
சாதனாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்து, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் சம்பூர்ணாவும் மித்ரனும்.
“உன் கையில என்ன வளையல்?”
மித்ரன் அவள் கையை பார்த்துக் கேட்க, “கொடுத்தாங்க.. போட்டுக்கிட்டேன்” என்றாள்.
“இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?”
“வளையல்னு அர்த்தம்”
“அது இல்ல.. எங்கயோ படிச்சேன்.. வளைகாப்பு வளையல அடுத்து குழந்தை வேணுங்குறவங்களுக்கு போடுவாங்களாம்”
சம்பூர்ணா கையை இங்கும் அங்கும் திருப்பி பார்த்து விட்டு, சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“ஏன்டி சிரிக்கிற?”
“அப்ப வளையல் போட்டா போதும்? புருஷன் வேணாம்?”
அவள் சிரிப்போடு கேட்க, மித்ரன் கோபமாக முறைக்க நினைத்து முடியாமல் சிரித்து விட்டான்.
“அதெல்லாம் ஐதீகம்டி”
“இருந்தாலும் பையன் ஒருத்தன் வேணும்ல?”
“வேணும் தான்”
“அப்புறம் என்ன வளையலுக்கு அர்த்தம் சொல்லிக்கிட்டு? சில்லியா பேசாத மேன்”
“ஆமாங்க நாங்க சில்லி.. நீங்க அறிவாளி தான்”
“தெரிஞ்சா சரி…” என்றவள் சாலையை வேடிக்கை பார்த்து விட்டு, “அங்க நிறுத்து..” என்று கை காட்டினாள்.
“எதுக்கு?”
“நிறுத்துடா”
சலிப்போடு ஓரங்கட்டி நிறுத்தினான்.
“போய் எதாவது ஸ்வீட்டா வாங்கிட்டு வா”
“ஏன்?”
“சொன்னத செய்ய மாட்டியா நீ? என்ன புருஷன் நீ?”
“அய்யய்ய.. உன்னோட முடியல”
இறங்கிச் சென்று இனிப்புகளை வாங்கி வந்து கொடுத்தான்.
“கொட்டிக்க” என்று விட்டு காரை எடுக்க, சம்பூர்ணா அதிலிருந்து ஒரு இனிப்பை எடுத்து அவன் வாயில் திணித்து விட்டாள்.
“இன்னைக்கு ஒரு புராஜெக்ட் சக்ஸஸாகிடுச்சு.. நான் ரொம்ப ஹாப்பி..” என்று துள்ளலோடு சொல்லிக் கொண்டு அவளும் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டாள்.
“பார்ரா.. சொல்லவே இல்ல?”
“இப்ப தான்டா நியூஸ் வந்துச்சு.. கிளம்பிட்டோம் போற வழியில சொல்லலாம்னு வந்தேன்.. நீ வளையல் கதைய ஆரம்பிச்சுட்ட”
“எந்த ப்ராஜெக்ட்டு?” என்று கேட்டுக் கொண்டே வீட்டை நோக்கிச் சென்றான்.
இரவு கடந்து மறுநாள் விடிய, காலையிலேயே நர்மதா அழைத்தார். சம்பூர்ணா தூக்கத்தில் போராடி கண்விழித்து கைபேசியை எடுத்தாள்.
மித்ரனுடையது. எடுத்து காதில் வைத்தாள்.
“சொல்லுங்க அத்த..” என்று கேட்டவள், வந்த பதிலில் துள்ளி எழுந்தாள்.
முத்தரசியை மருத்துவமனை கொண்டு சென்றிருக்கிறார்களாம்.
“உடனே வர்ரோம்..” என்றவள் மித்ரனை பிடித்து உலுக்கினாள்.
“டேய் எந்திரி..”
“ப்ச்ச்”
“ஏய் பாட்டி ஹாஸ்பிடல்ல இருக்காங்க எந்திரிடா” என்றதும் வேகமாக எழுந்து விட்டான்.
“என்னாச்சு?”
“நெஞ்சு வலிக்குதுனு சொன்னாங்களாம்… சீக்கிரம் கிளம்பு..” என்றவள் பேசிக் கொண்டே ஓடினாள்.
புவனனுக்கு அழைத்து பேசிக் கொண்டே இருவரும் கிளம்பி விட்டனர்.
மருத்துவமனையில் முத்தரசி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அன்று முழுவதும் போராடி விட்டு உயிர் நீத்தார்.
மித்ரன் அதிர்ந்து கண்கலங்க நின்று விட, சம்பூர்ணா கண்ணீரோடு அவனை கட்டிக் கொண்டாள்.
உடைந்து போன மனதோடு முத்தரசிக்கு காரியம் நடக்க, சாதனா தான் நிறைய அழுதாள்.
