விசை-01
இருள் சூழ்ந்த காலைப் பொழுது அது. சேவல் கூட இன்னும் தன் உன்னதப் பணிக்கு நேரம் உள்ளதென்ற நிறைவோடு உறங்க, தன் நேத்திரங்களில் கடமையைப் பூசிக் கொண்டு விழித்தெழுந்தாள் இறைவி.
இருபத்தியோரு வயதுடைய பெண். கொஞ்சம் பூசிய உடல்வாகு, சற்றே இடைவரை நீண்ட அடர்ந்த சிகை, சாந்தமான விழிகள், சப்பை மூக்கு, அளவான அதரம், சங்கின் வளைவுடைய கழுத்து, அதில் பிறை நிலவைப் போன்ற மச்சம், எடைக்கு ஏற்ற உயரம் என்று அளவான அழகனுடனே இருந்தாள்.
வீட்டு கொல்லைப்புறத்திற்குச் சென்று, அங்கிருந்த அரிசிச்சாக்கு மூட்டையில் வைத்திருந்த மாட்டுச் சாணத்தை அள்ளிக் கொண்டுவந்து நீரில் கரைத்தவள், பின்வாசலைப் பெருக்கிவிட்டு அதைத் தெளித்து மொழுகினாள்.
நீர் காயும் முன்பே கோலப்பொடியுடன் அரிசிமாவைக் கலந்து, அழகிய சிக்குக்கோலம் போட்டு முடித்தவள், முன்வாசலையும் தெளித்து கோலமிட்டு முடித்து உள்ளே சென்றாள்.
மணி நான்கரையான நிலையில், பால்காரர் வந்துவிட, விரைந்து பால் பாத்திரத்துடன் வாசலுக்குச் சென்றாள்.
அவள் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காதவர் எப்போதும் போல் ஒரு லிட்டர் பாலை ஊற்றிவிட்டுச் செல்ல, பழக்கப்பட்ட உதாசீனம் தானே? என்ற நிலையில் உள்ளே சென்றாள்.
விரைந்து சென்று குளித்து முடித்து அழகிய காட்டன் சுடிதார் ஒன்றை உடுத்திக் கொண்டு வந்தவள், தனி அலமாரியொன்றைத் திறந்து அதிலிருந்த பலவகைப் பொடிகளைக் கொண்ட டப்பாவை எடுத்தாள்.
இயற்கை இலைகளைக் காயவைத்து அரைத்த பொடிகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வீட்டுப் பின்புறம் அவள் வளர்க்கும் நான்கைந்து மருதாணி செடிகளிலிருந்து பறித்துக் காயவைத்து அரைத்து வைத்திருக்கும் மருதாணி இலைப் பொடியையும் போட்டுக்கொண்டு நீர் ஊற்றிக் குழைத்தாள்.
குழைத்து வைத்த மருதாணிக் கலவைகளை பெரியப் பெரிய நெகிழிப்பையில் அடைத்துக் கொண்டு, அதிலிருந்து நிறையச் சின்னக் கூம்பு வடிவப் பைகளிலும் அடைத்து கட்டி முடித்தாள்.
அவள் மருதாணி போட்டுவிடும் கலைஞர். மேலும் சொந்தமாக நிகழ்ச்சி மேலாண்மை குழு அமைப்பதற்காகவும் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து வருகின்றாள்.
மருதாணி கலவைகளையெல்லாம் தனது கைப்பையில் எடுத்து வைத்தவள், பாலைக் காய்ச்சிவிட்டு காலை மற்றும் மதிய சமையலுக்கான வேலைகளைத் துரிதமாய் பார்க்க, “அம்மா..” என்ற மெல்லிய முனகல் அந்த சமையலறையின் வாசற்படியில் கேட்டது.
சமையலில் கவனம் வைத்தபடியே, “தங்கக் கண்ணு.. என்ன அதுக்குள்ள எழுந்துட்டீங்க? பாட்டியில்லாம தூக்கம் வரலையாக்கும்?” என்று கேட்க,
தன் பிஞ்சு கால்களை பூமிக்கு நோகாமல் அடிவைத்து வந்து அந்த இருபத்தியோரு வயதுடைய இளம் தாயை கட்டியணைத்துக் கொண்டது, அந்த ஐந்து வயது பிஞ்சு!
