
விசை-04
கிணற்றுக்குள் தவறி விழுந்தவளை மேலிருந்து பலர் அழைப்பதைப் போன்ற உணர்வில் சிரமப்பட்டுத் தன் விழிகளைத் திறந்தாள், இறைவி.
தலையில் பாறையைக் கட்டிவைத்தார்போன்று பெரும் பாரமாய் இருக்க, தன் கரத்தால் நெற்றியை அழுத்திக்கொண்டு எழ முயற்சித்தாள்.
அவள் தோளைச் சுற்றிக் கரமிட்டுத் தாங்கியவண்ணம் எழுந்து அமரவைத்த முகில், “இறைவி கேட்குதா?” என்று இத்தோடு நான்காம் முறையாக உறக்க அழைத்திட்டான்.
“ம்ம்” என்று ஈனசுவரத்தில் அவள் சப்தம் எழுப்ப,
அருகே கவலையுடன் நின்றிருந்த வீராயியையும், அவரைக் கட்டிக்கொண்டு பயத்துடன் நின்றிருந்த சக்தீஸ்வரியையும் பார்த்து, “ஒன்னுமில்லடா அம்மாக்கு” என்றான்.
வீராயியிடமிருந்து முகிலிடம் வந்த சக்தி, “ரொம்ப நேரமா அம்மாவ எழுப்பினேன் முகி மாமா. அம்மா எழவேயில்ல. என்கூடதான் கூடத்துல படுத்துந்தாங்க. எப்ப ரூம் வந்தாங்க கேளுங்க” என்று மிகுந்த வருத்தத்துடன் குறைபடிக்க,
முந்தைய நாள் கனவு கண்டு விழித்தது, அறைக்கு வந்தது, தனது வரைபடங்களைப் பார்வையிட்டது, அவற்றை மீண்டும் மறைத்துவைத்திட்டுக் கட்டிலில் அமர்ந்து எதற்கெதற்கோ அழுதது, அப்படியே உறங்கிப்போனதென்று இறைவிக்கு வரிசையாக அனைத்தும் நினைவு வந்தது.
அவள் உடல்வேறு அணலாய்க் கொதிப்பதை மெல்ல உணர்ந்தாள்.
“ஒன்னுமில்ல குட்டிமா. அம்மாக்கு காச்சல் அடிக்குது. அதனாலக்கூட பாப்பாகூடப் படுத்தா, பாப்பாக்கும் காச்சல் வந்துடுமோனு உள்ள வந்திருப்பா” என்று குழந்தையை சமாதானம் செய்த முகில், “ஆத்தா புள்ளையக் கூட்டிட்டுப் போய் கெளப்பு. ஸ்கூல்ல விட்டுட்டு இவள அப்படியே ஆஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன்” என்று வீராயியிடம் கூறி அவர்களை அவ்வறைவிட்டு அனுப்பினான்.
நிலையில்லாத மனநிலையோடு கட்டிலில் பெண்ணவள் சாய்ந்து அமர்ந்திருக்க, “உன் மனசுக்கு மரியாத குடுத்து நேத்து ஏதும் தோண்டி துருவாம போனதுக்கு என்னைய நல்லா அவமதிச்சுட்டல்ல இறைவி?” என்று அமைதியான குரலில் முகில் கேட்டான்.
அவன் வார்த்தைகள் முடிந்ததுதான் தாமதம், “முகி ப்ளீஸ்” என்று அழுதபடியே அவன் தோள் சாய்ந்தாள்.
கண்ணீர்… அவன் எதிர்பாராத அளவு அவள் கண்கள் கண்ணீர் பொழிய, அவள் உடல் அழுகையில் வெகுவாய் குலுங்கியது. அத்தனைக்குப் பிறகும் கூட, அவள் அழுது அவன் கண்டவை ஒரே ஒருமுறைதான். அதையடுத்து இன்றுதான் அவளது உணர்வுகள் வெடிக்கின்றன.
‘ஏன்? என் இறைவிய யாரு இப்படி அழவச்சது?’ என்று நண்பனாய் வருத்தம்கொண்டு அவள் தலைகோதியவன், “என்னடா?” என்க,
“நான் ஒன்னுமே பண்ணலதானே? ஏன் எல்லாரும் என்னை மட்டும் தப்பானவளா பாக்குறாங்க?” என்றாள்.
“யாரு என்ன சொன்னாங்கமா?” என்று பரிவாய் அவன் குரல் ஒலிக்க, இரவு அந்தப் பெண்மணி கூறியதை அவனிடம் கூறினாள்.
“இப்பக்கூட மாமா பேசினத சொல்லத் தோனலைல உனக்கு?” என்று அவன் கேட்க, அவனைத் திடுக்கிட்டு நோக்கினாள்.
“மதியே சொல்லிட்டா” என்று முகில் கூற,
இன்னதென்று பிரித்தறிய இயலாத உணர்வோடு தலை கவிழ்ந்தாள்.
“இறைவி” என்று முகில் அழைக்க,
“அதுல என்ன கிடைச்சுடுச்சு முகி அவனுக்கு?” என்று கேட்டாள்.
அவள் கேள்வி புரிந்ததும் அவனுக்கு என்னவோபோல் ஆனது.
“நான் கத்தினது கதறுனது மன்மதக்கோட்டையின் சங்கீதம் மாதிரி இருந்துருக்குமா? ர..ரத்தம்.. என் ரத்தம் அவனுக்குப் பூ திரவம் போல மணம் வீசிருக்குமா? வலி பொறுக்க முடியாம நான் அவனுக்கு ஏற்படுத்தின காயம்? அ..அதுகூடவா என் வலியை உணர்த்திருக்காது?” என்று எங்கோ வெறித்தபடி அவள் கேட்க,
பதில்கூற தெரியாது வருந்தினான்.
