Loading

 

வேலை முடிந்து சம்பூர்ணா வெளியே வர, மித்ரன் கீழ் தளத்தில் நின்றிருந்தான்.

பிஏ வை காரெடுத்து வர, சொல்லி விட்டு அவனருகே சென்றாள்.

“என் கூட வா” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக சொல்லி விட்டு அவள் நடக்க, மித்ரன் முதலில் புரியாமல் திரும்பி பார்த்து விட்டு யோசனையோடு அவளை தொடர்ந்தான்.

வாசலை தாண்டியதும் சம்பூர்ணா ஓரமாக சென்று மித்ரனிடம் திரும்பினாள்.

“என்ன?”

“உன் ஃப்ரண்ட் திருந்த மாட்டானா?”

“செந்திலா?”

“அவன் தான். நடு ராத்திரி கால் பண்ணி குடிச்சுட்டு புலம்புறான். நாளைக்கு கல்யாணம் தான?”

சம்பூர்ணா சொன்ன விசயத்தில் அதிர்ந்தாலும், “கல்யாண தேதி உனக்கெப்பிடி தெரியும்?” என்று கேட்டு வைத்தான்.

“எனக்கு இன்விடேஷன் வந்துச்சு. அது இப்ப முக்கியம் இல்ல. நாளைக்கு கல்யாணத்த வச்சுட்டு இப்படி பண்ணுறான்னா? அப்புறம் எதுக்கு கல்யாணம்? எல்லாத்தையும் மறந்துட்டு கல்யாணம் பண்ணுறதுனா பண்ண சொல்லு. இல்லனா அநியாயமா ஒரு பொண்ணு வாழ்க்கைய வீணடிக்க வேணாம்னு சொல்லி வை.”

“போதும். எங்களுக்கு தெரியும். பார்த்துக்கிறோம்” என்று கடுப்பாக சொல்ல, சம்பூர்ணா அவனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்.

“என்ன?”

“இல்ல.. கல்யாண பொண்ணு யாருனு உனக்கு தெரியுமா?”

சட்டென மித்ரனின் முகம் மாற, அவளை முறைத்து வைத்தான்.

“என்ன மேன் முறைக்கிற?”

“உனக்கு இது தேவையில்லாத விசயம். கிளம்பு”

“வாட் எவர்” என்றவள் முகத்தில் ஒரு சிரிப்பு படர, திரும்பி நடந்தாள்.

கார் வந்ததும் ஏறிக் கிளம்பியும் விட்டாள்.

மித்ரன் செந்திலை அப்போதே அழைத்தான். சில நிமிடங்களுக்கு பிறகே செந்தில் அழைப்பை ஏற்றான்.

“சொல்லுடா” என்று கேட்டவனை வாய்க்கு வந்த வார்த்தை எல்லாம் சொல்லி திட்ட ஆரம்பித்து விட்டான்.

“டேய்.. டேய்.. என்னை பேச விடுடா” என்று செந்தில் கத்த, “பேசுன வாய கிழிச்சுடுவேன். என்ன பண்ணி வச்சுருக்க நீ?” என்று எகிறினான்.

“என்னடா.. காலங்காத்தால எழுப்பி விட்டு திட்டிட்டு என்னையே கேட்குற?”

“இது காலங்காத்தலயா? குடிகார கபோதி.. மணிய பாருடா வெண்ணெய்” என்று ஆரம்பித்து அடுத்து திட்டோ திட்டு என்று திட்டி முடித்தான்.

அவன் பேசிய பேச்சில் செந்தில் காதல் இரத்தம் வந்து விடும் போல் இருந்தது.

“அடச்சை.. நிறுத்துடா” என்று செந்தில் கத்திய பிறகே, மித்ரன் மூச்சு வாங்க பேச்சை நிறுத்தினான்.

“என்னனே சொல்லாம திட்டிட்டே இருக்க. சொல்லிட்டு திட்டுடா”

“நேத்து நைட் குடிச்சியா?”

“ஆமா.. இங்க பேச்சுலர் பார்ட்டி வேணும்னு என் ஃப்ரண்ட்ஸ் கசின்ஸ் எல்லாரும் கேட்டானுங்க. நீ தான் வரல…”

“குடிச்சா போய் மூடிட்டு படுக்க வேண்டியது தானடா பரதேசி.. யாருக்கு ஃபோன போட்டு என்ன பேசி வச்சுருக்க?” என்று மித்ரன் எகிற, செந்திலுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை.

