
அன்று சம்பூர்ணா கைபேசியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
மித்ரன் அருகே வந்து படுத்துக் கொண்டு, “என்ன பார்க்குற?” என்று கேட்டான்.
“இத பாரு.. இது யாரு தெரியுமா?” என்று ஒரு சமூக வலைதல கணக்கை காட்டினாள்.
“தெரியலயே..”
“விஷாலோட பொண்டாட்டியோட அக்கவுண்ட்..”
மித்ரன் அதிர்ந்து எழுந்து விட்டான்.
“அத எப்படி கண்டு பிடிச்ச?”
“இது பெரிய விசயமில்ல.. அவளுக்கு விஷால் பேசுன எல்லாத்தையும் அனுப்பிட்டேன்” என்றவள் முகத்தில் சிரிப்பு பொங்கியது.
மித்ரன் அதிர்ந்தாலும் அவனுக்கு தேவை தான் என்று நினைத்தான்.
“அவ அதெல்லாம் பொய் நம்ப மாட்டேன்னு அழுதா.. என்ன சொன்னேன் தெரியுமா?”
“என்ன சொன்ன?”
“அவன் கிட்ட போய் சம்பூர்ணானு பேர மட்டும் எடு.. அப்புறம் தெரியும் எது உண்மை எது பொய்னு சொல்லி அனுப்பிட்டேன். நேத்துல இருந்து ஆள காணோம்..”
“அவன் அவ்வளவு சீக்கிரம் உண்மைய ஒத்துக்குறவன் இல்ல.. பொய் சொல்லிருப்பான்”
“உனக்கு புரியாது மேன்.. பொண்ணுங்க நினைச்சா எப்படி வேணா விசயத்தை போட்டு வாங்கிடுவாங்க.. கண்டிப்பா அவ போட்டு வாங்கிருப்பா..”
“வாங்கிருந்தா சந்தோசம் தான்.. அவன மாதிரி ஆளு கூட அந்த பொண்ணு எப்படி தான் வாழுமோ தெரியல”
“அவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு.. இதுல மகன் வேற.. பிள்ளைய அவன மாதிரியே வளர்த்து விடாம இருந்தா சரி..”
“சரி இதுக்கா சிரிச்ச?”
“இல்ல.. இன்னைக்கு அவனுக்கு வேலை போயிடுச்சு..” என்றவளுக்கு சிரிப்பு வந்தது.
மித்ரன் ஆச்சரியமானான்.
“வேலை… நீ தான் பண்ணியா?”
“ஆமா.. அந்த ஜவுளிகடை ஓனர் தாத்தாவுக்கு நல்ல பழக்கம். என்னையும் தெரியும். அன்னைக்கு நடந்த விசயம் அவருக்கு தெரிஞ்சுருக்கும் போல. என்னனு கேட்டாரு.. அவன் ஒரு ரேப்பிஸ்ட்.. அவன் வாயால வாக்குமூலம் வாங்க தான் நானும் என் ஹஸ்பண்டும் வந்தோம்னு சொன்னேன். இப்பவே வேலைய விட்டு தூக்கிடுறேன்னு சொல்லிட்டாரு..”
சம்பூர்ணா சந்தோசமாக சொல்ல, மித்ரனுக்கு இதிலும் திருப்தி ஏற்படவில்லை. அவன் வாயை உடைத்து விட்டு வந்திருக்க வேண்டும்.
அத்தனை பொய் சொல்லி அனைவரையும் ஏமாற்றி விட்டானே. அவனும் தானே ஏமாந்து போனான்.
“இவனோட இதோட விட மாட்டேன்” என்று சம்பூர்ணா சொல்ல புருவம் உயர்த்தினான்.
“என்ன பண்ண போற?”
“அவனோட மாமனார் அக்கவுண்ட் சிக்கியிருக்கு” என்றவளின் கண்கள் மின்னியது.
“இத்தனை வருசம் கழிச்சு இதெல்லாம் பெருசா எடுத்துக்குவாங்களா?” என்று மித்ரன் கேட்க, “பொண்ணு வாழ்க்கைனு வந்தா கண்டிப்பா எடுத்துப்பாங்க.. வெயிட் அண்ட் சீ” என்று வைத்தாள்.
மித்ரன் அவள் எதைச் செய்தாலும் சரி என்று விட்டு விட்டான்.
விஷாலின் குடும்பத்தில் கலவரம் வெடித்தது. விஷால் அடி பட்டு வந்த போது, எதெதோ பொய் சொல்லி சமாளித்து இருந்தான். ஆனால் சம்பூர்ணா அனுப்பிய காணொளியில் அவன் அடி வாங்கியதும் இருந்தது.
