Loading

விசை-03

குழந்தைகளின் கூச்சல் மட்டுமே அவ்வீட்டில் நிறைந்திருந்தது.

“ஏ! நான் உன்னைப் பிடிச்சிடுவேன்,” என்று தர்ஷன் சக்தி பின்னே ஓட,

“முகி மாமா, இவன் என்னைப் பிடிக்க வரான்!” என்று கத்தியபடி அவ்வீட்டுத் தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தாள் சக்தி.

“ஓடு! ஓடு சக்தி! பந்தை உன் முகி மாமாட்டம் போய்க் கொடு,” என்று முகில்வண்ணனின் தாய் கற்பகவள்ளி கூற,

“தர்ஷ் ஓடு ஓடு! போய்ச் சக்தியைப் பிடி!” என்று தான்யா கூறினாள்.

“தான்யா பெரிம்மா, உங்ககூட டூ தான்! போங்க!” என்று ஓடும்போதே ஒரு செல்லச் சண்டையும் போட்டுக் கொண்ட சக்தி, கையில் உள்ள பந்தை முகில்வண்ணன் கையில் ஓடிச் சென்று கொடுக்க,

“சித்தி ரன்! மாமாவப் பிடிங்க!” என்று தர்ஷன் கூறினான்.

“இதோ தர்ஷ்,” என்று ஓடி வந்த இறைவி, “டேய் வளர்ந்தவனே, நில்லுடா!” என்க,

“முடிஞ்சா வந்து பிடி, கேர்ள்!” என்று ஓடினான்.

“டேய் முகில், ஓடுடா!” என்று தான்யாவின் கணவன் தர்வின் கூற,

“தர்விப்பா, நீங்கதான் குட்! பெரிம்மா எனக்குச் சப்போர்ட் பண்ணாமல் தர்ஷுக்குச் சியர் பண்தாங்க,” என்று சக்தி குறைப்பட்டாள்.

“எல்லாருமே உனக்கு மட்டுமா சப்போர்ட் பண்ணுவாங்க? அங்க பாரு… முகி மாமா அவுட் ஆகப்போறாங்க,” என்று தர்ஷன் கூற,

“முகி மாமா ஓடுங்க!” என்று கத்தினாள்.

தோட்டத்தில் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தவன், “ஏ மெஹந்தி, முடிஞ்சா பிடி பார்ப்போம்!” என்று கத்திக்கொண்டே அவளைப் பார்த்து அழகு காட்டியவன், அவனுக்கு முன் வந்த மதிவதனி மீது மோதிக்கொண்டு தடுமாறி விழுந்தான்.

“ஏ மாமா!” என்று அவனைத் தாங்கிப் பிடித்த மதியால், அவனை விழாமல் தடுக்கவெல்லாம் முடியவில்லை.

“அடிப்பாவி… சாய்ச்சுப்புட்டியே!” என்று முகில் கூற,

அவன் விழுந்ததைக் கண்டு சிரித்துக்கொண்டே, கற்பகவள்ளி, தான்யா, தர்வின் மற்றும் தர்ஷன் வந்தனர்.

“அச்சோ முகி மாமா! அடிபட்டுடுச்சா?” என்று சக்தி ஓடி வந்து கேட்க,

“பாரு குட்டிமா… உன் அத்தை என்னைத் தள்ளி விட்டுட்டா,” என்று குறைபட்டான்.

மதியை முறைத்தவள், “முகி மாமா பாவம்ல?” என்று கூற,

“நானாடி உங்க மாமாவத் தள்ளிவிட்டேன்? அவங்கதானே என்மேல இடிச்சு விழுந்தாங்க?” என்றபடி முகிலைத் தூக்கிவிட்டாள்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு நடுவே, இறைவியின் உடையைப் பிடித்து இழுத்து அழைத்த தர்ஷன், முகில் கையிலிருக்கும் பந்தைக் காட்டி, ‘பிடுங்கிடுங்க சித்தி’ என்று இதழசைக்க,

குழந்தைக்குக் கண்ணடித்துச் சம்மதம் சொல்லியவள், நைசாக அவன் பின்னே சென்று பந்தைப் பறித்துக்கொண்டு, “ஏ! நாங்கதான் வின்!” என்று கத்தினாள்.

