
விசை-10
“அம்மா..” என்று சக்தி ஓடிவந்து இறைவியை இடையோடு கட்டிக் கொள்ள,
அய்யனாரிடமிருந்து பார்வையை மகள் புறம் திருப்பியவள், மகள் உயரத்திற்கு மண்டியிட்டு, “தங்கபட்டு.. இன்னிக்கு உடம்புக்கு ஒன்னும் பண்ணலைதானே? மிச்சமிருந்த மாத்திரை மதியம் போட்டீங்களா?” என்று கேட்டாள்.
“சித்தி நான் சக்கியை கரெக்டா டேப்லெட்ஸ் போட வச்சுட்டேன்” என்றபடி தர்ஷன் அவ்விடம் வர,
“சூப்பர் தர்ஷ் குட்டி” என்றாள்.
கலங்கியிருந்த அவள் சிவந்த கன்னங்கள் பார்த்து, “அம்மா.. ஏன் அழற?” என்று சக்தி முகம் சுருக்கி கேட்க,
அவள் விழியோரத்திலிருந்து ஒரு துளி ஈரம் கசிந்தது.
அதை தன் பிஞ்சு விரலில் துடைத்துவிட்ட சக்தி, “சக்தி இஸ் ஸ்ட்ராங் கேர்ள் ம்மா. எனக்கு ஓகே ஆயிடுச்சு” என்க,
மகளைக் கண்டு புன்னகைத்தவள், “அம்மாக்கு கை வலிடா” என்றாள்.
அங்கு கூடியிருந்தோரின் கவனம் அவள் கையில் பதறிய, “சித்தி கை வீங்கிருக்கு” என்றபடி தர்ஷ் அவளிடம் வந்தான்.
வள்ளியும் அப்போது உள்ளே நுழைய,
“இறைவி.. என்னாச்சு?” என்று பதைபதைப்பாய் அவள் முகம் பார்த்து கேட்டார்.
“பாட்டி சித்தி கை பாருங்க” என்று தர்ஷ் காட்ட,
“அச்சச்சோ.. என்னடா இது?” என்று அவர் பதறி வந்தார்.
சங்கடத்துடன் எழுந்தவள், “ஒ..ஒன்னுமில்லம்மா” என்க,
“ஆப்பம் கணக்கா வீங்கிருக்கு ஒன்னுமில்லங்க” என்று கேட்டார்.
“கீழ விழுந்துட்டேன் ம்மா. வீட்டுக்குப் போய் அப்பத்தாவை உப்புக் கல் ஒத்தடம் தரச் சொன்னா சரியாப்போகும். முகி எப்ப வருவான் ம்மா?” என்று அவள் கேட்க,
“அதுக்கு வீடு வரை போகணுமாக்கும்? அந்த உப்பை நான் வருத்து தரமாட்டேனாமா?” என்று கேட்டார்.
“இல்லம்மா.. நான் வீட்டுக்குப் போய் குளிச்சு ஃப்ரெஷ் ஆயிட்டு பண்ணிக்குறேன்” என்று அவள் கூற,
“முதல்ல நீ போய் உட்காரு” என்று விரட்டினார்.
இருபத்தியோரு வயதுப் பெண்.. உள்ளங்கைகள் காய்ந்து, உடல் சற்றே பூசலாக இருந்தாலும் அதில் அப்பட்டமான பலவீனத்தை உணரும் வகையில், பரிதாபமாக இருந்தாள். அன்று இரவு அவளிடம் இருந்த மிடுக்குக்கூட தற்போது இல்லாது அத்தனை சோர்வாய் தெரிந்தாள்.
அய்யனாரும் சென்று அமர, அவளுக்குப் பழச்சாறு எடுத்து வந்தவர், “வேலா.. உன்ன மறந்தேனே.. இதுதாம்பா நம்ம இறைவி. சக்தியோட அம்மா. இறைவி இவன் வேலன் ம்மா. முகில் அடிக்கடி அவன் அத்தான் அத்தான்னு சொல்வானே.. அது இவன்தான்” என்று பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார்.
அவள் மரியாதை நிமித்தமாய் அவனைப் பார்த்து மென் புன்னகையை இட இதழுக்குக் கட்டளை பிறப்பித்துத் தலையசைக்க, அவனும் பதில் தலையசைப்புக் கொடுத்தான்.