எதை நம்பாவது என்று தெரியாமல் குழம்பி விட்டாள் அவனது மனைவி. சம்பூர்ணா என்ற பெயரை சொன்னதற்கே முகம் மாறிய கணவனை கண்டு பயந்து போனாள். எல்லாம் பொய்யாக இருக்கலாம் என்று நம்பியவளின் நம்பிக்கை ஆட்டம் கண்டது.
அடுத்ததாக அவளுடைய தந்தைக்கும் விசயம் போக, விபரீதமானது.
அவனது வேலை போவதற்கு காரணம் அவள் தான் என்று வேறு சம்பூர்ணா சொல்லி விட்டாள்.
தந்தை அழைத்து என்ன ஏதென்று கேட்க, அழுது தனக்கும் விசயம் வந்ததாக சொல்லி வைத்தாள் விஷாலின் மனைவி. உடனே சம்பூர்ணாவை தொடர்பு கொண்டு கேட்க, “இனிமே அவன் என் கண்ணுல படக்கூடாது. மீறி பட்டா இந்த வீடியோ எல்லாம் பப்ளிக்கா போட்டு கமிஷ்னர் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன். என் உயரம் என்னனு உங்க மருமகன் கிட்டயே கேளுங்க சொல்லுவான்” என்று விட்டு வைத்து விட்டாள்.
விஷாலை கூப்பிட்டு கேட்டால், ஒன்றுமே இல்லை என்று அடித்துப் பேசினான். அத்தனையும் பொய் அதில் இருப்பவன் அவனே இல்லை என்று சத்தியம் செய்தான்.
அவனது பெற்றோரும் அவனோடு சேர்ந்து பொய் பேச, சம்பூர்ணாவை மிரட்ட நேராகவே கிளம்பி வந்தனர்.
“இப்படி என் மருமகன் மேல பொய் பழி போட்டனா நானே போலீஸ் கிட்ட போவேன்” என்று மிரட்ட, சம்பூர்ணாவுக்கு சிரிப்பு வந்தது.
“ரியலி? பொய் பழியா? இதே வார்த்தைய அவனோட அம்மா அப்பாவ என் முன்னாடி வந்து சொல்ல சொல்லுங்க மிஸ்டர்” என்று அவள் நக்கலடிக்க, புரியாமல் தயங்கினர்.
அவள் யார்? எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு இன்னுமே பின்வாங்கினர்.
மித்ரன் அந்த நேரம் உள்ளே வர, “இங்க வாடா.. இது யாருனு பாரு” என்றாள்.
மித்ரன் அருகே வந்து நின்று புரியாமல் பார்த்தான்.
“இது தான் விஷாலோட மாமனார். எதுக்கு வந்துருக்காங்க தெரியுமா? விஷால் மேல பொய் பழி போட்டதுக்கு என்னை போலீஸ்ல பிடிச்சு கொடுக்கவாம். நான் பொய் சொல்லிருக்கனாம்.”
மித்ரன் முறைத்து விட்டு, “அவன் இன்னும் திருந்தலயா? அன்னைக்கே அவன் வாய உடைச்சுருப்பேன்.. தப்பிச்சுட்டான்” என்று மித்ரன் கடுப்பானான்.
“இது என் புருஷன்.. அன்னைக்கு அவன அடிச்சதே இவன் தான். முடிஞ்சா போய் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுங்க. அடுத்த நாள் விஷால் ஜெயில்ல இருப்பான். அப்புறம் வந்து என் கிட்ட கதறக்கூடாது”
“இந்தாமா.. ஒரு பொண்ணா இருந்துட்டு இருந்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில விளையாட பார்க்குறியே. நல்லாவா இருக்கு?”
“விளையாடுறதா? அவன் எவ்வளவு கேவலமானவன்னு தெரிஞ்சும் அவனுக்கு உங்க பொண்ண கொடுத்து வாழ வச்சுருக்கீங்க. நீங்க தான் வருத்தப்படனும். நான் எனக்கு நடந்ததுக்கு நியாயமா கோர்ட்க்கு போயிருக்கனும். போனா போகுதுனு வார்ன் பண்ணா, என் மேல எல்லாத்தையும் திருப்புவானா அந்த பொறுக்கி? இருக்கு அவனுக்கு..”
அவள் கோபமாக பேச, மித்ரன் தன் கைபேசியை எடுத்து விஷாலை அழைத்தான். அழைப்பு நிற்கும் போது எடுத்தான் விஷால்.
