
மித்ரன் கோபத்தோடு பைக்கை ஓட்டிக் கொண்டிருக்க, தூரமாக ஒரு இடத்துக்கு வந்ததும் சம்பூர்ணா தோளில் தட்டினாள்.
“நிறுத்துடா.. எங்க போற நீ?” என்று அதட்ட, ஓரமாக நிறுத்தி விட்டான்.
சம்பூர்ணா கீழே இறங்கிச் செல்ல, குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தான்.
மெடிக்கலுக்குள் நுழைந்து அவனுக்காக மருந்தை வாங்கி வந்தாள்.
“இத துடைச்சுட்டு போட்டுக்க.. அவன குத்தி உன் கையில ரத்தம் வருது” என்று நீட்ட, உடனே வாங்கிக் கொண்டான்.
“தண்ணி வாங்கிட்டு வர்ரேன் இரு.. கழுவிட்டு அப்புறமா போடு..” என்று விட்டு மீண்டும் தண்ணீர் வாங்கச் சென்று விட்டாள்.
விஷாலை குத்தியதில் அவனது கையிலும் காயமாகியிருந்தது. சம்பூர்ணா வந்ததும் தண்ணீரை ஊற்றி கழுவி விட்டு, பேன்டேஜை ஒட்டிக் கொண்டான்.
“கோபத்துல இப்படி தான் பப்ளிக்ல வச்சு அடிப்பியா? அங்க இருக்க யாராவது போலீஸ்க்கு ஃபோன் பண்ணிருந்தா என்னாகியிருக்கும் தெரியுமா?”
சம்பூர்ணா சலிப்பாக கேட்க, மித்ரன் பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தான். அவனால் கேட்டது எதையும் ஜீரணிக்கவே முடியவில்லை.
தகப்பன் செய்த பெரும் தவறை கண்டு பிடித்து மனம் உடைந்து இருந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு வந்தவள் சம்பூர்ணா.
அங்கு அவளை காதலிப்பதாக சொல்லி இப்படி ஒரு காரியத்தை செய்ய பார்த்திருக்கிறான் விஷால். நம்பவே முடியவில்லை. இதை எப்படித்தாங்கி இருப்பாள்?
போதாத குறைக்கு அவன் வேறு விஷாலை அடித்ததற்காக சண்டை வேறு போட்டான்.
எல்லாம் சேர்ந்து அவனுக்கு அவன் மீதே வெறுப்பாக இருந்தது.
“இப்ப ஏன் இப்படி மூஞ்சிய வச்சுட்டு நிக்கிற?”
மித்ரன் தரையை பார்த்தானே தவிர பதில் சொல்லவில்லை.
“ஓ… கில்டியா? இருக்கனும் தான். நீ பேசுன பேச்சுக்கு இது கூட வரலனா எப்படி?” என்று நக்கலடித்தாள்.
மித்ரன் வாயை திறந்து எதோ சொல்ல வந்து பிறகு சொல்லாமலே விட்டான்.
“பட் எனக்கு உன் மேல இருந்த கோபம் கொஞ்சமா குறைஞ்சுடுச்சு” என்று இரண்டு விரல்களால் அந்த கொஞ்சத்தை அளந்து காட்டினாள்.
மித்ரன் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க, “நீ அவன அடிச்சதுக்காக இல்ல.. அவன் வாயால எல்லாத்தையும் சொல்ல வச்சு எவிடன்ஸ் வாங்கிக் கொடுத்தியே அதுக்காக.. போனா போகுதுனு உன்னை விடுறேன்” என்றாள்.
மித்ரன் கையைப் பார்த்து திரும்பிக் கொள்ள, “பேச்சையே காணோம்? லொட லொடனு பேசிட்டே இருந்த?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
“ப்ச்ச்..” என்று அவன் வெறுப்பாக உச்சுக் கொட்ட, சம்பூர்ணா சிரித்து வைத்தாள்.
