டு யாருடனோ பேசுவது தெரிந்தது.
அவர்கள் பேசுவது அத்தனை தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும் அவர்களின் முகபாவங்களே, அது நல்ல பேச்சுவார்த்தை இல்லை என்பதைக் காட்டியது.
“யாரு?” என்று மீண்டும் அவன் அழுத்திக் கேட்க,
“எ…என்…” என்றவள், ‘அம்மா’ என்று கூற மனமின்றி, “என்னைப் பெத்தவங்க” என்று கூறினாள், ஒட்டாத குரலில்.
அவர் பேசிய வார்த்தையெல்லாம் மீண்டும் ஊர்வலம் வந்தது. தைரியமாய்ப் பதில் கொடுத்துவிட்டாள். ஆனால் வார்த்தை அவளுள் ஏற்படுத்திய வலி…? அதனை எங்கனம் ஆற்றுவது?
மீண்டும் அவளையும் மீறி கண்களில் நீர்மணி கோர்க்க,
“அம்மா… சக்தி அழழலமா… நீயும் அழாத” என்று சக்தி, அன்னை தான் அழுவதால் தான் அழுவதாக நினைத்துக் கூறினாள்.
குழந்தையைப் பார்த்த அய்யனார், கடைக்காரரிடம் சந்தனம் கொஞ்சம் வாங்கி, அவள் சிராய்ப்புகளில் மெல்ல… மிக மிக மெல்லப் பூசிவிட்டான்.
“தேங்க்யூ போலீஸ் சார்” என்று அவள் மழலையாய்க் கூற,
மெல்லிய புன்னகையுடன் தூக்கிக்கொண்டவன், “முகில் காத்திருக்கான்” என்றான்.
சட்டெனத் திரும்பி நின்றுகொண்டவள், தன் கைக்குட்டையில் வழிய வழிய நிற்காத கண்ணீரை அழுந்தத் துடைத்தாள்.
தற்போது கண்ணீரோடு தானும், காயத்தோடு மகளும் சென்றால் முகில் தங்களைத்தான் கவனிப்பான். அதில் செந்திலுக்குக் கோபம் எழுந்து மனக்கசப்பு உண்டாகும். பச்சை ரணம் காயாத இதயத்தில் உடனே இன்னொரு ரணத்தை ஏற்க இயலாது என்று உணர்ந்தவள்,
“நா… நான் பா… பாப்பாவோட க… க… கடைக்குப் போயிட்டு வரேன்” விசும்பல் தடைபோட்டபோதும் சொல்லிவிட்டாள்.
செந்தில் வந்ததிலிருந்து முகத்தில் காட்டிய அதிருப்தியிலேயே அவளை அவருக்குப் பிடிக்காதென்று அய்யனாருக்குப் புரிந்திருந்தது. அது ஏன் என்றுதான் தெரிந்திருக்கவில்லை.
அவளை ஆழ்ந்து பார்த்தவன் “எதுக்கு அழுறமா?” என்று அவன் கேட்டேவிட்டான்.
அய்யோ என்றானது அவளுக்கு.
“பாப்பா அழுதா அம்மாவும் உடனே அழுதுடுவாங்க” என்று சக்தி கூற,
அவள் கண்கள் உடைப்பெடுத்தது.
“அம்மா… என்னைத் தூக்கிவிட்ட பாட்டி போறாங்க… தேங்க்ஸ் கூட சொல்லல” என்று சக்தி, கோவிலிலிருந்து செல்லும் முத்துவைக் கைக்காட்டிக் கூறிட,
இப்படிப்பட்ட தன் மகளைப் பேச எப்படி அவருக்கு மனம் வந்தது என்று நொந்தேவிட்டாள்.
குபு குபுவென்று கண்ணீர் வந்தது.
மெல்லிய கேவல் அவளையும் மீறி வெளிவர,
அவளால் அழவும் முடியவில்லை, அதனை அடக்கவும் முடியவில்லை…
‘எனக்கு ஏன் இப்படி சோதனை தர்ற? அழக்கூட விடமாட்டியா நிம்மதியா?’ என்று இறைவனிடம் மௌனமாய் சண்டைப் பிடித்தாள்.
