Loading

விசை-05

வீட்டில் தனது அலுவலக அறையில் அமர்ந்து, புருவங்களைத் தேய்த்துக் கொண்டிருந்த அய்யனார், அடுத்து கையிலெடுத்த வழக்கை எப்படித் தீர்ப்பதென்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

சமீபமாய் போதைப் பொருள் விற்பனைகள் அப்பகுதியில் நடந்து வருகின்றன. அமைதியாக, திரைமறைவிற்குள் நடந்துகொண்டிருந்த இச்செயல், பள்ளி மாணவன் போதைப்பொருளின் ஆதிக்கத்தில் தன் ஆசிரியரை அடித்துக் காயப்படுத்திய செய்தியில் அம்பலமானது.

அப்போதுதான் மாணவர்களிடையேவும் போதைப்பொருள் விற்பனை நடந்துகொண்டுள்ளது என்று அறியப்பெற்ற அய்யனார், இந்த விற்பனைக்கான ஆணிவேரைக் கண்டறிந்து கலையும் யோசனையில் ஆழ்ந்தான்.

இவ்வாறான யோசனையில் அவன் இருக்க, அவனது அலைபேசி ஒலி எழுப்பியது.

அதை எடுத்துப் பார்த்தவன், “ஸ்ஸ்.. மறந்தேபோனேனே” என்று நெற்றியில் அறைந்துகொண்டு அழைப்பை ஏற்க, எதிர்புறம் பெரும் அமைதி.

“சாரிடா” என்று அய்யனார் கூற,

“பேசாதீங்க அத்தான்” என்றது சாட்சாத் நம் முகிலனே.

முகிலின் தந்தையின் பெரியம்மாவின் மகளே அய்யனாரின் அன்னை காமாட்சி. காதைச் சுற்றி மூக்கைத் தொடும் அளவு தூரத்துச் சொந்தம்தான் என்றாலும், சிறு வயதில் அனைவரும் ஒரே ஊரில் அருகருகே வசித்துவந்தவர்கள் என்பதால் நெருங்கிய பந்தம் உருவாகியிருந்தது.

அதிலும் முகிலுக்கு அய்யனார் மீதும், அய்யனாருக்கு முகில் மீதும் அத்தனை பிரியம். ‘அத்தான்’ சொல்லுக்கு மறு சொல் இல்லை எனுமளவு அத்தனை ஆத்மார்த்தமாய் பழகிவிடுவான். குடும்ப விழாவில் யாரோ அய்யனாரைக் குறையாகப் பேசியதற்கு பெரும் சண்டையிட்டு, அவன் அடிகள் வாங்கிய கதைகள் கூட உண்டு. அய்யனாருக்கும் தன்மீது இத்தனை பாசத்துடன் இருக்கும் முகில் என்றால், அத்தனை பிரியம்.

எத்தனைக்கு எத்தனை அன்பானவர்களோ, அத்தனைக்கு அத்தனை அனுசரணையாளர்கள். ஒருவர் சூழலை மற்றவர் புரிந்துகொண்டு, தூரத்தில் இருந்தாலும்கூட பந்தத்தின் ஆழம் மாறாது தொடர்ந்து வருகின்றனர்.

“பேசாமருக்க எதுக்குடா ஃபோனப்போட்ட?” என்று அய்யனார் சிரிப்பாய்க் கேட்க,

“லந்தாக்கும்?” என்றவன், “வந்து வாரம் மேல ஆச்சு. ஒரு வார்த்தை சொல்லத் தோணலைல? அம்புட்டுக்கு நாங்கல்லாம் வேண்டாதவகளாயிட்டோம் போல” என்று கூறினான்.

“டேய் டேய் பெரிய மனுஷா. நிறுத்துடா உன் குற்றப்பத்திரிக்கைய” என்று அய்யனார் கூற,

“நீங்க பாத்து வச்ச வேலை, பேப்பர்ல வந்திருக்குறதையே இன்னிக்குதான் பாத்தேன். வந்ததும் வராததுமா பெரிய எடமெல்லாம் கையவச்சுருக்கீங்க” என்றான்.

“அதனாலதான்டா வந்தத சொல்லலை. எப்படியும் அந்தாள போட்டதுக்கு டிரான்ஸ்பராது பண்ணிடுவானுங்கனு நினைச்சேன். கடைசில அவனுங்களே சப்போர்ட் பண்ணி கேஸ் வராதபடி முடிச்சுட்டானுங்க” என்று அய்யனார் கூற,

“அப்ப டிரான்ஸ்பர் பண்ணிருந்தா சொல்லாமலே கிளம்பிருப்பீங்க இல்ல?” என்று கேட்டான்.

“அடடா இவனோட பெரும் ரோதனையாருக்கே” என்று முனகிய அய்யனார், “டேய் சாரிடா. சொல்லனும்னுதான் இருந்தேன். வேலையில அம்புட்டும் மறந்துபோச்சு. இந்தா பத்து நிமிஷத்துல வர்ற தூரம் தான? நாளைக்கே அம்மாவக்கூட்டிக்கிட்டு வரேன்” என்று அய்யனார் கூற,

“அவசியமில்ல. நானே குவார்டர்ஸ் வந்து அத்தையைப் பார்த்துட்டேன்” என்றான்.

