
யோக மித்ரனின் எண்ணை பார்த்ததுமே தெரிந்து கொண்டாள் சம்பூர்ணா.
“இவனுக்கு கால் பண்ணி சொல்லனுமா? விசயம் தெரியுமா?” என்று கேள்வி எழ, அந்த எண்ணை விட்டு விட்டு தனது பிஏ வை அழைத்தாள்.
“ஹலோ மேடம்”
“உனக்கு ஒரு நம்பர் தர்ரேன்.. அட்ரஸ் கண்டு பிடிச்சு சொல்லு. பேரு யோக மித்ரன்” என்று வைத்து விட்டாள்.
அறைக்குள் சென்று தயாராகி வெளியே வர, யோகமித்ரனின் முகவரி வந்து சேர்ந்தது.
“இன்னைக்கு உனக்கு ஹார்ட் அட்டாக் கன்ஃபார்ம் யோ..க மித்ரன்” என்று சிரித்தவள், அப்போதே கிளம்பி இருந்தாள்.
முகவரியை தேடிச்சென்று வீட்டை பார்த்ததும், வாசலை விட்டு சற்று தள்ளி காரை நிறுத்தினாள்.
கண்ணாடியில் ஒரு முறை தன் முகத்தைப் பார்த்து விட்டு காரை விட்டு இறங்கி சுற்றியும் பார்த்தாள்.
அங்கும் இங்குமாக சிலர் நடந்து கொண்டிருந்தனர். மற்றபடி தெரு அமைதியாக இருந்தது. மதிய வேளை. உச்சி வெயில் அங்கு சற்று குறைவாக இருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்னும் எதோ ஒரு மரமும் செடியும் இருக்க, வீட்டு எண்ணை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு கேட் அருகே வந்தாள்.
பூட்டவில்லை. வெறுமென அடைத்து இருக்க, அதை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். ஓரமாக நிறுத்தி இருந்த பைக்கை ஒரு முறை பார்த்து விட்டுத் திரும்ப, எதிரில் புவனன் வந்தான்.
“மேடம்? நீங்க?” என்று அவன் அதிர்ச்சியாக வர, சம்பூர்ணாவின் புருவம் உயர்ந்தது.
“புவனன்? இங்கயா இருக்கீங்க?”
“எங்க வீடு தான் மேடம்”
மேலும் ஆச்சரியமாக பார்த்தவள், “யோக மித்ரன்?” என்று கேள்வியாக நிறுத்தினாள்.
“என் தம்பி தான்”
சம்பூர்ணாவிற்கு ஆச்சரியமாக இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.
“இருக்காரா?”
“இல்ல மேடம். வெளிய போயிருக்காங்க. நீங்க உள்ள வாங்க”
“பைக்?” என்று கையை பைக் பக்கம் காட்டி கேள்வியாக நிறுத்த, புவனனுக்கு அடுத்த அதிர்ச்சி. மித்ரனின் பைக்கை கூட அவளுக்கு தெரியுமா? ஆனால் இம்முறை அவனும் காட்டிக் கொள்ளவில்லை.
“அதுல ரிப்பேர்னு விட்டுட்டு என் பைக்ல போயிருக்கான்” என்று கூற, சம்பூர்ணா ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்குள் நடந்தாள்.
புவனன் அவளை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். யோக மித்ரனை சம்பூர்ணாவிற்கு எப்படித் தெரியும்? என்று அவனுக்கு புரியவில்லை. அவனது பைக்கை அடையாளம் தெரியும் அளவுக்கு பழக்கமா? என்று அதிர்ச்சியாக இருந்தது.
“உட்காருங்க மேடம். வீட்டுல யாரும் இல்ல. குடிக்க எதாவது கொண்டு வர்ரேன்”
“நோ புவனன். இட்ஸ் ஓகே.” என்றவள் அமரவில்லை.
“நான் கால் பண்ணி பார்க்குறேன் மேடம்” என்றவன் வெளியே வந்து கைபேசியில் சாதனாவை முதலில் அழைத்தான்.
