Loading

விசை-02

 

சூரியனின் இளங்கதிர்கள் மெல்ல மெல்லப் பூமியைத் தீண்டிக் கொண்டிருக்கும் இளங்காலை வேளை அது.

குதிரைக்குக் கடிவாளம் இட்டதைப் போல், “தட் தட் தட்” என்று சீரான ஓட்டத்தில் வியர்வை நெற்றியிலிருந்து மூக்கைத் தாண்டிச் சொட்டுச் சொட்டாய் வழிய, ஓடிக் கொண்டிருந்தான் அவன்.

அது அவனது காலை உடற்பயிற்சியின் வழக்கம்.

கிராமத்தின் இளங்காலை வெய்யிலும், இதமான குளிரும் கலந்து கொடுக்கும் உணர்வை ரசித்த வண்ணம் தனது உடலைக் கட்டுக்கோப்பாய்ப் பராமரிக்கவே தினமும் நேரம் தவறாமல் ஓட்டத்தைத் துவங்கிடுவான்.

ஆறரைக்கும் கொஞ்சம் கூடுதலான உயரம், முறுக்கேறிய புஜம், கட்டுக்கோப்பான உடல், மொழு மொழுவென வழித்தெடுக்கப்பட்ட தாடியில்லாக் கன்னங்கள், முறுக்கு மீசை என்று இருபத்தொன்பது வயது பூரணமடைந்த முழு ஆண்மகனாய், பெண்களை நிச்சயம் ஒருமுறையாவது ரசிக்க வைத்திடும்படியே இருந்தான், அவன்.

தன்னுடைய ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு, காவலர்கள் குடியிருப்பு வளாகத்திலுள்ள வீட்டினுள் அவன் நுழைய, கொட்டை வடிநீரின் வாசம் அவன் நுரையீரலெங்கும் நிறைந்தது.

அதை அவன் எப்போதும்போல் ஆழ்ந்து சுவாசிக்க, அவன் செயலைப் புன்னகையுடன் பார்த்தபடி வந்தார், அவனது அன்னை காமாட்சி.

“ரெண்டு நிமிஷம்மா” எனச் சென்று, தன் வியர்வை துடைத்துக் கொண்டு, முகம் கை கால் கழுவி வந்தவனிடம், பனங்கற்கண்டு போடப்பட்ட, கொட்டை வடிநீரை அவர் நீட்ட, அதை வாங்கி, சூடுபறக்க ரசித்துக் குடித்தான்.

“இம்புட்டுச் சூடா குடிக்காதய்யா” என்று காமாட்சி கூற,

“அப்படி குடிச்சாதானே ருசியாருக்கும்மா” என்று கூறினான்.

“உங்கப்பா போலவே இருக்க” என்று சின்னச் சிரிப்போடு அவர் கூற, அதில் தானும் புன்னகைத்துக் கொண்டவன், பூஜையறையில் பூமாலை சூடிய புகைப்படத்தில் ஐக்கியமாகியிருக்கும், தன் தந்தை திருத்தணியின் புகைப்படத்தைப் பார்த்தான்.

திருத்தணி கடந்த ஆண்டுதான், மாரடைப்பில் இறந்துபோனார். அவர்களது அழகிய நந்தவனத்தின் ஆணிவேரான திருத்தணி இறந்துபோனதால், அவர்கள் வாடி நின்றது உண்மையே. ஆனால் தாய் தன்னைத் தாங்கும் வயதைத் தாண்டி, தான் தாயைத் தாங்கவேண்டிய வயதை அடைந்திட்ட நிலையில், முடிந்தளவு அவரை மகிழ்வாகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அந்த ஆடவன் குடும்பத்தைத் தன் கரத்தில் தாங்கத் துவங்கினான்.

“எல்லாம் செட் ஆயிடுச்சா ம்மா?” என்று அவன் கேட்க,

“நாம இந்தூருக்கு ஏற்கனவே வந்துருக்கோம் தானே?” என்று கேட்டார்.

“ஆமா ம்மா. ஆனா அப்ப நான் மட்டும்தான் தங்கியிருந்தேன். நீங்க ரெண்டு மூனு முறை வந்து போனீங்க. ஒரு வருஷம் இருந்திருப்பேன். ஒரு கேஸ் விஷயமா கோவைக்கு மாத்திவிட்டுட்டாங்க. இப்ப மறுபடி இங்க” என்று அவன் கூற,

“சரிய்யா. நீ போய்க் குளிச்சுட்டு வா. அம்மா டிஃபன் செய்றேன்” என்று கூறினார்.

