Loading

 

மித்ரன் வீடு திரும்பியதும், சம்பூர்ணா அவனை முறைத்து வைத்தாள்.

மித்ரன் புரியாமல் நின்று விட்டான்.

“என்ன? இப்ப ஏன் முறைக்கிற?” என்று கேட்டவனுக்கு உண்மையிலேயே பயமாக இருந்தது.

“கார் வாங்கனும்னு பேசிட்டு எதுவுமே பண்ணாம இருக்க.. என் கிட்ட கால் பண்ணி பேசுறாங்க” என்று எகிற மித்ரன், ‘இவ்வளவு தானா?’ என்று நிம்மதியடைந்தான்.

“வாங்கனும்.. போவோம்”

“எப்போ?” என்று அவள் அப்போதும் குரலை தாழ்த்தாமல் கேட்க, “நாளைக்கு போகலாம்” என்றான்.

“இப்பவே கிளம்பு”

“என்ன அவசரம்?”

“நீ திருந்தவே மாட்டியா? பாருங்க அத்த இதான் நீங்க புள்ளை வளர்த்த லட்சணமா? ஆம்பள புள்ளைனா ஒரு பொறுப்பு வேணாம்? சொன்னா சொன்ன நேரத்துக்கு செய்ய வேணாம்? இதெல்லாம் எப்படி நல்ல புருஷனுக்கு அழகாகும்?”

நர்மதாவை பார்த்து அவள் மூச்சு விடாமல் பேச, நர்மதாவுக்கு சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை.

“ஏன்டா?” என்று மகனை பார்த்தார்.

“ம்மா.. அவ இப்படித்தான்மா.. விடுங்க”

“எப்படித்தான்? இப்ப நீ போய் வாங்குறியா? இல்ல மொத்த அமௌண்ட்டையும் கட்டி வீட்டுல கார கொண்டு வந்து நிக்க வைக்க சொல்லவா?”

சம்பூர்ணா மேலும் பொங்க, மித்ரன் முறைத்தான்.

“நீ ஏன் பணத்த கட்டனும்?”

“அப்ப நீ வாங்கு.. எனக்கு சொன்னா சொன்ன நேரத்துல வேலை நடக்கனும்.. இப்படி இழுத்தடிக்கிறவங்கள சுத்தமா பிடிக்காது. வாங்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். நீ வாங்கலனா நான் வாங்கி நிறுத்திடுவேன். அவ்வளவு தான்” என்று முறைத்து விட்டு விறுவிறுவென சென்று விட்டாள்.

மித்ரன் தலையை தேய்த்து பெருமூச்சு விட, “திடீர்னு என்னடா காரு?” என்று நர்மதா விசாரித்தார்.

மித்ரன் அவரருகே சென்று அமர்ந்து கொண்டான்.

“இப்ப சம்பூர்ணா இருக்க அதே ஆஃபிஸ்ல தான வேலை பார்க்குறேன்மா. அவ புருஷனா இருக்கும் போது பைக்கலயே போறது நல்லா இருக்காதுனு வாங்க நினைச்சேன்.. அதுக்குள்ள…”

“என்னாச்சு?”

அந்த கதையை என்னவென்று சொல்வது? அமைதியாக இருந்தான்.

“காசு பத்தலயா? இல்ல வேற எதுவும் பிரச்சனையா?”

“காசுலாம் பிரச்சனை இல்ல.. ப்ச்ச்.. இன்னைக்கு போகனும்னு கத்திட்டா.. போகலனா சொன்னத செஞ்சுடுவா.. பாட்டியோட கிளம்புங்க. அப்படியே அண்ணன் அண்ணிய கூப்பிடுங்க. எல்லாருமே போகலாம்”

“அத்தைய எதுக்குடா அலைய விடுற? ஒன்னும் வேணாம். நீங்க ரெண்டு பேரும் வாங்கிட்டு இங்க வந்து கூட்டிட்டு போங்க. எல்லாருமா சேர்ந்து கோவிலுக்கு போகலாம்”

தலையசைத்தவன் எழுந்து அறைக்குச் சென்றான்.