“என்னங்க?”
“எங்க இருக்கீங்க?”
“ஆட்டோல ஏறிட்டோம். வந்துட்டு இருக்கோம்”
“சரி வாங்க”
அவன் துண்டித்து விட்டு வீட்டுக்குள் திரும்பும் போதே, மித்ரன் பைக்கோடு தெருவில் நுழைவது தெரிந்தது. தம்பியை பார்த்து விட்டு வாசலிலேயே நின்று விட்டான்.
கேட் உள்ளே வந்த மித்ரன், அண்ணனை பார்த்து புருவம் உயர்த்தினான்.
“என்ன வாசல்ல நிக்கிற?”
“காரணமா தான்”
பைக்கை நிறுத்தி பூட்டியவன், இறங்கி வந்து அவனை கேள்வியாக பார்த்தான்.
“சம்பூர்ணா மேடம தெரியுமா உனக்கு?”
“சம்பூர்ணாவா? அவள ஏன் கேட்குற?”
“அவளா?”
“நீ ஏன் கேட்குற?”
“உள்ள இருக்காங்க”
“உள்ளயா? அவள ஏன்டா உள்ள விட்ட?” என்று கேட்டவன், விறுவிறுவென வீட்டுக்குள் சென்றான்.
சம்பூர்ணா புவனன் வெளியேறியதும் அந்த வீட்டை சுற்றிப்பார்த்தாள். மித்ரனின் தந்தையின் படம் பெரிதாக மாட்டப்பட்டு இருக்க, அதில் மாலை தொங்கியது.
அங்காங்கே வீட்டில் சில அழகுப் பொருட்களோடு கச்சிதமாக இருந்தது. வீட்டுக்கு வெளியே மேலே செல்லும் மாடிப்படி இருந்தது. வீட்டை பார்த்துக் கொண்டிருந்தவள் காதில் மித்ரனின் பேச்சு விழ, “இதுக்கேவா?” என்று முணுமுணுத்து விட்டு திரும்பி வாசலை பார்த்தாள்.
“உனக்கு இங்க என்ன வேலை?” என்று மித்ரன் எகிற, “என்ன மித்… யோ..க மித்ரன்.. வீட்டுக்கு வந்தா வாங்கனு கூட கூப்பிடாம ஏன் வந்தனு கேட்குற? இதான் உன் விருந்தோம்பலா?” என்று புன்னகை மாறாமல் கேட்டு வைத்தாள்.
“டேய்.. என்ன பேசுற?” என்று பின்னால் வந்த புவனனும் தம்பியல அதட்டினான்.
“புவா.. நீ அமைதியா இருக்கியா?”
“மித்ரா… இவங்க எங்க கம்பெனி சி.இ.ஓ.” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கூற, “வாட்?” என்று அதிர்ந்து விட்டான் தம்பி.
“எஸ்.. பார்த்துப்பேசு” என்று அழுத்தமாக கூறியவன், சம்பூர்ணாவை ஒரு முறை பார்த்தான்.
அவளது பார்வை மொத்தமும் மித்ரன் மீது இருக்க, அவர்கள் பேசிக் கொள்ளட்டும் என்று உடனே கைபேசியை பார்ப்பது போல் வெளியேறினான்.
“நீ…”
“ஆமா.”
சம்பூர்ணா அலட்டல் இல்லாமல் ஒப்புக் கொள்ள, மித்ரனுக்கு இது என்ன புது திருப்பம்? என்று குழப்பமாக இருந்தது.
“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தா, உன் அண்ணன பார்த்து நான் சர்ப்ரைஸ் ஆகிட்டேன்.” என்று சம்பூர்ணா கை விரித்து புன்னகைத்தாள்.
“என்னை தேடி தான் வந்தியா?”
“ம்ம்”
“எதுக்கு?”
“உனக்கு வீட்டுல பொண்ணு பார்க்குறாங்களா?”
“அத ஏன் கேட்குற?”
சம்பூர்ணா பதில் சொல்லாமல் பார்க்க, “ஆமா” என்று வேண்டாவெறுப்பாய் பதில் சொன்னான்.