ஊரிலிருந்து வந்த திருவும் அவனது குடும்பமும் கூட மிகவும் உடைந்து போனார்கள்.
காரியம் முடிந்ததும் நர்மதாவை தங்களோடு அழைத்துச் சென்றான் மித்ரன்.
புவனனும் மனைவிக்கு ஆறுதலாக மாமியார் வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் அலைந்தான்.
நான்கு நாட்கள் கழித்து, அதிகாலை வேளையில் சம்பூர்ணா வானை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மித்ரன் மனைவி அருகே இல்லாததை கண்டு எழுந்து வந்தான்.
“தூங்கலயா?”
“ம்ம்”
“ஏன் இப்படி உட்கார்ந்துருக்க?”
“பாட்டி கனவுல வந்தாங்க”
ஆச்சரியத்தோடு அருகே அமர்ந்தான்.
“என்ன சொன்னாங்க?”
“பாட்டி திரும்பி வந்துட்டீங்களானு கேட்டேன்.. சிரிச்சாங்க.. அப்புறம் என் தலையில கை வச்சுட்டு போயிட்டாங்க. தூக்கம் போயிடுச்சு.. முழிச்சுட்டேன்”
மித்ரன் அவள் தோளில் கைபோட்டு அருகே இழுத்துக் கொண்டான்.
“பாட்டிக்கு உன்னை தான் ரொம்ப பிடிச்சுருக்கு போல?”
“ஆமா..”
“பேரன் என் கனவுல வரல.. உன் கனவுல வந்துருக்காங்க..”
“அவங்க இல்லனா நம்ம கல்யாணமே நடந்துருக்காது”
“ம்ம்?” என்று புரியாமல் பார்த்தான்.
“அவங்களுக்கும் நம்ம கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?”
சம்பூர்ணா சிரித்து வைக்க, “என்னடி சிரிப்பு? நீயே என் மானத்த வாங்க தான கல்யாணம் பண்ண? இப்ப என்ன பாட்டிய இழுக்குற?” என்று கேட்டான்.
“இது எங்க ரகசியம்”
மித்ரன் அதிர்ந்து அவளை நேராக திருப்பினான்.
“என்ன ரகசியம்?”
சம்பூர்ணா சிரித்து விட்டு மீண்டும் வானை பார்த்தாள்.
பறவைகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்துக்கு பறந்து கொண்டிருந்தது.
“அன்னைக்கு கோபமா உன்னை மிரட்டிட்டு போனேன்ல? அப்புறம் உன் பாட்டி என் பாட்டி கிட்ட எல்லாத்தையும் விசாரிச்சுருக்காங்க. அந்ததாளு பத்தி சொல்லிருப்பாங்க போல.. அப்புறம் பாட்டி தான் அப்போ அப்போ உங்க வீட்டுல என்ன நடக்குதுனு எனக்கு இன்ஃபர்மேஷன் கொடுத்தது”
“வாட்?”
“ம்ம்.. கத்தாதடா.. காது வலி வந்துடும்..”
“இன்ஃபர்மேஷனா?”
“ஆமா.. அத்த உனக்கு வேற பொண்ணு பார்த்துட்டதா பாட்டி தான் சொன்னாங்க. அதான் அவசர அவசரமா உன்னை மிரட்டி கல்யாண வேலைய ஆரம்பிச்சேன்”
“அடிப்பாவி!”
“அப்புறம் நிறைய சொன்னாங்க. இந்த தனிக்குடித்தன ஐடியா கூட முதல்ல அவங்க கொடுத்தது தான்.. நான் உன் மூஞ்சிய எல்லா நேரமும் பார்க்கனுமானு வேணாம்னு சொல்லிட்டேன். அப்புறம் யோசிச்சேன்.. நாம நாள் முழுக்க சண்டை தான் போடப்போறோம்.. உன் அம்மா அத பார்த்து வருத்தப்பட வேணாமேனு முடிவு பண்ணிட்டேன்.”
“மை காட்.. பாட்டி தான் முதல்ல தனிக்குடித்த விசயத்த ஆரம்பிச்சது”
“அதே தான்.. எல்லாம் ப்ளான்..”
“அடியே.. இவ்வளவு நாளா ஒரு வார்த்தை சொல்லல?”
“ஏன் சொல்லனும்?” என்று தெனாவெட்டாக கேட்டவளை பிடித்து கிள்ளி வைத்தான்.
“எவ்வளவு ஈசியா என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்ட?”
“நீ ஒரு ஏமாளி.. யாரு எத சொன்னாலும் நம்பிடுற.. அது என் தப்பில்லயே?”
அவன் கையை தட்டி விட்டு கிண்டலடித்தாள்.