“மதியத்துக்கு நான் செய்யுறேன். நீங்க தேவையில்லாம சிரமப்படாதீங்க” என்றுவிட்டுச் சென்றவன், குளிர் நீரில் உஷ்ணம் தணியக் குளித்துவிட்டுத் தன் காக்கி உடையை எடுத்தான்.

அவனை மேலும் கூடுதல் மிடுக்குடன் காட்டும் உன்னதப் பணியைச் செய்வதே அந்தக் காக்கிதான் என்பதில் அவனுக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு.

அதனை அணிந்துகொண்டு, வலப்புற மார்பில் குத்தப்பட்டிருக்கும் சின்னத்தில், ‘கற்குவேல் அய்யனார்’ என்று பொறிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய பெயரை வருடிக் கொண்டான்.

ஒருவிதச் சிலிர்ப்பை எப்போதும் போல், இப்போதும் அது வழங்க, புன்னகையுடன் தன் மீசையை முறுக்கிக் கொண்டு வந்தான்.

அன்னை காலை உணவைச் செய்து முடிக்க, அவரையும் அமர்த்தி, அவரோடு உண்டு முடித்து, அவருக்கான சர்க்கரை நோய் மாத்திரைகளைக் கொடுத்தவன், மதிய உணவையும் சில நிமிடங்களில் செய்து முடித்தான்.

“எனக்கென்ன வேலை இருக்கு சொல்லு? வீடு கூட்டிப் பெருக்கவும் ஆள் போட்டுடுற” என்று அவர் குறைபட்டுக்கொள்ள, “எனக்கு நேரம் அமைஞ்சா அதையும் கூட நானே செஞ்சுடுவேன். ஆனா கிடைக்க மாட்டேங்குது. நீங்க கஷ்டப்படாம ரெஸ்ட் எடுங்க. பக்கத்து வீட்டு ராஜன் நான் ஏற்கனவே இங்க வேலைப் பார்க்கும் போது இருந்தவன் தான். அவனுடைய அம்மா நல்ல குணம். அவங்கக் கிட்ட அறிமுகம் செய்துட்டுப் போறேன். அவங்க உங்களுக்கு அக்கம் பக்கம் எல்லாம் அறிமுகம் செய்துவைச்சு வெளிய வாசலில் போவ உதவுவாங்க” என்றான்.

சொன்னபடியே ராஜனின் தாய், சுந்தரியிடம் தனது அன்னையை அறிமுகம் செய்துவைத்து, அவரைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியவன், ராஜனுடன் சேர்ந்து காவல் நிலையம் புறப்பட்டான்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் நிலையம் அது!

அங்கு உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) என்ற பதவியில் நியமிக்கப்பட்டிருப்பவனே கற்குவேல் அய்யனார். பெயருக்கும் பதவிக்கும் உரித்தான நிமிர்வுடன், நீண்ட எட்டுக்கள் வைத்து உள்ளே நுழைந்தவனைக் கண்ட சக காவலர்கள் அனைவரும், அனிச்சையாய் எழுந்து நின்று அவனுக்கு வணக்கம் வைத்தனர்.

அதனை ஏற்றுக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்தவனிடம் அவனது பணி சார்ந்த கோப்புகளை ஒப்படைத்துவிட்டு விலகினான், ராஜன்.

வந்த முதல் நாளே, ஓய்வுக்கு இடமின்றி, தனக்குக் கீழ் முடிக்கப்பட்ட, முடிக்கப்படாத அத்தனை வழக்குகள் சார்ந்த கோப்புகளையும் ஆராய்ந்து, எவற்றை முதலில் கையாள வேண்டும் என்பதையெல்லாம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சார் டீ வாங்கிட்டு வரட்டுங்களா?” என்று பணிவுடன் கேட்டபடி முருகேசன் என்ற காவலர் உள்ளே வர,

அவரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவன், “முருகேசன் தானே?” என்றான்.

“ஆமா சார்?” என்று முருகேசன் கூற,

“நீங்க இங்க என்ன பதவியில் இருக்கீங்க முருகேசன் சார்?” என்று கேட்டான்.

தெரிந்துகொள்வதற்காகக் கேட்கின்றான் போலும் என்று நினைத்தவர், “கான்ஸ்டபில் சார். உங்களுக்கு ட்ரைவரும் நான் தான்” என்று கூற,

“அப்ப அந்த வேலையை மட்டும் பாருங்க மிஸ்டர் முருகேசன். எனக்கு டீ காஃபி வாங்கிட்டு வருவதற்காக கவர்மென்ட் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கலை” என்று கோப்புகளைப் பார்த்தபடியே அழுத்தமாய்க் கூறினான்.

