Loading

ஊரில் சென்று இறங்கி, இருவரும் நேராக மருத்துவமனைக்கு சென்றால் அங்கு யோகமித்ரனின் பாட்டி அவர்களை பார்த்து புன்னகைத்தார்.

அருகில் திரு எனப்படும் திருவாசகம் நின்றிருந்தான். பாட்டியிடம் வயலில் வேலை செய்பவன். திருமணம் முடிந்து குழந்தைகள் இருந்தாலும், தாய் தகப்பன் இல்லாத அவனுக்கு யோகமித்ரனின் பாட்டி தான் எல்லாம்.

“அத்த..” என்று நர்மதா கண்கலங்க அருகே செல்ல, அவர் கையைப்பிடித்துக் கொண்டார் பாட்டி முத்தரசி.

“ஒன்னும் இல்லத்தா.. சும்மா மயக்கம் தான் வந்துச்சு அதுக்கு போய் ஆஸ்பத்திரில கொண்டு வந்து போட்டான் இவன். நீ ஏன் கலங்குற?” என்று பேச, நர்மதா கலங்கிய கண்ணை துடைத்தார்.

“எதோ டாக்டர் சொன்னாங்க தம்பி. எனக்கு புரியல. ஆனா பயப்பட ஒன்னும் இல்லனு சொல்லிட்டாங்க. இப்ப தான் ஆத்தா கண்ணயே திறந்துச்சு. ஆனா ஒன்னுமே இல்ல கிளம்பலாம்னு சாதிக்குது. நீங்க வருவீங்கனு சொல்லி உட்கார வச்சுருக்கேன்” என்று குற்றப்பத்திரிகை வாசித்தான் திரு.

“எனக்கு ஒன்னுமில்ல ராசா.. மித்ரா.. நீயும் வேலைய போட்டுட்டு வந்தியா?” என்று கேட்டு பாட்டி அவனை நோக்கி கை நீட்ட, அதை உடனே பிடித்துக் கொண்டவன், “உங்கள நான் என்னனு நினைச்சுட்டு இருந்தேன். நீங்க என்னடானா இங்க வந்து சேர்ந்து.. பயமுறுத்திட்டீங்க பாட்டி” என்றான் அவனும் குரல் கலங்க.

“அட ஒன்னுமில்ல ராசா. இவன் தான் ஒன்னுக்கு ரெண்டா சொல்லிருக்கான். ஏன்டா? எப்படி கலங்கிட்டாங்க பாரு” என்று கூறி திருவை முறைத்தார் பாட்டி.

“மூச்சடைச்சு நெஞ்ச பிடிச்சுட்டு விழும் போது என் ஈரக்கொலையே நடுங்கி போச்சு ஆத்தா. நீ நல்லா உட்கார்ந்துட்டு பேசுற? தம்பி.. நீ வா. நாம அந்த டாக்டர் கிட்ட விசாரிக்கலாம். உனக்கு தான் எல்லாம் புரியும்” என்று திரு பாட்டியை கடிந்து கொண்டு, மித்ரனை உடன் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

நர்மதா முத்தரசி அருகில் அமர்ந்து கொண்டார்.

“உடம்ப பார்த்துப்பீங்கனு நினைச்சேன் அத்க. ஃபோன் பேசும் போதும் ஒரு வார்த்தை பேச விடுறது இல்ல. இனி நீங்க ஒன்னும் இங்க தனியா இருக்க வேணாம். ஒழுங்கா எங்க கூட ஊருக்கு புறப்படுங்க. நான் உங்கள பார்த்துக்கிறேன்.”

“என்ன தாயி நீ? எனக்கு ஒன்னும் இல்ல. நான் இங்கயே..”

