
ஒரு மாதம் கடந்திருந்தது.
ஜோசியர் முன்பு அமர்ந்து இருந்தார் மளிகை கடைக்காரர். அவர் சொன்னதை கேட்டவருக்கு வருத்தமாக இருந்தது.
“வேற எதுவும் பண்ண முடியாதா சாமி?” என்று கேட்க, அவர் தலையசைத்து புன்னகைத்தார்.
“உங்க பொண்ணுக்கு கல்யாண நேரம் கூடி வந்துடுச்சு. அவளுக்காக பிறந்தவன் வந்துட்டே இருக்கான். வருத்தப்படாம போயிட்டு வாங்க” என்று கூறி அனுப்பி வைத்தார்.
வீடு வந்த மளிகை கடைக்காரருக்கு மகளிடம் எப்படி விசயத்தை சொல்வது என்று புரியவில்லை.
“என்னங்க? என்ன சொன்னாங்க?” என்று பரபரத்த மனைவியையும் அறைக்குள் இருந்து எட்டிப்பார்த்த மகளையும் பார்த்தார்.
சோர்வாக நாற்காலியில் அமர்ந்தவர், “ஜாதகம் பொருந்தலயாம்” என்று கூறி விட்டார்.
“வேற பார்க்கனும்” எனும் போதே வேகமாக வெளியே வந்தாள் ரம்யா.
“ப்பா.. ஜாதகத்த எல்லாம் பார்த்துட்டு என் மனச உடைச்சுடாதீங்கபா” என்று கெஞ்ச, “அவங்க வீட்டுல ஏற்கனவே பார்த்து பொருத்தமில்லனு சொல்லி வேணாம்னு சொல்லிட்டாங்க. உன் ஆசைக்காக தான் திரும்ப நான் எடுத்துட்டு போனேன். இனி என்ன பண்ணுறது?” என்று கேட்டார்.
“ஊர்ல எல்லா கல்யாணமும் பொருத்தம் பார்த்தா நடக்குது? எனக்கு அவர தான்பா பிடிச்சுருக்கு”
சில நிமிடங்கள் அமைதியாக யோசித்தவர், “அந்த பையனுக்கும் உன்னை பிடிச்சா அவங்க வீட்டுல பேசலாம். நான் அந்த பையன் கிட்ட பேசிப்பார்க்குறேன்” என்றார்.
“இல்லபா.. நான் பேசுறேன். நல்லதோ கெட்டதோ முடிவு என் கிட்டயே முதல்ல வரட்டும். வேற யாரு சொல்லியும் நான் கேட்டா ஒத்துக்க முடியாது” என்று கூறியவள் அறைக்குள் சென்று விட்டாள்.
சொன்னதோடு நில்லாமல் மாலையே யோகமித்ரன் அலுவலகத்தின் முன்பு ஸ்கூட்டியோடு வந்து நின்று விட்டாள். பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்த மித்ரன் முன் சென்று நின்றாள்.
யோகமித்ரன் புருவம் சுருக்க, “உங்க கிட்ட பேசனும்” என்றாள்.
“யார் நீங்க?” என்று யோகமித்ரன் கேட்ட கேள்வியில் நொந்து விட்டாள். ஆனாலும் பிடிவாதமாக, “மளிகை கடைக்காரர் பொண்ணு. ரம்யா” என்றாள்.
“ஓஓஓ” என்றவன் பைக்கை ஓரமாக நிறுத்தினான்.
“என்ன விசயம்?”
“உங்களுக்கும் எனக்கும் வீட்டுல கல்யாணம் பண்ணுறதா பேச்செடுத்தாங்க. ஆனா ஜாதகம் பொருந்தலனு பாதில விட்டாங்க.”
“ம்ம்”
“எனக்கு இந்த ஜாதகத்து மேல நம்பிக்கை இல்ல. எனக்கு.. உங்கள பிடிச்சுருக்கு.. உங்களுக்கு.. என்னை..?” என்று பாதியோடு நிறுத்தினாள்.
சட்டென யோகமித்ரனுக்கு பதில் சொல்ல வரவில்லை. யோசனையோடு நின்றவன் பார்வை வட்டத்தில் எதிர் சாலையில் நின்று தன்னை முறைத்துக் கொண்டிருந்த சுபத்ரா விழுந்தாள். அருகிலேயே வாயைப்பிளந்து பார்த்த ஹரீஷும் விழுந்தான்.