அவன் குரலின் அழுத்தம் தாங்காது அவர் அதிர்ந்தபோதும், அவனது நேர்மையும் கண்ணியமும் அவரை வியக்க வைத்தது.

“சாரி சார்” என்று அவர் நகர எத்தனிக்க,

“ஒரு நிமிஷம்” என்று அவரைத் தடுத்து நிறுத்தியவன், ஒரு கோப்பைக் காட்டி, “யார் இந்த தனசேகரன்?” என்று கேட்டான்.

‘வந்து மணிநேரம் ஆகாத நிலையில் எதற்கு இவனைப் பற்றிக் கேட்கின்றார்?’ என்று உள்ளுக்குள் பயந்துகொண்ட முருகேசன், “இவன் தனசேகரன் சார்” என்றான்,

“அந்தத் தாளில் இல்லாத தகவலைத்தான் நான் கேட்குறேன்” என்று அழுத்தம் திருத்தமாய்க் கூறினான்.

“சார்…” என்று முருகேசன் இழுக்க,

கைகளைக் கட்டிக் கொண்டு அவரை அழுத்தமாய்ப் பார்த்தான்.

அந்தப் பார்வையிலேயே, அவன் அத்தனை சுலபத்தில் இதைவிட்டுவிட மாட்டான் என்று புரிந்துகொண்டவர், “சரியான அடாவடி பேச்சாளன் சார். அவன் செய்யாத திருட்டுத்தனம் இல்லை. ஆனா அவனை அடக்கத்தான் ஆளில்லை” என்று கூற,

“ஏனாம்?” என்று கேட்டான்.

“அவனெல்லாம் பெரிய இடம் சார். அரசியல் தலைகளுடன் சகவாசம் உண்டு. ரகசியமா அவங்களுக்குக் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி வேலையெல்லாம் இவன் தான் பார்க்குறான். அதனால தப்புக்குத் தண்டனைன்னு அவன் அனுபவிச்சதேயில்லை” என்று முருகேசன் கூற,

“ஓ.. அவ்ளோ பெரிய ஆளா அவன்? அப்ப நான் இன்னைக்கே அவனப் பார்க்கணுமே” என்று தன் தாடையை நீவியபடியே கூறினான், அய்யனார்.

“சார், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. வந்த முதல் நாளே அவனைப் பகைச்சுக்க வேண்டாமே” என்று முருகேசன் கூற,

“பகைச்சுக்குறதுதான் நம்ம பணியே மிஸ்டர் முருகேசன். வண்டியை எடுக்க வருவீங்களா இல்ல ராஜனைக் கூப்பிட்டுக்கவா?” என்று கேட்டான்.

சிறு தயக்கத்திற்குப் பின், “வரேன் சார்” என்று அவர் கூற,

“ம்ம்” என்றவன், ராஜனையும் உடன் கூட்டிக் கொண்டே வந்தான்.

“சரியான தாந்தோனிப் பய சார். நானும் இவனை ஒரு முழு நாளாவது உள்ளப் போடலாமானு பலமுறை முயற்சி பண்ணிருக்கேன். அரைமணி நேரம்கூட இருக்க மாட்டான். இவனை வெளிய விடணும்னு கேட்டு வரிசையா கால் மேல கால் வரும். வயசுப் புள்ளையக் கடத்திட்டு அவ்ளோ திமிரா பேசுவான் சார். என்ன செஞ்சுட முடியும்னு கேட்டான்” என்று ராஜன் செல்லும் வழியில் தனக்குத் தெரிந்தவற்றையும், தனது ஆதங்கத்தையும் கொட்டித் தீர்க்க,

அதை அமைதியாய்க் கேட்டுக்கொண்டு வந்த அய்யனாரைப் பார்த்து, ‘ஏற்கனவே அறிவால் இல்லாத அய்யனார் கணக்காதான் இருக்காரு. இவன் வேற கொம்பு சீவி அந்தத் தம்பியை ஏத்திவிடுறானே. இன்னைக்கு ஒரு சம்பவம் உறுதி’ என்று மனதோடு நினைத்துக் கொண்டார், முருகேசன்.

வண்டி நேராய், பழைய காலத்துப் பாணியில் தேக்குமரத் தூண்களைக் கொண்ட பெரிய வீட்டின் முன் நின்றது.