“டேய் ******** என் வாழ்க்கையில ஏன்டா விளையாடுற? ” என்று வாய்க்கு வந்த வார்த்தையில் விஷால் திட்ட, எல்லாரும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“முடிச்சுட்டியா? இப்ப நான் சொல்லுறத கேளு.. ஒழுங்கா நீ செஞ்சத உன் வீட்டுல ஒத்துக்கோ.. இல்லனா..”
“இல்லனா? இல்லனா என்னடா புடுங்குவ? உன்னால ஒன்னும் பண்ண முடியாது..”
“ஏன் முடியாது? உனக்கு ஒரு தங்கச்சி இருக்காள்ல? பேரு வைஷ்ணவி தான? அவளுக்கு கூட இப்ப தான கல்யாணம் ஆச்சு?”
“டேய் என் தங்கச்சி வாழ்க்கையில விளையாடுன? உன்னை கொன்னுடுவேன்”
“அப்ப நீ உண்மைய சொல்லு”
“எந்த உண்மைய? உன் பொண்டாட்டிய முதல்ல என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லு.. என் பொண்டாட்டிய அழ வச்சுட்டா.. அவள சும்மா விட மாட்டேன்”
“கால்ல? விழுந்துடுவோம்.. அதுக்கு முன்னாடி.. உன் தங்கச்சி புருஷன்.. செந்தில்னு ஒருத்தன் இருக்கான்ல அவனுக்கு ஃபோன் பண்ணி.. மச்சான்… உனக்கு சம்பூர்ணாவ தெரியுமாடானு கேளு..”
விஷால் ஒரு நொடி அமைதியாக இருந்தான்.
“பணத்துக்காக ஆசைப்பட்டு அவன் என் பொண்டாட்டி பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சான்.. அந்த கதைய கேளு.. கல்யாணத்துக்கு முதல் நாள்ல வரை என் பொண்டாட்டிகாக ஓடி வர ரெடியா இருந்தான். அவன் அழுத ஆடியோ வேணா அனுப்பவா?”
“டேய்.. என் தங்கச்சி வாழ்க்கையில எதாச்சும் ஆச்சு…”
“மூடுறா.. நீ ஒரு பொறம்போக்கு.. உன் வீட்டுக்கு வந்தவன் மட்டும் எப்படி இருப்பான்.. இப்ப நீ உன் பொண்டாட்டி கிட்ட உண்மைய ஒத்துக்கலனு வை.. அந்த ஆடியோவ உன் தங்கச்சிக்கு அனுப்பி வைப்பேன்.. எப்படி வசதி?”
விஷால் அழைப்பை துண்டித்து விட்டான்.
“சூப்பர்டா..” என்று சம்பூர்ணா வேகமாக கணவனை அணைத்துக் கொண்டாள்.
மித்ரன் ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டு மற்றவர்களை பார்த்தான்.
“இதுக்கப்புறமும் நீங்க நம்பலனா நாங்க ஒன்னும் செய்ய முடியாது.. கிளம்புங்க.. எப்படியும் அடுத்த மாசம் நாங்களே போலீஸ் கிட்ட சொல்லத்தான் போறோம்.. அவன அரெஸ்ட் பண்ண ஆள் வருவாங்க.. கிளம்புங்க”
“தம்பி… அரெஸ்ட் எல்லாம் எதுக்குபா? நமக்குள்ள பேசிக்கலாமே”
“நாலு பேரும் என் பொண்டாட்டிய மிரட்ட கிளம்பி வரும் போது இத யோசிச்சுருக்கனும்” என்று முறைத்தவன், உடனே அசிஸ்டண்ட்டை கத்தி அழைத்தான்.
அவன் வந்ததும், “இவங்கள அனுப்பி வை” என்று சொல்லி துரத்தி விட்டான்.
“இவங்கள எல்லாம் ஏன் உள்ள விடுற நீ?” என்று மனைவியை முறைத்தான்.
“வாசல்ல வந்து நிக்கிறாங்க. அப்படியே அனுப்புனா பெரிய இஸ்யூ ஆக்கி வேலைய கெடுப்பாங்கனு தான் உள்ளே விட்டேன்.. பட் நீ கலக்கிட்ட போ” என்றவள் ஆசையாய் கன்னத்தில் முத்தமிட, “இந்த பக்கம்” என்று காட்டினான்.
“அவ்வளவு தான்..” என்று தள்ளி விட, உடனே அவளை அனைத்து முத்தமிட்டான்.