“டேய்.. வந்துருக்கியா? சரி இரு நான் வரேன்” என்று அய்யனார் கூற,

“அதுக்கும் அவசியமில்ல. அத்தையைக் கூட்டிகிட்டு நம்ம வீட்டுக்கு போயிட்டிருக்கேன். எப்புடியும் மதியச்சாப்பாட்டுக்கு வீட்டுப்பக்கம் வரமாட்டீங்க. நைட்டுக்காது நேரா வீட்டுக்கு வந்துடுங்கத்தான்” என்று கூறினான்.

அவன் செயலில் அய்யனாரின் இதழ்கள் பூவாய் மலர, அவன் கேட்டுக்கொண்ட கோப்புடன் உள்ளே வந்த முருகேசன் அவனது சிரித்த முகத்தை ஆச்சரியமாய் பார்த்தார்.

‘சிரிச்சா எம்புட்டு அழகாருக்காரு இந்தத் தம்பி’ என்று அவர் நினைத்துக் கொள்ள,

“சரிடே பாத்து போங்க. நைட் வரேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், “என்ன மிஸ்டர்.முருகேசன்? நான் அவ்வளவு அழகாவா இருக்கேன்? அப்படியே உறைஞ்சு நின்னு பாத்துட்டுருக்கீங்க?” என்று படு நக்கலாய் கேட்டான்.

இத்தனை நேரம் பூவாய் மலர்ந்திருந்தது இவன் முகம்தானா? என்று வியக்கும் வண்ணம் அவன் முகம் இறுக்கம் பூசிக் கொண்டது.

“ச.. சார்” என்று அவர் தடுமாற,

“கேட்டது இருக்கா?” என்று கேட்டான்.

“எஸ் சார். சமீபமா போதைப்பொருள் விற்பனைல கைதானவங்க டீடைல்ஸ் எல்லாம் இதுல இருக்கு. எதுக்கும் இருக்கட்டும்னு பத்து வருஷத்துக்கு முன்ன உள்ள வழக்குகளும் கொண்டு வந்திருக்கேன் சார்” என்று முருகேசன் கூற,

“குட்” என்று அவற்றை வாங்கிக் கொண்டான்.

“சார், அந்த குழந்தைகள விசாரிச்சவரை, மாணிக்கம்னு ஒருத்தன்கிட்டருந்துதான் அவங்களுக்கு ட்ரக் போயிருக்கு. ஆனா அவனும் ஒரு இடைதரகர் தான். அவனை விசாரிச்சதில் அவனுக்கு யாரோ வித்து, அதை இவன் வித்ததா சொல்லுறான்” என்று முருகேசன் கூற,

“பெரிய செயினா போகும் போலையே” என்று தன் நெற்றியை நீவிக் கொண்டான்.

“ஆமாசார். எதுக்கும் விசாரிப்போம்னு அந்த மாணிக்கம் சொன்ன ஆள நம்ம ராஜன் சார் விசாரிக்கப் போயிருக்கார்” என்று அவர் கூற, சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டான்.

அங்கு முகிலுடன் வீட்டை அடைந்த காமாட்சியைப் பார்த்து முறைத்த வள்ளி, “வாரம் ஒன்னு ஆச்சு. நாங்களாம் வந்து கூப்பிடவுந்தான் வரத்தோணுதுன அண்ணி?” என்று கேட்க,

அவரைப் பாவம் போல் பார்த்த காமாட்சி, “எனக்கு ஊரு புதுசு அண்ணி. வேலுட்ட சொல்லி வரனும்னு தான் இருந்தேன். எங்க? அவன் ராவுக்கு வந்து பகலுக்கு ஓடிடுறான்” என்று கூறினார்.

“ஒரு போனடிச்சா நாங்களே வரப்போறோம்” என்று வள்ளி கூறவும்,

முகத்தைப் பாவமாய் வைத்துக் கொண்டு அவர் விழிக்க, “அத்தான் இல்லாம வரவேணாமுனு யோசிச்சுருப்பாவ ம்மா. விடுங்க” என்று முகிலனே சமாதானம் செய்தான்.

“எம்புள்ள சொல்லுறானேனு விடுறேன் அண்ணி” என்று வள்ளி கூற,

அதில் புன்னகைத்துக் கொண்ட காமாட்சி, “தான்யாவும் தர்வின் தம்பியும் எப்பிடிருக்காங்க அண்ணி?” என்று கேட்டார்.

“நல்லாருக்காங்க. வேலைக்குப் போயிருக்காங்க. போன வருஷம் மாப்ளையோட அம்மாவும் அப்பாவும் இறந்துபோனதுலருந்து மாப்ளை நம்மகூடவே தான் இருக்காரு அண்ணி” என்று வள்ளி கூற,

“ம்ம் கேள்விபட்டேன். அவங்க துட்டிக்குதான் வரமுடியலை” என்றவர் முகம் வாடிப்போனது.

அந்தச் சமயம் தானே திருத்தணியும் இறந்துபோனது? அதை புரிந்துகொண்டு அவரை ஆறுதலாய்ப் பிடித்துக்கொண்ட முகில், “பாஸ்ட் இஸ் பாஸ்ட் அத்தம்மா. நீங்களும் இந்த ஊருக்கு வந்துட்டீங்கள்ல? இனி நாம எல்லாருமா சேந்து நல்லா என்ஜாய் பண்ணலாம்” என்று கூறினான்.