“பேசாதீங்க. பதறி அடிச்சுட்டு ஒரு ஆஸ்பத்திரில இருந்து இன்னொரு ஆஸ்பத்திரிக்கு வந்துருக்கீங்க. எதுனா பார்க்க ஆளு இல்ல. நாங்களும் தூரமா வேற இருக்கோம். அங்க எல்லாம் பெரிய பெரிய ஆஸ்பத்திரி இருக்கு. உங்கள நல்லா செக் அப் பண்ணினா தான் என் மனசு ஆறும். நீங்களும் இல்லனா நாங்க என்ன செய்யுறது? யாரு எங்களுக்கு நல்லது கெட்டது பார்க்குறது?”

பேசும் போதே நர்மதாவின் கண்கள் கலங்கி விட, அதை உடனே துடைத்துக் கொண்டார். முத்தரசி வருத்தத்கோடு அவர் கையை பிடித்துக் கொண்டார்.

வீட்டுக்கு வந்த மூன்று மருமகள்களில் முதல் மருமகள் நர்மதா. மகனும் அப்பாவியாய் இருக்க, அடுத்து பிறந்த மகன்கள் மூத்தவனை ஆட்டிப்படைத்தனர். கடைசியாக பொறுக்க முடியாமல் சொத்தின் பங்கை எல்லாம் பணமாக கொடுத்து, அவர்களை முத்தரசியே தனிக்குடித்தனம் அனுப்பி வைத்து விட்டார். இனிமேலாவது மூத்த மகன் மருமகள் நிம்மதியாக வாழட்டும் என்று நினைத்தார்.

அப்போதும் இரு மகன்களும் சொத்துக்காக சண்டை போட்டு, உறவே வேண்டாம் என்று முறித்துக் கொண்டு, வெளிமாநிலம், வெளிநாடு என்று கிளம்பிச் சென்று விட்டனர்.

புவனன் சம்பாதிக்க ஆரம்பிக்க, அவன் வசதிக்காக நர்மதாவின் குடும்பம் பாட்டியை விட்டு வெளியூருக்கு குடிபெயர்ந்தது. முத்தரசி மட்டும் எங்கும் செல்வதாக இல்லை. மூத்த மகனின் இறப்புக்கு கூட வராத இளைய மகன்களை அடியோடு வெறுத்து ஒதுக்கி விட்டு, தனியாகவே வாழ்கிறார். புகுந்த ஊரும் கணவன் விட்டுச் சென்ற சில சொத்துக்களும் அவருக்கு போதும்.

சிறுவயது முதல் கண் முன்னால் வளர்ந்த திரு தான் இப்போது அவருக்கு உதவியாக இருக்கிறான்.

யோகமித்ரன் மருத்துவரை சந்தித்து விவரங்களை கேட்டுக் கொண்டான். முதலில் பார்த்த மருத்துவமனையில் முதலுதவி செய்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்ததால், உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறினார். ஆனாலும் இனி கவனமாகவே இருக்க வேண்டும் என்று கூறி விட்டார்.

பாட்டியிடம் வந்தவன், “இனிமே நீங்க இங்க தனியா இருக்க வேணாம் பாட்டி. எங்களோட கிளம்புங்க” என்று கறாராக கூற, “அட என்னபா.. நீயும் இவள மாதிரி பேசிக்கிட்டு.. ” என்று மறுத்தார் முத்தரசி.

“கிளம்புங்கனா கிளம்பனும். அவ்வளவு தான்” என்று முடித்தவன், “அண்ணே நீங்க இங்க இருக்க வேலைய பார்த்துக்கோங்க” என்று திருவிடம் கூறினான்.

“நான் பார்த்துக்கிறேன். ஆத்தாவ முதல்ல இன்னும் பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் நல்லா வைத்தியம் பாருங்க. அப்ப தான் மனசு திருப்தியாகும்”

“ஏன்டா.. நான் என்ன நோயாளியா?” என்று முத்தரசி முறைக்க, “இல்ல.. இப்ப தான் இளமை திரும்புது ஆத்தா. அத கொண்டாடலாம்னு தான் சொல்லுறேன்” என்று நக்கலடித்தான்.

“வாய் கொழுப்ப பார்த்தியா இவனுக்கு?” என்று மருமகளிடம் புகார் வாசித்தார் பாட்டி.