வேலையை முடித்து விட்டு வந்த அசிஸ்டண்ட் கதவை திறந்து விட்டு, உடனே பதறிப்போய் மூடி விட்டு ஓடி விட்டான்.
•••
செந்தில் விசயத்தை கேட்டு அதிர்ந்து போனான்.
சம்பூர்ணாவுக்கும் மித்ரனுக்கும் இடையே பல வருட பழக்கமிருக்கிறதா?
விஷால் செய்ய நினைத்த காரியத்தை விட, இது தான் அவனை அதிகமாக குடைந்தது.
சம்பூர்ணா அவனிடம் சொன்னாளே.. மித்ரனுக்கு தான் அவளை பற்றி அதிகமாக தெரியும் என்று. இவ்வளவு தூரம் தெரியும் என்று நினைக்கவில்லையே.
ஆனால் அவன் மீதும் கோபம் கொண்டு எதையாவது அவனது மனைவிக்கு அனுப்பி வைத்தால்?
ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து அவனது வாழ்வு நரகமானது.
மித்ரன் சொன்னதை போல் எந்த வழக்கும் அவர்கள் தொடுக்கவில்லை. ஆனால் எந்த நேரம் காவல் துறை வீட்டின் முன்னால் வந்து நிற்குமோ? என்ற பயத்தில் ஊரை விட்டு கிளம்பினான் விஷால்.
இப்போதெல்லாம் அவனது மனைவி அவனை மதிப்பதே இல்லை. அவன் வீட்டில் இருக்கும் அனைவரையும் உதாசினமாகவும் அலட்சியமாகவும் அவள் நடத்த, வீடு எப்போதுமே போர்க்களமாக மாறியது.
அதிலும் விஷால் தங்கையை வாழ்க்கையை காப்பாற்ற நினைத்து செந்திலை பற்றிப்பேசாமல் இருக்க நினைக்க, விசயம் தெரிந்தவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை.
அவன் மனைவியிடம் உடைக்க, அவள் எல்லாவற்றுக்கும் மிரட்டினாள்.
“இப்படியே பேசுனீங்க.. உங்க தங்கச்சிக்கு ஃபோன போட்டு அவ புருஷனோட லட்சணத்த சொல்லிடுவேன்.. அப்புறம் வாழா வெட்டியா இந்த வீட்டுல வந்து தான் கிடப்பா”
“ஏன்டி அவ வாழ்க்கையில விளையாட பார்க்குற?”
“என் வாழ்க்கை மட்டும் நாசமா போச்சு.. அவளுக்குனா மட்டும் குத்துதா? உங்க வீட்டு பொண்ணுனா இனிக்கும்.. அடுத்த வீட்டு பொண்ணுனா என்ன வேணா செய்யலாம்னு நினைப்பா?”
அவள் சண்டை போடப்போட, விஷாலுக்கு வீடே வெறுத்து விட்டது.
இதற்கு நேர்மாறாக மித்ரனும் சம்பூர்ணாவும் வாழ ஆரம்பித்திருந்தனர்.
இருவரும் கோபத்தை விடவில்லை. அதே நேரம் வாழவும் மறக்கவில்லை.
“உன்னை வேலைக்கு எடுத்துருக்க உன் முதலாளிய திட்டனும்.. ஒரு தோசைய கருகாம சுடத்தெரியல.. நீயெல்லாம் என்னனு வேலை பார்த்து சம்பளம் வாங்குறியோ?” என்று நக்கலடித்துக் கொண்டே அவள் சாப்பிட, “மூடிட்டு தின்னுடி.. என் முதலாளிய பத்தி பேசாத.. தோசையே சுட்டுத்தர மாட்டேன் அப்புறம்” என்று மிரட்டினான்.
“யாருக்கு வேணும் உன் தோசை? நான் வெளிய ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்குவேன்.. போ..”
“அத மூணாவது தோசைய முழுங்குனப்புனறம் சொல்லக்கூடாது”
தோசையை பெரிதாக பிய்த்து அவன் வாய்க்குள் அடைத்தவள், அவன் கன்னத்தை நன்றாக கடித்து வைத்தாள்.
“ஆஆ..” என்று அவன் அலற, இறங்கி ஓடி விட்டாள்.
“அடியே.. காட்டேரி.. இருடி வர்ரேன்” என்றவன் அடுப்பை அணைத்து விட்டு பின்னால் சென்றான்.
எண்ணம் போலத்தானே வாழ்வும் அமையும்.
வாசம் வீசும்.