பெண்கள் இருவரும் சென்று அமர, அவர்களோடு தானும் அமர்ந்துகொண்டவன், “அம்மா, நாம்போய் கறியெடுத்துட்டு வரேன். நைட்டு பரோட்டாவும் கறிக்கொழம்பும் வைப்போம். அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறினான்.

“அடடடடா.. இவேன் இதெல்லாம் மறக்கவே மாட்டானா அண்ணி?” என்று காமாட்சி சிரிப்பாய் கேட்க,

“மறக்குறதா? பரோட்டா வாங்குறப்பல்லாம் அத்தானுக்கு புடிக்கும்மான்னு சொல்லாம திங்க மாட்டான். நீ மட்டும் பொண்ணாருந்துருந்தா உன்னையவே அத்தானுக்குக் கட்டிவச்சுருக்கலாம்டானு தானு கூட கேலி பேசுவா” என்று வள்ளி சிரித்தார்.

“அட போங்கம்மா” என்று சிரித்தவன், “நான் பொருள் எல்லாம் வாங்கிட்டு ஒரு எட்டு மில்லுக்கு போயிட்டு வந்துடுறேன். மதியம் மூணு மணி போல மாவெல்லாம் பெசஞ்சு வச்சுடுவோம்” என்றபடி எழ, அவனது அலைபேசி ஒலி எழுப்பியது.

அலைபேசியை எடுத்துப் பார்த்தவன், புது எண்ணாக இருக்கவும், ஏற்று காதில் வைக்க, சொன்ன செய்தி அவனைச் சற்றே அதிர வைத்தது.

“எப்பருத்து மேம்? இ..இதோ நான் இப்பவே வரேன்” என்று பரபரப்பாய் அவன் கூற,

“என்னாச்சுபா? ஏன் பதறுற?” என்று காமாட்சியும்,

“யாருப்பா ஃபோனுல?” என்று வள்ளியும் கேட்டனர்.

“ஸ்கூல்லருந்து கூப்பிட்டாங்கம்மா” என்று மிகுந்த பதட்டத்துடன் முகில் கூற,

“அச்சுச்சோ.. தர்ஷனுக்கு ஒடம்பு முடியலையாடா?” என்று வள்ளியும் பதட்டமடைந்தார்.

“இல்லம்மா பாப்பாக்கு முடியலயாம். நல்லாதான் இருந்தாலாம். திடீர்னு சொணங்கி போய் வாந்தியா எடுக்க ஆரமிச்சுட்டாளாம். இந்த இரா ஃபோனே எடுக்கலனு எனக்குக் கூப்பிட்டிருக்காங்க. லூசு ஃபோன வச்சுட்டு என்ன பண்றாளோ?” என்று பதட்டமும் கோபமுமாய் கூறியபடி அவன் வண்டிச் சாவியை எடுக்க,

“அய்யயோ. சீக்கிரம் போடாய்யா. புள்ளைக்கு என்னவோ தெரியலயே. இவளுக்கு ஃபோன போட்டுப் பாரு. எடுத்தா பக்குவமா சொல்லி கூட்டிட்டு வா. பதறிடப்போறா” என்று வள்ளி கூறினார்.

“சரிமா. அத்தை இருங்க நான் பிரெண்டு பாப்பாவ கூட்டிட்டு வந்துடுறேன்” என்றுவிட்டு தனது வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டவன், அடித்துப் பிடித்து ஓடினான்.

‘காலைலருந்து வாந்தினா இப்போதான் கூப்பிடுவாங்களா? அய்யோ பாப்பாக்கு என்னனு தெர்லயே? இந்த நாய் ஏன் ஃபோன எடுக்க மாட்டுது?’ என்று பலவாறு யோசித்தபடி பள்ளியை அடைந்தான்.

அங்கு சென்றவனை வேறு ஒரு அதிர்ச்சிக்கு அவர்கள் ஆளாக்கியிருக்க, பதட்டத்துடன் மருத்துவமனையை நோக்கித் தன் வண்டியைக் கிளப்பினான்.

அங்கு காவல் நிலையத்தில் மதிய உணவு உண்டுகொண்டிருந்த அய்யனார், வெளியே ஏதோ சலசலப்புக் கேட்கவும், என்னவென்று பார்க்க எழுந்து வந்தான்.

கல்யாணக் கோலத்தில் பெண்ணும் மற்றொரு ஆணும் ஒரு பக்கம் நிற்க, மணக்கோலத்தில் ஒரு ஆணும், அவருடன் ஒரு கூட்டமும் நின்றிருந்தது.

கூட்டத்தைப் பார்த்து அவர்களை அனுமானித்தபடி வந்தவன், “என்ன இங்க சத்தம்?” என்று கேட்க,

“சைல்ட் மேரேஜ் கேஸ் சார்” என்று முருகேசன் கூறினார்.

“வாட்?” என்று அதிர்வை அடக்கிய குரலில் கேட்டவன், அப்பெண்ணைப் பார்த்து, “எத்தனை வயசும்மா உனக்கு?” என்று கேட்க,

அவள் பதட்டமும் பயமுமாய், “ப.. பதினாறு சார்” என்றாள்.