“அ..ஆனா முகி.. அவனக்கூட மன்னிச்சுடலாம்னு தோனுது” என்றவளை முகில் அதிர்ந்துநோக்க,
“காரணமே இல்லாம, நடந்தது தெரியாம, என்னையும், என் நடத்தையையும் குறிவைச்சுத் தாக்குறவங்களைப் பார்க்கும்போது சுய சுகத்துக்கு அன்னிக்கு ஒரு இரவு என்னை வதைச்ச அவனைக்கூட மன்னிச்சுடலாம் போலனுதான் தோனுது” என்றாள்.
ஆம்! இறைவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டப் பெண்.
வீட்டின் வறுமையில், படிப்பைத் தொடர இயலாது தனது பதினைந்தாம் வயதில் படிப்பை நிறுத்திவிட்டுத் தாயுடன் கூலி வேலைக்குச் செல்லத் துவங்கியவள் மீது, கயவனின் பார்வை விழுந்தது.
திட்டம்போட்டு, வேலைமுடிந்து வருபவளைக் கடத்தி, இரவு முழுதும் தனது ஆசைக்கும் இச்சைக்கும் ஆட்படுத்தி, வதைத்து முடித்தத் திருப்தியுடன், அதிகாலை அவர்கள் வீட்டுப் பின்பக்கம் அவளைத் தூக்கியெறிந்துவிட்டுச் சென்றிருந்தான்.
அதுவரை சந்தோஷம் என்ற ஒன்று இல்லாதபோதும் நிம்மதியாகவாவது வாழ்ந்துகொண்டிருந்த இறைவியின் வாழ்வு கல்லெறிபட்ட கண்ணாடியாய் மாறிப்போனது.
மகளுக்கு நிகழ்ந்த அவலத்தைவிட, வெளியில் தெரிந்தால் தங்கள் குடும்ப மானம் பறிபோய்விடுமே என்றுதான், இசக்கியும் முத்தாயியும் புலம்பித் தவித்தனர்.
“கிராதகி கண்ட நேரத்துல வெளியப் போவாதனு சொன்னா கேட்குறியா? ஒனக்கு முன்ன ரெண்டு பேரு இருக்காங்க. இப்பத்தான் மூத்தவளுக்கு மாப்பிள்ளை பார்க்கவேற ஆரம்பிச்சுருக்கோம். இந்தக் கண்றாவியெல்லாம் தெரிஞ்சு அதுக வாழ்க்கையும் பாழாப் போயிடும் போலயே” என்று முத்தாயி தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ,
சுவரில், வெந்நீர் ஊற்றிய வெற்றிலைக்கொடிபோல சாய்ந்து அமர்ந்திருந்த இறைவியின் விழிகள் காய்ந்து சிவப்பேறி போனது.
கடந்த ஒருவாரமாய் இதே பாட்டைத்தான் கேட்கின்றாள்.
ரணப்பட்டு வந்தவளுக்கு ஆறுதல் என்பது பெயருக்குக்கூடக் கிடைக்கவில்லை. அவள் உடன்பிறந்தோரிடம் கூட விடயத்தைக் கூறாது அறைக்குள்ளேயே போட்டு அவளை அடைத்துவைத்திருந்தனர் பெற்றோர் இருவரும்.
“ஏம்மா.. ஒருத்தன் எ..என் உடம்ப வதைச்சு தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்கான். ஒ..ஒரு வார்த்தை எனக்காகப் பேசணும்னு உங்களுக்குத் தோணவே இல்லையா?” என்று உடைந்த குரலில் வாய்விட்டே அவள் கேட்டுவிட்டபோதும்,
“அதுக்கு என்னடி சொல்லணுமுங்குற? அவன கண்டுபிடிச்சு ஏன்டா இப்புடி பண்ணனு சட்டையப் பிடிக்கச் சொல்றியா? கேக்க முடியாதமாதிரி பேசுவான். கேட்டுட்டு நிக்க சொல்றியா? நாலு பேருக்குத் தெரிஞ்சா எம்மானம் என்னாவுறது? கஞ்சிக்கு வழியில்லனாலும் மானஸ்தனா வாழ்றான்யா இசக்கினு சொன்ன பய எல்லாம், இந்தக் கண்றாவி தெரிஞ்சா காது அவியுறகணக்காப் பேசுவானுங்க” என்று இசக்கி மகளிடம் காய்ந்தார்.
“இந்தக் கருமத்தை வாய திறந்து ஒரு வார்த்த பேசக்கூடாது. எவன் கையவோ காலையோ புடிச்சு மூடி மறைச்சாது ஒன்ன அவன் தலைல கட்டிட்டு நான் ஓஞ்சுடுவேன்” என்று இசக்கிக் கூற,
அவளுக்கு மனமே விட்டுப்போனது.
உடல் ரணங்களைவிட மன ரணங்கள் அதிகம் வரப்பெற்றதாய் தவித்தாள்.
வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்ட வேதனை நாளுக்கு நாள் அவள் உடலில் என்னென்னவோ செய்து வதைக்க, மாதம் இரண்டு கடந்த பின்புதான் அந்தக் கொடூரனின் உயிர்நீர் அவளுள் கருவாய் உதித்திருப்பது தெரிந்தது.
கையில் கிடைப்பதையெல்லாம் தூக்கி வீசிக்கொண்டிருந்தார் இசக்கி.
“பாவி மவளே இப்புடி ஒரு கேடுகெட்ட பொழப்புக்காடி என் வயித்துல வந்து பொறந்து தொலைச்ச? நாலு பேரு காதுல விழுந்தா.. அய்யோ” என்று முத்தாயி தலையில் அடித்துக்கொண்டு அழ,
“அம்மா நானாம்மா வழியபோய் வாழ்க்கைய இழந்துட்டு வந்தேன்?” என்று ஆற்றாமையாய்க் கேட்டாள்.