“நீ இதை குடி. நான் உப்பு வருத்து எடுத்துட்டு வரேன். வேலா.. கிளம்பி போயிடாதப்பா. நைட்டு சாப்டுட்டுப் போ” என்று வள்ளி கூற,
அடுத்து இரவு ரோந்துப்பணிதான் செல்லவேண்டும் என்பதால் சரியென்று தலையசைத்தவன், அவனது அன்னைக்கும் தகவல் சொல்லியிருந்தான்.
“சிச்சா.. இவங்கதான் சித்தி” என்று தர்ஷ் கூற,
“ஆமா இவங்கதான் என் மம்மி” என்று சக்தியும் கூறினாள்.
அவனுக்கு உள்ளுக்குள் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை சிறிய பெண்ணுக்கு குழந்தையா? அதுவும் ஐந்து வயதில்… தத்துப்பெண் என்று கூறுவதற்கும் வாய்ப்பின்றி இறைவியின் முக அமைப்போடுதான் சக்தியும் இருந்தாள். அதற்காக அவளைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை என்றாலும் அதிராமல் இருக்க முடியவில்லை.
“அம்மா.. இவங்க தர்ஷ் சிச்சாதானாம். இவங்ககூடதான் டுப் டுப்ல வந்தேனே” என்று சக்தி அத்தனை உற்சாகமாய் கூற,
அதற்கும் புன்னகையே பதிலாய்.
தனது அன்னையின் ‘வெல்விஷர்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டதால் சக்திக்கு அய்யனாரிடம் வாய் ஓயாமல் பேச அத்தனை பிடித்திருந்தது. ஆனால் இறைவிக்குத்தான் எங்கே மகள் எதையும் உளறிவிடுவாளோ என்று அச்சமாக இருந்தது. அவள் தன் அன்னை அப்படி இப்படியென புராணம் பாட, தர்ஷன் ஒத்து ஊத, இவளுக்குப் பெரும் சங்கடமாய் போனது.
“சக்தி.. ஹோம் வொர்க் முடிச்சியா?” என சட்டென்று கண்டிப்புடன் அவள் கேட்க,
“அ..அது.. மேக்ஸ் மட்டும் முடிச்சேன் ம்மா” எனக் குழந்தை பம்பினாள்.
“ஹோம் வொர்க் இங்கேயே முடிச்சாதான் டோரா.. இல்லைனா போனதும் எழுதி முடிச்சுட்டு தூங்கதான் செய்யணும்” என்று அன்னைக்கே உரிய மிரட்டலோடு அவள் கூற,
முகம் சுருங்கி இதழ் பிதுக்கியவள், “நான் ஹோம் வொர்க் முடிச்சுட்டு வர வரைக்கும் இருப்பீங்களா?” என்று அய்யனாரிடம் கேட்டாள்.
அவள் கேட்டத்தில் ‘அச்சச்சோ’ என்று உள்ளுக்குள் அவன் இளக,
வருத்த உப்புப் பொட்டலத்துடன் வந்த வள்ளி, “அதுலாம் இருப்பாங்க. நீங்க போய் எழுதி முடிங்க பசங்களா” என்றார்.
அவள் அய்யனாரைப் பார்க்க, அவள் கன்னம் கொஞ்சியவன், “இருப்பேன் குட்டி” என்றான்.
“சிச்சா.. நானும் முடிச்சுட்டு வரேன். ப்ளீஸ் இருங்க” என்று கூறிய தர்ஷனும் சக்தியுடன் செல்ல,
செல்லும் குழந்தையையே பார்த்திருந்த அய்யனார், எதிர்பாராமல் வள்ளி ஒத்தடம் வைத்ததில், “அய்யோ அம்மா..” என்று லேசாய் இறைவி அலறியதில் சட்டெனத் திரும்பினான்.
“அய்யோ கண்ணு.. ரொம்ப வலிக்குதா? சாரிடா” என்று வள்ளி கூற,
கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் குளம் கட்டியது. “அ..அம்மா.. நானே வச்சுக்குறேனே” என்று அவள் கூற,
“நான் வச்சுவிடுறேன் நீ இரு” என்று மீண்டும் வைத்துவிட்டார்.