அவளுடன் நின்றிருந்த ஆண்மகன், “நீ ஏன் புள்ள பயப்படுற? மாமன் இருக்கேன். தெகிரியமா பேசு. தாயில்லா புள்ளனு என்னவேணா செய்யலாமுனு நினைச்சுட்டாவளோ?” என்று கத்த,

“லேய்.. ஒனக்கும் என் குடும்பத்துக்கும் சம்மந்தமே கெடயாது. ஒழுங்க மரியாதயா போயிடு” என்று எதிர்படையிலிருந்து ஒரு மீசைக்காரர் கத்தினார். அவரது முக ஜாடை கொண்டே, அப்பெண்ணின் தந்தை அவர்தான் என்று அய்யனாரால் கணிக்க முடிந்தது.

“இது போலீஸ் ஸ்டேஷன். நீங்க சண்டைபோடுற கலத்துமேடில்ல” என்று கர்ஜனையாய் கூறிய அய்யனார், “என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்று கேட்க,

“சார்.. நான் இந்த புள்ளையோட தாய்மாமன் சார். என் அக்காவ இந்தாளுக்குக் கட்டிக்குடுத்ததுதேன் நாங்க பண்ண பெரிய தப்பு. அடி உதைனு படாதபாடு படுத்தி, அது ஒருகட்டத்துல எங்கனயோ கண்காணாம போயிடுச்சு” என்று வருத்தம் மிகுதியில் அப்பெண்ணுடன் நிற்கும் ஆண் கூறினான்.

அவன் அடுத்து பேசும்முன், “ஓன் அக்கா ஓடிப்போயிட்டானு சொல்லுடே. பாவி எங்குடும்ப மானத்தையே வாங்கிட்டுப் போனவ” என்று அப்பெண்ணின் தந்தை சீற,

“யோ வாயமூடுயா. அது ஓன் தொல்ல தாங்காம சாவப்போறேம்னு எழுதிவச்சுட்டுப் போன லெட்டரதான் ஊரே பாத்துச்சே” என்று கத்தியபடி அவ் ஆண் சண்டையில் இறங்கினான்.

“இந்தாருங்க.. பெரியவங்க சின்னவங்கனுலாம் பாக்க மாட்டேன். கேஸ போட்டு உள்ள தள்ளிட்டுப் போயிட்டே இருப்பேன். ஒழுங்க மரியாதையா சண்டைய நிறுத்துங்க” என்று அவர்களுக்கிடையே வந்து நின்று சப்தமிட்டான், அய்யனார்.

“தம்பி இது எங்கக் குடும்ப வெவகாரம். நீங்க இதுல தலையிடாதீய” என்று அப்பெரியவர் கூற,

“அப்பனா உங்க வீட்டோட முடிச்சுருக்கனும்யா. இது இப்ப என் ஸ்டேஷன் வெவகாரம். நான் சொல்லாம ஒருத்தரும் இங்கருந்து நவரக்கூடாது” என்று கூறியவன் தோரணையே அங்குள்ளோரையெல்லாம் மிரள வைத்தது.

தனது அழுத்தமான பார்வையுடன் அவன் பெண்ணின் மாமாவை நோக்க, “எங்கங்க்கா போயி வருஷம் ஒன்னு ஆச்சு சார். புள்ள வயசுக்கு வரவும் எங்க அதுவும் எதாது பண்ணிட்டு போயிடுமோனு பயந்துட்டு அவசர அவசரமா இந்தப்பயலுக்குக் கட்டிவைக்கப் பாக்குறாவ. அது படிக்குற புள்ள சார். என்ன தெரியும்னு கட்டிவைக்குறீங்கனு சண்டைக்குப் போனா கண்டதயும் பேசி துறத்துறாங்க. அதாம் பொண்ண கூட்டிட்டு இங்கன வந்துட்டேன்” என்று கூறினான்.

“பாத்தா பெரிய மனுஷம்போல இருக்கீரு. செய்யுற வேலையெல்லாம் கீழாருக்கு” என்று முருகேசன் கூற,

“யாரப்பாத்துய்யா கீழ்த்தரமானவங்க? எங்க வீட்டு பிள்ளைக்கு பதினாறென்ன பத்து வயசுலகூட கட்டி வைப்போம். நீயாருய்யா கேக்க?” என்று மாப்பிள்ளையாகப்பட்டவன் காவலர் மீது பாய்ந்தான்.

அவன் கன்னத்திலேயே அய்யனார் ஓங்கி ஒன்று வைக்க, அடுத்த அடிவைக்க முடியாது தலை கிறுகிறுத்து பொத்தென்று கீழே விழுந்தான்.

அதில் கூட்டத்தின் சலசலப்பெல்லாம் பயந்து கப் சிப் ஆக,

“சார், உங்க அக்கா காணம போனதுக்கான ஒரு கம்பிலைன்ட் லெட்டரும், மைனர் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணப்பார்த்ததுக்கு ஒரு லெட்டரும் எழுதி பொண்ணுட்ட கையெழுத்து வாங்கிக் குடுங்க” என்று அய்யனார் கூறினான்.