அவள் பதில் பேசுவதில் மேலும் ஆத்திரம்கொண்டு இசக்கி அவள் கழுத்தை நெரிக்க, அனிச்சை செயலாய் தன் வயிற்றில் கைவைத்துக்கொண்டு தந்தையின் கரத்தை விலக்க முற்பட்டாள்.
அவள் வயிற்றைக் கண்டு அருவருப்பாய் முகம் சுழித்தவர், மகளை உதறித்தள்ள, இருமியபடி சென்று சுவரைத் தாங்கிக்கொண்டு நின்றவள் அப்படியே சரிந்து அமர்ந்தாள்.
“இந்த அசிங்கத்தை உடனே கலைக்குற வழியப் பாரு” என்று இசக்கிக் கூற,
இறைவி அதிர்ந்து போனாள்.
“என்ன பாவஞ்செய்ய வைக்கனே பிறப்பெடுத்துட்டா. செஞ்சுத்தொலையுறேன்” என்று முத்தாயியும் உடனே ஒப்புக்கொள்ள, பெற்றோரை அதிர்ந்து பார்த்தவள், “முடியவே முடியாது” என்று கத்தினாள்.
“என்னடி முடியாது? உன்ன யாரும் முடிவெடுக்க யோசனை கேக்கல” என்று முத்தாயி கத்த,
“உங்க முடிவை ஏத்துக்குற யோசனையில நானும் இல்ல” என்று கத்தினாள்.
அதுநாள்வரை அதிர்ந்துகூட ஒருவார்த்தை பேசிடாத தன் மகள், சீறும் சிறுத்தையைப் போல் பேசுவதை முத்தாயி ஆச்சரியமாய் பார்க்க,
“தெரிஞ்சோ தெரியாமலோ என்ன நம்பித்தான் இந்த உயிரு உள்ள முளைச்சுருக்கு. அதுக்கு உள்ளயே சுடுகாடு கட்டித்தர நான் அனுமதிக்க மாட்டேன்” என்று இறைவி கூற,
அவள் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தார் இசக்கி.
“கொன்னே போட்டாலும் அந்தப் புள்ளையோட சேந்து செத்துப்போவேனே தவிர, அதை கலைக்க மாட்டேன்” என்று சீறினாள்.
மூன்று நாட்கள் வீட்டில் சண்டை மட்டுமேதான் தொடர்ந்தது. அவள் உடன் பிறந்தோர் அவளது கற்பச்செய்தியைக் கேட்டு, அவள் யாரையோ காதலித்து, ஏமாந்துவிட்டதாக நினைத்து அவளை முற்றுமாய் தவிர்த்தனர்.
உணவில் கலந்து கொடுத்துவிடுவார்களோ என்று பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காது மூன்று நாட்கள் போராடினாள்.
“பெத்த பொண்ணுனு பாசமெல்லாம் சத்தியமா இருக்காது இறைவி. உன்னால என் மத்த புள்ளைக வாழ்க்கை போயிடுமோனுதான் அமைதியா இருக்கேன். அந்த அசிங்கத்த கலைச்சுட்டு இங்க இருக்குறதுனா இரு. இல்லனா வீட்டவிட்டுப் போயிடு” என்று இசக்கி ஆத்திரமாய் கூற,
ஒரு முடிவோடு எழுந்தவள், இரவோடு இரவாக தனது அப்பத்தா வீராயி வீட்டை அடைந்தாள்.
வீராயிக்கு இறைவி என்றால் கொள்ளை பிரியம். அர்த்த ராத்திரியில் பேத்தி வந்து நிற்கும் நிலைகண்டு அதிர்ந்துபோனவர் விடயம் தெரிந்து துடித்துவிட்டார்.
“ஆத்தா இறவி.. நான் போயி பேசி பாக்கேந்த்தா. நீயு வெசனப்படாத” என்று பேத்தியை சமாதானம் செய்துவிட்டு அவர் மகனிடம் பேசச் செல்ல,
“அவ கெளம்பிப்போன மறுநா காலையே கல்லு ஊனிட்டேன் ஆத்தா. என்னைப் பொருத்தவர அவ செத்துட்டா. ஊருக்காரவள நம்ப வைக்கப் போனாப் போகுதுனு அநாதப் பொணத்துக்குக்கூட ஏற்பாடு பண்ணி மூட்டையக் கட்டி கொள்ளிவச்சு முடிச்சாச்சு. அவளுக்குப் பரிஞ்சு பேசிட்டு வந்து அம்மாங்குற மரியாதையக் கெடுத்துக்காத. அந்த நாய உன் வீட்டுல வச்சுகிட்டனா எனக்குப் பொறந்தவீடும் வேணாம். தொறத்திவிடு. எந்த அசிங்கத்தையும் செஞ்சு பொழைச்சா பொழைக்கட்டும். இல்லனா சாவட்டும்” என்று இசக்கி முடிக்கும் முன் அவர் கன்னத்தில் தன் கரத்தை இடியெனப் பதித்திருந்தார், வீராயி.
“நீயென்னடா ஆத்தானு மரியாத குடுக்குறது? நான் சொல்றேன். நீ எனக்குப் புள்ளையே இல்ல. அவ ஏன்டா சாவப்போறா? நான் இருக்கேன். நாலு வீட்டுல பத்து பாத்திரம் கழுவிப்போட்டாது. நான் அவள வளப்பேன். அவள மட்டுமில்ல, அவ சுமக்குற புள்ளையவும் வளப்பேன். பேசாத பேச்செல்லாம் பேசிப்புட்ட. அந்த ஆண்டவன் அம்புட்டயும் பாக்காம இல்லப்பா. கொட்டுன பாவத்த அள்ளிக்கத் தயாராயிக்க” என்றுவிட்டு வந்தார்.