அதில் சட்டெனத் திரும்பிய முகில், “ஏ ஃபிராடு! இது சீட்டிங்!” என்று கூற,

“எது சீட்டிங்? பால் என்கிட்ட வந்துடுச்சு. நாங்கதான் வின்னர்!” என்று அதைத் தூக்கிப் போட்டுப் பிடித்தாள்.

“உன்ன…” என்று பல்லைக் கடித்த முகில், அவளிடமிருந்து அதைப் பறிக்க முயற்சிக்க, இவள் போக்குக் காட்ட, என்று விளையாட,

“மண்டைலயே அதால ஒண்ணு போடு இறைவி!” என்று மதியும் அவளுக்குத் துணையாகக் கூறினாள்.

“இந்தா போட்ருவோம்!” என்று அவன் தலையில் இவள் எம்பிக் கொட்டிவைக்க, “என்ன நடக்குது இங்க?” என்று கோபமே உருவாய் செந்திலின் குரல் கேட்டது.

அனைவரும் குரல் வந்த திசையை நோக்க, அப்பட்டமான அதிருப்தியைக் காட்டியபடி வந்தார், மதியின் தந்தை செந்தில்.

செந்திலைக் கண்டதுமே தனிச்சையாய் இறைவி, முகிலைவிட்டு நகர்ந்து நிற்க, அதில் அவளை முறைத்துப் பார்த்தவன், அவள் அருகே சென்று நின்றுகொண்டு, “வாங்க மாமா,” என்றான்.

அவனது அழுத்தமான பார்வையைக் கண்டு அடுத்து ஏதும் பேசாதவர், கற்பகவள்ளியைப் பார்த்து, “நல்லா இருக்கியா க்கா?” என்று கேட்க,

“எனக்கென்னய்யா குறை? நீ எப்படியிருக்க? மொதல்ல உள்ள வா. உள்ள போய்ப் பேசுவோம்,” என்று அவரையும், மகள், மருமகன் மற்றும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

இறைவியின் கரம் பற்றிய மதி, “சாரி இறைவி. அப்பா பற்றித்தான் தெரியுமே. பொண்ணுங்க, பசங்க நட்பையே தப்பாதான் நினைப்பாங்க. இதுல…” என்று ஏதோ கூற வர, “மதி!” என்று முகில் கண்டிப்பாய்க் கூப்பிட்டான்.

“ஸ்ஸ்…” என்று நாக்கைக் கடித்துக் கொண்டவள், “நிஜமா சாரி இறைவி. உன்னை ஹர்ட் பண்ணச் சொல்லலை. நீ ஹர்ட் ஆயிடக் கூடாதேன்னு சொன்னேன். சாரி,” என்று படபடப்பாய்க் கூற,

அவள் கரத்தைப் புன்னகையுடன் தட்டிக்கொடுத்த இறைவி, “எனக்குப் புரியுது மதி. எல்லாரும் எல்லாத்தையும் சுலபமா ஏத்துக்கணும்கிறது இல்லையே,” என்றாள்.

தன்னைவிட ஒரு வயது இளையவள். இத்தனைக்குப் பிறகும் கூட எத்தனை பக்குவமாய்ப் பேசுகிறாள் என்று எப்போதும்போல் இப்போதும் வியந்த மதி, “அப்பாக்குப் பயந்துலாம் நீ நடந்துக்காத. நான் தான் அவரோட வாழப்போறேன். எனக்கு உங்கமேல நம்பிக்கை இருக்கு. நானே சந்தேகப்பட்டால் கூட, நீ இப்படி நடந்துக்கக் கூடாது,” என்று அவள் விலகி நின்றதைக் குறித்துக் கூற,

முகிலைப் பார்த்து, “ஜாடிக்கேத்த மூடிதான்டா,” என்று கூறினாள்.

அதில் வெட்கம் கொண்டு, புன்னகையுடன் முகிலைப் பார்த்துக் கொண்ட மதி, “நான் உள்ள போறேன்,” என்று சென்றுவிட, முகிலும் மந்தகாசமாய் புன்னகைத்துக் கொண்டான்.