திருமணம் நின்றால் போதுமென்ற எதிர்ப்பார்ப்போடு வந்தவன் நெஞ்சில் பால் வார்க்கும்படி, அவனது அக்காவையும் கண்டுபிடிக்கும் முயற்சியை அய்யனார் கையிலெடுக்க, அவனுக்கு மகிழ்ச்சித் தாங்கவில்லை.

“சார் ரொம்ப நன்றிசார்” என்று நெகிழ்வாய் கூறியவர், அவன் சொல்படி செய்ய,

அப்பெண்ணிடமும் பேசியவன் ஒருமுடிவெடுத்தோனாய், “இந்தப் பொண்ணு மைனரு. இந்தப் பொண்ணோட பொறுப்பை இவங்க மாமாட்ட ஒப்படைக்குறோம். கல்யாணம் அதுஇதுனு எதும் இந்த பொண்ண வற்புறுத்தினதா தெரிஞ்சுதுனா ஒருத்தரயும் வுட்டுவைக்க மாட்டேன்” என்று கூறி, “உங்களுக்கும்.. உங்க பொருப்புல ஒப்படைச்சுருக்கேன். அந்தப் பொண்ணுக்கு அவ அப்பாவைவிட உங்கக்கூட இருப்பது பாதுகாப்பைத் தரும்னு நம்புறா. அதுக்கு எதும் கலங்கம் வந்தா உங்களையும் சும்மாவிட மாட்டேன்” என்று பேசி அனுப்பி வைத்தான்.

அவர்கள் அனைவரும் சலசலப்புகள் ஓய்ந்து கலைந்துச் செல்ல, “என்ன மிஸ்டர் முருகேசன்? இன்னுமா இந்த சைல்ட் மேரேஜ்லாம் நடக்குது?” என்று கேட்டான்.

கேள்வி என்னவோ ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் கேள்விதான் என்றாலும், அவன் முகத்திலோ குரலிலோ அந்த உணர்வுகளுக்கான வெளிப்பாடே இல்லை.

“ஆமாசார். இங்க சுத்துபட்டுல ஒன்னு ரெண்டு எடுத்துல இன்னும் இதுலாம் நடந்துட்டுத்தான் இருக்குது. சிட்டிய காட்டி நாம முன்னேறிட்டோம்னு பெரும பேசிக்குறோம் சார். நாட்டோட வளர்ச்சியே கிராமத்துலதான் இருக்கு. இங்க இன்னும் பல கிராமங்கள்ல மைனர் புள்ளையளுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறது, காதலிச்சுட்டா வீட்டோட கொழுத்துறது, ஏன் பொம்பள புள்ளையளுக்குக் கள்ளிப்பால் குடுக்குறதுகூட ஒன்னு ரெண்டு ஊருகல்ல நடக்கத்தான் செய்யுது” என்று மிகுந்த வருத்தத்துடன் அவர் கூற,

‘ச்ச என்ன வளர்ச்சியோ? இன்னும் இந்த மாதிரி மென்டாலிடிய மாத்திக்காம இருக்காங்களே’ என்று ஆதங்கமாய் நினைத்துக் கொண்டான்.

“எங்கூருல ஒரு பொண்ணிருக்கு சார். அம்புட்டு கஸ்டத்தோட வாழுது. ஆனா ஊரே அத தப்பாதான் பேசும்” என்று முருகேசன் மேலும் பேச வர, உள்ளே அவனது அலைபேசி ஒலி எழுப்பியது.

அவரிடம் அவகாசம் கூறி விடைபெற்றவன் உள்ளே செல்ல, அதன் பின் வேலை அவர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, அப்பேச்சுவார்த்தை மறந்து மறைந்துபோனது.

மணித்துளியாய் நேரம் கழிய, மாலை ஒரு வீட்டு விசேஷத்தில் அங்குள்ள அனைவருக்கும் மருதாணி போட்டு முடித்த இறைவி அவர்களது திருப்திகரமான புன்னகையை ரசித்தவளாய், “அக்கா கொஞ்சம் ஃபோன் மட்டும் கிடைக்குமா? என் ஃபோன் ஆஃப் ஆயிடுச்சு” என்று கேட்டாள்.

“இந்தா இறைவி. ரொம்ப அழகா போட்டிருக்கீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அவளை மனமார பாராட்டியப் பெண், அலைபேசியைக் கொடுக்க, முகிலுக்கு அழைப்பு விடுத்தாள்.

அவன் அழைப்பை ஏற்றகவும் பெண்ணவள், “ஹலோ.. டேய் முகில்” என்றதுதான் தாமதம், “எங்கடி இருக்க?” என்று சப்தம் போட்டான்.

தனக்குப் பலமுறை அழைப்பு விடுத்து, தான் எடுக்காததால் அஞ்சிவிட்டான் போலும் என்று நினைத்தவள், “இங்க ஒரு வீட்டுக்கு மருதாணி போட வந்தேன்டா. என் ஃபோன் என்னாச்சு தெரில டெட் ஆயிடுச்சு. ஆன் ஆக மாட்டேங்குது. பத்து பேருடா. முதுகெல்லாம் வலிக்குது. கூட்டிட்டுப்போக வரியா?” என்று இறைஞ்சுதலாய்க் கேட்டாள்.