வீட்டில் நடந்த விடயம் அறிந்த இறைவிக்கு வாழ்வே வெறுத்துப்போனது. “நான் என்ன அப்பத்தா பண்ணேம்?” என்று இறைவி கதறித் துடிக்க, பேத்தியை அணைத்துக்கொண்டு, “ஆத்தா நீ அழுவாதத்தா. இது ஏதோ போராத காலமுனு நெனச்சுக்க. ஓன் மனசுக்கு நீ சந்தோஷமா வாழுற காலம் வரும். கலங்காத தாயி. அப்பத்தாருக்கேன். என் உடம்புல கடைசிச் சொட்டுத் தெம்பிருக்குற வரை, உன்னைய நான் பாத்துக்கிடுவேன் தாயி” என்று ஆறுதல் படுத்தினார்.
சொன்ன சொல் தவறாமல் அக்கம் பக்கத்து வீடுகளில், வீட்டு வேலை சமையல் வேலைகளைப் பார்த்துக் கொடுத்து தங்கள் வாழ்வை ஓட்டினார்.
இறைவிக்கு மாதம் ஐந்து கடந்து வயிறு தெரிய ஆரம்பித்திட, அரசல் புரசலாய்த் துவங்கி, வெளிப்படையாகவே அவளைப் பற்றிய கட்டுக்கதைகள் பரவத் துவங்கியது.
இவற்றையெல்லாம் நினைத்து மனதோடு மருகிய பெண், இரவு தூக்கம் துறந்து, துக்கம் அடைக்கும் நினைவுகளில் அலறி எழ, “ஆத்தா மகமாயி.. எம்பேத்தி அஞ்சி அலறுதே.. ஒனக்குக் கண்ணில்லயா” என்று வீராயியும் பரிதவித்துப் போனார்.
தனது புலம்பல் தன் பேத்தியின் வாழ்வைச் சீராக்காது என்று புரிந்துகொண்டவர், தினம்தினம் பேத்தியிடம் பேச்சுக் கொடுத்து அவளைத் தேற்ற முற்பட்டார்.
அவளுக்கு நடந்தது, வெறும் விபத்துதான் என்பதையும், அதனால் ஆண்கள் என்றாலே இப்படித்தானோ என்ற அவளது பயத்தையும், பேசிப் பேசியே கரைத்திருந்தார்.
இப்படியே நாட்கள் செல்ல, அவர் வேலை பார்க்கும் வீட்டில், ஒரு விசேஷம் வந்தது. அப்போது அப்பெண்ணுக்கு மருதாணி போடுவதாய் சொல்லியிருந்த பெண் வராதுபோக, தயக்கத்துடன் முன்வந்த இறைவி தான் போடுவதாய் கூறினாள்.
அவளை ஏற இறங்க ஒருமாதிரி பார்த்தப் பெண், “நீயா? உனக்குப் போடத் தெரியுமா? வட்ட வட்டமா வைக்குறதில்ல இது” என்று கூற,
“இல்லக்கா. எனக்குப் போடத் தெரியும்” என்று பேசி எப்படியோ அவரது அனுமதியையும் வாங்கிக்கொண்டாள்.
இரண்டு மணி நேரம் வயிற்றுப் பிள்ளையுடன் முதுகு நோகப் போராடி அந்தப் பெண்ணின் இரண்டு கைகளையும் அவள் அலங்கரித்திருக்க, அப்பெண் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானாள்.
“உன்ன நான் என்னமோ நினைச்சேன்மா. ரொம்ப அழகா போட்டுட்டியே. உன் பாட்டியும் எத்தனைக் காலத்துக்குத்தான் பத்து பாத்திரம் தேச்சு ஒன்னப் பாத்துப்பாங்க? இப்ப இதுக்குலாம் நல்ல டிமாண்ட் வந்துடுச்சு. இதையே பேசாமத் தொழிலாச் செஞ்சு நீயும் நாலு காசு சம்பாதிக்கப் பாரு” என்று அப்பெண் கூற,
இறைவியின் கண்கள் ஒளிர்ந்தது.
அவர்கள் வீட்டிலேயே பின்பக்கம் நிறைய மருதாணிச் செடி மரம்போல் செழித்து வளர்ந்திருக்க, தற்போதைக்கு மருதாணிக்காக வெளியே அலையவேண்டியது கூட இல்லையென்று, தன் திட்டத்தை வீராயியிடம் கூறினாள்.
“வயித்துப் பிள்ளக்காரி ரெண்டு மணி நேரம் முதுகு நோக அந்தப் பொண்ணுக்குப் போட்டதே எனக்கு மனசு ஆறலைத்தா. நீ செய்யு. வேணாமின்னு சொல்ல மாட்டேன். எனக்குப் பொறவு வாழ, ஒனக்கு ஒரு வழி கண்டிப்பா வேணுந்தான். ஆனா புள்ள பெறந்து ஒரு வருஷம் போவட்டும். அப்றம் செய்யு” என்று வீராயி கூறிட, அவர் சொல்லின் நியாயம் உணர்ந்து ஏற்றுக்கொண்டாள்.
அதன்படியே சக்தியை வலிகளோடு சுகமாய் ஈன்றவள், அவளுக்கு ஒருவயது வந்த பின், தனது தொழிலைத் துவங்கினாள்.
அக்கம்பக்கம், அறிந்தவர் தெரிந்தவர், திருமண மண்டபத்தார் என்று பலரிடம் பேசியும், கெஞ்சியும் தனக்கான வாய்ப்பை உருவாக்கியவள், தனக்கென்று ஒரு அலைபேசியையும் வாங்கிக்கொண்டு, அதன்மூலம் தனது தொழில் வட்டத்தையும் பெருக்கினாள்.