“தோ பாருடா! வெட்கம்? ஆண்கள் வெட்கப்படும் தருணம், என் நண்பன் வெட்கப்பட நான் கண்டு கொண்டேன்!” என்று கேலியோடு இறைவி பாட,

“ஏ லூசு! போடி,” என்றபடி அவளோடு உள்ளே சென்றான்.

அதற்குள் செந்தில் கற்பகவள்ளியிடம், ஒரு மூச்சுப் புலம்பித் தீர்த்துவிட்டார்.

எத்தனையோ முறை வள்ளியும் இறைவி நல்ல பெண் என்று கூறியும், ஊர்ப் பேச்சைத்தான் செந்தில் நம்பினார்.

அவருக்கு முகில் மீது அலாதியான நம்பிக்கையும் மரியாதையும் உண்டு. ஆனால் நல்ல நிலையில் இருக்கும் தன் மருமகனுக்கு இப்படியொரு பெண்ணுடனான சகவாசத்தால் அவப்பெயர் உருவாகுவதை அவர் விரும்பவில்லை. அதை முகிலிடம் முதன்முறை நேரடியாகச் சொல்லிப் பலமாய் வாங்கிக் கட்டிக்கொண்டதால் அதன்பிறகு அவரது பேச்செல்லாம் வள்ளியிடமே இருந்தது.

முதலில் அறிவுரைகள் கூறிப்பார்த்த வள்ளியும் கூட, செந்தில் புரிந்துகொள்ளாததால், அதை பெரிதுபடுத்தாமல் அவர் புலம்புவதை மட்டும் கேட்டுக்கொண்டு தலையாட்டி அனுப்பி வைத்திடுவார். கேட்கப்படாத இடத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் சொற்களுக்குப் பயனில்லை என்ற நிலையில் எதற்குத் தன் ஜீவன் நோக வேண்டும் என்றுதான் அவரும் அமைதியாகிவிட்டார்.

“என்ன மாமா, என்ன விஷயம்?” என்று கேட்டபடி தனது அத்தான் அருகே முகில் அமர,

கற்பகவள்ளியும் தான்யாவும் அனைவருக்கும் குடிப்பதற்கு மோர் எடுத்து வந்தனர்.

குழந்தைகளுடன் தனியே அமர்ந்துகொண்டிருந்த மதியின் அருகே சென்று இறைவியும் அமர்ந்துகொள்ள,

“மாப்ள, கல்யாணத்தை ரெண்டு வருஷம் தள்ளி வச்சுக்கலாம்னு நீங்க சொன்னதா வள்ளிக்கா சொல்லுச்சு. எதுக்கு இந்தத் திடீர் முடிவு?” என்று செந்தில் கேட்டார்.

“என்ன அவசரம் மாமா? அவளுக்கும் இருபத்திரண்டு வயசுதானே ஆகுது? எனக்கும் இருபத்தாறு வயசுதான். இப்பவே பண்ணி வைக்க என்ன அவசரம்? பி.எஸ்.சி-ல ‘படி படி’ன்னு அவளை நச்சரிச்சுக் கோல்ட் மெடல் எடுக்க வைச்சது எனக்குக் கட்டிக்கொடுக்கத்தானா? மேல படிக்கட்டும் அவ. அது முடியவும் பண்ணிக்கலாம்,” என்று கணீர் குரலில் கூறியவனை, கர்வம் கலந்த காதலோடு மதி நோக்க,

தன் குரலைச் செருமிக் கொண்டு அவள் கவனம் கலைத்த இறைவி, கேலியாய்ச் சிரித்து, “யூ கண்டினியூ,” என்றாள்.

“கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டுமே மாப்ள” என்று செந்தில் கூற,

“இப்ப இப்படிச் சொல்வீங்க. அப்புறம் கல்யாணம் பண்ணியாச்சு எதுக்கு இதெல்லாம்னு கேட்பீங்க. நாலு மாசம் போனால், விசேஷம் இல்லையானு நச்சரிக்க நாலு பேர் வருவாங்க. கட்டிவச்சுட்டு எங்க நிம்மதி கெடவா?” என்று முகில் கேட்டான்.