அவளிடம் அப்போதைக்கு எதையும் கூறாது கண்களை மூடித் திறந்தவன், “லோகேஷன் சொல்லு வரேன்” என்க, தன் இருப்பிடத்தின் தகவலைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தாள்.

சில நிமிடங்களில் முகில் வந்திட, அவ்வீட்டாரிடம் சொல்லிக் கொண்டு வந்து அமர்ந்தாள்.

“பாப்பாவ கூப்டுகிட்டியாடா? உன்கிட்ட சொல்லனும்னு தான் நினைச்சேன். நேரமே கிடைக்கலை. ஆள் ஜாஸ்தியா, சட்டு சட்டுனு எல்லாருக்கும் போட வேண்டியதா போச்சு” என்று பேசிக் கொண்டிருந்தவள் அவன் அமைதியாகவே இருக்கவும், “என்னடா அமைதியாருக்க? கோவமா? சாரிடா. போனதுமே யாருட்டயாது வாங்கி தகவல் சொல்லனும்னு தான் நினைச்சேன். சாரி” என்றாள்.

“சரிவிடு” என்று கூறியவன், மெல்ல, “பாப்பாக்கு உடம்பு முடியலை இரா” என்க,

“உடம்பு முடியலையா? என்னாச்சு? எப்பருந்து?” என்று படபடப்பாய் கேட்டாள்.

சக்தி என்று வந்துவிட்டாலே இறைவி எளிதில் தடுமாறி விடுவாள். அது அவன் அறிந்த ஒன்றே என்பதாலும், எடுத்தவுடனே அவள் அதிகம் பதட்டம் கொண்டதாலும், “பயப்படுற அளவு ஒன்னுமில்ல. வீட்லதான் தூங்குறா” என்று சமாதானமாய் கூறினான்.

“இல்ல நீ பொய் சொல்ற. உன்கிட்ட ஏதோ பதட்டம் தெரியுது. என்னாச்சு சக்திக்கு?” என்று பயமும் பதட்டமுமாய் கேட்க,

“ஒன்னுமில்ல நீ அமைதியா வா. வீட்லதான் இருக்கா” என்றான்.

அவன் மறைக்க மறைக்க அவளுக்கு இன்னும் பதட்டமானது. பயத்தோடு கடினப்பட்டு அமைதியாக இருந்தவள் வீட்டில் வந்து அவன் வண்டி நின்றதும், படபடவென கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஓடினாள்.

கூடத்தில் வெண்ணீர் ஊற்றிய வெற்றிலைக் கொடிபோல் இருந்த சக்தீஸ்வரியைத் தன் மடியில் போட்டு காமாட்சி தட்டிக்கொண்டிருக்க, “கொஞ்சம் சாப்புட்ரா கண்ணு” என்று கஞ்சி அடங்கிய கரண்டியை வள்ளி நீட்டினார்.

“அம்மா வேணும்” என்று கேட்ட சக்தி அழத் துவங்கிட, இறைவிக்கு உயிரே போன உணர்வில் வலித்தது.

அங்கு ஓட்டமாய் வந்த இறைவி, “தங்கக்கண்ணு” என்க, காமாட்சி மடியிலிருந்து எழமுடியாது எழுந்து, “அம்மா” என்று அழுதாள்.

இறைவி கண்கள் சிவந்து கலங்கிப்போக, மகளைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டவள், மார்போடு அணைத்துக் கொண்டு, “ஒன்னுமில்லடா பாப்பா. அம்மா வந்துட்டேன்டா. சாரிடா கண்ணம்மா.. சாரிடா தங்கக்கண்ணு” என்று அழுதுகொண்டே கூறினாள்.

“அம்மா.. அம்மா..” என்று அறற்றிக் கொண்டே அவளோடு ஒட்டிக்கொண்ட குழந்தை மேலும் வீரிட்டு அழ, இவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

“பாப்பா.. அம்மாடா. வந்துட்டேன்டா. அழாதடா கண்ணு. அம்மா சாரிடா” என்று அழுதவள், துப்பட்டாவால் குழந்தையின் முகம் துடைத்து, “சரிடாமா.. ஆரு? ஆரு என் தங்கத்த என்ன பண்ணது? ஒன்னுமில்லடா” என்க,

அழுதுகொண்டே அவள் மார்பை முட்டி ஒன்றினாள் சக்தி.

மகளின் தலையை கோதிக் கொடுத்தபடியே உள்ளே வரும் முகிலின் வருத்தம் தோய்ந்த முகத்தைப் பார்த்து, “என்னடா ஆச்சு?” என்று கேட்டாள்.

அவள் முன் வந்து அமர்ந்தவன், “காலைல அவ ஃப்ரெண்ட் யாரோ மீன் பொறிச்சு கொண்டு வந்ததை கொடுத்துருக்காங்க” என்று கூற,

“அய்யய்யோ.. இவளுக்கு மீன் சேராதேடா” என்று பதட்டமாய்க் கூறினாள்.

“ம்ம்.. பாப்பா மீன்னு தெரியாம வாங்கி சாப்பிட்டுட்டா. அதுலருந்து ஒரே வாந்தி. ஸ்டாஃப்ஸ்லாம் ரொம்ப பயந்து உனக்கு ஃபோனடிச்சுருக்காங்க. நீ எடுக்கலை. நாலு முறை வாந்தி எடுத்து மயங்கிட்டா போல” என்று முகில் கூற,

தன் தலையில் அடித்துக்கொண்டவள், “இன்னிக்குப் பாக்கத்தான் இந்த ஃபோனு இப்படி ஆகனுமா?” என்று அழுதாள்.