அவர்களை விட்டு விட்டு ரம்யாவை பார்த்தான்.
“இங்க பாருங்க..”
“ரம்யா”
அவள் பெயரைச்சொல்ல, அதை கவனிக்காமல் மேலே பேசினான்.
“எங்கம்மா ஜாதகத்த நம்புவாங்க. நானும் நம்புறேன். செட் ஆகலனா விட்டுரலாம். உங்களுக்கு ஏத்த பையன் கிடைப்பான்னு வசனம் பேச மாட்டேன். ஆனா சீக்கிரம் என்னை மறந்துடுவீங்கனு நம்புறேன். நான் கிளம்புறேன். சாரி” என்றவன் அவள் அதிர்ச்சியோடு கண்கலங்க நின்றிருந்ததை கவனித்தும் கவனிக்காமல் கிளம்பி விட்டான்.
ரம்யா தான் அவன் செல்லும் பாதையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“யாரு அது?” என்று சுபத்ரா முகத்தில் தீ பரவ கேட்க, “எனக்கு என்ன தெரியும்?” என்று ஹரீஷ் கையை விரித்தான்.
“தனியா நின்னு பேசுறாங்க. நீ ஃப்ரண்டு தான? உனக்குத் தெரியாதா?” என்று சுபத்ரா எகிற, ஹரீஷ் சலிப்பாக பார்த்தான்.
“தெரியாதுங்குறேன்ல? வேணும்னா போய் அந்த பொண்ணு கிட்டயே கேளு போ.”
“நான் ஏன் அவ கிட்ட கேட்கனும்? உன் ஃப்ரண்ட் கிட்ட நேரா போய் நாலு வார்த்தை நறுக்குனு கேட்குறேன்” என்று அவள் எரிந்து விழுந்தாள்.
“கேளேன். யார் வேணாம்னா? இப்ப நான் கிளம்பனும். பை” என்று ஹரீஷ் நடக்க, சுபத்ரா அவனை முறைத்து விட்டு ரம்யாவை பார்த்தாள்.
ரம்யா கண்ணை துடைத்துக் கொண்டு ஸ்கூட்டியில் ஏறி கிளம்பி விட்டாள்.
•••
சம்பூர்ணா அலுவலகத்தில் அமர்ந்து இருந்தாள். வேலை செய்யும் மனநிலை இல்லை. நேற்றிலிருந்து விடாத வேலை அவளை படுத்தி எடுக்க, தலைவலி வந்தது தான் மிச்சம்.
அவள் வைத்திருப்பது கணினி வன்பொருள் வடிவமைக்கும் நிறுவனம். எல்லாம் நானோ முறையில் நுணுக்கமாக தயாரிக்கும் பொருள். ஒவ்வொன்றையும் உருவாக்கி சரிபார்த்து வேண்டியவர்களிடம் கொடுத்து முடிக்கும் முன் தலை முடி பிய்ந்து போகும்.
இந்த வன்பொருள் நிறுவனத்தை அவள் தன் சொந்த முயற்சியில் உருவாக்கி இருந்தாள். அதற்கு முன் அவளது தாத்தா விருதாச்சலம் ஃபைனான்ஸ் கம்பெனியும் பைக் விற்கும் சோ ரூம் வைத்திருந்தார்.
அவரது காலத்திலேயே தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம் சோ ரூம் இருந்தது. இப்போது வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமே சொந்தமாய் சோ ரூம்களை உருவாக்கிக் கொள்ள பைனான்ஸ் தொழில் தான் முதன்மையாய் மாறி இருந்தது.
அதைக்கொண்டு பல அசையும் சொத்துக்களும் அசையா சொத்துக்களும் வாங்கி போட்டது சம்பூர்ணா பிறக்க காரணமானவர்.
அதோடு சில பல நிறுவனங்களில் பார்ட்னராக சேர்ந்து இன்னும் இன்னும் வளங்களை பெருக்கிக் கொண்டிருக்க, இப்போது எல்லாம் சம்பூர்ணா கையில். அவளும் அவள் பங்குக்கு வேலைகளை செய்தாள்.