வண்டியின் கண்ணாடியை லேசாய் இறக்கி, அவ்வீட்டை ஒரு பார்வை பார்த்தவன், “துரை வீடு இதுதானா?” என்க,

“இவன் கெட்ட குடிக்கு மாடி வீடு ஒன்னுதான் குறைச்சல் சார்” என்று ராஜன் கூறினான்.

“ம்ம்” என்றபடி இறங்கிய அய்யனார் நன்கு சோம்பல் முறித்துக் கொண்டு, “வாங்க ராஜன். போய் சேகரனைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வருவோம்” என்று கூற,

“முன்னாடியே பேசி வைக்காம, போலீஸ்காரங்க உள்ள போகமுடியாது சார்” என்று முருகேசன் கூறினான்.

“பாருடா.. பெரிய அதிபர் போல? அப்பாயின்மென்ட் ஆர்டர் வேறயா?” என்று நக்கலோடு கேட்டவன் கண்கள், இதழ்களின் சிரிப்புக்கு மாறாய்ச் சிவந்தன.

“விடுறானா இல்லையானு பாத்துடுவோமே” என்ற அய்யனார், விறுவிறுவென்று செல்ல,

“ஏ போலீஸ்.. அப்பாயின்மென்ட் இருக்கா?” என்று வாசலிலேயே ஒரு அடியாள் அவனைத் தடுத்தான்.

அங்கு வந்த ராஜன், “டேய்.. உங்க சவடால அவர்ட காட்டாதீங்க. அவரு ஏ.எஸ்.பி. பெரிய போலீஸ்” என்று கூற,

“எம்புட்டுப் பெருசு? இம்புட்டுப் பெருசா இருப்பாரா?” என்று விரல்களில் அபிநயம் பிடித்துக் காட்டி கேட்டவன், தான் அவனை இழிவு செய்துவிட்டதாய் பெருமை கொண்டு கைகளைத் தட்டிச் சிரித்தான்.

அதில் அவனைப் பார்த்துப் பரிதாபமாய்ச் சிரித்த அய்யனார், ராஜனைப் பார்த்துக் கொண்டு உள்ளே செல்ல, “ஏய்.. ஏய்.. நான் சொல்ல சொல்ல கேட்காம என்ன திமிராடே?” என்று கேட்டபடி பின்னே ஓடினான்.

வெளியே வாகனத்தில் பயத்தோடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு முருகேசன் அமர்ந்திருக்க, உள்ளே இரண்டுமுறை துப்பாக்கி சுட்டதன் ஓசை கேட்டது.

அதில் அதிர்ந்து எழுந்தவர், “போச்சு.. இதுக்குத்தான் அந்தத் தம்பிகிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னேன்” என்று வாய்விட்டுப் புலம்ப,

தன் கையை உதறிக் கொண்டே ராஜனுடன் வெளியே வந்தான், அய்யனார்.

ராஜன் அய்யனாரை ஆச்சரியம் கலந்த பார்வை பார்த்தபடியே வர, முருகேசன் குழப்பமாய் இருவரையும் ஏறிட்டுப் பார்த்தார்.

“என்ன மிஸ்டர் முருகேசன்? போலாமா?” என்று அய்யனார் கேட்க,

“சார்.. உள்ள?” என்று தயக்கமாய் கேள்வி எழுப்பினார்.

“நீங்கதானே முருகேசன் அவர் அப்புடி இப்படின்னு சொன்னீங்க? போதாததுக்கு நம்ம ராஜன் வேற, அவனை அரெஸ்ட் பண்ண முடியாதுனு ரொம்ப வருத்தப்பட்டார்.

அரைமணி நேரம் உள்ள வைச்சு வெளிய அனுப்புறதுக்கு பதில் ஒரேடியா மேல அனுப்பிட்டா அவனோட வருங்காலக் குற்றங்கள் நீக்கப்பட்டுவிடும் பாருங்க. அதான்” என்று படு சாதாரணமாய்க் கூறினான்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட முருகேசனுக்கும் ராஜனுக்கும், இவன் இந்தப் பதவிக்குச் சாதாரணமாக வந்துவிடவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது.

இதே ஊருக்கு இளம் வயதிலேயே ஐந்து வருடங்கள் முன்பு எஸ்.ஐ. ஆக இவன் வந்திருந்த ஒரு வருடமே, ஊரைத் தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தான். தற்போது உயர் பதவி அவனை இன்னும் கட்டுப்பாடாய் வைக்க வழிவகுப்பதைத் செவ்வனே செய்திட, தனசேகரனில் தனது பிள்ளையார் சுழியை அவன் போட்டிருப்பது, ராஜனுக்குப் புரிந்தது.