“இருடி ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கனு போலீஸ் கிட்ட போறேன்”
“போயி என்ன கேட்ப?”
“நியாயம் தான்”
“என்ன நியாயம்? டிவோர்ஸா?”
மித்ரன் ஒரு நொடி யோசித்து விட்டு, “அது வேணாம்.. ஒரு பேபி வேணும்னு கேட்பேன்” என்று கண்ணடித்தான்.
“அதுக்கு எதுக்குடா போலீஸ் ஸ்டேஷன் போகனும்?”
“கரெக்ட்.. அதுக்கு ரூமுக்குள்ள தான் போகனும்” என்று எழுந்தவன் அவளையும் தூக்கிக் கொள்ள, “டேய்.. விடு.. லேட்டாகிடுச்சு ஆஃபிஸ் போகனும்” என்று துள்ளினாள்.
“நாளைக்கு போகலாம்டி”
•••
இரண்டு மாதங்கள் கடந்திருக்க…
சாதனாவின் பெண்குழந்தை உலகிற்கு வந்தாள்.
அத்தனை பேரும் குதூகலமாக அவளை வரவேற்றனர். முத்தரசியே திரும்பி வந்து விட்டதாகவே நினைத்தனர்.
சம்பூர்ணா குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு உற்று பார்த்தாள்.
“உன்னை மாதிரியே இருக்கா சாதனா” என்று விரல் நுனியில் தொட்டு விளையாடினாள்.
“தூங்குற புள்ளைய இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்க்க கூடாது” என்று அபர்ணா அதட்ட, “ம்மா.. சாதனாக்கு பால் வேணுமாம்.. நீங்க போய் அத வாங்குங்களேன்” என்று நல்ல பிள்ளையாக துரத்த பார்த்தாள்.
சாதனா சிரிக்க, மித்ரன் அருகே நின்று கொண்டு கைபேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்தான்.
“உன்னை சொன்னா என்ன துரத்த பார்க்காதடி”
“ம்மா.. நிஜம்மா.. அங்க பாருங்க.. ஃப்ளாஸ்க் காலியா இருக்கு.. அத்தை வர லேட்டாகும்.. நீங்க போய் வாங்குங்க” என்று அபர்ணாவை துரத்தி விட்டாள்.
அவர் சென்றதும் மீண்டும் குழந்தையை கொஞ்சினாள்.
“பாப்பா.. நான் தான் உன் சித்தி” என்று சம்பூர்ணா ஆசையாக சொல்ல, “இதையே எத்தனை தடவடி சொல்லுவ?” என்று மித்ரன் சலித்தான்.
“பின்ன பச்சை குழந்தை கிட்ட வேற என்ன சொல்லுவாங்க? சேர் மார்கெட்ல இன்னைக்கு இத்தனை சேர் இறங்கியிருக்கு.. ஏறி இருக்குனா?” என்று சம்பூர்ணா நக்கலடிக்க, “அதான? தேவையா மித்ரா இது?” என்று கேட்டு வைத்தாள்.
புவனன் கதவை திறந்து வந்தான். அவனோடு நர்மதாவும் வந்தார். சாதனா சாப்பிட தயாராக, “பாப்பாக்கு பேரு யோசிச்சீங்களா?” என்று அபர்ணா கேட்டார்.
“ஆமால.. என்ன வைக்க போறீங்க?” என்று மித்ரன் ஆர்வமாக கேட்க, சாதனா கணவனை பார்த்தாள்.
“இன்னும் எதுவும் யோசிக்கலயேடா” என்று அவன் சொல்ல, “எதுவா இருந்தாலும் சீக்கிரமா வைங்க. பர்த் சர்டிஃபிகேட்ல போடனும்ல?” என்றான் மித்ரன்.
“ஆமா.. எதாவது யோசிப்போம்”
“பிறந்த நேரத்த எழுதி கொடுங்களேன்.. நான் வேணா ஜோசியர் கிட்ட கேட்டு எந்த எழுத்துல வைக்கலாம்னு கேட்டு சொல்லுறேன்” என்று அபர்ணா கேட்க, “எழுதி வச்சுருக்கேன்.. இருங்க தர்ரேன்” என்று உடனே நர்மதா எடுத்துக் கொடுத்தார்.
“அதுவும் சரி தான்.. பின்னாடி ஏன்மா எனக்கு இந்த பேர வச்சனு பாப்பா திட்டும் போது ஜோசியர கை காட்டிரலாம்” என்று சம்பூர்ணா சொல்ல, “ஏன் நீ அழுதியா?” என்று மித்ரன் கேட்டான்.
“ஆமா மாப்பிள்ளை. இந்த பேர ஏன் வச்சனு பல வருசமா சண்டை போட்டா”
“இந்த பேருக்கு என்ன குறைச்சலாம் இவளுக்கு?”