கீழ் உதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு, “ம்ம்..” என்று அவள் முனக,
கண்ணோரம் நீர் வழிந்தது.
“அத்தை.. ரொம்ப முடியலைனா ஆஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாமே?” என்று அய்யனார் கூற,
“போவமா இறைவி?” என்று வள்ளி கேட்டார்.
“இல்லம்மா.. ஒத்தடத்துக்கே சரியாப்போகும். இப்ப ஒத்தடம் வச்சுட்டுப் போய் தூங்கி எழுந்தாலே சரியாகும். அப்பத்தா எதாவது அரைச்சுப் போட்டும் விடுவாங்க. எனக்குலாம் அதுதான் கேட்கும்” என்று ஒருவாறு அவள் கூறிட, அவரும் சரியென ஒத்தடம் கொடுத்தார்.
கத்திக் கூப்பாடு போடவில்லை. அவ்வப்போது ‘ஸ்ஸ்..’ என்று வலி பொறுக்காமல் சப்தம் எழுப்பினாள்.
ஆனால் இறுக மூடிய அவள் விழியோரம் வழியும் கண்ணீர் அவளது வலியை எடுத்துக் கூறியது.
“எப்புடியும் ஆத்தா பழஞ்சோறுதான்.. நீ போய் உனக்குன்னு செய்ய வேணாம். இங்கயே சாப்டு கெளம்பு. செத்தபோயி அந்த ரூம்ல படு. தான்யா வரவும் எழுப்புறேன்” என்று வள்ளி கூற, அதற்குமேல் அங்கு அமர்ந்திருக்க முடியாது சிறு தலையசைப்புடன் அறைக்குள் சென்றாள்.
உள்ளே சென்றதும் கதவிலேயே சாய்ந்து அமர்ந்திட்டவள் அப்போதுதான் கண்ணீரைச் சுதந்திரமாய் திறந்து விட்டாள்.
பிறர் முன் தன் கண்ணீர் என்றுமே வெளிப்பட்டுவிடக் கூடாது என்று இருப்பவளுக்கு முகில் மட்டுமே அதற்கு விதிவிலக்கு… தன் வலியை அவள் மனம் விட்டுக் கதறுவது அவனிடம் மட்டுமே.. சக்திக்கு ஏதுமெனில் கூட சட்டென அழுதிடுபவள் தனக்கான அழுகையைத் தனிமையில் மட்டுமே வடிப்பாள்.
அறைக்குள் அப்படியே அமர்ந்து விட்டவள், தன் வலி தீரும் மட்டும் மௌனமாக அழுதுவிட்டு அப்படியே படுத்துக் கொண்டாள்.
சென்று முகிலின் சட்டை மற்றும் வேட்டியை மாற்றிக் கொண்டு அய்யனார் வர, வள்ளி சமையல் வேலைகளைப் பார்க்கத் துவங்கினார்.
தானும் உள்ளே சென்றவன் அவருக்கு உதவ, “அய்யா ராசா.. நீயும் போயி ஒக்காருய்யா” என்று வாஞ்சையாய் கூறினார்.
“ஏன்? நான் செய்யக்கூடாதா அத்தே? இதும் எம்வீடுதான?” என்று அவன் கேட்க,
“அடியாத்தீ.. ஒனக்கு இந்தூட்டுல உரிமையில்லன்னு சொல்லிட்டா எம்புள்ள என்னையே தொறத்திடுவான்” என்று கூறினார்.
அதில் சிரித்துக் கொண்டவன் அவருக்குக் காய்கறிகள் நறுக்க உதவ,
“அடடே.. அத்தான்” என்றபடி தன்னவனுடன் உள்ளே வந்தாள் தான்யா.
“தானுமா” என்று எழுந்தவன், “வாங்கண்ணா” என்க,
“எப்ப வந்தப்பா?” என்று தர்வின் கேட்டான்.
“பிள்ளைகளை கூட்டிவந்தது வேலுதான். முகி ஏதோ பேக்டரில வேலைன்னு போனான். இன்னும் ஆளைக் காணலையே” என்று வள்ளி கூற,
அப்போதே தொழிற்சாலையில் பிரச்சினை என்று முகில் சொன்னது நினைவு வந்தது.