“சரி கிளம்பு.. டின்னர் டைம்.. சாப்பிட்டு வருவோம்னு வேற அத்தை கிட்ட சொல்லியாச்சு.. இப்ப போனா சாப்பாடு போட மாட்டாங்க” என்றவள் மித்ரன் திரும்ப, “நான் வேணா பைக் ஓட்டவா?” என்று கேட்டாள்.
அவளை மேலும் கீழும் பார்த்து வைத்தான்.
“ஹலோ.. என்ன நக்கலா பார்க்குற? எனக்கு ஓட்ட தெரியும்..” என்று சம்பூர்ணா சிலுப்பினாள். அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவன் ஏறிக் கொள்ள, சம்பூர்ணா அமைதியாக இருந்தவனை முறைத்து விட்டு, பின்னால் ஏறிக் கொண்டாள்.
மீண்டும் பயணம் ஆரம்பித்தது. அவள் கைகாட்டிய ஹோட்டலில் நிறுத்தி, உள்ளே அழைத்துச் சென்றான்.
உணவை அவளே சொல்லி விட, அவன் பேசவே இல்லை. மனம் முழுவதும் வருத்தமும் கோபமும் தான் மிஞ்சியிருந்தது.
விஷாலிடம் பேசப்போகும் போது ஒரு பொய் வெளியே வரலாம் என்பதை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் அவனுக்கு இல்லை. அதே நினைவில் பேசச் சென்றவனின் தலையில் இடியை போட்டு விட்டானே.
ஒரு பெண்ணை பலவந்த படுத்தி அடி வாங்கி வந்து விட்டு, அவள் ஆள் வைத்து அடித்ததாக கதையை அப்படியே திருப்பிப் போட்டு விட்டானே.
அதையும் கூட அவன் அழுது கொண்டே காயத்தோடு சொன்ன போது, அனைவரும் நம்பி விட்டனர். மித்ரனுக்கோ கொஞ்சம் கூட சந்தேகமே வரவில்லை. காயத்தை பார்த்து அவள் மீது தான் கோபமாக வந்தது.
விஷால் இப்படி ஒரு அயோக்கியனாக இருப்பான் என்று நினைக்கவில்லை. அது மட்டுமா? அவனை நம்பி சம்பூர்ணாவை இத்தனை வருடம் தவறாக நினைத்துக் கொண்டிருந்தானே.
எப்போதும் சம்பூர்ணா அவன் விஷாலுக்காக பேசும் போதெல்லாம் அவனை கேவலமாக பார்த்து வைப்பாள். அந்த பார்வைக்கான அர்த்தத்தை அவன் திமிர் என்று தான் நினைத்தான்.
ஆனால் இப்போது புரிந்தது. விஷாலை போல ஒருவனின் நண்பன் என்றால் அவனும் கேவலமானவன் என்று நினைத்திருப்பாளோ?
மூளை பல விதத்தில் அவனை குழப்பிக் கொண்டிருக்க, உணவு வந்து சேர்ந்தது. சம்பூர்ணா கைபேசியை வைத்து விட்டு உணவை கவனித்தாள்.
மித்ரன் அடைத்துக் கொண்ட தொண்டையை சரி செய்து கொண்டு உணவை விழுங்கினான்.
அமைதியாக சாப்பிட்டு முடித்ததும் அவன் பணத்தை கட்டியதும் எழுந்து கிளம்பி விட்டனர்.
வீடு திரும்பும் வரை சம்பூர்ணா எதுவும் பேசவில்லை. மித்ரனும் அமைதியாகவே வந்தான். அவர்கள் வரும் நேரம் நர்மதா படுத்து விட்டார்.
இருவரும் எதுவும் பேசாமல் நேராக அறைக்குச் சென்று விட்டனர்.
சம்பூர்ணா உடை மாற்றி அலுவலக வேலையை பார்த்துக் கொண்டு அமர்ந்து விட, மித்ரன் படுத்து விட்டத்தை வெறித்தான்.