நன்கு வரையத் தெரிந்திருப்பதால், கொடுக்கும் புகைப்படங்களை வரைந்து மென்தகடாய் அச்சிட்டுக் கொடுக்கும் பணியையும் துவங்கியவள், இரண்டிலும் வாழ்வதற்குத் தேவையான அளவு லாபம் பார்த்து, தன் அப்பத்தாவையும் தானே பார்த்துக் கொள்ளும் அளவு முன்னேறி வந்தாள்.
சக்தி மூன்று வயதை எட்ட, அவளைப் பள்ளியிலும் சேர்த்து, இன்னும் தன் உழைப்பை அதிகரித்தாள்.
தினமும் பள்ளியிலிருந்து அவளைக் கூப்பிட வருகையில் அவளது பள்ளித் தோழனாய் தர்ஷன் அறிமுகமாக, தர்ஷனை அழைக்கவரும் முகில்வண்ணனுடன் பேச்சுவார்த்தை துவங்கியது.
பத்தொன்பது வயதில் மூன்று வயது குழந்தைக்குத் தாயா? என்று அதிர்ந்தாலும் அவளைப் பற்றித் தவறாக ஒருமுறைகூட முகில் யோசித்ததில்லை. அவள் குறித்து அவனாக ஏதும் கேட்கவும் முயற்சி செய்ததில்லை. அதனாலேயே முகிலுடன் ஒரு நல்ல நட்பு அவளுக்கு உருவானது.
அப்படியான சூழலில் ஒருநாள் பள்ளி முடிந்து தன்னை அழைக்க வந்த அன்னையிடம், “அம்மா அப்பானா யாரு?” என்ற கேள்வியுடன் சக்தி வந்து நின்றாள்.
முகிலுடன் பேசிக்கொண்டிருந்த இறைவி, தன்னிடம் ஓடிவந்து தன்னைக் கட்டிக்கொண்டு மகள் கேட்ட கேள்வியில் வெளிப்படையாகவே அதிர்ந்துபோக, அடிவயிற்றில் அம்பெய்தியதைப் போல் வலிக்கும் உணர்வைக் கொடுத்தது.
அவளது அதிர்ந்த தோற்றம்கண்ட முகிலுக்கு அவள் வாழ்வில் ஏதோ தர்மசங்கடமான நிலை உருவாகியிருப்பது புரிந்தது.
“அப்பானா யாரு? நாளைக்கு ஃபாதர்ஸ் டேவாம். எல்லாரும் அப்பா கூத்திட்டு வருவாங்களாம். எனக்கு அப்பா யாரு?” என்று சக்தி கேட்க,
மகளைத் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டவள், முகிலின் முகம் நோக்க முடியாது, வெட்கி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
“இறைவி” என்று தர்ஷனைத் தூக்கிக்கொண்டு அவள் பின்னே ஓடிவந்த முகில், “இறைவி நில்லுமா” என்க,
“அம்மா முகி மாமா கூப்தாங்க. அம்மா நில்லுங்க” என்று சக்தி கூறினாள்.
மகளின் குரலிலும், மனதின் நினைவிலும் தள்ளாடிய இறைவிக்குத் தலை சுற்றுவதைப் போல் இருக்க, “ஏ இறைவி” என ஓடிவந்து அவளைத் தாங்கிப் பிடித்தான், முகில்.
தான் வந்த மகிழுந்திலேயே அவளையும் கூட்டிக்கொண்டு தனது வீட்டை அவன் அடைய, கூடத்தில் கற்பூரவள்ளி, தான்யா, தர்வின் மற்றும் மதி அமர்ந்திருந்தனர்.
முகில் தள்ளாடியபடி நடக்கும் பெண்ணைத் தோளோடு தாங்கிவருவதைக் கண்டபோதும், அந்தப் பெண்ணிற்கு என்னவோ? என்றுதான் அவ்வீட்டார் யாவருமே பதறி வந்தனர்.
மருண்ட விழிகளோடு தர்ஷன் கரம் பற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த சக்தியைப் பார்த்து, அவளை அள்ளிக்கொண்ட தான்யா, “யாருடா இவங்க?” என்று கேட்க,
“இவ சக்திமா. என் பிரெண்ட் சொல்வேன்ல?” என்றான்.
“ஓ நீங்கதான் அந்தக் குட்டியா?” என்று தர்வின் கேட்க,
“இவங்க சக்தியோட அம்மா” என்று கூறி அங்குள்ளோரையெல்லாம் அதிரச் செய்தான்.
கிட்டத்தட்ட தன்னைவிடப் பத்துவயது இளைய பெண், தன் மகனின் வயதுக்கு நிகரான வயதுடைய பெண்ணிற்குத் தாயா? என்று அவர்கள் இறைவியை நோக்க, அவள் பாதி சுயநினைவில் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
சூழலைப் புரிந்துகொண்டு மதி, அவளுக்குத் தண்ணீர் எடுத்துவர, தான்யாவிடமிருந்து இறங்கிய சக்தி, இறைவியிடம் வந்து, “அம்மா இனிமே சக்தி அப்பா கேக்க மாட்டேன். ப்ளீஸ் அழாதீங்க. சக்தி சாரி” என்று கூறினாள்.
அதில் மேலும் மனமொடிந்துபோன இறைவி, மகளைக் கட்டிக்கொண்டு, “சக்தி” என்று கதறிவிட, அனைவரும் அவளது கண்ணீரில் பதறிப்போயினர்.
சக்தியும் பயத்திலும், அன்னை அழுவதிலும் அழத் துவங்கிட, “மாமா.. பாப்பா அழுறா” என்று மதி கூறினாள்.