முதலில் சோ ரூம்களை வாகனம் மட்டுமல்லாமல் பல பொருட்களுக்கு மாற்றினாள். அதில் போக்குவரத்து பெரிய பிரச்சனையாக வர, ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தை ஆரம்பித்தாள். சோ ரூம்களுக்கு பொருளட்களை இறக்கும் போது, இடைத்தரகுகளை வெட்டி விட்டு தரகு வேலை செய்து தருவது போலும் ஒரு நிறுவனத்தை நிறுவினாள்.
இப்படி ஒன்றுக்காக ஒன்று என்று ஆரம்பித்து, அத்தனையும் கைக்குள் அடக்கம். எப்போதும் எங்கேயும் ஓடிக் கொண்டே இருக்கும் வேலை. அந்த நிறுவனத்தை கவனிக்க நம்பகமான ஆட்கள். அவர்களின் மீதும் முழு நம்பிக்கை இல்லாமல் அங்காங்கே ஸ்பை.
கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருந்தாள். அதற்குள் நுழைந்து அவளையும் தொழிலையும் கொள்ளை இட எத்தனையோ பேர் துடிக்கின்றனர்.
திருமணம் என்ற போர்வையில் பேசப்படும் வியாபாரம் அவளை சிரிக்க வைக்கும். அந்த சாம்ராஜ்யத்துக்குள் நுழைய முடியாமல் திண்டாடி அவள் மீது அவதூறு பரப்பி பார்த்தனர். அதற்கும் அதே சிரிப்பு தான் கிடைக்கும்.
அவளை எப்படியாவது கைபற்றி விட வேண்டும் என்று முயன்றால் தோல்வி தான். அவளை காக்க கண்ணுக்கே தெரியாத ஒரு கூட்டம் இருந்தது.
அதுவும் காவல்துறையில் ஒருவன். வழக்குரைஞர் ஒருத்தி. ஆடிட்டராக ஒருத்தி. சப் கலெக்டர் ஒருவன். இதெல்லாம் போதாது என்று மாஜி நீதிபதியும் அவருடைய மருத்துவர் மனைவியும்.
அத்தனை பேரையும் தாண்டி அவளை நெருங்குவது, இமயத்தை கையில் தூக்குவது போன்ற வேலை.
அவளை காயப்படுத்த நினைப்பவர்களை மற்றவர்கள் தடுத்தால், அன்பு காட்ட வருபவர்களை அவளே விலக்கி நிறுத்தி விடுவாள். மீறி வருபவர்களை விரட்டி அடிக்கவும் தயங்கியது இல்லை.
ஆனால் இப்போது சங்கீதா தொல்லை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அது தான் இன்றைய தலைவலிக்கு காரணம். முகத்தை முறித்து துரத்தலாம் என்றால் அபர்ணாவும் பாட்டியும் விட மாட்டார்கள்.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க, “மேம்” என்று கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் பிஏ.
“என்ன?”
“உங்களுக்கு மெயில்” என்று ஒரு கவரை முன்னால் வைத்து விட்டு சென்று விட்டான்.
‘பர்ஸ்னல்’ போட்டிருந்ததால் பிரிக்கப்படவில்லை.
சம்பூர்ணா அதை எடுத்து பிரித்தாள். உள்ளே இருந்தது திருமண அழைப்பிதழ்.
“செந்தில் குமார், வைஷ்ணவி” என்று பெயரை படித்தவள் முகத்தில் ஒரு பாவனையும் இல்லை.
உள்ளே திறந்து பார்த்தாள். இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். செந்திலின் முகமும் வைஷ்ணவியின் முகமும் அதில் இருந்தது.
அதை முதலில் அசட்டையாக பார்த்தவள் திடீரென வைஷ்ணவியை உற்றுப்பார்த்தாள்.
‘இவள.. பார்த்த மாதிரி இருக்கே’ என்ற யோசனையோடு வேறு எதாவது கிடைக்கிறதா, என்று பார்க்க எதுவும் இல்லை. நண்பர்களுக்கென்று அடித்த அழைப்பிதழ். அதில் வேறு எந்த விபரமும் இல்லை.
‘ப்ச்ச்.. யாரா இருந்தா என்ன?’ என்ற நினைவோடு அதை மூடி வைத்து விட்டாள்.