சின்ன சிரிப்போடு தூக்கம் கலையா தன் மகளின் தலைகோதிய இறைவி, மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு, காய்ச்சியப் பாலில், பாதாம் பொடியைக் கலந்து டம்பளரில் ஊற்றி வைக்க, தூக்கத்துடன் அன்னையின் கழுத்தடியில் முகம் புதைத்தாள், சக்தீஸ்வரி.
“சக்தி.. அம்மா பாரு.. பல் தேய்ப்போமா?” என்று இறைவி கேட்க,
“ம்ம் வேணாம்” என்றாள்.
“ஸ்கூல் போனும்ல?” என்று இறைவி கேட்க,
குழந்தை பதில் சொல்லாது கண்களைக் கசக்கியது.
அதில் சிரித்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டவள் சென்று குழந்தைக்கு முகம் கழுவிவிட்டு, பல் துலக்க வேண்டியவற்றை அவள் கையிலேயே எடுத்துக் கொடுத்தாள்.
சக்தி தானே பல் துலக்கி முடிக்க, அவளைக் கூட்டிக் கொண்டு அடுப்படிக்கு வந்தவள், பாலைக் கையில் கொடுத்தபின், விட்ட சமையல் வேலையைத் தொடர்ந்தாள்.
“ஏத்தா இறவி..” என்று வாசலிலேயே இறைவியின் அப்பா வழிப் பாட்டி வீராயியின் உரத்தக் குரல் கேட்க, பாலைக் குடித்து முடித்திருந்த சக்தி, “ஐ அம்மா பாட்டி” என்று குதித்து இறங்கினாள்.
“வாண்டு பாத்து போடி” என்று இறைவி கத்தியதெல்லாம் எங்கே அவளுக்குக் கேட்டது.
வேகமாய் சென்று கதவைத் திறந்த சின்னவள் ஓடிச் சென்று பாட்டியைப் பாய்ந்து கட்டிக்கொள்ள, “ஆத்தா சக்தி” என்று தன் கொள்ளுப்பேத்தியை இறுக அணைத்துக் கொண்டார் அந்த மூதாட்டி.
அவரது மூப்படைந்த வயோதிகக் காலத்தை வண்ணமயமாய் மாற்றிய பெருமை அந்த சின்னஞ்சிறு சிட்டைத்தானே சேரும்? குழந்தைக்கும் அவளது கொள்ளுப்பாட்டி மீது தான் கொள்ளைப் பிரியம்.
தூக்க முடியாமல் அவளைத் தூக்கிக் கொண்ட பாட்டியிடமிருந்து நழுவிக் கீழே இறங்கியவள், “பாட்டிக்கு வலிக்கும். தூக்க வேணாம்” என்று அவர் கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
குழந்தைக்காக வாங்கி வந்த தின்பண்டங்களை வீராயிப் பாட்டி கடைபரப்பவும், “ஐ அம்மா பாட்டி.. எனக்கு புடிச்ச அச்சு முறுக்கு” என்று குழந்தை குதூகலமாய் துள்ள,
“தங்கக் கண்ணு. முதல்ல போய் குளிச்சு யூனிஃபார்ம் மாத்திட்டு வா. அம்மா உனக்கு இன்னிக்கு இதுவே ஸ்நாக்ஸ்கு குடுத்து விடுறேன்” என்று பாசமாய் பேசி மகளை அனுப்பியவள் தன்னையே கலக்கமாய் பார்த்துக் கொண்டிருக்கும் பாட்டியைப் பார்த்து, “என்ன சொன்னாங்க உங்க புள்ளையும் மருமவளும்?” என்றாள்.
வீராயியின் கண்கள் நொடியில் கண்ணீர் பூத்து நிறைந்தது.
“அப்பத்தா” என்று பதறி அவர் அருகே அமர்ந்து அவர் கரம் பற்றியவள், “என்னாச்சு அப்பத்தா?” என்க,
“தங்கப்புள்ளத்தா நீயு. ஒன்னயபோயி ஏத்துக்க மாட்டிக்கானேனு மனசு கெடந்து அடிச்சுக்குது. உங்கப்பனுக்கு கூறே இல்லத்தா” என்று அவள் தாடை பற்றிக் கூறினார்.