சக்தியை அவளிடமிருந்து வாங்கியவன், தான்யாவிடம் கொடுத்து, “பிள்ளைங்கள உள்ளக் கூட்டிட்டுப் போக்கா” என்க,
தான்யாவும் தர்வினும் குழந்தைகளை உள்ளே கூட்டிச் சென்றனர்.
தன் மனபாரம் தீரும் வழி அறியாது வெடித்து அழுதவளுக்கு, அந்த நேரம் தேவைப்பட்டதெல்லாம் ஓர் அரவணைப்பு மட்டுமாகவே இருந்தது.
சற்றும் யோசிக்காது, அவளை அணைத்துக்கொண்டு அவள் முதுகைத் தட்டிக்கொடுத்த முகில், “இறைவி..” என்க,
“அ..அவளுக்கு என்னனு சொல்லுவேன் முகில்? எனக்கே தெரியாத ஒருத்தன கேட்டுட்டுப் போறாளே” என்று வெடித்தழுதாள்.
மதிக்கு இறைவியின் வேதனையிலும் கண்ணீரிலும் கண்கள் கலங்கிவிட, கற்பூரவள்ளிக்கு விடயம் ஓரளவு புரிந்துபோனது.
“இறைவி கூல்..” என்று முகில் அவளுக்குத் தட்டிக்கொடுக்க,
“வலிக்குது முகில்.. செத்துடலாம் போல இருக்கு” என்று அலறினாள்.
“இறைவி என்ன பேச்சிது?” என்று முகில் அதட்ட,
“பதினைஞ்சு வயசு முகில்.. யாருனு கூட தெரியல. கூலி வேலை முடிச்சுட்டு வந்த சின்னப் பொண்ணுனு கூட அவன் யோசிக்கலை. தூக்கிட்டுப்போய்..” என்றவள் அந்த நொடிகளை மீண்டும் அனுபவித்து வந்தவளாய்த் தன் தலைமுடியை இறுகப் பற்றிக்கொண்டு, “ஆ..” என்றாள்.
“இறைவி.. லிட்டில் கேர்ள்.. ஒன்னுமில்லமா.. ஒன்னுமில்ல” என்று முகில் அவளைச் சமாதானம் செய்ய,
“என் அம்மா அப்பாவுக்கு நான் பட்ட வலியெல்லாம் பெருசாயில்ல முகி. அவங்க குடும்ப மானம் போயிடும்னுதான் அடிச்சுகிட்டாங்க. நானா போய் யார்கிட்டயோ ஏமாந்துட்டு வந்துட்ட மாதிரி, எ..என் நடத்தைய அவ்ளோ கேவலமா பேசினாங்க. ஒரு நாள் நைட்டு ஒருத்தன் என் உடம்பை நாசம்பண்ணிட்டுப் போயிட்டான். அடுத்த நாட்கள் எல்லாம் என்னைப் பெத்தவங்களே என் மனசை நாசம்பண்ணிட்டாங்க முகி. புள்ளையக் கலைக்க மாட்டேன்னு வீட்ட விட்டு வந்தபோதுகூட த..த..தப்பான தொழில் பாத்துத்தான் பொழைப்பேன்னு.. சொன்னாங்க. Am came across both physical and mental abuse (நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன்)” என்று கதறினாள்.
சக்தி கேட்ட ஒற்றைக் கேள்வி, அவளது மூன்று வருட திடத்தை சுக்கலாய் உடைத்திட போதுமானதாய் அமைந்துபோனது.
தான் பட்ட ரணங்களையெல்லாம் சொல்லி அவள் கதறியழ, கூடத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்மணிகளும் அவள் துன்பத்தை உணர்ந்து தங்களையும் மீறி அழுதுவிட்டனர்.
“மூணு வருஷமா நான் எல்லாத்தையும் கடந்துவந்துட்டேன், தைரியமான பொண்ணாகிட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன் முகி. பைத்தியக்காரி நீ எதையும் மறக்கலடினு என் பொண்ணு ஒத்த கேள்வில காட்டிட்டுப் போயிட்டாளே. அவளுக்கு நான் என்னனு சொல்வேன் முகி?” என்று கேட்டுத் தன் முகத்தைக் கரங்களில் மூடி அவள் வெடித்து அழ,
அவளுக்குப் பதில்கூறத் தெரியாமல் முகில் கண்கள் சிவந்து கலங்கி விழித்தான்.
கற்பூரவள்ளி மகன் தோளில் கை வைக்க, அவரை நிமிர்ந்து பார்த்தவன் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் பொழிந்தது.
“பேசு அவட்ட” என்று அவர் இதழ் அசைக்க,
“என்னம்மா பேச?” என்று மெல்லிய குரலிலும், விழி ஜாடையிலும் கேட்டான்.
அவனிடம் பெரும் தவிப்பு. அவளை எதைக்கூறி சமன்செய்திட என்ற தவிப்பு அவனை வதைத்தது.
“யாரோ ஒரு பொண்ணா இல்லாம அவங்கள உங்க உறவாப் பாத்ததாலதான் இங்கக் கூட்டிட்டு வந்துருக்கீங்க மாமா. உங்க முக்கியமான ஒருவரின் கண்ணீரை உருவாக்கியது நீங்களா இல்லாமப் போனாலும், அதைத் துடைக்கும் கடமை உங்களுக்கு இருக்கும் தானே? யாருனு தெரியாத நானோ அத்தையோ பேசுறதைவிட, இத்தனை நாள் அவங்களுக்கு நல்ல நண்பனா இருந்த நீங்க பேசுறதுதான் சரியாருக்கும்” என்று மதி கூற,
தன் கண்களை அழுத்தமாய் மூடித் திறந்தவன், பரிவாய் “இறைவி” என்று அழைத்தான்.