“ப்ச்.. இரா..” என்று அவள் செயலைக் கண்டித்தவன், “நீ எடுக்கலைனு எனக்குக் கூப்பிட்டிருக்காங்க” என்க,

“உனக்கா?” என்று கேட்டாள்.

அவர்கள் உற்ற நண்பர்கள் என்பது பள்ளி ஆசிரியர்கள் அறிந்ததென்றாலும் எப்படி அவனை தொடர்பு கொண்டனர் என்ற சந்தேகம் அவளுக்கு.

கண்கள் சிவந்து கலங்க, இதழில் மெல்லிய புன்னகையோடு சக்திக்குத் தட்டிக் கொடுத்தவன், “ஓம் பொண்ணு டைரில பேரென்ட்ஸ் ஃபோன் நம்பர்ல, மதர் நம்பர்கு உன்னோடதையும், பாதர் நம்பர்னு இருக்குறத அடிச்சு, மாமா நம்பர்னு போட்டு என்னோடதையும் எழுதி வச்சுருக்கா இரா” என்க, மகளை அதிர்வாய்ப் பார்த்தாள்.

கற்பூரவள்ளிக்குமே குழந்தையின் செயலில் மனம் நெகிழ்ந்து கண்கள் ஆறாய் பொழிந்தது.

காமாட்சி இறைவி வந்ததிலிருந்தே அவளை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து வயது குழந்தை என்று வரவும், அவர் எதிர்ப்பார்த்தது தாண்யா வயதை ஒத்தப் பெண்ணைத்தான். ஆனால் இவளோ இருபது வயது பெண்ணாக வந்து நிற்க, அவருக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.

மகளின் சிகையைப் பரிவாய் வருடியவள் கண்களும் மனம் நெகிழ்ந்து பொழிய, “இறைவி எம்புட்டு நேரம் அழப்போற? புள்ளை மயங்கி விழவும் ஆஸ்பிடல்ல சேர்த்து அவங்க நரம்பூசிலாம் போட்டிருக்காங்க. கஞ்சி கிஞ்சி கொடுத்து மாத்திரைய கொடுத்து புள்ளைய தூங்க வையு” என்று வள்ளி கூறினார்.

“ட்ரிப்ஸ் போட்டாங்களா?” என்று மகளின் கரத்தை எடுத்துப் பார்க்க, ஊசி குத்தப்பட்ட இடம் லேசாக வீங்கியிருந்தது.

அதைக் கண்டு இன்னும் மனமொடிந்தவள் கண்களில் கண்ணீர் பொழிய, “இரா.. பாப்பாக்கு ஒன்னுமில்லடா” என்று முகில் ஆறுதலாய்க் கூறினான்.

“எம்புள்ள இப்புடிலாம் படுத்து நான் பாத்ததே இல்லயேடா” என்று தாய்க்கே உரித்தான வேதனையோடு அவள் அழ,

அனைவருக்கும் மிகுந்த வருத்தமாகிப் போனது.

“ஏம்மா கண்ணு.. புள்ளைகனா நாலு ஒடம்புக்கு வரத்தான் செய்யும். அதுலாம் வந்து போனாதான் ஒடம்பு திடமாகும். வெரசா புள்ளைய உக்காத்தி கஞ்சிய கொடு. ரெண்டு நாள் நல்லா சத்தா சாப்பிட்டு தூங்கி எழுந்தா சரியாயிடும்” என்று காமாட்சி கூற,

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “சக்தி.. தங்கக்கண்ணு.. அம்மா பாருடா” என்று மகளை அமர்த்தினாள்.

பெண்ணவள் சிணுங்க, கண்கலங்கி தவிக்கும் இறைவியைப் பார்த்துக் குழந்தையை அவளிடமிருந்து தூக்கினான் முகில்.

“டேய் பிள்ளைய என்டயே குடு” என்று அவள் கூற,

“நீ இப்புடி அழுதுவடிஞ்சா அவள எங்கருந்துடி சாப்பிட வைக்க? போய் கைகால் மூஞ்சி கழுவிட்டு வா” என்று அதட்டினான்.

அவன் அதட்டலில் முகம் சுருங்கி அவள் வள்ளியை நோக்க, “நீ போய் முகம் கழுவிட்டு வந்து நீயே அவளுக்கு ஊட்டுடா கண்ணா” என்று வள்ளி கூறினார்.

சரியெனச் சென்று தன்னை சுத்தம் செய்துகொண்டு அவள் வர,

தான்யா தர்வின் மற்றும் தர்ஷன் வந்தனர்.

சக்திக்கு உடல்நலம் சரியில்லையென்று அவன் ஒருபாடு அழுதிருக்க, அருகே பூங்காவிற்கு அழைத்துச் சென்று அவனை சமாதானம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

கூடத்திற்கு வந்த இறைவி கஞ்சியை வாங்கித் தன் மகளுக்கு ஓரளவு ஊட்டி முடிக்க, “போதும்மா போதும்மா” என்று சிணுங்கினாள்.