கைபேசியை எடுத்து அவனுக்கு வாழ்த்து அனுப்பலாமா? என்று யோசித்தாள்.
ஆனால் திருமணம் செய்ய போகிறவனை தொல்லை செய்வதாக இருக்க வேண்டாம் என்று விட்டு விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
•••
யோகமித்ரன் வீடு வந்து சேர, நர்மதா சமையலில் நுழைந்து இருந்தார்.
“எங்கமா அண்ணிய காணோம்?” என்றபடி மித்ரன் வர, “அவங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லயாம். மதியம் பார்க்க கிளம்பி போனா” என்றார்.
“ஓஓ.. இன்னைக்கு ஒரு பொண்ண பார்த்தேன்மா” என்றவன் அங்கிருந்த தேநீரை டம்ளரில் ஊற்றினான்.
நர்மதா ஆச்சரியமாக மகனை திரும்பி பார்த்தார்.
“யாருடா?”
“மளிகை கடக்காரரு பொண்ணு. வந்து ஜாதக விசயத்த பேசுனா” என்று ஒன்று விடாமல் கூறினான்.
“பாவம்டா.. அந்த பொண்ணுக்கு உன்னை பிடிச்சுருக்கு போல”
“நீங்க தான் ஜாதகம் பார்த்து செட் ஆகாதுனு சொல்லிட்டீங்களே? அப்புறம் என்ன செய்யுறது?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, நர்மதாவின் கைபேசி இசைத்தது.
“ஹால்ல இருக்கு. எடுத்து யாருனு பாரு” என்று மகனை அனுப்பி விட்டு சமையலை பார்த்தார்.
தேநீரை அருந்திக் கொண்டே வெளியே வந்து, கைபேசியை எடுத்து காதில் வைத்தான்.
“என்னாச்சு? ஹாஸ்பிடல் போனீங்களா?” என்று மித்ரன் பதட்டமாக பேசும் சத்தம் கேட்க, நர்மதா அடுப்பை அணைத்து விட்டு வேகமாக வந்தார்.
“நாங்க கிளம்பி வர்ரோம். பத்திரமா பார்த்துக்கோங்க.” என்று அழைப்பை துண்டித்தான்.
“யாருடா?”
“திரு அண்ணன்மா.. பாட்டிக்கு ஹார்ட் அட்டாக்காம்” என்றதும், “கடவுளே” என்று நெஞ்சை பிடித்து விட்டார் நர்மதா.
“என்னடா ஆச்சு?”
“தெரியல. பக்கத்துல இருக்க சின்ன ஹாஸ்பிடல்ல சேர்த்து முடியலனு பெரிய ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போயிருக்காங்களாம். கால் பண்ணி சொல்லுறாரு. நீங்க கிளம்புங்க நான் புவாக்கு கால் பண்ணுறேன்” என்றவன் உடனே அண்ணனை அழைத்து விசயத்தை கூறினான்.
அவன் வீடு வந்து சேர, யோகமித்ரனும் நர்மதாவும் தயாராக நின்றிருந்தனர்.
“நானும் வர்ரேன்டா. சாது அம்மா வீட்டுல இருக்கட்டும்” என்று கூற, “அதெல்லாம் ஒன்னும் வேணாம். எனக்கு லீவ் கிடைக்கும். உனக்கு கிடைக்காது. அண்ணி கிட்ட சொல்லிடு. முடிஞ்சா நீ அவங்க கூட போய் அங்க இருந்து ஆஃபிஸ் போ. அவங்க அம்மாவுக்கும் உடம்பு சரியில்லயாம்ல?” என்று தடுத்தான்.
யோகமித்ரன் பேச்சோடு பேச்சாக வாசலுக்கு வந்து விட, நர்மதாவும் கலங்கிய முகத்தோடு அவன் பின்னால் சென்றார்.
இருவரும் ஆட்டோவை பிடித்து கிளம்பிச் சென்று விட, புவனன் மனைவியை அழைத்து பேச ஆரம்பித்து விட்டான்.
சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் தானாய் உருவாகும் என்று காத்திருந்தால், வெற்றி எட்டாத்தொலைவில் தான் நிற்கும். அதை உருவாக்கி வெற்றியை அருகே கொண்டு வருபவனே புத்திசாலி பட்டம் பெறுகிறான்.
வாசம் வீசும்.