“ஏன் அப்பத்தா. என்னாச்சு? அப்பா ஏதும் பேசிட்டாகளா?” என்று இறைவி கேட்க,
மூதாட்டி நடந்ததைக் கூறினார்.
இறைவியின் பிறந்த வீடது. இசக்கிமுத்து, முத்தாயி தம்பதியருக்கு இனியா, இலக்கியா, இறைவி, இந்திரன் என்று நான்கு வாரிசுகள்.
அவளுக்கு மூத்தவர்களான பெண்கள் இனியா மற்றும் இலக்கியாவிற்குத் திருமணம் முடிந்து அருகருகே தான் குடும்பம் குழந்தை என்று வாழ்ந்து வருகின்றனர்.
இந்திரன் டிப்ளமோ முடித்து வேலைக்காக வெளியூரில் தங்கியிருக்க, தற்போது இசக்கி மற்றும் முத்தாயி மட்டுமே அவ்வீட்டில்.
இசக்கியின் தாய் வீராயி முந்தைய நாள் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தார். காரணம் இசக்கியின் உடல்நலக் கோளாறு தான். மிகுந்த உடல் வாட்டத்தால் இசக்கி அவதிப்படுவதை கேள்வி பட்டவர் தன் பேத்தியிடம் அதைப்பற்றிக் கூற, “ஒனக்கு வேணுமின்னா போயி பாத்துட்டு வா அப்பத்தா. நான் என்ன சொல்லப்போறேம்?” என்று சூசகமாய் அவர் செல்வதற்கு தனக்கெந்த பிரச்சினையும் இல்லை என்பதையும், தனக்குச் சென்று பார்க்க விருப்பம் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியிருந்தாள்.
அதன் அடிப்படையில் சென்ற மூதாட்டியைக் கண்டு முதலில் அதிர்ந்த அவரது மருமகள் முத்தாயி, பின் மாமியார் என்ற கடமைக்காக வரவேற்றார்.
உடல் நலமற்றுப் படுக்கையில் கிடந்த இசக்கியும் தாய் என்ற கடமைக்காக, “வாம்மா” என்று அழைத்தார்.
மகனின் அருகே அமர்ந்து நலன்களை விசாரித்த வீராயி மெல்ல பேச்சை எடுத்தார்.
“ஏய்யா.. ஆறு வருஷம் ஓடிபோச்சு. அந்த புள்ளைக்கும் வயசு அஞ்சு ஆவுது. தங்கமாருக்குயா. நீ ஒருக்கா அது மொகத்த பாத்தனு வையு. ஓம் மனசே உருகிடும். ஆயிரமிருந்தாலும் ஓம் மவ பெத்த புள்ள. அதுகள வீட்டுல சேத்துகிட என்னய்யா ஒனக்கு?” என்று வீராயி கேட்க,
அவ்வளவே தான்… கொதித்துவிட்டார் இசக்கி.
“யாருக்கு யாருமா பேத்தி? அவ பிறப்பு என்ன? எனக்கு அவ பேத்தியா? அந்தாரு. முத்தத்துல எம்பொண்ணே செத்துட்டானு கல்லு ஊனிட்டேன். இதுல அந்த தருதலை எனக்கு பேத்தியா? நடுவீதியில என் கண்ணு முன்னுக்க அதுக பிச்சையெடுத்து செத்தாலும் வீட்டுக்குள்ள சேத்துகிட மாட்டேன் சொல்லிட்டேன்” என்று இசக்கி கத்தியது தான் தாமதம்,
“வாயை மூடுயா” என்று வீராயி கத்திவிட்டார்.