“என்ன மாப்ள… கட்டிக்கிட்ட பிறகு யாரும் படிச்சு வரலையா என்ன? காலம் போற காலத்துல, நானும் என் பொண்ணுக்கு ஒரு நல்லது பொல்லாதது பார்த்துடணுமேன்னு பார்க்கிறேன். நீங்க என்னடானா திடுதிப்புன்னு இப்படிச் சொல்றீங்க. யாரு வந்து என்ன பேசினாங்களோ?” என்று படபடப்பாய்ப் பேசியவர், கடைசி வரியை மட்டும் முணுமுணுக்க, அவர் யாரைக் குறிப்பிட்டுப் பேசுகின்றார் என்பது அனைவருக்கும் புரிந்தது.

மதி மனம் வருந்தி இறைவியை மன்னிப்பாய்ப் பார்க்க, அவள் நடக்கும் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப்போல் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“யாரும் சொல்லி குருட்டுப்போக்குல முடிவெடுக்கும் அளவு நான் சில்லறைப் பய இல்லைன்னு தெரிஞ்சுத்தானே மாமா உங்க பொண்ணைக் கட்டித் தர சம்மதிச்சீங்க?” என்று கேள்வியாய் அவன் நிறுத்த,

பெரியவருக்குப் பயம் பிடித்துக்கொண்டது.

“அய்யோ இல்ல மாப்ள. நான் தப்பா எதுவும் சொல்லலை,” என்று பதறியவர், “இப்ப ஆரம்பிச்சால்கூட எல்லாம் ஆற அமரச் செய்ய ஆறு மாசம் ஆகும் மாப்ள. பண்ணிக்கிட்டு படிக்கட்டுமே,” என்றார்.

திடீரென்று திருமணத்தை ஒத்தி வைத்திருப்பதாக வந்த செய்தி அவரை என்னென்னவோ யோசிக்க வைத்தது. மகள் வாழ்வில் இறைவியால் ஏதும் சிக்கல் வந்துவிடுமோ என்ற அவரது பயத்தை வெளியேயும் சொல்ல முடியாமல், உள்ளேயே வைத்துக்கொள்ளவும் முடியாமல் தவித்தார்.

“இறைவி!” என்று உரக்க அழைத்த முகில், அவள் நிமிர்ந்து பார்த்ததும், “பசங்களைக் கூட்டிட்டு உள்ள போ” என்றான்.

சரியென்ற தலையசைப்புடன் அவள் குழந்தைகளை அவ்விடம்விட்டு அப்புறப்படுத்த, “மாமா… இந்த ஜென்மத்துல நீங்களே தடுத்தால் கூட நான் மதியைத்தான் கட்டுவேன். இந்த உடம்பும் மனசும் அவளுக்கு மட்டும்தான். என் உறுதிமேல உங்க மகளுக்கு நம்பிக்கை இருக்கு. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் காத்திருங்க” என்று கூறினான்.

“என்ன மாப்ள…” என்று பதட்டமாய் அவர் அழைக்க,

“பெரிப்பா, அவன் அம்புட்டு சொல்றான்ல? ரெண்டு வருஷம்தானே? கண்ணைமூடிக் கண்ணைத் திறக்குறதுக்குள்ள ஓடப்போகுது. புள்ளையைப் படிக்க வைக்குற வேலையைப் பாருங்க. கல்யாணத்தை ரெண்டு வருஷம் கழிச்சு ஊரு மெச்ச நடத்திடுவோம்,” என்று தர்வின் கூற,

மேலும் பேச்சைத் தொடர இயலாது ஒப்புக்கொண்டார்.

“மாமா எதுவும் வருத்தப்படாதீங்க. அதெல்லாம் நம்ம முகி-மதி கல்யாணம் நல்லபடியாத்தான் நடக்கும். வேணுமின்னா வாங்க, கோவிலுக்குப் போய் பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டு வந்துடுவோம். அப்புறமாவது உங்க மனசு ஆறும் இல்ல?” என்று தான்யா கூற,

“இது நல்ல யோசனையா இருக்கு தானு. என்ன தம்பி? நீ என்ன சொல்லுற?” என்று வள்ளி கேட்டார்.