“யாருக்கு….” என்று இழுத்தபடி வேகமாக கைபேசியை காதிலிருந்து எடுத்து சோதிக்க, அது சம்பூர்ணாவின் எண்ணை காட்டியது.

செந்தில் தலையில் அடித்துக் கொள்ள அங்கு மித்ரன் கத்தினான்.

“மச்சி..” என்று செந்தில் இழுக்க, “ஒழுங்கு மரியாதையா அவ நம்பர இப்பவே டெலிட் பண்ணுற. மூடிட்டு கல்யாணத்துக்கு ரெடியாகுற. இல்ல.. மனுசனா இருக்க மாட்டேன்” என்று மித்ரன் பாய்ந்தான்.

“குடிச்சதுல எதோ தப்பா… ப்ச்ச்.. சரி டெலிட் பண்ணிடுறேன். நீ எப்ப வர்ர?” என்று பேச்சை மாற்றினான்.

“நான் வர முடியாது”

“ஏன்? டேய்…”

“குதிக்காத. அடங்கு. என் பாட்டிக்கு மைல்ட் அட்டாக். அதுக்கு லீவ் போட்டுட்டேன். இப்ப லீவ் மிச்சமில்ல”

“பாட்டி எப்படி இருக்காங்க?”

“இப்போ பரவாயில்ல. ஆனா பத்திரமா பார்த்துக்கனும். சாரிடா. இப்படி லீவ் கிடைக்காம போகும்னு நினைக்கல.”

“சரி விடு. பாட்டிய பார்த்துக்கோங்க. ஹரீஷ் வர்ரானா?”

“ம்ம்.. வருவான்.”

சில நொடிகள் திருமணத்தை பற்றிப் பேசி விட்டு, சம்பூர்ணாவின் எண்ணை அழிக்க மீண்டும் வற்புறுத்தி விட்டே வைத்தான்.

செந்தில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். கிட்டத்தட்ட இருபது நிமிடம் பேசியதாக கைபேசி காட்டியது. என்ன பேசினான் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

•••

முத்தரசியோடு மருத்துவமனை கிளம்பினார் நர்மதா.

“சொன்னா கேட்கவே மாட்டீங்களா?” என்று சலித்துக் கொண்டே கிளம்பினார் முத்தரசி.

“நீங்க வேணும்னா மித்ரன் கிட்ட பேசி பாருங்களேன்” என்று சாதனா சாதுவாக கூற, “அவன் கிட்டயா? அம்மாடி… உங்க தாத்தாவுக்கு கூட இம்புட்டு கோபம் வராது. இந்த பையனுக்கு மூக்கு மேல கோபம் வருது. உன் தாத்தா, மாமனாரு, எல்லாரும் அப்பாவிங்க. இவன் மட்டும் ஒரு தினுசா பிறந்துருக்கான்” என்று புகார் வாசித்தார்.

“அப்ப கிளம்புங்க. இல்லனா மித்ரனுக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்” என்று மிரட்டி விட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.

அங்கு விபரம் கூறி பரிசோதனைகளை முடித்து விட்டு முடிவுக்காக அமர்ந்து இருக்க, “முத்தரசி தான?” என்று கேள்வியோடு வந்து நின்றார் சுதாராணி.

•••

மூன்று நாட்கள் கடந்து இருந்தது.

கான்ஃப்ரண்ஸ் காலில் பேசியபடி வீட்டின் அலுவலக அறையில் நடந்து கொண்டிருந்தாள் சம்பூர்ணா. அபர்ணா வேறு அடிக்கடி அவளை எட்டிப்பார்த்து விட்டு, “இன்னும் முடியல” என்று சுதாராணியிடம் கையை விரித்தார்.

“வரட்டும் பொறு” என்ற சுதாராணிக்கும் பொறுமை இல்லை தான். ஆனால் அமைதியாக காட்டிக் கொண்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்த சம்பூர்ணா அவர்கள் முன்னால் வந்து கையை கட்டிக் கொண்டு நின்றாள்.

“என்ன விசயம்?” என்று அவள் கேட்ட தோரணையில், அபர்ணா மாமியாரை பார்த்தார்.

“அத்த தான்..”

“நான் தான்”

இருவரும் ஒரே நேரத்தில் பேச, “வேலையில இருக்கேன்னு தெரியும்ல? வந்தப்புறம் பேச வேண்டியது தான? ஆறு தடவ வந்து எட்டி பார்த்துட்டீங்க” என்று முறைத்தாள்.