“ஸ்… சார்… ப்ளீஸ்…” என்று காற்றாய்க் அவள் கூற,
அவர்கள் வந்த மகிழுந்தின் அருகே சென்றான்.
குழந்தையோடு அவன் செல்வதால் அங்கேயே நிற்க இயலாது அவளும் பின்னே சென்றாள்.
மகிழுந்திற்கும் கோவில் மதில் சுவருக்கும் நடுவில் சென்று நின்றவன், மகிழுந்தைத் திறந்தான்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“உள்ள போய் அழுதுட்டு வா. அழுகையை அடக்கினா வலி குறையாது. கூடத்தான் செய்யும்” என்று அய்யனார் கூற,
காத்திருக்க முடியாது பொங்கி வெடிக்கும் கண்ணீரோடு காருக்குள் ஏறிவிட்டாள்.
“அம்மா…” என்று சக்தி அழைக்க,
“அம்மா வருவாங்க. நாம போகலாம்…” என்றவன், குழந்தையோடு உள்ளே சென்றுவிட்டான்.
மகிழுந்தைப் பூட்டிக்கொண்டு அப்படி அழுதாள்.
‘என் பிள்ளையையும் ஏன் இந்த வார்த்தை தொடருது? அ… அவ என்ன செஞ்சா?’ என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.
முகிலின் அரவணைப்பு அந்நொடி அவளுக்குத் தேவையாகப் பட்டது. ஆனால் அழைக்க முடியாத சூழல் புரிந்து தனியே அழுது கரைந்தாள்.
அழுது அழுது ஓய்ந்தே போனாள்.
கண்ணீர் தீர்ந்துபோன பின்புதான் அயர்ந்துபோய் அமர்ந்து,
இலக்கின்றி வெறித்தாள்.
‘ஏன் நான் அழணும்? அவங்க பேசிட்டா அது நிஜமாகிடுமா?’ என்று சுலபமாய்க் கேட்டுக்கொண்டாள்… ஆனால் அந்த வார்த்தைகளை ஜீரணிக்கவே இயலவில்லை…
உடல் ஜீரணிக்காதவற்றை வாந்தியாக வெளி தள்ளுவதைப் போல், மனம் ஜீரணிக்காத ஒன்றை கண்ணீரால் தள்ள முயற்சித்துக் கொண்டிருந்தாள். முகம் வீங்கிச் சிவந்து போனது.
பெருமூச்சுகளை இழுத்து விட்டாள். எழுந்து உள்ளே செல்லத்தான் வேண்டுமா என்றானது.
வெளியே வந்து நின்று, தண்ணீர் புட்டியில் மீதியிருந்த தண்ணீரில் தன் முகம் கழுவிவிட்டுப் பருகிக்கொண்டாள்.
அழுகை கொடுத்த ஆசுவாசம் அவளிடம்…
கோவிலுக்குள் சென்று,
பொங்கல் வைக்கும் இடத்தை விடுத்துச் சந்நிதிக்குச் சென்றாள்.
கைகூப்பாத நிலையில் அப்படியே அம்மனை வெறித்து நின்று,
‘கொடுக்குற கஷ்டத்துக்கு இணையாக தாங்கும் சக்தியையும் கொடு’ என்று மட்டும்தான் நினைத்துக்கொண்டாள்.
அவள் விழுந்து விழுந்து சாமிக் கும்பிடும் ஆத்திகவாதியுமில்லை, இறைவனே இல்லையென்றுச் சொல்லும் நாத்திகவாதியுமில்லை.
வாழ்வில் நடப்பது அனைத்தும் இறைவன் சித்தம் என்று நம்புபவள், நடப்பது, நடக்கப்போவது என்று எதற்கும் வேண்டுதல் வைத்திட மாட்டாள். எதுவாயினும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலைத்தான் வேண்டிடுவாள். இன்றும் அதைத்தான் வேண்டினாள். உடல் இறுகியது.