“ஓம் வீடுதான்யா. நீ சேத்துகிடு சேத்துகாது. அதுக்காவ எம்மூட்டு புள்ளைய தருதலைங்குற. அவ ஏன்டா பிச்சையெடுத்து சாவனும்? எம்பேத்தி கையு நிறைய சம்பாதிக்குறா. அந்த வீட்டுல நானே இப்ப மூனுவேள உக்காந்து சாப்பிடுறேன். எங்க நெலம வக்கத்து போவல. பெத்த மனசு கொள்ளாம ஒன்ன பாக்க வந்தேன்ல? எனக்கு இது வேணுந்தான்” என்று வந்த சுவடு காயாது கிளம்பிவிட்டார்.
வீராயி நடந்தவற்றை சொல்லிமுடித்துத் தன் பேத்தியை நோக்க, அவள் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.
“ஏத்தா..” என்று வீராயி அழைக்க,
அப்பத்தாவின் கண்ணீர் துடைத்தவள், “அந்தாளை நான் அப்பாவா இல்ல அப்பத்தா, மனுஷனா மதிச்சே பல வருசமாச்சு. அவரு பேசுறதையெல்லாம் ஒரு பேச்சாவே எடுக்குறதில்ல நானு. நானும் என் புள்ளையும் எங்க மனசுக்கு நல்லாதான் இருக்கோம். அவங்கக மனசுக்கு அவங்க எப்படியிருக்காகனு நான் சொல்ல வேணாம். நீ கண்டதயும் யோசிக்காத அப்பத்தா. சக்தி வந்து பாத்தா அம்மா பாட்டி ஏன் அழுறாங்கனு நச்சரிப்பா. போயி குளிச்சு வா. நான் சோறெடுத்து வைக்குறேன்” என்றுவிட்டுச் சென்றாள்.
பேத்தி சென்ற திசைகண்டு பெருமூச்சுவிட்டவர் குளிக்கச் செல்ல, அவள் மனதில் பாரம் ஏறியது.
அவள் தந்தையாகப்பட்டவர் பேசியதற்கெல்லாம் கவலை இல்லை தான் என்றாலும் தன் அப்பத்தாவின் மன சங்கடம் வருத்தத்தைக் கொடுத்தது.
மாற்றியமைக்க இயலாத ஒன்றை எண்ணி வருந்துவதைவிட அதில் இனிமை கண்டு வாழ்வதே அழகு. அதை அவள் செய்கின்றாள். மற்றவர்கள் செய்யவேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்பதைப்போல் அவளும் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டிற்கும் இடமில்லையே.
நொடியில் நடந்தவற்றை நினைத்து ஒரு கசப்பான புன்னகையை சிந்தியவள், மகளுக்கும் தனக்கும் உணவினை தயார் செய்து பைகளில் வைத்தாள்.
பாட்டியும் பேத்தியும் கொஞ்சிக் கொண்டு கூடத்திற்கு வர, காலை உணவையும் எடுத்து வைத்தாள்.
வீராயி ஊட்டியதை உண்டபடி கதை பேசிக் கொண்டே உணவை முடித்த சக்தி தனது பள்ளிப் பையை சரிபார்க்கச் செல்ல, “இப்புடியே நீயு இருக்கனுமாத்தா?” என்று வீராயி மனம் பொறுக்காமல் கேட்டுவிட்டார்.
உணவை உண்டு கொண்டே “வேறு எப்புடி இருக்கனும் அப்பத்தா? நல்லாதான இருக்கேன்?” என்றாள்.
“ஒனக்கு என்னத்தா வயசாச்சு? வாழவேண்டிய வயசயே இப்பதான் தாயி எட்டிருக்க. ஒனக்குனு ஒரு துணைய தேடிக்கக் கூடாதா?” என்று வீராயி கேட்ட நொடி, அவள் மனதில் அழையா விருந்தாளியாய் அவன் முகம் வந்துபோனது. அந்த முறுக்கு மீசையின் சிக்கல் தத்ரூபமாய் அவள் மனதில் தோன்றி மறைய, ‘நீ பாதுகாப்பா தான் இருக்கமா’ என்ற அவனது அடர்ந்த குரல் அவளை பாதுகாப்பாய் உணரச் செய்தது.
“ஏன் அப்பத்தா? துணைக்கென்ன பஞ்சமெனக்கு? நீயில்லயா?” என்று அவள் கேட்க,
“இன்னும் எத்தன காலத்துக்கு ஆத்தா? என் காலத்துக்குப் பொறவு ஒனக்கு ஒரு தொண வேணாமா? சக்திக்கு அப்பா வேணாமா?” என்று கேட்டார்.