புவனன் அப்போது அழைப்பு விடுக்க, அவனிடம் பேசி விட்டு, அடுத்த நாள் காலை முத்தரசியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். கிராமத்தில் இருக்கும் வீடு என்று ஏனோ தானோவென இல்லை.

பளபளவென நன்றாகவே கட்டி இருந்தனர். சொத்தை பிரித்துக் கொடுத்து மகன்கள் பிரிந்து சென்றதும், அந்த வீடு வெறிச்சோடிப்போனது. ஆனாலும் பாட்டி அந்த வீட்டை விட்டு கிளம்பியதே இல்லை. இப்போது இரண்டு நாள் முழுவதும் அங்கே இருந்து விட்டு, அடுத்த நாள் கிளம்பினர்.

பாட்டி மட்டும் ஊரை விட்டு வர, மாட்டேன் என்று இன்னும் அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.

“நான் கார் புக் பண்ணுறேன். நீங்க பேக்கிங்க முடிங்கமா” என்று மித்ரன் கூற, “வேணா ராசா” என்றார் முத்தரசி.

“உங்க கிட்ட நான் பர்மிஷன் எல்லாம் கேட்கல. சொன்னா சொன்னது தான்” என்று கூறி விட, முத்தரசி பாவமாக பார்த்தார்.

“சரி அத்த. கொஞ்ச நாள் அங்க வந்து எங்களோட இருங்க. உடம்ப நல்லா செக் பண்ணிப்போம். அப்புறம் உங்களுக்கு எப்ப திரும்ப வரனும்னு தோனுதோ வந்துடுங்க. மித்ரனுக்கு வேற பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுருக்கோம்ல? பொண்ணு அமைஞ்சா அப்படியே கல்யாணத்தையும் முடிச்சுட்டு வந்துடுங்க. அவ்வளவு தான?” என்று நர்மதா கேட்க, அதற்கு மேல் எதைச்சொல்லி மறுப்பார்? மருமகளின் சாமர்த்தியத்தில் சிரித்தபடி தலையாட்டி விட்டார்.

அடுத்த நாளே கார் ஒன்றை ஏற்பாடு செய்து, பொறுப்புகளை திருவிடம் விட்டு விட்டு முத்தரசியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.

வீடு வந்து சேர்ந்தவர்களை வாசலில் நின்று வரவேற்றாள் சாதனா.

“பாட்டி.. எப்படி இருக்கீங்க?” என்று ஓடி வந்து அவர் கையைப்பிடித்து நலம் விசாரித்தாள்.

“நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க? என்ன மெலிஞ்சு போயிருக்க?” என்று அவள் கன்னம் தடவி கேட்க, “மெலிஞ்சது நான் இல்ல. நீங்க தான்.” என்றாள்.

இருவரும் பேசிக் கொண்டே உள்ளே வர, முத்தரசியின் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தான் மித்ரன்.

“அவர் வேலைக்கு போயிட்டாரு பாட்டி. நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்ரேன்” என்று சாதனா எழ, “இருமா. தோசை மாவு இருக்கா? சாப்பிட்டுருவோம். இப்ப காபி குடிச்சா சாப்பிட முடியாது. அத்த மாத்திரை போடனும்” என்று நர்மதா வந்தார்.

“அப்ப தோசையே ஊத்துறேன். எல்லாரும் முகம் கழுவிட்டு வாங்க” என்று சென்றுவிட்டாள்.

மித்ரன் அலுவலகம் செல்ல கிளம்பி வர, “மித்ரா சாப்பிட்டுப்போ” என்றாள் சாதனா.

“இல்ல அண்ணி. ஒரு மணி நேரம் தான் பர்மிஷன் போட்டேன். லேட் ஆகிடும். கேண்டின்ல பார்த்துக்கிறேன்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.

______

“அழகா இருக்காள்ல?” என்று ஒருவன் ஜொள்ளு விட, “செம்ம பிகரு” என்று மற்றவனும் வாயைப்பிளந்து கொண்டு கூறினான்.