கண்ணீரோடு பாவை அவனை நிமிர்ந்து பார்க்க, “மூணு வருஷமா தைரியமா இருந்தேன்னு சொன்ன. இப்ப புரியுதா உன்னை நீயே தைரியம் என்ற போர்வையில் ஏமாத்திட்டு இருந்திருக்கனு?” என்று கேட்டான்.
வள்ளியும் மதியும் அவன் பேச்சைப் புரியாது கவனிக்க,
இறைவி அவனை குழப்பமாய் பார்த்தாள்.
“இத்தனைக்குப் பிறகும் கூட நீ இவ்வளவு தூரம் வந்திருக்க இறைவி. பலர் எடுக்கத் தயங்கும் முடிவுகளை எடுத்து, கால் வைக்க முடியாத பாதைகளில் பாதம் பதிய ஓடிவந்திருக்க. அன்ட் இட்ஸ் ஃபைன் டு க்ரை ஃபார் தி பெயின்” என்று அவன் கூற,
இறைவியின் கண்ணீர் மெல்ல ஓய்ந்து கவனம் அவன் பேச்சில் குவிந்தது.
“அழுறதால நீ கோலையாகிடலை. ஆனா உன் மகள் கேட்ட ஒத்தக் கேள்வி உன்னை உடைச்சுடுச்சுனு சொல்ற பாரு. அதுலதான் நீ கோலையாகுற. கேட்கப்பட்டும் கேள்விக்காகப் பயப்படாத இறைவி. இப்பவிட்டாலும் கூட எதிர்காலத்தில் அவ நிறைய கேட்பா. அப்ப என்ன பண்ணுவ? இப்படி அழுது அவளுக்கொரு தவறான உதாரணமா இருக்கப்போறியா?” என்று முகில் கேட்க, அவள் சிரம் வேகமாய் இல்லையென ஆடியது.
அவள் உச்சியில் கரம் வைத்தவன், “உன் வயசுக்கும், உனக்கிருக்குற மெச்சூரிடிக்கும் புள்ளியளவு கூடச் சம்மந்தம் இல்ல இறைவி. ஆனா அதை நீ உருவாக்கி இவ்வளவு தூரம் வந்துருக்க தானே? பொய்யா தைரியம்னு உனக்கு ஒரு போர்வை போத்திகிட்டதா சொன்னியே, அதைத் தூரப் போட்டுடு. பயமாருந்தாலும் பரவாயில்லை. அதை ஃபேஸ் பண்ணு. பயத்தை எதிர்கொள்ளும்போது கிடைக்கும் துணிவு தன்னால தைரியத்தை உனக்குக் குடுக்கும். உன்னை உங்க பாட்டிதான் அந்தச் சம்பவத்திலிருந்து மீட்டதா சொன்னியே. அவங்க மீட்புக்கு நியாயம் செய்ய வேண்டாமா சொல்லு?” என்று கேட்க, கண்ணீரைத் துடைத்தவள் குழந்தைபோல் ஆமென்று தலையசைத்தாள்.
அவளைப் பார்க்க அவனுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.
குழந்தைபோல் என்ன? அவள் குழந்தைதானே? தன்னவளின் வயதை ஒத்தவள். தனக்கடுத்து ஒரு செல்வத்தைத் தாய் ஈன்றெடுத்திருந்தாள் அவளும் இப்படித்தானே கஷ்டங்களைத் தன்னிடம் பகிர்ந்திருப்பாள்? என்றெல்லாம் எண்ணிக்கொண்ட முகில், “நான் உனக்கு சத்தியம் பண்ணித்தரேன் இறைவி. ஒரு நல்லத் தோழனா, உன் துயரை நீ வந்து கொட்டுவதற்கான நல்ல காதுகளா நான் உனக்கிருப்பேன். எப்பவும் இருப்பேன். நீ எப்பக் கஷ்டமா உணர்ந்தாலும் என்கிட்ட சொல்லலாம். வாழ்க்கை இப்படியே போயிடப்போறதில்லைனு இந்த மூன்று வருடமே உனக்குப் பாடம் கொடுத்திருக்கும். இன்னும் காலம் போகப் போக, உன் வாழ்க்கை வசந்தமா மாறும். நீயே மாத்தியமைப்ப. எதுவும் நெகடிவா யோசிக்காத. சக்திக்கு என்ன சொல்லனு பயந்து தவிர்ப்பதை விட்டுட்டு அதை ஆராய்ந்து அவளுக்கான பதிலை யோசி. நிச்சயம் விடை கிடைக்கும்” என்று அவள் கண்ணீர் துடைத்தான்.
இதயம் பிசைந்து கண்ணீர் சொரிந்துகொண்டிருந்த கண்கள், அப்பணி விடுத்து இளகியது. வலியை உணர்த்தி வருந்தச் செய்துகொண்டிருந்த இதயம், இரத்தச் சுத்திகரிப்பை மட்டும் செய்வதற்காக நகர்ந்தது. வலியை உணர்த்திக்கொண்டிருந்த நரம்புகளும் சுரபிகளும், அமைதியடைந்து அவளை ஆசுவாசப்படுத்தியது.
மெல்ல மெல்லத் தன்னிலை பெற்றுச் சுயம்கொண்டாள்.
வெறும் சொற்ப மாதம் தெரிந்த ஒருவனை நம்பி அவனோடு வந்தது, அவன் வீட்டில், அவன் வீட்டார் முன்பு, தனது வாழ்வின் கரும் பக்கங்களைச் சொல்லித் துடித்ததெல்லாம் மெல்ல மெல்லப் புரிய, சங்கடமாய் அவர்களை ஏறிட்டாள்.