“எனக்குத் துணை வேணாங்குறதுல நான் உறுதியாவே இருக்கேன் அப்பத்தா. கல்யாணத்து மேல விருப்பில்லையா, வெறுப்பில்லையானுலாம் இல்ல. எனக்குச் சுத்தமா ஈடுபாடு இல்ல. எனக்கு வேணாம். இப்படியே நான் நிம்மதியாதான் வாழுறேன். என் பொண்ணுக்கு அப்பா வேணும்னு அவ கேட்டானா, அப்ப என்ன செய்யனும், அவளை எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியும்” என்றுவிட்டு எழுந்தாள்.
வீராயி ஒரு பெருமூச்சுவிட, சக்தி தயாராய் வந்தாள்.
தனது கைப்பையை எடுத்துக் கொண்டு மகளையும் கூட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கத் துவங்கினாள்.
பத்து நிமிட வேகநடையில் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவர்கள் அடித்துப் பிடித்து பேருந்தில் ஏறி இடம்பிடித்து அமர்ந்தனர்.
பலதரப்பட்ட பார்வைகளுக்கு நடுவில், பக்கத்து ஊரை அடைந்தவள் மகளோடு நடந்து அவளது பள்ளியை அடைந்தாள்.
அவளது தலைமுடி, பை என்று சரிபார்த்த இறைவி, “டாட்டா தங்கக்கண்ணு” என்க,
“ஏ சக்கி” என்ற குட்டிப்பையனின் குரல் கேட்டது.
சக்தி வயதை ஒத்த அவளது வகுப்புத் தோழன் தர்ஷனும், அவனது மாமா முகில்வண்ணனும் புன்னகையாய் வந்தனர்.
முகில் வண்ணன் இருபத்தி ஆறு வயது இளைஞன். அவ்வூரில் சொந்தமாக நிலபுலன்களும், தந்தையின் எண்ணை ஆலையையும் நடத்தி வருபவன். அவனது சொந்த அக்காவான தாண்யாவின் மகனே தர்ஷன்.
அதே ஊரில் ஐடி நிறுவனத்தில் தான் தாண்யாவும் அவளது கணவன் தர்வினும் பணி புரிகின்றனர். ஆக தர்ஷனின் பொறுப்பெல்லாம் அந்த மாமன்காரனிடம் மட்டுமே.
“ஏ தர்ஷ் ஹாய்” என்று சக்தி கையசைக்க,
“சக்கி நான் நேத்து மேம் குடுத்த மேக்ஸ் சம் போட்டுட்டேனே” என்றான்.
“நானும் போட்டுட்டேனே. அம்மா சொல்லிக் குடுத்தாங்க. நீ கஷ்டம் சொன்ன தான? அது ஈசிதான்” என்று சக்தி கூற,
“ஆமா. எனக்கு மாமா சொல்லித்தந்தாங்க. ஈசியா தான் இருந்தது. உனக்கு நான் சாக்லேட் கொண்டு வந்துருக்கேன். நட் கேன்டி. மாமாவே பண்ணாங்க” என்று தனது பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் காட்டினான்.
அதில் இருந்தது கடலை புண்ணாக்குக் கட்டி.
“ஐ ஷேப் ஷேப்பா இருக்கு” என்றவள், ஒன்றை எடுத்து சாப்பிட்டுப் பார்த்து, “நல்லாருக்கு மாமா” என்று கூற,
“தேங்க்யூ குட்டி” என்று முகில் கூறினான்.
“சரி சரி லேட்டாச்சு. ரெண்டு பேரும் கிளாஸ் போங்க” என்று இறைவி கூற,
“ஓகே சித்தி. வா சக்கி போலாம்” என்றபடி தர்ஷன் சக்தியையும் அழைத்துக் கொண்டு உள்ளே ஓடினான்.