“நம்ம ஆஃபிஸ்ல எல்லாம் இப்படி அழகான பொண்ணுங்க வேலை செய்யுதுங்களா?”

“அப்படி செஞ்சுட்டா மட்டும் நீ கரெக்ட் பண்ணிடப்போறியாக்கும்”

“கரெக்ட் பண்ணலனாலும் சைட் அடிக்கவாச்சும் தினமும் ஆஃபிஸ் வருவேன்ல?”

இருவரும் அங்கு நின்றிருந்த சம்பூர்ணாவை பார்த்து தான் அவ்வளவும் பேசிக் கொண்டிருந்தனர். அவள் காதில் விழாமல் மெல்ல பேசிக் கொண்டிருக்க, அவளை அழைக்க மேனேஜர் வந்து சேர்ந்தார்.

“ஹலோ மேடம்.” என்று கை நீட்டியவரை பார்த்து அவள் தலையை மட்டும் அசைக்க, கையை மடக்கிக் கொண்டு, “மேல போகலாம். சார் வெயிட் பண்ணுறார்” என்று கூறி அழைத்துச் சென்றார்.

இருவரும் லிஃப்டில் நுழைய, அவளுடைய பிஏவும் நுழைந்தான்.

லிஃப்ட் மூடும் சமயம் ஒருவன் அவசரமாக கை நீட்டி உள்ளே நுழைய, சம்பூர்ணா நிமிர்ந்து பார்த்தாள்.

வந்தது யோகமித்ரன். அவனை பார்த்ததும் சம்பூர்ணாவின் புருவங்கள் ஒரு நொடி ஏறி இறங்கியது. அதற்குமேல் எந்த மாற்றமும் இல்லாமல் நின்று கொண்டாள்.

‘கடைசி நேரத்துல வந்து லிஃப்ட்ல ஏறுறது தான் இவன் வேலையா?’ என்று மனம் கிண்டலாக நினைத்தாலும், முகத்தில் ஒரு மாற்றமும் இல்லை.

மேனேஜர் சம்பூர்ணா கையை கொடுக்காமல் அவமதித்த கோபத்தை இப்போது யோகமித்ரன் மீது திருப்பினார்.

“என்ன மித்ரன் இதான் ஆபிஸ்க்கு வர்ர நேரமா?” என்று வெடித்தார்.

சம்பூர்ணாவை அதிர்ச்சியோடு பார்த்திருந்தவன் இந்த கேள்வியில் சுதாரித்து, “உங்களுக்கும் அதே கேள்வி பொருந்தும் தான சார்?” என்று கேட்டு விட்டு பட்டனை அழுத்தினான்.

“நான் இவங்கள ரிசீவ் பண்ண கீழ வந்தேன்” என்று மேனேஜர் பல்லைக்கடிக்க, “ஓஹோ” என்றான் மித்ரன்.

“என்ன ஓஹோ?” என்று மேனேஜர் பாய, “உங்க எக்ஸ்ப்ளனேஷன்க்கு சார்” என்றான்.

அதாவது அவருடைய கேள்விக்கு அவன் பதில் செல்வதாக இல்லை. அவர் தான் தன் செயலுக்கு மித்ரனுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மேனேஜருக்கு இரத்த அழுத்தம் எகிறி விட்டது. எப்படியாவது சம்பூர்ணாவின் முன்பு தான் பெரிய அதிகாரி என்று காட்டி விடப்பார்த்தால் இந்த மித்ரன் விடமாட்டேன் என்கிறானே?

அவர்களது தளத்தில் கதவு திறக்க மித்ரன் நிற்காமல் சென்று விட்டான்.

சம்பூர்ணாவும் வெளியேற, வேறு வழியில்லாமல் மேனேஜரும் பின் தொடர்ந்தார்.

எங்கேயும் எப்போதும் முதன்மை பெறுவதும் முக்கியத்துவம் பெறுவதும் அவரவர் செய்கையில் தான் உள்ளது. நல்லதை செய்து நலத்தை பெறுவதே புத்திசாலித்தனமும் கூட.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்