அவன் பேசியதற்கு நிச்சயம் மன்னிப்பு கேட்டாக வேண்டும். ஆனால் வெறும் வார்த்தையால் சொன்னால் நன்றாக இருக்குமா?
அவன் தவறாக பேசிக் கொண்டே இருக்க, அவளும் இத்தனை வருடமாக அதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தாளே.
“நீ சொல்லிருக்கலாம் தெரியுமா?” என்றான் அமைதியாக.
சம்பூர்ணாவின் கைகள் ஒரு நொடி எழுதுவதை நிறுத்தியது.
“சொல்லிருந்தா நம்பிருப்பியா?” என்று கேட்டு விட்டு மீண்டும் எழுதினாள்.
“நம்பிருப்பேன்”
“நோ சான்ஸ்.. உன் ஃப்ரண்ட அசிங்க படுத்த பார்க்குறேன்.. அவன் வாழ்க்கைய அழிக்க பார்க்குறேன்னு அவன் மறுபடியும் அழுதுருப்பான். நீ அத நம்பிட்டு நான் சொல்லுறத காதுல கூட வாங்கியிருக்க மாட்ட.. நீ மட்டும் இல்ல. யாருமே கேட்டுருக்க மாட்டீங்க”
சம்பூர்ணா குரலில் எந்த மாற்றமும் இல்லாமல் பேச, அதுவே மித்ரனின் மனதில் குத்தியது.
“அப்புறம்.. அவன் ஆம்பள.. அவன் என்னை ரேப் பண்ண பார்த்தான்னு சொன்னா.. அவன தப்பா நினைக்கிறவங்கள விட என்னை தீண்டத்தகாதவளா தான் நிறைய பேர் பார்த்துருப்பாங்க. அந்த கொடுமைய விட பணக்கார திமிர் பிடிச்சவ.. ஒருத்தன் லவ் பண்ணதுக்காக அடிச்சவனு நினைக்கிறது எவ்வளவோ பெட்டர்ல?”
மித்ரன் கண்ணை மூடிக் கொண்டான். மனம் அதிகமாக வலித்தது.
“இன்னைக்கு இருந்த மாதிரியா உலகம் நாம படிக்கும் போது இருந்துச்சு? இன்னைக்கும் கூட பொண்ணுங்க மேல தப்பு சொல்லுறவங்க இருக்க தான் செய்யுறாங்க..”
எழுதியதை மூடி வைத்தவள் மித்ரன் பக்கம் திரும்பினாள்.
“உன் கிட்ட உண்மைய சொன்னவன் அடுத்தவன் பக்கத்துல வந்ததும் எப்படி நானே அவன் கிட்ட போனேன்னு மாத்தி பேசுனான் பார்த்தியா? அத தான் அவன் நான் அப்பவே சொல்லியிருந்தாலும் செஞ்சுருப்பான். நீ தான அவன வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்க.. அப்புறம் ஏன் அவன மேல தப்பு சொல்லி குதிக்கிறனு எல்லாத்தையும் என் பக்கம் திருப்பிருப்பாங்க. இல்லனு சொல்லு பார்ப்போம்?”
எங்கே இருந்து மறுப்பான்? நிச்சயமாக அது தான் நடந்திருக்கும்.
“அது மட்டுமில்ல.. இத வச்சுட்டு காலேஜ்ல இருந்த அத்தனை பசங்களும் என்னை அட்வான்டேஜ்ஜா யூஸ் பண்ண ஆரம்பிச்சுருப்பானுங்க. எவ்வளவு பிரச்சனைய சமாளிக்கனும் தெரியுமா? அத விட பக்கத்துல போனா ஆள் விட்டு அடிப்பாங்குற பேரு பெட்டர்னு விட்டேன்”
அதோடு முடித்துக் கொண்டு சம்பூர்ணா அடுத்த ஃபைலை எடுத்தாள்.
அவள் வேலையை முடிக்கும் வரை மித்ரனும் உறங்கவில்லை. நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
சம்பூர்ணா அனைத்தையும் மூடி வைத்து விட்டு படுத்தாள்.