பொங்கல் வைக்கும் இடத்திற்கு அவள் செல்ல, பொங்கல் வைத்து முடித்திருந்தனர்.
“இரா எங்கடி போன?” என்று அவளிடம் வந்த முகில், அவள் முகம் கண்டு, “இரா என்னாச்சு?” என்றான்.
அவள் இறுக்கமாய் ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு நகரப் போக, அவள் கரம் பற்றி நிறுத்தியவன், “பாப்பாக்கு அடின்னாடி அழுத?” என்றான்.
அவன் ‘டி’ போட்டு அவளை அழைப்பதும், பொதுவிடத்தில் அவள் கரம் பற்றி நிற்பதும் செந்திலுக்கு அத்தனை காந்தியது.
“எதுவாருந்தாலும் உன்கிட்டத்தான் வரப்போறேன்… இப்ப என்கிட்ட எதுவும் கேட்காத. இன்னும் உன் மாமனாரும் நம்மளப் பார்த்து நாலு வார்த்தை கேட்டுட்டா செத்தே போயிடுவேன்” என்று அழுத்தமான குரலில் அமைதியாய் அவள் கூற, வெடுக்கென அவள் கரம் விட்டிருந்தான்.
என்ன பேசிவிட்டாய்? என்று வலி சுமந்த பார்வை அவனிடம்.
அமைதியாய்ச் சென்று வீராயியுடன் அமர்ந்துகொண்டாள்.
தூரம் சென்று அமர்ந்ததால் அவள் வீங்கிய முகம் மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
“தாயி என்னத்தா முகம் வீங்கிக் கெடக்கு? அழுதியாக்கும்?” என்று அவர் கேட்க,
“எதுவும் கேட்காத அப்பத்தா… ப்ளீஸ்” என்றாள்.
அய்யனார் அவளையே அழுத்தமாய்ப் பார்த்திருந்தான்.
சக்தி மீண்டும் சுமுகமாகி தர்ஷுடன் அமர்ந்துகொண்டாள்.
தர்ஷ் அவள் காயங்களுக்கு ஊதிவிட்டு, “சரியாப்போகும் சக்கி” என்க,
அவளும், “ஓகே தர்ஷ்” என்று சிரித்தாள்.
‘யார் இவ? என்ன ஆச்சு இவ வாழ்க்கைல? இத்தனைச் சின்ன வயசுல எப்படிக் குழந்தை? சைல்ட் மேரேஜா? ஆனால் அன்னிக்கு சக்தி பேசினதைப் பார்த்தால் அப்படித் தெரிலயே? அப்ப??’ என்று அய்யனாரின் மனம் பலதும் யோசிக்க, ‘இதெல்லாம் எதுக்கு உனக்கு? அடுத்தவங்க வாழ்க்கையைத் தேவையில்லாம நீ எப்ப ஆராய ஆரம்பிச்ச?’ என்று அவன் மனசாட்சி கேட்டது.
‘தேவையில்லாம என்ன?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டவனுக்கு தன்னுணர்வுகளில் அதிர்ச்சி…
“பொங்கல் ரெடி சாமிக்குப் படைப்போமா?” என்று மதி கூற,
“டேய்… முகில்… பானையைத் தூக்கு” என்று வள்ளி கூறினார்.
தூர அமர்ந்திருக்கும் இறைவியைப் பார்த்துக் கொண்டு பானையைத் தூக்கினான். அப்பத்தாவும் இறைவியும் மட்டும் வரவில்லை. மற்றவர்கள் சென்று இறைவனிடம் பானையை வைத்துப் பூஜித்துவிட்டு வந்தனர்.
“தம்பதியரா போய் எல்லாருக்கும் பிரசாதம் கொடுத்துட்டு வாங்க” என்று தான்யா கூற,
மதி சிறு வெட்கப் புன்னகையுடன் தலையசைத்தாள்.
இருவருமாகச் சென்று வீட்டு ஆட்களுக்குக் கொடுத்தது போக, கோவில் பக்தர்களுக்கெல்லாம் கொடுத்து வந்தனர்.