“இல்லயே. அஞ்சு தடவ தான..” என்று வேகமாக ஆரம்பித்த அபர்ணா, மகளின் முறைப்பில் கப்பென வாயை மூடிக் கொண்டார்.

“என்ன விசயம்? இப்ப சொல்லுங்க”

“இப்படி நின்னுட்டே கேட்டா எப்படி? உட்கார்” என்று சுதாராணி அருகே அமரச்சொல்ல, அவளும் அமர்ந்து கொண்டாள்.

“நான் ஒன்னு கேட்பேன் செய்வியா?”

“கல்யாணத்த தவிர எத வேணா கேளுங்க”

சம்பூர்ணா சிரித்தபடி சொல்ல, சுதாராணியின் முகம் சுருங்கி விட்டது.

“நான் கேட்டா செய்ய மாட்டியா?”

“செய்யுறேன். கல்யாணத்த தவிர”

“அப்போ நான் என் கொள்ளு பேரன் பேத்திய பார்க்க வேணாமா? இப்படியே நம்ம வம்சம் அழிஞ்சு போகுறதா? எங்களுக்கு பிறகு இந்த குடும்பத்து பேர் சொல்ல ஒருத்தர் வேணாமா?” என்று சுதாராணி பாவமாய் முகத்தை வைத்தபடி கேட்டார்.

“எந்த சீரியல் டைலாக் இது?” என்று கேட்டு விட, அபர்ணா திருதிருவென விழித்தார்.

உண்மையில் தங்களுக்கு எமோஷனல் ப்ளாக் மெயில் செய்ய வரவில்லை என்று, சீரியல்களை பார்த்து குறிப்பெடுத்து வைத்து தான் பேசினர்.

“எப்ப இருந்துமா ரெண்டு பேரும் சீரியல் பார்க்க ஆரம்பிச்சிங்க? படம்… அதுவும் பழைய படங்கள மட்டும் தான பார்ப்பீங்க? இப்ப என்ன புதுசா சீரியல்?”

“அது பூர்ணா..” என்று வாயைத்திறந்த மருமகள் கையை பிடித்து தடுத்துக் கொண்டே, “நான் உன் மேல அக்கறை பட்டு பேசுனா அது சீரியல் டைலாக்கா உனக்கு?” என்று கேட்டார் பாட்டி.

“இந்த மாதிரி மொக்க வசனமெல்லாம் ரீசண்ட்டா சீரியல்ல தான் பேசிட்டு இருக்கதா கேள்வி பட்டேன். குடும்ப வாரிசு. வம்சம் பேர் சொல்லனும்.. ஸ்ஸ்ஸ்.. முடியல..”

அவளது கிண்டலில் நடிப்பை கைவிட்டு, “சரி நேரடியா கேட்குறேன். இப்ப கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா?” என்று கேட்டார்.

“முடியாது பாட்டி”

“அப்ப காலம் முழுக்க தனியாவே இருப்பியா?”

“இருக்க தான் போறேன்”

“சரி சந்தோசம். அப்படியே இரு. தனியாவே இரு. உன் தனிமைய கெடுக்காம நானும் அபர்ணாவும் வீட்ட விட்டு கிளம்புறோம்”

“அடுத்த ப்ளாக் மெயிலா?”

“இது ப்ளாக் மெயில் கிடையாது. நீ சம்மதிக்க மாட்டனு எங்களுக்கு தெரியும். அதுனால…” என்றவர் மருமகளிடம் திரும்பி கண்ணை காட்டினார்.

அபர்ணா மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து சென்றார். சம்பூர்ணா புரியாமல் பார்த்திருக்க, அபர்ணா இரண்டு பெட்டிகளும் பைகளையும் தள்ளிக் கொண்டு வந்தார். சம்பூர்ணா அதை பார்த்து அதிர, “நாங்க கிளம்புறோம்.” என்று சுதாராணி எழுந்து விட்டார்.

“பாட்டி!”

“பாட்டி வேணும்.. அம்மா வேணும்னு தோனுச்சுனா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. இல்லையா.. எங்கள விடு. நீ உன் இஷ்டத்துக்கு வாழ்ந்துக்க”

“பாட்டி.. இது டூ மச். எதுக்காக இப்படி மிரட்டுறீங்க? எங்க போவீங்க?”

“எங்க வேணா போறோம். இங்க இருந்தா மட்டும் எங்க பேச்ச மதிக்கவா போற? வீட்டுக்கு பெரிய மனுசங்கனு வெட்டியா உட்காருறத விட, எங்கயோ கண்காணாம இருந்துட்டா நல்லது.”