“அவ்ளோதான்டா பட்டு. அம்மா தரலை. போதும்” என்று கூறியவள் மகளுக்கு வாய் துடைத்துவிட்டு நீர் கொடுத்து தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுக்க, சக்தி அப்படியே உறங்கிப் போனாள்.

பத்து நபர்களுக்கு தொடர்ந்து எட்டுமணிநேரமாக அமர்ந்து மருதாணி போட்டதில் அவள் முதுகு அப்படி வலியெடுக்க, அத்தோடு மகளைத் தூக்கிக் கொண்டு தட்டிக்கொடுத்தபடி நடந்தாள்.

“முதுகு வலிக்குதுனு தான் என்னை கூப்பிட்டு கூட்டிட்டுவர சொன்னா. இப்ப சக்திய தூக்கி வச்சுட்டு இறக்கவே மாட்றா ம்மா” என்று முகில் குறைகூற,

“பாவம்டா அவ. சக்தினு வந்துட்டா வேற எதுவும் யோசிக்க மாட்றா. பேசாம ஆத்தாவ இங்க கூட்டிட்டு வந்துடுறியா? நைட்டு இங்கயே படுக்கட்டும்?” என்று வள்ளி கேட்டார்.

“கேட்குறேம்மா” என்றவன் இறைவியிடம் கேட்க,

“வேணாம் முகி. நான் இங்க படுக்கவெல்லாம் யோசிக்க மாட்டேன்னு உனக்கே தெரியும். இவ அங்கதான் ஒழுங்கா தூங்குவா. அப்பத்தாட்ட போட்டா கொஞ்ச நேரத்துல படுத்துடுவா. தேவையில்லாம அவங்கள அலைக்கலிக்க வேணாம். ஃபோன போட்டு காச்சனு கூட சொல்லலை. இப்ப நீ போனா பதறிடுவாங்க. என்னை மட்டும் கூட்டிட்டுப் போய் விட்டுடுடா. இவள வச்சுட்டு பஸ்ல போக முடியாது” என்று கேட்டாள்.

“கூட்டிட்டுப்போனா போகப்போறேன். ஏன்டி கெஞ்சி கேட்டு கஸ்டப்படுத்துற?” என்று திட்டியவன் உள்ளே சாவியை எடுக்கச் சென்றான்.

கூடத்திற்கு வந்தவள் அவனிடம் கூறியதையே அனைவரிடமும் கூற,

“புள்ளைய பாத்துக்கமா. மாத்திரையெல்லாம் ஒழுங்கா குடு. நீயும் உன்ன பாத்துக்க. ஆளே சோந்துகிடக்க” என்று காமாட்சி கூற, சோபையாய் புன்னகைத்தாள்.

“சித்தி சக்கிக்கு சீக்கிரம் ஓகே ஆயிடும். நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று தர்ஷன் கூற, அவன் கன்னம் வழித்து முத்தமிட்டு நன்றி கூறினாள்.

குழந்தையை வாங்கிக் கொண்ட முகில், “வா போவோம்” என்க,

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வந்தாள்.

வண்டியில் அவளைப் பின்னிருக்கையில் அமர்த்தியவன் குழந்தையை அவள் மடியில் தலைவைத்துப் படுக்க வைக்க, வாசலில் வண்டிச் சப்தம் கேட்டது.

தலைநிமிர்ந்து பார்த்தவன் அய்யனார் வருவதைக் கண்டு, “இரா ஒருநிமிஷம்” என்றுவிட்டு அவனிடம் சென்றான்.

இருந்த நிலைக்கு சரியென்று தலையாட்டியதோடு அவள் மகளுடன் ஐக்கியமாகி விட்டாள்.

அங்கு வந்த முகில் வண்டியிலிருந்து இறங்கிய அய்யனாரை இறுக அணைத்துக் கொண்டு, “அத்தான்..” என்க,

புன்னகையாய் அவன் முதுகில் தட்டிக் கொடுத்த அய்யனார், “முகி” என்றான்.

“எத்தனை வருஷமாச்சுத்தான்” என்று நெகிழ்வாய் முகில் கூற,

அய்யனார் புன்சிரிப்போடு அவன் தலை கோதினான்.

“எப்புட்ரா இருக்க? என்ன சொல்லுது ஓன் மாமன் பொண்ணு” என்று அய்யனார் சீண்டலில் இறங்க, அந்தச் சூழலுக்கு அவனுக்கு எதுவும் அத்தனை ரசிப்புக்குரியதாக இல்லை.

“ஏன்டா சோர்ந்து தெரியுற?” என்று அய்யனார் கேட்க,

“பிரெண்டு பொண்ணுக்கு உடம்பு முடியலை அத்தான்” என்று சுருக்கமாக நடந்ததைக் கூறினான்.

“ஒன்னுமாகாதுடா. அதெல்லாம் ரெண்டு நாளுல அந்த புள்ள துள்ளிகுதிச்சு ஓடிவரும். அவங்களயும் வருத்தப்படவேணாம்னு சொல்லு. மொத நீ போய் அவங்கள விட்டுட்டு வா. காத்துட்டுருக்க போறாங்க” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தவன் வீட்டிற்குள் சென்றான்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்