“சரி அக்கா. நானும் நாள் பார்த்துச் சொல்லுறேன். குடும்பமா போய் பொங்கல் வச்சுட்டு வேண்டிக்கிட்டு வந்துடுவோம்” என்று செந்திலும் ஒப்புக்கொள்ள, அந்தப் பேச்சுவார்த்தை அத்தோடு முடிந்தது.

அனைவருக்கும் இரவு உணவு அங்கேயே ஏற்பாடாகியிருக்க, முகில் மற்றும் இறைவியின் பேச்சுகளையும் கேலிகளையும், சக்தியை அவனும் மதியும் கொஞ்சுவதையும் அப்பட்டமான பிடித்தமின்மையோடு கடந்து சென்றார்.

“ஏன்டா வேணும்னே அவர வச்சுட்டு என்பிள்ளையை மாத்தி மாத்தி கொஞ்சுறீங்க?” என்று இறைவி கோபமாய் அவனிடம் கேட்டுவிட,

“ஏன்னா எங்க பாசம் யாருக்கும் பயந்து அடங்கிப்போறது இல்லை,” என்று அவளுக்குச் சொல்லால் கொட்டு வைத்தான்.

உணவு வேளை எப்படியோ முடிவடைய, மதி, செந்தில், இறைவி மற்றும் சக்தி புறப்படவிருந்தனர்.

“இறைவி இரு! வண்டியை எடுத்துட்டு வரேன். பாப்பா தூங்கிட்டா” என்று உறங்கிய குழந்தையை மாரோடு அணைத்துக்கொண்டு சென்றவளை அவன் குரல் நிறுத்த, வெளியே மகளை அழைத்துச் சென்று கொண்டிருந்த செந்திலும் நின்று அவளைத் தீயாய் முறைத்தார்.

அவர் பார்வையை முற்றும் தவிர்த்தவளாய் அவள் திரும்பிக் கொள்ள,

“அப்பா வாங்க போவோம்” என்று தந்தை ஏதும் பேசிவிடுவாரோ என்ற பயத்தில் மதி அழைத்தாள்.

“உனக்கும்தான் தாயி புரிய மாட்டேங்குது. உன் வாழ்க்கையை இவ புடுங்கிக்கிட்டு நட்டாத்துல விட்டுடுவாளோன்னு நான்தானே தவிக்கிறேன்?” என்று அவர் கூற,

“அப்பா என்ன பேச்சு இது?” என்று மதி கண்டிப்பாய்க் கூறினாள்.

“நான் புதுசாவா தாயி பேசுறேன்? ஊரு பேசுற பேச்சு தெரியலையா உனக்கு? உன் வயசுகாரி கையில அஞ்சு வயசுப் பிள்ளையோட நிற்கிறா. இந்த அசிங்கத்தை…” என்று அவர் முடிக்கும் முன் “அப்பா, அடுத்து ஏதாவது பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன். மாமா மதிக்கும் அத்தனையும் நானும் மதிச்சு உயிரா நினைக்கிறேன். அவர் உயிரா நினைக்கும் இறைவியை இன்னொரு முறை ஏதாவது பேசினா அப்புறம் நடக்கும் முடிவுக்கு நீங்கதான் பொறுப்பு” என்று சத்தம் போட்டாள்.

தன்னால் தந்தை மகளுக்கிடையே பிரச்சினை நிகழ்வதைப் பொறுக்க இயலாமல் விறுவிறுவென இறைவி வெளியே சென்றுவிட, அவ்விடம் வந்த முகில், “மதி, இறைவி எங்க?” என்று கேட்டான்.

அவன் முன் இன்னும் இன்னும் தன் தந்தை கீழாகக் காட்சிப்படுவதை விரும்பாதவள், முடிந்தமட்டும் தன் முகத்தைச் சீராய் மாற்றிக் கொண்டு, “வெளிய நிற்கிறா மாமா” என்க,

“சரிமா, போயிட்டு வாங்க. பார்த்துப் போங்க மாமா. போயிட்டு சேதி சொல்லுங்க” என்றுவிட்டுச் சென்றான்.