“சரி நீங்க ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க” என்று கூறிய வேலு முகிலுக்கு அழைக்க,
அழைப்பை ஏற்றவன், “ஒன்னும் பயப்படாதீங்க அத்தான். எல்லாம் முடிஞ்சுது. வீட்டுக்குத்தான் வாரேன்” என்று முகில் கூறினான்.
“ஒரு ஃபோன் கூட போட்டு சொல்ல மாட்டியாடா?” என்று அய்யனார் கடிந்து கொள்ள,
“என் வேலு அத்தான் போடுவாங்கனுதான் எனக்குத் தெரியுமே” என்றான்.
அதில் அய்யனாரின் முகம் பூவாய் மலர்ந்தது.
“வந்து சேரு” என்று வைத்துவிட்டவன் உள்ளே செல்ல, வள்ளி தான்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
“ஆப்பமா வீங்கி கெடக்குடி தானு. ஒத்தடம் தந்துருக்கேன். உள்ள போயி படுத்துருக்கா” என்று அவர் கூறும் நேரம் பிள்ளைகளும் வீட்டுப்பாடம் முடித்துவிட்டு வந்தனர்.
“தானு பெய்மா.. நானும் தர்ஷும் ஹோம்வொர்க் முடிச்சுட்டோம்” என்று சக்தி கூற,
“அப்படியாடி தங்கமே” என்று வாங்கி அவற்றைச் சரிபார்த்தாள்.
தர்வின் சக்திக்கு வாங்கித்தருவதாய் கூறிய கதை புத்தகத்துடன் வந்து நீட்ட,
“ஐ தர்விப்பா..” என்று அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.
ஆசைதீர குழந்தையை அள்ளிக் கொஞ்சியவனுக்கு முத்தம் வைத்தவள், “நீங்கதான் தி பெஸ்ட் டாடி தர்விப்பா” என்க, அவனுக்கு அது நெகிழ்வாக இருந்தது.
“நீ போய் இறைவியைக் கூட்டிட்டு வரியா தானு?” என்று வள்ளி கேட்க,
“சாப்பாடு ரெடி பண்ணிட்டு எழுப்புவோம் ம்மா. அவ தூங்கட்டும் பாவம். இன்னிக்கு அடுத்தடுத்து ரெண்டு பெரிய ஆர்டர்னு ஆல்ரெடி நேத்து முகில் புலம்பிட்டுத்தான் இருந்தான். கை வலி இப்படி விழுந்து வரணும்னு இருக்கு பாரு” என்று தான்யா கூறினாள்.
சரியென மீண்டும் அனைவரும் பேச்சிலும் வேலையிலும் இணையும் நேரம், முகிலும் மதியும் ஒன்றாக உள்ளே வந்தனர்.
“ஏதோ ஃபேக்டரி விஷயமா போனன்னு அம்மா சொன்னாங்க.. நீ மதியோட வர்றத பாத்தா அப்படி தெரியலையே?” என்று தான்யா கேலியில் இறங்க,
மதி நாணம் கொண்டு, “அண்ணி.. நா.. நான் பலகாரம் குடுக்கத்தான் வந்தேன்” என்று கூறினாள்.
“யாருக்கு?” என்று தான்யா மேலும் சீண்ட,
“தானு.. பிள்ளைகள வச்சுட்டு” என்று தர்வின் கடிந்து கொண்டான்.
“நல்லா சொல்லுங்க அண்ணா” என்ற மதி, “அட.. போலீஸ் அண்ணேனும் இங்கதானா?” என்று கேட்க,
“ஆமா அத்தே.. சிச்சா ஈவினிங்ல இருந்து இங்கதான்” என்று தர்வின் கூறினான்.
தான் செய்து கொண்டுவந்த பலகாரத்தை வள்ளியிடம் கொடுத்தவள், கூடத்தைப் பார்வையால் அலச,
“நீ தேட வேண்டியவன்தான் உன் பக்கத்துலயே இருக்கானேடாமா” எனத் தற்போது அய்யனாரும் கேலி செய்தான்.
“அண்ணா…” என்று சிணுங்கியவளைக் கண்டு முகில் உள்ளுக்குள் அழகாய் சிரித்தான்.
தன் பிடரி முடி கோதிக் கொண்டு அவன் வெட்கம் கொள்ளும் அழகில்,
“ஆண்கள் வெட்கப்படும் தருணம்.. என் முகில் வெட்கப்பட கண்டுகொண்டேன்” என்று அய்யனார் மேலும் கேலி செய்தான்.