“உனக்கு பார்த்த பொண்ணு யாரு தெரியுமா? நான் தான்”
வெளிப்படையாய் நெஞ்சை பிடிக்காத குறையாக மித்ரன் அதிர்ந்து போனான்.
“என்ன சொன்ன? திரும்ப சொல்லு”
“ஹாஹா.. திரும்ப திரும்ப சொல்லி ஹார்ட் அட்டாக் வந்துட போகுது மேன்”
“நோ.. இது எப்படி?”
“எனக்கும் தெரியாது. ஆனா உன் ஃபோட்டோவ அனுப்பி இதான் மாப்பிள்ளைனு எங்க வீட்டுல சொல்லும் போது நானும் ஆச்சரியப்பட்டேன். முக்கியமா சாக் ஆகிட்டேன்.”
“உனக்கு பாட்டி இருக்காங்களா?”
“ம்ம். அவங்க தான் உன் ஃபோட்டோ கொடுத்தாங்க”
“நாசமா போச்சு” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
“என்னாச்சு?”
“என் பாட்டியோட க்ளோஸ் ஃப்ரண்ட் ஒருத்தரோட பேத்தினு சொன்னாங்க. ஆனா.. அது நீ… என்னால முடியல” என்று இடவலமாக தலையசைத்தான்.
“அட நம்ம பாட்டிங்களும் ஃப்ரண்ட்டா?” என்று கேட்டாளே ஒரு கேள்வி.
மித்ரன் அவளை எரிப்பது போல் பார்த்து வைத்தான். அந்த பார்வையில் சம்பூர்ணா இதழை குறும்பாக வளைத்து புருவம் உயர்த்தினாள்.
“இந்த கல்யாணம் நடக்காது”
“ஐ நோ. அத சொல்ல தான் தேடி வந்தேன்.”
மித்ரன் அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு, “ஓகே கிளம்பு” என்றான்.
“ம்ஹூம். உன் பாட்டிய பார்க்கனும். பார்த்து பேசிட்டு தான் போகனும். என் வீட்டுல ஒரு பிரச்சனை வேற வந்துடுச்சு.”
“என்னாது?”
“சொல்லுறேன். தண்ணி தர்ரியா?”
அவள் கேட்டதும் மறுக்காமல் எழுந்து சென்று தண்ணீரை எடுத்து வந்தான். குடித்து விட்டு அவள் அமர, அவனும் அமர்ந்து கொண்டான்.
“நீ நிஜம்மாவே புவனன் வேலை பார்க்குற..”
“இதுல ஏன் சந்தேகம் உனக்கு? என்னை பத்தி உனக்கு முழுசா தெரியாதுல? வேணும்னா என்னோட பயோ டேட்டாவ அனுப்பவா?”
“உன்னை பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல”
“நோ ப்ராப்ளம்” என்று தோளை குலுக்கியவள், “உன் பாட்டி எப்போ வருவாங்க?” என்று கேட்டாள்.
“ஹாஸ்பிடல் போயிருக்காங்க. வருவாங்க. உனக்கு வேலை இருந்தா கிளம்பு. நான் பேசிக்கிறேன்”
“நோ” என்று தலையசைத்து மறுத்தவள், “என் பாட்டி இந்த கல்யாணத்த நடத்துறதுல தீவிரமா இருக்காங்க. நான் உன் பாட்டி கிட்ட விசயத்த சொல்லி தடுத்தா தான் இது நிக்கும். அவங்க வரட்டும். பேசிட்டே போறேன்” என்றாள்.
மித்ரனும் யோசனையில் இறங்க, “உனக்கு அண்ணன் மட்டும் தானா?” என்று விசாரித்தாள்.
“ஆமா.”
“அண்ணி?”
“சாதனா.”
“இந்த ஃபோட்டோ?”
“அப்பா”
“ஓஓ”
“உன் ஃபேமிலி?”
“நான், அம்மா, பாட்டி. அவ்வளவு தான்”
“ஓஓஓ” என்று புதிதாக கேட்பது போன்ற பாவனை அவன் முகத்தில் இருந்தது.