வண்டியை எடுத்துக்கொண்டு முகில் வரவும் அமைதியாய் ஏறி அமர்ந்துகொண்டவள் அவனோடு புறப்பட, ‘இந்த அசிங்கத்தை…’ என்ற செந்திலின் வார்த்தை அவள் மனதை வியாபித்துப் படுத்தியது.

“என்ன இரா, சைலன்டா இருக்க? மாமா ஏதும் சொன்னாங்களா?” என்று முகில் கேட்க,

“டயர்டா இருக்கு முகி. சீக்கிரம் போ” என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

மேலும் தோண்டித் துருவாது அவனும் அமைதியாய் வீட்டை அடைய,

“ஏய்யா முகிலு… வாய்யா” என்று அழைத்தபடி வீராயி வாசல் வந்தார்.

“ஆத்தா… எப்படியிருக்க?” என்று முகில் கேட்க,

“எனக்கென்னய்யா? என் பேத்திகள் புண்ணியத்துல நல்லா இருக்கேன்” என்று வீராயி கூறினார்.

அதில் புன்னகைத்துக் கொண்டவன், “சாப்பிட்டியா ஆத்தா?” என்க,

“உனக்குத் தெரியாதாயா? நம்ம சாப்பாடு ஏழு மணிக்கு ஒரு கை சோறு. வேற ஏதும் தொண்டைக்குள்ள இறங்காது” என்று வெள்ளந்தியாய்ச் சிரித்தார்.

அதில் தானும் புன்னகைத்தவன், “சரி ஆத்தா. போய்த் தூங்குங்க. உட்கார்ந்தபடியே தூங்கிட்டா சக்தி. கழுத்து வலிக்கப் போகுது” என்று கூற,

“சரிய்யா ராசா. நீயும் பார்த்துப் போ” என்றவர் பேத்தியை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

“ஓய்!” என்று முகில் அழைக்க,

“பை. பார்த்துப் போ,” என்றாள்.

அவள் உச்சந்தலையில் கைவைத்து அழுத்தம் கொடுத்தவன், “ஸ்மைல் பண்ணு கேர்ள்” என்க,

பொய்யானப் புன்னகை ஒன்றைப் புரிந்தாள்.

“எதுவும் யோசிக்காமல் தூங்கு. நாளைக்குப் பேசலாம்” என்றவன் அவள் கன்னம் தட்டிவிட்டுச் செல்ல,

பூட்டுச் சாவியை எடுத்து வந்தவள் கதவை அடைத்துக் கொண்டிருந்தாள்.

“புருஷனுக்காகக் காத்திருந்து கதவடைக்க வந்தா கண்ட கண்டதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. பொம்பளைப் பிள்ளைங்க இப்படியும் இருக்கு பாரு. கூசாதுபோல,” என்று அவள் காதுபட கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றார், அண்டை வீட்டுப் பெண்மணி.

மற்ற நாட்களாய் இருந்தால் அதைத் துச்சமாய் தட்டிவிட்டுச் சென்றிருப்பாள். தற்போது செந்தில் கொட்டிய வார்த்தைகளில் உலன்றுகொண்டிருந்தவளுக்கு அப்பெண்ணின் விஷ வார்த்தைகள் மேலும் வலியைக் கொடுக்க, கண்களை அழுந்த மூடித் திறந்தவள், சென்று அமைதியாய் படுத்துவிட்டாள்.

துக்கம் நிறைந்த தூக்கம், துர்சொப்பனத்திற்கு அவளை அழைத்துச் சென்றது.

‘பொண்ணுடலே அள்ள அள்ளக் குறையாத அழகுதான? ரொம்ப அடம் பண்ணாம இருந்தா மாமா வலிக்காம காரியத்தை முடிச்சு உன்னை வீட்ல விட்ருவேன். இல்லேன்னா உனக்குத்தான் சேதாரம்!’ என்ற குழறலான குரல் அவள் காதுகளை வந்தடைந்தது.

தேகம் தீண்டும், தீங்கை மட்டுமே அறிந்த கரங்களின் தீயில், பொசுங்குவதாய் உணர்ந்த இறைவி, தூக்கத்தினுள்ளிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தாள்.