மறுநாள் காலை செய்தித்தாள்கள் எங்கும், தனசேகரனின் இறப்பே பரபரப்பாகப் பேசப்பட்டது.

புதிதாக நியமனமான உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. கற்குவேல் அய்யனாரை நட்பு ரீதியான சந்திப்பிற்காக அழைத்துக் கொலை செய்ய முயற்சித்த தனசேகரனை, தற்காப்பிற்காகத் தள்ளிவிடும் போது, அவனது அடியாளின் துப்பாக்கிக் குண்டுகளே அவனைத் தாக்கி, தனசேகரன் உயிர் இழந்ததாய் செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாய்ப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

சமையலறையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த இறைவியிடம், “அம்மா அம்மா..” என்று செய்தித்தாளோடு ஓடிவந்த சக்தி, சுற்றிமுற்றித் தன் பாட்டி உள்ளாரா என்று பார்த்துக் கொண்டாள்.

அவர் இல்லை என்பது உறுதியான நிலையில், “என்ன சக்தி?” என்று புரியாமல் கேள்வி எழுப்பிய அன்னையிடம், “உங்க வெல்விஷர்” என்று ரகசியக் குரலில் கூறி செய்தித்தாளை அவள் காட்ட,

புரியாது அதை வாங்கிப் பார்த்தவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

“அவங்க தானேம்மா இவங்க?” என்று சக்தி உற்சாகமாய்க் கேட்க,

தன் அப்பத்தா அங்கில்லை என்பதை உறுதி செய்து கொண்டு மண்டியிட்டு அமர்ந்தவள், “சக்தி, அம்மா இதுபத்தி நீ பேசக்கூடாதுனு சொல்லிருக்கேன் தானே?” என்று கேட்டாள்.

“சாரி அம்மா. பேப்பர் அண்ணா பேப்பர் குடுத்துட்டுப் போனாங்க. முதல் பேஜ்லயே இவங்க ஃபோட்டோ இருந்தது. பார்த்ததும் உங்கக்கிட்ட காட்டலாம்னு எக்ஸைட் ஆயிட்டேன்” என்று பாவம் போல் சக்தி கூறவும்,

மகள் தலைகோதியவள், “அம்மா முன்னமே சொன்னது தான்டா தங்கக்கண்ணு. இது டாப் சீக்ரெட். சீக்ரெட் எல்லாம் சொல்லக் கூடாதுனு அம்மா சொல்லிருக்கேன் தானே?” என்று கூற,

“சாரி அம்மா. இனிமே சைலன்ட்டா இருப்பேன்” என்று வாயில் விரல் வைத்துக் கூறினாள்.

அதில் லேசாய்ச் சிரித்துக் கொண்ட இறைவி, “போய்க் குளிச்சுட்டு வா. அம்மா உனக்குப் புடிச்ச பூரி பண்ணித்தரேன்” என்க,

“ஐ பூரி” என்று உற்சாகமாய் வெளியே ஓடினாள்.

மகள் சென்ற திசையைப் புன்னகையோடு பார்த்த இறைவி அந்தச் செய்தித்தாளை எடுத்துப் பார்க்க, செய்திகளுக்குள் ஒரு கட்டத்தில் அவனது புகைப்படமும், இன்னொரு கட்டத்தில் தனசேகரனின் புகைப்படமும் இருந்தது.

அவனது அடர்ந்த பார்வை, முறுக்கு மீசை, முறுக்கேறிய புஜம் என்று திடகாத்திரமான தோற்றத்துடன் இருந்தவன் படத்தைத் தன் நுனிவிரல் கொண்டு மெல்லமாய் வருடியவள், ‘ஹப்பா.. ஃபைவ் இயர்ஸ்ல எவ்ளோ ஸ்மார்ட் ஆயிட்டாங்க’ என்று எண்ணிக் கொண்டாள்.

‘நீ பாதுகாப்பாதான் இருக்க’ என்ற அடர்ந்த குரல் அவள் மனமெங்கும் எதிரொலிக்க, அந்தக் குரல் அவளுள் பாதுகாப்பான உணர்வை விதைத்து, விருட்சமாய் வளர்ந்ததாய் உணரச் செய்தது.

‘கற்குவேல் அய்யனார்’ என்ற அவனது பெயரை மெல்ல வருடியவள், ‘அய்யனார்’ என்று மென்மையாய் உச்சரிக்க, அவள் இதழ்கள் பூவாய் மலர்ந்தன…

-தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்