சம்பூர்ணா எதையோ கணினியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கிளம்பு போய் வாங்கிடலாம்”

“நான் வரல நீயே ப்பே” என்றவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

உடனே அவளது கணினியை மூடி விட்டான்.

“ஏய்” என்று அவள் அதட்ட, “சொல்லுறேன்ல? கிளம்புடி” என்றான் கோபமாக.

“நான் தான் முடியாதுங்குறேன்ல?”

“அதெல்லாம் முடியும்.. கிளம்பு” என்று கையைப்பிடித்து தூக்க, உதறி விட்டு திரும்பிக் கொண்டாள்.

மித்ரன் நாற்காலியை தன் பக்கம் திருப்பி குனிந்து பார்த்தான்.

“உனக்கு இப்ப என்ன கோபம்?”

“எனக்கு? ஆமா எனக்கு தான் கோபம்”

“பின்ன எனக்கா கோபம்?”

“ஆமா.. என்னமோ நான் தப்பு பண்ணிட்ட மாதிரி மூஞ்சிய பார்த்து கூட பேச மாட்டேங்குற? தப்பெல்லாம் உன் மேலயும் உன் ஃப்ரண்ட் மேலயும் தான். என்னை நீ ஒதுக்குனா நான் அதுக்கு மேல செய்வேன்” என்றவள் அவன் கையை தட்டி விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

மித்ரன் அதிர்ந்தான். அவன் அமைதிக்கு இப்படி ஒரு அர்த்தத்தை கண்டு பிடிப்பாளா என்ன?

அவளது முகத்தை பற்றித் திருப்பியவன், “உன் மேல தப்புனு நான் எப்ப சொன்னேன்? என் மேல தான் தப்பு. என்ன நடந்துச்சுனு விசாரிக்காம அவன் சொன்னத அப்படியே நம்பியிருக்க கூடாது. அதுவும் அவன் இவ்வளவு கேவலமான வேலைய பார்த்துருக்கும் போது அவனுக்கு போய் சப்போர்ட் பண்ணோமேனு கேவலமா இருக்கு. அந்த கில்டில உன் கிட்ட எப்படி மன்னிப்பு கேட்கனு தொரியல. அதான் அமைதியா இருந்தேன். உன் மேல தப்புனு நினைச்சு இல்ல.. ஓகே?” என்றான்.

“எப்படி மன்னிப்பு கேட்கனு தெரியலயா?”

“ம்ம்”

“கால்ல விழு” என்று காலை காட்டினாள்.

மித்ரன் முறைக்க, “என்ன பார்க்குற? என் கால்ல விழு.. எப்ப பார்த்தாலும் நான் குடும்பப் பொண்ணு இல்லனு சொல்லுறது.. என்னை கல்யாணம் பண்ணா வாழ்க்கை நாசமா போகும்னு சொல்லுறது.. என் கேரக்டர் சரியில்ல.. பிசாசு.. திமிரு பிடிச்சவ.. இவள எல்லாம்…” என்று பேசிக் கொண்டே போனவளின் முகத்தை அருகே இழுத்து அழுத்தமாக முத்தமிட்டான்.

சம்பூர்ணா அதிர்ந்து போய் பேச்சை மறந்தாள்.

“சாரி.. என்னை மன்னிச்சுடு” என்றவன் மீண்டும் முத்தமிட, சம்பூர்ணா கண்ணை மூடிக் கொண்டாள்.

•••

மறுநாள் தான் இருவரும் காரை வாங்க வந்தனர். காலையில் வேலைக்குச் செல்லாமல் காரை வாங்கி விட்டு, நேராக வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு கிளம்பினர்.

சாதனா முன்பை விட அழகு கூடியிருக்க, அது நர்மதாவின் கண்ணில் பட்டது. அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

ஒன்றாக கோவிலுக்குச் சென்று காருக்கு பூஜை போட்டு விட்டு வெளியே சுற்றினர். புதிதாக வந்த திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே சாப்பிட்டு வீடு திரும்பினர்.