“இப்பத்தான் அக்கா மனசுக்கு நிறைவா இருக்கு” என்று செந்தில் கூற,
“இதே நிறைவோடு இருய்யா. ரெண்டு பேரு கல்யாணமும் நல்லபடியா நடக்கும்” என்று வள்ளி கூறினார்.
அனைத்தும் முடிந்து அனைவரும் மீண்டும் புறப்பட ஆயத்தமாயினர்.
ஒன்பது பத்து பேர் அமரும் வசதியுடைய காரினை வாடகைக்கு முகில் எடுத்திருக்க, அதில் தான் அனைவரும் ஏறினர்.
மதி, வீராயி மற்றும் குழந்தைகளுடன் இறைவி பின்னே அமர்ந்திட, ஓட்டுநர் இருக்கையில் முகிலும், அருகே செந்திலும், நடுவில் தான்யா, தர்வின் மற்றும் வள்ளி அமர்ந்தனர்.
“அத்தான்… வீட்டுக்கு வாங்க. சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்று கூறி அய்யானரையும் காமாட்சியையும் அழைத்துவிட்டுப் புறப்பட்டான்.
அமைதியாக அமர்ந்திருக்கும் இறைவியை அனைவரும் மாறி மாறிப் பார்த்தனர்.
‘என்னத்துக்கு அழுதுருக்கா?’ என்று மதி அவளையே பார்க்க, இவள் இம்மியும் பார்வையை அவள் புறம் திருப்பவில்லை.
அனைவரும் வீட்டை அடைய, உணவு வேளை அமைதியாய்ச் சென்றது. முகில் வந்து அதட்டியும்கூட பசியில்லையென உண்ண மறுத்துவிட்டாள்.
“பசிச்சாச் சாப்பிடத்தான் போறேன்… இப்பப் பசிக்கலைடா… நீ போய்ச் சாப்பிடு” என்று அவள் கூற,
“மாமாக்காக ஒதுங்குறியா இரா?” என்றான்.
“சத்தியமா இல்ல முகி. என்னை விரும்பும் ஒருத்தரை விட்டுட்டு வெறுக்கும் ஒருத்தருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆள் நானில்ல. இப்ப நிஜமா பசிக்கல” என்று அவள் கூற,
அங்கு வந்த அய்யனார், “முகி… சாப்பிடக் கூப்பிடுறாங்கடா. வாங்க” என்றான்.
“ஆங் அத்தான்…” என்றவன் இறைவியையே நோக்க,
“போடா” என்றாள்.
“வேத்தாள்போல ஃபீல் பண்ண வைக்காதடி… வலிக்குது” என்று அவன் கூற,
“என் வாழ்க்கையில நடந்த அத்தனையும் உன் ஒருத்தன்கிட்டதான் மனசுவிட்டு சொல்றேன்… உன்னை எப்படிடா வேத்தாளா நிறுத்துவேன்? ப்ளீஸ்டா முகி… நீ ஃபீல் பண்ணி என்னையும் அழ வச்சுடாத” என்றாள்.
“சோறுகூட இறங்காதுடி… உன் முகத்தை அப்படிப் பார்த்ததுலேருந்து என்னவோபோலருக்குது. அவங்க சாப்பிடட்டும்… நாம போய்ப் பேசுவோம்” என்று வருத்தமாய் அவன் கூற,
மதியும் அவனைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாள்.
“இறைவி முகி… சாப்பிட வாங்கப்பா” என்று மதி அழைக்க,
“ப்ளீஸ்டா… அவளுக்காகப் போ” என்று இதழசைத்தாள்.
அவர்களையே பார்த்து நின்றிருந்த அய்யனாரிடம், “ஏதும் பிரச்சினையா அண்ணா?” என்று மதி கேட்க,
மெல்லத் தலையசைத்தான்.
“இந்தப் பொண்ணுக்குன்னு ஏந்தான் வரிசைகட்டி வருதோ?” என்று வருந்திய மதி, “மாமா… நாம அப்புறம் சாப்பிடலாம். நீங்க பேசிட்டு வாங்க” என்றாள்.