“அத்தான்..” என்று பல்லைக் கடித்தவன், ‘இரா மாறியே கேலி செய்றாரு’ என்று நினைத்துக் கொள்ள,
“இறைவி இன்னுமா வரல?” என்று மதி கேட்டாள்.
“அதான? இரா எங்கம்மா?” என்று முகில் கேட்க,
மீண்டும் வள்ளி அவளைப் பற்றிப் புலம்பினார்.
“நான் பாத்துட்டு வரேன்” என்றவன் அவள் அறைக்குள் செல்ல,
கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளும் அப்போதுதான் உறக்கம் கலைந்து எழுந்திருந்தாள்.
ஒத்தடம் கொடுத்ததும், ஓய்வு எடுத்ததும் ஓரளவு வலி மட்டுப்பட்டிருக்க, வீக்கம் சற்றே குறைந்தது போன்ற உணர்வை அவளுக்குக் கொடுத்தது.
“இரா..” என்றபடி முகில் வர,
சோர்வாய் எழுந்தவள் சோபையாய் புன்னகைத்தாள்.
“நீ ஒரேடியா ரெண்டு ஏத்துக்கும்போதே நினைச்சேன்டி..” என்றபடி அமர்ந்தவன் அவள் கையை ஆராய,
அவன் தோளில் தலை சாய்த்தாள்.
அவள் தலையை மிக பரிவாய் கோதியவன் வருடலில் அவள் உணர்ந்ததெல்லாம் தாய்மை மட்டுமே..
“என்னம்மா?” என்று பரிவாய் அவன் கேட்க,
“என்னமோ தெரியல… மெண்டலி வீக்கா ஃபீல் ஆகுதுடா” என்று கூறினாள்.
“ஃபிஸிகலி வீக்கா இருக்கும்போது இப்படி ஃபீல் வரும் தான்டா.. வா. வந்து சாப்பிடு. பேசாம இங்கயே படுக்குறியா? நா வேணும்னா ஆத்தாவையும் கூட்டிவந்துடுறேன்” என்று கேட்க,
“வேணாம் முகி. நான் சாப்டதும் என்னை வீட்ல மட்டும் கொண்டுபோய் விடு” என்று கூறினாள்.
“ம்ம்..” என்று அவன் கூற,
“முகி..” என்றாள்.
“என்னமா?” என்றவன் அவள் முகம் நோக்க,
அவனை ஆழ்ந்து பார்த்தவள், இடவலமாய் தலையசைத்து எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.
சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவளை அவன் வெளியே கூட்டி வர,
தான்யா உணவு மேஜையை தயார் செய்திருந்தாள்.
சக்தி அய்யனார் அருகேயே அமர்ந்து கொண்டாள். அவனுக்கே இத்தனை சீக்கிரம் தன்னிடம் ஒட்டிக்கொண்ட பிள்ளையின் ஒட்டுதலில் ஆச்சரியம்தான். அது அவனுக்குப் பிடித்தும் இருந்தது.
உணவு பொழுது குழந்தைகளின் கலகலப்போடு முடிய, அமைதியாய் உணவைக் கொறித்து எழ இருந்தவளை முறைத்த முகில், “இன்னொன்னு சாப்பிடு” என்று கூறினான்.
“போதும்டா” என்று அவள் கூற,
“இறைவி.. உடம்பு வேற முடியல. நல்லா சாப்டு போய்த் தூங்கினாதான சரியாகும்?” என்று மதியும் தன் பங்குக்குக் கூறினாள்.
‘ஜோடி போட்டு சாவடிக்குதுக’ என்று இதழ் சுழிந்தவள் தான்யாவைப் பார்க்க, இன்னொரு சப்பாத்தியை அவளுக்குச் சிரித்தபடி வைத்தாள்.
வீட்டிற்குச் செல்லலாம் என்றதுமே சக்தியின் முகத்தில் அத்தனை வாட்டம்…
“சக்தி.. அம்மாக்கு முடியலடா” என்று இறைவி கூற,
“நாளைக்கும் வருவீங்களா?” என்று அய்யனாரிடம் கேட்டாள்.