அவள் தலையைப் பரிவாய்க் கோதிய கற்பூரவள்ளி, “எம்மகளாட்டம் நினைச்சுக்குறேன்டா உன்ன. உனக்கு என்ன உதவினாலும் இந்த வீட்டுக்கு எப்ப வேணா வரலாம்” என்று கூற,
கனிவாய் அவரைப் பார்த்தாள்.
அவள் கரம் பற்றிய மதி, “நானும் உனக்கொரு நல்லத் தோழியா இருப்பேம்மா. நீ எந்தக் கஷ்டமாருந்தாலும் இங்க வரலாம். எதுக்கும் வருத்தப்படாத. நாங்க இருக்கோம் உனக்கு” என்று கூற,
“நாங்க கூட இருக்கோம்” என்று தான்யா மற்றும் தர்வின் வந்தனர்.
அனைவரையும் பார்த்து மனம் நெகிழப் புன்னகைத்தவள் கண்களிலிருந்து, தற்போது கண்ணீர் ஆனந்தத்தின் வெளிப்பாடாய் பொழிந்தது.
நொடியில் பல நினைவுகளில் வாழ்ந்து மீண்ட இறைவி, “நேத்து அந்தம்மா கேக்குது முகி. உ..உனக்கு உடம்பு கூசலையானு. அஃப்கோர்ஸ் நான் தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்றேன் தான். ஆனா எனக்கு வலிக்காதுனு இல்லையே முகி” என்று கூற,
அவள் தலைகோதிய முகில் வேதனையை விழுங்கியவனாய் அவளைப் பார்த்தான்.
“இந்த உலகம் ஒரு பொண்ணை ரொம்ப ஈசியா தப்பாப் பேசிடும்னு சொல்ல மாட்டேன் முகி. ஏன்னா தப்பாப் பேசணும்னு முடிவு பண்ணிட்டா அதில் இந்தச் சமூகம் ஆண் பெண் பேதம் பார்க்குறதில்லை. இங்க, இந்த சூழல்ல பெண்ணா நான் அடிவாங்கி நிற்குறேன், எங்கேயோ, ஏதோ ஒரு சூழல்ல ஆண் ஒருத்தன் அடிவாங்கி நிற்பான். பிரச்சினை நான் பெண்ணுங்குறதுல இல்ல முகி. என்னைப் பாக்குறவங்கக்கிட்டதான் இருக்கு” என்று இறைவி கூற,
“என்னை எப்பவுமே ஏதாவது பேசி ஆச்சரியப்படுத்திடுறடி இரா” என்றான்.
“நம்மிலும் துன்புருவோர் பலர் முகி” என்று விரக்தியாய்க் கூறியவள் அவன் முகம் நோக்கி,
“ஆனா எனக்கு என் வலிதானே பெருசு” என்க,
“விடு பாப்பா. அவங்களுக்கு உன் கஷ்டம் தெரியலை. நான் கர்மாவை நம்புறவன் இரா. அவங்கவங்க சொல்லுக்கான கணக்கு அவங்கவங்களுக்கு நிச்சயம் உண்டு. ஒருநாள் இல்ல, ஒரு நிமிஷம் கூட அவங்களால இறைவியா வாழ முடியாது. தலைவலியும் வயிற்றுவலியும் அவன் அவனுக்கு வந்தாதான் தெரியும். அவங்க கஷ்டப்படணும்னு நான் சொல்லலை. ஆனா கஷ்டப்படுறவளைப் புரிஞ்சுக்கத் தெரியலைனா என்ன மனிதம் சொல்லு?” என்றான்.
இறைவி அமைதியாய் பெருமூச்சு விட, அவனிடம் அழுது முடித்தது அவளுக்குப் பெரும் தெம்பைக் கொடுத்திருந்தது.
“கேட்கக் காதுகளாவும், கண்ணீரத் துடைக்கக் கைகளாவும் இருப்பேன்னு எனக்கு நீ சொன்ன முகி. அதை ஒவ்வொரு முறையும் வெறும் வார்த்தையில்லைனு நிரூபிச்சுட்டு இருக்க” என்று இறைவி கூற,
“எப்பவும் நிரூபிப்பேன்” என்று அவள் உச்சியில் கரம் வைத்துத் தலையை ஆட்டினான்.
“சரி சரி வா. ஆத்தா ஃபோன் அடிச்சு நீ எழவேயில்லனு சொல்லவும் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போவனும்னு கார்லதான் வந்தேன். சக்தியை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே போயிட்டு வருவோம்” என்று முகில் கூற,
சரியென்று தயாராகி, வீராயி கொடுத்த கஞ்சியைக் குடித்துவிட்டு அவனது வண்டியில் ஏறினாள்.
அண்டைவீட்டுப் பெண் முகம் சுளிப்போடு இதைப் பார்க்க, வண்டியிலிருந்து இறங்கிச் சென்ற முகில் அவரிடம் ஏதோ கூறிவிட்டு வந்தான்.
அவர் உள்ளே தெறித்து ஓடுவதைக் கண்டு சின்னச் சிரிப்போடு, “என்னடா சொன்ன?” என்று அவள் கேட்க,
“எனக்குப் போலீஸெல்லாம் தெரியும். அவளப் பத்தி எதாவது பேசினதாத் தெரிஞ்சுது தூக்கி உள்ள வச்சுடுவேன்னு சொன்னேன். அந்தம்மா தெறிச்சு ஓடுது” என்று சிரித்தான்.
“போலீஸ் தெரியுமாம்ல? உருட்டு உருட்டு” என்று இறைவி கூற,
“கேர்ள்.. யாரு உருட்டுறா? என் அத்தான் சொல்வேன்ல? அவர் போலீஸ்தான். ஐயா பெரிய இடமாக்கும்” என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.