அதனைப் பார்த்தபடி புன்னகையாய் நின்றிருந்த முகில் தோளில் தன் கைப்பையால் ஓங்கி அடித்தவள், “எங்கடா என் கடலைமிட்டாய்?” என்று கேட்க,
“ஆ.. பிசாசு” என்று தன் தோளைத் தேய்த்துக் கொண்டபடி ஒரு காகிதக் கவரை நீட்டினான்.
அதனுள் இரண்டு சதுர வடிவ கடலை மிட்டாய்கள் இருக்க, “ம்ம்.. இது” என்று கூறினாள்.
“என்ன மேடம் முகமே சரியில்ல” என்று இதழ் விரிந்த அவள் புன்னகைக்கு பின் பாதுகாப்பாய் மறைந்திருந்த அவள் சோகத்தை, எளிதில் கண்டுகொண்டோனாய் கேட்டான், அவளது உற்ற தோழன் முகில் வண்ணன்.
கடந்த இரண்டு வருடங்களாக முகிலை அவளுக்குப் பழக்கம். அதுவும் சக்தியைப் பள்ளியில் சேர்த்ததன் உபயம், சக்திக்கும் தர்ஷனுக்கும் ஏற்பட்ட நட்பின் உபயத்தால் அறிமுகமாகி உருவானதே இறைவி, முகிலின் நட்பு.
வயது பாலினத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு உருவான அவனுடனான நட்பு, இறைவிக்கு பெருமளவு பிடிமானமாய் அமைந்திருக்கின்றதென்றாலும் மிகையாகாது.
அவள் பாட்டிக்கு அடுத்து, அவளது முழு வரலாறை அறிந்தவன் அவன் மற்றும் அவன் குடும்பத்தார். அவன் அறியா ரகசியங்களும் அவளிடம் உள்ளதென்றாலும், அவளுடைய தனிப்பட்ட விடயங்களைத் தெரிந்துகொண்டு தான் நட்புறவுப் பாராட்ட வேண்டும் என்ற அவசியமில்லை என்ற புரிதலுடன் இருப்பவன்.
அவன் கண்டுகொண்டதில் ஆச்சரியம் கொள்ளாது புன்னகைத்தவள், அவனோடு நடந்தபடி காலை வீட்டில் பாட்டியுடன் நடந்த பேச்சு வார்த்தைகளைக் கூறி முடித்தாள்.
“மிஸ்டர் இசக்கியோட பேச்சுக்குத்தான் அவர் இப்படி இருக்கார் இரா. சொல்றதுல ஒன்னுமில்ல. அவங்கவங்க கர்மபலன்னு ஒன்னு இருக்கு. நீயோ நானோ பேசுறதால எல்லாம் அது ஒன்னும் மாறிடப் போறதில்லை. பாட்டி சீக்கிரம் ஓகே ஆயிடுவாங்க. நீ ஃபீல் பண்ணாத” என்றவன், “அன்ட் மேரேஜ் விஷயத்தில் சாய்ஸ் உன்னோடது. இதுல நீ எது எடுத்தாலும் உனக்கு சப்போட்டரா நான் இருப்பேன். நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இல்லைனாலும் உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். இது ஃபோர்ஸ் பண்ணித் தினிக்கும் உறவில்லை. உனக்கா தோன்றனும். அப்படி தோன்றவைக்கும் உறவு உன் வாழ்க்கைலயும் வரும்னு நான் நம்புறேன்” என்று கூற,
அவள் மனதோடு மெல்லிய சாரலாய் ‘அவன்’ முகம் வந்து போக, இதழ்கள் பூவாய் மலர்ந்தது.
முகில் அவள் முகம் நோக்க,
தன்னை சடுதியில் கட்டுப் படுத்தியவள், “அதெல்லாம் இருக்கட்டும். மதி என்ன சொல்றா?” என்று கேட்டாள்.
“அவ என்னத்த பெருசா சொல்லிடப்போறா? எக்ஸாம் இருக்கு மாமா. படிக்கனும் மாமா தவிர” என்று சலிப்பாய் கூறினான்.
அதில் வாய்விட்டு சிரித்தவள், “பொறுடா ராசா. இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு தான? முடிச்சுட்டு உன் மதி உனக்கே உனக்காய் வந்துடப்போறா” என்று கூற,
“ம்ம் ம்ம்..” என்றான்.