இறைவிக்கு மதியின் புரிதல்தான் வலி கொடுத்தது.
“ப்ளீஸ்டா… அவளுக்காகப் போயேன்” என்று அவள் கெஞ்சவும், அதைத் தாங்க முடியாது உள்ளே சென்றான்.
தோட்டத்து இருக்கையிலேயே பொத்தென்று அமர்ந்துகொண்டாள்.
அவளையே ஆழ்ந்து பார்த்த அய்யனார் உள்ளே சென்றான்.
வீராயியும் வள்ளியும் இறைவியைக் கேட்க,
“பசிக்கலையாம்” என்று முகில் முடித்துக்கொண்டான்.
“காலைலயும் இம்புட்டுத்தான் சாப்பிட்டா… என்ன புள்ளையோ… சோத்துல வஞ்சகம் பண்ணி என்னத்தையாவது இழுத்துட்டு வரப்போறா” என்று வீராயி மனம் பொறுக்காது புலம்ப,
“செவுல்லயே நாலு போடுங்க ஆத்தா அப்படி வாரச்ச” என்றான்.
“முகி…” என்று தான்யா அதட்டலாய் அழைக்க,
அமைதியாய்த் தலையைக் குனிந்து கொண்டான்.
ஏதோ பிரச்சினை என்பது புரிந்தும் செந்திலுக்காக அனைவரும் அமைதி காத்தனர்.
உணவு வேளை இறுக்கமாய் முடிவடைய, நேரே முகில் அவளிடம் ஓடினான்.
“என்னதானாந்தா அந்தப் புள்ளைக்கு? மாப்பிள்ளையை ஓட ஓட வைக்குது… ச்சே” என்று செந்தில் கூற,
“ஐயா… ஏன் கோவப்படுற? பாவம் அந்தப் புள்ளையே தன்னந்தனியாய்த் தவிக்குது… நம்ம வீட்டுப் புள்ள துணையாத் தாங்குறான்னு பெருமைப்பட்டுக்குறதை விட்டுட்டு” என்று காமாட்சி கூறினார்.
“நாங்க பொண்ணைக் கட்டிக் கொடுக்கிறோம் அண்ணி… ஊரே அந்தப் புள்ளையை என்ன பேச்சு பேசுது தெரியுமா? அதுகூடச் சவகாசம் வச்சுகிட்டு மாப்பிள்ளை பேரும் கெடுது” என்று அவர் நொந்துக்கொள்ள,
“ஊரு ஆயிரம் பேசும்யா… நம்ம பிள்ளையை உனக்குத் தெரியாதா?” என்று காமாட்சி கேட்டார்.
“என் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். ஆனா அந்தப் புள்ள அப்படி இல்லையே… பஞ்சு சும்மா கிடந்தாலும் நெருப்பு கிட்ட வந்தா சேதாரம் பஞ்சுக்குத்தானே?” என்று செந்தில் கூற,
“ச்ச… தப்பாப் பேசாதய்யா… அந்தப் புள்ளையைப் பார்த்தா அப்படித் தெரியல” என்றார்.
“இல்லாமத்தான் ஊரே தப்பாப் பேசுதாக்கும்? என் புள்ளை வயசு… அஞ்சு வயசுப் புள்ளையை வச்சிருக்கு… இது போதாதா?” என்று அவர் கூற,
காமாட்சி அதிருப்தியாய் அவரைப் பார்த்தார்.
யாருமில்லா கூடத்தில்தான் இருவரின் பேச்சுவார்த்தையும் நிகழ்ந்தது.
“மருதாணி போடுதோ சொக்கு பொடி போடுதோ… யாரு கண்டா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்” என்று அவர் கூற,
“நீயும் பெண்பிள்ளை வச்சுருக்க சாமி… அடுத்த வீட்டுப் பிள்ளையைப் பழிக்காத” என்றுவிட்டு காமாட்சி சென்றுவிட்டார்.