“சம்பூர்ணானு பேரு வச்சுட்டீங்க.. எல்லாரும் தேங்காய் பூரணம்னு கிண்டல் பண்ணுறாங்கனு அழுவா. வேற பேரு மாத்துனு அடம்பிடிப்பா”
“ஓ.. தேங்காய் பூரணமா?” என்று மித்ரன் கிண்டலாக கேட்க, சம்பூர்ணா கணவனை முறைத்தாள்.
“எனக்கும் அதான் பண்ணுவாங்க.. சாதனானு சொன்னா என்ன சாதனை பண்ணனு கேட்டு உசுர வாங்குங்க” என்று சாதனா உதவிக்கு வந்தாள்.
“அதே தான் சாதனா.. என்ன பேரு வச்சாலும் கிண்டல் பண்ணி உசுர வாங்குவாங்க”
“எதாவது நல்லதா யோசிச்சு வைப்போம்..”
“என் புள்ளைய எல்லாம் இப்படி கலாய்க்க விட மாட்டேன். பிறக்குறதுக்கு முன்னாடியே யோசிச்சுடுவேன்..”
“அப்படி எதையும் யோசிக்க கூடாதுடா முட்டாள்.. அய்யோ இவன வச்சுட்டா என்னால முடியல” என்று சம்பூர்ணா சலிக்க, மித்ரன் புரியாமல் பார்த்தான்.
“யோசிக்க கூட கூடாதா?”
“ஆமா.. அது நல்லது இல்லனு சொல்லுவாங்க. புள்ளைங்க பிறக்குற வரை எதையும் வாங்கி வைக்க கூடாது.. பேரு வைக்க கூடாது.. எல்லாம்..”
“ஓ.. இது தெரியாதே”
“உனக்கு என் கூட சண்டை போடுறத தவிர என்ன தான் தெரியும்? உன்னோட நான் குப்பை கொட்டுறேன் பாரு..”
“பாவம் பூர்ணா நீ..” என்று சாதனா சொல்ல, “ஆமா சாதனா.. ரொம்ப கஷ்டம்” என்றாள் அவள்.
“டேய் அண்ணா.. கல்யாணம் இவ்வளவு கொடுமையா இருக்கும்னு ஏன்டா என் கிட்ட முன்னாடியே சொல்லல?”
“விடுடா.. இது எல்லாம் தாங்க தான ஆம்பளைங்கள ஸ்ட்ராங்கா படைச்சுருக்காங்க”
“அப்ப நான் உங்கள கொடுமை படுத்துறேன் அப்படித்தான?” என்று சாதனா முறைத்தாள்.
“நான் எப்பமா அப்படி சொன்னேன்?” என்று புவனன் பல்டி அடித்தான்.
“இப்ப தான் உங்க தம்பி கிட்ட சொன்னீங்க?”
“இவன் யாருனே எனக்கு தெரியாது.. தள்ளுடா.. நான் பாப்பாவ பார்க்கனும்” என்று புவனன் மகளிடம் சென்று விட்டான்.
சம்பூர்ணா கணவனை பார்த்து நக்கலாக சிரித்தாள்.
“நீ எங்கயும் போக முடியாது மகனே.. உன் வாழ்க்கை என் கையில” என்று நக்கலடித்தாள்.
“எனக்கு யாருமே சப்போர்ட் இல்ல.. நான் கோபமா இருக்கேன்” என்று அவன் திரும்ப, “ஐ.. பாப்பா முழிச்சுட்டா” என்றாள் சம்பூர்ணா.
உடனே வந்து மனைவியை இடித்துக் கொண்டு நின்று குழந்தையை பார்த்தான்.
அவளை கொஞ்சி விட்டு எல்லோரும் வேலை இருக்கிறதென கிளம்பி விட்டனர்.
புவனன் பைக்கில் ஏற, “சரிடி தேங்காய் பூரணம்” என்று சொல்லி அடி வாங்கிய தம்பியை பார்த்து சிரித்து விட்டு கிளம்பி விட்டான்.
“இருந்தாலும் நீ ஒரு பாப்பாக்கு ஓகே சொல்லலாம்” என்று மித்ரன் மேலும் பேசி மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டே மறு பக்கம் காரில் சென்றான்.
இருவருக்கும் இடையே காதல் இருந்ததோ இல்லையோ அழகான புரிதல் இருந்தது. அந்த புரிதல் அவர்களை ஒன்றாக இணைத்து ஒரு பாதையில் பயணிக்கவும் வைத்தது.
என்றும் இதே போல் வாழ வாழ்த்தி விடை பெறுவோம். நன்றி.
நிறைவு.