சில நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தவள், “அவன் அப்படி பண்ணதுக்கு என்ன காரணம் சொன்னான் தெரியுமா மித்ரா?” என்று கேட்டாள்.
மித்ரன் அமைதியாக இருக்க, “உன் அப்பா விசயம் தெரிஞ்சப்புறம், உன் பணத்துக்காக வேணா எவனாச்சும் வருவான். உன்னை லவ் பண்ணுறதே இதுக்கு தான்.. கல்யாணத்துக்கு நீ தகுதி இல்லாதவனு சொன்னான்” என்றவள் திரும்பிப் படுத்து கண்ணை மூடிக் கொண்டாள்.
மித்ரன் அதிர்ந்து போனான்.
இப்படியா சொன்னான்? கடவுளே.. இது தெரியாமல் இதே வார்த்தையை தானே மித்ரனும் சொல்லி வைத்தான்? இதற்கு சம்பூர்ணா அவனை அடிக்காமல் விட்டதே பெரிய விசயம் தான்.
இவளது அப்பா செய்த விசயத்துக்காக, இவளை சூறையாட நினைத்தவனுக்குப் போய் இத்தனை வருடம் வக்காலத்து வாங்கியதை நினைத்து அவனுக்கே வெறுப்பாக இருந்தது.
வாழ்வின் பெரும் பகுதியை சம்பூர்ணாவை வெறுப்பதற்கு மட்டுமே செலவு செய்த தவறை என்ன செய்து சரி செய்வது? மனம் நொந்து போய் விடியும் வரை விழித்துக் கிடந்தான்.
அடுத்த நாள் சம்பூர்ணா அவனிடம் பேசவில்லை. அவனும் பேசவில்லை.
மறுநாளும் அதே நிலை தொடர, நர்மதா இதை கவனித்து விட்டார்.
“ரெண்டும் ஏன் இப்படி அலையுதுங்க?” என்று அவர் கவலைப்பட, “புருஷன் பொண்டாட்டி சண்டை உனக்கெதுக்கு?” என்று கேட்டார் முத்தரசி.
“ரெண்டு பேருமே சரியில்ல அத்த.. மித்ரன் கையில வேற காயமாகி இருக்கு.. என்னனு கேட்டா எங்கயோ இடிச்சுக்கிட்டேன்னு சொல்லுறான்.. அதான் என்னவா இருக்கும்னு கவலைப் பட்டேன்”
“இன்னும் ரெண்டு நாள் பொறுப்போம். ரெண்டும் சரியாகலானு என்னனு கேட்போம்.. இப்ப கிளம்பு” என்றார்.
இருவரும் மருத்துவமனை செல்வதாக முடிவு செய்திருக்க, சம்பூர்ணா அலுவலகம் சென்று விட்டு காரை மட்டும் அனுப்பி இருந்தாள்.
மித்ரன் கார் வாங்கும் வேலை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். மனம் நன்றாக இல்லாமல் அவனுக்கு எதையும் செய்ய பிடிக்கவில்லை.
புது வேலையில் சேர்ந்து விட்டான். சம்பூர்ணா இருக்கும் அலுவலகத்துக்குத் தான் செல்கிறான். இதோ பத்து படிகளை கடந்தால் அவளை போய் பார்த்து விடலாம். ஆனால் போக முடியவில்லை. எதுவும் நடக்காதது போல் நடிக்கவும் முடியவில்லை.
அவன் அவன் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் அவனை மெச்சுதலாக பார்த்தனர்.
“வேலை தவிர எதையும் கவனிக்க மாட்டேங்குறாருல? பரவாயில்ல” என்று தங்களுக்குள் பேசிக் கொள்ள, மித்ரன் அதை உணராமல் மனைவியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
சொல்பவருக்கு வெறும் வார்த்தைகள் வலிப்பதே இல்லை. கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் தெரியும் எவ்வளவு பெரிய காயத்தை வார்த்தைகள் கொடுக்கக் கூடும் என்று.
வாசம் வீசும்.