“அத்தான்.. உங்களோட நல்லா ஒட்டிகிட்டா போல?” என்று சிரித்தபடி கேட்ட முகில் அவளைத் தூக்கிக் கொள்ள,
அய்யனார் புன்னகையாய் அவள் முகம் வருடினான்.
அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டவள், “ப்ராமிஸ்?” என்று கேட்க,
“சக்தி..” என்று அதட்டலாய் இறைவியின் குரல்.
“சும்மா சும்மா பிள்ளைய அரட்டாத இரா. குழந்தை தான?” என்றவன், “அவங்க பெரிய போலீஸ்ல குட்டி.. வேலையிருக்கும்ல?” என்று குழந்தையிடம் கூற,
“டைம் கிடைக்கும்போது குட்டியைப் பார்க்க வரேன்” என்று அய்யனார் கூறினான்.
சோகம் போல் சரியென ஒப்புக் கொண்டவளையும், இறைவியையும் கூட்டிக் கொண்டு முகில் செல்ல,
“என்ன இறைவி இன்னிக்கு ரொம்ப டல்லாருக்கா? எப்பவும் இவ்ளோ சோர்வா இருக்க மாட்டாளே?” என்று தர்வின் கேட்டிருந்தான்.
“முகி மாமாவைத்தான் கேட்கணும். ஆனா அவங்கட்டயும் சொன்னபோல தெரியலயே” என்று மதி கூற,
அய்யனாருக்கு ஏனோ மனதில் இனம் புரியாத உணர்வு.
வீட்டை வந்தடைந்ததும் “இரா.. எதுவாருந்தாலும் சொல்லு.. சொல்ல முடியலைனா பேசாம எதையும் யோசிக்காம படு. ப்ளீஸ் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத” என்று முகில் கூற,
மடியில் உறங்கியிருக்கும் குழந்தையைப் பார்த்தபடி, “ப்..பயமாருக்கு” என்று காற்றாகிய குரலில் கூறினாள்.
“எதுக்கு?” என்று முகில் கேட்க,
அவளால் தன் பயத்தை வாய் விட்டுக் கூறிட முடியவில்லை.
சக்திக்கு அய்யனாரைத் தான் பார்க்கும் விதம் தெரியாது என்பதை அவள் அறிவாள். அதை புரிந்துகொள்ளும் வயதில்லையே அவளுக்கு..
ஆனாலும் தனக்கு அய்யனார் சிறப்புவாய்ந்த ஒருவன் என்பது மட்டும் சக்திக்குப் புரிந்திருந்தது. ஏனோ அந்தப் புரிதல்தான் அய்யனாரிடம் அவளை அத்தனை நெருங்கிப் பழகவும் வைக்கின்றது. எங்கே அந்த நெருக்கம், அவளுள் ஏக்கமாக மாறிவிடுமோ என்று அஞ்சினாள்.
தர்வினை அப்பா என்று அவள் அழைக்கும்போது எழாத பயம், அய்யனாரிடம் அவள் ஒன்றிப் பழகும்போது, எங்கே தந்தை வேண்டும் என அவள் கேட்டுவிடுவாளோ என்ற பயத்தை உருவாக்கியிருந்தது.
அதை முகிலிடம் அவளால் கூற முடியவில்லை. கண்களைக் கலங்க வைத்துக் கொண்டு வந்த நீர் சக்தியின் முகத்தில் பட்டுத் தெறிக்க, அதில் மகள் முகம் சுருக்கவும் சட்டெனத் தன் கண்ணீர் துடைத்தாள்.
“இரா..” என முகில் அவள் தோள் தொட,
“ஓகே ஆயிடுவேன் முகி. என்னை எதும் கேட்காத. நீ கேட்டுட்டா என்னால பொய் சொல்ல முடியாது” என்றாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன் இறங்கிவந்து அவள் பக்கக் கதவை திறந்து குழந்தையைத் தூக்கிக் கொள்ள, தானும் வெளியே வந்தாள்.
அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன், தோள் தட்டி உள்ளே அழைத்துச் செல்ல,
வீராயி இருவரையும் வரவேற்றார்.
இறைவியின் கைக்கு கை மருந்து ஏதும் போடச் சொல்லிய முகில், அப்பத்தாவிடமும் அவளிடமும் விடை பெற்றுச் சென்றான்.