வெளியே ஆட்டோ சத்தம் கேட்க, “வந்துட்டாங்க” என்று எழுந்தான் மித்ரன்.
புவனன் வேகமாக முன்னால் சென்று ஆட்டோவுக்கு பணம் கொடுத்து விட்டு, எல்லோரையும் உள்ளே அழைத்து வந்தான்.
“வீட்டுல கெஸ்ட் இருக்காங்க. என் கம்பெனி முதலாளி. மித்ரன் உள்ள இருக்கான். வாங்க” என்று சுருக்கமாக கூறி அழைத்து வந்தான்.
“ம்மா.. என்ன சொன்னாங்க?” என்று மித்ரன் நர்மதாவிடம் கேட்க, “மாத்திரை கொடுத்துருக்காங்க. அப்புறம் மத்தத சொல்லுறேன்” என்று கூறி கையில் இருந்த பையை மகனின் கையில் திணித்து விட்டு, சம்பூர்ணாவை பார்த்தார்.
“இது.. சம்பூர்ணா தானமா நீ?” என்று ஆச்சரியமாக கேட்டவர், “உன் முதலாளினு சொன்ன?” என்று மூத்த மகனை பார்த்தார்.
“இவங்க தான்” என்று புவனன் கூறியதுமே நர்மதாவின் முகத்தில் அதிர்ச்சி விலகி சிந்தனை பரவியது.
“அட சம்பூர்ணா.. என்னமா? வீடு தேடி வந்துருக்க? உட்காரு உட்காரு” என்று முத்தரசி சந்தோசமாக அவளை வரவேற்க, அவளது பார்வை மித்ரனை தொட்டு மீண்டது.
“எப்படி இருக்கீங்க பாட்டி?” என்று முறையாக நலம் விசாரித்து வைத்தாள்.
“நல்லா இருக்கேன்டா. நீ மட்டுமா வந்த? சுதா எங்க?”
“அது தெரியாம தான் இங்க வந்தேன்” என்று கூற, முத்தரசி புரியாமல் பார்த்தார்.
“கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலனா வீட்டுக்கு வர மாட்டேன்னு எங்கயோ போய் உட்கார்ந்துட்டாங்க.”
எல்லோரும் இதை கேட்டு அதிர்ச்சியாக, “சுதா தான? செய்வா” என்று முத்தரசி சிரித்தார்.
“இங்க வா. உட்கார்” என்று சம்பூர்ணாவை அருகே அமர வைத்து, “கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலயா நீ?” என்று கேட்டார்.
“எனக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல. அத தெரிஞ்சுட்டே இப்படி பண்ணுறாங்க. அவங்க செல்போன் வீட்டுல இருக்கு. உங்க கிட்ட அவங்க புது நம்பர் இருந்தா கால் பண்ணி பேசுங்க. நானா தேடிப்போனாலும் வேஸ்ட் தான்”
“ஏன்மா கல்யாணம் வேணாம்? மித்ரன உனக்கு பிடிக்கலயா?”
“பாட்டி..” என்றவள் மித்ரனை பார்க்க, “பாட்டி இது சரி வராது. இந்த கல்யாணத்த நிறுத்திடுங்க. வேற பொண்ணு பார்க்கலாம்” என்று மித்ரன் அழுத்தமாக பேசினான்.
“ஏன்டா காலையில சரினு தான சொன்ன? நீ என்ன மாத்தி மாத்தி பேசுற?”
“அப்ப சொன்னேன். இப்ப சரி வராது. வேணாம்”
“அதான் ஏன்?”
“சரி வாரதுனா வராது. எனக்கு பிடிக்கல.” என்று அதே பிடியில் நின்றான் யோகமித்ரன்.
விட்ட குறை தொட்ட குறை எதையும் விட்டு வைக்காமல் கணக்கை சரியாக தீர்ப்பதில் விதி எப்போதும் ஆட்டநாயகி தான்.
வாசம் வீசும்.