சொன்னதோடு அவர் பெட்டியை இழுத்துக் கொண்டார்.

“பாட்டி.. ம்மா..” என்று எழுந்து நின்று சம்பூர்ணா தடுக்க பார்க்க, “என்ன அம்மா? என்ன பாட்டி? அதான் எங்க பேச்சுக்கு மதிப்பில்லனு ஆகிடுச்சுல? நாங்க இருந்தா அருமை தெரியாது பூர்ணா. யாருமே இல்லாம இருந்தா தான் அருமை தெரியும். அப்பவும் தெரியலயா? அப்படியே இருந்துக்க. நாங்க இனி இங்க இருக்கதா இல்ல” என்று நடக்க ஆரம்பித்தார்.

சட்டென குறுக்கே வந்து நின்றாள்.

“அப்படி எங்க போவீங்க நீங்க? ம்மா.. நீங்களும் கிளம்பிட்டீங்கள்ள?”

“அவ கிட்ட என்ன பேச்சு? நட” என்று சுதாராணி அபர்ணாவை அதட்ட, மகளிடம் வாயைத்திறக்காமல் நடந்தார்.

சம்பூர்ணா சலிப்பாக தலையாட்டிக் கொண்டாள். இவர்களை தடுக்க முடியாது. சென்ற பின் எதாவது காரணம் சொல்லி வர வைக்கலாம் என்று விட்டு விட்டு வேடிக்கை பார்த்தாள்.

வாசலுக்கு வந்ததும், “உன் ஃபோன கொடு” என்று அபர்ணாவினுடைய கைபேசியையும் தன்னுடையதையும் சேர்த்து வாசலருகே இருந்த மேசையில் வைத்து விட்டார்.

“உனக்கு ஃபோட்டோ அனுப்பி இருக்கேன். அந்த மாப்பிள்ளை பிடிச்சுட்டா அதுலயே நம்பர் இருக்கு. கால் பண்ணி விசயத்த சொல்லு. அப்புறம் நாங்க வர்ரோம். இல்ல இப்படியே தான் இருக்க போறனா.. இருந்துக்கோ” என்றவர் அபர்ணாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினார்.

கைபேசி இரண்டும் மேசையில் கிடந்தது. அதை வைத்து அவர்கள் தங்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாது.

“ப்ச்ச்.. இப்ப ஏன் இப்படி டிராமா போட்டுட்டு இருக்காங்க? எவன் அவன் புதுசா மாப்பிள்ளை?” என்று எரிச்சலாக தனக்குத்தானே பேசிக் கொண்டவள், வாசலுக்கு வந்தாள்.

அங்கு காரோட்டியை காரை எடுக்கச் சொல்லி விட்டு அவருடைய கைபேசியையும் வாங்கி திண்டில் வைத்து விட்டார்.

“அம்மா…”

“என்ன செல் ஃபோன் கண்டிப்பா வேணுமா? உனக்கு புதுசு வாங்கி தர்ரேன் கார எடு”

“அதுக்கு இல்லமா..” என்ற இளங்கோவன் சம்பூர்ணாவை பார்க்க, “அவ கிட்ட என்ன பார்வை? வரப்போறியா இல்லையா?” என்று அதட்டினார்.

கப்பென வாயை மூடிக் கொண்டு கார் கதவை திறந்து விட, சுதாராணியும் அபர்ணாவும் அமர்ந்து கொண்டனர். காரும் புறப்பட்டு விட சம்பூர்ணா பெருமூச்சு விட்டாள்.

எந்த வகையிலும் தொடர்பு இருக்க கூடாது என்று கைபேசியை வைத்து விட்டு செல்கின்றனர். பேசும் முன்பே உடைகளை எடுத்து வைத்து விட்டனர்.

இவர்களை என்ன செய்வது? என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், அந்த மாப்பிள்ளையின் எண்ணம் வர உடனே கைபேசியை எடுத்து படத்தை பார்த்தவள், “வாட்?” என்று விழித்தாள்.

உள்ளே இருந்தது யோகமித்ரனின் புகைப்படம். கீழே இருந்தது யோக மித்ரனின் எண்.

“இன்ட்ரஸ்டிங்” என்று சம்பூர்ணாவின் இதழ்கள் புன்னகைத்தது.

சந்திப்புகளும் சந்தர்பங்களும் இணைந்து கை கோர்த்து நடப்பது தான் விதி.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்