முதலில் புவனைனையும் சாதனாவையும் அவர்களது வீட்டில் விடச் செல்ல, நர்மதா மருமகளை தனியாக பிடித்தார்.

“எதாவது நல்ல செய்தி இருக்கா சாதனா?” என்று கேட்க, முதலில் விழித்தவள் பிறகு மெல்ல யோசித்தாள்.

இந்த வீடு மாறும் வேலையில் இதை மறந்து விட்டாளே.

“தெரியலயே அத்த” என்று உண்மையை சொல்ல, “வீட்டுலயே டெஸ்ட் பண்ணுறாங்களே.. அத வாங்கி பண்ணி பாரு என்ன?” என்று வைத்தார்.

சாதனா தலையாட்டியதும், அவளை அதற்கு மேல் குழப்பாமல் சென்று விட்டார்.

திருமணமான புதிதில் முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தையை எதிர்பார்த்து வருத்தப்பட்டாள். நர்மதா தான் ஆறுதல் சொன்னார்.

“நம்மலால புள்ளைய வளர்க்க முடியும்னு தெரிஞ்சதும் கடவுளே கொடுப்பாரு.. சும்மா அதையே நினைக்காத..” என்ற பிறகு அவளும் அதை விட்டு விட்டாள்.

உள்ளுக்குள் சில காலமாக வருத்தம் இருந்தது.

இரண்டு வருடங்கள் கடந்து மித்ரன் திருமண பேச்சு வந்த பிறகு, இதை பற்றி நினைக்க அவளுக்கு நேரமில்லை. வாழ்வின் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

இப்போது வீடு மாறியதில் சுத்தமாக மறந்து போனாள். நாளை சோதித்து விட வேண்டியது தான்.

கணவனிடம் சொல்லலாமா? என்று யோசித்தாள். முதலில் இரண்டு முறை சொல்லி ஏமாந்தது நினைவு வர அமைதியாகி விட்டாள்.

மறுநாள் புவனன் எழுந்ததும் கோவிலுக்குச் செல்லப்போவதாக சொல்லிச் சென்றாள்.

“காலையிலயே என்ன?” என்று கேட்டவனுக்கு, “வேண்டுதல்.. வந்து சொல்லுறேன்” என்று விட்டுச் சென்று விட்டாள்.

“நானும் வரவா?”

“இன்னும் குளிக்க கூட இல்ல. இப்படியே வருவீங்களா?”

“சரிமா.. போயிட்டு வா.. உனக்கு சூடா டீ வேணா போட்டு வைக்கிறேன்.” என்று அனுப்பி வைத்தான்.

சாதனா படபடக்கும் இதயத்தோடு சென்று கோவிலில் சாமியை வேண்டிக் கொண்டு, கிட்டை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

கதவை திறந்த புவனன், “டீ இன்னும் சூடா இருக்கு.. குடிக்கிறியா?” என்றான்.

அவள் தலையை மட்டும் ஆட்டி விட்டு, நேராக உள்ளே சென்று விட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள் கண்கள் நிறைந்து இருந்தது.

“இந்தா.. இப்பவே குடிச்சுடு..” என்று டம்ளரை நீட்டியவன், அவள் கண்ணை பார்த்து அதிர்ந்து, “ஏய்.. என்னாச்சு?” என்று பதறினான்.

அவளது கண்ணீர் சட்டென கன்னத்தில் இறங்க டம்ளரை வைத்து விட்டு, “சாது.. என்னனு சொல்லு” என்று கேட்டான்.

கையில் இருந்ததை நீட்டினாள். வாங்கும் போதே அதிர்ந்தவன், கண்ணை நன்றாக விரித்து உறுதி செய்தான்.

சாதனா கணவனை பாய்ந்து கட்டிக் கொள்ள, ஒரு கையால் மனைவியை அணைத்தவன் இன்னும் இமைக்க மறந்து அந்த இரண்டு கோடுகளை பார்த்துக் கொண்டு நின்றான்.

“நிஜம்மாவா!” என்று அவளை பிரித்து கேட்க, தலையாட்டினான்.