மதி என்கின்ற மதிவதனி அவனது அத்தை மகள். அவனுக்கென்று நிச்சயிக்கப்பட்ட பெண். சிறுவயது முதல் உருவான பிடித்தம், அவள் தனக்கானவள் என்றான பின் காதலாய் கசிந்து அவன் அகத்தோடு கவிபாடி வருகிறது.
தற்போதுதான் இளநிலை முடித்து முதுநிலையில் கால் பதித்திருக்கின்றாள்.
அவள் படிப்பைக் கருதி அவன்தான் திருமணத்தை இரண்டு வருடம் ஒத்தி வைத்ததும். அதில் மதிக்குத் தன் மாமன் மேல் கூடுதல் மரியாதை. நன்கு படிக்கும் பெண் என்பதால், எப்போதும் படிப்பைப் பற்றியேதான் பேசுவாள்.
‘படிக்குற புள்ளனு டைம் குடுத்தா சும்மாக்கூட லவ்ஸா பேசமாட்றா இரா’ என்று இறைவியிடம் வந்து குறை படித்து அவள் கேலிகளையும் வாங்கிச் செல்வான்.
ஏற்கனவே ஊருக்குள் இறைவிக்கு நல்மதிப்பென்று ஏதும் இல்லாத பட்சத்தில், முகிலுடனான நட்பு கூட தவறாகத்தான் பார்க்கப்பட்டது. அவனது தாய் கற்பூரவள்ளி, அக்கா, மாமா, அவன் மணக்கவிருக்கும் பெண் மதியென்று அனைவருமே அவர்களது நட்பை மதித்ததன் விளைவாய் இன்றளவும் அவர்களது நட்புத் தொடர்ந்து வருகிறது. ஆனால் அவனது வருங்கால மாமனார் செந்திலுக்கு மட்டும் இறைவியை சுத்தமாகப் பிடிக்காது. ‘அம்மா இல்லாத பொண்ணு. நீ அம்மா போல பாத்துப்பனு உன் புள்ளைக்குக் கட்டி வைக்குறேன் அக்கா. என் புள்ள வாழ்க்க பத்திரம்’ என்று அடிக்கடி சூசகமாய் பேசிவிட்டுச் செல்வார்.
“சரி கேர்ள். போய் வேலையைப் பாரு. முதல் கிளைன்ட் எங்க?” என்று முகில் கேட்க,
“இங்க காலிங்கா மண்டபத்துக்குடா. பெரிய ஆர்டர். ஈவ்னிங் ஆயிடும்” என்றாள்.
“அப்பசரி வா. உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் வேலைக்குப் போறேன்” என்று அவன் கூற,
“உன் மாமனாருக்கு சும்மாவே என்னைக் கண்டா ஆகாது. நீ டூ வீலர்ல வேற வந்திருக்க. பாத்தா வம்பா போகும். வேணாம் முகி” என்று கூறினாள்.
அவளைத் தீயாய் முறைத்தவன், “எப்பலருந்து இப்படி பெரிய மனுஷிமாதிரிலாம் பேச ஆரம்பிச்சீங்க மிஸ் இறைவி?” என்று கேட்க,
“வந்து வண்டியெடுடா ராசா. உன்கிட்ட காலைலயே வாங்க முடியாது” என்று கூறினாள்.
சிரித்தபடி அவளைக் கூட்டிக் கொண்டு அந்த மண்டபத்தை அடைந்தவன், “ஏ கேர்ள் ஸ்மைல்” என்க,
அவனைப் பார்த்து அழகாய் புன்னகைத்தாள். அவளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டவன், “வாழ்த்துக்கள் மெஹந்தி ஆர்டிஸ்ட். நல்லா போட்டுட்டு வாங்க. ஈவ்னிங் நான் சக்தியையும் சேர்த்து கூட்டிட்டு நம்ம வீட்டுக்குப் போயிடுறேன். நீ அங்கவந்துடு” என்றுவிட்டுச் செல்ல, புன்னகையாய் அம்மண்டபத்தினுள் சென்றாள்.
-தொடரும்…