‘வேணாம்… வேணாம்…’

‘விடு…’

‘ஆ… வலிக்குது!’

‘அம்மா காப்பாத்துங்க!’ என்றவளது சொந்தக் குரலே அவளுக்குள்ளிருந்து கேட்க,

வானில் பெரும் இடியின் முழக்கம் கேட்டு அரண்டடித்து எழுந்தாள்.

விரிகூந்தலில் மறைந்திருந்த முகத்தைத் தன் கரங்களில் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவள் கண்கள், கனலாய் பொழிய, உடல் வெடவெடத்து, நெஞ்சம் மூச்சிற்காக அதிகம் தவித்தது.

தேகம் நடுநடுங்கத் தவித்தவள் கால்களை பிஞ்சுக்கரம் ஒன்று தீண்ட, திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள்.

தூக்கத்தில் அவள் காலடிக்கு உருண்டு வந்திருந்த சக்தி அவள் கால்களைக் கட்டிக்கொண்டு படுத்திருக்க, அவளுக்குப் பக்கவாட்டில் சற்று இடைவெளியில் வீராயி தூங்கிக் கொண்டிருந்தார்.

தேகத்தின் நடுக்கம் குறைந்ததாக இல்லை. கண்களில் கண்ணீரின் செலவு அதிகரித்துக் கொண்டே போக, தன் மகளைக் கண்டாள்.

வாய் வழியாக மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்தியவள், சக்தியைத் தூக்கிப் படுக்கையில் நேராகப் படுக்க வைத்தாள்.

அவளுக்கும் மக்களுக்கும்மான ஒரு அறை, வீராயிக்கு ஒரு அறை என்று இருந்தாலும் கூட, இரவு அனைவரும் ஒன்றாகக் கூடத்தில் தான் உறங்குவர்.

தனது அறைக்கு எழுந்து சென்ற இறைவி, குளியலறை சென்று முகம் கழுவிக்கொண்டு வர, வெளியே அடைமழை பெய்துக் கொண்டிருப்பதன் ஓசை கேட்டது.

அறைக்குள்ளேயே அமர்ந்தவள், மெல்லிய விளக்கின் உதவியுடன் மேஜையின் அருகே சென்றாள்.

அந்த மேஜையின் கடைசிப் பலகையைத் திறந்தவள், ‘ஆசைகள்’ என்று வண்ண வண்ண நிறங்களில் எழுதி ஒட்டப்பட்ட ஒரு கோப்பைக் கையில் எடுத்தாள்.

மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்த அந்தக் கோப்பை வருடியவள் அதைத் திறக்க, அவள் கைப்பட வரைந்த அவளது ஆசைகளின் நிழல் உருவங்கள் அதில் இருந்தன.

இளவரசிகள் அணியும் உடையில் அழகிய சிரிப்புடன் நிற்கும் இறைவி, படித்துப் பலர் பார்க்கப் பட்டம் வாங்கும் இறைவி, புகழ்பெற்ற ‘மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்’ என்று பதக்கம் வாங்கும் இறைவி, கல்லூரியில் சிறப்பு விருந்தினராய் நின்று பேசும் இறைவி, சிலம்பம் சுற்றும் இறைவி, என்று அவள் நிகழ்த்தப்படாத ஆசைகளின் போர்வையில் இருந்த நிழல் இறைவியைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தாள்.

இறுதியாக, கழுத்தில் மாலையுடனும், கண்களில் காதலுடனும் அவள் நிற்க, அவளுக்கு நேர் எதிரே, அவளைப் போலவே மாலையும் காதலுமாய் நின்றிருந்தான், கற்குவேல் அய்யனார்.

அந்த வரைபடத்தை மென்மையினும் மென்மையாய் வருடியவள், ‘அய்யனார்’ என்று உச்சரிக்க மீண்டும் ஒரு இடிமுழக்க

ம் எழுந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த அய்யனாரின் தூக்கத்தையும் களைத்துவிட்டது, அவள் தவிப்பைக் கூறிடும் நோக்கத்துடன்…

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
17
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்