அவன் முகத்தில் புன்னகை பரவியது.

“மை காட்.. இதுக்கு ஏன் அழுற?” என்று சிரித்துக் கொண்டே கண்ணீரை துடைத்து விட்டான்.

“அதுவா வருது..”

“போதும் போதும்.. ஹாஸ்பிடல் போகலாம்.. கிளம்பு.. ஆல்ரெடி கிளம்பி தான இருக்க.. வா.. இப்படியே போவோம்.. செக் பண்ணிட்டு அம்மா கிட்ட சொல்லுவோம்” என்றவன் உடனே மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மருத்துவர் வாழ்த்த, அப்போது தான் இருவருக்கும் நிம்மதி மூச்சு வந்தது.

அதே சந்தோசத்தோடு கிளம்பி நேராக தாயை பார்க்கச் சென்று விட்டனர்.

அன்று அலுவலகம் போகாமல் மித்ரன் சம்பூர்ணா இருவருமே வீட்டில் இருக்க, திடீரென வந்து நின்றவர்களை புரியாமல் பார்த்தனர்.

சாதனா சந்தோசமாக விசயத்தை சொல்ல, “வாவ்! சாதனா… வாழ்த்துக்கள்” என்று சந்தோசமாக குதூகலித்தாள் சம்பூர்ணா.

நர்மதாவின் முகத்திலும் புன்னகை பரவியது.

முத்தரசி பேத்திக்கு திருஷ்டி கழித்தார்.

“டேய் அண்ணா.. வாழ்த்துக்கள்” என்று மித்ரன் வாழ்த்தினான்.

“ஆஃபிஸ்ல ஒரு புரமோஷன்.. வீட்டுலயும் ஒரு புரமோஷன்.. புவனன் செம்ம போங்க.. உங்க தம்பியும் தான் இருக்கானே.. வாழ்க்கையில அடுத்த ஸ்டெப்ப யோசிக்கவே மாட்டேங்குறான்”

சம்பூர்ணா இடையில் மித்ரனை திட்ட, “இதுக்கு நீ நிறைய சண்டை போட்டுட்ட.. மறுபடியும் ஆரம்பிக்காதடி” என்று முறைத்தான் அவன்.

“வெவ்வெவ்வ.. எப்ப தான் நீ திருந்த போறியோ?”

“ஏன் இப்ப உனக்கும் பாப்பா வேணுமா?”

சம்பூர்ணா அதிர்ந்து பார்க்க, அவள் முகத்தை பார்த்து விட்டு சாதனா சத்தமாக சிரித்து விட்டாள்.

நல்ல வேளையாக நர்மதா எதாவது இனிப்பாக செய்கிறேன் என்று சென்று விட்டார். இல்லை என்றால், சம்பூர்ணாவால் கணவனின் தலையில் கொட்டு வைத்திருக்க முடியாது.

“வாய மூடுடா மெண்டல்”

“நீ தானடி கேட்ட?” என்றவன் அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

“சரி சரி எங்க முன்னாடி ரொமான்ஸ் பண்ணாதீங்க.. போங்க போங்க.. ரூம் அந்த பக்கம் தான் இருக்கு..” என்று சாதனா கிண்டலடித்து விட்டு எழுந்து சென்றாள்.

புவனனும் மனைவியின் பின்னால் போக, சம்பூர்ணா மித்ரன் தொடையில் கிள்ளி வைத்தாள்.

“ஆ… அடியே.. விடுடி”

“நான் என்ன பேசுறேன்.. நீ என்ன பேசுற? திமிரா உனக்கு?”

“நீ தான் கம்பேர் பண்ண.. நான் செய்யுறேன்னு சொன்னா கோச்சுக்குற”

“ஒரு ஆணியும் புடுங்க வேணாம்” என்று விட்டு கைபேசியை எடுத்து அபர்ணாவை அழைத்து விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

கிடைக்க வேண்டிய நேரத்தில் அனைத்து சந்தோசங்களும் சரியாக அனுப்பி வைக்கப்படும். அதில் கடவுள் கறாரானவர்.

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்